வியாழன், 3 அக்டோபர், 2019







தொகுப்பாசிரியர் -
பாலுமணிமாறன்











வாங்க வாசிக்கலாம் (9) எம். சேகர்

மக்கள் ஓசை (14-7-19)


நவீன இலக்கியப் பரப்பில் பல்வேறு படைப்பாளர்கள் பலதரப்பட்ட படைப்புருவாக்கங்களைத் தங்களுடைய கருத்துருவாக்கங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். புற உலகில் நிகழும் சம்பவங்களைத் தங்களுடைய அக மனத்திற்குள் கொண்டு சென்று தங்களுக்கு விருப்பமான இலக்கிய வடிவத்தில் படைப்புகளாகப் படைக்கின்றனர். இத்தகைய படைப்புகள் பலவிதமான உருவ, உள்ளடக்கத்துடன் அவரவர் வாழ்வியல் நடப்புச் சூழலுக்கு ஏற்பவும் இனக் குழுக்களுக்கு ஏற்பவும் சமூகத்திற்கு ஏற்பவும் வாழும் நாட்டிற்கு ஏற்பவும் படைக்கப்படுகின்றன.


நாட்டில் பல்லின மொழி மக்கள் வாழ்ந்துவரும் சூழலில் அவர்களுள் பொருளாதாரத்தில் தன்னிறைவைப் பெற்றவர்களும் நடுத்தர சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் வாழும் வாழ்வியல் சூழலின் காரணிகள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்ளை ஏற்படுத்தி விடுவதைத் தவிர்ப்பதற்கில்லை. இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலினால் மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகள், சிக்கல்கள், பாதிப்புகள், வன்மங்கள், குரூரங்கள் எனப் பலவற்றையும் தன் எழுத்தினூடே வெளிப்படுத்தி, வாசிப்பவர்களுக்கு மனிதன் அல்லது சமூகம் குறித்தும் வாழ்வியல் இயங்கியல் குறித்தும் சிந்திக்கவைக்கின்றன இன்றைய படைப்புகள். அவ்வகையில் சிங்கப்பூரில் வெளிவந்த அப்பாவின் படகு சிறுகதைத் தொகுப்பை இன்று உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.


சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருக்கும் தங்கமீன் வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் வெற்றிபெறும் கதைகளைத் தேர்வு செய்து நூல் வடிவமாக்கி வெளியிடுவது  அதன் வருடாந்திர செயல்களில் ஒன்றாகும். அச்சு ஊடகங்களில் வெளிவரும் படைப்புகள் காலப்போக்கில் காற்றோடு கலந்திடாமல் சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு மேலும் வண்ணமூட்டும் வகையில் நூலாக்கம் செய்யப்படுகின்றன.


சமகால சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியமாகும். அது பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அந்தக் கடமையை தங்கமீன் வாசகர் வட்டம் பொறுப்போடு செயலாற்றி வந்துள்ளது என்பதற்கு இச்சிறுகதைத் தொகுப்பு ஒரு நற்சான்று. இன்று உங்களோடு பகிரப்படும் இந்த நூல் வெளிப்பார்வைக்கு வெறும் ஒரு சிறுகதைத் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால், சிங்கப்பூர் தனது நூற்றாண்டைக் கொண்டாடும்போது இது சிங்கப்பூரின் வரலாறாகவும் சிங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாகவும் திகழும் சாத்தியக்கூறுகளும் நிறைவாகவே இருக்கின்றன.


12 மே, 2012 இல் தொடங்கப்பட்ட தங்கமீன் வாசகர் வட்டம், ‘சிலிக்கோன் இதயம்’, ‘நதிக்கரை நாகரீகம் என இரண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் காலப் பெருவெளி என்ற கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த அப்பாவின் படகு தங்கமீன் வாசகர் வட்டத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலாகும். போட்டிகளில் தேர்வுப்பெற்ற கதைகளோடு சிறப்பான ஒரு சில கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.


இலக்கியப் படைப்புகள் வெறும் பொழுதுபோக்கிற்கான வாசித்தல் கருவி என இல்லாமல் வாசகர்களின் மனத்தில் அப்படைப்பைப் பற்றிய பல்வேறு வகையான சிந்தனைகளைத் தூண்டுவனவாகவும் அமைதல் வேண்டும். இதன் போக்கிலேயே இத்தொகுப்பில் மலர்ந்திருக்கும் பல சிறுகதைகளும் அமைந்திருக்கின்றன. சிங்கைத் தமிழர்களின் வாழ்க்கையின் அகப் புற நெருக்கடிகளையும் பண்பாட்டுச் சிக்கல்களையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் குடும்ப உறவுகளின் உறுதியின்மையையும் சில கதைகள் பதிவு செய்துள்ளன. சிறுகதை என்பது வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் ஆழ்ந்து பயணிப்பது என்கிற வரையறையை மீறி, ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் மட்டும் ஆழ்ந்துபோகாமல், வெவ்வேறு சம்பவக் கோவைகளினூடாகப் பயணிப்பதும் ஒருவகை தனிபாணிதான் என்பதை எடுத்துரைக்கும் புதிய கதையாடல் கொண்ட சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு. மேலும், சில சிறுகதைகளை வாசித்தபோது ஒருவித செயற்கைத் தன்மையில் சொற்களால் கட்டடம் கட்டுவதுபோல் எழுதப்பட்டிருப்பது மனத்துக்கு அயர்ச்சியையும் தந்துள்ளது.


இனி இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளைப் பற்றிய எனது பார்வையை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.


அப்பாவின் படகு – தொகுப்பாசிரியர் பாலு மணிமாறன்


ஒற்றைக்கண் – அழகுநிலா


ஒரு மகளின் பார்வையில் பெற்றோர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் சொல்லும் கதை. மையக் கதைக்குத் தேவையானவை மட்டுமே மிகவும் நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளது. ஒரு மரணம் மனிதனின் மனத்துக்களுள் எத்தகைய மாற்றங்ளை நிகழ்த்திவிடுகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லும் கதை. வாசிப்பவரின் மன ஆழத்தை நோக்கி கதையின் உணர்வுகள் தாவிச் செல்வதைத் தவிர்க்க இயலாது.


இணையும் இணையம் – பிரேமா மகாலிங்கம்


சமகால சிக்கல்களில் ஒன்றாகப் புதிதாக உருவாகியிருக்கும் இணையக் குற்றம் ஒன்றை மையமாகக் கொண்டு இக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.  அறிவியல் சிந்தனைகளும் செயன்மைகளும் ஏற்படுத்தும் சமகாலச் சிக்கல்களைக் காலத்திற்கு ஏற்ற கருவாகப் படைப்பாக்கதிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொது ஊடகங்களில் பயணிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கக்கூடிய கதையாக இருக்கிறது.


இது வேறு வீடுமகேஷ்குமார்


சில சமயங்களில் நாம் கேள்விப்படும் செய்திகளும் நாம் பார்ப்பவைகளும் ஒரு மனிதரை நம் மனத்தில் வேறுவிதமாகப் படம்பிடித்துக்காட்டக்கூடிய சக்தி வாய்ந்தவை என்ற வகையிலும் சமூக அக்கறையுடன் தேசிய பிரச்சினை ஒன்றை முன்னெடுத்துச் சொன்ன வகையிலும் இக்கதை தனித்து நிற்கிறது. தன்னைத் தவிர இந்த வீட்டில் யாருமே இருக்கக்கூடாது என விருப்பப்டும் ஒரு ஜெயிலரின் விவரணைகளாகக் கதை நகர்ந்து செல்கிறது. ஆனால், அந்தக் கதாபாத்திரப் படைப்பின் படைப்பின் உண்மைநிலை நம் மனத்தைவிட்டு நகர மறுக்கிறது.


ஒரு வானம் பல விண்மீன்கள் – மோகன்ராஜ்


மனிதன் தன்னைச் சுற்றி நடப்பனவற்றை ஒரு நுண்ணியப் பார்வையோடு பார்க்கும்போதுதான் வாழ்வின் சூத்திரம் அவனுக்குப் புரியும் என்பதை உணரவைக்கும் கதை. அதை உணர்த்த மேற்கொண்ட கதையாடலும் சொல்லாடல்களும் கதைக்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றன. நல்ல மொழி நடையும் மொழி வனப்பும் அந்த மொழியினூடே ஒரு புனைவையும் வாசிக்கும்போது மனமெல்லாம் நிறைந்து நிற்கிறது புனைவின் வாசம்.



பூனைக்கண் – கணேஷ்பாபு


காதலிக்கும்போது ஏற்படும் ஊடலையும் கூடலையும் மிகவும் யதார்த்தமான நடையில் பல்வேறு உவமைகளின் துணையோடு சொல்லிச் செல்கிறது கதை. எந்தவித மொழித்தடையும் இல்லாமல் கதையுனூடே காணும் காட்சிகளைக் காட்சிப்படுத்தும் விதமும் வர்ணனைகளும் கதைக்கு மேலும் அழகைச் சேர்க்கின்றன.


பித்துக்குளி மாமா – ரமா சுரேஷ்


குழந்தை வளர்ப்பியலில் ஒரு பகுதியைக் கதை நமக்கு உணர்த்துகிறது. கதைக்கான நிகழ்வாடல்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதால் கதையோடு பயணிப்பது எளிதாக இருக்கிறது. இதைத்தான் சொல்லப்போகிறோம் என்ற தெளிவு கதாசிரியருக்கு இருப்பதால் கதை நிதானமாக நிறைவடைகிறது.


வயிற்றுவலி வரவைப்பது எப்படி? – ராம் சந்தர்


மெலிதானதொரு நகைச்சுவையுணர்வுடன் கூடிய கதை. ஒரு மாணவனின் போக்கில் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான நடையுடன் செல்கிறது. ஜாலியாக வாசிக்கக்கூடிய கதை. அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுப்பவர்களுக்கு இக்கதை நல்லதோர் உத்தியைச் சொல்லித் தருகிறது.


வா  வா  வா – மகேஷ்குமார்


மனோவியல் தொடர்பான கதை. படித்து முடித்தபிறகும் மீண்டும் பல முறை படித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும் தன்மையிலான ஒரு கதை. நவீன புனைவாக்கத்தில் சில படைப்புகள் புரிந்தும் புரியாமலும் இருக்கும். அத்தகைய கதைகளில் இக்கதையும் ஒன்று

.
அம்மாவென்ற நான் – கிருத்திகா


ஒரு பெண்ணின் நிஜ அடையாளத்தைத் தேடும் கதை. வாழ்க்கையின் சுழற்சியில் ஒவ்வொரு மனிதனும் தன் சுயத்தை இழந்து வேறொன்றாக மாறிவிடும் போக்கை இக்கதை விவரித்துச் செல்கிறது. சிங்கப்பூரின் கல்விச் சூழலில், தங்கள் பிள்ளைகளைக் குறிப்பிட்ட தொடக்கப்பள்ளியில் சேர்ப்பதற்காகப் பள்ளியில் குறிப்பிட்ட சில மணித்துளிகள் பெற்றோர்கள் சேவை செய்யவேண்டிய ஒரு கட்டாய சூழலையும் இக்கதைப் பதிவு செய்துள்ளது.


மண்குதிரைகள் – மோகன்ராஜ்

அன்றைய சிங்கப்பூரின் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. சிறுவயது பெண் குழந்தை தன் தம்பியின்மேல் கொண்ட பாசத்தையும் பிள்ளைகளுக்கே உரிய அந்தப் பொறாமை குணத்தையும் ஒரு சேர படைத்துக் கதை முன்னகர்ந்து செல்கிறது. மனத்திற்குள் கொஞ்சம் நெகிழ்வையும் ஏற்படுத்துகிறது. தொன்மக் கூறுகளுடன் கூடிய இயல்பான மொழி நடை கதையின் பலம்.


பச்சைப் பங்களா – பிரேமா மகாலிங்கம்


காற்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள மாணவன் ஒருவனுக்கு ஏற்படும் ஓர் அமானுஷ்ய அனுபவத்தைப் பற்றிப் பேசும் கதை. படிக்கும்போதே இப்படித்தான் முடியும் என ஊகிக்கவைக்கும் கதையோட்டம் ஆற்றொழுக்கான நடையிலிருக்கிறது.


ஏமாற்று – மகேஷ்குமார்


முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்ற பாணியிலான கதை. சுவாரஸ்யமாக விறுவிறுப்பாக நகரும் விதம் வாசிப்பாளனைத் தன்வசம் ஈர்க்கும் விதமான படைப்பாக்கம். வெகுசன இதழ் சார்ந்த பார்வையிலிருந்து எழுதப்பட்ட கதையாக  இருக்கிறது.


ஒரு கிளினிக்கின் காத்திருப்பு அறை – பாலு மணிமாறன்


ஒரு நம்பிக்கையை மையம்படுத்திச் சொல்லும் கதை, மிகவும் இயல்பான போக்கில் அந்த நம்பிக்கையைப் படிப்பவர் மனத்திலும் மிகவும் நேர்த்தியாக ஏற்றிவைத்து நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒளிந்திருக்கும் அவரவர் சார்ந்த நம்பிக்கையை உரசிச்  செல்கிறது. எல்லாவற்றிற்கும் நாமும் நம் மனமும்தான் காரணம். இதனால்தான் நம் முன்னோர்கள், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றும் கவியரசு கண்ணதாசன், மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்றும் எழுதி வைத்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.


சந்திரன் கோப்பிக்கடை – பாலு மணிமாறன்


புதுமையான கதைக்கரு. மனித வாழ்வியலைப் பற்றி மிகவும் அழகாக எடுத்தியம்பும் கதை. மனிதன் ஏன் நல்லவனாக வாழ வேண்டும் என்பதற்கு மிகவும் யதார்த்தமான காட்சிப் பதிவுகள் கதை நெடுகப் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மனித நேயத்தை உசுப்பும் கதை. பாத்திரப் படைப்பின் நேர்மை நமக்கான வாழ்வையும் அதற்கான பாதையையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம் என்ற உண்மையை வாசக மனங்களில் மிக இயல்பாகப் பதிவு செய்கிறது.


அப்பாவின் படகுஎம்.சேகர்


1960 களில் சிங்கப்பூரின் மீன்பிடிக் கிராமம் ஒன்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம். இக்கதை ஒரு மீனவ மகனின் போக்கில் கதை பின்னப்பட்டு தந்தை, தாய், மகன் என உணர்ச்சிக் குவியலோடு வாசகர் தளத்தில் ஒரு நெகிழ்வை உருவாக்குகிறது. தந்தைக்கும் தனயனுக்கும் இருக்கும் அகவயச் சிக்கலை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. அன்றைய சிங்கப்பூரின் மீன் பிடிக்கும் கிராம மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர்களின் குடும்ப உறவு முறைகளில் விரியும் சிக்கல்களை மிகவும் இயல்பாக இக்கதை நம்  மீள்பார்வைக்குக் கொண்டுவந்துள்ளது. உயிரினும் மேலாய் தன் தொழிலை நேசிக்கும் அப்பா, அவரின் அத்தனை உழைப்பும் ஊராரின் பொறுப்பற்ற போக்கால் வீணாகிப்போவதைக் கண்டு கேட்கத் துணிவின்றி பொருமும் அம்மா, அப்பாவின் உழைப்பு விரயமாவதைத் தாளமுடியாத கதைசொல்லி எனக் கதாபாத்திரப் படைப்புகள் மிகவும் நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்டுப் புனையப்பட்டுள்ளது. 2018 இன் சிங்கப்பூரின் வாசிப்பு இயக்கத்தை ஒட்டி, இக்கதை நாடக வடிவமாகச் சிங்கப்பூர் வானொலியான ஒலி 96.8 இல் ஒலிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தொகுப்பிலுள்ள கதைகளை வாசகர்கள் முழுமையான வாசிப்புக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே கதைகளைப் பற்றி நான் அதிகமாகக் கூறவில்லை. எல்லா கதைகளையும் அலசி ஆராய்ந்துவிட்டால் வாசகனின் சிந்தனைச் சிறகுகளை வெட்டிவிட்டுப் பறக்க விடுவதற்கு ஒப்பாகும். 


இத்தொகுப்பிலுள்ள கதைகளை வாசித்து, நமது நாட்டின் மூத்த எழுத்தாளர் திரு. சை.பீர்முகம்மது,


இந்தக் கதைகள் சிங்கப்பூரின் இன்றைய வாழ்க்கையைச் சொல்கின்றன. இவை சிங்கப்பூர் மண்ணின் கதைகள். மானுடம் முழுவதையும் நேசிக்கவும் பேதமற்ற உலகை மகா தரிசனம் செய்யவும் இலக்கியம் உதவும். அதில், சிங்கையின் பங்கும் இருக்குமென்ற நம்பிக்கையை இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்தபொழுது உணர்ந்தேன்

எனப் பதிவிட்டிருக்கிறார்.


வெறுமனே செய்திக்கோர்வையாக அல்லது சொற்களின் குவியல்களாகச் சம்பவ விவரிப்பாக நின்றுவிடாமல் காட்சிப்படுத்துதலாக உணர்த்தும் முறையில் மன உணர்வுகளைக் கடத்தும் படைப்புகளாகத் தமிழ்ப் புனைகதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. 


எஸ். ராமகிருஷ்ணன், ‘கதை எந்த அனுபவத்தைச் சொல்கிறதோ அந்த அனுபவத்திற்குக் கொஞ்சமும் பரிச்சயப்படாத வாசகனுக்கும் அது புரிவதோடு அவனைப் பாதிப்பதாகவும் இருக்கவேண்டும். என்கிறார். பிரபஞ்சனும்,’கதை என்பது எழுதுவது அல்ல! வாழ்வது என்கிறார். எனவே இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் எத்தகைய தன்மைவாய்ந்தது என்பதை வாய்ப்புக் கிடைத்தால் நீங்களே வாசித்து உணர்ந்து கொள்ளலாம்.


சிறந்த ஆற்றல் கொண்ட அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வழிகாட்டி, ஊக்குவித்து, பரிசும் புகழும் அளித்துச் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றும் தங்கமீன் வாசகர் வட்டத்திற்கும் அதன் அமைப்பாளர் திரு. பாலு மணிமாறன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் என்ற வகையில் என் சகாக்களுக்குக் கிடைக்கும் பாராட்டுக்காக நானும் பெருமிதம் கொள்கிறேன்.

- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக