புதன், 14 டிசம்பர், 2011

தமிழா எழுந்திடு !



தமிழா எழுந்திடு !

தமிழா தமிழா எழுந்திடு

                தமிழனின் பெருமையை உணர்ந்திடு

தமிழின் செம்மையை அறிந்துநீ

தாய்மொழி தமிழைப் படித்திடு



தனித்து துணித்து நிற்காதே

                தனித்தே நீயும் வாழாதே

பிணித்து வாழ கற்றுக்கொள்

      பிரிவினை என்பதை எண்ணாதே



ஓங்கும் புகழை கொண்டநீ

      ஒதுக்குப் புறமாய் ஒதுங்காதே

ஏங்கி ஏங்கி தவிக்காதே

                எங்கும்  நீஅடி வாங்காதே



தமிழன் வீரம் காப்பதற்கும்

      தரணி எங்கும் நிலைப்பதற்கும்

தமிழன் என்ற ஒருசொல்லே

                தரத்தில் உயர்ந்த அருமருந்தாம்


விழித்திடு தமிழா விழித்திடு

                விழியின் தூக்கம் கலைத்திடு

எழுந்திடு தமிழா எழுந்திடு

                ஏற்றம் காண புறப்படு



ஆண்ட பரம்பரை உனதன்றோ

                ஆ நாடில்லை உனக்கின்றோ

மாண்ட உயிர்க்கு விலையுண்டு

      மறுபடியும் துளிர்ப்போம் மறவாதே!

மௌனம்

Image Detail

புதன், 7 டிசம்பர், 2011

பட்டுப்பாப்பா பாட்டுப் பாடு


பட்டுப்பாப்பா பாட்டுப் பாடு 
(சிறுவர் பாடல்கள்)
கவிஞர் பொன். கணேசுகுமார்


வாசலில் சில நிமிடங்கள்

பல வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழமையான ஓர் இலக்கியமாகத் திகழ்கிறது. எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம். தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த இனத்தை விடவும் நம் இனத்தில் அதுவும் நமது பண்பாட்டில் அதிகமாகவே வாழும் கலையை போதிக்கும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது.

1901-இல் குழந்தைப் பாடல்களைப் பாடி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயம் பிள்ளை. 1915-இல் பாப்பா பாட்டு பாடினார் மகாகவி பாரதி. இவ்விலக்கியத்தின் ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா என்றால் அது மிகையாகாது.  இவர்கள் காட்டிய வழியில் பலர் இன்று வரையில் குழந்தை இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர்.

குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவைகளைப் படைப்பது குழந்தை இலக்கியமாகும். இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று. பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை. சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டவையாகும். வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைதல் வேண்டும். அவ்வகையில் சிறந்து விளங்கும் ஒரு படைப்பாக இந்த பட்டுப் பாப்பா பாட்டுப் பாடு அமைந்திருக்கிறது.

கவிஞர், நண்பர் பொன். கணேசுகுமார் அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தானும் குழந்தையாக மாறிவிடும் அளவிற்கு குழந்தை உள்ளம் படைத்தவர். ஒரு தலைப்பைக் கொடுத்தால் உடனே கவிதை புனையும் திறன் பெற்றவர். எளிமையான சொற்களைக் கொண்டு கவிதைப் படைப்பதில் ஆற்றல் மிக்கவர். குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் சொற்களோடு விளையாடுவதில் வல்லவர்.

பொம்மை பொம்மை பொம்மை\பொட்டு வைத்தப் பொம்மை\அம்மா எனக்குத் தந்த\அழகு நிறைந்த பொம்மை போன்ற அடிகளும்,
தம்பி தம்பி இங்கேவா\தமிழைப் படிக்க இங்கேவா\நம்மைப் போன்ற குழந்தைகளை\நயந்து கூட்டி இங்கேவா போன்ற அடிகளும் கவிஞரைக் குழந்தைக் கவிஞராக பரிமாணிக்க வைக்கின்றன. இது போன்ற எளிய சொல்லாடல்கள், துள்ளும் ஒசையுடன் பாடல்கள் முழுக்க வியாபித்திருக்கின்றன.

சிங்கப்பூரின் சிறுவர் இலக்கியத்திற்கு இந்நூல் தனிச்சிறப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். மேலும் பல சிறுவர் இலக்கியங்கள் தோன்ற முன்னோடியாகவும் அமையும். நண்பர் பொன். கணேசுகுமார் அவர்கள் தனது இலக்கியச் சோலையில் இலக்கிய அறுவடைகளைச் சிறப்பாக மேற்கொள்ள என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.


புத்தகங்களை சுமையாக
நினைக்கும் நிலையினை மாற்றி
புத்தகங்களை சுவையாக
நினைக்கும் சூழலை – நம்
பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்!


அன்புடன்
பூச்சோங் எம். சேகர்

புதன், 30 நவம்பர், 2011

வியாழன், 24 நவம்பர், 2011

திங்கள், 31 அக்டோபர், 2011

மண்ணில் விழுந்த விதைகள்



உன் வாழ்க்கை ஏடுகளின்
முகவரிகளைக் கொஞ்சம்
திருப்பிப் பார்

நட்பின் வாசம்
மனதை வருடும்

நீ
அரசனாக இருக்கலாம்
ஆண்டியாக இருக்கலாம்

நட்பு என்றும் பொதுமையானதுதான்

பூஜ்யமான இந்த வாழ்க்கையில்
நீயும்
பூஜ்யத்தோடு பூஜ்யமாகக்
கரைந்துபோகப் போகிறாயா?

அல்லது


விதைகளை விதைத்து விட்டு
வாழப் போகிறாயா?

விதை
செடியாகும் கொடியாகும் மரமாகும்
காய் காய்க்கும்
பூ பூக்கும்
மணம் வீசும்

பூஜ்யம் என்றால்
நீ இறைவனாவாய்
விதை என்றால்
நீ மனிதனாவாய்

உன் வாழ்க்கை
உன் கைப்பிடிக்குள்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011



கல்யாணப் பேச்செடுத்தாலே
வந்து விழுவுது சாதி

ஆனா,

எங்க ஊரு 'கேலாங்கில்'
இதப்பத்தி
யாரும் கவலைப்படுவதாய் இல்லை.

நாங்கள் என்றும் எறும்புகள்தான்



சிங்கையின்
வெற்றிப் படிகளின்
ஒவ்வொரு ஏட்டிலும்
எங்களின் சுவாசம் சுவாசித்திருக்க....

பணத்தில் மிதக்கும்
கொள்ளுக்கட்டைகள்
புதிய வரவாகி,
சுகங்களை மட்டும்
தங்களுடையதாக்கி,

புதுப்புது அவதானிப்புகள்
தினமும் அரங்கேறுகின்றன
கரையான் புற்றுக்குள்
பாம்புப் புகுந்த கதையாய்.....

சின்னச் சின்ன நேர்க்கோடுகளில்
பொதி சுமக்கும் எறும்புகளாய்
இன்னமும் நாங்கள்



ஞாயிறு, 9 அக்டோபர், 2011




இறந்தவனுக்கு
ஒரு முறைதான் இறப்பு
இருப்பவனுக்கு
ஒவ்வொரு நாளும் இறப்பு

திங்கள், 26 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 5

Go to fullsize image

உன் பார்வை வீச்சில்
தொலைந்தேன்
காதல் விளிம்பில்
விழுந்தேன்

சூரியத் தூரிகைகளால்
இதய வானவீதியில்
காதல் வண்ணக்கலவையை
வானவில்லாய்த் தெளித்த
பெண் சிற்பி நீ

Go to fullsize image

ஒவ்வொரு இரவின் நுனியிலும்
காதல் கரையான்களால்
தின்னப்படுகின்றன
என் நம்பிக்கைகள்

என் விழி கடிதத்தின்
வார்த்தைக் கோப்புகள்
உன் விழிக்கிணற்றுக்குள்
மூழ்கிக் கிடக்கின்றன

உன் இதயச் சிற்பிக்குள்
இன்னமும் மூடிய முத்தாய்
என் காதல்

Go to fullsize image

காதல்வாசல் கண்களுக்குள்
காய்ச்சல்

நெருப்பாய் நான் சுடுகிறேன்.

இவை
என் மனம் மென்றுத்துப்பிய
வார்த்தைக் குப்பைகள் அல்ல
என் உயிர் அசைவுகளின் அணுக்கள்

உன் விழிகளில் படிவது
எழுத்துகள் அல்ல

என் கடைசி சுவாசம்.

என்னை நீ சந்திக்காவிட்டாலும்
என் எழுத்துகள் உன்னைச் சந்திக்கும்

நாளைய வரலாற்றில்
உன் இதயமே
என் கல்லறை தாஜ்மஹால்

Go to fullsize image

அன்பே...அன்புடன்....அன்பிற்காக....................

 - தேடல் தொலைந்தது.

எங்கே எனது காதல்? - 4

Go to fullsize image

உன் பாதம்
பட்ட இடமெல்லாம்
கவிதைப் பூக்களால் அலங்கரித்தேன்

கதிரவனாய் உன் நினைவு
பனித்துளியாய் நான்

Go to fullsize image

காதல்
வெறும் ஆசைகள் அல்ல
இதயத்தில் எழும் உயிரோசைகள்

காதலின் குரல்
நெறிக்கப்பட்டதால்
நெஞ்சமெல்லாம்  காயங்கள்

Go to fullsize image

பாண்டியன் சபையில்
கண்ணகியின் வீச்சில்
சிதறிய காற்சிலம்பாய்
என் காதல்.


பல
சூரிய கிரணங்களும்
சந்திர கிரணங்களும்
வந்து போகலாம்
ஆனால்
நட்சத்திரத் தாரகைகளின்
நடுவே நடைபயிலும்
நிலவு
என்றும் ஒன்றுதான்

நீயும் அப்படித்தான்.

Go to fullsize image

- தேடல் தொடரும்...........

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 3

Go to fullsize image

வெளிச்சத்தைத் தின்றுவிட்ட
இரவின் ஏப்பத்திணறலில்
வெளியே
வந்து விழுந்தது
வெள்ளி நிலா

உன் சொல் அம்பில்
நொறுங்கிப் போய்
சிதறிய கண்ணாடித் துகள்களாய்
என் இதயம்

Go to fullsize image

ஒவ்வொரு துகள்களிலும்
அந்த நிலா
உன்னைத்தான்
அடையாளம் காட்டியது

உன் நினைவு ஒளியில்
உருகும் மெழுகுவர்த்தியாய்
நான் கரைய...
அந்தச் சுடருக்குக் கீழே
தேங்கியக் குளமாய்
ஈரவிழிகளுடன் என் காதல்

Go to fullsize image

ஜப்பான்காரன் ஆட்சியில்
நம்மவர்களை மூட்டைக் கட்டி
சயாமிற்கு ஏற்றியதுபோல்
நீயும்
உன் காதலை மூட்டைக் கட்டி
சஹாரா பாலைவனத்தில்
எறிந்து விட்டாயோ...

இல்லை,

இப்போதிருக்கும்
வரலாற்று பாடங்களில்
மலாக்கா பரமேஸ்வரனை
மறைத்தது போல்

நீயும்
உன் காதலை மறைத்து விட்டாயோ..
அன்பே..
எறிந்தாலும் மறைத்தாலும்
காதல்
என்றும் பௌர்ணமி நிலவுதான்.

Go to fullsize image

- தேடல் தொடரும்.........