திங்கள், 16 பிப்ரவரி, 2015

தங்கமீன் பதிப்பகத்தின் கைவிளக்குக் கடவுள் – நயனம் வார இதழ்

(தங்கமீன் பதிப்பகத்தின் கைவிளக்குக் கடவுள் – நயனம் வார இதழ்)

இன்னும் இன்னும் எழுதுங்கள்

அன்புள்ள சேகருக்கு,

கைவிளக்குக் கடவுள் கவிதை நூலினைப் படித்தேன். தேவதைகள் தேசம் தொடங்கி தொலைந்து போனவர்கள் வரை உங்கள் கவிதைகள் என மனத்தோடு ஊர்வலம் போனது.

நான் கடவுள் கவிதையில்,

என்னை நான் ஆசிர்வதிப்பதில்ல
நானே கடவுளாக இருப்பதால்....

என்ற வரிகள் உங்களின் உயரங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தன. மேலும்,

மாமலை நீ
கீழே விரியும்
பச்சை நிறப் பள்ளத்தாக்காய் நான்....

காதலையும் காதலியையும் எவ்வளவு உயர்வானவர்களாக இந்தக் காதல் உருவகப்படுத்தப்படுகிறது என்று வியந்தேன்.
நினைவின் குரலாக ஒலிக்கும்,

விடிந்தால் தீபாவளி
வீட்டைக் கழுவப்போகிறேன்
வரிசையாய் எறும்புகள்.....

@@@@

நாளை புது வீட்டுக்குப் போகிறேன்
இந்த இரவில்
தூங்க இயலாமல் தவிக்கிறேன்
வீட்டின் அழுகுரல்....

@@@@@


பூட்டிய அறைக்குள்
பத்திரமாய்க் கடவுள்
பூமியெங்கும் மனிதம் துறந்த பிணங்கள்

போன்ற வரிகள் மனத்தைத் தொட்டன. இது மட்டுமல்ல காலக்காதலி கவிதையில்,

ஒவ்வொரு பொழுதும்
உன்னை வென்றிட நினைத்து
உனக்குள் நானே மூழ்கிப்போகிறேன்...

உன் விசாலப் பார்வைக்குச்
சில ஒத்திகைகள்
ஒவ்வொரு பொழுதும் மீளாமல்
நீண்டுகொண்டேயிருக்கிறது...

இப்படியாக நீளும் வார்த்தைகள் கவிதை மழையில் நனைய வைத்தன.

மணிமேகலையின் அழுகை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்ற கவிதை மணிமேகலையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பல நூறு பெண்களின் கண்ணீரில் ஒளிந்திருக்கும் உண்மையைப் புலப்படுத்துகிறது. அந்தக் கண்ணீரின் நிறம் எத்தகையது என்பது மட்டும் காலத்தின் விடியலாக இருக்கும்.

என்னைத்தேடி, தப்பாய் அச்செடுக்கப் பட்டவர்கள், எனக்குள் மௌனத்தை எழுதினால், இப்படியும் பேசினேன் என்ற தலைப்புகளில் வந்த கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. மெதுவாகப் படித்து ரசிக்கையில் அதன் ரசிப்புகளிலும் வலிகளை உணர்ந்தேன்.

பொதுவாக உங்கள் எழுத்துகள் ரசனைக்குரியதாகவே இருக்கும். இந்தக் கைவிளக்குக் கடவுள் நூல் அத்தகையதொரு படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் சிங்கைச் சென்ற பிறகு, உங்கள் படைப்புகள் மேலும் தரமாக இருக்கிறது. இந்தக் கவிதை நூல் அதற்குச் சான்று. இடமும் சூழலும்கூட ஒருவரின் சிந்தனையை வெவ்வேறு கோணத்தில் ஆராய வைக்கிறது. முக்கியமாகத் தமிழை மறக்காமல் தமிழிலே அற்புதமான படைப்புகளைச் சிறுகதையாக, புதுக்கவிதையாக வழங்கி வருகிறீர்கள். தமிழ்கூறும் நல்லுலகில் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வது கண்டும் புகழப்படப் போவதும் கண்டும் மகிழ்கிறேன்.

பக்கத்திற்கு பக்கம் விமர்சித்தால் இடம் போதாது. கடைசியாக ஒரு கவிதையைப் பற்றி சொல்கிறேன். கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால் என்ற கவிதை உள்ளப்பூர்வமாக நீங்கள் உருகி எழுதிய கவிதையாக எனக்குத் தோன்றியது. காரணம் என்னை வெகுவாகக் கவர்ந்த கவிதை அது.

என் இருண்மையில் கனவுகளைக் கண்டிருக்கமாட்டேன்
அவை நிஜங்கள் ஆகாமல் போயிருக்கலாம்
கடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்....

என்று முடித்திருப்பது அழகு. இது தவிர உங்கள் துளிப்பாக்களையும் படித்து ரசித்தேன்.

சிங்கையில் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, தமிழை இன்னும் எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்று அழகான வார்த்தைகளைச் செதுக்கித் தந்திருக்கிறீர்கள். உங்களின் இந்த ஐந்தாவது நூல் உங்களுக்கு இலக்கியத் துறையில் நிரந்தரமான முகவரியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

சிறுகதை, கவிதை, தொடர்கதை என மூன்றிலும் கால்பதித்து வெற்றிநடை போடுகிறீர்கள்.

நாளைய இலக்கியம் உங்களைப் பேசும்.

இன்னும் இன்னும் எழுதுங்கள்
கைவிளக்குப் கடவுளைப்போல

-          ப.ராமு


(நன்றி: நயனம் வார இதழ் 04 – 01 – 2015)

புதன், 4 பிப்ரவரி, 2015

தினக்குரல் நேர்க்காணல் – இலக்கியத்தை வாழ்வியலாகவே பார்க்கிறேன் எம்.சேகர்

1)   கேள்வி:  மிக இளவயதிலேயே தீவிரமாக அழுத்தமான படைப்புகளில் உங்களை அடையாளப் படுத்திக்கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது?

அது ஒரு நாளில் நிகழ்த்தப்பட்டதோ அல்லது திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டதோ அல்ல. பல நிலைகளிலும் பலர் தம் பங்குகளை எனக்குள் விதையாய் விதைத்து அது விருட்சமாய் வளர்ந்த ஒன்று. சிறுவயதிலிருந்தே என் பெற்றோர் தமிழ்த் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளில் வரும் கதைகளையும் தொடர்களையும் படிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களைப் பார்த்து நானும் ஆரம்ப நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். மேலும் அன்று வரும் அம்புலிமாமா இதழில் வரும் மகாபாரதம், இராமாயணம், விக்கிரமாதித்தன் கதைகள் மற்றும் சின்னச் சின்னக் கதைகள் போன்றவற்றையும் விரும்பிப்படிப்பேன். வாசிக்க வாசிக்க நாமும் எழுதலாமோ என்ற எண்ணம் எனக்குள்ளே இலேசாய்த் துளிர்விடத்தொடங்கி, பல கதைகளை மனத்துக்குள்ளேயே அசைபோடத் தொடங்கினேன். இடைநிலைப்பள்ளிக்குச் சென்றபோது, மு.., அகிலன் எனக்கு அறிமுகமானார்கள். மு.வ. வின் கரித்துண்டு, கள்ளோ காவியமோ மற்றும் அகிலனின் சிநேகிதி, பால்மரக்காட்டினிலே போன்ற நாவல்களைப் படித்தபோது என் வாசிப்புத் தளம் மேலும் விரிவடைந்தது. நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் போன்றோரின் கதைகளை வாசித்தபோது சமூகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறை என்னை வெகுவாகக் கவர்ந்தது.

படிவம் மூன்று படிக்கும்போது கதைகள் எழுத ஆரம்பித்தேன். நண்பர்களிடம் படித்துக் காண்பிப்பேன். நல்லா இருக்குனு சொல்லுவாங்க. தொடர்ந்து எழுதினேன். பத்து கதைகளுக்கு மேல் எழுதி எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அனுப்பி எதுவுமே பிரசுரமாகவில்லை. நான் பதினொன்றாவதாக எழுதிய கதைதான் புது வாழ்வு என்ற பெயரில் 21 செப்டம்பர் 1980 இல் தமிழ் மலரில் பிரசுரமானது. அதனை அடுத்து மறுமாதமே தமிழ் நேசனில் கந்தசாமி வேலை தேடுகிறார் மற்றும் அதைத்தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர், வானம்பாடியில் ஒரு பாதை சில பள்ளங்கள் வெளிவந்து என்னை ஓர் எழுத்தாளனாக அடையாளப் படுத்தியது.

ஐந்தாம் படிவம் படிக்கும்போது காஜாங்கிலிருந்து என் பள்ளிக்கு மாற்றலாகி வந்த சசி (பொன்.சசிதரன்), புதுமுக வகுப்பிலிருந்து என்னுடன் படித்த நாதன் ( தா.விஜயநாதன், ஓவியன்), ந.தர்மலிங்கம், அதன்பின் அறிமுகமான எம்.கருணாகரன் (சுபன், சுங்கைவே) போன்றவர்களின் நட்பு வட்டமும் ஆதி.குமணன், இராஜகுமாரன், வானம்பாடி பாலு, பெ.இராஜேந்திரன் போன்ற இதழியல் சார்ந்தவர்களின் ஆதரவும் வழிகாட்டிகளும் இலக்கியவெளியில் என்னை அடுத்த அடுத்த நகர்வுகளுக்கு நகர்த்திச் சென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நான் எழுதிய முதல் தொடர்கதை சிங்காரக் காலத்துப் பூக்களே தமிழ் ஓசையில் வெளிவந்தது. அப்போது எனக்கு வயது பத்தொன்பது.

2)   கேள்வி:  இலக்கியத்தை முக்கியமாக கவிதை வடிவத்தை நீங்கள் எவ்வாறு அணுகியிருக்கிறீர்கள் இதுவரையில்?

இலக்கியத்தை வாழ்வியலாகவே நான் பார்க்கிறேன். நடப்பியல் நோக்கில்தான் என் இலக்கியப் படைப்புகள் இதுநாள்வரையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு படைப்பாளன் தான் வாழும் சூழலையும் மக்களையும் மறந்துவிட்டு எழுதினான் என்றால் மக்களும் எளிதில் அவனை மறந்துவிடுவார்கள். ஒவ்வொருவரது படைப்பும் தனித்தன்மை கொண்டதாகவும் சமூகத்தைச் சீர்படுத்துவதாகவும் பிறர் மனத்தைப் புண்படுத்தாதவாறும் அமைதல் வேண்டும். வாழுகின்ற நாட்டின் அரசியலமைப்புக்கும் சட்டத் திட்டத்திற்கும் உட்பட்டு, அந்தந்த நாட்டுச் சூழலுக்கேற்பப் புனைவிலக்கியங்கள் படைப்பதே சிறப்பாகும். மேலைநாட்டு இலக்கியங்களைப் படித்துவிட்டு, அவற்றிலுள்ள கோட்பாடுகளை மட்டும் உள்வாங்கிக்கொண்டு எழுதுவதைவிட, தான் சார்ந்த மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு எழுதும் இலக்கிய வகைகளே மக்களால் பெரிதும் போற்றப்படும். மக்களின் மனத்திலும் நிலைத்து நிற்கும். எனது கதைகளாகட்டும் அல்லது கவிதைகளாகட்டும் அனைத்தையும் இத்தகைய அணுகுமுறையிலேயேதான் இருக்கும்.

ஆரம்ப நிலையில் மரபுக்கவிதைகள் சார்ந்தே என பயணம் தொடர்ந்திருப்பினும் பின்னாளில் புதுக்கவிதையின் வடிவத்தில்தான் என் கவிதைவயல் கருத்துகளால் சூல் கொண்டது.
மேலும் எந்த ஒரு படைப்பும் நமக்கானது அல்ல. அது நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மனஅலைகளையும் மற்றவர்களிடம் கடத்திச் செல்லக் கூடியவையாக இருத்தல்வேண்டும்.  அந்தக் கடத்தல் நிகழ்வினைச் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் எளிமையான இலக்கிய வடிவங்களாலேயே சாத்தியமாகும். எளிமையே நான் சார்ந்த கவிதைகளின் வடிவமாகும்.

3)   கேள்வி:  35 வருடங்களுக்கு முன்பு எழுத்துத் துறையில் இருந்த தீவிரத்தைத் தற்போது எது மீட்டெடுக்க வைத்தது?

தீவிரமான வாசிப்புதான் அதற்குக் காரணமாகும். 2004 லிருந்து 2011 வரை எதையும் எழுதாமல் (படைப்பிலக்கியம்) வாசிப்பில் தீவிரமாய் இருந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் ஜெயமோகன், எஸ், ராமகிருஷ்ணன், வண்ணதாசன், ஆதவன், அசோகமித்திரன், முத்துலிங்கம், தோப்பில் மீரான், இமையம், சிவகுமார் மற்றும் பலரின் படைப்பின் நேர்த்தியும் அவரவர் சார்ந்த சமூகச் சூழலின் பதிவுகளையும் வாழும் விளிம்புநிலை மனிதர்களையும் கண்ணுற்றபோது, எனக்குள் அடங்கியிருந்த அந்த இலக்கியமனம் ஒரு தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் சிங்கப்பூரின் சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளநிலைப் பட்டக்கல்வி பயின்றபோது சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம்வரை பாடமாகப் பயின்றபோது, எனக்குள் இருக்கும் படைப்பாளனின் மனம் விசாலமடையத் துவங்கியது.

 புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், கல்கி, ந.பிச்சமூர்த்தி, ரா.கி. ரங்கராஜன், கி.வ.ஜகந்நாதன், தி.ஜானகிராமன், மௌனி போன்றோரின் கதைகள் எனக்குள் மீள்பார்வைக்கு வந்து என்னை மீட்டெடுத்தது. அந்த மீட்டெடுப்புகள்தான் இலக்கியவெளியில்  எனது இந்த மறுபிரவேசம்.  2012 இல் அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் என்ற சிறுகதை என் இலக்கியப் பயணத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் உரிமையாளர் மற்றும் தங்கமீன் வாசகர் வட்ட அமைப்பாளர், நண்பர் திரு பாலு மணிமாறனின் தொடர் ஊக்கங்களும் சிரம்பான் எம்.கருணாகரனுடனான தொடர் இலக்கியக் கலந்துரையாடல்களும் எனது இலக்கியப் பயணத்தை வேறொரு மனவெளிக்கு அழைத்துச் சென்றது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்தையும் அது சார்ந்த தனி மனிதனையும் கூர்ந்து நோக்கி, அதன் பலம் பலவீனங்களை படைப்பிலக்கியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற வெறி இப்போது இன்னும் அதிகமாக இருக்கிறது.

4)   கேள்வி:  காகித ஊடகங்கள் தராத வாய்ப்பினை ஒரு கவிஞனுக்கு மிக முக்கியமாக புதிய வரவான ஒரு படைப்பாளிக்கு இணையத் தளம் வழங்குகிறது. இவை நாளை இலக்கியமென நிலைபெறுமா?

இன்றைய நவீன உலகமயத்தில் இணையத்தளங்களின் வளர்ச்சி என்பது இலக்கியத்தை மற்றுமொரு நவீன ஊடகங்களுக்குள் அழைத்துச் செல்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். காகித ஊடகங்களில் தனிமனித ஆதிக்கம் இருக்கும். அதன் செயல்பாடுகளில் சுயநலம் கலந்துநிற்பது இன்றும் என்றும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. சமூகத்துக்காக, இன எழுச்சிக்காகப் பத்திரிக்கைளின் செயல்பட்ட காலங்கள் போய், தனி மனிதப் போற்றுதலுக்காகவும் தேவைகளுக்காகவும் செயல்படும் காலம் இது. இங்கு தெரிந்தவர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். இத்தகையச் சூழலில் புதிதாக எழுத வருபவர்களுக்கு இணையத்தளம் நல்ல அறிமுகக் களமாகச் செயல்பட்டுவருகிறது.

காகித ஊடகங்களின் பரவுதல் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் கட்டுப்பட்டது. ஆனால் இணையத்தளத்திற்கு அந்த எல்லைகள் கிடையாது. இந்த உலகில் எந்த மூலையில் உள்ள ஒருவரும் தன் எண்ணங்களைப் பதிவு செய்து உலகம் முழுவதும் பரவுதல் என்பதும் தம் எண்ணங்களை யாருடைய குறுக்கீடும் இல்லாமலும் சொல்லவேண்டியவற்றை முழுமையாகக் கூறுதல் என்பதும் இங்கு மட்டுமே சாத்தியப்படும். அனால், இணையத்தளங்களின் பலம் பலகீனம் என்பதும் இவைதான். கட்டுப்பாடற்றப் பதிவுகள், தரமற்றப் பதிவுகள் இலக்கியங்களாகப் பதிவேற்றம் செய்யப்படும்போது, வாசகனின் விரிந்த அனுபவம் மட்டுமே இலக்கியத் தரத்தினை இங்கு நிலைநாட்டும். 

ஆனால், இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்அனைத்துமே இலக்கியம்தானா? என்பது இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும். அதுபோலவே எழுதும் அனைத்தும் இலக்கியமா? என்பதும் இங்கு நம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றுதான். இலக்கியத்தின் தரம் என்பது வாழும் காலத்திற்கு ஏற்ப மாறுபடக்கூடியதுதான். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு வகை இலக்கியம் முன்னிலைப்படுத்தப்படுவது என்பது இங்கு தவிர்க்க இயலாத ஒன்று. மரபுச் சார்ந்து, நவீனம் சார்ந்து, பின் நவீனத்துவம் சார்ந்து என படைப்புகள் மாறி மாறி எழுச்சிப் பெறுவதும் வீழ்வதும் என்பது இங்கு தவிர்க்க இயலாத ஒன்று. இதற்கு ஒரு நல்ல மேற்கோளாக ப.சிங்காரம் எழுதிய, புயலிலே ஒரு தோணி’, கடலுக்கு அப்பால் போன்ற நாவல்களைக் கூறலாம். 1950 இல் எழுதப்பட்ட கடலுக்குள் அப்பால் என்ற நாவல், ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பப்பட்டு திரும்பி வந்தது என ப. சிங்காரம் அவர்களே தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். அதுமட்டுமல்லாமல் அவரின், புயலிலே ஒரு தோணி நாவல் பற்றி  குறிப்பிடும்போது அந்த நாவல் அன்று கவனிக்கப்படவில்லை என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இன்று ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன் போன்றோரால் சிறந்த ஒரு இலக்கியப் படைப்பாக இந்த இரு நாவல்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது என்பது இங்கு நாம் தீவிர பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய ஓர் இலக்கியப் பார்வையாகும்.

5)   கேள்வி:  ஈழத்துக் கவிஞர் சேரனின் கவிதைகளை வாசித்துள்ளீர்களா? அவரது கவிதையொன்றில் 27 விமானத் தாக்குதலுக்கும் 30 ஹெலிகாப்டர் தாக்குதல்களுக்கும் மத்தியில் பிழைத்து எழுந்திருப்பதாகச் சொல்லியுள்ளார். அவற்றுக்கு இடையில் அவர் இயங்கினார். ஒரு கவிஞரை எது இப்படி ராட்சதத் தனமாக இயங்க வைக்கிறது?

இரவல் படையில் புரட்சி எதற்கு என்று சேரன் எழுதியதைப் படித்த போதே அவரை அடையாளம் கண்டுகண்டேன். இக்கால மனிதனின் சிக்கல்கள், அவன் உணர்வுகளின் சிந்தனை வீச்சுகளை வெறும் இலக்கண மரபுக்குள் அமுக்கிப் போடாமல் எழுதும்  அவரின் படைப்பிலக்கியம் தமிழ்க்கவிதைச் சூழலில் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

என்ன நிகழ்ந்தது
எனது நகரம் எரிக்கப்பட்டது
எனது மக்கள் முகங்களை இழந்தனர்.......
........
முகில்கள் மீது நெருப்பு
தன் சேதி எழுதியாயிற்று
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக...

இப்படியெல்லாம் மலேசியாவிலும் சிங்கப்பூரில் இருந்துகொண்டு நம்மால் எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் வெறும் சொல்லாடல்களாக மட்டுமே அந்தப் படைப்பு அமைந்துவிடும். 27 விமானத் தாக்குதல் மற்றும் 30 ஹெலிகாப்டர்கள் தாக்குதல்களுக்கும் மத்தியில் அகப்பட்டு அனுபவித்த அந்த வேதனை அதன் தாக்கமும்தான் அவர் எழுத்தின் மறுவடிவம்.  வாழ்வில் எந்த நோக்கத்தை நோக்கி  ஓடிக்கொண்டிருக்கிறோமோ அதில் தீவிரமாய் இயங்கும்போது இங்கு அனைத்தும் சாத்தியப்படக்கூடியதுதான். இதுவே சேரனையும் இராட்சதத் தனமாக இயங்க வைத்திருக்கலாம்.  வாழ்க்கையும் வாழ்க்கைச் சார்ந்த  அனுபவங்களுமே படைப்பாளனின் ஆக்கத்துக்கு உந்துதல் சக்தியாகும். ஏட்டில் படித்தும் சிலர் சொல்வதைக் கேட்டும் எழுதலாம். அது வெறும் வாசிப்பு அனுபவமாகவே மட்டுமே வாசகனிடம் போய்ச்சேரும். ஆனால் அந்த அனுபவத்தை நாம் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு முழுமையான ஆத்மப்பூர்வமான படைப்பை நம்மால் வெளிக்கொணரமுடியும்.

6)   கேள்வி: தங்களின் பார்வையில் மலேசிய கவிதைத் துறைக்கும் சிங்கையின் கவிதைத் துறைக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

வரலாற்றுப் பின்னனியில் இரண்டுமே ஒன்றாகவே இருந்தாலும் இன்று அந்த ஒரே மண் வெவ்வேறு மண்வாசனையோடு இயங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சிங்கப்பூர் தனி நாடாக சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை ஒன்றாகப் பார்க்கப்பட்ட சிங்கப்பூர் மலேசிய இலக்கியம் தனித்தனியாக கவனிக்கப்பட்டது. எல்லைக்கோடுகள்தான் அவர்களை மலேசியர் சிங்கப்பூரர் என பிரித்து வைத்திருந்தது எனலாம். மற்றபடி இலக்கியப்பயணம் இருநாடுகளுக்கும் பொதுவானதாகவே இருந்தது. உறுதியாகக் கிடைத்த ஆதாரங்களின் வழி, 1863 ஆம் ஆண்டு முத்துகருப்பன் செட்டியார் இயற்றியுள்ள தண்ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரியவிருத்தம் என்ற நூலே மூத்த நூலாகும். இந்த நூலே மலாயா மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது என்றும் கூறப்படுகிறது. (ஆதாரம். சிங்கப்பூர்த் தமிழ்க்கவிதை வரலாறு, டிசம்பர் 2012, முனைவர் கோட்டி திருமுருகானந்தம்). சிங்கை முகிலன், கா.பெருமாள், ஐ.உலகநாதன், க.மு,து இக்பால், முருகதாசன், ந.பழநிவேலு, மு.தங்கராசன், பரணன், இக்குவனம், அமலதாசன், இளமாறன் போன்றோர் சிங்கையின் கவிதைத் துறையில் தங்களின் பங்களிப்பை ஆற்றியுள்ளவர்களில் சிலர்.

மரபிலிருந்து புதுக்கவிதை நோக்கி மலேசிய கவிதை வளர்ந்தபோது சிங்கையிலும் அந்தப்போக்குக் காணப்பட்டுள்ளது. சிங்கை கா. இளங்கோவனின் விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து என்ற புதுக்கவிதைத் தொகுப்பு நூல் இரண்டு நாடுகளிலுமே கவிதைத்துறையில் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வந்து புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது எனலாம்.

இதில் வருத்தப்படக்கூடிய ஒன்று, மலேசிய கவிதைத் துறை இன்றும் மலேசியர்களால் படைக்கப்பட்டு மலேசிய இலக்கியமாக வளர்ந்து சிறப்புப் பெற்றிருக்கும் வேளையில் சிங்கப்பூர்க் கவிதைத் துறை தன் அடையாளத்தை இழந்துவிடக்கூடிய அபாயத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.

சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளில் பல தற்காலத் தமிழகக் கவிதைகளின் சாயலிலேயே அமைந்துள்ளன. அவ்வாறல்லாமல் சமூகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிங்கப்பூருக்கே உரிய பிரச்சனைகளைக் கருவாகக் கொண்டு இலக்கியம் படைப்பது நல்லது. தமிழ்ச் சமூகத்தின் பொதுத் தன்மைகளை மட்டும் சொல்லாது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் தனித் தன்மையையும் குறிப்பிடுவதாக அமைவது மேலும் பெருமை சேர்க்கும் (சிவகுமரன், சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கியம்) என்று முனைவர் சிவகுமரன் கூறியுள்ள கருத்து சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளின் போக்குகளைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

இன்றைய சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதை பரப்புகளில் வாசம் செய்பவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர்களும் நிரந்தரவாசிகளும் என்றால் அது மிகையாகாது. அவர்களின் படைப்புகளும் பெரும்பாலும் தமிழ்நாட்டையும் அவர்கள் நாட்டின் சூழலையும் சார்ந்தே படைக்கப்படுகின்றன. பாலு மணிமாறன் போன்று ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். சிங்கையில் இயங்கும் பல இலக்கிய அமைப்புகளின் நிகழ்வுகளில் இவர்களின் பங்களிப்பே அதிகமாகவும் ஏன முழுமையாகவே இருப்பதகவே உணரப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சி இவர்களாலேயே உறுதிச் செய்யப்படும் நிலை ஏற்படலாம். எது சிங்கப்பூர் இலக்கியம் என்ற கேள்வியும் பிற்காலத்தில் முன் வைக்கப்படும் நிலையும் உருவாகலாம்.

சிங்கப்பூரின் கவிதையுலகம் தன் அடையாளத்தைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் தீவிரமான இளைய படைப்பாளர்களை மலேசியக் கவிதையுலகம் ஈன்றெடுத்துள்ளது. மரபு, நவீனம், பின்நவீனத்துவம் என எந்தத் துவமாக இருந்தாலும் உலக அளவில் அனைத்து படைப்பாளர்களுடனும் போட்டிபோடும் தனித்தன்மையோடு வளர்ந்துவிட்ட மலேசியாவின் கவிதை வளர்ச்சி பிரமிப்பு ஊட்டும் வகையிலேயே இருக்கிறது. நா.பச்சைபாலன், ஜாசின் தேவராஜன், ப.ராமு, எம்.கருணாகரன், வல்லினம் குழுவினர் போன்றவர்கள் மலேசியக் கவிதைச் சூழலில் சிறப்பாக தம் பணிகளை ஆற்றி வருகின்றனர்.

7)   கேள்வி:  இன்றைய பின்நவீனத்துவக் கவிதையின் கோட்பாடு என்பது ஒரு கவிதையின் பன்முகப் பார்வையில் அதாவது அதனுள் விரவிக்கிடக்கும் பல்வேறு நுட்பமான பார்வையில் அணுகுவது என்பது. உங்களின் அறிதல்?

கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் நான். கோட்பாடுகளுக்குள் என் படைப்புலகம் அடக்கமாகிவிடக்கூடாது என்பதில் நான் தீவிரமாய் இருப்பவன். ஒரு படைப்பாளனுக்கு தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவற்றையும் நடப்பவற்றையும் கூர்ந்தும் நுட்பமாகவும் கவனிக்கும் போக்கு அவசியம். அப்போதுதான் வாழ்வியலைப் பற்றி அவனால் எடுத்தியம்பமுடியும். அந்த இலக்கியமே அவனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் பிரதிபலிப்பதாகவும் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கும். கோட்பாடுகள் அந்தந்தக் காலத்திற்கேற்ப மாறக்கூடியவை.

பின் நவீனத்துவத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அதைப் பற்றி சில அடிப்படை அறிமுகம் தேவை என்றே நினைக்கிறேன். பின் நவீனத்துவம் என்பது ஒரு வாழும் முறை. அந்த வாழ்தல் முறை சரியானதா? தவறானதா? அப்படி வாழ்தல் முறையா? எனக் கேட்டால் அதற்கு யாரிடமும் பதில் இருக்காது. ஒவ்வொரு மனிதனின் உளம் சார்ந்த வாழ்தலும் பின் நவீனத்துவம்தான்.

பின் நவீனத்துவம் என்பது நமக்குப் புதிதல்ல. சங்க இலக்கியத்திலும் அதற்கு நல்ல உதாரணம் இருக்கிறது. தங்களுக்குள் பகைமை கொண்ட மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தனித்தனியாகப் போரிட்டுப் பாரியைத் தோற்கடிக்க முயன்று தோல்வியைத் தழுவினர். பாரியைத் தோற்கடிக்க மூவரும் ஒன்று சேர்ந்து போரிட்டதே ஒரு வகை பின் நவீனத்துவம்தான்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், மலேசிய அரசியலிலும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு இருக்கிறது. கொள்கைகள், இலட்சியங்கள், போராட்டங்கள் என அனைத்திலும் முரணாக இருக்கும் பாஸ் கட்சிக்கும் ஜனநாயக செயல் கட்சிக்கும் இருக்கும் கூட்டெல்லாம் உண்மையில் அரசியல் சார்ந்த பின் நவீனத்துவ வெளிப்பாடாகும்.  அரசியல் வெளியில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்தப்போக்கு பின்னர் பண்பாடு, இலக்கியம் என மனிதம் சார்ந்த  அனைத்துத் துறைகளிலும் தன் தாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. இன்னும் சுருக்மாகச் சொல்வதாக இருந்தால்,

மனிதனின் புறவாழ்வு என்பது நவீனம்.
அவனின் அகவாழ்வு என்பது பின் நவீனத்துவம்.

நவீனப் படைப்புகளில் நிலைநிறுத்துதல் என்பதும் அறிவிப்பு செய்தல் என்பதும் நோக்கமாக இருக்கும். ஒரு செய்தி இருக்கும். தான் சொல்ல வந்ததைப் படைப்பாளன் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்லாமல் சொல்லிவிடுவான். ஆனால் பின் நவீனத்துவகம் அவ்வாறு செய்யாமல், சரியா தவறா போன்ற விவாதங்களுக்குள் நுழையாமல் அனைத்திலும் கேள்விகள் எழுப்பி அவற்றிற்கு விடுதலை அளிக்க முயலும். நம்பிக்கை சார்ந்த அர்த்தங்களைப் பெற்றிருக்கும் கூறுகளுக்கு அதிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பை உருவாக்கும். மனிதனின் சிதையுண்ட தன்மைக்கு நவீனத்துவம் வருத்தம் கொள்ளும். பின் நவீனத்துவமோ அதைக் கொண்டாடும்.

ஒரு கவிதையினை பன்முகப் பார்வையில் அணுகுவது என்பது அக்கவிதையை பல்வேறு நுட்பமான பார்வையில் அணுகுவதே ஆகும்.  அந்தப் பார்வைகளின் இறுதியில் ஒரு தீர்க்கமான முடிவு என்பது இருக்காது. எதையும் முன்மொழியாமல் எந்த விதிகளையும் பின்பற்றாமல் சுதந்திரமாக விவாதங்கள் முன்வைக்கப்படும். அலசி ஆராயப்படும் போக்கே அதிகமாக இருக்கும். கட்டுடைத்தல், மரபுகளைக் கேள்விக்குள்ளாக்குதல், தொடர்ச்சியற்ற நிகழ்வுகளை அடுக்கிக் காட்டும் விதத்தில் எனத் தனித்தனியாக சில படைப்புகளை பின்நவீனத்துவ அடையாளம் கொண்டவையாகச் சுட்டலாம்.

இறுதியாகப் படைப்பாளன் என்பவன் வாழ்வியலைச் சார்ந்து தன் படைப்புகளைப் புனைந்தால் காலத்தால் அது நிலைத்து நிற்கும. கோட்பாடுகளை முன்நிறுத்தி படைப்பை உருவாக்கம் செய்தல் என்பது யதார்த்தத்தை விட்டு நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் என்பதையே நிலைநிறுத்தும். படைப்பாளன் வாழ்வியலைக் கூர்ந்துபார்த்து அதைத் தன் படைப்பில் நடமாடவிடவேண்டுமேயொழிய கோட்பாடுகளை அல்ல. அந்தப் படைப்பானது எந்தத் தளத்தில் எந்தக் கோட்பாட்டில் இயங்குகிறது என்பதை இலக்கிய விமர்சகர்களும் ஆய்வாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். அது அவர்களின் கடமையும்கூட.  

                       
8) கேள்வி:  கவிதையைக் பற்றி தங்களின் பார்வை?

கவிதை காலத்தால் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை நமது மரபு எதிர்க்கவில்லை என்பது நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, முன்பில்லா வேறுவகைப் படைப்பை விருந்து எனப் பெயரிட்டு வரவேற்றுள்ளார் தொல்காப்பியர். (தொல்காப்பியம் இலக்கண நூலின் ஆசிரியர்)

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

எனப் பவணந்தியார் (நன்னூல் ஆசிரியர்) சொல்லியிருப்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதிமிக்க நவகவிதை எனப் பாரதியார் சொன்னதுபோல் அனைத்து வகையிலும் புதிய வகைகளை உள்வாங்கி இன்றைய கவிதையின் தளம் பன்முகத்தன்மையுடன் விரிந்து பரந்துள்ளது.

சங்கப்பாடல்கள் தொடங்கி இன்றைய மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக், லிமரைக்கூ, சானெட், குக்கு என வளர்ந்துவிட்ட இன்றையச் சூழலில் எத்தைனையோ வித சோதனை முயற்சிகள் கவிதைப் படைப்பிலக்கியத்தில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கின்றன. பாவின வரிசையில் கவிதை எழுதுவதற்கு முதலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணத் தரவுகள் அவசியமாகின்றன. மேலும் மரபிலிருந்து புதுக்கவிதை வேறுபடுவதை வெளிப்படையாகக் காட்டுவதும் இந்தப் புதுக்கவிதையின் யாப்பை மீறிய வடிவமேயாகும். இதையும் தாண்டி கவிதை என்பது இன்று நவீனத்துவம், பின்நவீனத்துவம் என தன் அகலத்தையும் ஆழத்தையும் விரிவுபடுத்தியுள்ளது.

கலையின் வடிவம் எதுவாக இருந்தாலும் அது உணர்வின் பாற்பட்ட ஒன்றாகவே இருக்கும். எந்த ஒரு கலைப்படைப்பும் உணர்வுகளின் கடத்தல் என்றே கூறப்படுகிறது. பனி கொட்டுகிறது, தீ சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வையும் வலியையும் வாசிப்பவன் உணரத்தக்க வகையில் ஒரு கவிதை அமையவேண்டும். அப்போதுதான் கவிதை அங்கே சிறந்து நிலைத்து நிற்கும். வெறும் சொற்களின் தூவல்களைக் கொண்டு வார்த்தைகளை அடுக்கி எழுதும் எழுத்து என்பது நிலைக்காது. ஒரு பாறையின் தேவையற்றப் பகுதிகளை விலக்கினால் அது ஒரு நல்ல சிற்பமாகும். அதுபோலவே எழுத்தில் தேவையற்ற அலங்காரச் சொல்லாடல்களை விலக்கி நாம் சார்ந்த சமூகத்தின் பன்முகத்தை எழுத்தெனும் உளிகொண்டு நாம் செதுக்கினால் கவிதை சிறக்கும்.

இங்கு கவனத்தில் கொள்ளக்கூடிய இன்னொன்றும் உண்டு. கவிதையுலகில் மரபை உடைக்கலாம். ஆனால் அதைக்கற்றுக்கொண்டு உடைப்பதே உத்தமமாகும். செய்யுள், மரபுக்கவிதை என்பதெல்லாம் நம் இலக்கியச் சொத்துக்கள். தமிழுக்கு மட்டுமே சொந்தமான தனித்துவமான இலக்கிய மரபுகள் அவை. தமிழின் பெருமைகள் அவை. தமிழினத்தின் மாண்பு அவை. அவற்றைக் காப்பது நமது கடமையும்கூட.

9) கேள்வி: மலேசிய சிங்கப்பூர்க் கவிதைகளின் தனித்தன்மை குறித்து?

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு வாசம் உண்டு. அந்த வாசத்தை நுட்பமாகச் சுவாசித்து உள்வாங்கிக்கொண்டு மீண்டும் அதைக் கலைநுட்பத்துடன் வெளிக்கொணர்தல் என்பது அந்த மண்ணுக்கே உரிய தனித்துவமாகும். வாழும் தன் மண் சார்ந்து, தன் சமுதாயம், தன் இனம், தன் மொழி, தன் மரபு, தன் பண்பாடு அதன் தன் விழுமியங்கள் சார்ந்து இலக்கியம் படைத்தல் எனபது அந்தந்த மண் சார்ந்த தனித்தன்மையின் அடையாளங்களாகும். ஒட்டுமொத்த தமிழினத்தின் பொதுத்தன்மைகளை முன்வைப்பதுமட்டுமல்லாமல், மலேசியா சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மைகளை முன்வைப்பது என்பது இங்கு நம் இலக்கியத்தின் அடையாளமாகவும் தனித்துவமாகவும் குறிப்பிடப்படுகிறது.

உன் வருகைக்குள்
ஒரு நூறு ஆண்டுகள்
புதையப்போவது புலப்பட்டிருக்காது (எம்.கருணாகரன் கணங்களின் சந்திப்பு)

ரப்பர் மரங்களின் வருகையினால் தோட்டங்களில் மூழ்கிப்போன, தொலைந்துபோன ஓர் இனத்தின் வரலாற்றுச் சுவட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வரிகள், மலேசியத் தமிழர்களின் வரலாற்றுக் குறியீடாகும்.

இதுபோலவே தற்கால மலேசிய அரசியல் சூழலை இப்படிப் பதிவு செய்கின்றன ந.பச்சைபாலனின் வரிகள்.

முன்னெப்போதும் இல்லாமல்
ஒற்றுமை விரிவாகப்பேசப்படுகிறது
ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஏற்பாடாகின்றன
இனிப்பு அறிவிப்புகள் செய்திகளாகின்றன
வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்படுகின்றன (திசைகள் தொலைத்த வெளி)

ஒரு காதல் கவிதையில் மலேசிய வார இதழைத் தவழவிடுகிறார் ப. ராமு இப்படி,

உன்னை விட
அழகான கவிதை
நயனத்தில் வரவில்லை

மேலும் சிங்கப்பூரில் உள்ள வாழ்வியல் சூழலை, அதற்குரிய தனித்தன்மையை,

முதியவர்களின் பணிப்பெண்கள்
முதியோர்தம் மரணங்களால் மட்டுமே
காணாமல் போவார்கள் (சக பயணிகளோடு சில உரையாடல்கள்)

எனப் பதிவு செய்கிறார் பாலுமணிமாறன்.

 தஞ்சோங் பாகாரில் இருந்த இரயில் நிலையத்தின் கடைசி இரவு ஜூன் முப்பது 2011. அதன் தாக்கத்தை இயல்பாகச் சிங்கப்பூரின் இன்னுமொரு கவிதை,

என்னவளைப்பிரியும் பொழுதெல்லாம்
அவள் விழிகளில் பனிமுட்டைகள் பளிச்சிடும்
அந்த மஞ்சள் நிற இரவுகளை
தஞ்சோங் பாகாரில்
இனியும் எங்கே தேடுவது? (நண்பன்)

எனப் பதிவு செய்துள்ளது.

இப்படியாக நாம் வாழும் நாட்டின் வாழ்வியலை நுட்பமான பார்வையுடனும் கவனக்குவிப்புடனும் உள்வாங்கிக்கொண்டு  கவிதையாக்கும்போது அது நம் நாட்டுக்கே உரிய தனித்தன்மையோடு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

(நன்றி: இலக்கிய வெளி 11, தினக்குரல் நாளிதழ்)

                                

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

9 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நான் படைத்த கட்டுரை

சிங்கப்பூர் வாழ்வியலைச் சித்தரிக்கும் தற்காலச் சிங்கப்பூர்ச் சிறுகதைகள் எம்.சேகர்


உரைநடை இலக்கிய வகையில் புனைவிலக்கியமே இன்று பலராலும் புனையப்பட்டு பெரும்பாலோரால் வாசிக்கப்பட்டும் வருகிறது. அந்தப் புனைவிலக்கியங்கியங்களில் சிறுகதையும் கவிதையும் மட்டுமே தனது ஆளுமைகளை விரிவுப்படுத்திக்கொண்டு ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்றி நிறுவி இன்னும் புதுப்புது கிளைமுகங்களை நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.


ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின்போது அவர்களால் தொழிலாளர்களாகத் தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான அன்றைய மலாயாவிற்குத் தென்னிந்தியத் தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கொண்டு வரப்பட்டு தோட்டப்புறங்களிலும் சாலை மற்றும் இரயில் பாதை நிர்மாணிப்புகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டனர். அந்தத் தலைமுறையின் வாரிசுகளான இரண்டாம் மூன்றாம் நான்காம் தலைமுறையினரின் தமிழாக்கங்களைத்தான் இன்று மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ்வியலைச் சித்தரிக்கும் புனைவிலக்கியங்களாக அடையாளம் காட்டப்படுகின்றன. அவ்வகையில் சிங்கப்பூரின் புனைவிலக்கியங்களில் ஒன்றான சிறுகதை இலக்கியம் எவ்வாறு சிங்கப்பூர் வாழ்வியலைச் சித்தரிக்கின்றது என்பதை ஆய்வுக்களமாகக் கொண்டு எனது கட்டுரைப் படைப்பாக உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படவுள்ளது.


தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய ஒரு முன்னோட்டப் பார்வை


தமிழில் சிறுகதை வடிவத்திற்குப் பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் சிறுகதையே முதன்மையானது எனவும் ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வே.சு. ஐயர் எழுதிய, ‘மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுப்பிலுள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை எனவும் பல இலக்கிய ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர். புதுமைப்பித்தனின் கதையாக்கம் நவீன படைப்பாக்கத்திற்கு வித்திட்டு இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களால் தமிழியல் படைப்புகள் பெருகிவருகின்றன. தமிழ் நாட்டை அடுத்து மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளுடனும் தமிழர் மரபின் கூறுகளுடனும் விழுமியங்களுடனும் சமூகத் தேவைகளுக்கேற்பவும் சிறுகதைகள் புனையப்பட்டு வருகின்றன.


மலேசிய சிங்கப்பூர் இலக்கியச் சூழல் – வரலாற்றுப் பின்னனியுடன்


சிங்கப்பூரின் தொடக்கக்கால இலக்கியச் சூழலை ஆய்வாளர்கள் மலாயாவுடனான வரலாற்றுப் பதிவோடு இணைத்தே பதிவு செய்துள்ளனர். டாக்டர் அ. வீரமணி அவர்கள், மலாயா – சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் வரலாற்றினை மூன்று காலக்கட்டமாக ஆய்வு செய்துள்ளார்.

அ)  1947 க்கு முன்னுள்ள காலம்
ஆ) இரண்டாவது உலகப்போர் முடிவுற்றதிலிருந்து மலாயா சுதந்திரம் எய்திய ஆண்டு வரையுள்ள காலம் (1947 – 1957)
இ) 1957 லிருந்து 1968 வரையுள்ள காலம்

எனப் பிரித்து, இந்த மூன்று காலக்கட்டங்களும் வரலாற்று அடிப்படையில் எழுந்த காலப்பிரிவேயின்றி, சிறுகதையினுள் நிகழ்ந்த மாற்றங்களைக்கொண்டு வரையறுக்கப்பட்ட தீர்வான முடிவல்ல என்கிறார். இதற்கு அவர் தரும் விளக்கம் மலாயா சிங்கப்பூர்த் தமிழிலக்கிய வளர்ச்சி பெரிதும் அரசியல் மாற்றங்களாலேயே நிகழ்கின்றன என்கிறார்.


சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் – காலப் பகுப்பு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம் என்ற நூல், சிங்கப்பூரின் இலக்கியத்தின் காலப்பகுப்பை

அ) சிங்கப்பூர்க் குடியரசு நிலைக்கு முந்திய பகுதி (1887 முதல் 1965 வரை)
ஆ) சிங்கப்பூர்க் குடியரசு நிலைக்குப் பிந்திய பகுதி (1965 முதல் 2000 வரை)

எனப் பகுத்துக் காட்டுகிறது.  மேலும் குடியரசு நிலைக்கு முந்திய காலப்பகுதி இலக்கிய வரலாற்றின் பொதுநிலையிலும் குடியரசு நிலைக்குப் பிந்திய காலப்பகுதியில் இலக்கிய வளர்ச்சி மிகுதியாக இருப்பதால் அக்காலப் பகுதி இலக்கிய வரலாற்றை இலக்கிய வகையின் அடிப்படையிலும் இந்நூலின் கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளனர் டாக்டர் சுப. திண்ணப்பன் அவர்களும் மற்றும் டாக்டர் ஏ. ஆர். ஏ. சிவகுமாரன் அவர்களும்.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் இயல்பு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் என்பது சிங்கப்பூர் மண்ணின் மணம் கமழும் வகையிலும் சிங்கப்பூர்ப் பின்னணியைச் சித்தரிக்கும் வகையிலும் சிங்கப்பூரர்களால் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்படும் இலக்கியம் என வரையறைக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது.

பைரோஜி நாராயணன் மற்றும் சுப. நாராயணன் இருவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள், நவீன இலக்கியப் பயிற்சி பெறுவதற்காகக் கதை வகுப்பு தொடங்கியதுபோல், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் மூலம் ரசனை வகுப்பு ஒன்றையும் சுப. நாராயணன் நடத்தி, சிங்கப்பூர்ச் சிறுகதை ஆக்கத்திற்குத் தன் உழைப்பை நல்கியுள்ளார். இதனையடுத்து எழுத்தாளர் பேரவை தமிழ் முரசில் உருவானது. வை. திருநாவுக்கரசுவும் அ. முருகையனும் தமிழ் முரசின் ஆசிரியர் கோ. சாரங்கபாணியுடன் சிறுகதை வளர்ச்சிக்குப் பல முயற்சிகள் செய்தனர்.

1952 இல் கோ. சாரங்கபாணி தோற்றுவித்த தமிழர் திருநாளும் மாணவர் மணிமன்றமும் சிங்கையின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு இன்றுவரையிலும் பணியாற்றி வந்துள்ளன. இன்றைய இலக்கியச் சூழலில் மலேசிய சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் இயல்பையும் அளவையும் பத்திரிக்கைகளே நிர்ணயம் செய்துள்ளன என்றால் அது மிகையாகாது. சிங்கையில் தமிழ் முரசு நாளிதளோடு தங்கமீன் இணைய இதழும் அவ்வப்போது வெளிவரும் சிறுகதைத் தொகுப்புகளும் சிறுகதையின் வளம் உயர்வு பெறுவதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. இன்றைய சூழலில் தங்கமீன் வாசகர் வட்டத்தின் மாதந்தோறும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டிகளும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் நடத்தும் கதைக்களத்தின் ஒரு பக்கக் கதைகளின் போட்டிகளும் சிறுகதை இலக்கியத்திற்கு நல்ல உரங்களாக இருக்கின்றன. மேலும், சிறுகதைகளில் சிங்கை நாட்டு மண்ணின் மணமும் இந்நாட்டு இயற்கை எழிலும் இடங்களின் பெயரும் பல்லின மக்கள் வாழும் வாழ்வியல் சூழலும் பல்லின கலாச்சாரமும் நிறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.


இன்றைய சிங்கப்பூர்ச் சிறுகதைகளில் சிங்கப்பூரர்களின் வாழ்வியல்

இலக்கியம் மனிதனிடமிருந்தும் அவனின் வாழ்க்கையிலிருந்தும் தோன்றியதாகும். மனித வாழ்வில் அவன் சார்ந்த சமூகத்தின் தொடர்பின் ஒட்டுமொத்த அனுபவத்தின் பாய்ச்சலாகவே படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன. இத்தகைய படைப்பிலக்கியங்கள் மனிதனின் அகநிலை நிகழ்வுகள் மற்றும் புறநிலை நிகழ்வுகளின் ஒரு பதிவாகவே அங்கம் வகிக்கின்றன. இக்கூற்றின்படி சிங்கப்பூர்ச் சிறுகதைகள் வாழ்வியலை அதாவது இத்தகைய அகநிலை மற்றும் புறநிலை நடப்புகளைப் பதிவு செய்திருக்கின்றன. முன்னோடித் தலைமுறை எழுத்தாளர்களான மு.சு.குருசாமி, சே.வே.சண்முகம், மு.தங்கராசு, நா. கோவிந்தசாமி,  ஜே.எம்.சாலி, மா. இளங்கண்ணன், பி. கிருஷ்ணன்,. பழநிவேலு, சிங்கை தமிழ்ச்செல்வம், சங்கரி இராமனுஜம், கண்ணம்மா, ஏ.பி.சண்முகம், இராம. கண்ணபிரான், பொன்.சுந்தரராசு என பலர் அவர்கள் வாழும் காலத்தின் வாழ்வியலை மிகவும் நேர்த்தியாகத் தங்களின் சிறுகதைகளில் பதிவு செய்துள்ளனர்.


இனி நான் எடுத்துக்கொண்ட கட்டுரைத் தலைப்பிற்கேற்ப தற்காலச் சிங்கப்பூர்ப்   படைப்பாளர்களின் ஆக்கங்களான சிறுகதைகளில் சிங்கப்பூரின் தனித்தனமையும் அதன் வாழ்வியல் சூழலும் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்போம்.


சிங்கப்பூர்ப் படைப்பாக்கத்தில் தனி முத்திரைப் பதித்துத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழியில் எழுதிவரும் திருமதி. கமலாதேவி அரவிந்தனின்  2012 இல் வெளியான சூரிய கிரஹணத்தெரு என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘ஒரு நாள் ஒரு பொழுது என்னும் சிறுகதை, சிங்கப்பூர் நாட்டின் திடமான சட்டத்திட்டத்தையும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும்  அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. தங்கள் மகன் சிங்கப்பூர்த் தேசிய சேவைக்குச் செல்வதை விரும்பாத பெற்றோரின் போக்கையும் அதனால் மீண்டும் அவன், தான் பிறந்த மண்ணான சிங்கப்பூருக்கு வரும்போது ஏற்படும் சிக்கல்களையும் கதை அலசுகிறது.

இதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள சூரிய கிரஹணத் தெரு என்ற கதை, சிங்கப்பூரின் ஓர் இருண்ட வெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.   தமிழ் நாட்டிலிருந்து அப்பாவி கிராமத்துப் பெண்களைச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலுக்குத் தள்ளிவிடும் தரகர்களைப் பற்றியும் அவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண்களின் அறியாமையையும் அவல நிலையையும் அதனிலிருந்து அவர்கள் மீண்டு வந்ததையும் பதிவுகளாக்கி கதை வெற்றி பெற்று நிற்கிறது. களப்பணி மேற்கொண்டு எழுதப்பட்ட இக்கதை அப்பெண்களின் இயலாமையையும் ஏமாற்றங்களையும் போராட்டங்களையும் மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது.


சிங்கப்பூரின் மற்றுமொரு முன்னோடித் தலைமுறை எழுத்தாளரான திருமதி. நூர்ஜஹான் சுலைமான் இன்றும் சுறுசுறுப்பாக இலக்கிய வெளியில் வலம் வருபவர். அவரின் மிக அண்மைய வெளியீடான, ‘தையல் மிஷின் (2014) சிறுகதைத் தொகுப்பில் சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையின் வாழ்க்கையையும் அவர்களின் வெவ்வேறு மனநிலைகளையும் சிறுகதைகளாகப் பிரதியெடுத்துப் படைத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. சிங்கப்பூர் வாழ்க்கையின் பல்வேறு சித்திரங்களை இக்கதைகளில் காணலாம். கம்பத்து வாழ்க்கையிலிருந்து மீள முடியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக் கொள்ளும் மனித மனங்களின் இறுக்கங்களைப் பற்றியும் இக்கதைகள் சொல்லிச் செல்கின்றன. தம் வாழ்க்கைக்குத் துணையாக வந்தவன் கைவிட்ட நிலையிலும் அப்பா வாங்கிக் கொடுத்த தையல் மிஷினிடம்கூட பாசப்பிணைப்புக் கொண்டுள்ள ஒரு பெண்ணின் சுயசரிதமாக தையல் மிஷின் என்ற சிறுகதை வருகிறது. தன் இறப்புக்குப் பிறகு மகன் அந்தப் பழைய தையல்மிஷினை எங்காவது காராங்கூனிங்கிற்குப் போட்டுவிடுவான் என்ற அச்சத்தில் அந்தத் தையல் மிஷினை பழம்பொருள் காப்பகத்தில் ஒப்படைத்துவிடும் ஒரு சாதாரண தாயின் வாழ்வாதாரப் போராட்டமாகவும் மன ஓலங்களாகவும் கதை பயணித்துச் செல்கிறது.


மனித வாழ்க்கையைப் படைக்கும் எழுத்தாளர்களின் படைப்புகள், அவர்களின் அனுபவங்களால் மனிதர்களின் வாழ்க்கையாலேயே படைக்கப்படுகின்றன. மனிதன் தன்னை மேன்மேலும் வளர்த்துக்கொள்வதற்கு உரியவையாகப் படைப்புகள் விளங்குகின்றன.  படைப்பு என்பது வாழ்க்கையோடு நெருங்கிய பிரிக்க முடியாத உறவுடையதாகும். வாழ்க்கை, வாழ்க்கையாக இருப்பதே புதுப் படைப்போடு கொண்ட உறவினால்தான் என ஞானி தனது இலக்கியக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இக்கூற்றுக்கு ஏற்றார்போல் சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான செ.ப.பன்னீர்செல்வம், தனது மாயா (2013) சிறுகதைத் தொகுப்பு நூலில், நவீனச் சிங்கப்பூர்த் தோற்றம் கண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க இருபதுகளில் மையம் கொண்ட அதே முதலை படைப்பையும் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட ஐம்பதுகளில் ஆங்கிலேய காலனியச் சிங்கப்பூரின் களம் காட்டியிருக்கும் லாட்டரிச் சீட்டுஎன்ற படைப்பையும் சிறுகதைகள் வடிவில் நமக்கு சிங்கையின் வாழ்வியல் நடப்புகளை வரலாற்றுச் சுவடுகளாகச் சுட்டியுள்ளார். புதிய தலைமுறையினரும் புதிய குடியேறிகளும் சிங்கப்பூர் மக்களின் பல்லினச் சூழலையும் வரலாற்றையும் புனைகதைகளூடே தெரிந்துகொள்ளவும் தமிழர்களின் ஆளுமைகளைப் புரிந்துகொள்ளவும் இத்தொகுப்பு நல்லதொரு ஆவணமாகவும் விளங்குகிறது.


சிங்கப்பூரின் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த சூர்ய ரத்னாவின் நான் (2013) சிறுகதைத் தொகுப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரின் சககால வாழ்வியல் சூழலைச் சமூகப் பின்னணியோடும் பல்லின மக்களின் உறவுகளோடும் கதையாக்கம் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது. இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் பள்ளி மாணவர்கள், இளையர்கள், குற்றவாளிகள், தம்பதியர்கள், காதலர்கள், முன்னோடித் தலைமுறையினர் எதிர்நோக்கும் சிக்கல்களை மிகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் சிங்கையின் தனித்துவமான எழுத்து நடையால் பதிவு செய்துள்ளன. நாடகமே உலகம் என்ற சிறுகதை, 1986 இல் சிங்கப்பூரில் நடந்த துயரச் சம்பவத்தின் பின்னணியுடன் ஒரு சீனக் குடும்பத்தின் கணவன் மனைவி உறவின் விரிசல்களுடனும் பாச அலைகளுடனும் ஒரு கதையைச் சம்பவங்களாகக் காட்சிப்படுத்தி உள்மனத்திற்குள் பாய்ந்து செல்கிறது. அதில் ஹோட்டல் நியூ வேல்ட்டு கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, நம் முன்னேயே கட்டிடம் விழுந்து நொறுங்குவதாகக் காட்டியிருப்பது அருமை.


சிங்கப்பூரில் தொடர்ந்து எழுதி வரும் ‌ஷாநவாஸ், தன்னுடைய மூன்றாவது கை(2013) என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளில் காணும் வாழ்வியல் செயற்கையற்ற பாசாங்கில்லாத கதை சொல்லும் மொழியில் ஒரு சக தோழனோடு தோள் தொட்டுப் பேசுவதுபோல் இருக்கும். மேலும் கதைமொழியின் மையச்சரடுகள் மிக இயல்பான சிங்கப்பூரில் தினந்தோறும் நடக்கும் சம்பவங்களாகப் பயணிக்கின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘சாட்சி என்ற கதை, மற்றவர் மீதான அக்கறை என்பது நம்மில் எத்தனை பேருக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்ற மனிதநேயக் கேள்வியைக் கதையின் முடிவில் முன்வைக்கிறது.  காலை நேரத்தில் சிங்கப்பூர்த் தெருவொன்றில் ஒரு சீன மூதாட்டிக்கு ஏற்படும் விபத்தும் அதன் தொடர்பான சம்பவங்களையும் மனித மனங்களின் விகற்பங்களையும் விபரீத கோலங்களையும் பதிவு செய்கிறது இக்கதை.


ஜெயந்தி சங்கரின், ‘முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும் (2013) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இத்தலைப்புக் கதை, சிங்கையில் உள்ள தொடக்கநிலைக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் விருப்புகளையும் கசப்புகளையும் பற்றிப் பேசி, நேரடியான பதிவுகளாக உள்ளத்தில் தாங்கி, உருமாறு தோற்றப் பிழை இல்லாமல் நிழலாடவிடுகிறது. முகநூல்களில் நடந்தேறும் வன்மங்களையும் அதனால் ஏற்படும் மன உளைச்சல்களையும் கதை மிகவும் நுட்பமாகவும் தெள்ளத் தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறது. இக்கால மாணவர்கள் தாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ இதுபோன்ற சிக்கல்களில் வீழ்ந்து எழுவதென்பது சிங்கப்பூரின் விபரீதமான கலாச்சாரமாகியிருப்பதை நமக்கு ஒரு எச்சரிக்கையாகவே இக்கதை சொல்லிச் செல்கிறது.


எம்.சேகரின், ‘அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் (2013) என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள், மாற்றத்திற்கான வேட்கைகளை வெளிப்படுத்தும் கருத்துச் செறிவுள்ளவனவாகவும் சிங்கப்பூரின் இன்றைய வாழ்க்கையை அதனதன் போக்கில் அப்படியே படம்பிடித்துக் காட்டுவனவாகவும் அமைந்திருக்கின்றன. தலைப்புக் கதையான அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும் என்ற சிறுகதை ஒரு வயோதிக மனிதனது வாழ்க்கை வழியாக, கடந்துவிட்ட பல ஆண்டுகளின் சிங்கப்பூர் மலேசிய வரலாற்றையும் அதன் வாழ்க்கையைப் புனையும் புகைப்படமாகவும் விரித்துச் செல்கிறது. தான் வாழும் இந்த வாழ்க்கையை வெறுக்க, வாழ்வின் மீது அவநம்பிக்கை கொள்ள நியாயமான காரணங்கள் தாத்தாவுக்கு இருந்தாலும் வாழ்க்கையை வாழவும், மனிதர்களை நேசிக்கவும் பல காரணங்கள் இருந்தன என்பதும் அந்தக் காரணங்கள்தான் அவரை இயங்க வைத்திருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும் என்பது அவர்களை நெருங்கும்வரை  நாம் உணரப் போவதில்லை என்பதையும் கதை பதிவு செய்கிறது.


தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள நதிக்கரை நாகரீகம் (2013) என்ற நூலில் இடம்பெற்றுள்ள  எம்.சேகரின், ஒரு விடியலின் கிழக்குப் பொழுதுகள் என்ற சிறுகதை உடைந்த குடும்பத்தில் வளரும் குழந்தை எப்படி வக்கரித்துப்போய் வளரும் என்பதுடன், நிகழ்கலை யதார்த்தத்தில் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கதையாகவும் விளங்குகிறது. சிங்கப்பூர் வாழ்வியலில் தனித்து வாழும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் அந்தக் குடும்பத்தின் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் வலிகளையும் அதற்கான தீர்வையும் சொல்லிச் செல்கிறது இக்கதை.


அண்மையில் சிங்கப்பூரில் வெளிவந்த சிறுகதை நூல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் பல அரங்குகளில் பலர் ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருப்பதால், இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்ளைப் பற்றிய ஒரு பதிவாகவும் இது அமையும் என்பதே இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்றாகும். மேலும், சிங்கப்பூரர்களின் வாழ்வியலைப் பற்றிய ஒரு பதிவாக இச்சிறுகதைகள் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொணடுள்ளன என்பதனையும் ஆவணப்படுத்துவதும் ஒரு சிறு முயற்சியே இது.


படைப்பிலக்கியம் வாழ்க்கையின் விரிந்த எல்லையைப் பார்க்க வைத்து, இன்பங்களைத் துன்பங்களாகவும் துன்பங்களை இன்பங்களாகவும் மாற்றியமைத்து வீண் ஆரவாரத்தையும் வீம்புகளையும் மாய்த்து வாழ்க்கையை மேம்படுத்துகிறது. இவ்வகையில் சிங்கப்பூரில் அண்மையக் காலமாகப் படைக்கப்படும் சிறுகதை இலக்கியம் வாழ்வை அதனதன் போக்கில் மையப்படுத்தி, சிங்கப்பூரின் தனித்தன்மையோடும் உலகளாவிய பரந்த பார்வையுடன் முன்வைக்கிறது. வாழும் நாட்டின் அரசியலமைப்புக்கும் சட்டத்திட்டத்திற்கும் உட்பட்டு, அந்தந்த நாட்டு சூழலுக்கேற்ப புனைகதைகளைப் படைப்பதே சிறப்பாகும். கோட்பாடுகளை மட்டும் உள்வாங்கிக்கொண்டு எழுதுவதைவிட, மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு எழுதும் எழுத்துகளே மக்களால் பெரிதும் போற்றப்படும்; மக்கள் மனத்திலும் நிலைத்து நிற்கும். இது சிங்கப்பூரின் இலக்கியம். இது சிங்கப்பூரின் அடையாளம்.


இன்றைய சூழலில் சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சி என்பது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்வதை வெளிவரும் நூல்களின் எண்ணிக்கையிலிருந்தே நாம் அறிந்துகொள்ள முடியும். சிங்கப்பூர் அரசு சார்ந்த தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, தேசிய நூலகம் மற்றும் தங்கமீன் வாசகர் வட்டம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர் வாசகர் வட்டம் போன்ற பல இயக்கங்களின் ஆக்கமும் ஊக்கமும் தமிழ் முரசு நாளிதழின் பங்களிப்பும் சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சிக்கு மேன்மேலும் உறுதுணையாக விளங்குகின்றன. மேலும் தங்கமீன் பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. பாலுமணிமாறன் சிங்கை இலக்கியப் படைப்பாளர்களைத் தேடிப் பிடித்து, ஆர்வமூட்டி அவர்களின் படைப்புகளை நூலாக்கம் செய்துவரும் அரிய முயற்சியானது சமீப காலமாக அதிகமான நூல்கள் சிங்கப்பூரில் வெளிவரக் காரணமாகவும் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

துணை நூல்கள்:

1.   டாக்டர் அ. வீரமணி, சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழ்மொழி, Tamil Language, AMIDST, Singapore’s Development, சிங்கப்பூர், 1996.

2.   டாக்டர் சுப. திண்ணப்பன்,  டாக்டர் ஏ. ஆர்ஏ, சிவகுமாரன், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர், 2002.

3.   ஞானி கட்டுரைகள், காவ்யா பதிப்பகம், சென்னை, 2007.

4.   கமலாதேவி அரவிந்தன், சூரிய கிரஹணத் தெரு, பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, 2012.

5.   நுர்ஜஹான் சுலைமான், தையல் மிஷின், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2014.

6.   செ.பா.பன்னீர்செல்வம், மாயா, தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.

7.   சூர்ய ரத்னா, நான், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.

8.   ஷாநவாஸ், மூன்றாவது கை, தமிழ்வனம் பதிப்பகம், சென்னை, 2013.

9.   ஜெயந்தி சங்கர், முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும், அம்ருதா பதிப்பகம், சென்னை, 2013.

1. எம்.சேகர், அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத்தாடித் தாத்தாவும், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.

1. பாலுமணிமாறன், நதிக்கரை நாகரீகம், தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர், 2013.