வியாழன், 3 அக்டோபர், 2019




வாங்க........வாசிக்கலாம்..... 4   - எம். சேகர்
மக்கள் ஓசை (16-6-19)


கோலாலம்பூர் லெம்பா பந்தாய் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி நிறைவுபெற்ற பிறகு, தாப்பா ரோட்டில் உள்ள கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டேன். அங்குப் பணிபுரிந்த அந்தச் சமயத்தில் ஒரு நாள் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. சுந்தரம்,

தெலுங் இந்தானில் இருந்து ஒருவர் வந்திருக்கிறார். நம்ப நாட்டு எழுத்தாளர்களின் புத்தகங்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொள்ளுங்கள். ஆசிரியர்கள்தான் உள்ளூர்ப்  படைப்பாளிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார். நானும் வகுப்பத் தலைவனிடம் வகுப்பைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு தலைமையாசிரியரின் அறைக்குச் சென்றேன். 


அப்போது அங்கு ரொம்ப சின்ன உருவத்தில் ஒருவர் தன்னை ராமு என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது யமஹா கப் மோட்டார் சைக்கிளிலிருந்து  ஏ.எஸ். பிரன்சிஸ் அவர்களின் கவிதை நூல்களைக் காண்பித்தார். சில நூல்களை வாங்கிக்கொண்டு அவரை வழியனுப்பி வைத்தேன். அப்போதெல்லாம் தாப்பா ஜெ. தங்கதுரை அவர்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த தாப்பா தமிழ் இளைஞர் மணிமன்றம் ஒவ்வோர் ஆண்டும் புதுக்கவிதை நூல்களை வெளியிட்டுப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு இந்நாட்டில் மிகப்பெரிய பணியை ஆற்றியுள்ளதை இங்குப்  பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். அந்த நாளில் மற்றவர்களின் நூல்களைத் தன் தோளில் சுமந்து ஊர்ஊராகச் சென்று விற்று வந்த அந்த ராமுதான் பின்னாளில் ப. ராமு எனப் புதுக்கவிதை  உலகில் தனக்கான ஒரு தனி முத்திரையைப் பதித்துக்கொண்டவர்.
1986 இல் மலேசியப் புதுக்கவிதை வீதியில் கால்பதித்திவர் இதுவரை 2000 மேற்பட்ட கவிதைகளை இயற்றியுள்ளார். 

அவரைப்பற்றி,

கவிஞர் ப.ராமு வாழ்க்கை ஓட்டத்தின் தங்குதடங்கல்களைத் தாண்டி தடைப்படாமல் எழுதி வருபவர். கவிதை மனம் உயிருக்குள் ஓடிக் கொண்டிருப்பவர்களால்தான் இவ்வாறு இயங்க முடியும் என்கிறார் எழுத்துலகில் எங்களுக்கெல்லாம் பீஷ்மராகத் திகழ்ந்து வழிகாட்டிய ஐயா ஆதி. இராஜகுமாரன் அவர்கள்.
தம்பி, கவிதை எழுதுவதை நீங்கள் எப்போதும் நிறுத்திவிடாதீர்கள் என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

ப. ராமு ஐக்கூவைத் துளிப்பா என்று எழுதியிருப்பது கவர்கிறது என்கிறார் கவிஞர் மு. மேத்தா.
இவரின் கவிதைகள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து அவரோடு பழகி வருகிறேன். அவரைப்போலவே அவரின் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும் என்கிறார் கவிஞர் பழனிபாரதி.


கவிஞர் மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை நூலாக இருந்தது. அவரின் அன்றைய கவிதைகளை மிகவும் ரசித்து ரசித்து வாசிப்பேன். அதுபோல கவிஞர் மீராவின், ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் எனக்குப் பிடிக்கும். அந்த அளவுக்கு மலேசியக் கவிஞர்களில் ப. ராமுவின் கவிதைகள் என் மனத்துக்கு மிக நெருக்கமானவை. கவிதை மட்டுமல்ல அவரும்தான்.


ஒழுங்கு படுத்தப்பட்ட ஓசைகள் இசையாகிறது.
ஒழுங்கு படுத்தப்பட்ட வர்ணங்கள் ஓவியமாகிறது.
ஒழுங்கு படுத்தப்பட்ட சொற்களே கவிதையாகிறது.
ஆயினும், கவிதை என்பது சொற்களைக் கூட்டி வைத்து அழகு பார்க்கும் வித்தையல்ல.  அது ஓர் உணர்வு; உணரப்படுவது. உணர்வுகளின் வழிதலை மிக மிக மென்மையாக மொழியில் செதுக்கிப் பார்க்கையில் அங்குக் கவிதை அழகாய் மிளிர்கிறது என ஈரம்-கவிஞர்களுடன் நேர்காணல் நூலில் ப. ராமுவை அறிமுகப்படுத்தும்போது இப்படிக் கூறுகிறார் அத்தொகுப்பின் கட்டுரையாளர் வாணி ஜெயம்.


கஸல் கவிதைகள்


தமிழ்க் கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடைதான் இந்தக் கஸல் கவிதைகள். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கஸல் கவிதை உருப்பெற்றது. இந்தக் கஸல் கவிதைகள் புது வகையில் முதன்முதலில் சூஃபிக் ஞானிகளால் இயற்றப்பட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தெற்காசிய அரண்மனையில் அரங்கேற்றப்பட்டது. காதலையும் திராட்சை மதுவையும் கொண்டாடி இன்பத்துப் பால் ததும்பும்  பாடல் போக்கில் அமைந்தவைதான் இந்தக் கஸல் கவிதைகள். இதனைத் தொடர்ந்து காதல், தனிமை, பிரிவு போன்றவற்றினைக்  கருப்பொருளாகக் கொண்டு கஸல் கவிதைகள் படைக்கப்பட்டன.


தமிழில் கஸல் கவிதைகள்


தமிழில் முதன்முதலில் அப்துல் ரகுமான்,


காதல் சாளரம் திறந்தேன்
 கடவுள் தெரிந்தார்


என்ற வரிகளுடன்  அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் ஈரோடு தமிழன்பன், கோ. பாரதி மோகன், இராகவன் நைசிரியா, இளவல் ஹரிஹரன், அமர்நாத், ரஞ்சினி போன்றவர்கள் கஸலினைச் சிறந்த முறையில் இயற்றியுள்ளனர்.
கவிஞர் வாலியும் தனது திரைப்படப் பாடலில் கஸலினை ஏற்றிப்பாடியுள்ளார். அவற்றிலும் கவித்துவத்தின் தன்மையினை வெளிப்படையாகவும் தெளிவான சொற்களைக்கொண்டு பெண்ணின் அழகினை இயற்கையோடு ஒப்பிட்டு வர்ணித்துள்ளார்.


ஞாயிறு என்பது கண்ணாக....
திங்கள் என்பது பெண்ணாக.....
செவ்வாய் என்பது பழமாக......
சேர்ந்தே நடந்தது அழகாக....


என்ற வரிகளில் கவிநயத்தை வாலி வாயிலாக கஸல் கவிதையானது சிறப்புப் பெற்ற பாடலாக அமைந்தது.


மலேசியாவில் கஸல் கவிதைகள் இயற்றுவதில் ப. ராமுவிற்கு நிகர் இங்கு யாருமில்லை எனலாம். அவரின் பெரும்பாலான கவிதைகள் கஸல் கவிதைக்கான இலக்கணத்துடன் இயற்றப்பட்டுள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  


கஸல் படைப்பினை, ‘உரைநடை பேசுகிறது கவிதை இசைக்கிறது என்பர். பெரிய  பணக்காரர்களிலிருந்து விளிம்புநிலை மனிதர்வரை உள்ளவர்களின் மன உணர்வினை வெளிப்படுத்தக்கூடியாதாக இந்தக் கஸல் கவிதைகள் இருக்கின்றன. ப.ராமுவின் சிணுங்கும் சிறகுகள் தொகுப்பில் உள்ள கவிதைகள் கஸல் கவிதைகளாகவே நம்மைச் சுற்றி வருகின்றன. இந்தத் தொகுப்பில் காதலின் வெளிப்பாடு, துக்கம், ஏக்கம், பிரிவு என்பதை மட்டும் வெளிப்படுத்தாமல் மனிதனின் வாழ்வில் இருக்கும் அன்றாட தேவையான அன்பையும் அவனுக்கு இருக்கவேண்டிய தன்னம்பிக்கையையும் மையமாகக் கொண்டு விளங்குவதாக அமைந்துள்ளது.


சிணுங்கும் சிறகுகள் – ப.ராமு


ப.,ராமுவின் கவிதை வரிகள் அழகானவை. ஆழமானவை. மனித உணர்வின் மெல்லிய அழகியல் வெளிப்பாடுகள் அவை. வாழ்க்கை வாழ்வதற்குரியது; போற்றுதலுக்குரியது; வணக்கத்திற்குரியது என்பதைக் கவிஞரின் எழுதுகோல், அவரின் சிந்தனைத் துளிகளைத் துளிப்பாக்களாக வரைந்து வடித்துச் சென்றுள்ளது. அனைத்துப் பார்வைகளும் வாழ்க்கையைப் புதிய வடிவத்தில் நமக்குக் கூற முற்படுகிறது. வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளில் வண்ணமடித்த ஓவியங்களாகப் புதியப் பரிமாணத்தோடு நம் மனத்தோடு உறவாடிச் செல்லும் சொற்பிரயோகங்களின் வண்ணங்களாக கஸல் கவிதைகளாக இக்கவிதைத் தொகுப்பின் கவிதைகள் சிறப்புப் பெறுகின்றன.


புதிய விடியலில் புதிய சூரியனைப் பார்ப்பதுபோல் எத்தனை தடவை வாசித்தாலும் எழுத்துகள் ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாகச் செய்திகளைச் சொல்லிச் செல்கின்றன. கவிஞரின் வாழ்க்கைப் பயணத்தில் அவர் சேகரித்த அனுபவங்கள் எழுத்துகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தாக்கமும் புதுமை நோக்கும் கொண்ட கவிஞரின் பார்வையில் சொல்லப்பட்டுள்ள கவிதைகள் வாசிப்பவர்களின் இதயத்தை வருடிச் செல்லும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
கவிஞரின் பத்தாவது நூலான இந்தச் சிணுங்கும் சிறகுகள் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்ததில் மனம் மகிழ்வு கொள்கிறது. மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு படைப்பாக்க நூல் இரண்டாம் பதிப்புப் பெறுவது அரிதான ஒன்றென நினைக்கிறேன். அதற்காகவே நாம் கவிஞரைப் பாராட்டி வாழ்த்தவேண்டும்.


கவிதையோ சிறுகதையோ என இலக்கியப் படைப்புகள் எதுவாக இருப்பினும் உணர்வின் கடத்தல்கள் அங்கு நிகழும் பட்சத்தில் அந்தப் படைப்புகள் கலை வடிவம் பெறுகின்றன என்பது இதுநாள் வரையிலான எனது வாசிப்பில் நான் உணர்ந்துகொண்ட ஒன்றாகும். கவிதை மொழியினை உணர்வுப் பூர்வமாக உள்வாங்கி வெளிப்படுத்தி, அதை வாசிக்கிறவர்களையும் உணரச்செய்யும் வண்ணம் எழுதுவதற்கு நிறைய வாசிப்பனுபவம் இங்குத் தேவைப்படுகிறது.
கவிதையின் தொடர்பாடல் அறிவுச் சார்ந்த மொழியாக இருந்தாலும் அது கலை வடிவம் பெறுவது என்பது உணர்வைச் சார்ந்ததாகும். உணர்வு இல்லாமல் சொல்லிச் செல்வது என்பது வெறும் வாக்கிய அமைப்பாக மட்டுமே இருக்கும். யாப்பிலக்கண கவிதை என்றாலும் சரி புதுக்கவிதையாக இருந்தாலும் சரி, நவீன கவிதைகளாக இருந்தாலும் சரி, ப. ராமு எழுதியிருக்கும் இந்நூலின் துளிப்பாக்களாக இருந்தாலும் சரி, வேறு எந்த வடிவத்தில் இருந்தாலும் உணர்ச்சி அலைகளின் தாக்கம் இல்லையென்றால் அப்படைப்பானது கலைவடிவம் பெறுவது இல்லை என்பதுதான் இன்றைய இலக்கிய நிலைப்பாடாகும்.


ஓவியம் நமது பார்வையை நேரிடையாகத் தொடுகிறது. இசை நம் செவிகளை நேரிடையாகச் சென்றடைகிறது. ஆனால் கவிதையில், கவிதைக்கும் வாசகனின் உணர்வுகளுக்கும் நேரிடையான தொடர்பாடல் எதுவும் இருப்பதில்லை. இடையில் அறிவு என்பது குறிக்கிடுகிறது.  இதனால், கவிதைக்கு வாசகனின் அறிவுக்குள் ஊடோடி அவனின் உணர்வைத் தொடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, முதல் பகுதியில் சொன்னதுபோலத்தான், ஒரு கவிதைக்கு, சொல் நிலை அர்த்தம், உணர்வுக் கூறுகள், உள்நிலை அர்த்தங்கள் என இம்மூன்றும் இருப்பது அவசியமாகும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் எழுத முற்படுகிறபோதுதான் பலர் கவிதையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் இங்குத் தோற்றுப்போகிறார்கள். தோற்றுப்போவது என்று இங்குக் குறிப்பிடுவது கவிதை எழுதுவதை நிறுத்திக் கொள்வதையல்ல, அவர்களின் எழுத்துக் கவிதைகளாக நிலைபெற முடியாமல் போய்விடுவதையே குறிக்கிறது.


இத்துளிப்பாக்களில் வரும் காதல் நேசிப்பும் இயற்கை நேசிப்பும் மானுட நேசிப்பும் அழகுணர்ச்சிகளும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தி வேறொரு திறந்த மனவெளியில் நம்மைச் சிறகடித்துப் பறக்க வைக்கின்றன. நமக்கு வாழ்க்கையைப் பற்றிய புதிய புதிய தரிசனங்களைக் காட்டுகின்றன. கவிஞர் கூறுவதுபோல் அவரின் உள்ளுணர்வின் சாரல்கள் நம்மையும் இலேசாக நனைத்துவிட்டுச் செல்லத் தவறவில்லை. கஸல் கவிதைகளின் தன்மைகள் அவரின் ஒவ்வொரு கவிதைகளிலும் மிளிருகின்றன.


அடுத்து சில கவிதைகளைப் பார்ப்போம்.


 பிறந்த வீட்டிற்குச் சென்றேன்
 வீடு முழுவதும் ஞாபகங்கள்
 அம்மா

என ஒரு கவிதை அம்மாவின் வாசங்களை நம் நெஞ்சோடு அப்பிக்கொண்டு மணக்கிறது.


 விளக்கேற்றினாள் மனைவி
 முதியோர் இல்லத்தில்
 அம்மா


ஆழமான பொருள்கொண்டு கண்ணீரோடு
அழுது, நம்மையும் அழ வைத்து ஆண் மகனின் இயலாமையைக் குறியீடாகக் காட்டுகிறது.


 சும்மா கிடந்த புத்தகத்தைப்
 புரட்டிப் பார்த்தது காற்று


என நம் சமூகத்தில் குறைந்துகொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கத்தை முரண் படிமமாகச் சுட்டுகிறது  ஒரு கவிதை.


 மூடிக் கிடந்தது
 கோயில் கதவு
 மரத்தடியில் பிள்ளையார்


என்ற சொல்லாடல்கள், மனிதர்களிடையே தொலைந்துபோன மனித நேயத்தை வருத்தத்தோடு கோடிட்டுச் சொல்கிறது.


 நீயும் மருத்துவரா?
 புரியவேயில்லை கையெழுத்து
 மின்னல்


எத்தகைய அழகான ஓர் உருவகம். மருத்துவரின் கையெழுத்தை இயற்கையின் மின்னலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வை கவிஞனுக்கு மட்டுமே உரித்தானது. அதைக் இக்கவிதையில் மெய்ப்பித்திருக்கிறார் கவிஞர் ப.ராமு.


  அதோ தெரிகிறது தூரத்தில் வெளிச்சம்
  ஏன் கண்களை மூடுகிறாய் இன்று


என வரும் ஒரு கவிதை, நல்லதொரு தன்முனைப்பூட்டும் வரிகளைக் கொண்டது. வெற்றி என்பது நமது அருகில்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான வழியைக் கண்டறியாமால் நாம் துவண்டுபோய்விடுகிறோம் என்பதாக ஒரு சிந்தனையை நமக்குள் ஏற்றிவைத்துவிட்டுச் செல்கிறது.


 சுட்டெரிக்கும் வெயில்
 அவள் வந்தாள்
 மனசெல்லாம் மழை 


என ஒரு கஸல் கவிதை. இதுபோல் பல கஸல் கவிதைகள் இத்தொகுப்பு முழுக்க பூத்துக் குலுங்கி மணம் வீசுகின்றன.


 பார்த்தேன் ரசித்தேன்
 இதயத்தில் நுழைந்தாள்
 கவிதையாக

எனவும்,


 நனைந்த கூந்தலைப்
 பிழிந்தாள்
 உலர்ந்து போனேன்
 நான்
எனவும் 

பல கவிதைகள் காதலாகிக் கசிகின்றன.


மரத்தில் கல் எறிந்தேன்
என்மேல் விழுந்தன
பூக்கள்


மூன்றே வரிகளில் எத்தகைய மதிப்புமிக்க குறியீட்டுக் கவிதை இது. வாழ்வின் தத்துவார்த்த தரிசனத்தை உணர்த்த வரும் வரிகள். இதுபோன்ற பல துளிப்பாக்கள் சூரியனின் வருகைக்காகக் காத்திருக்கும் தாமரை மொட்டுகளைப்போல உங்களின் வாசிப்பு விரிதல்களுக்காகத் தவம் கிடக்கின்றன.


பிறந்தநாள் விழாவில்
கைத்தட்டினார்கள்
அழுதுகொண்டிருந்தது மெழுகுவர்த்தி


ஒரு படைப்பாளனின் நோக்கம், திட்டம், அனுபவம் போன்றவற்றில் ஏதாவது ஒரு மனக்கூறுதான் அடிப்படையாகக் கஸல் உருவாவதற்குக் காரணமாகிறது. ஒரு பிறந்தநாள் விழாவில் கொண்டாட்டங்கள் மட்டும் பெரியதாகத் தெரியும் சூழலில், ஏற்றப்பட்ட ஒரு மெழுகுவர்த்திக்காக ஒரு கவிஞனால் மட்டுமே இப்படி அழமுடியும்; எழுதமுடியும்.  

  
இதுபோன்ற சின்னஞ்சிறு துளிப்பாக்கள் கவிதைக் கஸல்கள் இந்த நூல் முழுக்க உங்களுக்காகக் காத்துக்கிடக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்.


நண்பர், கவிஞர் ராமு அவர்களின் கவிதை மனத்தோடு நெருங்கி உறவாடும் வாய்ப்பு என்றும் எனக்கிருக்கிறது. நீங்களும் கொஞ்சம் அந்தக் கவிதைகளோடு உறவாடுங்கள். உங்கள் மனமும் இதமாகும்; இலகுவாகும். வேறொரு மனவெளியில் உங்களின் சிறகுகளும் சிணுங்ககூடும்.


- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக