வியாழன், 3 அக்டோபர், 2019




வாங்க வாசிக்கலாம் (13) – எம். சேகர்
மக்கள் ஓசை (18-8-19)


பெ. இராஜேந்திரனும் நானும்


1980 களில் தொடக்கத்தில் எனக்க அறிமுகமானவர் நண்பர் பெ.இராஜேந்திரன். அப்பொழுது வானம்பாடி அலுவலகம், பெட்டாலிங் மாரியம்மன் கோயிலுக்கு எதிரில் இருந்தது. அச்சமயத்தில்தான் எனது கதைகள் பத்திரிக்கைகளில் வெளிவரத் தொடங்கியிருந்தன. வானம்பாடிக்குக் கதைகளைக் கொடுப்பதற்காக எனது பள்ளித் தோழர்களான பொன்.சசிதரன், தா.விஜயநாதன், ந.தர்மலிங்கம் ஆகியயோருடன் செல்வது வழக்கம். அப்படிச் செல்கையில் எங்களை முதலில் வரவேற்பது இராஜேந்திரனாகத்தான் இருப்பார். அப்போது, அச்சுக்கோப்புப் பகுதி கீழேதான் இருந்தது. இராஜேந்திரன் அச்சுக்கோப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன் வரவேற்று மேலேயிருக்கும் வானம்பாடி அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பார்.


மேல் தளத்தில், ஆதி. இராஜகுமாரன், அக்கினி சுகுமாறன், வானம்பாடி பாலு, ஆதி.குமணன் போன்றோருடன் அன்றைய வானம்பாடியின் பக்க வடிவமைப்பாளர், ஓவியர் ஜோலியும் இருப்பார். அனைவரிடமும் பேசிவிட்டுப் பின், கீழே வந்து, இராஜேந்திரனிடம் உரையாடிக்கொண்டிருப்போம். இப்படித்தான் எங்கள் உறவு ஆரம்பமானது.


ஆரம்ப காலத்திலிருந்தே இராஜேந்திரனுக்கு என் எழுத்துகள் என்றால் தனிப்பிரியம். சில சமயங்களில் வானம்பாடிக்கு வரும்போது, ‘உங்கள் கதையைத்தான் அச்சுக்கோர்த்துக்கொண்டிருக்கிறேன்,’ என்பார். அப்போதெல்லாம் மனம் ஏதோ ஓர் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும்.


சிறுகதையிலிருந்து கவிதைக்கு


அப்பொழுதெல்லாம் சிறுகதைகளை மட்டும் எழுதி வந்த என்னைக் கவிதை எழுதச் சொல்லி வற்புறுத்துவார். கவிதை எனக்கு வராது எனச்சொல்லி அமைதியாக இருந்துவிடுவேன். ஆனால் நான் எதையாவது எழுதிவைத்துப் படித்துக்காட்ட, அதை அப்படியே எடுத்துக்கொண்டுபோய், மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து அழகான படத்தைப்போட்டு அதைக் கவிதையாக்கிக் காட்டிவிடுவார் இராஜேந்திரன். அப்போதெல்லாம் வானம்பாடியிலும் சரி அதன் பிறகு தமிழ் ஓசையிலும் சரி வாரா வாரம் என் படைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கும். பத்தொன்பது வயதில் நான் எழுதிய நாவல், தொடர்கதையாக ஓவியர் சந்திரனின் ஓவிய ஆக்கத்தில் தமிழ் ஓசையில் 1981 இல், ‘சிங்காரக் காலத்துப் பூக்கள் என்ற தலைப்பில் பிரசுரமானது.


பின்னாளில் பல இடங்களில் என்னை அறிமுகப்படுத்தும்போதெல்லாம்,


எனக்குத் தெரிந்து அன்று பத்தொன்பது வயதிலேயே நாவல் எழுதியர் சேகர் ஒருவர்தான்
எனக்கூறி பெருமைப்படுத்தித் தானும் மகிழும் இராஜேந்திரன், இலக்கியத் துறையில் அன்றுமுதல் இன்றுவரை எனக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார் என்பது மறுக்குமுடியாத உண்மையாகும்.
எழுத்தால் ஒன்றுபட்ட எங்கள் உறவு நட்பால் இலக்கியமணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்றுவரை.

அனைவருக்கும் உதவும் பண்பு


1981 இல் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்துவிட்டு, பயிற்சிக்கான தேர்விலும் வெற்றிபெற்று, நேர்முகத்தேர்வுக்காகச் செல்லவேண்டிய நேரம். அந்தச் சமயத்தில் நான் கேட்காமலேயே அன்றைய சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த டத்தோ காந்தனைச் சந்தித்து எனக்காகப் பேசி, பல தடவை அப்போது வைத்திருந்து ஹொண்டா மோட்டாரில் பூச்சோங்கிற்கு வந்து, என்னை ஏற்றிக்கொண்டு பல இரவுகள் ஒரு கடிதத்திற்காக அலைந்திருக்கிறார் இந்த இராஜேந்திரன். இதுதான் அவர். மற்றவர்களுக்குத் தன்னால் செய்ய முடிந்ததை முழுமையாகச் செய்துமுடித்துக் காட்டக்கூடியவர். தன்னோடு இயங்கும் மற்றவர்களுக்கும் கைநீட்டி அன்புக்கரம் கொடுப்பவர்.


சமூக அக்கறை


எப்போதும் எதிலுமே தீவிரமாக இருப்பவர். அன்றெல்லாம் என்னுடன் பேசும்போது பல தடவை இப்படிச் சொல்லுவார்.
நமக்கு நாட்டுப் பற்றுத் தேவையில்லை
நாட்டைப் பற்றக்கூடிய பற்றுத் தேவை
என்பார்.


இந்த அளவிற்கு நம் இனத்தின் மீதும் மொழியின் மீதும் தீவிரப் பற்றுக்கொண்டிருந்தார். ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்தபோது, தமிழனுக்கும் தமிழுக்கும் ஏதாவது களங்கம் ஏற்படும்படி யாராவது பேசினால் உடனே என்னைத் தொடர்புகொண்டு என்னென்ன செய்யவேண்டும் என்பதை முறையாகச் சொல்லி வழிகாட்டுவார். அவரின் வழிகாட்டுதலில் நாடாளுமன்றத்தில் தமிழர்களை இழிவாகப் பேசிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு கொண்டுசென்றதெல்லாம் இன்னமும் என் வாழ்வின் மறக்கமுடியாத பக்கங்களாக இருக்கின்றன.


மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையின் கறுப்புப் பக்கமாக யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த செலஞ்சார் மக்களின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டி, அங்குள்ளவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் இந்த இராஜேந்திரன்.


இதுமட்டுமல்ல. இப்படிப் பல அடிக்கிக்கொண்டே போகலாம்.


துறைசார்ந்த களப்பணி


தான் எழுதவிருக்கும் கட்டுரைக்காகப் பல களப்பணிகளை மேற்கொள்ளும் பழக்கமுள்ளவர். எதையும் வெறுமனே எழுதமாட்டார். தான் எழுதும் எழுத்து இந்த சமூகத்தினருக்கும் மொழிக்கும் சிறிதேனும் பயன்படவேண்டும் என ஓயாமல் சிந்தித்துச் செயலாற்றுபவர். இன்றும்கூட எதைச் செய்தாலும் தூர நோக்குப் பார்வையுடனேயே சிந்தித்துச் செயல்படுபவராகவே திகழ்கின்றார்.
அன்று தலைநகரில் தமிழுக்கென்று இருந்த இரண்டு முக்கியமான ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளான லெம்பா பந்தாய் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி மற்றும் ஸ்ரீ கோத்தா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி, பயிற்சி ஆசிரியர்களுடன் நெருக்கமாக இருந்து பல இலக்கியப் படைப்பாளிகளை ஆசிரியர் சமூகத்தில் இருந்து வார்த்தெடுத்திருக்கிறார் என்றாலும் அது மிகையாகாது. அவர்களில் பலர் இன்றைய மலேசியத் தமிழிலக்கியத்தின் முன்னனி படைப்பாளர்களாவும் இதழியலாளர்களாகவும் இருக்கிறார்கள்.


அடுத்த தலைமுறை


பேரறிஞர் அண்ணா பெரும்பாலும் தன் செற்பொழிவுகளையும் பேருரைகளையும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் நடத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம். இங்கிருந்து பேச அழைத்தால் உடனே ஒப்புக்கொள்வாராம். காரணம் கேட்டபோது, ‘இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள் அவர்களிடம் பேசுவதே உத்தமம் என்பாராம். அவரின் இந்த உத்தி பின்னாளில் ஒரு மாபெரும் ஆக்கச் சக்தியாக அவர் பின்னால் நின்று தமிழ் நாட்டை ஆளும் உரிமையை அவருக்குக் கொடுத்தது. இராஜேந்திரனும் அப்படித்தான். இளையர்களை அதிகம் தட்டிக்கொடுத்து ஊக்குவித்து அவர்களைத் தன்னுடனேயே வாழ்க்கையின் மேல்மட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரின் அந்தப் பண்பு பின்னாளில் அவரை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக்கி அழகுப் பார்த்தது. ஆனால் அந்தத் தலைவர் பதவிக்கே உரிய தலைவராக, ஏற்ற தலைவராக அவர் மேற்கொண்ட பல செயல் திட்டங்கள் அவரை இன்று ஒரு சாதனையாளராக நமக்கு அடையாளம் காட்டியுள்ளது.


தான் பதவியேற்றக் காலத்தில் சங்கத்தில் இருந்த பல தடுமாற்றங்களைப் போக்கிச் சங்கத்தின் பெருமையை நிலைநிறுத்தி வருங்காலத்திற்கான வளங்களையும் வாய்ப்புகளையும் சங்க உறுப்பினர்களுக்காகவும் படைப்பாளர்களுக்காகவும் உய்வித்த ஒரு மாபெரும் வேள்வியைத் தமிழ் கொண்டு இயக்கிக் கொண்டிருக்கும் தனிப்பெருந்தகை இவர்.


இன்று இவருக்குக் கிடைக்கும் பெருமைகளையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது நினைவுக்கு வருவது கவியரசு கண்ணதாசனின் இந்த வரிகள்தான்.


மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன்
இவனென்று போற்றிப் புகழ வேண்டும்


இத்தகையச் சிறப்புகளுக்கும் மேன்மைக்கும் சொந்தக்காரராய் இருக்கும் பெ.இராஜேந்திரன் எழுதிய, ‘பண்பின் சிகரம் பத்மா என்ற நூலைத்தான் இன்றைய வாங்க வாசிக்கலாம் தொடரில் காணப்போகிறோம்.


பண்பின் சிகரம் பத்மாவும் பெ. இராஜேந்திரனும்


கரிகாற்சோழன் விருது


ஓர் அரசியல்வாதியாக மட்டுமின்றி மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் இதயத் துடிப்பை உணர்ந்த சமூகவாதியாகவும் இயங்கிய ஓரு மாமனிதரைப் பற்றிய வரலாற்று ஆவணம்தான் பண்பின் சிகரம் பத்மா என்ற இந்த நூல். டத்தோ பத்மா அவர்களே நம் முன் வந்து பேசுவதுபோலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலின் எழுத்து நடையும் கதை சொல்லல் போன்ற பாணியும் இந்த நூலுக்குத் தனிச் சிறப்பைத் தந்திருக்கிறது.  மேலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், ‘கரிகாற்சோழன் விருதுக்காக இந்த நூலைத் தேர்வு செய்திருப்பதானது இந்த நூலுக்குப் பெருமை சேர்த்திருப்பதோடு மட்டுமல்லாமல் கரிகாற்சோழன் விருதுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. பெ.இராஜேந்திரனும் பண்பின் சிகரமான பத்மாவும் இந்தக் கரிகாற்சோழன் விருதினை ஒருசேரப் பெற்றது காலச்சிறந்ததாகும்.


அன்பின் பகிர்வுகள்


டத்தோ பத்மா அவர்களுடன் நெருக்கமாகப் பழகிய நெஞ்சங்களின் அன்பின் பகிர்வுகளும் மலேசிய நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் மனப் பகிர்வுகளும் இந்த நூலுக்கு இடை இடையே கொடுக்கப்பட்டிருப்பதானது பத்மா என்ற தனிமனிதரைப் பற்றிய நம் அறிதலை அவரை நோக்கி இன்னும் நெருக்கமாக நகர்த்தியுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் இந்நாள் பிரதமருமான துன் மகாதீர், முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி, ம.இ.கா.வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, நயனம் ஆசிரியர் திரு.ஆதி.இராஜகுமாரன், முனைவர் ரெ.கார்த்திகேசு போன்றோரின் பகிர்வுகளும் நட்பின் சின்னமாய் இந்த நூலில் விரிந்துள்ளன.


வெற்றியை நோக்கிய பயணம்


தோட்டத் தொழிலாளியின் மகன் அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார் என்பதும் தோட்டப் பாட்டாளிச் சமூகத்தைச் சேர்ந்த முதல் மாணவன் இவர்தான் என்பதும் அன்றைய தொழிலாளர்களிடையேயும் இளையோர்களிடேயும் புதிய நம்பிக்கையையும் உந்துசக்தியையும் கொடுத்தது போன்ற நம்பிக்கைப் பூக்களைத் தூவும் வாழ்வியல் கருத்துகளும் இந்நூல் முழுக்க அவருடைய வார்த்தைகளாலேயே விரிவடைந்து வாசகர்களைச் சென்றடைகின்றன.


என் பெற்றோர்கள் ஏழைகளாக இருந்தனர். ஆனாலும் அவர்களின் மன உறுதிதான் எனக்குக் கல்வியைக் கொடுத்தது


நீ ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தகுதி உனக்கு இல்லை என்றனர்


தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்தையும் சரளமாக வார்த்தைகள் வந்து விழும் பாங்குகளையும் தேவாலயத்தில்தான் கற்றேன்


பொருளாதாரம் படித்த நான் தமிழ்த் துறையைக் காப்பாற்ற தமிழும் படித்தேன். மலாயாப் பல்கலைக்கழக்திதல் தமிழ்ப் படித்த முதல் அறுவரில் நானும் ஒருவன்


எனக்கு நடந்த முதல் இரவு ஏற்பாடு எனக்குள் சமூகச் சிந்தனையை உருவாக்கியது. பின்னாளில் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வசதிகளை மேம்படுத்த திட்டங்கள் உருவாகியது
மேலும், அரசியலுக்கும் பொதுச் சேவைக்கும் வர விரும்புபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும்,


அரசியலில் நுழையும்போதே முழு அளவில் பணியாற்றி மக்களுக்குப் பெரிய பெரிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று லட்சியங்களை வகுத்துக் கொண்டவன் நான்

என்றும் கூறுகிறார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தான் கற்றுக்கொட்டதையும் இப்படிப் பதிவு செய்கிறார்.


நிர்வாகத் திறமையும் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம், திட்டமிட்டுச் செயலாற்றுவது என பல சிறப்பு அம்சங்களை மலாயாப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டேன்.
இவரால் என்ன முடியும்? இவரோடு பணியாற்ற முடியாது என்று முன்னமே தீர்மானித்து இருந்தவர்களிடமே தன்னால் முடியும் என நிரூபித்துக் காட்டிய சாதனையாளர். அவரே அதைச் சொல்கிறார்,


டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் சொல்லியும் தொழிலாளர் அமைச்சு என்னை ஏற்க மறுத்தது. எனக்கு இந்தப் பையன் வேண்டாம். பத்மநாபனை வேறு துறைக்கு அனுப்பிவிட்டு எனக்கு விரைவில் வேறொரு புதியவரை அனுப்பிவிடுங்கள் என்று தலைமைச் செயலாளர் முகமட் ஸேன் கூறிவிட்டார்.


ஆனால், எந்த அமைச்சில் அவரை வேண்டாம் என்று சொன்னார்களோ அவர்களே, ‘பத்மநாபனே தொடர்ந்து இருக்கட்டும் என்று கூறும் அளவிற்கு தன் ஆற்றலை நிரூபித்து படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் என்பது போன்ற பல தகவல்களை இந்த நூலின்மூலம் அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.


சமூகத்திற்கான ஒரு படைப்பு


இந்த நூல் ஒரு தனிமனிதனைப் பற்றிய நூல் அல்ல. நம் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தைப் பற்றிய நூலாகத் திகழ்வதே இதன் நனிச்சிறப்பு. இன்றைய இளையர்களுக்குத் தேவையான தன்முனைப்புக் கருத்துகளும் இந்த சமூகத்தின் ஒரு பகுதியின் வரலாற்று ஆவணப் படிவமாகவும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. தன்னைப் பற்றி எழுதி, தன் படைப்புகளை மட்டும் எழுதி நூலாகத் தொகுத்து வெளியிடும் இன்றைய சூழலில், இன்னொரு மனிதருக்காகப் புத்தகம் எழுதுவது என்பதற்கெல்லாம் வேறொரு மனவெளி நமக்கு இருக்க வேண்டும். அந்த மனவெளி இராஜேந்திரனுக்கும் இருப்பதால்தான் டத்தோ பத்மாவைப் பற்றி இப்படியோர் ஆக்கத்தை அவரால் எழுத முடிந்திருக்கிறது.


காலனித்துவ ஆட்சியாளர்களால் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டு, அவர்களின் தேவைகளுக்காகப் பிழியப்பட்டுத் தூக்கிப் போடப்பட்ட இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார நிலை 1970 களில் மிகவும் மோசமான சூழலில் இருந்த காலத்தில் கே.பத்மநாபன் என்னும் இளம் பொருளியல் பட்டதாரி அன்றைய ம.இ.கா.வின் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களால் அடையாளம் காணப்பட்டார். ஆனால், அவரை இந்தியச் சமூகம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது என்பது வேறு விஷயம். அவர் முன்வைத்த 20 ஆண்டுகளுக்கான சமுதாயப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் போன்றவை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் இந்தியர்கள் இன்று எதிர்நோக்கும் பல பொருளாதாரச் சிக்கல்கள் அன்றே தீர்க்கப்பட்டிருக்கலாம் எனப் பல தகவல்களைத் தாங்கும் பொக்கிஷமாக இந்த நூல் விளங்குகிறது.


டத்தோ பத்மாவின் வாழ்நாள் சாதனைகளில் சிறந்ததாக மலாக்காவின் மணிப்பால் மருத்துவக் கல்லூரி உருவாகக் காரணகர்த்தாவாக அமைந்தவர் என்பதையும் இந்த நூல் சுட்டத் தவறவில்லை. இந்தக் கல்லூரியின் தொடக்க விழாவில்,


டத்தோ பத்மநாபன் தூரநோக்கு, நேர்மை ஆகியவற்றை அணிகலனாய்க் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கும் நாட்டின் பொருளாதாரம் செழிப்பதற்கும் நன்மை தரக்கூடிய இந்த மருத்துவக் கல்லூரியை நிலைநாட்டுவதற்கு அவர் அயர்வின்றி உறுதியுடன் பாடுபட்டார். இந்த நாடு டத்தோ பத்மாவுக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.


ஆற்றிய உரையில் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அரிய பல தகவல்களும் இந்த நூல் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது.


டத்தோ பத்மா அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் அவை சார்ந்த சவால்களையும் சாதனைகளையும் ஒரு சுயசரிதம் எழுதுவதுபோல் அல்லாமல், அவருடைய சொற்களாலேயே நம்மோடு உறவாடவிட்டிருக்கிறர் இதழியலாளர் இராஜேந்திரன். இந்த வகை படைப்புத்திறன் இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிப்பதற்கான ஆர்வத்தை வாசகர்களிடையே ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளது.



மீண்டும் இராஜேந்திரன்


1970 களில் பத்திரிக்கைத் துறையில் அச்சுக்கோப்பாளராகப் பணியைத் தொடங்கிய திரு. இராஜேந்திரன், 1981இல் ஆதி.குமணன் தொடங்கிய தமிழ் ஓசை நாளிதழில் தலைமை நிருபராகப் பணியாற்றி, இன்று மக்கள் ஓசையின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியராகி  இதழியல் துறையில் தன்னை ஒவ்வொரு படியாகச் செதுக்கிக் கொண்டவர்.  மலேசியப் பத்திரிக்கைக் கழகத்தின் சிறந்த தமிழ்ச் செய்தியாளர் விருதை ஒன்பது முறை வென்றுள்ளார். மேலும் உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் துறை அமைச்சு வழங்கும் சிறந்த செய்தியாளர் விருதையும் சுற்றுச்சூழல் அமைச்சின் கட்டுரையாளர் சிறப்புப் பரிசையும் பெற்றுள்ளார்.


1987இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினராகி, துணைச் செயலாளர், உதவித் தலைவர், செயலாளர் பொறுப்பு வகித்து அதன்பின்னர் தலைவர் பதவி வகித்தார். இவர் முன்னெடுத்த முயற்சியினால் மூன்று மாதாங்களுக்கு ஒருமுறை  புதுக்கவிதைக் கருத்தரங்கும் அதன் தொடர்பான தொகுப்பு நூல்களும் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் பிரசுரமாகும் சிறுகதைகளை எழுத்தாளர் சங்கத்தின் மூலமாகத் தொகுத்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்றுவரை வெளியிட்டு வருவதானது இவரின் தொலைநோக்குப் பார்வைக்கும்  தலைமைத்துவப் பண்புக்கு  சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.


இன்றும் மலேசியத் தமிழ் இலக்கியத்தை அயல் நாடுகளில் அறிமுகம் செய்யும் வண்ணம் இலக்கியச் சுற்றுலாக்களைப் பல கருத்தரங்குகளோடு ஏற்பாடு செய்து வருவது இவரின் தனிச்சிறப்பினையும் இலக்கியத்தின்மேல் இவர் கொண்டுள்ள காதலையும் புலப்படுத்துவதாகும். கடந்த டிசம்பர் மாதத்தில் கோவை ஸ்ரீ நேரு வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மலேசியத் தமிழ்ச் சிறுகதைககள் எனும் தொகுப்பு நூல் அவர்களின் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் இவரின் தனிப்பட்ட பங்களிப்பே காரணமாகும் என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கதாகும்.


வாசிப்பும் கருத்துரைப்பும்


இத்தகைய மனிதரின் ஆக்கமான ஒரு பண்பாளரைப் பற்றிய இந்த நூலினை வாங்கி வெறுமனே வீட்டுப் பேழைகளில் வைத்திருப்பதைவிட வாசித்து அதன் தொடர்பான கருத்துகளைப் பேசும்போதுதான் அந்த எழுத்தின் நோக்கம் நிறைவேறும். எழுதப்பட்ட எழுத்துகள் வாசித்தவர்களின் மனத்திலிருந்து மீண்டும் வார்த்தைகளாக வெளிவரவேண்டும். அப்போதுதான் அந்த எழுத்தின் பயணம் என்பது ஆரம்பமாகும். 

இங்குப் பெரும்பாலும் அப்படி நடப்பது அரிதாகவே இருக்கிறது. வாசித்து வாசித்துத் தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வதனால் யாருக்கும் எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. வாசித்தபின் உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளையும் நீங்கள் சொல்ல விரும்புபவைகளையும் அந்தப் படைப்பாளரோடும் அல்லது மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நமது படைப்பிலக்கியம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகரும்.


ஆயிரம் நூல்களை
வாசித்தவன் இருந்தால்
அவனைக் காட்டுங்கள்
அவனே எனது வழிகாட்டி
என்கிறார் ஜூலியஸ் சீசர். 


எனவே, நிறைய வாசிப்போம். மற்றவர்களும் வாசிக்க வழி காட்டுவோம்.


- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக