வெள்ளி, 19 ஜூன், 2020

கதம்பம் 2.0 - ஒரு பார்வை
சிறுகதைத் தொகுப்பு : கதம்பம் 2.0
தொகுப்பு   :         திரு. மில்லத் அஹ்மது
வெளியீடு   :         உயிர்மெய் பதிப்பகம், சிங்கப்பூர்
பதிப்பு      :         முதற்பதிப்பு 2019


திரு. மில்லத் அஹ்மது தொகுப்பில் வந்த கதம்பம் 2.0 சிறுகதைத் தொகுப்பு (2019) சிங்கப்பூரின் சிறுகதைத் தொகுப்பு நூல்களில்  அண்மைய வரவாக இருக்கிறது. 2017 இல் சிங்கப்பூர்க் கதம்பம்  என்ற சிறுகதைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இது வெளிவந்திருக்கிறது. சிங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கான தொடர்முன்னெடுப்புக்களில் இத்தொகுப்பும் தனக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதில் மகிழ்ச்சி.

ஒரு சமுதாயத்தின் விருப்பு வெறுப்பு நம்பிக்கை முதலியவற்றை வரையறுத்துப் பண்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே எனக் கூறுகிறார் டாக்டர் மு.வரதராசனார். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே முழுக்க முழுக்க சிங்கப்பூர்ச் சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது என்றாலும், பல கதைகள் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைக்குள் நுழையாமல் அண்மைய குடியேறிகளின் கதைகளாக, அவர்களின் சிங்கப்பூர் அனுபவங்களாக அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களாகவே இருக்கின்றன. சில கதைகளில் சிங்கப்பூர்க் கதைகளாக அடையாளம் காட்டவேண்டும் என்பதற்காகவே சீன, மலாய் கதாபாத்திரங்களையும் சிங்கப்பூரில் உள்ள இடங்களின் பெயர்களையும் இணைத்துக்கொள்ளும் செயற்கைத்தனமும் சேர்ந்துகொள்கிறது. சிங்கப்பூர் மக்களுக்கென்று ஒரு வாழ்க்கை மொழி இருக்கிறது. அந்த மொழியும் அந்தச்  சூழலும் கதைகளில் வருகின்றனபோதுதான் நிஜமான சிங்கப்பூர்க் கதைகளைக் காண இயலும். அட்டைப் பெட்டிகளையும் டின்களையும் காலையிலேயே எழுந்து சேகரித்துவரும் சீனத் தாத்தாக்களையும் பாட்டிகளையும் மட்டும் பார்க்காமல் அதே தொழிலைச் செய்யும் நமது தாத்தா பாட்டிகளின் மீதும் நமது பேனாக்கள் கவனம் செலுத்தட்டும். இனி கதைகளுக்குச் செல்வோம்.

தனிமை -  மணிமாலா மதியழகன்

சிங்கப்பூர்ச் சூழலுக்கான கதையாடலுடன் எழுதப்பட்ட கதை. சிங்கப்பூர் அடுக்குமாடி வீடுகளின் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் சமகால சிக்கலொன்றை எடுத்துக்கொண்டு அதை இயல்பாகப்  பதிவு செய்ய முனைந்துள்ளார் கதாசிரியர். சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில், பிள்ளைகள் பயிலும் பள்ளிகளின் அருகிலேயே வீடு வாங்க நினைக்கும் சிங்கப்பூர் வாசிகளின் மனநிலையையும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் சின்ன சின்ன மாற்றங்களும் அதனால் ஏற்படும் எதிர்பாராத சில பாதிப்புகளும் கதையின் மையமாக எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

புறவயமான கதை சொல்லலில் ஆங்காங்கே கட்டுரைக்கான மொழி வந்து விழுந்து விடுகிறது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெரியவரின் அகத்துக்குள் கதையை நுழைந்திருந்தால், கதை இன்னும் அழுத்தமாகப் பதிவாகியிருக்கும் என்பதை எனது பார்வையாக இங்கே முன் வைக்கிறேன். ஆள் கிட்டேயே நெருங்க முடியல. இதுல எப்படி அவரின் அகத்துக்குள் நுழையுறதுன்னு நீங்க மைண்ட் வோய்ஸா பேசுறதும் எனக்குக் கேட்கிறது. அந்தப் பெரியவரின் மனத்தோடு ஓர் உரையாடலை இக்கதை நிகழ்த்தியிருந்தால் இக்கதை இன்னும் பரவலாகப்  பேசப்படும் ஒரு சிறந்த கதையாக உருப்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆப்பிள் – மில்லத் அஹ்மது

சிங்கப்பூர்ச் சூழலில் புதியதொரு கதைகளத்தோடு எழுதப்பட்டுள்ள கதை. நவீன தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் கதையாகவும் இதைப் பார்க்கலாம். ஜூமான்ஜி போன்ற திரைப்படச் சாயலில் தமிழுக்கு வந்துள்ள ஒரு படைப்பாகவும் இக்கதையை நாம் அணுகலாம். அங்கதத் தன்மையுடன் நம் அகத்துக்குள்ளும் பதியம் போட்டு அமர்ந்திட முயற்சிக்கும் கதை. நவீன புனைகதையுலகில் மாய எதார்த்ததோடு கதை புனையும் தன்மை அதிகரித்துவரும் இன்றைய படைப்புப்போக்கு இக்கதையிலும் காணப்படுகிறது. இருப்பினும், கதைசொல்லல், கதையை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் இன்னமும் கவனத்தோடு கையாண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒற்றுப்பிழைகள் – பிரேமா மகாலிங்கம்

அம்மா, மகள் உறவைப்பற்றி பேசும் கதை. மகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் நிர்மலா. அம்மாவுக்காகத் தன் வாழ்க்கைகையே சீரழித்துக்கொண்ட சிநேகா. இப்படி இரு வரி கதைதான் இது. சிங்கப்பூர் வாழ் சூழலில் ஒற்றைப் பெற்றோர் அதிகரித்துக்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களைப் பற்றி வெளியிலிருந்து புறவயமான ஒரு பார்வை நமக்கு இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சிக்கல்களையும்  அகவெளிப்பாடுகளையும் எளிதில் நாம் அறிந்துகொள்ள இயலாது. அப்படி ஒரு சிக்கல்தான் இச்சிறுகதையில் மையச்சரடாக இருக்கிறது.

அன்பு அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அதே அன்பு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் புரிந்துணர்வோடு வாழ்வதாகவும் இருக்கவேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல் அவரவர் சூழ்நிலைக்கேற்ப ஒரு புரிதலையும் அதற்கான நியாயங்களையும் அவர்களாகவே கற்பித்துக் கொண்டால் பின்னால் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். உறவின் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளையும் இச்சிறுகதை யதார்த்தமான கதைச் சம்பவங்களோடு வெளிப்படுத்தியுள்ளது. கதையின் இடை இடையே கதாசிரியர் வந்து பேசிவிட்டுப் போவதைத் தவிர்த்து வாசக இடைவெளிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் கதை அதன் இயல்பில் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

தலைமுறை – மலையரசி

முந்தைய தலைமுறையின் கதையை இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச் செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கதை. இன்றைய தலைமுறைக்குத் தெரியாத நம் வரலாற்றுத் தடங்களுக்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்ற உண்மையை வலியுறுத்தும் கதையின் மையம் அதற்கான சம்பவக்கோர்வைகள் என கதை நகர்ந்தாலும் நிறைய வரலாற்றுச் செய்திகளை ஒரு சிறுகதையில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பதிவு செய்திருப்பது கதையின் நகர்ச்சியில் ஓர் அயர்வைக் கொடுக்கிறது. ஒரு கட்டுரைக்கான சில விஷயங்களையும் இக்கதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  மேலும், தாயும் மகளுக்குமான உரையாடல்கள் இயல்பாக அவர்களுக்கான ஒரு மொழியில் இருந்திருந்தால் கதை இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். இதில் வரும் உரையாடல்கள் கதையிலிருந்து அந்நியப்பட்டு இருக்கின்றன.

கதையைப் பொருத்தவரையில் நாவலுக்கான பரப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிறுகதைக்கு இது பொருத்தமாக இருக்காது. கதாசிரியர் நன்கு திட்டமிட்டு இந்தக் கதையைக் கட்டமைத்தால் சிங்கப்பூர்ச் சூழலை மையப்படுத்திய ஒரு நல்ல நாவலை உருவாக்கமுடியும்.

ரஜூலா முதல் டைகர் வரை – அழகு சுந்தரம்

நட்பின் உன்னதத்தை எடுத்துரைக்கும் கதை. ரஜூலா என்ற சொல் அன்றைய மலேசியா சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்றால் அது மிகையாகாது. சாகாவரம் பெற்ற அந்தச் சொல்லுக்கு உயிர்ப்புத் தன்மை இருக்கவே செய்யும் எனப் பதிவிடுகிறார் மலாக்கா முத்துக்கிருஷ்ணன். அந்த வகையில் இக்கதையின்மூலம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்துள்ளது அந்த எஸ் எஸ் ரஜூலா கப்பல்.
கதையின் வடிவமைப்புக் காட்சிப்படுத்துதல் என்ற உத்தியின்மூலம் மிக இயல்பாக நகர்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. முழுமையான ஒரு கதை என்றாலும்கூட, இன்றைய நவீன கதையின் சொல்லாக்கமும் படைப்பாக்கமும் இத்தகைய படைப்புகளைத் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டன என்பதையும் நம் புரிதலுக்குக் கொண்டு வருவது முக்கியமாகும். அந்தப்  புரிதல்களோடு நாம் தம்முடைய படைப்புகளை அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

மனிதன் என்பவன் – தமிழ்ச்செல்வி

மனத்தாலும் சொல்லாலும் அறத்தின் இயல்பு அடித்தளமாக இருந்தாலும், செயல் திறனில் தோன்றும் அறமே முதன்மையான அறமென கொள்ளப்படுகிறது. ஒருவரின் செயலுக்கு உதவாது வெறும் மனத்தாலும வாய்மையாலும் இருக்கும் அறத்திறனால்  யாருக்கும் அவ்வளவாக எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை. வள்ளுவரும் அறத்தின் செயல்மீதே அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் குறள்களைப் பாடியுள்ளார். அவ்வகையில் இக்கதை அறத்தையே முன்நிறுத்தி எழுதப்பட்டுள்ளது. மானுட வாழ்க்கையின் உண்மை அனுபவத்தையும் உளவியலைச் சரியாகப்  புரிந்துகொண்ட தனித்திறனையும் கொண்ட இரு கதாபாத்திரப் படைப்பும் அந்த அறத்தை மறுதலிக்கும் இன்றைய தலைமுறையின் கதாபாத்திரமும் இருதலைமுறையினருக்கும் இருக்கும் சில இடைவெளிகளையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை விழுமியங்களை அவர்கள் செய்யும் தொழிலும் பெற்றோர்களின்மீது அவர்கள் கொண்ட பக்தியையும் மரியாதையையும் இன்றைய தலைமுறை தொலைத்துக்கொண்டு வருவதையும் கதை எடுத்துரைக்கிறது. சிங்கப்பூர்ச் சூழலில் எளிய நடையில் மிகைப்படுத்தி எதையும் கூறாமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவிற்கு ஏற்ப புனையப்பட்ட கதையாக இருக்கிறது. கதையின் முடிவிலும் வாசக இடைவெளியோடு நிறைவுபெற்றும் வாசக மனத்தில் நிறைவுபெறாமல் இருப்பதும் கதை முடித்தலின் உத்தி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

தீராநதியின் சிற்றலை – வித்யா சுப்ரமணியன்

வித்யாவின் ‘தீராநதியின் சிற்றலை’ யின் இறுதி வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் நான் மீளவில்லை என்பதுதான் உண்மை. நல்ல ஒரு கதை வாசிக்கும்போது இன்னொரு நல்ல கதையை நம் நினைவுக்குக் கொண்டு வரும் என்பார்கள். அவ்வகையில் இந்தக் கதையின் இறுதி வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளை சு.வேணுகோபாலின், ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற சிறுகதையும் மலேசியப் பெண்ணிய எழுத்தாளரான வே.இராஜேஸ்வரியின் ‘குழந்தை இன்பம்’ என்ற சிறுகதையும் ஏற்படுத்தியிருந்தன.  இக்கதைகளின் இறுதி வரிகள் வாசிப்பவர்களை ஓர் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி அவர்களை உறைய வைத்துவிடும் தன்மை கொண்டவை. இப்படியெல்லாம் நாம் வாழும் நடப்பியல் வாழ்க்கை முறையில் நடந்துகொண்டு இருக்கிறதா? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு வெளியே சொல்லமுடியாத எண்ணற்ற ஜீவன்களைத்தான் நாம் இங்குத் தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட அதிர்வு அலைகளையும் மனித ஜீவனுக்குள் இருக்கும் மௌனங்களை வெளிப்படுத்தும் குரலாகவும்  உடைபடும் மௌனங்களாகவும் இன்றைய நவீன தமிழிலக்கியம் நேற்று இல்லாத ஒன்றை எழுத முயன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் வித்யாவின் தீராநதியின் சிற்றலையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். கதைசொல்லலிலும் கதையாடலிலும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மேகதூதம் – விஜி

விஜியின் ‘மேகதூதம்’ இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஓர் அறிவியல் கதை. இந்த ‘மேகதூதம்’ அளிக்கும் சாத்தியங்கள் எதிர்காலத்தில் நடப்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் சிங்கையில் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமாக உண்மையும்கூட. எதிர்கால நவீனமாக்கல் யதார்த்தவாதக் கதையாக இக்கதையை அணுகலாம். ஒரு புதிய அனுபவத்தையும் கதை சொல்லலில் உண்டாகும் நம்பகத் தன்மையும் மகிழ்ச்சியும் வேகமாக நகரும் கதைப் போக்கும் நனவிடையில் முனைந்து மெல்ல நிகழ்த்திப்போகும் கதையாடலின்  நெகிழ வைக்கும் காட்சிச் சித்திரமும் இந்தக் கதையை அதற்கு ஏற்ற களம், மொழி, நடை என்ற எல்லை மீறல் இல்லாமல் மிகவும் கவனமாக எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

அறிவியல் புனைகதையாக இருப்பதால் நிறைய இடங்களில் வருகின்ற அறிவியல் தொழில்நுட்பம் பல்லூடகங்கள் தொடர்பான ஆங்கிலச் சொல்லாக்கங்களுக்குப்  பின்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் வாசகர்களின் புரிதல்கள் இன்னும் விரைவாக நடந்தேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லையெனில் இக்கதையை வாசகர்கள் விரைவில் கடந்துபோய் விடும் அபாயமும் இங்கிருக்கிறது. இதுபோன்ற அறிவியல் சார்ந்த படைப்புகளைப் புனைவோர் இங்கு அதிகமில்லை. இதுபோன்ற கதைகளைப் படைப்பவர்களுக்குச் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத்தில் நல்ல எதிர்காலமும் உண்டு.
 
முரணியல் – பானு சுரேஷ்

சிங்கப்பூர்ச் சூழலில் இன, மத, மொழி வேறுபாடின்றி மக்கள் வாழும் சூழல் அமைந்திருந்தாலும் அனைவரும் அப்படி வாழ்வதில்லை, சிலர் இன்னமும் அண்டை வீட்டார்களுடன் ஒட்டாமல் தனித்து வாழ்ந்துகொண்டிருக்கிறனர் என்றக் கூற்றினை உணர்த்தும் கதை. சிங்கப்பூரர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வழக்கமான கதை. கதையாடலில் ஆங்காங்கே செயற்கைத்தனம் வந்து விழுந்து கதையின் நகர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது.

கதை, அதன் மையத்தை நோக்கி நகர்த்தப்படும்போது வழக்கமான ஒரு தீர்வை நோக்கி நகர்ந்தாலும் கதையின் கடைசி ஒரு பக்கம் மட்டும் மையத்திலிந்து தனித்து நிற்கிறது. ஒன்று மற்றொன்றோடு முரண்பட்டு நிற்பதைக் காட்டுவதற்கு இரண்டுக்கும் சம வாய்ப்பும் நிகரான சம்பவக்கோர்வைகளும் கொடுக்கப்பட்டிருந்தால் கதை சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி இயலவில்லை என்றால், கதைக்கருவிற்கு ஏற்ப இரண்டு வெவ்வேறு சிறுகதைகளை உருவாக்கியிருக்கலாம். தராசில் இரண்டு தட்டுகளிலும் சரிசமமாக இருந்தால்தான் தட்டுகள் ஒரே நேர்கோட்டில் நிற்கும். ஒன்றில் கூடுதலாகவும் மற்றொன்றில் குறைவாகவும் இருந்தால் அது நியாயமாகாது. இக்கதையும் அப்படித்தான். படைப்பாக்கத்தில் ஒரே பக்கமாக இறங்கி இருக்கிறது.

உற்றுழி – பிரதீபா

மாணவர்களுக்கும் தனித்து வாழும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை தரும் முன்மாதிரிக்கதை. எந்தத் தடங்கலும் இல்லாமல் பயணிக்க வைக்கிற கதையின் எளிய நடை.  சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கும் கதை சொல்முறை என பலவற்றிலும் கவனம் செலுத்தியதுபோல் கதையில் வரும் சம்பவங்களுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். கதை சொல்லல் மிகவும் மேலோட்டமாக அமைக்கப்பட்டு கதைக்குள் நாம் நுழைவதற்குள் அடுத்தடுத்த செய்திகளைத் தந்து கதை நம்மைவிட்டு நகர்ந்துவிடுகிறது. இதுபோன்ற சாயலில் நிறைய கதைகள் எழுதப்பட்டிருப்பதால் இத்தகைய கதைகளைப் படைப்பாக்கம் செய்யும்போது இதுவரை எழுதப்பட்ட கதைகளிலிருந்து இந்தக் கதையை எப்படி வேறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக வெளிப்படுத்துவது எனச் சிந்தித்து எழுதினால் கதை அடுத்தகட்ட நகர்வை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியிருக்கும்.

ஒற்றை நட்சத்திரம் – வினுதா கந்தகுமாரி

தனித்து வாழும் ஒரு பெண்ணின் கதையோட்டத்தில் சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை மிக இயல்பாகப் படம்பிடித்துக் காட்டும் கதை. நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்கள் கதையினூடே வந்து கதைக்கான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

சமூகத்தில் எழுதாத சட்டமிடப்பட்டுள்ள வரையறைகளின் ஆக்கிரமிப்பால் பெண்கள் பெரும்பான்மையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். கற்பு முதலான ஒழுக்க விதிகள் அனைத்தும் பெண்ணுக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளதால், அவற்றிலிருந்து சிறிதேனும் அசைந்து கொடுக்கக்கூட பெண்களுக்கு இச்சமூகம் இடமளிக்கவில்லை. அதே வேளையில் இப்பெண்களை ஒழுக்க நெறிகளிலிருந்து தவற வைக்க தன்னாலான அனைத்தையும் ஆண்சமூகம் செய்யவும் தவறுவதில்லை. பகுத்தறிவு கதாபாத்திரத்தின் பெண் என்பவள் தனது சக்தியையும் திறனையும் தானே அறிந்துகொண்டு அவள் எதிர்கொள்கின்ற சிக்கல்களிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வைக் கொடுக்கிறது. ஒரு சில கதாபாத்திர வருகை இவ்வுலகில் நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தத் தவறவில்லை.

பிரபஞ்சனின் அப்பாவின் வேஷ்டி போல் பகுத்தறிவுக்கு அம்மாவின் சேலை. அம்மாவின் சேலையை எடுத்து அவளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டபோது ஏதோ ஓர் இதம் அவளை அடைகாப்பதுபோல் உணர்ந்தாள் வாசிக்கும் நம்மை நெகிழவைக்கிறது.

மனித சமுதாயத்தில் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இது எல்லா காலங்களிலும் எல்லா சமூகங்களிலும் நிலவி வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். மனிதனின் வாழ்க்கை பல நிறுவனங்களோடு அவனை இணைத்திருந்தாலும், குடும்பமே அவனின் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. குடும்பமே சமூகம் உருவாக அடிப்படையாகவும் அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை இருக்கிறது. அந்தந்த வாழ்க்கைக்கான காரணகாரியங்களையும் அதற்கான விளக்கங்களையும் கதைகள் நம்மோடு பேசுகின்றன. சில கதைகள் நம்மைக் கதைகளுக்கு மிக அருகாமையில் அழைத்துச் செல்கின்றன. சில கதைகள் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கைக்  காட்டுகின்றன. சில கதைகள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. எது எப்படியினும் அனைத்தும் சிங்கப்பூர்க் கதைகள் என்பதில் மகிழ்ச்சி.

-     எம்.சேகர்

புதன், 10 ஜூன், 2020

இதுவும் கடந்து போகும் (நாவல்) - பொன். சசிதரன்


நாவல்     : இதுவும் கடந்து போகும்
எழுத்து    : பொன். சசிதரன்
வெளியீடு  : சகோதரா எண்டெர்பிரைஸ்
பதிப்பு     : முதற்பதிப்பு 2019

இதையும் கடந்து போகத்தான் வேண்டும் – எம்.சேகர்

மீட்டுக்கொண்டு வர இயலாத
பழைய நாட்களின் பழைய மன நிலைகளின்
நாற்பது ஆண்டுகால நீங்காத நினைவுகளுடன்
இதனை எழுத ஆரம்பிக்கிறேன்.

ஒரு மனிதனின் எண்ணங்களே எழுத்துகளாக உருப்பெறுகிறது. சங்க காலத்தில் இருந்து இன்றைய நவீன காலம்வரை படைக்கப்படும் படைப்புகள் அனைத்தும் படைப்பாளனின் மனத்தில் இருந்தும் அவனின் அனுபவத்தில் இருந்தும் வெளிவரும் எண்ணங்களாகவே உள்ளன. இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தான் உணர்ந்தவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துச் சமூகத்தோடு ஒன்றி மற்றவர்களும் அதை உணர வேணடும் என்று இலக்கியத்தைக் கருவியாக்கி எளிமையான எழுத்து நடையில் படைக்கப்படுவது படைப்பிலக்கியமாகும்.

படைப்பு

ஒரு படைப்பு என்பது அனுபவத்தின் வெளிப்பாடாக, அனுபவத்தில் இருந்து பெற்ற சிந்தனை வளர்ச்சியால் படைப்பாளன் உணர்ந்த இந்த வாழ்க்கையின் ஒரு பகுதியை வெளிப்படுத்தவும் அதை விரிவாக விரித்துச் சொல்லவும் வாழ்க்கைக்கான ஒரு தரிசனத்தைக் காட்டவும் படைக்கப்படுகிறது. படைப்பிலக்கியம் செய்திகளைக் கற்பனையில் இணைத்து அழகான ஒரு வடிவத்தில் கொடுக்கிறது. அந்த வடிவம் ஒரு கவிதையாக, ஒரு சிறுகதையாக, ஒரு நாவலாக, ஒரு நாடகமாக உருப்பெறுகிறது.

நாவல்

நவீன கால இலக்கியம் என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வரும் இலக்கியங்களாகும். இருபதாம் நூற்றாண்டிற்குப் பிறகே வளர்ச்சி நிலை அடைந்தது. நவீனம் என்ற சொல்லாடல் ஐரோப்பாவில் இருந்து வந்ததாகும். நவீன இலக்கியத்தின் ஒரு வகைதான் நாவல் இலக்கியம்.
கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டுவர முடியும் என்று உணர்த்தப்பட்ட பின் உரைநடை படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது நாவல்தான், என்று கூறுகிறார் இலக்கியத் திறனாய்வாளர் டாக்டர் இரா. தண்டாயுதம்.

இன்றைய சமூக வளர்ச்சியில் மக்களிடையே எழும்புகின்ற எந்த பிரச்சினையையும் நாவல் என்ற கலை வடிவத்தின் வாயிலாக நாம் விவாதிக்க முடிகிறது. நாவல் சமுதாயத்தில் இணைப்பை உருவாக்கும் தன்மையையும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கும் கருவியாகவும் அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கும் சிந்தனைக் களமாகவும் சமுதாய கோட்பாடுகளை அலசி ஆராயும் அரங்கமாகவும் விளங்குகிறது.

நவீன வாழ்க்கைச் சூழலினால் மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகள், சிக்கல்கள், பாதிப்புகள், வன்மங்கள், குரூரங்கள் என பலவற்றைத் தன் எழுத்தினூடே வெளிப்படுத்தி, வாசகர்களுக்கு மனிதன் அல்லது சமூகம் குறித்தும் இந்த வாழ்வியலின் இளங்கியல் குறித்தும் சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமைக் கொண்டவர் பொன். சசிதரன். மூடுபனி பாலு மகேந்திராவின் கேமராவைப்போல வாசகனின் விழிகளுக்குள் தன் எழுத்தின்மூலம் காட்சிப்படுத்தும் திறன் மிக்கவர். மலேசிய நாட்டின் சிறந்த ஒரு கதைசொல்லி பொன்.சசிதரன்.

நாம் அறியாத மன ஆழங்களின் பெரும்வலையில் சிக்கியுள்ள ஒரு சின்னஞ்சிறு துகள்தான் இந்நாவலின் கதைக்கரு. நாம் காணும் இப்புறவுலகம் அதன் சாரமான இன்னொன்றால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது  என்பதையே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியப் படைப்புகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சாரத்தையே அவை மீண்டும் மீண்டும் புதிது புதிதாக வரையறை செய்துகொண்டிருக்கின்றன (புதிய காலம். ப.31. ஜெயமோகன்) என்பதற்கேற்ப இந்நாவலில் உடைந்துபோன ஓர் இளைஞனின் மனத்தை மீண்டும் மீண்டும் சில சம்பவங்களின் மூலமாக உடைத்துப் பார்த்துச் சிதைந்துபோன வாழ்விலிருந்து மீண்டெழ வைக்கிறதா இல்லையா என்பதை நோக்கியே இதன் கதையாடலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

நாவல் வகை
மு.வ. (மு.வரதராசன்) அவர்கள், தனது இலக்கிய மரபு என்ற நூலில் நாவல்களை அதன் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் (சிங்கப்பூர்த் தமிழ் – இலக்கியம் பன்முகப் பார்வை, முனைவர் இரா.வேல்முருகன். ப.119)

1.   நிகழ்ச்சிகள் மிக்க நாவல்
2.   பண்புநலன் மிக்க நாவல்
3.   விளக்கமும் வருணனையும் மிக்க நாவல்
4.   நாடகப் போக்கிலான நாவல்

அவ்வகையில், கதைமாந்தர்களையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் அதன் போக்கினையும் கொண்டு பொன்.சசிதரனின் இந்த நாவலைப் பண்பு நலன் மிக்க நாவல் என்ற வகைக்குள் வைக்கலாம்.

கதைக்குரிய பொருள்
பால்வெளி மண்டலத்திலுள்ள நிலவு தேய்வதும் பின வளர்வதுமான அதன் இயக்க மாற்றம் ஒரே சீராக அமைகிறது. அதே போல், நாகரிகம் பெற்ற மனிதனால் உருவான சமூகத்தில் காலந்தோறும் படைப்பாளர்களால் படைக்கப்பட்ட இலக்கியப் பாடுபொருளிலும் மாற்றம் நிகழ்ந்தவாறே உள்ளது.

நாவலுக்குரிய கதைப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நாவலாசிரியர் தாம் விரும்பிய, விரும்பாத, கண்ட, கேட்ட, அனுபவித்த எதையும் கதைப் பொருளாக அமைத்துக் கொள்ளலாம். மலேசிய மண், மக்களின் வாழ்க்கை முறைகள், மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள், குடும்ப உறவுகள், நட்பு, காதல், வெறுப்பு, வன்மம், இயற்கையின் ஆராதனைகள், அழகியல் பார்வைகள், கதாமாந்தர்களின் பண்புகள் போன்றவை ஒரு சடைப்பின்னலாக இணைந்து கதைக்குரிய பொருளாக இந்த நாவலில் அமைந்திருக்கின்றன.

கதை மாந்தர்கள்
நாவலில் இடம்பெறும் கதை மாந்தர்களை இருவகைப்படுத்துவார் அறிஞர் ஈ,எம்.ஃபாஸ்ட்டர்.
1.   முழுநிலை மாந்தர்
2.   ஒருநிலை மாந்தர்

நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நம்முடன் உறவாடி வாசக மனங்களில் முழுமையான இடத்தைப்  பிடிப்பவர்களே முழுநிலை மாந்தர்கள் எனக் கூறப்படுகிறார்கள். கதையின் கட்டுக்கோப்பிற்காகவும் கதையாடலை மேலும் சுவைபடச் சொல்ல இடையிலேயே தோன்றி இடையிலேயே மறைந்துவிடுபவர்கள் ஒருநிலை மாந்தர்கள் எனக் கூறப்படுகின்றனர். இந்நாவலில், அன்புமதியும் சீனிவாசனும் செல்வ விநாயகமும் மனோகரனும் நாவலின் போக்கிற்கேற்ப மெல்ல மெல்ல வளர்ந்து, அவர்களின் பண்பு நலன்களாலும் தியாக உணர்வுகளாலும் வாசகர்களின் உள்ளத்தில் முழுமையாக இடம்பிடித்துக் கொள்கிறார்கள்.

மறுவாழ்வு மையத்தின் தலைமை அதிகாரி பரமசிவம், அன்புமதியின் சித்தி தங்கம், தங்கை சரளா, அவள் கணவன் பிரபு, மகன் ஆனந்த், தம்பி சிவா, அவன் மனைவி சீதா, புதிய நண்பன் அறிவழகன், காதலி ஆர்த்தி, ஸ்ரீமதி, ஸ்ரீமதியின் சித்தி வித்யாஸ்ரீ, அலுவலகத்தில் பணிபுரியும் காஞ்சனா, மலையப்பன், சாமிக்கண்ணு, டிரைவர் செல்வம், ஸ்டீபன் வோங், இந்திரன் போன்ற கதாமாந்தர்கள் நாவலின் கட்டுக்கோப்பிற்காகவும் கதையாடலின் வளர்ச்சி படிநிலைகளுக்கேற்பவும் இடை இடையே வந்து போகின்ற ஒருநிலை மாந்தர்களாக விளங்குகின்றனர்.

இதில், மறுவாழ்வு மையத்தின் தலைமை அதிகாரி பரமசிவத்தின் கதாபாத்திரம் இந்நாவலுக்கு வெளியே நின்றுகொண்டு நாவலின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது. நாவலின் கதையாடலுக்குள் இந்தக் கதாபாத்திரத்தைக் கட்டமைக்காமல் நினைவிலிருந்து மீட்டல் என்ற எளிய உத்தி யதார்த்தத்தின் கலை அழகோடு இயல்பாகப் பொருந்திப் போகிறது. வெளியில் இருந்து நாவலை நகர்த்திச் செல்லும் இந்தக் கதாபாத்திரப் படைப்பு சிறப்பானதும் புதுமையானதும்கூட. இத்தகைய உத்திமுறை பொன்.சசிதரனின் படைப்பிலக்கிய ஆளுமை மேன்மைப் பெற்றுள்ளதைக் காட்டுவதோடு அவரை இந்த மலேசிய மண்ணின் சிறந்த ஒரு படைப்பாளியாகவும் போற்றத்தக்க ஒரு படைப்பாளியாகவும் அடையாளம் காட்டுகிறது.

எழுத்து நடை
நாவலில் வரும் உரையாடல்களும் சின்ன சின்ன வாக்கியங்களால் உருவாக்கப்பட்டு வாசகர்களைக் கவரும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளதும் இங்குக் கவனிக்கத்தக்கது. எளிய மொழி நடையில் அனைத்துத் தரப்பு வாசகர்களாலும் எவ்விதச் சிரமும் இன்றி புரிந்துகொள்ளக்கூடிய எழுத்து நடையில் இலகுவான தளர்வடிவம் கொண்ட நாவல் பெரும் உத்திகளையும் பாவனைகளையும் உதறியுள்ளது. வாசகப் பொதுப்புத்தியைக் கலங்கடிக்காமல் நேர்கொண்ட பார்வையாய் நல்லதோர் இளைய சமுதாயத்தை உருவாக்கச் சமூக விழுமியங்களை வாசக மனங்களில் விதைத்துவிட முயலும் கதைப்போக்கும் கருத்தாக்கங்களும் கொண்ட படைப்பாக்கம்.

நாவலில் அறம்

மனிதன் வாழ்வில் உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் மூத்தோர் சொல் கேட்டலும் பிறரிடத்துப் பணிவும் பரிவும் காட்டுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தம் பெற்றோருக்குரிய கடமைகளில் துணைநின்று, இந்த மண்ணுலக வாழ்வில் நல்ல மனித வாழ்வுக்காகத் தன்னை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும் என தனது இயேசு காவியத்தில் கண்ணதாசன் கூறியிருப்பதைப்போல, இந்த நாவலில் உறவுகளின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் மிகச் சிறப்பாகப் படைப்பாக்கம் செய்துள்ளார் பொன்.சசிதரன்.

சீனிவாசன் மூலமாக ஓர் அப்பாவின் பாசம், கடமை எந்நிலையிலும் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் செல்வ நாயகம் மூலமாக ஒரு நிறுவனத்தின் முதலாளி தன்னுடன் வேலை செய்பவர்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் சுகத் துக்கங்களில் எவ்வாறு பொறுப்புடன் பங்குகொள்ளவேண்டும் என்பதையும் மனோகரன், ஸ்ரீமதி, அறிவழகன் மூகமாக நட்பின் இலக்கணத்தையும் தங்கம், வித்யாஸ்ரீ மூலமாக இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு வருபவர்கள் எப்படி விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் மிக இயல்பாகத் தன் கதாபாத்திரங்களின் வாயிலாக இந்தச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்க முனைந்திருக்கும் நாவலாசிரியர், முரண் கதாபாத்திரங்களான சீதா, எல்லப்பன், இந்திரன் மூலமாக இந்த உலகில் எத்தகைய வாழ்க்கையை நாம் வாழக்கூடாது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார். கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் வாழ்க்கை நிலையற்றது என்பதை அன்புமதி – ஆர்த்தி காதல் உறவின் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

சொல்லருஞ் சூது பொய் மோசம் செய்தால்
சுற்றத்தை முற்றமாய்த் துடைத்திடும் நாசம்
நல்ல பத்தி விசுவாசம்  எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாய் நேசம்
என்ற பாடல் வரிகளால் கடுவெளிச்சித்தர், சொந்தங்கள் நம்முடைய பாதுகாப்பு அரண் போன்றவர்கள். அவர்களைப் பொய், சூது, மோசத்தால் வஞ்சித்தால் நம் வாழ்வில் நாசமானது வீட்டின் தரையில் உள்ள அழுக்கைத் தேய்த்து எடுப்பதைப்போல நமது மகிழ்ச்சிகளை முற்றாய்த் துடைத்து எடுத்துவிடும்  என்கிறார்.

கண்ணதாசனும் தனது இயேசு காவியத்தில் கொலை செய்தால் மட்டும் நரகம் கிடைப்பதில்லை. கொடிய செயல்கள் அனைத்திற்கும் நரகம்தான் பதில் என்கிறார். புண்படுத்தும் சொற்களைப் பேசிப் பிறர் நெஞ்சத்தைச் சுடுபவர்களுக்கும் நரகம் கிட்டும் என்கிறார். சீதா, எல்லப்பன் கதாபாத்திரங்களின் வாயிலாகப் பொன்.சசிதரனும் இதையே இந்தச் சமூகத்துக்கும் கூறுகிறார்.
 
அன்பு, இரக்கம், தொண்டு என்னும் வாழ்க்கையே மண்ணில் சிறந்தது என்கின்ற வாழ்க்கை அறங்களை மக்கள் உணரவேண்டும் என்ற உயரிய எண்ணத்தை இந்தத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பதை நாவலில் வருகின்ற சம்பவங்களைக் காட்சிப்படுத்தி சமூகக் கருத்துகளையும் தன்முனைப்புக் கருத்துகளையும் நிறையவே பேசியிருக்கிறார் பொன். சசிதரன்.

அறத்தைப் போன்று ஆக்கம் தருவது வேறெதுவுமில்லை. அறம் சிறப்பைத் தரும். நல்ல செல்வத்தையும் தரும். எனவேதான், பண்டைய அகப்பொருள் இலக்கியங்களில் அறத்தோடு நிற்றல்  என்ற தனிப்பெரும் பிரிவு தலைசிறந்து விளங்கியதை நம்மால் உணரமுடிகிறது. வள்ளுவரும்கூட வாழ்வில் அறம் என்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்த அறத்துப்பால் எனும் அதிகாரத்தையே இயற்றியுள்ளார். அறம் வலியுறுத்தல் என்ற பகுதியில்,

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

என ஒருவரின் வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மை தரக்கூடியது வேறெதுவுமில்லை. அதுபோல, அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கொடுமையானதும் வேறெதுவுமில்லை என்கிறார். 

மேற்கூறியவற்றின் கூற்றுகளைப் போற்றுவதே இந்த நாவலின் உயரிய விழுமியப்பண்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அறத்தைப் போற்றும் இதுவும் கடந்து போகும் நாவல் இன்றைய சூழலில் நமது சமூகத்துக்குப் பல உயரியத் தத்துவக் கருத்துகளின் பரிமாற்றத்தோடு படைப்பாளனின் எழுத்துகளின்மூலம் களம் இறங்கியிருக்கிறது.

சமூகம் சிறப்பாக அமைந்தால் நன்மை மிகும் என்று இந்தத் தமிழ்ச் சமூகத்தின்பால் அக்கறை கொண்டு இச்சமூகம் சீர்பெற விரும்பிய ஓர் ஆன்மாவின் படைப்பு இது.  கல்வித் துறையில் இருப்பவர்கள் இந்த நாவலை மாணவர் சமூகத்திடமும் இளையோரிடத்திலும் பரவிடச் செய்திடல் வேண்டும். வாய்ப்புக்  கிடைத்தால் இந்த நாவலை நமது பாடத்திட்டத்திற்கான பாடநூலாகவும் தேர்வு செய்யலாம். அதற்கான அனைத்துத் தகுதிகளும் இந்த நாவலுக்கு இருக்கிறது.

இந்தக் கணத்தில் இந்தப் புத்தக்ததை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது கதை எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்பதால், இப்போது, உங்களைச் சுற்றி எழுத்தாளனின் எழுத்தும் ஆன்மாவாக வட்டமடித்துக்கொண்டிருக்கலாம்.
நீ எழுதும்போது
நானிருந்தேன்
நான் எழுதும்போது
நீ இல்லையே என் நண்பா....
நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். நீதான் ஆய்வு செய்யவேண்டும் என்றாய். இடையில் சந்தித்தபோது எழுதி முடித்திருந்தவற்றைக் காட்டினாய். தலைப்பு மறுவாழ்வு என்றிருந்தது. தலைப்பை மாற்றலாமே என்றேன். நாவலின் இறுதி பத்தியில் வரும் இதுவும் கடந்து போகும் என்றிருந்தது. இதையே தலைப்பாக வைக்கலாமே என்றேன். சரி என்றாய். பிறிதொரு நாளில் தொலைபேசியில் அழைத்து, நாவலை எழுதி முடித்துவிட்டேன். எப்போது வருகிறீர்கள் என்று கேட்டாய். செப்டம்பர் பள்ளி விடுமுறையில் வருகிறேன் என்றேன். வந்ததும் தொடர்பு கொள்ளுங்கள். நாவல் பிரதியைக் கொடுக்கிறேன் என்றாய். செப்டம்பர் வந்தது. நானும் வந்தேன். நீ மட்டும் இல்லையே என் நண்பா........

இதுநாள்வரை
உன் நட்பைச் சுவாசித்தேன்
இனி
உன் எழுத்தைச் சுவாசிப்பேன்

அன்புடன்
எம். சேகர்

காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையின் கவிதையில் கலந்தே வாழுவோம் (பாவை விளக்கு - அகிலன்)


ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்) - தோப்பில் முஹம்மது மீரான்


நாவல்    : ஒரு கடலோர கிராமத்தின் கதை
எழுத்து   : தோப்பில் முஹம்மது மீரான்
வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு    :  ஆறாம் பதிப்பு, மே 2019


இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய நாவல்களில் பெரும்பாலும்  பேசப்பட்ட நாவல்கள் இனக்குழுக்கள் அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவையேயாகும். மீனவர்களைப் பற்றிய  ஜோ.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு, மறவர்கள் குறித்து வேல. ராமமூர்த்தியின் குற்றப்பறம்பரை, தேவேந்திர குல வேளாளர்கள் பற்றிய சோ.தர்மனின் கூகை, பூமணியின் அஞ்ஞாடி, அறிவுமணியின் பாழ்நிலம்,  இமையத்தின் செடல், ஜெயமோகனின் வெள்ளையானை, மழைப்பாறை பிரமலைக்கள்ளர்கள் பற்றிய வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் எனப் பலதரப்பட்ட நாவல்களின் போக்குகள் தமிழ்ச் சமூகத்தின் கலவையியல் பண்பை விளிம்பி விவரிக்கின்றன.

குறிப்பிட்ட ஒரு குழுவில் அல்லது வட்டாரத்தில் காணப்படும் முன்னோர்களின் அதிகாரமைய  வாழ்க்கை, குடும்பத் தலைவர்களின் அதிகாரம், மதத்தின் இறையான்மை, பேச்சு வழக்குகள், குடும்ப உறவின் சிக்கல்கள், பெண்களின் நிலை, அதிகார மையத்துக்குப் பயந்து வேலைசெய்யும் ஊழியர்கள், அடித்தட்டு மக்கள்கள் என அனைத்தையும் பதிவு செய்யும் ஒரு போக்கு இன்றைய படைப்பிலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது இனக்குழு வாழ்ந்த பகுதியில் நாம் அறிந்திடாத அன்றைய வாழ்க்கையைக் குறித்த ஒரு பார்வை நமக்குக் கிடைக்கிறது.

சோ.தர்மனின் சூல் நாவலில் உருளைக்குடி மக்களின் வாழ்க்கை வாசிப்பு அனுபவமாக எனக்குக் கிடைத்திருந்தது. நாம் அறியாத ஒரு வாழ்க்கையை, மொழியை ஒரு நாவலில் வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் ஓர் அலாதியான அனுபவத்தை எழுத்தில் சொல்லிட முடியாது. அதுபோலவே, தோப்பில் முஹம்மது மீரான் எழுதியிருக்கும் ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலிலும் முதல் உலகப்போர் முடிந்த காலத்தில் தேங்காய்ப்பட்டினம் வாழ் தமிழ் முஸ்லீம் மக்களின் சமூகப் பொருளாதாரக் கலாசாரப் போக்குகளையும் அவ்விடத்து மக்களின் சிந்தனைப் போக்கினையும் அறிந்துகொள்ளவும் அவ்வாழ்க்கையைப்பற்றிய ஒரு சித்திரமும் கிடைத்துள்ளது. இந்நாவலின் நனிசிறப்பு யாதெனில், அவர்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே நாவலாசிரியர் கொடுத்திருப்பதுதான். ஆரம்பத்தில் அவர்களின் சொல்லாடல்கள் , வழக்குகள் வாசிப்பதில் சற்றுத் தடுமாற்றத்தைக் கொடுத்தாலும் பிறகு அந்த வாழ்க்கைக்குள் நாமும் பழக்கப்பட்டுப் போய்விடுகிறோம். அந்த மக்களின் வாழ்வியல் சூழல் தொடர்பான ஒரு தரிசனத்தை இந்த நாவல் வழங்குகிறது.

இனவரைவியல் இலக்கியத்தின் கொள்கைகளை இந்நாவலில் காணமுடிகிறது. சமூகம் முழுமை பெற்ற ஒற்றை அமைப்பு அல்ல. சிறு சிறு துண்டுகளாலும் சிதறல்களாலும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பன்மை அமைப்பு என்ற கூற்றுக்கு ஏற்ப தேங்காய்ப்பட்டின தமிழ் முஸ்லீம்களின் சிறப்புக் கூறுகளையும் பொதுக்கூறுகளையும் வாழ்வின் முரண்களையும் அடையாளம் காட்டும் வகையில்  படைக்கப்பட்டுள்ளது. இந்நாவல் அப்பகுதி மக்களின் அன்றைய வாழ்க்கை அடையாளத்தின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது. மலேசியச் சிங்கப்பூர்ச் சூழலில் பிறந்து தமிழ்நாட்டுத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற படைப்புகள் தமிழ்நாட்டு இனக்குழுக்களின் வட்டார வாழ்க்கையோடு எங்களை நெருக்கமாக்குகின்றன.

மதம், நில உடமையாளர்களின் இரும்புப்பிடியில் மிகக் கோரமாகச் சிக்கியிருக்கும் ஒரு கிராமத்தின் கதை இது. மதத்தைக்கொண்டு அரங்கேறும் மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள், வலியோரின் அதிகாரம், தொழுகைவரை நீளும் நிலவுடமைக்காரர்களின் அதிகாரக் கைகள், எந்தச் சுதந்திரமும் இல்லாத பெண்களின் நிலை என மனித வாழ்வின் சித்தரிப்புகள் நீளுகின்றன.

முதலாளி வடக்கு வீட்டின் அகமதுக்கண்ணு, அவர் மனைவி, மகள் ஆயிஷா, சகோதரி நுஹூ பாத்திமா, அவளின் மகன் பரீது வடக்கு வீட்டில் வசிக்கின்றனர். ஊரே அவரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கிறது. அவரின் உத்தரவுகளை செயலாற்றும் மோதினார் அசனார் லெப்பை, அவுக்காரு, கருப்பன் போன்ற கதாபாத்திரங்களுடன் ஓஸன்பிள்ளை நியாயவிலை கடை, அகமது ஆசானின் சுக்கு வெண்ணீர்க்கடை, அந்திக்கடை போன்றவை அப்பட்டினத்தின் அடையாளங்களாக வருகின்றன. மேலும், செய்யிதினா முகம்மது முஸ்தபா இம்பிச்சிக்கோயாத் தங்கள் ஒரு பெரிய மகானாகக் கிராம மக்களிடம் செல்வாக்குப் பெற்று இருக்கிறார். மதத்தின் பெயரால் இவர்களைப் போன்றவர்கள் எப்படிக் கிராம மக்களைத் தங்களின் கைக்குள் வைத்திருந்தனர் என்பதை நாவலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

கதையில் நமக்கு நம்பிக்கைத் தரும் மனிதர்களாக வருபவர்கள் சுறாப்பீலி விற்கும் மஹ்மது, ஆங்கிலப் பள்ளி ஆசிரியராக வரும் மெஹ்பூப்கான் இருவரும்தான்.  இருவரும் சுரண்டுப்படும் அச்சமூகம் மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய அச்சமூகத்தின் ஒட்டுமொத்த மனவோட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களுக்குக் கபிராகிறார்கள்.

இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம். அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக்  கொண்டது  எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெரிந்த நாவல் என இந்நாவலைப்பற்றி சிறப்பாகக் கூறும் எம்.ஏ.நுஃமான், இந்நாவல் தமிழ் நாவலுக்கு ஒரு புதிய களத்தையும் ஒரு புதிய வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். ஜெயமோகன் இந்நாவலைச் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். எஸ். ராவும் இந்நாவலை நூறு சிறந்த தமிழ் நாவல் பட்டியலில் வைத்துள்ளார்.

இந்நாவலை வாசித்துவிட்டு சுந்தர ராமசாமி, இவரு ஒரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய் படிஞ்சிடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்கு மேலே இவருக்கு அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம் என தோப்பில் முஹம்மது மீரான் பற்றிய ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பதிவு செய்துள்ளார். மேலும், இந்நாவல் ‘The story of a seaside village’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

-       -   எம்.சேகர்


சூல் (நாவல்) - சோ.தர்மன்


நாவல்    : சூல்
எழுத்து   : சோ. தர்மன்
பதிப்பு    : மூன்றாவது மீளச்சு 2019
வெளியீடு : அடையாளம்

இன்றைய சமூக வளர்ச்சியில் மக்களிடையே எழும்புகின்ற எந்தப் பிரச்சினையையும் நாவல் என்ற கலை வடிவத்தின் வாயிலாக நம்மால் விவாதிக்க முடிகிறது. நாவலே சமுதாயத்தில் இணைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வைக்கும் கருவியாகவும் அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் சிந்தனைக் களமாகவும் பண்பாட்டு மரபுகளைப் பரிமாறிக்கொள்ளும் பரிவர்த்தனைக் களமாகவும் சமுதாயக் கோட்பாடுகளை அலசி ஆராயும் அரங்கமாகவும் விளங்குகிறது. அவ்வகையில் சூல் நாவல் இந்தத் தலைமுறையிலிருந்து பல தலைமுறை பின்னோக்கிச் சென்று ஓர் அழகிய நீர்நிலை சார்ந்த ஒரு வாழ்க்கை அனுபவத்தை அந்தக் கிராமத்து மக்களின் மனநிலைக்கேற்பவும் சூழல்களுக்கு ஏற்பவும் படைப்புருவாக்கமாகத் தந்துள்ளது.

முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே– தொல். 14

என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப வாழ்ந்த நம் மூதாதையர்களின் வழியில் வாழ்ந்த ஒரு வாழ்க்கையை இந்நாவலின்மூலம் நம் முன் காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர் சோ. தர்மன். காட்சிப்படுத்தியதோடு நில்லாமல் நம்மையும் அவ்வாழ்க்கையோடு இயைந்து பயணிக்கவும் வைக்கிறார். இது தனிமனித வாழ்க்கை அல்ல. ஒட்டு மொத்த கிராமத்தின் வாழ்க்கை. இந்நாவலில் முக்கிய கதாபாத்திரம் என எதுவும் கிடையாது. எல்லா கதாபாத்திரங்களும் அதனதன் தன்மைக்கேற்பக் கதையை வேர்களாக ஊன்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

வரதம்பட்டி, பீக்கிலிபட்டி, வள்ளிநாயகிபுரம், ராவுத்தன்பட்டி, நல்லமுத்தன்பட்டி, வீரப்பட்டி, கட்டுராமன்பட்டி, சென்னையம்பட்டி போன்ற ஊர்களுக்கெல்லாம் கரம்பைமண் வளமுள்ள பெரிய கண்மாயான உருளைக்குடி கண்மாயில் தூர்வாரி பராமரத்துப் பணியைக் கிராமத்து மக்கள் தொடங்குவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. பரம்பரை நீர்ப்பாய்ச்சி அய்யனாரிடம் ஆசிபெற்று எட்டயபுரம் அரண்மனை கொடுத்த மண்வெட்டியால் கண்மாயின் கரையின்மேல் மூன்றுமுறை வெட்ட, அதனைத்தொடர்ந்து ஊர்மக்களும் கரையை வெட்ட ஆரம்பிக்கின்றனர். இப்படியாகத் தொடங்கும் நாவல், பல கிளைக்கதைகளுடனும் சம்பவங்களுடனும் வரலாற்று நிகழ்வுகளுடனும் உருளைக்குடி மக்களின் மனநிலைகளை மிகவும் இயல்பாக விவரித்துச் செல்கிறது. இத்தகைய கிராமிய வாழ்க்கையைப் புனைகதையில் வடிப்பதில் வல்லவர்களான ஆர். சண்முகசுந்தரம், கி. ராஜநாராயணன் வரிசையில் சோ. தர்மனும் முக்கியமான ஒருவராகிறார்.

நீர்நிலைகளை நம்பி வாழும் மக்கள் அவர்களின் விவசாயத்திற்காகவும் ஊர்மக்களின் நல்வாழ்விற்காகவும் அவற்றை எப்படியெல்லாம் பராமரித்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளனர் என்பதை விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் உணர்த்தும் கதை. அன்றைய வழக்கில் உள்ள சொலவடைகளுடனும் கிராமத்துக்கே உரிய கிண்டல் பேச்சுகளுடனும் சொல்விளையாட்டுகளுடனும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் நம்மை வியக்க வைக்கிறது. அன்றைய தமிழர்களின் மொழி ஆளுமையை உணர்த்துவதாகவும் உள்ளது. படிப்பறிவு இல்லாத மனிதர்களிடம் இத்தனை மொழியாற்றல் எங்கிருந்து வந்தது என சிந்திக்கவும் வைக்கிறது. இதுதான் தமிழ் மண்ணின் மணம்.

உருளைக்குடியில் உள்ள ஒவ்வொரு காவல் தெய்வங்களுக்கும் ஒரு கதை என காவல் தெய்வங்கள் தோன்றிய பல கதைகள் இந்நாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கட்டக் கருப்பன், கள்ளன் சாமி என பல வழிபாடுகள் உருவான கதை நாவலில் அந்த மக்களின் வாழ்வியலோடு மிக இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. தூள் மாவு சாமி, போதுமான அளவுக்கு நீர் தேவை இருக்கின்றபோது மழையை மற்றப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் சடங்கு என பல கிராமத்து சம்பிரதாயங்களும் நம்மை வியக்கவைக்கின்றன.

குழந்தைகள் இல்லாவிட்டாலும், ஊரெல்லாம் தாயாக மதிக்கும் கொப்பளாயி,  அன்று பிரபலமாயிருந்த தேனி, பெரிய குளம், சோழவந்தான், ஆத்துர் வெற்றிலையைப்போல உருளைக்குடி வெற்றிலையைப் பயிரிட மெனக்கெட்ட மகாலிங்கம் பிள்ளை, தெய்வச் சிலைகளைப் படைக்கும் கலையைப் பூர்வீகமாகக் கொண்ட செண்பக வேளாளர் என ஒவ்வொரு மனிதர்களையும் அவர்களின் இயல்பிற்கு ஏற்ப கதாபாத்திரங்களாக்கி நாவலில் நம்மோடு உறவாட வைத்து வெற்றியும் பெற்றுள்ளார் நாவலாசிரியர். மேலும், கிராமத்தில் உள்ள சில பரிகாரப் படலங்களையும் குறிப்பாக, அய்யர் பண்டாரத்திற்குச் சொன்ன பரிகாரப் படலம், அய்யர் பண்டாரத்துக் சொல்லி பண்டாரம் கொப்புளாயிக்குச் சொன்ன பாம்புக்குளம் உருவான பரிகாரப்  படலக்கதை போன்றவற்றையும் நாவலில் பதிவு செய்துள்ளார்.

அத்தியாயம் 15இல் பாஞ்சாலக் குறிஞ்சியிலிருந்து தப்பித்துப் போகும்போது உருளைக்குடியைக் கடந்துபோகும் வீரபாண்டிய கட்டபொம்பனின் வருகை நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.  கேரள மந்திரவாதி குஞ்ஞான், அனுமன் முனி, எட்டயபுர அரண்மனையில் நடக்கும் விபரீத சம்பவங்கள், இருளப்ப சாமி, மூன்று தலைமுறையாகக் காத்து வந்த பூமிக்கடியில் புதைத்து வைத்த புதையல் எனத் தொடரும் கதை சுதந்திரத்திற்குப் பின் என நகர்ந்து இன்றைய உருளைக்குடியில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் பெரிய அலங்கார வளைவில் ஓர் அதிர்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

இந்நாவல் தமிழர்களின் தொன்மையான பண்பாட்டின் தொடர்ச்சி, நீர்நிலைகள் சார்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வியல், சடங்குகள், நம்பிக்கைகள், தொழில் சார்ந்து குடிகள், மொழி வழக்காறுகள், புழங்கும் பொருட்கள், உணவுப்  பண்பாடும் மரபார்ந்த மருத்துவம், அன்றைய தமிழர்களின் தத்துவார்த்தமான பார்வை போன்றவற்றை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மேலும், நீர்நிலைகளிம் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றிய விரிவான பல தகவல்களும் இந்நாவலில் கிடைக்கிறது.

சுதந்திரம் கிடைத்தபோது, ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை, கிட்டத்தட்ட முப்பத்து ஆறாயிரம் கண்மாய்கள், ஊரணிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளையும் கொடுத்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால், இன்றைய நீர்நிலைகளின் நிலை என்ன? அரண்மனையின் ஆட்சியின்கீழ் கிராமத்து மக்களே கவனித்துக்கொண்ட குடிமராமத்து ஒழிக்கப்பட்டு இன்று அதுசார்ந்து ஏகப்பட்ட துறைகள் வந்த விட்டபோதிலும், இன்றைய நீர்நிலைகள் அடைந்த மாற்றங்கள் என்ன? என்ற நாவலாசிரியரின் கேள்வி நாவலை வாசித்து முடித்தவுடன் நமக்கும் எழுவதில் ஐயமில்லை.

நாவலை வாசிக்கும் நாமும் உருளைக்குடியின் மண்மணத்தோடும் அந்த வாழ்க்கையோடும் ஒன்றிப்போய் விடுகிறோம். ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் எப்படி அந்த வாழ்க்கையை இழந்து போனார்கள்? நாவலின் இறுதியில் நாவலாசிரியர் இப்படித்தான் முடிக்கிறார்.

சில வருடங்களாக எல்லா கிராமங்களும் நிதானத்தை இழந்து விட்டதோடு, நிதானத்தை இழந்து வாழவும் பழகிக்கொண்டு விட்டன

-       -   எம். சேகர்