சிங்கப்பூரில்
மலாய் சமூகமும் மலாய் மொழியும் - எம்.சேகர்
சிங்கப்பூர் குடியரசு தென்கிழக்காசியாவில் உள்ள
ஒரு சிறிய தீவு. இது மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. ஜொகூர்
நீர்ச்சந்தி இதனை மலேசியாவின் பெருநிலத்திலிருந்து பிரிக்கிறது. தெற்கில்
சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளைப் பிரிக்கிறது. இன்று
சிங்கப்பூர் உலகளவில் பெரிய நகரமாயமான ஒரு நாடாகத் திகழ்கிறது. இயற்கை வளங்கள்
மிகவும் குறைவான சிங்கப்பூரில் நிலச்சீரமைப்பு மற்றும் நீலமீட்பு மூலம் கூடுதல்
நிலங்களும் வளங்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம்
தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் தென்கிழக்காசியாவின் அன்றைய இராஜ்ஜியங்களான
மஜபாகிட், ஸ்ரீ விஜயா ஆட்சியாளர்களின்
கீழும் பிறகு ஜொகூர் சுல்தான்களின் ஆட்சியில் அதன் ஒரு பகுதியாகவும் இருந்து
வந்தது. 1819 – ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானின் அனுமதியுடன் பிரிட்டனின்
கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824
– இல் கிழக்கிந்திய கம்பெனியின் வீழ்ச்சியின்போது,
பிரிட்டன் மகாராணியின் நேரடி ஆட்சிக்குள் வந்தது. 1826 – இல் தென்கிழக்காசியாவின்
ஒரு பிரிட்டனின் குடியேற்ற நாடாக ஆனது.
இரண்டாம் உலகப்போரின்போது 1942 – இல் பிப்ரவரி 15 –
ஆம் தேதிமுதல் ஜப்பானியர்களால் சில
ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, 1945 –
இல் மீண்டும் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் வந்தது. 16 செப்டம்பர்,
1963 – இல் மலேசியா என்ற கட்டமைப்புக்குள் இணைந்து கொண்டது. 1965 ஆகஸ்ட் மாதம் 9
ஆம் தேதி, பல்வேறுபட்ட அரசியல்
காரணங்களுக்காக மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதுமுதல் தனிக் குடியரசு நாடாக
உருவாகி, மிகவும் குறுகிய காலத்தில் (50
ஆண்டுகளில்) உலகில் முதல்தர நாடுகளில் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது.
சிங்கப்பூர் அரசு ஆங்கிலம்,
சீனம், மலாய்,
தமிழ் என நான்கு ஆட்சி மொழிகளைக்
கொண்டுள்ளது. இது சிங்கப்பூரின் தனித்தன்மைக்கு நற்சான்றாகும். இங்குப்
பழக்கத்தில் உள்ள மொழிகளும் பலதரப்பட்ட இன,
மத, பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலித்து பல்லினப்
பண்பாட்டுக் கூறுகள் சூழ்கொண்டுள்ளதைக் காணலாம். 2009 – ஆம் ஆண்டு ஓர் ஆய்வில்
சிங்கப்பூரில் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டுவருவதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. அன்றே சிங்கப்பூர் ஓர் வணிக மையமாகத் திகழ்ந்து தற்போது
உலகின் முதன்மையான வணிகம் மற்றும் சேவைத்துறையின் மையமாக திகழ்வதும்
ஆசியாவிலிருந்தும் உலகின் பிறநாடுகளிலிருந்தும் மக்கள் தொடர்ந்து இங்கு வந்து
குடியேறுவதற்கும் வியாபாரம், தொழில்
சார்ந்து இயங்குவதற்கும் அனைத்து வகையிலும் தகுதி நிறைந்த ஒரு நாடாக விளங்குகிறது.
முந்தைய ஆண்டுகளில்,
மலாயா தீபகற்பத்தில் வணிகர்களால் பேசப்பட்டுவந்த மலாய் மொழியும் சீன மொழியும்
கலந்த ஒரு புதுகலவையாக மலாய் பாசார் எனப்படும் பேச்சு மலாய்மொழி இச்சின்னஞ்சிறு
தீவின் இணைப்பு மொழியாக இருந்து வந்துள்ளதை சமூகமொழியியல்மூலம் அறிந்துகொள்ள
முடிகிறது. பிரிட்டனின் ஆட்சிக்காலத்தில் உயர்தர அடுக்கு மக்களால் ஆங்கிலம்
பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இங்குள்ள சமூகங்களின் அடிப்படைத் தொடர்பு
மொழியாக இந்த மலாய் மொழி இருந்து வந்ததும் இந்த வட்டாரத்தில் அம்மொழியின் ஆளுமையை
நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கிறது. இதற்கான வரலாற்றுப் பூர்வமான சிங்கப்பூரின்
முந்தைய மலாய் ஆட்சியாளர்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சிங்கப்பூர்
மலாய் ஆட்சியாளர்கள் (1299 – 1399 AD)
|
சங்
நீல உத்தமன் – 1299 – 1347
|
படுக்கா
ஸ்ரீ விக்ரமா வீரா – 1348 – 1362
|
படுக்கா
ஸ்ரீ ரானா விக்ரமா – 1363 - 1374
|
படுக்கா
ஸ்ரீ மகாராஜா – 1375 – 1386
|
பரமேஸ்வரா
– 1388 - 1390
|
சிங்கப்பூர்
மலாய் ஆட்சியாளர்கள் (1699 – 1835
AD)
|
சுல்தான்
அப்துல் ஜாலில் (ரியாவ் – லிங்கா – பகாங் ) – 1699 - 1718
|
சுல்தான்
ஜாலில் ரஹ்மாட் (ரியாவ் – லிங்கா – பகாங் ) – 1718 - 1722
|
சுல்தான்
சுலைமான் அலாம் ஷா (ஜொகூர் – ரியாவ் – லிங்கா – பகாங் = 1722-1760
|
சுல்தான்
மஹ்மூட் ரியாட் ஷா (ஜொகூர் – பகாங் ) 1761 - 1812
|
சுல்தான்
அப்துல் ரஹ்மான் ( லிங்கா ) – 1812 - 1819
|
சுல்தான்
ஹூசேன் ஷா ( ஜொகூர் ) – 1819 – 1835 ( பிரிட்டனின் ஆதரவோடு ஜொகூர் சுல்தானாக
அங்கீகரிக்கப்பட்டவர். அதற்கு இணையாகச் சிங்கப்பூரைப் பிரிட்டனுக்கு விட்டுக்
கொடுத்தவர் )
|
(மலாய் மரபுடைமை மையம்)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மலாய் ஆட்சியாளர்களின்
பட்டியலை ஆராய்ந்து பார்த்தால், மலாய்
மொழியின் ஆதிக்கத்தையும் வரலாற்றையும் அதன் சிங்கப்பூரின் ஆளுமையும் நம்மால்
முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இதன் அடிப்படையிலேயே மலாய் இனத்தின்
முக்கியத்துவத்தை உணர்த்தவும் அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் சிங்கப்பூரின்
முதல் அதிபராக யூசோப் பின் இசாக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும் நாம்
கவனத்தில் கொள்ளவேண்டும்.
சிங்கப்பூருக்கு சர் ஸ்டாம்போர்ட் ராபில்ஸ்
வருவதற்கு முன்பே இங்குப் பூர்வக் குடிகளாக இவ்வட்டாரத்தின் மலாய்த் தீவுகளில்
இருந்து பல்வேறு மலாய் குழுக்குள் இங்குக் குடியேறி மீன் பிடிக்கும் தொழிலிலும்
விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளதையும் வரலாறு நமக்குச் சுட்டுகிறது. மற்றும்
பிரிட்டனின் ஆட்சியின்போதும் தொழில் நிமித்தமாக ஜொகூர்,
மலாக்கா, ரியாவ்,
சுமத்திரா, பூகிஸ்,
ஜாவா, மினாங் காபாவ்,
பட்டாணி, பினாங்கு,
சிலிபிஸ் போன்ற பகுதிகளில் இருந்தும் மலாய்க் குழுவினர் இங்குப்
புலம்பெயர்ந்ததையும் அறிந்துகொள்ள முடிகிறது.
2015 – ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு,
சிங்கப்பூரின் மக்கள் தொகையில் 15% (சதவீதம்) மலாய்க்காரர்கள் எனக் கூறுகிறது.
இவர்களில் பெரும்பாலோர் இஸ்லாம் மத மார்க்கத்தைச் சார்ந்தவர்களாவர். பெரும்பாலான
சிங்கப்பூர் மலாய்க்காரர்களின் மரபும் பண்பாடும் தீபகற்ப மலேசிய மலாய்க்காரர்களின்
பண்பாட்டை ஒத்ததாகவே இருக்கின்றன எனவும் ஆய்வுகள் கருத்துரைக்கின்றன.
சிங்கப்பூரின் மலாய் மொழிப் பயன்பாடு
சிங்கப்பூரில் நடைமுறையில் இருக்கும் நான்கு
அதிகாரத்துவ மொழிகளில் முக்கால் வாசி சிங்கப்பூர்கள் தங்களுக்குப் பேச்சு மலாய்
(பஹாசா பாசார் மலாயு) பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும் எனக் கூறியுள்ளனர்.
பெரும்பாலான மலாய்க்காரர்களும் தமிழர்களும் முழுமையாகவே மலாய் மொழியில்
பேசியிருக்கின்றனர் என்கிறார் எடி கூ (Eddie C Y Kuo).
மேலும், 58% சீனர்களும் மலாய் மொழியில்
பேசி வந்ததாகவும் ஆய்வுகள் காட்டுவதாகவும் எடி கூ சுட்டுகிறார் (கூ,
1980, 49,52).
அன்றைய சூழலில் மலாய் மொழி இவ்வட்டார மொழியாகவும் சிங்கப்பூர் பல்லின சமூகத்தை
ஒன்றிணைக்கும் மொழியாகவும் இருந்ததை அறிய முடிகிறது. மேலும்,
சிங்கப்பூரின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் சீனர்களாக இருந்தபோதும்,
சிங்கப்பூர் அரசாங்கம் மலாய் மொழியைத் தேசிய மொழியாக அங்கீகரித்துள்ளதும் ‘மஜூலா
சிங்கப்பூரா’ என்ற சிங்கப்பூர் தேசிய கீதமும்
மலாய் மொழியில் இருப்பதும் இன்றும் இராணுவ கட்டளைகள் மலாய்மொழியில்
அளிக்கப்படுவதும் அம்மொழியின் வரலாற்று
ஆளுமையை உணர்த்துவதாக உள்ளது.
மலாய்க்காரர்களும் மலாய் மொழியும்
சீனம், தமிழ்
மொழிகளைப்போல ஆங்கிலத் தாக்கத்தால் மலாய் மொழியும் பாதிப்படைந்தது என்றாலும்
அம்மொழிக்கான பாதிப்பு மற்ற மொழிகளைவிட குறைவானது என ஆய்வுகள் காட்டுகின்றன.
மலாய்ச் சமூகம் மொழி மற்றும் மதம் சார்ந்தவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து
வந்தததும் இதற்கு ஒரு காரணமாகும். 1980 இல் மேற்கொண்ட ஆய்வில்,
96.7 சதவீத மலாய்க் குடும்பங்களின் வீட்டில் பேசும் மொழியாக மலாய் இருந்து
வந்ததைக் காட்டுகிறது.
1980
|
96.7%
|
1990
|
94.1%
|
2005
|
86.7%
|
2015
|
79.4%
|
(Department of Statistics Singapore, 2016)
மேலேயுள்ள அட்டவணை மலாய்ச் சமூகம் அவர்களின்
வீடுகளின் மலாய்மொழிப் பயன்பாடு மற்ற சீன
(45% - 2016 ), தமிழ் ( 37.6 % - 2016 ) மொழிகளைவிட இன்னமும் அதிகமாக இருப்பதைச் சுட்டுகிறது.
ரியாவ் –
ஜொகூர் மலாய் & ‘செபுதான்
பாக்கு’ மலாய்
வரலாற்றின் அடிப்படையில்,
ரியாவ் – ஜொகூர் மலாய் மொழிதான் இவ்வட்டாரங்களில் பேசப்பட்டுவந்த முதன்மை மலாய்
மொழியாகத் திகழ்கிறது. பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு,
1956 இல் மூன்றாவது மலாய் மொழி மற்றும் இலக்கிய மாநாட்டில்
ஒலியியலின் அடிப்படையில் பேசுவதே சிறந்தது என ‘செபுதான்
பாக்கு’ முன்னுரைக்கப்பட்டது (sulor,
2013, 2).
1988 இல் மலேசியாவில் ‘செபுதான்
பாக்கு’ அமுல்படுத்திய பின்னர்,
சிங்கப்பூர் கல்வி அமைச்சு 1993 இல், தொடக்கப்பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி என
அனைத்து நிலையிலும் ‘செபுதான்
பாக்கு’ பயன்பாட்டில் இருக்கவேண்டும்
என்ற நோக்கில் அறிமுகப்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு
மலேசிய இந்த அமலாக்கத்திலிருந்து விடுவித்துக்கொண்டு,
2000 இல் மீண்டும் ரியாவ் – ஜொகூர் மொழிக்கேத் திரும்பியபோதும் சிங்கப்பூர் ‘செபுதான்
பாக்குவை’ தொடர்ந்து பயன்படுத்தி வந்தது (sulor,
2013, 1). ஆனாலும், பள்ளி
ஆசிரியர்களும் மாணவர்களும் பெரும்பாலும் ரியாவ் – ஜொகூர் மலாய் மொழிப்
பயன்பாட்டையே அதிகம் பயன்படுத்தி வந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும்,
வாய்மொழித் தேர்வுக்கு மட்டும் ‘செபுதான்
பாக்குவை’ பயன்படுத்துமாறு மலாய் மொழி
ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறிவந்ததாகவும் கூறப்படுகிறது (
bakri, 2013, 107-108 ).
சிங்கப்பூரின் இருமொழித் திட்டம்
சிங்கப்பூரில் அனைவரும் ஆங்கிலத்தைத் தங்களின்
முதல் மொழியாகவும் தங்களின் தாய்மொழியை இரண்டாம் மொழியாகவும் கற்க வேண்டும்.
ஆங்கிலமே அனைத்து நிலையிலும் தொடர்பு மொழியாகவும் மக்களை ஒன்றிணைக்கும்
மொழியாகவும் இருக்கிறது. இதன்மூலம்,
சிங்கப்பூரர்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலும் வலுவடையும் எனக்
கருதப்படுகிறது. அதே நேரத்தில்,
சிங்கப்பூரர்கள் தங்களின் மரபு, கலை,
பண்பாட்டு வேர்களை அறிந்துகொள்ளவும் மறக்காமல் இருக்கவும் தாய்மொழியைக்
கற்றுக்கொள்வதன் நோக்கமாக இருக்கிறது. இருமொழித் திட்டத்தின் கீழ்,
மலாய் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைப் பள்ளிகளில் முதல் மொழியாகவும் மலாய் மொழியை
இரண்டாம் மொழியாகவும் கற்க வேண்டியிருக்கிறது. சமயப் பள்ளிகளில் பயிலும்
மாணவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நோக்கின்,
மற்ற சமூகத்தினரைவிட மலாய் சமூகத்தினர் தங்களின் மொழிக்கும் மதத்திற்கும் குடும்ப
பிணைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் என்பதை மலாய்க் குடும்பங்கள்
சார்ந்த குடும்ப நிகழ்ச்சிகள், பொது
நிகழ்ச்சிகள் வாயிலாக நம்மால் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது.
துணை நூல்கள்:
1. Eddie
C Y Kuo, & Brenda Chan, Singapore Chronicles, Institute of Policy studies,
Singapore, 2016.
2. Demographics
Study on Singapore Malays – இணையம்.
3. விக்கிப்பீடியா
இணையத்தளக் கட்டுரைகள்.
4. மலாய்
மரபுடைமை மையம், சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக