ஞாயிறு, 11 அக்டோபர், 2015

பிரேமா மகாலிங்கத்தின் ‘மஞ்சள் வெயில்’ சிறுகதை – ஒரு திறனாய்வுப் பார்வை – எம்.சேகர்


பிரேமா மகாலிங்கத்தின் மஞ்சள் வெயில் சிறுகதை ஒரு திறனாய்வுப் பார்வை – எம்.சேகர்    
     
திருமதி பிரேமா மகாலிங்கம் சிங்கப்பூர்ப் புனைகதைகள் உலகிற்குப் புதிய வரவு. சிங்கப்பூரில் பிறந்து இந்த மண்ணிலே வளர்ந்தவர். 2013 இல் சிங்கப்பூர்த் தங்கமுனைப்பேனா போட்டியில் கவிதைப் பிரிவில் மூன்றாவது பரிசை வென்றவர். தங்கமீன் வாசகர் வட்டத்தின் மாதாந்திர கதை, கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச் சென்றவர். மஞ்சள் வெயில்(28 ஜூன், 2015) தமிழ் முரசில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதையாகும். இந்தக் கதையை ஒரு திறனாய்வுப் பார்வையில் முன்னெடுத்துப் பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரை.

பெரும்பாலும் சிறுகதைகளை நிகழ்ச்சியைச் சார்ந்தோ, சூழலைச் சார்ந்தோ, கதைமாந்தரின் பண்பு நலனைச் சார்ந்தோ, கருப்பொருளைச் சார்ந்தோ நான்காக வகைப்படுத்துவர் இலக்கிய ஆய்வாளர்கள். பிரேமா மகாலிங்கத்தின், ‘மஞ்சள் வெயில் கதை மாந்தரின் பண்பு நலன்களால் சிறப்புறும் சிறுகதை என்ற வகையைச் சார்ந்ததாகும்.

கதைச் சுருக்கம்

நான்கு வயதில் போலியோ என்ற நோயினால் பாதிக்கப்பட்ட சுந்தரம், தனது பனிரெண்டாவது வயது பிறந்தநாளுக்கு அப்பா வாங்கிக் கொடுத்த சக்கர நாற்காலியைத்தான் இன்றுவரை பயன்படுத்தி வருகிறான். பழசானாலும் அதை மாற்ற அவனின் குடும்பச் சூழல் இடம்தரவில்லை. பணிபுரியும் வேலையிடத்தில் இன்னொரு மாற்றுத் திறனாளியான அகிலா, மின் சக்கரவண்டியில் வருவதையும் போவதையும் பார்த்து தானும் அது மாதிரி ஒரு மின் சக்கரவண்டி வாங்கவேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து குறிப்பிட்டத் தொகையைச் சேமிக்கத் தொடங்குகிறான். தேவையான பணமும் சேர்ந்தது. நாளை மின் சக்கர வண்டியை வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, கல்லீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டு, மாற்று ஈரல் உறுப்பு தானத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் அண்டைவீட்டுக்காரர் ரஹ்மானின் பேரன் நான்கு வயது ஒஸ்மானை எதேச்சையாகப் பார்க்கிறான். மறுநாள் காலை தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்து, ஒஸ்மானின் பெற்றொரிடம் கொடுக்கச் சொல்கிறான்.

கதைத் தொடக்கம்

தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பலமுறை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்பவனாக சுந்தரம் கதையில் அறிமுகமாகிறான். எதற்காகவோ அவன் பணம் சேமிக்கிறான் என்பது மட்டும் ஆரம்பத்தில் சூட்சமமாகச் சொல்லப்படுவது சிறப்பான ஒரு தொடக்கமாக அமைகிறது. மேலும் அதன் தொடர்பாகவே நிகழ்காலப் போக்கிலேயே கதை சொல்லும் பாணியில் கதை வளருகிறது.


கருப்பொருள்

பெரும்பாலும் சிறுகதைகளில் ஒரு மையக்கருத்தை நோக்கியே கதையின் நகர்தல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இவ்வகையில் இந்தக் கதையின் கருப்பொருளும் பழைய சக்கரவண்டியினால் சுந்தரத்திற்கு நேர்கின்ற சிரமங்களும் இடர்பாடுகளும் உடல் உபாதைகளையும் நமக்குள் நுழைத்து, அவனின் ஒரே குறிக்கோளான மின் சக்கரவண்டியை வாங்கவேண்டும் என்ற ஒரே மையக்கருத்தோடு பயணிக்கிறது.

கதையின் போக்கு

சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமாக தெளிந்த நீரோடை போன்ற நடையால், எழுத்தாளரே கதை சொல்லும் பாணியில் கதை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவனின்  தற்காலச் சம்பவங்களோடு பின்னோக்கிப் பார்க்கும் உத்தியின் மூலமாகவும் கதை நகர்த்தப்பட்டுள்ளது.

கதையின் பின்புலம்

இக்கால சிங்கப்பூர் சூழலில் இன்றும் இனி என்றும் பொருந்தும் தன்மையுடனே விளங்குகிறது. சிங்கப்பூரின் அரசாங்கக் கொள்கைக்கேற்ப இன நல்லிணக்க அடிப்படையில் அனைத்து மனிதர்களையும் நல்ல மனித நேயமிக்க சிங்கப்பூர்க் குடிமக்களாகவும் உருவாக்குவதற்கு ஏற்ப இக்கதையின் பின்புலம் பொருந்தியே அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஓர் அம்சமாகும்.

பாத்திரப்படைப்பு

இக்கதையைப் பொருத்தவரை காலத்திற்கு ஏற்ற ஒரு கருப்பொருளும் அக்கருப்பொருளுக்கு ஏற்பக் கதையைச் சுமந்து செல்ல ஒரு முக்கிய கதாபாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மாற்றுத் திறனாளி சுந்தரம் பிரதான கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்துக்குத் துணையாக அம்மா கோவிந்தம்மாள், தங்கை மைதிலி, அலுவலகத் தோழர்களான அகிலா, சாமி, மேலாளர் வாங், அண்டை வீட்டுக்காரர் ரஹ்மான், அவர் மனைவி மைமுனா மற்றும் பேரன் ஓஸ்மான் போன்ற கதாபாத்திரங்களை உயிரூட்டி விட்டிருக்கிறார் கதாசிரியர்.

நாம ஒண்ணும் பெரிய பணக்காரங்க இல்ல, கொஞ்சம் சிக்கனத்தைப் பத்தி உம்மவளுக்கு சொல்லிக்கொடு, செல்லம் கொடுத்துக் கெடுத்திடாதே,’ என வரும் சுந்தரத்தின் கூற்று நடுத்தர வர்க்கத்தின் குரலாகவும் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் ஒரு மாற்றுத் திறனாளியின் குரலாகவும் ஒலிக்கிறது.

அம்மா கோவிந்தம்மாள், ‘பஸ் ஸ்டாப் வரைக்கும் துணைக்கு வரட்டா.. எனத் தயங்கி நிற்கும் காட்சி யாரும் தன்மேல் பரிதாபம் காட்டுவதை விரும்பாத தன்னம்பிக்கை மிகுந்தவனான சுந்தரத்தின் பண்பு நலன்களைக் காட்டுவதோடு மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் இருக்கவேண்டிய தன்னம்பிக்கை மனோபாவத்தையும் சுட்டுகிறது.

மின் தூக்கியில் அண்டை வீட்டாருடன் அவன் உரையாடும் விதம் அவர்களோடு அவன் கொண்டுள்ள நெருக்கமான உறவைக் காட்டி சிங்கப்பூரர்களின் நல்லிணக்க உறவிற்கு ஓர் உதாரணமாகச் சொல்லக்கூடிய நற்பண்பையும் அவன் கொண்டுள்ளதைக் கதை பதிவு செய்கிறது. மேலும் தான் பயன்படுத்தும் அந்தப் பழைய சக்கர நாற்காலியை அவன் பராமரிக்கும் விதமும் நம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது. ஓர் அஃறிணைப் பொருளின்மீது அன்பு காட்டும் பண்பாளனாகவும் அந்த நாற்காலியோடு நட்புப் பாராட்டி உரிமையோடு கடிந்து கொள்ளும் நண்பனாகவும் அவனின் பண்புநலன் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுந்தரத்தின் கதாபாத்திரம் படிப்படியாக மெருகேற்றப்பட்டு கதையின் உச்சத்திற்குத் தயார்படுத்தப்படும் விதத்தில் கதாசிரியரின் பாத்திரப் படைப்புத் திறன் இக்கதையில் நன்கு வெளிப்பட்டுள்ளது.

கோவிந்தம்மாள் சுந்தரத்திடம் வெகுஇயல்பாகப் பேசினாலும் அவளுக்குள் அவள் அழுவது தாய்மையின் விம்மல்களாகும். அவனின் தன்னம்பிக்கையை நினைத்து வியந்தாலும் அவன் கைகளை மடக்கி உந்தி உந்தி நகருவதைப் பார்த்து உள்ளுக்குள்ளேயே வெம்பி விம்பியது அவளது பெற்ற மனம்போன்ற வரிகள், மாற்றுத் திறனாளிகளைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் குரலாக நம் மனத்தையும் நெகிழ வைக்கின்றன.

தங்கை மைதிலியின் கதாபாத்திரம், இக்கால சிங்கப்பூர் மாணவர்களின் பிரதிநிதியாகவே வருகிறது. தற்போதைய கல்விச் சூழலில் அதிநவீனத் தகவல் தொழில்நுட்பம் மிகவம் அத்தியாவசியத் தேவையாக இருப்பதை, ‘‘டீச்சரே வாட்ஸ் அப்ல த்தான் தகவல் சொல்றாங்க’’ என்று வரும் வரிகள் எடுத்தியம்புகின்றன.

அலுவலக நண்பர்களின் கதாபாத்திரங்களான அகிலா, சாமி மற்றும் மேலாளர் வாங் போன்றோர், சிங்கப்பூரின் நல்லிணக்க உணர்வுக்கும் மனித நேயமிக்க மனத்துக்கும் நல்லதொரு பாத்திரப் படிமமாகிறார்கள்.

கதையின் முரண்

கதையின் தொடக்கத்திலிருந்தே சொல்லப்பட்டுவரும் அந்தப் பணச் சேமிப்புக்கான காரணங்களும் அதற்காகச் சுந்தரம் பல இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு நம்பிக்கையோடு கடக்கையில், அனைத்தும் கூடிவரும் வேளையில் கதையின் முடிவில் வந்து விழுகின்றது இக்கதையின் முரண். இதுவே இக்கதையின் திருப்புமுனையாகவும் அமைந்துவிடுகிறது.
மின் சக்கர வண்டியை ஆன் லைனில் ஆர்டர் செய்யவேண்டும். சுந்தரத்திடம் கடன் அட்டை இல்லாததால், திரு வாங்கின் கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கலாம் என்ற ஏற்பாட்டுடன் அன்றளவில் எல்லாம் சரியாக நடக்க, விடிந்ததும் சுந்தரம் தன் அம்மாவிடம், ‘’இந்தப் பணம் என்னைவிட ஓஸ்மானின் பெற்றோருக்குப் பேருதவியாக இருக்கும். நீங்களே அவங்ககிட்ட கொடுத்திடுங்க’’ என்பதோடு கதை முடிவடைகிறது.


கையாளப்படும் உத்தி

எதிர்பார்ப்பு நிலை (Suspense) சிறுகதைகளின் மிகச் சிறப்பான கூறுகளில் (Element) ஒன்றாகும். இக்கதையின் போக்குப் படிப்பவர் மனத்தில் ஒரு வித ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கிறது. மேலும், இக்கதையின் போக்கு முரண் (Conflict) எனும் உத்தியை நோக்கி மிகவும் நுணுக்கமாகவும் நகர்த்தப்பட்டுள்ளது.
படைப்பாக்கத்தில் ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தைக் கலைநயமிக்கதாகப் படைப்பதற்கும் மையக்கருத்தை வளர்த்துச் செல்வதற்கும் உத்திமுறைகள் துணை செய்கின்றன. இக்கதையின் தொடக்கத்தில் நிகழ்காலச் சம்பவம், பின்னோக்கிப் பார்த்தல் மீண்டும் நிகழ்காலம் என உத்திகள் செயல்பட்டுக் கதையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

சமூகப் பார்வை

மனிதச் சமுதாயத்தைப் பண்போடும் அன்போடும் பரிவோடும் பாசத்தோடும் அபிமானத்தோடும் ஆதரவோடும் நல்வழிப்படுத்தவல்ல அந்தரங்கப் புனித மனம் படைத்த ஒரு படைப்பாளன்தான் ஒரு சமூதாயத்தின் உண்மையான ஆன்மாவாகத் திகழ முடியும் என சுதந்திரம் எனும் வார ஏட்டின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பூவை. எஸ். ஆறுமுகம். சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற பிரச்சினைகளுக்கு மனிதாபிமானத்துடன் தீர்வு காணமுயலும் தார்மிகப் பொறுப்புணர்ச்சிமிக்க ஓர் எழுத்தாளராகவே இக்கதையின் படைப்பாளியைக் காணமுடிகிறது.

ஓஸ்மான் என்ற சிறுவனின் தாக்கம் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டச் சூழலுக்கு இட்டுச்சென்று முடிவில் சிங்கப்பூர்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் மனித நேயத்திற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என வரும் பாடல் வரிகளுக்கு மனிதர்கள் ஆதாரப் புருஷர்களாக விளங்கும் இக்காலக் கட்டத்தில், மாற்றுத் திறனாளி சுந்தரத்தின் வாயிலாக, பண்பட்ட மனிதன் எப்படி வாழவேண்டும்? என்பதை இக்கதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும் கம்பத்து வாழ்க்கையிலிருந்து அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்புகளுக்கு மாறும் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையின் வளர்ச்சி நிலையையும் இந்தக் கதை பதிவு செய்துள்ளதையும் காணமுடிகிறது.

மொழி நடை

ஒரு படைப்பு என்பது மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்றால் அங்குப் புரிதல் என்பது நிகழ்த்தப் பட்டிருக்கவேண்டும். அதற்கு இயல்பான மொழிநடை அவசியமாகும். அந்த வகையில் இக்கதையில் எடுத்தாளப்பட்ட மொழி நடை என்பது இயல்பான மொழி நடையில் எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் கதையை எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.

ஏண்டா, அந்த பணம் குட்டியா போடபோவுது, எண்ணி எண்ணி நோட்டு தேஞ்சிடபோகுது மற்றும் இருடி, உன்ன காராங்கோணிகிட்ட........ போன்ற பேச்சுத் தமிழ் மொழிநடை கதையில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
 
தலைப்புப் பொருத்தம்

சூரியனின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள், ஓஸ்மானின் மூக்கில் பொருத்தப்பட்டிக்கும் வெள்ளை நிற டியூப் பின் மேல் பட்டு, இள மஞ்சள் நிறமாகச் சுந்தரத்தின் கண்களுக்குத் தெரிந்தது எனக் கதாசிரியர் சொல்வது படைப்பாளனின் ரசிக்கும் தன்மைக்கும் தான் உணர்ந்ததை வாசகனிடம் கடத்திச்செல்ல அவர்கொண்ட கடப்பாட்டையும் காட்டுகிறது. இந்தக்காட்சியே கதையின் தலைப்பாகவும் உருமாற்றமும் பெற்றுள்ளது.

நிறைவு


சிங்கப்பூர்ப் புனைகதை உலகிற்கு இவர் புதியவர் என்றாலும் சிங்கப்பூர் இவருக்குப் புதியது அல்ல. நம் மண்சார்ந்த கதைகள் நம் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போதுதான் அது சிங்கப்பூரின் தனித்தன்மையைக் கட்டிக்காத்து தனக்கான ஓர் உலகலாவிய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்தப் பயணத்தையொட்டிய பிரேமாவின் எழுத்தாற்றல் மேன்மேலும் சிறப்புற்றுச் சிங்கப்பூர் இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

சிங்கை எழுத்தாளர் பொன். சுந்தரராசுவின் நான்கு சிறுகதைகள் – திறனாய்வுப் பார்வை

சிங்கை எழுத்தாளர் பொன். சுந்தரராசுவின் நான்கு சிறுகதைகள் – திறனாய்வுப் பார்வைமக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு எழுதும் எழுத்துகளே மக்களால் பெரிதும் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட எழுத்துகளே மக்கள் மனத்திலும் நிலைத்தும் நிற்கிறது. அப்படிப்பட்ட படைப்பாக்கத்தால் சிங்கப்பூரின் விழுமியங்களையும் தனித்தன்மையையும் போற்றி சிறந்து விளங்குகிறார் சிங்கப்பூர் எழுத்தாளர் பொன்.சுந்தரராசு அவர்கள் என்றால் அது மிகையாகாது.

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என பல்துறைகளிலும் பங்களிப்பு அளித்துவரும் இவரின் முதல் படைப்பு, வேலைக்காரன் வேலாயுதன் எனும் தலைப்பில் 1963ல் பிரசுரமானது. அன்றிலிருந்து  சிறுகதைகளையும், வானொலி, தொலைக்காட்சி நாடகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வானொலிச் சிறுவர் கதைகளையும் திருமுகன் எனும் புனைப் பெயரில் எழுதியுள்ளார். இவரின் பல ஆக்கங்கள் வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி ஒளிபரப்பானதுடன் சிங்கப்பூர் மலேசிய பத்திரிகைளில் பிரசுரமாகியுள்ளன். மேலும், இவர் சிங்கப்பூர்த் தமிழ் மொழி - தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு ஆகிய அரங்குகளில் தமிழ் இலக்கியம், தமிழ்மொழி கற்றல் - கற்பித்தல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் படைத்துள்ள பல கதைகளில் நான்கு கதைகள் மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையிலும் சிங்கையின் வாழ்வியல் சூழல் மிகவும் இயல்பாக வெவ்வேறு தளங்களில் சித்தரித்துச் சொல்லப்பட்டுள்ளது. இலக்கியம் மனிதனிடமிருந்தும் அவனின் வாழ்க்கையிலிருந்தும் தோன்றியதாகும். மனித வாழ்வில் அவன் சார்ந்த சமூகத்தின் தொடர்பின் ஒட்டுமொத்த அனுபவத்தின் பாய்ச்சலாகவே படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன. இத்தகைய படைப்பிலக்கியங்கள் மனிதனின் அகநிலை நிகழ்வுகள் மற்றும் புறநிலை நிகழ்வுகளின் ஒரு பதிவாகவே அங்கம் வகிக்கின்றன. இக்கூற்றின்படி பொன்.சுந்தரராசு அவர்களின் ஏணி, இப்படியும் ஒரு பிழைப்பு, முதலீடு, நேர்க்கோடு போன்ற சிறுகதைகள் சிங்கப்பூரின் வாழ்வியலை அதாவது இத்தகைய அகநிலை மற்றும் புறநிலை நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றன என்றே கூறலாம்.

(1)  ஏணி    

1981- இல் எழுதப்பட்ட கதை இது. அப்போதிருந்த கல்விச் சூழலில் ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இருக்க வேண்டிய உறவை ஆணித்தரமாக நிருவியுள்ளது. அந்தக் காலத்துச் சூழல் என்றாலும் இன்றைய சூழலில் பொருந்திப்போகும் கதைக் கரு.


கதையின் சுருக்கம்

வயது மூப்பின் காரணமாவே அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்த மாணவன் மாரியப்பன். அவன் எந்த ஓர் ஆசிரியருக்கும் அடங்காமல் தன்மூப்பாக நடந்துகொள்பவனாக இருக்கிறான். எதிலும் அலட்சியம். உடற்பயிற்சி ஆசிரியர் அவனைத் தண்டித்ததால் அவர் மூக்கையே உடைத்துள்ளான். வீட்டுக்கு அடங்காத முரட்டுப்பிள்ளைகளுக்கான வீட்டிலிருந்து பள்ளிக்கு வருபவன். திருஞானம் என்ற ஆசிரியர், அவனைப்பற்றிய தகவல்கள் அறிந்துகொண்டு அவனை நுணுக்கமான முறைகளில் கையாண்டு அவனை இதுவரையில் யாரும் அணிகாத முறையில் அணுகி அவனை நல்ல மாணவனாக்கி தேர்விலும் தேர்ச்சிப் பெறவைக்கிறார்.

கதையின் தொடக்கம்

திருஞானம் என்ற ஆசிரியருக்கு அவர் வகுப்பில் பயிலும் மாணவர்களில் கடைநிலை மாணவனாகவும் முரடனாகவும் இருக்கும் மாரியப்பனுடனான கசப்பான அனுபவமாக கதையின் ஆரம்பம் தொடர்கிறது. பின்னோக்கிப் பார்த்தல் உத்தியில் கதை ஒவ்வொரு கட்டமாக நகர்த்தப்படுகிறது. தேர்வு அதிகாரியாக இருக்கும் ஆசிரியர் திருஞானம், தேர்வு அறையிலிருந்து அவரின் நினைவுகள் மாரியப்பன் என்ற மாணவனை நோக்கி பின்னகர்ந்து செல்வதாகக் கதைப் பயணிக்கிறது.

இந்நேரம் அவர்களும் கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார்கள். சரவணன் ஆங்கில மொழியில் கட்டுரை எழுதுவதில் வல்லவன். அமுதாவும் பரவாயில்லை, ஏன், யாரும் ஆங்கில மொழியில் மோசம் என்று சொல்ல முடியாது. மாரியப்பனைத் தவிர... என அந்த மாணவ பாத்திரத்தை அறிமுகம் செய்து, வாசகர்கள் மனத்தில் ஓர் எதிர்பார்ப்பை உண்டாக்கி கதையின் மையக்கருத்தை நோக்கி செல்வது கதையின் தனிச்சிறப்பாகும்.

கருப்பொருள்

பெரும்பாலும் சிறுகதைகளில் ஒரு மையக்கருத்தை நோக்கியே கதையின் நகர்தல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். ஒரு முரட்டு மாணவனை, கல்வியில் அக்கறை கொள்ளாத ஒரு மாணவனை எப்படி கற்பித்தலின் நுண்ணிய முறைகளைக் கையாண்டு அணுக முடியும் என்ற மையக்கருத்தையொட்டியே இக்கதை கரையில்லாத ஆறாக இல்லாமல் கரையுள்ள ஆறாக பயணித்திருக்கிறது.

கதையின் போக்கு

திருஞானம் என்ற ஆசிரியரின் கதாபாத்திரம் மூலமாக கதை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவரின் தற்கால சம்பவங்களோடு பின்னோக்கிப் பார்க்கும் உத்தியின் மூலமாகவும் கதை நகர்த்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கல்விச்சூழலில் கல்வியில் பின்தங்கி, வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியாமல் போகக்கூடிய பல மாணவர்களின் ஒட்டுமொத்த உருவகம்தான் மாரியப்பன். அப்படிப்பட்ட மாணவர்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட ஆசிரியர்களின் வழிகாட்டுதல் அவசியம் என்பதையும் அதுவே ஆசிரியர் தொழிலின் உன்னதம் என்றும் பதிவு செய்து கதை முடிகிறது.

கதையின் பின்புலம்

1981- இல் எழுதப்பட்ட இக்கதையின் சூழல் அன்று மட்டுமல்லாமல் இன்றும் பொருந்தும் தன்மையுடனே விளங்குகிறது. அனைத்து மாணவர்களையும் கல்விக் கற்ற மாணவர்களாகவும் நல்ல மனித நேயமிக்க சிங்கப்பூர்க் குடிமக்களாகவும் உருவாக்க பரிந்துரைக்கப்படும் இக்காலக் கல்விக் கொள்கைகளுக்கு ஏற்பவும் இக்கதையின் பின்புலம் பொருந்தியே அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஓர் அம்சமாகும்.

பாத்திரப் படைப்பு

அறிஞர் ரோக்கோ ஃபியூமெண்டோ, சிறுகதைகளை நிகழ்வு சார்ந்த கதை, சூழல் சார்ந்த கதை, கதைமாந்தர் பண்புநலன் சார்ந்த கதை மற்றும் கருப்பொருள் சார்ந்த கதை என நான்காக வகைப்படுத்துகிறார். எழுதப்படும் பெரும்பாலான சிறுகதைகள் இந்த நான்கு வகைக்குள்ளேயே அடங்கிவிடும். இக்கதையைப் பொருத்தவரை காலத்திற்கு ஏற்ற ஒரு கருப்பொருளும் அக்கருப்பொருளுக்கு ஏற்ப கதையைச் சுமந்து செல்ல ஒரு முக்கிய கதாபாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் திருஞானம் மற்றும் மாணவர் மாரியப்பன் என்ற இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்ட இக்கதையில், ஆசிரியரின் மனைவி கமலம் மிக இயல்பான ஒரு பெண்ணாக வந்து,

அவன் முரட்டுப் பையனாக இருப்பான் போலிருக்கு. கவனாமாயிருங்கள். எக்கேடாவது கெட்டுப்போகிறான்; விட்டுத் தொலைக்கவேண்டியதுதானே? உங்களிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளப்போகிறான்....என கூறும் வார்த்தைகள், ஒரு தனிப்பட்ட இல்லாளின் கூற்றாக மட்டும் இல்லாமல் இதுபோன்ற மாணவர்களைப் பார்க்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையாகவே அமைந்திருக்கிறது.

இது தவிர, முரட்டுப்பிள்ளைகளுக்கான இல்லத்தின் நிர்வாகி, உடற்பயிற்சி ஆசிரியர் என பெயரில்லாத கதாபாத்திரங்களும் கதையின் மையக்கருத்துக்கு வலு சேர்த்திவிட்டுச் செல்கின்றன. மேலும் நன்றாகப் படிக்கும் மாணவர்களாக சரவணனும் அமுதாவும் திருஞானத்தின் நினைவுகளில் வந்து போவர்களாக இருக்கிறார்கள்.

கதையின் முரண்

கதையின் ஆசிரியர் கதைமுரணை மிகத் தெளிவாக ஆரம்ப நிலையில் திருஞானத்திற்கும் மாரியப்பனுக்குமான உரையாடல்கள் மூலமும் திருஞானம் மற்றும் அவர் மனைவி கமலம் இருவருக்குமான உரையாடல்களின் மூலமும் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்.

பாடம் செய்தாயா இல்லையா...?’
………
ஏன் செய்யவில்லை...?’
செய்யத் தெரியல.... மாரியப்பன் சாதாரணமாய்ப் பதில் சொன்னான்.
தெரியாவிட்டால் என்னிடம் கேட்டிருக்க வேண்டாமா...
இனிமேல் கேட்பேன்... அதே அலட்சியம்.

இதுபோன்ற உரையாடல்கள் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் உள்ள முரண்களை மிகவும் இயல்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

கையாளப்படும் உத்தி

படைப்பாக்கத்தில் ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தைக் கலைநயமிக்கதாகப் படைப்பதற்கும் மையக்கருத்தை வளர்த்துச் செல்வதற்கும் உத்திமுறைகள் துணை செய்கின்றன.

இக்கதையின் தொடக்கத்தில் நிகழ்காலச் சம்பவம், பின்னோக்கிப் பார்த்தல் மீண்டும் நிகழ்காலம் என உத்திகள் செயல்பட்டுக் கதையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

சமூகப் பார்வை

கல்வியில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் வழிதவறிச் செல்லும் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் ஒரு சிறந்த வழிகாட்டிகளாக இருக்கமுடியும் என்ற தன்னம்பிக்கைச் செய்தியைச் சமூகத்திற்குச் சொல்கிறது இக்கதை. ஆசிரியர் தொழில் என்பது வெறும் தொழிலாக மட்டும் இல்லாமல் சமூகக்கடப்பாடும் கொண்டு சேவையுணர்வோடும் ஆற்றாக்கூடிய ஒரு தொழில் என்பதை இக்கதைக் கூறுகிறது.

மாரியப்பன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அந்தப் பொழுதில் ஆசிரியருக்கு ஏற்படும் அந்த ஆத்ம திருப்தி....

இதுபோன்ற கண நேரங்களில் தோன்றி மறையும் பெருமையும் மகிழ்ச்சியும் உற்சாகமும்தானே, ‘கற்பித்தல் தொழில் தொடர்ந்து உயிர்வாழக் காரணங்களாகின்றன. என்ற கதையின் கடைசி வரிகள் ஆசிரியராகப் பணியாற்றும் அனைவருக்கும் மற்றம் சமூகத்திற்கும் ஒரு சமூகச் செய்தியைப் பதித்துச் செல்கிறது.

மொழி நடை

ஒரு படைப்பு என்பது மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்றால் அங்கு புரிதல் என்பது நிகழ்த்தப் பட்டிருக்கவேண்டும். அதற்கு இயல்பான மொழிநடை அவசியமாகும். அந்த வகையில் இக்கதையில் எடுத்தாளப்பட்ட மொழி நடை என்பது இயல்பான மொழி நடையில் எழுத்துத் தமிழில் கதையை எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.

தலைப்புப் பொருத்தம்

ஒவ்வொரு மாணவனும் வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என பாடுபட்டு உழைக்கும் தியாக மனம் கொண்ட ஆசிரியர்களை மற்றவர்களின் முன்னேற்றத்திற்காகத் தங்களை மெழுகுவர்த்தியாக்கிக் கொள்ளும் ஆசிரியர்களை ஏணி களாக உருவகப்படுத்தி கதைத் தலைப்பு மிகவும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது.


(2)  முதலீடு

நம் சமூகத்தினர் கல்வியின் முக்கியத்துவத்தை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளனர் என்ற விழிப்புணர்வைக் கதையாகவே இக்கதையைக் கொள்ளவேண்டும். அன்றிலிருந்து இன்றுவரையில் கல்வியைப் பொறுத்தவரை நம் மாணவர்கள் மற்ற இன மாணவர்களைவிடச் சற்றுப் பின்தள்ளியே இருக்கின்றனர் என்பதை ஆண்டுதோறும் வெளிவரும் அரசு சார்ந்த தரவுகள்மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.

கதையின் சுருக்கம்

மாணிக்கம் வேலுவிற்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்திருந்தான். வராத கணக்கில் மாணிக்கம் சேர்த்துவிட்ட அந்தப் பணத்தைத் திடீரென்று ஒரு நாள் வேலு கொடுத்துவிடுகிறான். அந்தப் பணத்தில் தன் மகள் மலர்மணியின் படிப்பிற்காகச் செலவு செய்ய எண்ணியிருந்த வேளையில் அவன் மனைவி கற்பகம் அந்தப் பணத்தைக் கொண்டு நகை வாங்கவேண்டுமென்று விடாப்பிடியாக நிற்கிறாள். இறுதியில் மகள் மலர்மணி அம்மா நகை வாங்கிக் கொள்ளட்டும் என்று முடிவுக்கு வருவதாகக் கதை முடிகிறது.  

இது இன்றளவும் நம் சமூகத்தில் நிலவிவரும் ஒரு சமூகப் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. சிண்டா போன்ற அமைப்புகள் பல வகையிலும் தொண்டாற்றி வந்தாலும் கல்வித் தொடர்பான விழிப்புணர்வு நம்மின மக்களுக்கு இன்னும் ஏற்படாமல் இருப்பது ஒரு புதிராகவே இருக்கிறது.

கதையின் தொடக்கம்

கதையில் தொடக்கம் ஒரு மகிழ்வான தருணமாகவும் நம்பிக்கையூட்டும் வண்ணமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்தது நனவுதான் என்று மாணிக்கத்தில் அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை. என்றாலும் அவன் கையில் இருந்த பணம் உண்மையை உறுதிப்படுத்தத் தவறவில்லை என்ற தொடக்க வரிகள், கதையில் உள்நுழைய வாசகனைக் கைபிடித்து அழைத்துச் செல்கின்றன.

கருப்பொருள்

கல்வி. இதுதான் கதையின் கருப்பொருள். கல்வித் தொடர்பாகத் தமிழர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு வந்தாலும் அது திருப்திகரமான ஒரு மற்றமாக இன்னும் மாறாமல் இருக்கும் போக்கை வலுவாகச் சாடி அழுது நிற்கிறது கதை.

கதையின் போக்கு

கதாபாத்திரத்தின் கூற்று, உரையாடல்கள் போன்ற சீரிய நடையால் கதையின் போக்கு அமைக்கப்பட்டுள்ளது. மகிழ்வான ஆரம்பம் கதையின் முடிவை ஓரளவு ஊகிக்க வைத்துவிடுகிறது என்பதும் இங்கு மறுக்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது.

இவங்க கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. என் வீட்டிலேயும் ஒருத்தி இருக்காளே.... என்ற வரிகள் மற்ற இந்தியர்கள் கல்விக்குக் கொடுக்கும் அந்த முக்கியத்துவத்தை நம் தமிழர்கள் கொடுப்பதில்லையே, என்பதை ஏக்கத்தின் பிம்பமாகவும் சமூகத்தின் மீது விழுகின்ற சாட்டையடிகளாகவும் மட்டுமே பார்க்கமுடிகிறது.

கதையின் பின்புலம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் சூழலில் இன்றும் பொருந்திச் செல்லும் பின்புலத்தில் இக்கதை சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின்போது அவர்களால் தொழிலாளர்களாகத் தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான அன்றைய மலாயாவிற்கும் சிங்கைக்கும் தென்னிந்தியத் தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கொண்டு வரப்பட்டு தோட்டப்புறங்களிலும் சாலை, இரயில் பாதை மற்றும் கட்டட நிர்மாணிப்புகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டனர். அந்தத் தலைமுறையின் வாரிசுகளான  இன்றைய தமிழர்கள் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கேள்விக்கு உட்படுத்தி நம்மையும் சிந்திக்க வைக்கிறது இக்கதை.

பாத்திரப் படைப்பு

இக்கதையில் மாணிக்கம், அவர் மனைவி கற்பகம், மகள் மலர்மணி, பணி ஓய்வு பெற்ற கந்தையா, நண்பர் வேலு மற்றும் கந்தையாவின் ஐந்து வயது பேரன் போன்ற கதாபாத்திரங்கள் மையக் கருவின் கருப்பொருளை வாசகர் நெஞ்சங்களில் பதியம் செய்ய கதாசிரியரால் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது பாத்திரத்தைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது பாராட்டுக்குரியது.

வேலுவின் கதாபாத்திரம் தமிழர்களின் ஏழ்மைச் சூழலுக்கான ஓர் எடுத்துக்காட்டு. மாணிக்கம் நடுத்தர வர்க்கத்தின் சார்பான கதாபாத்திரம். தன் மகளின் கல்வியின் அக்கறை கொண்ட கதாபாத்திரம். ஆனால் மனைவியின் விருப்பத்துக்கு எதிராக எதுவும் சொல்லமுடியாமல் அடிபணிந்து செல்லும் பண்பு கொண்டவன்.

 கற்பகத்தின் கதாபாத்திரம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு பாத்திரம். இது நம் தமிழினத்தின் ஒட்டுமொத்த எண்ணங்களின் பிரதிபலிப்பாக வருகிறது. கந்தையா ஓய்வு பெற்ற தாத்தாக்கள் பலரும் செய்யாத வேலையைச் செய்து கொண்டிருப்பவர். நூல் நிலையத்திற்கு ஐந்து வயது பேரனை அழைத்துச் சென்றுகொண்டிருப்பவர். கல்வியின்மேல் அக்கறைக் கொண்ட ஒரு சமூகப் பிரிவைச் சார்ந்தவராக இவரின் கதாபாத்திரம் வந்து போகிறது. 

மலர்மணி ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு பெண். படிப்பில் ஆர்வம் உள்ளவள். பெற்றோர்களுக்காகத் தங்களின் ஆசைகளையும் எண்ணங்களையும் இலட்சியங்களையும் விட்டுக் கொடுக்கும் அல்லது தொலைத்து நிற்கும் நம் இன  அடுத்த தலைமுறையைச் சார்ந்த கதாபாத்திரம்.

கதையின் முரண்

இச்சிறுகதை ஆசிரியர் கதைமுரணை தன் எழுத்துத் திறத்தால் அமைத்துக் காட்டியுள்ளார். கதையை நன்கு திட்டமிட்டு தன் சிந்தனைக்குள் தவழவிட்டுள்ளார். கதையின் தொடக்கத்தில் இருக்கும் மகிழ்ச்சி,

எதிர்பாராத ஒன்று நிகழ்ந்துவிட்டதில் ஏற்பட்ட நிறைவு..... என கலகலத்து,

.....அவள் கண்களில் இருந்து பொட்டுப் பொட்டாய் நீர்த்துளிகள் பெட்டியின் மீது விழுந்தன.....என்னால் அவர்களுக்கு வம்பு வேண்டாம்.... என்று அந்தப் பிஞ்சு மனம் எண்ணியது. என்று இறுதி வரிகளில் விம்மி அழுது வாசகர் மனங்களை சோக மயிலிறகால் வருடிச் செல்கிறது.

கல்வியின்மேல் சமூகம் கொண்டுள்ள முரணான எண்ணங்களை முன்வைத்து கதைக் கரு சம்பவங்களின் போக்கில் ஒதுங்கிக்கொள்கிறது.

கையாளப்படும் உத்திகள்

ஒரு கதையை சிறப்பான கதையாகக் காட்டுவதற்கும் கைகொடுப்பதற்கும் பல உத்திகள் இருக்கின்றன. இக்கதையில் சமகால சம்பவங்களும் அதன் தொடர்பான உரையாடல்களும் உத்திகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மகிழ்வான தொடக்கத்தில் கலகலக்கும் கதை இறுதியில் சோகக்கடலில் தத்தளிப்பதாக உத்திமுறையில் காட்டியிருப்பது சிறப்பாகும். ஆனால் இந்த ஆரம்ப ஆரவாரமே இறுதியின் முடிவை ஓரளவு ஊகிக்கவைத்து விடுவதும் ஒருவகை பலவீனமாகக் கூட கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

சமூகப் பார்வை

நம்மினத்தின் நடுத்தர வார்க்கத்தினரிடம் எழும் பிரச்சினைகளையும் அவர்களின் கல்வித் தொடர்பான எதிர்மறையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் இக்கதை சமூகப் பார்வையாக முன்னெடுத்துச் செல்கிறது. மேலும் குடும்பம் என்ற கட்டமைப்பில் மனைவியின் எண்ணங்களும் செயல்பாடுகளும் முன்னே நிற்கின்றன என்பதையும் கதை சமூகத்தின் மீது தன் பார்வையை வீசுகிறது.

..... புத்தகங்களை எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நகையை அப்படி வாங்க முடியதே...

பிறர் மெச்ச தானும் வாழவேண்டும் என்று நினைக்கும் மக்களின் பிரதிநிதியாகவும் கற்பகம் இருக்கிறாள்.

நாலே நாலு....என் தோழிகள் எல்லாம் கைக்கு ஆறு ஏழு என்று வைத்திருக்கிறார்கள்.....

ஆமாம். நீ மட்டுமல்ல, தமிழர்களே இப்படித்தான். கையிலே பணம் இருந்தால் ஆடம்பரப் பொருள்கள் வாங்கத்தான் நினைக்குறாங்க. நம்ப சகோர இனத்தவர்களைப் பார். மலையாளிகளும் சிலோன் தமிழரும் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க... பிள்ளைங்க படிக்கணும்னு ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா? அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டாமா? விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டாமா?’ என உதிரும் ஒவ்வொரு வார்த்தைகளும் சமூகத்தை நோக்கி கேள்விக் கணைகளாகத் தாக்குகின்றன.

மொழி நடை

இயல்பான மொழி நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. உரையாடல்களும் எளிமையான எழுத்துத் தமிழால் ஆளப்பட்டுள்ளது இப்படைப்பின் சிறப்பு. சிக்கலின்றி கதையின் மையக்கருத்தை வலியுறுத்திச் சொல்லிச் செல்கிறது கதை.

தலைப்புப் பொருத்தம்

முதலீடு என்ற இக்கதையின் தலைப்பு காலச் சிறந்ததாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் முதலீடுகளில் முக்கியம் வாய்ந்தது கல்வியேயாகும். இதுதான் இந்தத் தலைமுறை அடுத்த தலைமுறையினருக்காகப் போடும் முதலீடும் ஆகும். கல்வியில் வெற்றி பொற்றால் வாழ்க்கையில் நல்ல ஒரு நிலைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கின்றன. நல்ல வேலை கிடைத்தால் பொருளாதாரத்தில் நம் சமூகம் மேன்மையடய முடியும். எதிர்கா நம் சமூகத்திற்கான நல்ல ஒரு முதலீடாகக் கல்வி மட்டுமே விளங்கமுடியும். ஆக இக்கதைக்கு முதலீடு என்ற தலைப்பு பொருத்தமான தலைப்பாகவே அமைந்திருக்கிறது.

(3)  நேர்க்கோடு

கதையின் சுருக்கம்

சத்தியமூர்த்தி வறுமையின் பிடியில் உழன்றாலும் நேர்மைக்குப் பேர் போனவர். அவர் நேர்மையிலிருந்து வழிதவறி நடக்கும் ஒரு சூழல் ஏற்பட்டது. அவர் மனம் தடுமாறிப்போனாலும் தன் தவற்றை உணர்ந்தவராய் அந்தத் தவற்றிலிருந்து இறுதியில் தன்னை எப்படி மீட்டுக்கொள்கிறார் என்பதைக் கூறி கதை முடிகிறது.

கதையின்  தொடக்கம்

ஒரு கம்பத்து வீட்டின் சூழலோடு கதை தொடங்குகிறது.

அத்தாப்புக் குடிசையின் ஒரு பகுதியாகிய அவ்வறையின் சில பகுதிகள் இரவு பெய்த மழையின் காரணமாக நனைந்திருந்தன. ஈரம் படாத பகுதியில் படுத்திருந்த அவரது கடைக்குட்டிப் பிள்ளை முத்து, ஒரு பலகீனமான முனகலோடு புரண்டுபடுத்தான்.

ஏழ்மை அதன் தாக்கம் என தொடங்கும் கதை, சத்தியமூர்த்தி மற்றும் அவர் மனைவிக்கும் இடையிலான உரையாடல்கள் மூலம் அவர்களின் குடும்பச் சூழலைப் பதிவு செய்கிறது. மேலும் அந்தக் கம்பத்திலேயே நேர்மைக்குப் பேர் போனவர் சத்தியமூர்த்தி என அந்தக் கதாபாத்திரத்தையும் ஆழமாகவும் பதிவு செய்கிறது.

கருப்பொருள்

சிறுகதையின் இலக்கணத்திற்கு ஏற்ப ஒரேயொரு மையக்கருத்தைக் கொண்டு கதை பின்னப்பட்டு இறுதியில் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

 மனித வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் சத்திய சோதனை ஏற்படுவது இயல்பானதே. இக்கதையின் நாயகனுக்கும் அப்படியொரு சத்திய சோதனை வருகிறது. நேர்மைக்குப் பேர் போனவரின் நேர்மைக்கும் சத்தியத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. 

மகனின் வைத்தியச் செலவுக்குப் பணமில்லாத மாத இறுதியில் கைக்கு வரும் பணத்தை அவர் தனக்காக எடுத்துக் கொண்டு பொய்யுரைக்கவும் செய்கிறார். ஆனால் அந்தப் பணத்தை தன் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொழுதும் அவரின் மனச்சாட்சி அவரைத் திணரவைக்கிறது. இறுதியில் அந்தப் பணத்தை நூல்நிலைய உண்டியில் போட்டுவிட்டு மன நிம்மதியோடு நடந்து போவதாகச் சொல்லி கதை நிறைவு பெறுகிறது.

கதையின் போக்கு

ஆசிரியரின் கூற்றாகவும் கதாபாத்திரங்களின் உரையாடல்களில் மூலமாகவும் சம்பவங்களின் மூலமாகவும் கதை நகர்த்திச் செல்லப்பட்டிருக்கிறது. வறுமைக்கோட்டில் வாழும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை உரையாடல்களின் வழியும் வழி நடத்திச் செல்கிறது கதை.

பாலு முடிஞ்சிப் போச்சிங்க. அதனாலதான் வறக்கோப்பி போட்டேன்.. என லெட்சுமி சத்தியமூர்த்தியிடம் கூறும் வார்த்தைகள் ஒட்டுமொத்த ஏழ்மைச் சூழலில் சுழலும் குடும்பங்களின் குரலாக ஒலிக்கிறது. இப்படி பல இடங்களில் வரும் உரையாடல்கள் அவர்களின் இயலாமையையும் வேலைக்காக நடிக்க வேண்டிய சூழலையும் விவரிக்கின்றன.

வியாபாரக் கடையில் இருக்கும்போது இப்படியெல்லாம் இருந்தா நல்லா இருக்குன்னு முதலாளி நெனைக்கிறாரு.

இப்படியெல்லாம் வரும் உரையாடல்கள் மானுட வாழ்வின் ஒரு பிரிவினரின் அவலத்தைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறது.

கதையின் பின்புலம்

அன்றைய சிங்கப்பூர் அத்தாப்புக் கம்பங்களிலால் நிரம்பி வழிந்த காலத்தைக் களமாகக் கொண்டு இக்கதை பயணித்துள்ளது. அன்றைய சிங்கப்பூர் சூழலையும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரச் சூழலையும் கதை எடுத்தியம்புகிறது. சமூக விழுமியங்களும் பண்புகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாகவே இருக்கவேண்டியவை என வலியுறுத்திச் சொல்லும் விதமாகவே இக்கதையின் பின்புலம் மிகவும் தெளிவாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பாத்திரப் படைப்பு

பெரும்பாலும் சிறுகதைகளில் பாத்திரப் படைப்பு என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. அவ்வகையில், இக்கதையின் சத்தியமூர்த்தியை,

படிப்பதைப் பொழுதுபோக்கு என்று கருதாமல், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று படிப்பனவற்றையெல்லாம் பக்குவமாக நெஞ்சில் பதித்துக் கொள்பவர் அவர் என அறிமுகம் செய்துவைக்கிறார் கதாசிரியர். அவரைப்பற்றிய கம்பத்து மக்களின் வாக்குமூலம்,

அவரின் பெயருக்கு ஏற்பவே அவர் சத்தியத்தைக் காப்பாற்றி வருவதாக எல்லாரும் சொல்லுவார்கள் என வருகிறது. ஆனால், அப்படிப்பட்டவர் சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக  நிலைதடுமாறும்போது ஏற்படும் மனஉளைச்சலையும் அதன் போராட்டங்களையும் இந்தக் கதாபாத்திரம் நிறைவாகவே செய்திருக்கிறது.

சத்தியமூர்த்தியின் மனைவி லெட்சுமியின் கதாபாத்திரம், கணவனுக்கு ஏற்ற, விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போகும் மனைவியாக வாழும் ஒரு சாதாரண பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளது. கடையில் பொருளை வாங்கிவிட்டு அலட்சியமாச் செல்லும் அந்த இளைஞனின் கதாபாத்திரமும், அவனோடு உரசிக்கொண்டு நிற்கும் பெண்ணின் கதாபாத்திரமும் இளைய சமூகத்தின் பிரதிபிம்பமாக வந்து போகின்றது. மேலும் கதையில் வரும் இக்பால் நூல் நிலையமும் அஃறிணையாக இருந்தாலும் இக்கதையின் திருப்பத்துக்கு வழிகாட்டும் ஓர் அஃறிணைக் கதாபாத்திரமாகச் செயல்பட்டிருப்பதும் சிறப்பான ஓர் அம்சமாகும்.

கதையின் முரண்

கதாசிரியர் கதை முரணை சம்பவங்களின் கோர்வைகளாகச் சிறப்பாக அமைத்துக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. மகனின் வைத்திய செலவுக்கு பணம் தேவையாயிருக்கும் ஒரு மாதக் கடைசியில், நேர்மையான மனிதனுக்குத் தேவைகள் முன் நின்று கொள்கைகளைத் தின்றுவிடும் சூழல் முரண் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

சாதாரணமாகச் சொன்னாலும் பிழைப்புக்காத் தானும் போலியான அலங்காரம் செய்ய நேர்ந்ததே..... 

என வரும் வரிகள், நேர்மை மாறா குணம் கொண்ட சத்தியமூர்த்தி தனக்குப் பிடிக்காதவற்றைச் செய்கிறார் எனக் காட்டும் பட்சத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் உண்மைக் குணமும் காசுக்காகப் போடும் வேஷமும் முரண் பட்டு நிற்பதைக் கதை நன்றாக நிருவியுள்ளது. மேலும் அரசு சார்ந்த மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் மக்கள் மனத்தில் தத்தம் முரண்களோடு நிற்பதையும் இக்கதையின் ஊடே பார்க்கமுடிகிறது. ஐம்பது வயதானாலேயை வேறு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்த அந்தக் காலமும் இன்று நாம் காலத்தின் மாற்றத்திற்கு முன் முரண் பட்டு நிற்கிறது.

கையாளப்படும் உத்திகள்

ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தை வாசகரிடத்தில் கொண்டு சேர்க்கவும் கதைச்சொல்லலை மையக்கருத்தை நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் உத்திகள் பெரிதும் துணைபுரிகின்றன.

கதையில் வரும் உரையாடல்கள், சம்பவக்காட்சிகள், எழுத்தாளனின் முன்னுரைப்பு ஆகிய உத்திகள் வாசிப்பவர்கள் மனத்தில் ஒருவித ஆர்வத்தைத் தூண்டச் செய்பவனவேயேயாகும். ஆனாலும் கதையின் ஆரம்பநிலையில், குடும்பச் சூழல், சத்திய மூர்த்தியின் நேர்மை எனக் கோடிகாட்டியிருப்பது கதையின் இறுதி முடிவு ஓரளவு ஊகித்தறியும் வகையில் முன்னமே தெரிந்துவிடுவது சில வேளைகளில் வாசக உள்ளங்களில் ஒருவித சலிப்புணர்வை ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது என்பதையும் இங்குக் கருத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

சமூகப் பார்வை

விளிம்புநிலை மனிதர்களின் பிரச்சினைகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளார் கதாசிரியர். மனித விழுமியங்களுக்கும் வாழ்வாதாரப் போராட்டங்களுக்கும் இடையில் இவர்கள் சிக்கத் தவிக்கும் விதத்தைப் பதிவு செய்து தனது சமூகப் பார்வையை வாசிகனை நோக்கி வீசியிருக்கிறார் கதாசிரியர்.

இயலாமையைக்கூட தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வாழ்வை நடுத்தும் மக்களின் வாழ்வியலை,

பாலு முடிஞ்சிப்போச்சிங்க...வறக்கோப்பிதான் போட்டேன்...
ஓ..ஆமா, நீ நேத்துகூடச் சொன்னியே? அதனாலென்ன இந்த அதிகாலை நேரத்தில் இதுதான் நல்லது....

என்பதை இயல்பாகச் சொல்லிச் செல்கிறது கதை. மேலும், அரசாங்க மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இல்லாத ஒரு சூழலையும் சமூகப் பார்வையாக கதை நம் முன்னே வைத்துள்ளது. மேலும்,

சத்தியமூர்த்தியின் வாக்கிற்கு முன்னால் அவன் உண்மை தலைகுனிய வேண்டியதாயிற்று

என்ற வரிகளின் மூலம் தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும் என்ற நிலையையும் சமூகப்பார்வையாக இக்கதைச் சொல்கிறது.

மொழி நடை

இக்கதையில் எழுத்தாளனின் எழுத்தாற்றல், பேச்சுத் தமிழிலும் எழுத்துத் தமிழிலும் தடம் பதித்து நல்லதோர் எளிய வகையில் நடை பயின்றுசென்றுள்ளது.

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேங்க........நீங்க யோசனை பண்ணிப் பாருங்க...கடைக்குப் பலகை போட நேரமாயிடுச்சி... போன்ற பேச்சுத்தமிழ் சொல்லாட்சிகளைக் கதை நெடுகிலும் பார்க்கமுடிகிறது.

தலைப்புப் பொருத்தம்

நேர்கோடு. இதுதான் தலைப்பு. கதையின் ஆரம்பத்தில் நேர்மையாளனாக சத்தியவானாகச் சித்தரிக்கப்படும் சத்தியமூர்த்தி சந்தர்ப்பங்களின் வசத்தால் தன்னை மறந்த அந்த ஒரு நொடி. நேரான அவரது வாழ்க்கைப் பாதையைக் கோணல்மாணலாக்கி விட்டிருக்கக்கூடும். பண்புச் சார்ந்த மனிதன் தன் தவற்றால் மனஉளைச்சளுக்கு ஆளாகி அவன் மனச்சாட்சி,

உண்மைவாதி சத்தியமூர்த்தியா நீ? சூழ்நிலை மனிதனை எப்படி மாற்றுகிறது பார்த்தாயா? நீதி, நேர்மை எல்லாம் பேச்சிலும் எழுத்திலுதானப்பா... அப்பனே, யதார்த்த வாழ்க்கையில் நிகழ்வதெல்லாம் கயமை. நீதியின் கழுத்து நெரிக்கப்படுகிறது....நேர்மை கொலை செய்யப்படுகிறது.

 கேள்விமேல் கேள்விக் கேட்டு அவரைத் துளைத்தெடுக்கிறது. இடுப்பில் இருக்கும் அந்த ஐம்பது வெள்ளி, அப்போது அவருக்கு ஐம்பது டன் இரும்பைப்போல் கனத்தது. பொறுக்கமுடியாமல் அந்த ஐம்பது வெள்ளியை நூல்நிலைய உண்டியலில் போட்டுவிட்டு, நிம்மதியோடு நடந்துகொண்டிருந்தார் என கதை முடிகிறது.

தன் வாழ்க்கையில் உண்மை, நேர்மை, வாய்மை என வாழ்ந்தவர், அதிலிருந்து சிறிது நேரம் தவறினாலும் மனச்சாட்சியின் கேள்விமழைதனில் நனைந்து தன்னைப் புனிதப் படுத்திக்கொண்டு தன் வாழ்க்கை நெறியென்னும் நேர்கோட்டில் நிம்மதியாக நடக்க ஆரம்பிக்கிறார். ஆகையினால் நேர்கோடு எனும் தலைப்பு இக்கதைக்குச் சிறப்பாகவே பொருந்துகிறது எனலாம்.

(4)  இப்படியும் ஒரு பிழைப்பு........


அன்றைய சிங்கப்பூர் சூழலில் தமிழர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு ஊழியர்களாக இருந்த வேளையில், பெரும்பாலும் அரசாங்கம் சார்ந்த துறைகளில் கடைநிலைத் தொழிலாளர்களாகவும் தினக்கூலித் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வந்தனர். அப்படி அவர்கள் உடலுழைப்புத் தொழிலாளர்களாக இருந்த போதும் தங்களை வருத்திக்கொண்டு, பல தியாகங்களைச் செய்து தங்களின் பிள்ளைகளுக்குக் கல்வியறிவூட்டி வளர்ப்பதில் என்றும் சளைத்தவர்கள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு குப்பைத்தொட்டித் தொழிலாளியான அய்யாவுவைப் பற்றிய கதைதான் இந்த, ‘இப்படியும் ஒரு பிழைப்பு’.

கதையின் சுருக்கம்

           தினக்கூலித் தொழிலாளியான அய்யாவு மற்றும் அவரின் மேலதிகாரி மணியத்துக்குமான உறவு, அய்யாவுவுடன் வேலை செய்யும் சக தொழிலாளர்களின் உறவு, பின்னாளில் அய்யாவுவின் மகன் அதே சுகாதாரப் பிரிவுக்குத் தலைமைப் பொறுப்பேற்ற பின் எப்படி மாறிப்போகிறது என்பதைக் கூற வருகிறது இக்கதை. எது எப்படியிருப்பினும் அய்யாவு மட்டும் தன் மகனிடமிருந்து எந்தவொரு சலுகைகளையும் எதிர்பார்க்காமல் பழையபடியே தன்  வேலையை யாருடைய துணையுமின்றி செய்து வருகிறார்.

கதையின் தொடக்கம்

கதையின் தொடக்கமே ஒரு குப்பையள்ளும் தொழிலாளியின் வேலைச்சூழலை மிகவும் இயல்பாகப் பதிவு செய்யும் நோக்கில் அமைந்துள்ளது.

எந்த நேரத்தில் தண்ணீர்ப் பங்கீடு வருமோ என்று மக்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருந்த பயங்கர வெம்மைக்காலம்..

என வரும் வரிகள், சிங்கப்பூரின் ஒரு வறட்சிக் காலத்தைப் பதிவு செய்கிறது. அந்தக் கொடுமையான வெய்யிலில் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியின் வேலை அனுபவங்கள் சொல்லப்பட்டுள்ளன.

கருப்பொருள்

மனிதனை யாரும் மனிதனாக மதிப்பதில்லை. அவன் யார்? அவன் பதவி என்ன? அவனால் நமக்கு என்ன லாபம்? என கணக்கு மட்டும் இங்கு பார்க்கப்படுகிறது என்ற கருத்தை மையமாகக்கொண்டே இந்தக் கதையின் கதாபாத்திரங்ளும் காட்சிகளும் சூழலும் கட்டமிக்கப்பட்டுள்ளன. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக்கொண்டு வருகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது கதை.

கதையின் போக்கு

சம்பவங்களின் பின்புலத்தைக் காட்சிப்படுத்தி, உரையாடல்களின்வழி கதையின் போக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் மனித நேயம் குறைந்துகொண்டே வருகிறதே என்ற ஏக்கம் இலைமறைகாயாகக் கதையின் உயிர்நாடியாக கதையின் போக்கின் உள்ளே இழைந்தோடியுள்ளது என்பதும் கதையின் ஓட்டத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

கதையின் பின்புலம்

அன்றைய சிங்கப்பூர் சூழலில் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னனியும் அவர்களின் இயலாமையும் அதையும் தாண்டி ஒரு நம்பிக்கைக் கொடுக்கக்கூடிய நிலையில் ஒரு தொழிலாளியின் மகனும் கல்வியால் வாழ்க்கையின் முன்னேற முடியும் என்பதும் கதையின் பின்புலமாக அமைந்து கதைக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.

பாத்திரப் படைப்பு

இக்கதையின் பிரதான பாத்திரம் அய்யாவு. ஒரு தொழிலாளியும் ஓர் அப்பாவும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியான கதாபாத்திரம் இது. தன் மனைவியின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் மணமுடித்துக் கொள்ளாமல் தன் மகனின் மீதும் அவன் கல்வியின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு கடமை தவறாத தந்தையாக இந்தக் கதாபாத்திரம் செப்பமிட்டு பதனிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

தயவுசெய்து நாளையிலிருந்து அவானை எனக்கு உதவியாக அனுப்ப வேண்டாம். என் மகன் எனக்குச் சலுகை காட்டுவதாக மத்தவங்க பேசுவாங்க. அது அவனுடைய எதிர்காலத்துக்கு நல்லதில்லே... என்ற அய்யாவு குப்பை வண்டியை இழுத்துக்கொண்டு புறப்பட்டான்......’ 

என்ற இறுதி வரிகள் அந்தக் கதாபாத்திரத்தை ஓர் உன்னத நிலையில் நிறுத்துவிட்டுச் செல்கிறது.

கிராணி மணியத்தின் கதாபாத்திரம், பெரும்பாலான மேலதிகாரிகளின் கூட்டுப் பிம்பமாகவே அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. சுயநல வேட்கையில் திரியும் ஒரு சந்தர்ப்பவாத மற்றும் முதுகெலும்பில்லா கதாபாத்திரம் இந்த மணியம் கதாபாத்திரம். மேலதிகாரிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் இவர்கள் போடும் ஆட்டம் சொல்லில் அடங்கா. தன்னைவிட மூத்த அதிகாரிகளுக்கு அடிவருடிகளாவும் தனக்குக் கீழே வேலை செய்யும் தொழிலாளிகளை தங்கள் விருப்பத்துக்குப் பம்பரங்களாக ஆட்டிவைக்கும் பாம்பாட்டிகளாவும் இவர்கள் இருப்பார்கள்.

நீ மட்டும் என்ன பெரிய இவுரா? ஒழங்கா மொறையா ரோட்டைக் கூட்ட வழியைப் பாரு ஆமா. இல்லே, சீட்டு கிழிஞ்சு போயிடும் ஜாக்கிரதை...

என அய்யாவுவை மிரட்டும் மணியம், பின்னாளில் அய்யாவுவின் மகன் தனக்கே மேலதிகாரியாக வந்த பின் அய்யாவுவிடம் பணிந்து போகிறான்.

அய்யாவுவின் மகன் இளங்கோ இரக்க குணம் கொண்ட கதாபாத்திரமாக வருகிறான். மேலதிகாரிகளிலும் நல்ல மனமும் இரக்கக் குணமும் படைத்தவர்கள் இருப்பார்கள் என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் நல்லதொரு எடுத்துக்காட்டு. அய்யாவுவுடன் வேலை செய்யும் முனுசாமி, மலாய்க்காரத் தொழிலாளி அவான் மற்றும் ஆபிஸ் கிராணி எட்மண்ட் லீ போன்றோரின் கதாபாத்திரங்களும் அவரவர் தன்மைக்கேற்ப மிகவும் இயல்பாகவே எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

கதையின் முரண்

எழுத்தாளர் கதை முரணைக் கதாபாத்திரங்களின் செயல்பாடுகளின் மூலம் கலைத்திறனோடு இக்கதையில் அமைத்துக் காட்டியிருக்கிறார். கிராணி மணியத்தின் பாத்திர முரண், சகத் தொழிலாளி முனுசாமியின் உரையாடல்களில் ஏற்படும் முரண் ஆகியவை மிகவும் சிறப்பாக இயம்பப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலையில் அய்யாவுவை, ‘என்ன அய்யாவு.... எனக் கூப்பிட்டுப் பேசும் முனுசாமி, அய்யாவுவின் மகன் அந்த ஆபிஸுக்குப் பெரிய அதிகாரியாக வந்தவுடன் அய்யாவுவை, ‘அய்யாவு அண்ணே வீட்டில இருக்காங்களா...?’ எனப் பணிவாகக் கூறுவதும் பாத்திர முரணுக்குச் சிறப்பானதோர் எடுத்துக்காட்டாகும்.

கையாளப்படும் உத்திகள்

ஒரு படைப்பாளன் தாம் கூற வந்த கருத்தைக் கலையாக்குவதற்கும் மையக் கருத்தை நோக்கிக் கதையை வளர்த்துக் கொள்ளவும் உத்திகளைப் பயன்படுத்திக் கொள்வான்.

கதையின் தொடக்கத்தில் இருக்கும் இறுக்கத்தை கதையின் முடிவில் இலகுவாக்கியிருப்பது சிறப்பான உத்தியாகும். மேலும் கதைப் பொருளுக்கு ஏற்ற நிகழ்வுகளும் உரையாடல்களும் கதாசிரியரின் எண்ண அலைகளும் சிறப்பான உத்திகளாக விளங்குகின்றன. மேலும் அய்யாவுவின் மனைவி இறந்துவிட்டாள் என்பதை நேரிடையாகச் சொல்லாமல்,

அந்தச் சிறிய வாடகை அறையின் ஒரு மூலையில் அய்யாவுவின் மனைவியின் படம் தொங்கவிடப் பட்டிருந்தது. என ஓர் குறியீடாகக் காட்டியிருப்பதும் சிறப்பான ஓர் உத்தியாகும்.

சமூகப் பார்வை

தினக்கூலித் தொழிலாளர்களின் மன அழுத்தத்தையும் அவர்களுக்கு ஏற்படும் அவலங்ளையும்  அனுதாபத்தோடு கதையில் சுட்டிக் காட்டுகிறார் கதாசிரியர். நம் சமூகத்தில் இருக்கும் இவர்களைப் பற்றி நாம் எப்போதுமே அக்கறைக் கொள்வது இல்லை. ஏளனப் பார்வையோடும் கேலிப்பேச்சோடு மட்டுமே இவர்களை நாம் அணுகியிருப்போம் அல்லது விலக்கி வைத்திருப்போம்.

 ‘தனக்குக் கீழே வேலை செய்யும் ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் பரிவு காட்டுவதே இல்லை.

 என்ற வரிகளும் சமூக வீச்சாக நம் முன் வந்து விழுகின்றன.

 வலதுசாரி சார்ந்த சிந்தனைகளும் மற்றும் இடதுசாரி சார்ந்த சிந்தனைகளும் கதையின் சம்பவ உரையாடல்களின் மூலமாக சமூகப் பார்வைகளாக இக்கதையில் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்வி ஒன்று மட்டுமே நம் சமூகத்தைப் பொருளாதார வலிமைமிக்க ஒரு இனமாக மாற்றும் சக்தி கொண்டது என்ற சமூகச் சிந்தனை தூவலும் இக்கதையிலுண்டு.

மொழி நடை

இந்தச் சிறுகதையில் பெரும்பாலான இடங்களில் பேச்சுத் தமிழும் சில இடங்களில் எழுத்துத் தமிழும் கையாளப்பட்டுள்ளன.

அவான் நீ என்ன செய்யிறே?’

நீ மட்டும் என்ன பெரிய இவுரா....சீட்டு கிழிஞ்சு போயிடும்......

என இவைபோன்ற கதையின் இடை இடையே வரும் பேச்சுத் தமிழ், கதையோடு நம்மை ஒன்றணைக்கச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும் வெம்மைக்காலம் போன்ற சொல்லாடல்கள் கதாசிரியரின் மொழிவளத்துக்கு நல்ல சான்றுகளாகும்.


தலைப்புப் பொருத்தம்

இப்படியும் ஒரு பிழைப்பு....என்ற கதையின் தலைப்பு எள்ளி நகையாடி கிண்டலடிப்பது போல இருக்கிறது. நம்முடன் வாழும் இதுபோன்ற மனிதர்களை நமக்கு அடையாளப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள கதையாக இது இருக்கிறது. இப்படியும் ஒரு பிழைப்பு.... என்ற நக்கல், கிராணி மணியம் போன்றோரைக் குறிக்கிறதா? அல்லது தினத்தொழிலாளிகள் செய்யும் தொழிலைக் குறிக்கிறதா? என வாசகர் நெஞ்சங்களில் ஒரு வகையான சிக்கல் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

கதையின் மையக்கருத்து அய்யாவுவைச் சுற்றியே பின்னப்பட்டிருப்பதால் கதையின் தலைப்பும் அய்யாவுவைச் சார்ந்து புனையப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முடிவுரை


படைப்பிலக்கியம் வாழ்க்கையின் விரிந்த எல்லையைப் பார்க்க வைத்து, இன்பங்களைத் துன்பங்களாகவும் துன்பங்களை இன்பங்களாகவும் மாற்றியமைத்து வீண் ஆரவாரத்தையும் வீம்புகளையும் மாய்த்து வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அவ்வகையில் இதுவரை நாம் பார்த்த சிங்கையின் மூத்த எழுத்தாளர் பொன்.சுந்தரராசுவின் நான்கு சிறுகதைகளுமே சிங்கப்பூர் வாழ்வியலைப் பற்றிய நல்லதொரு பதிவாகவே அமைந்திருக்கின்றன. மேலும் இச்சிறுகதைகள் வாழ்வை அதனதன் போக்கில் மையப்படுத்தி, சிங்கப்பூரின் தனித்தன்மையோடும் உலகளாவிய பரந்த பார்வையுடன் புனையப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாகும்.