வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சிறுகதை - ஐந்து லட்சம்

ஐந்து லட்சம்


அம்மாவின் படலம்

எப்படிங்க உங்களால இப்படி இருக்கமுடியுது? அதப்பத்தி உங்களால பேச முடியலனா உங்க தம்பிகிட்ட நா பேசுறேன். நாம எப்படிங்க சும்மா இருக்கமுடியும்? நீங்க ஒன்னும் பெரிய பணக்காரன் இல்ல. உங்களுக்கும் நாலு பிள்ளங்க இருக்கு. மூத்த பொண்ணுக்கு நிச்சயமும் ஆயிடிச்சி. கல்யாணம் பண்ணனும். அடுத்தவன் ஆஸ்திரேலியாவில் படிச்சிகிட்டு இருக்கான். எவ்வளவு செலவு இருக்கு. அது உங்க பணங்க. அத கேட்க ஏங்க இவ்வளவு யோசிக்கிறீங்க?’

காயத்ரி வைத்த கண் வாங்காமல் அவனைப்பர்த்து நின்றாள். அவள் கணவன் பதில் எதுவும் பேசாமல் மௌன சாமியாராக அமர்ந்திருந்தான். அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

உங்க இடத்துல நா இருந்திருந்தேனா எப்பவோ அந்தப் பணத்த நா கேட்டு வாங்கிருப்பேன். அது உங்க சொத்துங்க. உங்க அம்மா உங்க பங்காக உங்களுக்குக் கொடுத்ததுங்க. அத ஏங்க உங்க தம்பி வச்சிருக்காரு? அவருகிட்ட ஏங்க கொடுத்து வச்சிரிங்கீங்க? உங்க பேங்ல போட்டிருக்கலாமே. வட்டியாவது வரும். நீங்க ஏன்தான் இப்படி இருக்கீங்கனு எனக்குத் தெரியல.


காயத்ரியின் குரல் முன்பைவிட வேகமாக இரைந்தது.
அம்மா, பேச்ச நிப்பாட்டுறீங்களா?  அப்பாவுக்கு தெரியும்மா. நீங்க ஏம்மா எப்பப்பாத்தாலும் தொணதொணன்னு அதப்பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்க? அவரோட பணம். அவரோட இஷ்டம்மா. நீங்க இப்படி கத்திகிட்டு இருக்குறதால அந்தப் பணம் நம்ப வீட்டு வாசல்ல வந்து ஒன்னும் கொட்டப்போறதுல்ல.
மூத்த மகள் சந்தியா மெதுவாக முணுமுணுத்தாள்.
நீயும் உங்க அப்பா மாதிரியே பேசு. உங்க சித்தப்பாவ பாரு. கொண்டோ வீடு. பி.எம்.டபிள்யூ. காடி. ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் பிள்ளங்கள கூட்டிக்கிட்டு வெளியூருக்கு போறாங்க. அத வாங்குறாங்க. இத வாங்குறாங்க. ஆனா நாம எப்படி இருக்கோம்? பக்கத்துல இருக்குற ஜோகூருக்குக்கூட போகமுடியல. எப்பக்கேட்டாலும் உங்க அப்பாக்கு ஒரே பல்லவிதான். காசு இல்ல. காசு இல்ல. நா கத்தாம என்ன செய்வேன்? ஒரு காசா ரெண்டு காசா. அஞ்சி லட்சம்டி. ரத்தமெல்லாம் கொதிக்குது. தம்பி பாவிக்கட்டும்னு கொடுத்து வச்சிருக்காராம். ஊருஉலகத்துல இப்படி யாராவது இருப்பாங்களா?’
அதான் இருக்காரே உங்க புருஷன்.
அம்மாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள் சந்தியா.

முன்னனிப் படலம் 1

காயத்ரியின் கிண்டலும் நக்கலுமான பேச்சுகளில் சில நேரங்களில் அதை சொல்லிவிடலாமா என்று அவன் நினப்பதுண்டு. நாளாக ஆக அவளின் இந்தப் போக்கு அவனுக்கு எரிச்சலூட்டியது. அதனாலேயே சில சமயங்களில் அதிக நேரம்கழித்தே வீடு திரும்புவான். இவன் நேரம் கழித்து வீடு வரும்

போதெல்லாம் அவன் கூடுதல் நேர வேலை செய்துவருவதாகவே காயத்ரி நினைத்திருப்பாள். சில வேளைகளில் தான் பணிபுரியும் அலுவலகத்தின் மலேசியாவின் கிளை அலுவலகங்களுக்குச் செல்வதாகக் கூறி பல நாட்கள் வீட்டிற்கு வராமலேயே இருந்து விடுவான்.

முன்னனிப் படலம் 2

காயத்ரி அவன் மேல் முழுநம்பிக்கை வைத்திருந்தாள். ஒவ்வொரு மாதமும் $1500 வெள்ளியை அவள் கையில் கொடுத்து விடுவான். வீட்டுச் செலவு, தண்ணீர், மின்சார கட்டணம் என அனைத்து செலவுகளையும் அவன் கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளித்துவிடுவாள். திருமணமான புதிதில் வீட்டுச் செலவுக்கு மாதம் ஒன்றுக்கு $200 மட்டுமே கொடுத்தவன் இந்த 29 ஆண்டுகளில் $1500 வரை இப்போது கொடுக்கின்றான். சில மாதங்களில் கூடுதலாகவும் கொடுப்பதுண்டு.
மூத்த மகள் சந்தியாவிற்கு 28 வயதாகிறது. இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் முடிவாகக் கூறிவிட்டனர். திருமணத்துக்கு நிறைய செலவாகும். கணவனிடம் கூடுதலாகக் கொஞ்சம் பணம் கேட்டால்,
எங்கிட்ட எங்கிருக்கு? எனக்கே பத்தமாட்டுது. நா வீட்டுக்காசு கட்டனும், காடி காசு கட்டனும், ஆஸ்திரேலியாவில் படிக்கிற பையனோட படிப்பு செலவ பாத்துக்கனும், உனக்கு வீட்டுச் செலவுக்குக்குக் கொடுக்கனும்’,
என சாக்குபோக்குச் சொல்லி அமைதியாக இருந்து விடுவான். கேட்டு கேட்டு சலித்துப்போனவள் பின் அதைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஆனால் சந்தியாவின் கல்யாணச் செலவை நினைத்தால்தான் அவளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது. திருமண வரவேற்பை விமரிசையாக கல்சாவில் வைக்கவேண்டும், விலையுயர்ந்த பட்டுப்புடவை, புதிய டிசைன் நகைகள்

வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும், திருமண நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு நல்ல நினைவுச் சின்னங்கள் வழங்கவேண்டும் என பல மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தவளுக்கு கணவனின் போக்கு பேரிடியாக விழுந்தது.
ஏங்க உங்க தம்பிகிட்ட இருந்து உங்க காச நீங்க வாங்கலனா, சந்தியாவோட கல்யாணத்தை கல்சாவுல நடத்த முடியாது. என்னோட மகளோட கல்யாணம் புளோக் கீழே நடக்கறத நா விரும்பல. ஸ்டென்டட்டாக இருக்காது. யாருங்க நம்மள மதிப்பா?’

அவள் கணவன் அமைதியாக இருந்தான். புளோக் கீழே கல்யாண விருந்து வச்சா என்ன குறைந்திடபோவுது. மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அவன் கல்யாணமும் புளோக் கீழ தான் நடந்தது. காயத்ரி அப்படித்தான். எதிலும் ஆடம்பரம். வீண் செலவு. பிறர் மெச்சிக்க வாழ ஆசைபடுபவள்.
திருமணமான புதிலில் அவள் வீட்டாரிடம் அவனைப்பற்றி பெருமிதமாகவே பேசுவாள். அவன்தான் சிறந்தவன், வல்லவன், எம்புருஷன் மாதிரி யாருமில்ல என புகழ்ந்து தள்ளுவாள். அவன் அம்மாவிற்கு ஜோகூரிலும் மலாக்காவிலும் பூர்வீகச் சொத்துகள் அதிகமாகவே இருந்தன. அம்மா இறந்த பிறகு அச்சொத்துகள் ஆளுக்கு ஐந்து லட்சமாக அவனுக்கும் அவன் தம்பிக்கும் வந்து சேர்ந்தன.

இன்றையப் படலம் 1

அவன் தம்பி மனோகரன் வசதியாக வாழ்கிறான். இரண்டு மாதத்திற்கு முன்புதான் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையோரம் ஒரு கோண்டோவை $2 மில்லியனுக்கு வாங்கினான். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்திற்குச் சென்ற போது காயத்ரி வாயடைத்துப்போனாள். வீட்டின் ஆடம்பரம் அவளைத்

திக்குமுக்காட வைத்தது. ஏதோ ஒரு சொர்க்கபுரியில் தவழ்வதுபோல் உணர்ந்தாள். மனோகரின் மனைவியிடம் வீட்டில் மாட்டியிருந்த திரைச்சீலைகளின் விலையைப்பற்றி விசாரித்தாள். தரையில் விரிக்கப்பட்டிருந்த அரபு நாட்டு கம்பளத்தின் விலையைப்பற்றி விசாரித்தாள். ஐந்து கதவுகொண்ட ஐஸ் பெட்டியின் விலையைப் பற்றி விசாரித்தாள். வீட்டின் வரவேற்பரையிலும் அறைகளிலும் இருந்த அகன்ற தொலைக்காட்சிப்பெட்டிகளின் விலையையும் விசாரித்தாள்.
ஆமாம் உங்களுக்கு பூர்வீகச்சொத்து நிறைய இருக்குது, நீங்க ஆசைப்பட்டதெல்லாம் வாங்கலாம்’,  என்றாள் ஆதங்கத்துடன்.
அன்று வீட்டிற்கு வந்தவுடனேயே, அவன் அம்மா அவனுக்குக் கொடுத்த ஐந்து லட்சத்தைப் பற்றி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். நான்தான் அவனை முதல்ல பயன்படுத்திக்கச் சொன்னேன் என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு போய்விட்டான்.

இன்றையப் படலம் 2

மனோகரன், தன் கணவனின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறான் என காயத்ரி வயிறு எரிந்து கொண்டிருந்தாள். கணவனின் சகோதரன் கொண்டோவில் வாழ தான் இன்னும் ஜூரோங் பகுதியில் ஐந்து அறை எச்.டி.பி. புளோக்கில் 15 ஆண்டுகளாக வாழ்வது அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்டுத்தியது. திருமணமான புதிதில் அவளும் மூவறை வீட்டில்தான் வசித்து வந்தாள். முன்பைவிட வாழ்க்கை தரம் உயர்ந்திருந்தாலும் மனோகரனின் குடும்பம் வாழும் அளவுக்கும் வசதிக்கும் இல்லையே என மனம் குமுறினாள்.


இப்போதையப் படலம் 1
இந்த வாரத்துல நானே உங்க தம்பிகிட்ட கேட்கப் போகிறேன். இனியும் என்னால பேசாம இருக்க முடியாது. உங்க காச நீங்க திரும்ப வாங்குங்க. இல்ல நா கேட்கப்போகிறேன். எனக்கு இதுக்கு மேலயும் உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களால முடியலன பேசாம இருங்க. நான் உங்க தம்பிகிட்ட கேட்கிறேன்’.
என் தம்பிகிட்ட கேட்கிற வேலையெல்லாம் வச்சிக்காத. அது உன்னோட பணமில்லை. உனக்கு அதுல எந்த உரிமையும் இல்லை. அந்தப் பணம் உனக்குத் தேவையுமில்லை. மாதம்மாதம் $1500 வெள்ளி உனக்குக் கொடுக்குறேன். பத்தாத உனக்கு. ஐந்து ரூம் வீடு இருக்கு, தோயோதா எஸ்திமா கார் இருக்கு. இது போதாதா உனக்கு? இல்ல நம்ப பிள்ளைங்க சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்காங்களா? இல்ல யாருக்காவது வைத்தியம் பார்க்க பணம் இல்லாம இருக்கோமா? இல்லையே. ஏன் காசு காசுன்னு இப்படி பேயா அலையிற? உன்னோட இஷ்டத்துக்கு ஆடுற வேல எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. இஷ்டம்னா வாழு, இல்லனா வெட்டிட்டுப் போ, புரியுதா?’
இதுநாள் வரை அமைதியாக இருந்தவன் இன்று கொடிய நாகமாய்ச் சீறினான். இது நாள் வரையில் அவன் இப்படி கோபப்பட்டு காயத்ரி பார்த்ததே இல்லை. அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் விறுவிறுவென்று தன் அறைக்குப் போய்விட்டாள்.

இப்போதையப் படலம் 2

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவன் வீட்டை விட்டு கிளம்பினான். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொள்ளும் போதெல்லாம் அப்பா இப்படி கிளம்பிப் போவதைப் பல தடவை சந்தியா பார்த்திருக்கிறாள். வீட்டு உடையில் இருந்த

அவளின் அம்மாவும் திடீரென வேறு உடை உடுத்திக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தது சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அம்மா எங்கமா கிளம்பிட்டீங்க?’
அறக்கப் பறக்க கலவரத்தோடு தென்பட்ட அம்மாவைக் கேட்டாள்.
ம் .. ஆ..  எனக்கு முக்கியமான வேலை இருக்கு. சோறு, கறி எல்லாம் இருக்கு. சுட வைத்து சாப்பிடுங்க. வெளிய போய் வாங்கி சாப்பிடாதீங்க தெரியுதா!
சொல்லிவிட்டு வெளியேறினாள் காயத்ரி.
சாலைக்கு வந்தவள் ஒரு டக்சியை நிறுத்தி,
அந்தச் சில்வர் கலர் காரான தோயோதா எஸ்திமாவை பின் தொடரச் சொன்னாள். அவளுக்குத் தெரியும். அவள் கணவன், மனோகரின் வீட்டுக்குத்தான் செல்வானென்று. இவளிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக்கொள்ளும் போதெல்லாம் அவன் தன் தம்பி வீட்டுக்குச் செல்வதாகத்தான் கூறியிருக்கிறான். இன்று கணவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து செல்லவேண்டும் என முடிவெடுத்துவிட்டாள். கணவனுடன் வராமல் தனியாக அவன் பின்னாலேயே வருவதால் மனோகரனுக்குப் புரிந்து விடும். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கிறாளென்று. இன்று என்ன நடந்தாலும் சரி தன் கணவனுக்குச் சேர வேண்டிய அந்த ஐந்து லட்சத்தைப் பற்றி கேட்டே ஆகவேண்டும் என மனசுக்குள் தீர்க்கமாய் முடிவெடுத்துக்கொண்டாள்.
முன்னால் சென்றுகொண்டிருந்த எஸ்திமா, ஈஸ்ட் கோஸ்ட்டுக்குச் செல்லும் விரைவுச்சாலையில் செல்லாமல் அருகில் இருந்த கிளை சாலையொன்றில் நுழைந்தது.பின்னனிப் படலம்

காயத்ரிக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. அது ஒரு தரைவீடுகள் அடங்கிய புதிய குடியிருப்புப் பகுதி. அவள் கணவன் ஓட்டிச்சென்ற கார் ஒரு வீட்டின் முன் நின்றதும், அந்த வீட்டின் தானியங்கி கேட் மெதுவாகத் திறக்க ஆரம்பித்தது. காயத்ரியின் மனம் திக்திக் என வேகமாய் படபடத்தது. உடம்பெல்லாம் வியர்க ஆரம்பித்திருந்தது.
அவள் கணவன் காரிலிருந்து இறங்குவதற்கும் வீட்டிலிருந்து ஒரு சிறு குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொள்வதற்கும் சரியாக இருந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் அவன் முகமெல்லாம் புன்னகைப் பூக்களால் நிறைந்தது.

வீட்டின் வாசற்படியில் ஓர் இளம்பெண்ணின் உருவம் நிழலாடியது. சிவப்பு வண்ண டீ சட்டையும் குட்டையான ஸ்கேர்ட்டும் அணிந்திருந்தாள். அருகில் வந்தவள் தோள்மீது கைபோட்டு, அவளை அணைத்துக் கொண்டும் குழந்தையைத் தூக்கிக்கொண்டும் அவன் வீட்டினுள் நுழைந்தான்.

சில விநாடிகளுக்குள் அந்த மூன்று மாடி தரைவீட்டின் விலையுயர்ந்த வாசற்கதவு மூடிக்கொண்டது. தானியங்கி கேட்டும் தானாக மூடிக்கொள்ள மெல்ல நகர்ந்தது, அந்தச் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த காயத்ரியின் பார்வையில் மங்கலாய்த் தெரிந்தது.

- தமிழ் முரசு 16-09-2012

____________________________________________________________________________________

புதன், 11 ஜூலை, 2012

சிறுகதை - அம்மாவுக்கு ஒரு நிழல்

அம்மாவுக்கு ஒரு நிழல்
---------------------------------
கல்யாணத்துக்குப் போகலையா?”,
சமையல் அறையிலிருந்து அம்மா கேட்பது காதில் விழுந்தது. பதில் கூற மனம் விரும்பவில்லை. மௌனமாகப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்வுக்குப் படித்தாக வேண்டும். சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பின் இறுதியாண்டுத்தேர்வு. காப்பியமும், மொழியியல் பாடமும்தான் பாக்கி.
தவா, கல்யாணத்துப் போயிட்டு வாடா.
அறைக்கதவில் அம்மாவின் உருவம் நிழலாடியது.
அம்மாவைப் பார்த்தேன்.
அம்மாவின் நெற்றியில் வியர்வைத் துளிகள். அம்மாவின் விழிகளில் ஏக்கப் பெருமூச்சு.
நான் போகலம்மா”,
கொஞ்சநேரம் போய் மொய் கொடுத்திட்டு வந்துரு, போகலனா நல்லா இருக்காதுடா”,
தம்பிய போகச் சொல்லுமா”,
அவன் சின்னப்பையன். அவனுக்கு என்ன தெரியும்?”,
நீ போயிட்டு வாம்மா”,

நா போறதா இருந்தா
உன்னை ஏன் போகச் சொல்றேன்”,
என்று அறையை விட்டு அகன்றாள்.
அம்மா போனபிறகுதான் நினைவுக்கு வந்தது. அம்மா இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்புவதில்லை. அப்பா இறந்ததிலிருந்து அம்மா தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கோணல் பார்வைகளுக்கு இரையாவதை விட தனிமையில் அமைதி பெறுவதையே அம்மா அதிகமாக விரும்புகிறாள். ஒரு சில நேரங்களில் பழைய நினைவலைகளில் சிக்கி, அவளுக்குள்ளேயே அழுவாள்.
அம்மா
மனம் ஒரு முறை அந்த வார்த்தையை அனுபவித்து உணர்வோடு உச்சரித்தது.
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
பாடல் வரிகள் தானாகவே நினைவைத் தட்டியது.
இதயம் ஈரமாகிப்போனது.
நினைவுகள் ஈரத்துளிகளாய் சிதறின.


அன்று பள்ளி முடிந்து வீட்டை அடைந்தேன். தாத்தாவின் குரல் காரசாரமாக கரகரத்துக் கொண்டிருந்தது. கதவோரமாக நின்று எட்டிப் பார்த்தேன்.
அம்மா கண்ணீர்க் கோடுகளோடு நின்று கொண்டிருந்தாள். என் அப்பாவின் அப்பா ஆவேசமாகக் கத்திக்கொண்டிருந்தார்.

உன்னைப்பத்திதான் ஊரே பேசுதே, சே.....இதெல்லாம் ஒரு பொழப்பா….மானங்கெட்டவளே!
மாமா, நா சொல்றத கொஞ்சம் கேளுங்க
அம்மா கெஞ்சினாள். அழுதாள்.
சே, வாயை மூடு. இனியும் நீ சொல்றத கேட்க நா தயாரா இல்ல. என்னோட மவன் போனபிறகு, குடும்ப மானமே போன பிறகு, இனி உனக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. பேசாம எம்மவன் பேருல இருக்குற இந்த வீட்ட வித்துட்டு, எம்மவனுக்குச் சேரவேண்டியத எங்ககிட்ட கொடுத்திடு.
தாண்டவம் ஆடிவிட்டு தாத்தா கிளம்மபும் போது என்னைப் பார்த்துச் சொன்னார்.
இவகூட இருந்தா நீயும் உன் தம்பியும் தெருவுலத்தான் நிக்கனும். உருப்படமாட்டீங்க. துணியெல்லா எடுத்துக்கிட்டு எங்கூட கெளம்புங்க
நான் மௌனமா நின்றுகொண்டு அம்மாவைப் பார்த்தேன்.
எப்படியோ போங்க”,
சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
அம்மா என்னை அணைத்துக்கொண்டு அழுதாள். நானும் அழுதேன். தம்பியும் அழுதான்.
கொஞ்ச நாள் கழித்து, புக்கிட் பாத்தோக்கில் நாங்கள் குடியிருந்த ஐந்து அறை வீட்டை விற்றுவிட்டு, தாத்தா கேட்ட பணத்தை அவருக்குக் கொடுத்து விட்டு, அம்மா ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோயில் பக்கம் மூவறை வீடொன்றை வாங்கினாள்.
அப்பாவின் இறப்பிற்குப் பிறகு எங்களுக்கிருந்த சொந்தங்கள் எல்லாம் மறைந்து போயின. அம்மாவின் சொந்தங்கள் கூட வருவதில்லை. ஆனால் பார்த்திபன் மாமா மட்டும் வருவார். அப்பாவின் மறைவிற்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போயிருந்த அம்மாவிற்கு அவர்தான் தான் பணிபுரியும் கப்பல் துறையின் அலுவலகம் ஒன்றில் வேலை வாங்கிக்கொடுத்தார். அம்மா வீடு வாங்குவதற்கும் அவர்தான் ஏற்பாடுகளையெல்லாம் செய்தார்.
அம்மா, பார்த்திபன் மாமாவிடம்தான் தன் மனக்கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துகொள்வாள். எல்லாவற்றையும் அமைதியாக் கேட்டுவிட்டு சொல்வார்.
சமூகத்தில் நிலவும் சில கருத்துகள் நம் தூய எண்ணங்களை முடக்கி, நம் முன்னேற்றத்தைத் தடை செய்யக்கூடிய தன்மை வாய்ந்தவை. சமூகக்கோட்பாடுகள் மனிதர்களுக்காகத்தான் இருக்கின்றனவே அன்றி, அவற்றிற்காக, நம் வாழ்க்கையைத் திசை திருப்பிக்கொள்ளக்கூடாது.
வாழ்க்கையில் சோதனைகள் நிறைந்திருக்கின்றன. அந்த சோதனைகளை வெற்றிக்கொள்ளவே மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம். இந்த சமூகம் நம்மை களங்கப்படுத்துவதால், நம் தூய நட்பு களங்கப்படபோவதில்லை.
பிறிதொரு நாள் பார்த்திபன் மாமா என்னை அழைத்துச் சொன்னார்.
தவா இன்னைக்கு உன் அம்மா விடுகின்ற கண்ணீருக்கு இந்த சமூகம் ஒரு நாளைக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இன்று உன் அம்மாவை ஒதுக்கி வைக்கும் சமூகம், நாளை அவளைத்தேடி வரும்படி நீயும் உன் தம்பியும் வாழ்க்கையில் உயரவேண்டும். வசதியில்லாத நாம், நம்மை உயர்த்திக்கொள்ள இருக்கின்ற ஒரே வழி கல்விதான். கல்வியைத் தவிர வேறொன்றுமில்லை. நன்றாகப் படித்து நீ பட்டம் பெறும்நாளில் உன் தாயை தலைநிமிர்ந்து நடக்க வை.

தவா”,
அம்மாவின் குரல் நினைவுகளைக் கலைத்தது.

இந்தக் கவரில் பெயர் எழுதி வை, ரகுவை போகச் சொல்கிறேன். அடுத்த வாரம் உனக்குப் பரீட்சைன்னு சொன்னேல, நா மறந்துட்டேன்”,
அம்மா ஒரு நீலக்கவரை கொடுத்துவிட்டுப் போனாள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை.
இன்றுதான் அம்மாவிற்கு அலுவலக வேலையிலிருந்து ஓய்வு. ஒவ்வொரு நாளும் ஐந்தரை மணிக்கு வேலை முடிந்தாலும் கூடுதலாக மூன்று மணிநேரம் வேலை செய்யவேண்டும். சனிக்கிழமையும் பனிரெண்டரை மணிக்கு வேலை முடிந்தாலும் ஐந்தரை மணிவரை வேலை செய்யவேண்டும். சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில் தனித்திருக்கும் தாய்மார்கள் இப்படியெல்லாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. வீட்டுத்தவணை, பியூபி பில்கள், ஸ்தாஹாப் பில்கள், நகராண்மைக்கழக கட்டணம், போக்குவரத்து கட்டண அட்டைகள் என பலவும் மாதம் முடியுமுன்னே வந்து மிரட்டிக்கொண்டிருக்கும் வாழ்வியல் சூழலில்தான் அம்மாவும் எங்களை வளர்த்து ஆளாக்கவேண்டியிருந்தது.
என் படிப்பிற்கும் தம்பியின் படிப்பிற்கும் கூட பார்த்திபன் மாமாதான் பல வழிகளிலும் உதவி வந்தார். சிண்டா மூலமும், உமறுப் புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி, சிம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வட்டியில்லா கல்விக்கடனும், உபகாரச் சம்பளமும் கிடைக்க வழி காட்டினார். பார்த்திபன் மாமாவிற்கு அம்மாவின் ஒத்த வயதுதான் இருக்கவேண்டும். தனியாகத்தான்  தாமான் ஜூரோங்கில் வசித்து வருகிறார். இன்றுவரை அவர் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறார். பார்த்திபன் மாமா அவருடைய இளவயதில் ஒரு பெண்ணை விரும்பியதும், அந்தப் பெண்ணோ இவர் மனம் அறியாமல் பெற்றோர் பார்த்த பையனையே கல்யாணம் செய்துகொண்டு போனதும் பழைய கதை.
அம்மாவின் மேல் பார்த்திபன் மாமாவிற்கு தனி அக்கறை இருந்தது. அம்மாவும் அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள். சிறுவயதில் புக்கிட் தீமா பகுதியில் ஒரே கம்பத்தில் இருந்ததாக அம்மா கூறியிருந்தாள்.

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பார்த்திபன் மாமா தனித்து வாழ்ந்துகொண்டிருப்பார். அம்மாவும் பாவம்தானே. எங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உழைத்துக்கொண்டிருக்கிறாள். எதிர்காலம் எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியாதே. அம்மாவுக்கு இரண்டுமே ஆண்பிள்ளைகள்தானே. நாளைக்கு எங்களுக்கும் கல்யாணம் ஆன பிறகு, வருபவள் எப்படி இருப்பாள்? எத்தனைப் படங்கள் பார்க்கிறோம். அக்கம் பக்கத்தில் எத்தனை விஷயங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்று எப்படியெல்லாமும் நினைக்கலாம். உறுதியும் கொடுக்கலாம். உறுதியாகவும் இருக்கலாம். நாளை நடக்கப் போவதை யாராலும் சொல்ல முடியாது.
மிஞ்சிய காலங்களிலாவது அம்மா மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
அம்மாவுக்கும் ஒரு துணை தேவைதானே?
அம்மாவுக்கும் ஒரு நிழல் தேவைதானே?
ஆனால் அம்மா என்ன சொல்வாள்?
பார்த்திபன் மாமா என்ன சொல்வார்?

தனித்திருக்கும் அந்த நெஞ்சங்களும் உரையாடி உறவாடி மகிழட்டுமே. இல்லற வாழ்வு வெறும் உடல் இயைபு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதற்கு மேலும் உயர்வானது உறுதியானது மன இயைபு. அந்த மன இயைபு அம்மாவுக்கும் பார்த்திபன் மாமாவிற்கும் நிறையவே இருக்கிறது. இப்போதுதான் பார்த்திபன் மாமாவின் தூண்டுதலில் இங்கு நடைபெறும் தங்கமீன் வாசகர் வட்டம், கவிமாலை என சில இலக்கிய நிகழ்வுகளுக்கும் அம்மா சென்று வர ஆரம்பித்திருக்கிறார்.
தனித்திருக்கும் அம்மாவிற்குத் துணை புத்தகங்கள்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகத்திற்குச் செல்வாள். நிறைய படிப்பாள். பார்த்திபன் மாமாவின் உந்துதலில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தாள். அம்மா எழுதிய சில கதைகளும் கவிதைகளும் தினமுரசுவிலும் மலேசிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மு.வ. வின் கள்ளோ காவியமோ, அகிலனின் சிநேகிதி போன்ற நாவல்களின் கதாபாத்திரங்களைப் பற்றியும் ஜெயமோகனின் கன்னியாகுமாரி, காடு போன்ற நாவல்கள் பற்றியும் நிறையவே விவாதம் செய்திருக்கின்றனர் அம்மாவும் பார்த்திபன் மாமாவும். மிக அண்மையில் கூட வண்ணதாசன் எழுதிய சிநேகிதிகள், எஸ். ராமகிருஷ்ணனின் இரண்டு குமிழ்கள் போன்ற சிறுகதைகளைப் பற்றி இருவரும் மிக ஆழமாக விவாதித்துக் கொண்டிருந்ததும் என் காதில் விழுந்தது. இலக்கிய ஈடுபாடு இருவருக்குமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. வரும் காலங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகவும் வாழலாமே.  
ஆனால் சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? சமூகம் இங்கு ஏன் வர வேண்டும்? அம்மாவைத் தீண்டத்தகாதவளாக ஒதுக்கி வைத்த இந்த சமூகம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கீழே விழுந்தால் தூற்றும் இந்த சமூகம் நாம் மேலே உயர்ந்தால் மாலை போட்டு வரவேற்கும்.
மாறுபட்ட மனோபாவம் கொண்டவர்களால்தான் உலகம் முன்னேறியிருக்கிறது. உலக முன்னேற்றம் சமூகத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்த்துப் போராடியவர்களாலேயே உருவாகியிருக்கிறது.
என் அம்மாவிற்கு ஒரு துணை, ஒரு நிழல் தேவை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அன்று இந்திய அரசாங்கத்தின் சார்பாக நீலகண்ட சாஸ்திரி அவர்கள் இங்கு பரிந்துரைத்த சமஸ்கிருத மொழியை எதிர்த்துப் போராடி தமிழுக்கு உரிய இடம் கிடைக்கப் பாடுபட்டார் தமிழவேள் கோ. சாரங்கபாணி.
 அன்று உடன்கட்டை ஏறுவதை ராஜாராம் மோகன்ராய் எதிர்த்தார்.
 வெள்ளைக்காரன் ஆட்சியை இறுதிவரை எதிர்த்தான் கட்டபொம்மன்.
 ஹரிஜனங்களுக்காகப் போராடினார் மகாத்மா காந்தி. சுயமரியாதைக்காகப் போராடினார் பெரியார் ராமசாமி.
இன்று என் அம்மாவிற்காக நானும் தயாராகிவிட்டேன்.

 (8 - 7 - 2012  தமிழ் முரசில் வெளிவந்தது)

_____________________________________________________________________________________

செவ்வாய், 29 மே, 2012

சிறுகதை - அட்டைப்பெட்டி படுக்கையும் வெள்ளைத்தாடி தாத்தாவும்

Death Railway


சிறுகதை

அட்டைப்பெட்டி படுக்கையும்
வெள்ளைத்தாடி தாத்தாவும்
 – எம்.சேகர்

வானம் அப்போதுதான் தலையோடு குளித்துவிட்டு வந்து கூந்தலைக் காய உலர்த்தி வைக்கும் பருவப்பெண் போல் புதிதாய்ப் படர்ந்திருந்தது. கருமை சிறிதும் கலவாத வெண்மண்டலங்களும் தூய நீலமுமாய் மேகங்கள் பின்னலிட்ட பள்ளிப்பெண்களின் கூந்தல்களைக் கோர்த்துக் கட்டியதாக நீண்டுக் கொண்டிருந்தது. இரவுமழையின் ஈரம், காற்று மண்டலத்தில் இன்னமும் கரையைத் தொடும் தொடர் அலையாக அலைந்து கொண்டிருந்தது.

வேலைக்குக் கிளம்பும் போதே,
மழை திரும்பவும் வர்ற மாறி இருக்கு...கொட எடுத்துக்கிட்டு போங்க
என உமா சொன்னது நினைவின் நரம்பு அலைகளில் அசைந்தது. கூடவே,
இயற்கை அன்னை தந்த பெரிய ஷவரிது
என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளும் எங்கிருந்தோ வந்து நினைவுக்குள் ஒட்டிக்கொண்டன. வீட்டிலிருந்து பத்துப் பதினைந்து நிமிட நடைக்குப் பின் சைனிஸ் கார்டனில் எம்.ஆர்.டி எடுத்துதான் ஜோகூன் க்கு வரவேண்டும். அங்கிருந்து இரண்டு ஐந்து இரண்டு பஸ் எடுத்து பக்கத்தில் இருக்கின்ற கெண்டீனுக்கு வரவேண்டியிருக்கிறது. வீட்டிலிருந்து ஏழு மணிக்குக் கிளம்பினால் ஏழரை மணிக்கெல்லாம் கெண்டீனுக்கு வந்திடலாம். ஆனால் எம்.ஆர்.டி சேவை தொடங்குவதற்கு முன்னால் வீட்டிலிருந்து ஐந்தே முக்காலுக்கெல்லாம் கிளம்பினால்தான் ஏழரை மணிக்கு கெண்டீனை அடையமுடியும். ஜூரோங் ஈஸ்ட் முருகன் கோயில் முன்னால் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில் எஸ்.எம்.ஆர்.டி பஸ், ஒன்னு எட்டு ஏழு எடுத்து பூன்லே இன்டெர்சேஞ் வந்து அங்கிருந்து எஸ்.பி.எஸ் பஸ், இரண்டு ஐந்து இரண்டு எடுத்து வரவேண்டும்.

ஏறக்குறைய பத்து உணவுக்கடைகளைக் கொண்டிருக்கும் அந்த கெண்டீனில் ஓர் இந்திய முஸ்லிம் கடையும் ஒரு மலாய்க்கடையும் தவிர்த்து மற்றவை சீனர்களின் கடைகள். பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் இப்படி அமைவது வழக்கமாகிப் போனது. ஆனால் எங்குப் போனாலும் நமக்கென ஏதாவது ஒரு கடை இருப்பது மனதுக்கு ஆறுதலான விஷயம்தான்.

 யாதும் ஊரே யாவரும் கேளிர்’,
ஐ.நா.சபையில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனின் பாடல் வரிகள், சொந்த நாடில்லாத தமிழனுக்கு ஒரு கூடுதல் போனஸ்.

தலையில் நீர் சிதறல்கள்.
விட்டு விட்டு சிணுங்கும் சிறு குழந்தையைப் போல் வானம் லேசாகத் தூற்றலிட ஆரம்பித்தது.
தெருவைக் கடக்கும் போது வழக்கமாகக் கண்ணில் படும் வெள்ளைத் தாடி தாத்தாவை இன்று காணவில்லை. பழுப்பேறிய கருமையான மேகங்களாகத் தரையோடு தரையாகக் கிடந்தது அவரின் அட்டைப் பெட்டிப் படுக்கை. அவருக்கு எல்லாமே அங்கேதான். கெண்டீனில் இருப்பார் என்ற அவர் நினைப்போடு நடந்தேன்.

சர்வர் சுந்தரம் நாகேஷைப் போன்ற ஒல்லியான உடல் அமைப்பு. அதே சுறுசுறுப்பு. நடையில் எப்போதும் ஒரு வேகம் இருக்கும். உயர்ந்த மலைப்பகுதியின் வெண்பனிமேகங்களைப் போல் முகம் முழுக்க வெள்ளைத்தாடி கட்டுக்கடங்காத காட்டாறு போல் பரவியிருக்கும். வெண்தாடி வேந்தர் பெரியார்தான் நினைவில் நிழலாடுவார். எப்போதும் மேலே ஒரு சாயம்போன காற்சட்டையும் அரைக்கால் சிலுவாருமாய் இருப்பார். காலையிலேயே இரண்டு ரொட்டி பொரட்டாவும், இரண்டு கிளாஸ் கொக்கோ கோலாவுடனும் மேசையில் இருப்பார்.

தாத்தா காலையிலேயே ரெண்டு கிளாஸ் கொக்கோ கோலா குடிக்கிறாரு........ கவலையில்லாத மனுஷ’,
காலையில் அந்த கண்டீனுக்கு பசியாற வரும் நகைகடை சேம்.
வயசாயிடுச்சி சேம்........லெட் ஹிம் என்ஜோய்.......இனிமேல் என்னா இருக்கு?’
சேமுடன் வரும் நண்பர் ஜோன்.
போஸ் ரொம்ப நல்லவன் ஜோன், டெய்லியா பத்து வெள்ளி சாப்பாட்டுக்கு கொடுக்குறான்
சேம் சும்மாவா கொடுக்குறான், ராத்திரி முழுக்க ஜாகா பார்க்குறாரு, கம்பெனிய சுத்தம் பண்றாரு, அவனுங்க காடி, லோரி, போர்க் லிப்ட் எல்லா கழுவுறாரு, டாய்லெட் கழுவுறாரு, ஆபிஸ்ல வேல செய்றவங்களுக்கு கோப்பி, டீ, தண்ணி சாப்பாடெல்லாம் வாங்கி கொடுக்குறாரு

அப்படியே எங்கள் மேசை அருகே வருவார். சேவாக்கு வீடு கிடைக்குமா எனக் கேட்பார். இங்க வசதி கொறவா இருக்கு என்பார். காச பத்தியெல்லாம் கவலப்படாதீங்க. மொதலாளி எல்லாம் கொடுப்பாரு என்பார். அவர் முதன் முதலில் என்னிடம் பேசியதை இங்கு சொல்லியே ஆகவேண்டும். அவர் கம்பெனியைத் தாண்டிதான் நான் என் கம்பெனிக்குச் செல்லவேண்டும். ஒரு நாள் என்னை இடைமறித்து,
பவானிய தெரியுமா.....அக்கா மவ இங்கதான் வேலை செய்யுதுன்னு சொன்னாங்க,
உங்க ஆபிஸ்லயா வேலை செய்யுது?’
இல்ல
என்றேன்.
நல்லா செவப்பா உயரமா இருக்குங்க
இல்ல என்னோட ஆபிஸ்ல தமிழ் பிள்ளைங்க இல்ல
பாத்தா சொல்லுங்க. உங்க மாமா உங்கள பாக்குனுனு சொன்னாருனு
நான் என்ன சொல்லுவது எனத் தெரியாமல்,
பாத்தா சொல்றேன்
எனச்சொல்லி நடந்து விட்டேன்.

அன்றிலிருந்து என்னைப் பார்க்கும் போதெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார். அவரின் அக்கா மக பவானியப்பத்தி கேட்பார். சேவா வீடு கிடைக்குமா எனக் கேட்பார். காலையில் பசியாறப் போகும்போதும், மதிய உணவு சாப்பிடப் போகும்போதும் இதைப்பத்திதான் கேட்பார். அப்போதெல்லாம் அவர் மனம் கோணாமல் பதில் சொல்லியிருக்கிறேன். இல்லை இல்லை சமாளித்திருக்கிறேன்.

நானும், கூட வேல செய்ற கணேஷும் சாப்பிடும் பல சமயங்களில் கேட்காமலேயே கொக்கோ கோலா வாங்கி மேசையில் வைத்து உங்களுக்குதான் வாங்குனே, குடிங்க என கணேஷைப் பார்த்து சொல்வார். கணேஷ் என்னைப் பார்க்க நான் அவனைப் பார்ப்பேன். இது போன்ற வேளைகளில் கணேஷ் ரொம்பவும் சங்கஜப் படுவான். பல சமயங்களில் அவர் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கணேஷ் விரும்புவான். கணேஷுக்கு ஆஸ்மா இருப்பதால் குளிர்பானங்களைத் தவிர்த்து விடுவான். எனவே எங்கள் மேசையில் பெருப்பாலும் நான் குடிக்கும் கொக்கோ கோலா மட்டும்தான் இருக்கும். இதை அந்த வெள்ளைத்தாடி தாத்தா கவனித்திருக்க வேண்டும். அவர் மனதில் ஏதோ தோன்றியிருக்கவேண்டும். இப்படி பல தடவை நடந்திருக்கிறது. கணேஷும் சொல்லுவான்,
தண்ணி இல்லாம சாப்பிடறத பாத்துட்டு, பையன்கிட்ட காசு இல்லனு நெனச்சி வாங்கிகொடுக்குறாரு போல இருக்கு
மெல்லியதாய் நன்றி தாத்தா என்பான்.
சேவாக்கு வூடு இருந்தா சொல்லுங்க
என ஆரம்பித்து விடுவார். கணேஷ் அமைதியாக இருப்பான். நான்தான் எதையாவது சொல்லி சமாளித்து விட்டு அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவோம்.

ஒருநாள் அலுவல் முடிந்த பிறகு கண்டீனுக்குச் சென்றிருந்தோம். வெங்காயம் போட்ட முட்டை ரொட்டி ஆளுக்கொன்று ஆர்டர் பண்ணிவிட்டு உட்காரும்போது வெள்ளைத்தாடி தாத்தாவும் வந்துவிட்டார். வழக்கமான பேச்சுக்குப்பிறகு நான்தான் அவரைப்பற்றி ஆர்வமாய்க் கேட்டேன்.

சப்பான் கார காலத்துல நாங்க ஈப்போவுல இருந்தோம், லோரில வந்து அப்பா அம்மா அண்ணன் அக்கா எல்லாத்தையும் சயாமுக்கு ரயில் பாத போட புடிச்சிகிட்டு போயிட்டானுங்க அந்த சப்பான் காரனுங்க. நா அழுதுகிட்டு அப்பா அம்மா பின்னால ஒடுன. என்னைய பூட்ஸ் காலால எட்டி ஒதைச்சி கீழ தள்ளிட்டு போயிட்டானுங்க. நா ரோட்டுல அழுதுகிட்டு இருந்த. என்ன மாறி பல புள்ளைங்க ரோட்டுல அவுங்க அப்பா அம்மா இல்லாம அழுவுதுங்க. நா எங்க வூட்டுக்கு போயி ஒரு மூலைல ஒக்காந்து அழுதுகிட்டு இருந்த. எவ்வளவு நேர அழுதன்னு தெரில. அப்புற பசிச்சிச்சு. நேத்து ராத்தரி அம்மா அவிச்சி வச்சு மரவள்ளி கெலங்க எடுத்து சாப்பிட்ட.

இதைச் சொல்லும் போதே அவர் விழிகள் குளங்களாயின. விரல்களால் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டார். அவரின் விழி கலக்கம் என் விழிகளையும் கொஞ்சம் ஈரமாக்கியது. இவரிடம் இதை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. மற்றவர் பார்வையில் பைத்தியக்காரன் போல தெரியும் மனுஷனுக்குள் ஒரு தலைமுறையின் சரித்திரம் இத்தனை வேதனைகளுக்குள் புதைந்து கிடக்கிறதே என மனம் தவித்தது. ஆரம்ப நாட்களில் அவரை லூசு என நினைத்தது, அவரைத் தவிர்த்தது வேதனையாக இருந்தது. மனிதனை ஒரு பார்வையில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பதையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கும் என்பதையும் அவர் பேச்சு எனக்கு உணர்த்தியது. அவரின் எண்ணங்களையும் மனவோட்டங்களையும் திசை திருப்ப,
மைலோ குடிக்கிறிங்களா... வாங்கிட்டு வரேன்
சிறிது யோசித்து,
மைலோ ஜஸ் வாங்கிட்டு வாங்க
என்றார்.
கணேஷைப் பார்த்தேன்.
எனக்கு ஒரு கோப்பி
என்றான்.
காப்பி கடைக்குச் சென்று,
மைலோ பெங் சத்து, கோப்பி சத்து, தெ ஓ பெங் சத்து
என்று ஆர்டர் கொடுத்து எடுத்துக்கொண்டு வந்தேன்.

எங்க எஸ்டேட்ல தொப்புளான்னு ஒருத்தரு டிராக்டர் ஓட்டிகிட்டு இருந்தாரு ... சப்பான்காரன்க அவர லோரி ஓட்ட சொல்லிட்டானுங்க.. அவனுங்க இருக்குற எடத்துக்குலா போயி சாப்பாட்டு சாமான்லா ஏத்திஎறக்கிட்ட வருவாரு.... எங்கப்பாவும் அவரும் ரொம்ப கூட்டாளி. வெள்ளக்காரன் இருக்கும்போது எஸ்டேட்ல சீனன்க லாலான் தண்ணிலா விப்பானுங்க. எங்கப்பா எப்போவு தொப்பளா கூடத்தான் தண்ணி அடிக்கப் போவாரு. அன்னைக்கு ராத்திரி முழுக்க வீட்ல சண்டையும் சத்தமுமாகத்தான் இருக்கும். அம்மாவுக்கு அடி வுளும், எங்களுக்கும் அடி வுளும். ஆனா விடியறதுக்குள்ள எப்போவும்மாறி அம்மாவும் அப்பாவும் வேலைக்கு கிளம்பிடுவாங்க. நாங்களும் அந்தக்குளுருல கூடவே கெளம்பிடுவோம். எங்க மாறி புள்ளைங்கதான் அப்பல்லா பால் மங்ககெல்லாம் தொடைச்சி இந்த ஒட்டுப்பாலு கட்டிபாலு எல்லாம் எடுப்போம். எடைக்கு ஏத்த மாரி காசு கொடுப்பாங்க....

மைலோ ஐஸை உறிஞ்சினார். அவர் பார்வை கண்டீனை ஒரு வட்டமடித்துவிட்டு மீண்டும் எங்களிடம் வந்தது.

தொப்புளானுக்கு யாரோ சொல்லிட்டாங்க.... உடனே வூட்டுக்கு வந்து, அன்னைக்கு ராத்தரியே என்னைய லோரில ஏத்திகிட்டு கெளம்பிட்டாரு.  தஞ்சோங் மாலிம், கோலாலம்பூரு, செரம்பானு, மூவாரு, பத்து பாஹாட், ஜொகூர்னு சப்பான்காரனுங்களுக்கு தேவையான சாமான்கள எல்லாம் ஏத்தி எறக்கி கடைசில சிங்கப்பூரு வந்துட்டோம். பாசீர் பாஞ்சாங்ல அஞ்சர கட்டையில இருந்த கம்பத்துல அவுங்க அக்கா வூட்டுல என்னய வுட்டுட்டு போயிட்டாரு. அவுங்களும் என்ன பாத்துகிட்டாங்க. அவுங்களுக்கு எட்டு புள்ளைங்க. அவுங்க பெரிய மகளத்தான் நா அக்கான்னு கூப்பிடுவ. கம்பத்த ஒடைச்சப்ப அவுங்க வெஸ்ட் கோஸ்ல பிளட் வூட்டுக்கு போயிட்டாங்க. மூனு ரூம் வூடுனால என்னய வேற எடம் பாத்துக்க சொல்லிட்டாங்க. அப்புறந்தான் மொதலாளிகிட்ட பேசி கம்பெனியிலேயே தங்க ஆரம்பிச்சிட்ட. முந்தி ஆயர் ராஜாவுல கம்பெனி இருந்திச்சி, அப்புற மாறி துவாசுக்கு வந்து இப்ப இங்க வந்திரிச்சி. அந்த அக்காவோட பொண்ணுதான் பவானி. இங்கதான் வேல செய்யுதுன்னு பாசீர் பாஞ்சாங்ல இருந்த மன்மதன பாத்தப்பா சொன்னாரு. அவரு இங்கதான் ஒரு கம்பெனில ஜாகாவா இருக்காரு’.

ஆமா, உங்களுக்கு குடுப்பம்?’

எனக்கு யாரு இல்ல. சயாமுக்கு போன அப்பா அம்மாவோட எங்குடும்ப என்னாச்சின்னு தெரில. என்ன இங்க விட்டுட்டு போன தொப்ளானு வரவே இல்ல. தகவலும் இல்ல. வெஸ்ட் கோஸ்ட்டுல இருந்த அக்கா வூடும் தொடர்பு இல்லாம போயிரிச்சி. வாழ்க்க இப்படியே ஒன்டியா ஓடிப்போச்சு. வயசும் ஆயிரிச்சி. அப்ப சரி நேரமாவுது. மொதலாளி வூட்டுக்கு கெளம்புவாரு.

Bayonet

எனச்சொல்லிவிட்டு ஈரம் காயாத விழிகளுடன் நடந்தார். அதன் பிறகு பார்க்கும் போதும் பேசும் போதும் அவர் ஒரு நடமாடும் சரித்திரமாகவே எனக்குள் ஒரு பிம்பமாகிப்போனார்.

இன்று கண்டீனிலும் அவரைக் காணவில்லை. அன்று மட்டுமல்ல தொடர்ந்தார்போல் ஒரு வாரமாக அவர் வரவில்லை. அலுவலகம் செல்லும் வழியில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் சுவரோரம் சாத்தப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டி படுக்கையும் இரண்டொரு நாள் இருந்து பின் காணாமல் போய்விட்டது. அவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் பைகளும் இல்லை. எங்கே போயிருப்பார்? கேள்விமட்டும் மனசுக்குள் வியாபித்து நின்றது. இந்தியன் முஸ்லிம் கடை முதலாளியின் மருமகன் கனியிடம் விசாரித்தேன்.

ஆமாண்ண, கொஞ்ச நாளா ஆள காணோம்
என்றார்.

நகைகடை சேமும், ஜோனும், கணேஷும் கூட
வெள்ளதாடி தாத்தாவ பாக்கமுடியலயே
எனக்கேட்டனர்.

வசந்தம் தொலைக்காட்சியின் நேற்றைய செய்தியில் முன்னுரைத்தது போல காலையிலேயே இடியும் மின்னலுடன் கூடிய மழை. காலை குளிரோடு ஞாயிற்றுக் கிழமையின் சோம்பலும் சேர்ந்து கொண்டு படுக்கையிலேயே கிடத்தியிருந்தது. ஈரச்சந்தைக்குச் சென்றிருந்த உமா கதவைத்திறக்கும் பழகிப்போன அந்தச் சத்தம். படுக்கையிலிருந்து எழுந்தேன். வாங்கி வந்திருந்த தமிழ் முரசும், ஸ்திரேய்ட்ஸ் டைம்ஸ்சும் மேசையில் கிடந்தன.

முரசுவைத் திறந்தேன். ஹவ்காங் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல். டெஸ்மண்ட், பிங் நேரடிப்போட்டி தலைப்புச் செய்தியாக இருந்தது. ஒரு பருந்து பார்வையோடு அடுத்த பக்கத்தைத் திருப்பினேன். மூன்றாம் பக்கத்தில் காணவில்லை என்று தலைப்பின்கீழ் வெள்ளைத்தாடி தாத்தாவின் ஷேவ் செய்யப்பட்ட புகைப்படம் கட்டமிடப்பட்டிருந்தது.


பின்குறிப்பு -
1. ஜாகா (மலாய் சொல்) - காவல் - பாதுகாப்பு
2. சேவா (மலாய் சொல்) - வாடகை வீடு
3. எஸ்டேட் - ரப்பர் தோட்டங்களைக் குறிக்கும்
4. லாலான் தண்ணி - சம்சு எனும் மதுவகை
5. மைலோ பெங் - மைலோ ஐஸ்
6. தே ஓ பெங் - பால் போடாத ஐஸ் டீ
7. ஒட்டுப்பால் - ரப்பர் மரப் பட்டைகளில் சீவும் பகுதிகளில் உறைந்திருக்கும் பால்.
8. கட்டிப்பால் - பால் மங்கில் (கின்னம்) தேங்கிக்கிடக்கும் உறைந்த பால்


-------------------------------------------------------------------