வியாழன், 3 அக்டோபர், 2019வாங்க வாசிக்கலாம் (5) – எம். சேகர்
மக்கள் ஓசை (28-7-19)

இவன் நட்ட
ரப்பர் மரங்களெல்லாம்
நிமிர்ந்து விட்டன
இவன்
நடும்போது
குனிந்தவன்தான்
இன்னும்
நிமிரவேயில்லை


இந்த வரிகளை வாசித்தாலே நமக்கு ஒருவர்தான் நினைவிற்கு வருவார். இந்த வரிகள்தான் அவருக்கான அடையாளம். இந்த வாரம் வாங்க வாசிக்கலாம் தொடரில் இவரின் அண்மையை சிறுகதைத் தொகுப்போடு உங்களோடு உறவாட வருகிறேன். சிறுகதை, கவிதை, நாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் எனப் பன்முகப்  படைப்பளாராத் திகழ்ந்து வருபவர். மலேசிய இலக்கியப் படைப்புகளை மேலும் முன்னகர்ந்த தொடர்ந்து ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருப்பவர். எழுதத் தொடங்கிய காலத்தில் அன்றைய மூத்த தலைமுறை எழுத்தைச் சார்ந்து படைப்புகளைக் கொடுத்தவர், யதார்த்தக் கதையாடலிலிருந்து முன்னகர்ந்து நவீன கதையாடலில் தன் தடங்களைப் பதித்துக்கொண்டிருக்கிறார் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. கோ. புண்ணியவான். இவரின் கதைகள் பெரும்பாலும்,  விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை  நம் மண் கமழும் வகையில் பதிவு செய்யும். இத்தகைய ஒரு வகைமையைச் சார்ந்த படைப்புகளே இந்தத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன.


கனவு முகம் (2018) – கோ. புண்ணியவான்
இன்னமும் நம் சமூகத்தில் தொடர்ச் சிக்கலைக் கொடுத்துவரும் சிவப்பு அடையாள அட்டையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் ஒரு வாழ்க்கையின் மறுநடவு இக்கதை. இப்போதிருக்கும் புதிய தலைமுறைக்குச் சிவப்பு அடையாள அட்டையா? என்ன அது? அதனால் என்ன சிக்கல்? என்பதும்கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் வலிகளும் வேதனைகளும் அதனால் பட்ட இன்னல்களும் ஏளனப்பேச்சுகளும் புரியும். சிவப்பு அடையாள அட்டைப்  பிரச்சினை இன்னமும் அவ்வளவு சுலபத்தில் நாம் கடந்து செல்ல முடியாத ஒன்றாகத்தான் இன்றளவும் இருக்கிறது. நம்மை ஆள்பவர்கள் மாறலாம்; ஆட்சியும் மாறலாம்; ஆனால், நமக்கான பிரச்சினைகள் மட்டும் என்றும் மாறுவதாயில்லை. அதைக் கவனிப்பதற்கும் அதைப் பற்றி உரிய இடத்தில் பேசுவதற்கும் நமக்காக யாருமில்லை என்பதே இங்கு வேதனைக்குரிய விடயமாகும்.


அன்றாட சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் பசியை மட்டும் புசித்து வாழ்ந்த அல்லது வாழும் ஒரு தலைமுறையின் பதிவாகவும் வேலைக்காகக் கிராணிமார்களின் முன்னும் அலுவலகர்களின் முன்னும் ஏன் பெட்டிசன் எழுதுபவன் முன்னும்கூடக் கூனிக்குறுகிக் கைக்கட்டி நிற்கும் வேலையாவின் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டு, சிவப்பு அடையாள அட்டையை வைத்துள்ள நம் தோட்டப் பாட்டாளிகளின் வாழ்வாதாரப் போராட்டமும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் மிகவும் இயல்பு நிலையில் ஒட்டுமொத்த சமூகத்தின் இயலாமையாக இக்கதையினூடே எடுத்தாளப்பட்டுள்ளது.


சாலை நெளியும் பாம்பைப்போல படுத்துக் கிடந்தது;
இலைகளின் நிழல் தேம்பல்களாகச் சாலையிலும் ரப்பர்க்காட்டிலும் அசைந்து கிடந்தது;
கோரைப்  பாயைப்போல சுருண்டுகொண்டது;
உடைந்து மறையும் நுரைக் குமிழி வாழ்க்கை;
அம்மைபோட்டு ஆறிய வடுக்களாய்;
போன்ற உவமானங்கள் கதை மையத்துக்கும் கதையாடல் சூழலுக்கும் நம்மை நெருக்கிச் செல்ல வைக்கின்றன.


நதியொழுக்கு


அந்த நதி இக்கதையில் அவளுக்கான ஓர் குறியீடாக நான் பார்க்கிறேன். அவளைப்பற்றி பேச எத்தனிக்கும்போதெல்லாம் அதைத் தவிர்த்து, பேச்சை வேறு திசைக்குத் திருப்பும் ஒரு நண்பனின் கதாபாத்திரம். அவனுக்கும் அவளுக்குமான உறவு என்ன என்பதையும் நண்பனிடம் அவளைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் இருப்பதும் அல்லது இல்லாததுபோல் காட்டிக் கொள்வதும் கதையின் மையத்தையொட்டிய நமது புரிதலை விரித்துச் செல்லுகிறது. அது அப்படித்தான் அல்லது இது இப்படித்தான் என வாசக யூகத்திற்குக் கதையாடல் மிகச் சிறப்பாக நகர்த்தப்பட்டுள்ளது. நுண்ணிய ஒரு காதல் மாயையோடு சமகால சமூக பிரச்சினைகளையும் இக்கதையில் வெளிப்படுத்த கதாசிரியர் அதிகச் சிரத்தை எடுத்துள்ளார்.


பெரும்பாலும் நாம் அறிந்த அன்றைய ரப்பர்த் தோட்டம், தோட்டத் துண்டாடலால் புறம்போக்கு நிலங்களுக்குப் புலம்பெயர்ந்த நம்மினத்தின் வாழ்வியல் நிலங்களின் இன்றைய நிலையினை இக்கதை மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளது. இன்று, நாம் வாழ்ந்த அந்த இடங்களுக்குச் சென்றால், அதன் மரபார்ந்த அடையாளங்களையெல்லாம் தொலைத்து நிற்பதைத்தான் காணமுடிகிறது. இக்கதையை வாசித்தபோது பூச்சோங்கில் நான் வாழ்ந்த மணல்மேடுதான் நினைவை எட்டிப்பார்த்தது. 1960களில் தமிழ் மக்கள் குடியேறிய பகுதி, அப்போது வெறும் 54 வீடுகளாக இருந்து 2000 களில் 400 வீடுகளுக்குமேல் தமிழ்க் குடும்பங்களைக் கொண்ட மணல்மேடு அரசியல் சுயலாபங்களுக்காகக் காவு வாங்கப்பட்டது. மணல்மேட்டை ஒட்டி 80களில் உருவான சீனக் கம்பத்துக்கெல்லாம் நிலப்பட்ட அங்கேயே கிடைத்துவிட, தமிழ்க் குடும்பங்கள் மட்டும் நிலப்பட்டா வழங்கப்படாமல் வேறு நிலத்துக்கு மாற்றப்பட்ட அவலமான நிலை, இக்கதையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது.


ஒரு நல்ல கதை என்பது நம் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒன்றை மீள்பார்வைக்கு மீண்டும் கொண்டுவரும் தன்மை கொண்டதாக இருக்கும் என்பார்கள். அவ்வகையில் இந்தக் கதையை நல்ல கதை வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.


கதையின் இறுதி வரிகள்,
அப்போதிருந்தே ஆறு தன் முகவரியை எழக்க ஆரம்பிச்சு இன்னிக்கி அது இருந்த வரலாறே இல்லாமல் போச்சு’, என்று கைகளைத் தூக்கி விரித்து,
எல்லாம் போச்சு
என ஒருவர் கடந்துபோவதாக முடித்திருப்பது எதன் குறியீடுடாக இருக்கும் என்பதை வாசகப் பார்வைக்கே விட்டுவிட்டாலும் அதனூடே கோரமாக ஒலித்துக் கொண்டிருப்பது தமிழினத்துக்கான எச்சரிக்கைக் குரல்தான்.


கரகம்


கோயில் திருவிழா தொடர்பான கூட்டம், சாமி ஊர்வலம், கரகாட்டம் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் படைப்பாளரின் கதைச்சொல்லும் திறனை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமூகத்தில் தொன்றுதொட்டுவரும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் வழக்கமான தோட்டத் திருவிழாவின் களேபரங்கலும் கதையினூடே மிக இயல்பாகப்  பதிவு செய்யப்பட்டு, வாசகனின் மீள்பார்வைக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் நாம் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. ஒரு தலைமுறை மதுபானங்களுக்கு (சம்சு) அடிமையாகிக் கொத்துக் கொத்தாக மடிந்த வரலாறும் இந்த நாட்டில் நமக்கு இருக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் நாம் மறந்திருக்க முடியாது. ஆனால், இன்றோ பதின்ம வயதினர்கூட (ஆண் மாணவர்களோடு பெண் மாணவிகளும்) பள்ளியில் பயிலும் காலத்திலேயே மதுபானப் புட்டிகளுடன் புலனங்களிலும் ஃபேஸ் புக்கிலும் பதிவுசெய்து கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு சூழலும் உருவாகியிருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. எதார்த்தமாகக் கால் தடுக்கித் தடுமாறினாலும் நம்மைப் பார்த்து, சுடா மபோக்லா என்று மற்ற இனத்தவர் கூறும் நிலை இங்கு உருவாகி வெகுகாலமாகிவிட்டது. நம்மேல் சுமத்தப்பட்ட அல்லது குத்தப்பட்ட அந்த முத்திரைக்கு (லேபல்’) இன்னமும் நம்மினம் உயிரூட்டிக்கொண்டிருப்பதை இக்கதையின் காட்சிகளுடன் மிக இயல்பாகப் பதிவுசெய்து, போதையில் மிதக்கும் ஒரு பட்டாளி வர்க்கத்தின் வாயிலாகக் கதையை நகர்த்திச் சென்றுள்ளார் கோ. புண்ணியவான்.


அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு பெண், மலேசியாவுல கள்ளச்சாரயம் காச்சுற மாதிரியில இருக்கான் என்ற ஒரு வசனத்திற்கு இங்கு எழுந்த கண்டனக் குரல்கள் அதிகம். ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டதாக எங்கும் பேச்சுகள்.....புலனங்களில் குரல் பதிவுகள்......ஆனால், இங்கு இல்லாததை எதுவும் அப்பெண்மனி சொல்லவில்லை என்பது நியாயமான அனைவருக்கும் தெரியும். கபாலி திரைப் படத்தில் நம்மைக் கேவலப்படுத்தியதைவிட இது ஒரு பெரிய விஷயமும் அல்ல. டிசம்பரில் மோற்கொண்ட தமிழகப் பயணத்தின்போது, சென்னையில் ஓர் ஆட்டோ ஓட்டுனர்,


எந்த ஊருண்ண
மலேசியா
கபாலீ ஊரா 

என்று சொல்லி நக்கலாகச் சிரித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. மலேசியன் என்ற அடையாளம் போய் கபாலியூர் நமக்குப் புதிய அடையாளமாகியிருக்கிறது.


விசில்


உடல் செயலிழந்த ஒரு தாயின் மரண வாக்குமூலம் இக்கதை. பெற்ற பிள்ளைகள் இருந்தும் ஒரு நாள் இரவில் கூப்பிட்ட குரலுக்கு (மன்னிக்கவும் விசில் சத்தத்திற்கு) யாரும் வராததால் ஏக்கத்துடன் தொய்ந்துபோன ஓர் ஆன்மாவின் கதை. அனைத்தும் தெரிந்திருந்தும் ஒன்றும் செய்ய இயலாத அண்டைவீட்டாரின் இயலாமை கதைசொல்லியின்மூலம் வெளிப்பட்டுள்ளது. உயிர் வாழ்வதற்காக அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் வைத்துக்கொண்டு ஊசாலாடிக்கொண்டிருக்கும் மனித வர்க்கத்தையும் அனைத்தும் இருந்தும் மனிதத்தை இழந்து வாழும் மனித வர்க்கத்தையும் இக்கதையின் கதாபாத்திர அமைப்புகளில் பதிவு செய்துள்ளார் கோ. புண்ணியவான்.


கனவு முகம்


அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, அம்மாவின் வாழ்க்கையைப் பின்னி கதையாடல் தொடர்கிறது. பெரும்பாலோர் இயல்பாகக் கடந்துபோகும் ஒரு மரணம், ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் மாறாத மாற்றத்துடன் நிலைத்துவிடுவதை இக்கதையின்வழி புனைந்திருக்கிறார் கதாசிரியர். அப்பா இறந்த பிறகும் கூட அவருக்காகக் கேட் கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கும் அம்மா. கணவன் தன்னுடனே இன்றும் இருப்பதாக வாழும் அம்மா. மரணத்திற்குப் பிறகும் கணவனின் இருப்பில் வாழும் ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர்வு சார்ந்த நிலையிலேயே அறிந்துகொள்ள முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டில் இக்கதை தன் நிறைவை எய்துகிறது.


என்னைக் கொலை செய்பவர்கள்


மனைவியை இழந்த ஒரு கணவனைப் பற்றிய கதை, மகனின் போக்கில் சொல்லப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தைப் பற்றியும் பெண்ணுரிமைகளைப் பற்றியும் கேள்விகளை முன்னெடுக்காமல் சொல்லப்படும் கதை, ஒத்த சிந்தனையுள்ள வாசகனின் குற்றவுணர்ச்சிகளையும் எழுப்பிவிடக்கூடிய தன்மை வாய்ந்தது. இனி வரும் காலங்களில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் செப்பனிட்டுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் கதையாகவும் இருக்கிறது.


திருமணம் என்ற பந்தத்தில் ஆணுடன் இணையும் ஒரு பெண், குடும்பத் தலைமை மற்றும்  பொருளாதாரச் சக்தியாக விளங்கும் ஆணின் அதிகார மனநிலையில் எப்படியெல்லாம் அவமானத்தின் விளிம்பின் எல்லைக்கே நகர்த்தப்படுகிறாள் என்பதைப் பதிவு செய்யும் கதை, தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட மனைவி மற்றும் உறவுக்காரப் பெண் செல்வி இருவரின் மரணத்திற்குப் பின் அந்த ஆண் மனத்தின் சலனங்கள், அவனை மனப்பிறழ்வுக்கு இட்டுச் செல்லும் காட்சிகள் எனக் கதை ஓர் அனுபவமொழியாகவும் சிறந்து விளங்குகிறது. ஆண் மையச் சமூகம் சில கருத்தாக்கங்களைப் பெண்களின் மீது தினித்துக்கொண்டிருப்பது இன்றளவும் தொடரும் அவலம் என்பதைக் கதை மறைமுகமாகச் சாடுகிறது.


இக்கதையின் இன்னுமொரு தனிச்சிறப்பு என்னவெனில் கதை நெடுகிலும் ஏராளமான உவமைகள் மிகவும் நயம்பட பயன்படுத்தப்பட்டிருப்பதேயாகும்.


வழித்தடம்


மலேசியச் சூழலில் போலீஸ் விசாரணைகளில் நம்மின இளையர்களுக்கு ஏற்படும் நிலைமையையும் இடர்களையும் அதனால் ஏற்படும் தனிமனித வாழ்வின் முரண்களையும் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது இச்சிறுகதை.


காவல் நிலையத்தின் சூழலும் அங்கு நடக்கும் விசாரணைகளின் எதிர்மறையான போக்குகளையும் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். இது போன்ற கதைப் பதிவுகள், இத்தகைய சூழலில் நம் சமூகத்தின் செயல்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் நாம் கூர்ந்து கவனிக்க ஏதுவாக இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.


கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லாடல்கள் மிகவும் அடர்த்தியாகவும் இறுக்கமாகவும் அமைந்து எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு ஏற்ப எடுத்தியம்பப்பட்டிருக்கிறது. லோக்கப்பின் சூழலை வர்ணிக்கும் அந்த எழுத்து, அந்த இடத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது. வாசிக்கும்போதே மூத்திர வாடையும் மல வாடையும் நம் மூக்கின்மேல் வந்து உட்கார்ந்துகொள்கிறது. 


தாய்மை


மனைவியின் சொல்கேட்டு முதியோர் இல்லத்தில் தன் தாயை விட்டுவிட்டு வீடு நோக்கிச் செல்லும் வழியில் ஒரு நியாயமான மகனுக்கு ஏற்படும் மன உணர்வுகளோடும் அம்மாவின் பாச அலைகளோடும் கதை மௌனமாக நடைபயில்கிறது. தாய்மையின் அன்பும் அது தம் பிள்ளைகளுக்காக எதையும் செய்து தன்னைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து பின், அனைத்தையும் இழந்து எதுவும் அறியாமல் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப்போல, பிள்ளையின் காலடி ஓசையின் அதிர்வுகளிலும்  அவனின் நிழலின் இருளையும் வைத்தே மகன் வருவதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்துகொள்ளும் அந்தப்பாசம்; அந்தத் தாய்மை; அதற்கு நாம் காட்டப்போகும் நன்றிக்கடன்தான் என்ன? கதையில் தாய்மையின் தியாகத்தை அதன் உணர்வுமொழிகளை மிக யதார்த்தமான சம்பவங்களோடு தவழவிட்டிருப்பது கதையின் மையத்துக்கு இன்னும் கனத்தைக் கூட்டியுள்ளது.


எம்ஜியார்


கலைஞர்களின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிக்கொண்டு திரியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் கலை கலை என் கலைக்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் இக்கதையின்வழி அடையாளப் படுத்தியுள்ளார் கதாசிரியர். இன்றும் ஊருக்குப்  பல எமஜியார்கள் பல கலைஞர்கள் இருந்து மக்களை மகிழ்வித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதே இக்கதை முன்னெடுக்கும்  கேள்வி. கசப்பான ஓர் அனுபவத்தோடு இக்கதையோடு ஓர் எம்ஜியாரை நாம் இழந்துவிடுகிறோம்.


சிறகிரண்டு வேண்டும் என்ற கதை தேனிலவுக்குச் சென்றிருந்த மூன்றாவது நாளிலேயே நீர்வீழ்ச்சியில் குப்புற விழுந்து கோமாவிற்குச் சென்றுவிட்ட கணவன் ரமேஷ், இனி சொல்வதற்கு எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொல்ல, தன்மீது மிகவும் அன்போடும் கரிசனத்தோடும் நடந்துகொள்ளும் கணவனின் நண்பன் குமரன்மீது அவள் மனம் நாடிப்போவதையும், அப்படி நடந்தாலும் எதுவும் தப்பில்லையே என்ற அவள் மன ஓட்டத்தையும் மன உறுதியையும் ஒரு பெண்ணின் அக உணர்வுகளைப் புறவயச் சம்பவங்களின் காரணகாரியங்களோடு கதை பதிவிட்டுச் செல்கிறது.

ஏதோஒரு காரணத்தினால் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழும் ஒரு கணவனின் கதை இந்த நூலாம்படை. குழந்தையின் அன்புக்கு ஏங்கும் ஓர் அப்பாவின் உணர்வுகளை அவனின் அப்பாவின் உணர்வு வெளிப்பாட்டுகளின் மூலம் உணர்த்திச் செல்லும் கதைப்போக்கு இறுதியில் மகனின் உணர்வலைகளாக மாறி கதை நிறைவு பெறுகிறது. 


தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய கல்விச் சூழலைச் சாடும் கதை சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. கதை முழுக்க உவமை நயங்களுடன் சமகால கல்விச் சூழலோடு கட்டமைக்கப்பட்டுள்ளது.


தொடுதூரம் என்ற கதை கட்டியவள் இருக்கும்போது இன்னொருத்தியை மணமுடித்து அவளோடு இரண்டு நாள்களும் முதல் மனைவியோடு ஐந்து நாள்களும் குடும்பம் நடத்தும் மகனைப் பெற்றவர்களின் மன உணர்வுகளின் போராட்டத்தோடு நம்மோடு உறவாடுகிறது. மகனின் இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் தாத்தா பாட்டியின் மனம் அக்குழந்தையையும் எடுத்துக் கொஞ்ச வேண்டும் என ஏக்கம் கொள்வதும் மூத்த மருமகளுக்குத் தெரிந்தால் அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தவிப்பதும் கதையின் உயிராகத் துடிக்கிறது.


விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்க்கையை மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளது குப்புச்சியும் கோழிகளும் என்ற கதை. இதன் கதையாடலும் சம்பவக் கோர்வைகளும் இது கதையல்ல நிஜம் என வாசக நெஞ்சங்களை அறைந்து செல்லும் தன்மை வாய்ந்தவையாகும். இக்கதை அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்தும் பார்க்காமல் கடந்துபோகும் ஒரு வாழ்க்கையின் பதிவு. 


சுமை என்ற கதை வழக்கமான ஒரு தமிழ்ப்பள்ளியின் கதை. பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான தயார் நிலையில் தலைமையாசிரியருக்கு இருக்கும் அந்தச் சுமைகளை நம்மீது ஏற்றி வைத்துவிட்டுச் செல்லும் கதைப்போக்கு.


இத்தொகுப்பில் உள்ள கதைகள் நமக்கான கதைகளாக இருக்கின்றன. நமது வாழ்க்கைப் பதிவுகளாக இருக்கின்றன. வருங்காலச் சமூகத்திற்கான வாழ்க்கைப் பாடங்களாகவும் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் இக்கதைகளுக்கு இருக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்கள். உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்ப்பதைப் போன்று உணர்வீர்கள்.

- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக