வியாழன், 12 ஜனவரி, 2012

காதல் கைகட்டி நிற்கிறது
உன் பார்வை
எனக்குப் பிடித்திருக்கிறது
உன் விழிகள் 
அழகானவை ஆழமானவை

உன் முத்தம்
எனக்குப் பிடித்திருக்கிறது
உன் உதடுகள்
இதமானவை மென்மையானவை

உன் தொடுதல்
எனக்குப் பிடித்திருக்கிறது
உன் விரல்கள்
அன்பானவை சுகமானவை

என் கழுத்தோர வளைவில்
உன் இதயத்துடிப்பு
என் கன்னமேடுகளில்
உன் உதடுகளின் உஷ்ணம்
என் பாலைவன உடலில்
உன் விரலின் தொடுதல்கள்

ஈரமாகிக் கசியும்
அன்பு மழையின் 
குளிர்கால நடுக்கங்களில்
காதல் கைகட்டி நிற்கிறது
சந்தோஷக் குடையுடன்
உனக்காகவும் எனக்காகவும்.


செவ்வாய், 10 ஜனவரி, 2012

கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்...!..

Love Image 353883


மீட்டெடுக்க முடியாத வாழ்க்கையை
கனவுக்குள்
ஆழமாகப் புதைத்து வைத்தேன்

ஒவ்வொரு கனவுகளாக
மூழ்கி எடுத்து
மீட்டெடுத்தாய் என்னை முழுவதுமாய்

ஆழ்மனக் கனவுகளைத் தீண்டினாய்
நம்பிக்கை முத்தெடுத்தாய்
என்னாலும் முடியும் என்றாய்
என் கனவுகளின் சிறகுகளைச் சுட்டினாய்
எனைச் சிறகடிக்க வைத்தாய்

எனக்குள் நுழைந்து
கனவுக்குள் புகுந்தாய்
அன்பின் உரிமத்துடன்
எல்லா கனவுகளையும்
உனதாக்கிக் கொண்டாய்

என் இருண்மையில் கனவுகளை
நான் கண்டிருக்கமாட்டேன்
அவை நிஜங்கள் ஆகாமல் போயிருக்கலாம்
அவை யதார்த்தங்களாக இல்லாமல் இருந்திருக்கலாம்

கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்.......!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நினைவின் சாரல்கள்முழுமையான நிலா ஒளியில்
ஒளிர்கிறேன்
சிறகடித்துப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளாய்

ஆறு மணல் காடென
சுற்றித் திரிந்த கால்கள்
நிறுத்தம் தேடி ஓய்கையில்
பார்க்கும் இடமெல்லாம்
சுண்ணாம்புக் கற்கூடுகளாய்
மனங்கள் திரிந்து கருகிக் கிடக்கின்றன

ரெண்டு எலி வெட்டின்
தாய்மையின் உருவகமான ரப்பர் மரக்காடுகளும்
குரங்குகளும் பாம்புகளும் சீயான்களும்
உயர்ந்து வளர்ந்த 'லௌடா' கொட்டை மரங்களும்
மழை ஓசை எழுப்பும்
பக்கத்து வெட்டுக்காரர்களின் ஒலிகளும்
காலைமழையால் வீட்டில் இருக்கும் அம்மாவை
'பாப்பாத்தி கெர்ஜா' என அழைக்கும்
'கப்பாளாவின்' பழைய 'யமஹா' மோட்டார் சத்தமும்

மேட்டுப் பகுதியில் பால்வாளியோடு
உருண்டு விழுந்த வலிகளும்
செம்மண் ரோட்டில்
பிரேக் இல்லாத சைக்கிளில்
தம்பியோடு பள்ளத்தில் விழுந்த தளும்புகளும்

ஒட்டுப்பால் வாடையும்
கட்டிப்பால் வாடையுமாக
உயிர் உள்ள வரை
நினைவின் சருகுகளாக
வாழ்ந்து விட்டுப் போகட்டும்.