வியாழன், 3 அக்டோபர், 2019





வாங்க வாசிக்கலாம் (6) – எம். சேகர்

மக்கள் ஓசை (23-6-19)


இந்த வாரம் நாம் பார்க்கப்போகிற எழுத்தாளரின் கதைகள் இன்றைய வாழ்வியல் சிக்கல்களை வைத்துப் பின்னப்பட்டிருப்பவை. அதுவும் சிங்கப்பூருக்கே உரிய தனித்த அடையாளங்களைக் கொண்டு தனித்தன்மையோடு புனையப்பட்டவை. சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த திருமதி பிரேமா மகாலிங்கத்தின் கதைகள் பெரும்பாலும் குடும்பப் பின்னணியோடு பின்னப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு கதையும் தனித்த பின்புலத்துடன் ஒன்று மற்றொன்றைவிட மாறுபட்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உவமைகள் அவரின் மொழிநடைக்கு மேலும் அழகூட்டும் வண்ணம் அமைந்துள்ளன. இவர், 2013 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தங்கமுனை விருதில் கவிதைக்கான மூன்றாம் பரிசை வெற்றிப்பெற்றுள்ளார். மேலும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய குறுநாவல் போட்டியிலும் (2016) சிறுகதைப் போட்டியிலும் (2017) முதல் பரிசையும் வென்றுள்ளார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான நீர்த் திவலைகள் 2018ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் இலக்கிய விருதின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.


நீர்த் திவலைகள் – பிரேமா மகாலிங்கம்


நிலாச் சோறு


சமையலுக்கான நுணுக்கங்களுடன் ருசியாகப் பரிமாறப்பாட்ட அம்மாவின் சாதம். சமையல் என்ற மையத்தோடு கதைப்பின்னலில் அந்நாளைய சிங்கப்பூர் வாழ்க்கையையும் ஒரு இழையாகக் கதையோட்டத்தில் தவழவிட்டுள்ளதானது வாசகனின் நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டு, பின் மீண்டும் நிகழ்காலத்திற்குள் நுழைத்துவிடுகிறது. தஞ்சோங் பாகார் ரயில் நிலையம், குவார்ட்டஸ் வீடுகள், மாவு மில், பால் டின்கள், கருங்கோப்பி (வரக்கோப்பி) போன்ற சொற்பயன்பாடுகளும் இரவு உணவோடு அம்மாவின் விருப்பங்களும் பரிமாறப்பட்டன போன்ற சொல்லாடல்களும் கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல் நம்மைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அரைபடும் மிளகாயைப்போல் நம் வாழ்க்கையும் உருமாறிப்போகும் போன்ற உவமைப் பயன்பாடுகளும் இக்கதைக்கான தனித்த தன்மைகளாக விளங்குகின்றன.


காகிதப் பூக்கள்


ஒரு காலை நேரத்துப் பரபரப்பில் தொடங்கும் கதை ஒரு முதியோர் இல்லத்தில் கசப்பான ஒரு காட்சிப் படிமத்துடன் நிறைவு பெறுகிறது. வேலைக்குச் செல்லும் கணவன் மனைவிக்கான உரையாடலுக்குப் போதுமான நேரமில்லாத சூழலில் அவரவர் விருப்பங்களுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதற்குள் தங்கள் கடமைகளை பணிப்பெண்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு சிங்கப்பூர் வாழ்க்கையை இக்கதைப் பதிவு செய்கிறது. தெம்பனிஸ் முதியோர் இல்லக் கதாபாத்திரங்கள் பல தரப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நல்ல கதை.


கதை முழுக்கு நிறைய உவமைச் சொற்றொடர்களின் பயன்பாடுகள். இன்றைய எழுத்துச் சூழலில் இதுபோன்ற தேய்வழக்குகள் தேவையில்லை என்று ஒரு சாரார் கூறினும், சிங்கப்பூர்ப் போன்ற தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற உவமைகள் அவர்களுக்கான தமிழ் மொழிக் கற்றலின் வளத்திற்கு மேன்மையைக் கொடுக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.  


சக்திவேல்


வழி தவறிச் செல்லும் இன்றைய இளையர்களின் வாழ்வியல் போக்குகளையும் அதன் தொடர்பான நீட்சிகளையும் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் கதை காட்சிப்படுத்திச் சொல்கிறது. எளிய மொழி நடையில் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை பயணிக்கிறது. இக்கதையின் போக்கு இறுதியில் வாசகர்களுக்கான இடைவெளிகளையும் விட்டுச்செல்கிறது. ஒவ்வொரு முடிவிலும் ஒரு தொடக்கும் இருக்கும் எனக் கூறப்படுவதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கதை இருக்கிறது. தாய் சிறைக்குச் சென்று நான்கு ஆண்டுகளாகியும் தங்கை மைதிலி அண்ணனைக் காண சிறைச்சாலைக்குச் செல்லாதது ஏன் போன்ற வாசக இடைவெளிகளைக் கொடுக்கும் மௌனமும் இக்கதையில் இருக்கிறது.


பெற்றோர்களைப் பணம் கொடுக்கும் இயந்திரங்களாகப் பார்க்கும் இளையர்களின் மனோபாவமும் பல் துலக்கிக் கொண்டே வார்த்தைகளைத் துப்பினானன்’, ‘பேருந்து நகர, சாலையோர மரங்களும் செடிகளும் பின்னோக்கி நகர, வாழக்கையைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் முன்னகர்ந்து வந்தன போன்ற இனிய சொல்லாடல்களும் கணினித் திரையில் கோடிட்டு அழுத்தம் கொடுத்த எழுத்துகளைப்போல் அவன் மனத்தில் ஆழப் பதிந்த வார்த்தைகள் போன்ற இன்றைய சூழலுக்கு ஏற்ற உவமைகளும் கதை முழுக்க ஆங்காங்கே வந்து போகின்றன. சிங்கப்பூரின் முன்னாள் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டமான மஞ்சள் ரிப்பன் திட்டமும் கதையின் சிங்கப்பூர் அடையாளத்திற்கான நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.


முட்டையின் நிறம் கறுப்பு


மகள் பிள்ளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் தன் மருமகனின் விந்தைக் கொண்டு செயற்கை மூலமாக உருவாக்கப்படும் டெஸ்ட் டியூப் குழந்தையைத் தாய் பெற்றெடுப்பதாகப் புனையப்பட்ட கதை. தாய்தான் கருவைச் சுமக்கிறாள் என்பது கதையின் இறுதியில்தான் வாசகர்களுக்கும் தெரியவரும். அந்த விஷயத்தைக் கதையின் உச்சம்வரை காப்பாற்றுவதில் ஒரு கதாசிரியராக வெற்றிப்பெற்றுள்ளார் திருவாட்டி பிரேமா மகாலிங்கம். ரம்யா, அம்மா கௌரி, குமார் மற்றும் டாக்டர் சத்தியநாராயணன் என கதாபாத்திரங்கள் மிகவும் நுணுக்கமாக வந்து போகின்றன கதையின் இறுதி முடிவைப்போல......சொல்லப்பட்ட கதையைவிட சொல்லப்படாத இன்னொரு கதை.


ததும்பி வழியும் உயிர்


டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர் ராமசாமி, மகன் சொன்ன ஒரு வார்த்தைக்காக, மகன் பிறப்பதற்கு முன் பலமுறை சென்றுவந்த பொந்தியானில் இருக்கும் அவரின் சித்தாப்பாவின் வீட்டிற்குச் சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். இடையில் பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி, சிலர் பக்கத்தில் இருக்கும் தேரீர் கடைக்கும் சிலர் தாங்கள் கையில் வைத்திருக்கும் தண்ணீர்ப் பாட்டில்களைத் திறந்து தொண்டயை நனைத்துக் கொண்டும் இருக்க, பெரியவர் மட்டும் ரப்பர் மரக்காடுகளின் நடுவில் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் ஏதோ பரிட்சயமான ஒரு பாதையில் செல்வதுபோல் நடக்க ஆரம்பித்து விடுகிறார். ஓர் ஆற்றின் ஓரம் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டு அங்குச் செல்கையில் களைப்பின் மிகுதியால் மயங்கி விழுந்து விடுகிறார்.


பெரியவரின் கதை அதோடு கட் செய்யப்பட்டு, சிங்கையில் மகன் மாதவன் வீட்டுச் சூழலுக்குக் கதை தாவுகிறது. அப்பாவை எங்குத் தேடியும் கிடைக்காமல் இறுதியில் இறைவனிடம் அழுது தஞ்சம் புகுகிறான்.


மாதவனின் வீட்டுச் சூழல் அதோடு கட் செய்யப்பட்டு மீண்டும் பெரியவரை நோக்கி கதைக்கான ஃபிரேம் ரப்பர் காட்டுக்குள் நுழைகிறது. தாயும் மகனுமாய் இருக்கும் ஒரு குடும்பம் அவரை அன்போடு அரவணைக்க, தன் கடப்பிதழை யாருக்கும் தெரியாமல் ஆற்றில் வீசிவிட்டு அவர்களைப் பின் தொடர்வதாகக் கதை நிறைவு பெறுகிறது. ஆனால். வாசிப்பவனின் மனம் நிறைவு கொள்ளாமல் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிடுகிறது.


சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளியாகப் படைப்பாளரைக் காட்டும் கதை. மூன்று முடிச்சுக்குப் பிறகுதானே உன்னுடைய உண்மையான முடிச்ச அவிழ்ந்தது என்ற வரி எத்தனையோ பல கதைகளை நம் முன்னே விரித்துச் செல்கிறது. இன்றைய பல முதியோர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கதை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது. காட்சிப்படுத்துதல் (visualation) உத்தி கதைக்கு மேலும் சிறப்பைக் கொடுத்துள்ளது எனலாம்.


பச்சைப் பங்களா

இந்த தொகுப்பில் உள்ள இரண்டு அமானுஷ்யக் கதைகளில் இது ஒரு ரகம். வழக்கான அமானுஷ்யக் கதைகளுக்கான தேவைகளைக் கதை நிறைவுசெய்கிறது. சிங்கப்பூரில் நடப்பில் இருக்கும் குழந்தை நலன் விடுப்பு தொடர்கான செய்தியையும் இக்கதை பதிவு செய்யத் தவறவில்லை.


மெல்லத் திறந்தது கனவு


தொழில் சார்ந்த சிந்தனைகளில் பாதுகாப்பான சூழலில் வாழும் வாழ்வு (save zone) போன்றவற்றிற்கு இருக்கும் தலைமுறை இடைவெளிகளையயும் சமூகத்தின் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் செல்லும கதை. அம்மாவின் எதிர்பார்ப்பு, மகள் ஒரு வேலைக்குப் போனால் போதும் என்பதாகவே இருக்கிறது. மகளுக்கோ ஆரம்பத்திலிருந்து சுயதொழிலில் ஈடுபடும் எண்ணம் இருந்தபோதும் தான் வேலை செய்யும் நிறுவனம் நட்டத்தில் மூடப்பட்டு வேலையிழந்தபோது மீண்டும் அந்தச் சுயதொழில் எண்ணம் முன்னே வந்து அதற்கேற்றவாறு முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டும் அம்மாவுக்கு மட்டும் அவள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதே பாதுகாப்பானதாகப் படுகிறது. பல நேர்காணல்களுக்குச் சென்றபோதும் எந்த வேலையும் சரியாக அமையாததால் கிடைத்த வேலையையாவது செய்யலாம் என்ற அரைமனத்தோடு இருக்கும் வேளையில், அப்பா முதல்முறையாக அவள் பக்கம் நிற்பதாகக் கதை நிறைவுபெறுகிறது.


சின்னஞ்சிறு உலகம்


சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பாட்டி, பேரன் அபினேஷ் இருவேறு உலகங்களின் சங்கமங்களின் கலவை இக்கதை. இடைச்செருகலாக வந்து போகும் ரஹிமா பீவியின் கதாபாத்திரத்தின் வருகை பழைய சிங்கப்பூர் வாழ்வின் ஒரு சிறுபகுதியைத் தொட்டுச் செல்கிறது.


பொய்மெய்


இணைய மோசடிகளை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம். மனிதர்களின் இரக்க குணத்தையும் பலவீனங்களையும் சிலர் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சுயநலமாகப் பொதுஊடகங்களிலே சுற்றித் திரிகிறார்கள் என்பது கதை உணர்த்தும் பாடமாகப் பார்க்கலாம்.  முகநூல் பயணிப்பாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி.


ஓர் இரவு ஒரு பொழுது


அம்மாவை மருத்துவமனை அவசரப்பிரிவில் சேர்த்துவிட்டுக் கதிகலங்கி நிற்கும் மகளின் பார்வையில் சொல்லப்பட்டுள்ள கதை. வழக்கமான மருத்துவமனை சூழல், உறவுகளின் வருகை, விசாரிப்புகள் என கதை தொடர்ந்து ஓர் யதார்த்த வாழ்க்கையின் சம்பவக்கோர்வைகளாக நகருகிறது. ஒன்றைப் பார்க்கும்போது அதை ஒத்த இன்னொன்று நம் நினைவுக்கு வருவது வாழ்வின் யதார்த்தம். கணேசன் என்ற பெயர் அட்டையை அணிந்திருந்தவர் நடந்து போவதைப் பார்த்தவுடன் அவள் நினைவுக்கு சாய்சிவா மாமா வந்துபோவது வெகு இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. பொது இடத்தில் குரலை உயர்த்திப் பேசியதற்காக வெட்கப்படும் மனம், சிங்கையின் பண்புகளை நமக்கு நினைவூட்டுகிறது. சி.பி.ஆருக்கு மீளுயிர்ப்புச் சுவாச முதலுதவி சிகிச்சை என்ற தமிழ்க் கலைச்சொல் பயன்பாடு சிறப்பு.
மஞ்சள் வெயில்
பெரும்பான்மையான சிறுகதைகளை நிகழ்ச்சி, சூழல், கதாபாத்திரப் பண்பு நலன், கருப்பொருள் என நான்கு வகைகளைச் சார்ந்து வகைப்படுத்துவார்கள். அவ்வகையில் இக்கதை கதாபாத்திரத்தின் பண்புநலன்களால் சிறப்புறும் ஒரு கதையாகும். ஓஸ்மான் என்ற சிறுவனின் தாக்கம் இக்கதையின் மையத்தை குறிப்பட்டச் சூழலுக்கு இட்டுச்சென்று சிங்கப்பூர்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் மனித நேயத்திற்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


டாக்சி எண் 8884


அந்தி மழை பொழிகிறது எனத் தொடங்கும் கதை இரவின் மடியில் ஒரு கனத்த மழையின் இருட்டுக்குள் நிழலாடும் ஓர் இளவயது சீன ஆடவனின் உருவத்தோடு நிறைவு பெறுகிறது அமானுஷ்யதைச் சார்ந்த இக்கதை. நம்பிக்கை என்ற உளவியல் சார்ந்த விஷயத்தை இக்கதை நமக்கு உணர்த்துகிறது. சில விஷயங்களை நம்மால் உணர முடியும். ஆனால், அவற்றை நிரூபிக்க முடியாது.


தெம்பனிஸ் பழைய சாலையின் இரவு அடர்ந்த வர்ணனைகளும் விபத்து நடந்த பிறகு சொல்லப்படும் சம்பவங்களும் காட்சிப்படுத்துதல் உத்திமூலம் கதையை வாசகர்களின் விழிப்படத்தின் அருகாமைக்குக் கொண்டு செல்கிறது.


கடகம்


சாவின் குரூரம்
தான் சார்ந்த உறவுகளைத்
தீண்டும்போதுதான்
மனசை உடைக்கிறது என்றும்
மரணத்தை நம் அருகில்
நெருங்கிய உறவுக்காரனாய் வைத்துக்கொண்டே
அதை ஜெயித்துக் கொண்டிருப்பதில்தான்
இங்கு எல்லாமே அடங்கியிருக்கிறது


என்றும் எனது, ‘இராவணனின் சீதை கவிதைத் தொகுப்பில் வரும் வரிகளுக்கேற்ப அமைந்த கதை.

மைனாக்களுக்கும் அம்மாவுக்கும் உள்ள உறவு, ஓர் உளவியல் சார்ந்த நம்பிக்கையின் உறவாகக் கதையில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது, மனித நேயங்களின் சிறப்பை உணர்த்துவதாகவும் அதன் மேன்மையைக் காட்டுவதாகவும் இருக்கிறது. அம்மா மகள், அக்கா தங்கை பாசப்பிணைப்பின் ஓர் இழையாகக் கதை பின்னப்பட்டு, காட்சிப்படுத்துதலில் மனத்தை நெகிழவும் வைக்கிறது.


நீர்த் திவலைகள்


இத்தொகுப்பின் தலைப்புக் கதை. நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காகச் சென்ற இடத்தில் தீர்க்கப்படாத ஒரு பழைய கணக்கிற்கான விடை கதை நாயகனைக் கடந்து சென்றதாகக் கதை நிறைவடைகிறது. ஆனால், ஒரு வாசகனாக நம்மால் நிறைவடைய முடிவதில்லை. ஆயிரம் ஆயிரம் எழுத்துச் சம்மட்டிகளைக் கொண்டு இந்த ஆண் சமூகத்தின் மனக்கொடூரங்களைக் கீறிப்பார்க்கிறது கதை.


தீக்குள் விரலை விட்டால்.......


இன்றைய மின்னியல் பல்லூடக உலகில் பலரும் பலரை ஏமாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் நிறைந்துள்ள ஒரு சூழலை மையமாக வைத்துக் கதை புனையப்பட்டுள்ளது. இது கதையல்ல. நிஜம். என்பதுபோல இப்படி நடப்பதெல்லாம் இன்றைய சூழலில் சர்வசாதரணமாகிவிட்ட ஒன்றுதான். தனக்குப் பிடிக்காதவர்களை வெறுப்பேற்ற, அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் உருவாக்க இப்படி எத்தனையோ காரணங்களுக்காக இப்படியும் பல விஷயங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அவரவர் நியாயங்கள் அவரவர்களுக்கு என்பதற்கேற்ப இங்கு எதுவும் தப்பில்லை என்பதாகிவிட்டது. இதைத்தான் இக்கதையும் வலியுறுத்துகிறது.


ஊர்க்குருவி


தமிழ்நாட்டிற்கு உறவுகளைத் தேடிச் செல்லும் கதை. சிங்கப்பூர்த் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இருக்கும் பூர்வீக உறவுகளைக் கதைச் சுட்டியும் சிங்கப்பூர், தமிழ்நாட்டுக் கிராமங்களின் வாழ்க்கை என அவ்வப்போது ஒப்பிட்டும் கதை நகருகிறது. உறவுகளின் விரிசல்களுக்கு வித்திட்டு இருக்கும் சிங்கப்பூருக்கான பொருளியல் சார்ந்த வாழ்க்கை முறைகளில் உறவுகளின் தொன்மங்களுக்கும் இதன் அவசியத்திற்கும் குடும்பங்களின் அடையாளத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதை.


பலூன்


பொருள் பதிந்த ஒரு குறியீட்டுத் தலைப்பு. சிங்கையின் தமிழ்மொழி வளர்ச்சிக்காக நடைபெறும் பல செய்திகளை ரவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதையில் பரவலாக முன்னெடுத்துள்ளார் கதாசிரியர். சொல்லுக்கும் செயலுக்கும் முரணாக வாழும் பல குணவான்களின் முகத்திரையைக் கிழிக்கிறது இக்கதை. சென்ற தலைமுறை பெற்றோர் தாங்கள் செய்யவேண்டிய கடமையை முழுமையாகச் செய்திருப்பதால்தான் இன்று தமிழ்மொழி சிங்கையில் வாழும் மொழியாக இருக்கிறது. ஆனால், இன்றைய பெற்றோர்களும் நாளைய பெற்றோர்களும் நம் அடுத்த தலைமுறையினருக்கான தம் மொழியின் அடையாளத்தை விட்டுச் செல்வார்களா என்ற சிந்தனை நோக்கை நம் முன் விட்டுச் செல்கிறது கதை.


தமிழில் பேசுவோம்
தமிழை நேசிப்போம்
பேசிவிட்டு இறங்கியவன் கேட்கிறான்
வாட் இஸ் நெக்ஸ்ட்


என்ற எனது, ‘நண்பன் கவிதைத் தொகுப்பில் வந்த வரிகளை மீண்டும் நினைவுப்படுத்திச் செல்கிறது கதை.


இத்தொகுப்பில் உள்ள கதைகள் மெல்லுணர்வு எழுத்துகள் என்பதை நாம் அடையாளம் காண முடிகிறது. வாசிப்பின் பல படிகளில் இது ஒரு வகை படைப்பு மொழி. பொதுவான வாசகனை தன் அடிப்படை வாசிப்பனுபவத்துக்கு உட்படுத்திக் கொள்ளும் வகையினான கதை இக்கதைகள். பொதுவாகப் பெண்கள் விரும்பிப் படிக்கும் கதைகளாக இவை இருக்கும். இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் நம் மனத்தில் இருக்கும் உணர்வுகளை மேலோட்டமாக உரசிப் பார்த்துச் செல்கின்றன. சில கதைகளில் உணர்ச்சிகளை மிகையாகக் காட்டுவதற்காக ஏற்ற காட்சிகளும் அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். சில கதைகள் சில சிக்கல்களைத் தீர்க்கும் தன்மையிலும் சில கதைகள் தன்னிரக்கத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமும் புனையப்பட்டுள்ளதைக் காணலாம்.


பிரேமா மகாலிங்கத்தின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பில், அவரின் ஆரம்பக் காலத்துப் படைப்புகளும் சமீப காலத்துப் படைப்புகளும் கலந்திருப்பதால் சில கதைகளில் அந்த ஏற்றத் தாழ்வுகளைக் காண முடிகிறது. கதைகள் எழுதப்பட்டிருந்த ஆண்டையாவது அந்தந்தக் கதையின் இறுதிப் பகுதியில் வெளியிட்டிருந்தால் கதைகளை வாசிப்பவர்களுக்கும் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும் அந்தக் கதைகளின் தன்மைகளை இன்னும் துல்லியமாகப் பார்த்துப் பேசுவதற்கு ஏதுவாக இருந்திருக்கும்.


சிங்கப்பூர்ச் சூழலுக்கான கதைகள் இத்தொகுப்பு முழுக்க வியாபித்திருக்கின்றன. வெறும் சிங்கப்பூர்க் காட்சி கட்டமைப்புகளிலும் பெயர்க் கட்டமைப்புகளிலும் ஒரு கதை சிங்கப்பூர்க் கதையாகாது. சிங்கப்பூருக்கான ஒரு சமூக மொழி இருக்கிறது. அதற்கு ஒரு மொழி நடை இருக்கிறது. அதை உள்வாங்கிக் கொண்டு எழுதும் எழுத்தும் எழுத்து நடையும் சொற்பிரயோகமும் சொல்லாடல்களுமே ஒரு கதையைச் சிங்கப்பூர்க் கதையாக நிலைபெறச் செய்யும்.

- தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக