வியாழன், 3 அக்டோபர், 2019



வாங்க வாசிக்கலாம் (3) – எம்.சேகர்

மக்கள் ஓசை (2-6-19)

வாசிப்பின் தொடர் அங்கங்களாக கடந்த இரு வாரங்களாக முறையே மலேசியா. சிங்கப்பூர்ப் படைப்புகளைப் பார்த்தோம். முதலில் ஒரு கவிதை நூல், பிறகு ஒரு நாவல், இன்று தமிழ்நாட்டு எழுத்தாளர் ராம் தங்கத்தின் சிறுகதைத் தொகுப்பான திருக்கார்த்தியலைப் பார்க்கவிருக்கிறோம்.
நண்பர் ராம் தங்கம் அவர்கள் சிங்கப்பூர் எழுத்தாளர் பிரேமா மகாலிங்கத்தின் மூலமாக எனக்கு முகநூலில் அறிமுகமானவர். நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலைப் பற்றிய பல காணொளி பதிவுகளை அவர் தொடர்ந்து முகநூலில் பதிவுசெய்து வந்த காலம்  அது என்று நினைக்கிறேன். ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார் என்பதையும் அறிந்திருந்தேன். அவ்வப்போது சில லைக்குகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வோம். இப்படித்தான் எங்களுக்கான அறிமுகம் இருந்தது. கொஞ்ச நாளைக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டுக்கான அசோகமித்திரன் விருது அவரின், திருக்கார்த்தியல் சிறுகதைக்குக் கிடைத்ததாகவும் பதிவை பகிர்ந்துகொண்டிருந்தார்.


அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் திருமதி, ரமா சுரேஸ் அவர்கள் என்னிடம், திரு ராம் தங்கம் கொடுக்கச் சொன்னதாகக் கூறி, திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். ராம் தங்கத்திற்கு நன்றி சொன்னேன். வாசித்து விட்டு எழுதுங்கள், காத்திருக்கிறேன் என்றார்.
வாசித்தேன். ஒரு கதையை வாசித்துவிட்டு என் எண்ணங்களை எழுத்தாக்கிய பிறகே அடுத்த கதைக்குச் சென்றேன். இப்படியாக ஒவ்வொரு கதை வாசிப்புக்குப் பின் கோர்வையாகத் தொடுக்கப்பட்டதே இந்த எழுத்துகள். அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அதற்கு முன்பாக இன்னுமொரு தகவல். இந்த நூலுக்கு அண்மையில், உயிர்மை – சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா சிறுகதை விருது 2019 கிடைத்துள்ளது என்பதையும் உஙகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுக் கொள்கிறேன்.


திருக்கார்த்தியல்


செந்தமிழ் என்ற சிறுவனின் கதாபாத்திரம் மிகவும் இயல்பான எழுத்துநடையின்மூலம் கதைசொல்லியால் விவரிக்கப்படும் விதம் கதையை நகர்த்திச் செல்வதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளது பாராட்டுக்குரியது. ஒரு சிறுகதையை இப்படித்தான் எழுதவேண்டும், இந்த வட்டக்கூறுகளுக்குள்தான் சிறுகதையின் இயங்குத்தளம் இருக்கவேண்டும் என்பதெல்லாம் இன்றைய புனைவிலக்கியத்திற்கு ஒவ்வாத ஒன்றாக இருப்பதை இச்சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கதைகள் நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவ்வகையில் இந்தத் திருக்கார்த்தியல் கதையும் ஒன்று. விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களின் பதிவுகள் மட்டுமே இன்றைய இலக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா என்ற கேள்வி ஒன்றும் கூடவே எழுந்தாலும், ஒவ்வொரு வாழ்க்கையும் இங்கு இலக்கியம்தான் என்ற அடிப்படையில் யாரைப் 
பற்றி எழுதினால் என்ன? கதை வாசிப்பவனை ஏதாவது செய்யவேண்டும். அவனுக்குள் ஏதோ ஒன்று வறுத்தெடுத்துப்பட்டுக்கொண்டிருக்க அக்கதை காரணமாக இருந்திருக்கவேண்டும். இந்த நோக்கில் பார்ப்பின், இக்கதையும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் உண்மைதான். உணர்வின் விளிம்பில் நம்மை எக்க வைத்து, கதைசொல்லி இக்கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தியிருப்பது தெரிகிறது. அனுபவமும் அதை வெளிப்படுத்தும் விதமும் எழுத்தின் நேர்மையும் ஒரு படைப்பை வேறொரு தளத்திற்குக் கொண்டுசென்றுவிடும் என்பதற்கு இக்கதை நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இரு மதமார்க்க பின்புலத்தில் புனையப்பட்ட கதை இருவிதமான வாழ்வியல் முரண்களையும் தர்க்கரீதியில் முன்னகர்த்திச் செல்கிறது. இது எழுதப்பட்ட கதை. ஆனால், இதுபோல எழுதப்படாத கதைகள் நம் வாழ்க்கைக்குள் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதையும் உணர்த்திச்செல்லும் கதை.


அவசியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. கதையில் காட்சிப்படுத்துதல் மிகவும் இயல்பாகப் புனையப்பட்டு, அக்காட்சியும் அப்படியே நம் கண் முன்னே நிழலாடுவது இக்கதையின் சிறப்பாகும். உதாரணமாக, செந்தமிழ் பட்டாம் பூச்சிகளைத் துரத்திப் பிடிக்கும் காட்சியின் விவரிப்பு மிக மிக இயல்பாக நமக்குள்ளும் நுழைந்து நம்மையும் கையைப் பிடித்து, அந்தச் சூழலுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது. செந்தமிழின் முகத்தில் ஒட்டியிருக்கும் பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் நம் முகத்திலும் வந்து அமர்ந்துகொள்வதைத் தவிர்க்க இயலவில்லைதான்.

டாக்டர் அக்கா

வாழ்வில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் நமக்கான வாழ்க்கையைத் திசை திருப்பிவிட்டுச் சென்றுவிடுவது இயல்பானதே. இக்கதையின் கதைசொல்லிக்கும் அவன் பாட்டிக்கும் அந்தப் பைத்தியக்காரப் பெண்ணுக்கும் அவரவர் வாழ்க்கை அனுபவங்கள் அவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இந்த வாழ்வின்மீது ஏற்படுகிற வெறுப்புணர்ச்சி, தென்னந்தோப்புச் சொந்தக்காரர், நண்பன் சதீஷ், டாக்டர் அக்கா போன்றவர்களையும் இப்புனைவின்வழி சந்திக்கும்போது வாழ்க்கையில் அனைவருக்கும் எவராலோ, எங்கிருந்தோ, ஏதாவது ஓர் உதவி பாஞ்சாலியைக் காத்த கிருஷ்ணனாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை மகரந்தங்களைத் தூவிச் செல்லும் இக்கதை, நிஜ வாழ்வின் அவலங்களிலிருந்து நம்மால் தப்பிக்க இயலாது என்பதைப் போலீஸ்காரர்களின் காம வன்மத்துக்குப் பலியாகிப் போன ஒரு பெண்ணின் வாழ்வின்மூலம் மீண்டும் மீண்டும் இந்த வாழ்வின்மீது நமக்கு ஏற்படும் அவநம்பிக்கைகளை உண்மையின் ஒளிமூலம் பதிவு செய்கிறது.


விளிம்புநிலை மனிதர்கள் சாப்பாட்டிற்காகக் கூட மற்றவர்களின் தயவை நாடி, கெஞ்சி நிற்கும்போது மனித மனத்தின் அவலப்போக்குகளை, ரேஷன் கடையில் சிந்திக்கிடக்கும் அரிசியை லாரி மேன்கள் காலால் வழித்துபோடுவதும், முருகன் என்ற லாரி மேன் மட்டும் சிந்திய அரிசிகளை ஒரு கவரில் கட்டிக்கொண்டு வந்து கொடுப்பதும் மனித நேயம் இன்னும் முற்றாக இங்குத் துடைத்தொழிக்கப்படவில்லை என்பதை  மிகவும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது. தூய அன்பின் உருவோடு படைக்கப்பட்டுள்ள டாக்டர் அக்காவின் கதாபாத்திரம் நமக்கான வாழ்வின் நம்பிக்கை ஒளியாகும். நல்லவர்களும் நம்முடனேதான் பயணிக்கிறார்கள். நாம்தான் அவர்களை அடையாளம் கண்டு அணுகவேண்டும் என்பதை இக்கதையின்வழி உணர முடிகிறது.
டாக்டர் அக்காவின் அந்த முதல் சந்திப்பின் வர்ணனை படைப்பாளனின் கற்பனைத் திறனுக்கும் மொழித் திறனுக்கும் நற்சான்றாகும். பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாடல்கள், கதை முழுக்க இயல்பான எழுத்து நடையை உருவாக்கி, வாசகனையும் தனக்குள் அணைத்துக்கொள்கிறது.


முற்பகல் செய்யின்

தொன்றுதொட்டு வந்துகொண்டிருக்கும் நம் மரபார்ந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் குலதெய்வ வழிபாடுகளையும் மீள்பார்வைக்குக் கொண்டுவரும் கதை இந்த முற்பகல் செய்யின். நவீனமயமான இன்றை உலகில் இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் வழிபாடுகளும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது நமது அடையாளங்களை இன்னும் தாங்கிக்கொண்டிருக்கும் கிராமப்புரங்களில்தான். இன்றும், ஜீவ சமாதியானவர்களைத் தேடியலைந்து அவர்களை நம்பிக்கையோடு வழிபட்டு, அவர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றுக்கொண்டிருப்பவர்களின் அனுபவக் கதைகளைக் கேட்க முடிகிறது என்றால், நமக்கான வாழ்வின் முன்னோடிகளின் தொன்மங்களை நாம் அறிந்துகொள்வதில் தவறேதுமில்லையே. அறிவியல் வளர்ச்சி, அதன் சிந்தனை அனைத்தும் சாட்சியங்களோடு ஆராய்ச்சிகளோடும் தொடர்புகொண்டவையாகவே இருக்கும். அதன் அடிப்படையிலேயே அவர்களின் முடிவும் தீர்ப்பும் இருக்கும். தொன்மம் தொட்டு வந்து கொண்டிருக்கும் நம் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கைகளை நம்மால் உணர மட்டுமே முடியும். காற்றை எப்படிக் காட்டுவது? அப்படித்தான் இதுவும். இத்தகைய வாழ்வியல் நம்பிக்கைகளை நம்மால் உணரமட்டுமே முடியும். நம்பியவர்களுக்கு அது வாழ்க்கை. அது காட்டும் வழி என்பது வேறு. நம்பாதவர்களுக்கு அது வேறு. அது காட்டும் வழியும் வேறாகத்தான் இருக்கும்.
அயல்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இக்கதை பல விஷயங்களைத் தெளிவுபடுத்திச் செல்கிறது. நம் மரபுச் சார்ந்த தொன்மம் சார்ந்து வாழ்க்கை நெறிகளை விளக்கிச் சொல்வதோடு பல வரலாற்றுச் செய்திகளையும் சொல்கிறது. கதையில் வரும் ஒவ்வொரு ஊரும் மிகவும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளதும் இங்குக் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். கதைக் களத்திற்கு ஏற்ற நடையும் அதன் மொழியும் மிகவும் இயல்பாகப் புனையப்பட்டிருப்பது கதையை உயிரோட்டமுடன் நகர்த்திச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. கதைக்குள் இருக்கும் அந்தப் பாசப் பிணைப்புகளை நகர்ப்புரங்களில் எங்கும் நாம் காணப்போவதில்லை. உறவுகளும் அந்த உறவின் நெகிழ்வுகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும் இன்னும் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. கதையின் முடிவில் நமக்குள்ளும் ஒருவித சிலிர்ப்புடன் பயமும் தொற்றிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கு இல்லை.


பெரியநாடார் வீடு


வரலாற்றின் பின்புலத்தோடும் இன்றைய நடப்பியல் சார்ந்தும் புனையப்பட்டிருக்கும் கதை இந்தப் பெரியநாடார் வீடு. கதையைப் படித்து முடித்தபின், வரலாற்றுப் பின்னணியுடன் ஒரு நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு எழுகிறது.  இங்கும் நம்பிக்கைச் சார்ந்த சம்பவக் கோர்வைகளால் கதை பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. நீதி, நேர்மை என உண்மையானவர்களை என்றும் அவர்கள் கும்பிடும் தெய்வம் கைவிடுவதில்லை என்பதை இன்றைய நவநாகரிக உலகிற்கு உணர்த்தும் கதை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்ற வாழ்வியல் பாடத்தைப் பெரியநாடார் மூலம் நமக்கு வாழ்வியல் உண்மையை உரைக்கும் கதை.

சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளின் சூழலுக்கு வெளியே இருக்கும் இன்னொரு உலகை, நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சுடலை மாடன், இசக்கி அம்மன் என பல்வேறு நிலைகளில் நமது தொன்றுதொட்டு வந்துகொண்டிருக்கும் பழக்கவழக்கங்களையும் அதற்கான காரணகாரியங்களையும் கதையின் வாயிலாக அறிமுகம் செய்திருப்பது பாராட்டக்கூடியது. தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இத்தகவல்கள் சர்வசாதாரணமானவையாக இருக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த விஷயங்களாக இருக்கலாம். ஆனால், அயல்நாட்டில் நான்கு தலைமுறைக்குமேல் தமிழக மண்ணோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இக்கதையின் வாசமும் அதன் வீச்சும் என்றும் புதிதாகவே இருக்கும். நமது முன்னோர்களின் வரலாற்றையும் அதன்மூலமாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் வாழ்ந்ததுபோன்ற உணர்வே இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது மேலோங்கி நிற்கிறது. அத்தகைய வாசிப்பனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ராம் தங்கத்தை எப்படிப் பாராட்டினாலும் அதற்கு அவர் தகுதியானவரே.

ஊழிற் பெருவலி

கதையை வாசித்து முடித்தவுடன் செல்வத்தைப் போலவே என் கண்களின் பார்வையும் நீர்த் தளும்பல்களால் மங்கிப்போனது. மனம் கனத்திருந்தது. வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கும் இத்தனை அவலங்களும் ஒன்றுசேர நடக்குமா? ஆனால், நடந்திருப்பதால்தான் இன்று புனைகதையாகியிருக்கிறது என்ற உண்மை கசக்கத்தான் செய்கிறது. மக்களுக்குத் தோழனாக இயங்கக்கூடிய போலீஸ்காரர்கள், அடைக்கலமாய் வரும் பெண்களைத் தங்களின் காம இச்சைக்குப் பலிகடாக்களாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் கூட்டிக்கொடுத்துச் சீரழிக்கும் அவலம் இக்கதை முழுக்கப் பரவிக்கிடக்கிறது. இவர்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும் காலேஜ் பசங்களும் வழிப்போக்கர்களும் குடிகாரர்களும் பிச்சைக்காரர்களும் நரிக்குறவர்களும் குஷ்ட நோயாளியும்கூட ஒரு பெண்ணின் உடலை, தங்களின் உடல் இச்சையைத் தணித்துக்கொள்ளும் உசிரில்ல பிண்டமாக மட்டுமே பார்க்கும் அவலம். இச்சமூகத்தின் அவலம்.


ஒனக்கு என்னப் பாத்தா என்ன தோணுது?’
ஒரு வாழ்ந்து கெட்ட பொம்பளன்னு தோணுது.
நா வாழ்ந்து கெட்டவளா? நான் கெட்டுப் போய்தான் வாழவே தொடங்கினேன்

கதையில் வரும் இந்த உரையாடல்கள் இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகளை உருவாக்கக்கூடியவை.


சமூகத்தில் ஒரு சமூக அந்தஸ்தோடு வாழும் ஆசிரியர்களான பெற்றோருக்குப் பிறந்த சுமதி என்ற பெண், பதின்ம வயதில் காதல் வலையில் சிக்கி, வாழ்வைத் தொலைத்துத் தொலைத்துச் செத்துச் செத்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் அவலப் படலம் இக்கதை முழுக்க கதைசொல்லியால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலமுறை இத்தொல்லையில் இருந்து மீள, அவள் மேற்கொள்ளும் பல வழிகளிலும் இந்தப் போலீஸ்காரர்கள் வந்து மீண்டும் மீண்டும் அவளை பழைய வாழ்க்கைக்குள் அமுக்கி வைத்து விடுகின்றனர். ஒருமுறை தப்புச் செய்தவளை வாழ்க்கை முழுக்க தப்பானவளாகக் காட்டித் தப்பான செயல்களுக்குள் இட்டுச்செல்லும்  இச்சமூக அமைப்பின்மீது கோபமும் எரிச்சலும் நிறையவே இருக்கிறது இக்கதாசிரியருக்கு. அது இக்கதை முழுக்க வியாபித்திருக்கிறது.
என் உயிர் பிரியும்போதுதான் வலியும் பிரியும் என்ற ஒற்றை வரிக்குள்தான் எத்தனை எத்தனை பொருண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன?
சுமதியின் பேச்சு வழக்கில் வந்து விழும் வார்த்தைகள் அவளின் வாழ்க்கைக்கான அடையாளம். அது அப்படித்தான் வந்து விழும். வெந்த மனத்திலிருந்து வேறெந்த வார்த்தைகளைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும்? கதையின் மொழி நடை முழுக்க அவளுக்கானது. அதுதான் அவளது மொழியிலேயே கதாசிரியரால் இக்கதையும் மொழியப்பட்டுள்ளது.



வெளிச்சம்

பத்தாம் வகுப்பைப் பாதியிலேயை விட்டுவிட்டு, வேலைக்குப் போகும் லிங்கத்தைப் பற்றிய கதை. விளிம்பு நிலை மனிதர்கள் எவ்வளவுதான் துன்பப்பட்டாலும் இந்த வாழ்க்கை அவர்களை விரட்டி விரட்டி இந்த வாழ்வின் விளிம்புக்கே நகர்த்திச் சென்று வைத்து விட்டிருந்தாலும், நேர்மையாக களவு இல்லாமல் ஒழுக்க வாழ்வை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை இக்கதை வலியுறுத்துகிறது. வீட்டு வேலை செய்யும் அம்மா, எழுந்து நடமாடமுடியாத பாட்டி, படிக்கும் தம்பி, உறவுக்கார பெயிண்டிங் காண்டிராக்டர் ராஜா, தாத்தா தமிழ் நாடு தங்கையாநாடான், பாலா அண்ணன், கடையில் வேலை செய்யும் முருகன், கண்ணன், ஓனரின் அம்மா என கதையில் வரும் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் கதை முழுக்க லிங்கத்தையொட்டியே மையமிட்டிருக்கிறது. லிங்கத்தின் பாட்டியும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளாக, களவு எதுவும் செய்யாமல் நல்லபடியாக வேல செய்யணும் என்பதாகத்தான் இருக்கிறது. ஏழ்மைச் சூழலிலும் நேர்மையாக வாழ நினைக்கும் மனித மனங்களின் ஒட்டுமொத்த உருவமாக இந்த இரண்டு கதாபாத்திரப் படைப்புகள் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
லிங்கம் எடுக்கும் சம்பளம் முழுசையும் அம்மா செல்விடம் கொடுத்துவிடுவது நல்ல பழக்கமாக வழக்கமாக இக்கதையில் முன்னுதாரணமாகச் சுட்டப்பட்டுள்ளது இன்றைய இளையர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். கையில் காசில்லாத சூழலில் பாட்டி ஆசைப்பட்ட முந்திரி பருப்பு 100 கிராம் உள்ள பாக்கெட்டை களவாடி விடுகிறான் லிங்கம். விசயம் அறிந்த பாட்டி, தான் எழுந்து நடக்க முடியா நிலையிலும் அதற்கான பணம் 75 ரூபாயைத்  திரட்டி கட்டச் சொல்வதும், அப்பணத்தை மீண்டும் கல்லாவில் போட்டுவிட்ட திருப்தியில் அவனுக்கும் பாட்டிக்கும் ஏற்படும் மகிழ்ச்சியில் அவர்களின் ஏழ்மையெல்லாம் எங்கோ ஓடோடி ஒளிந்துகொண்டு விடுகின்றன. மிகவும் இயல்பான கதையாடலின்மூலம் இக்கதையிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார் ராம் தங்கம்.

விரிசல்

தமிழர்களின் வாழ்வியலின் மரபில் உறவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்திருக்கிறது. தாய்வழிச் சமூக மரபார்ந்த வாழ்வியலுக்குச் சொந்தக்காரர்களாகிய நமக்குக் குடும்ப உறவு மிகவும் முக்கியமானதாகவும் அவசியத்தேவையாகவும் வாழ்வை வழிநடத்த ஒரு முன்னுதாரணமாகவும் இருந்திருக்கிறது. கூட்டுக் குடும்ப வாழ்வின் சங்கிலித் தொடர்கள் இன்றைய வாழ்வியல் சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அறுபடக் காத்துக்கொண்டிருக்கின்றன. இன்றைய நிலையிலும் ஆசிய நாட்டு மக்களிடையே இன்னும் இந்தக் குடும்ப உறவுகள் இருந்தாலும், முன்புபோல் இல்லை என்றே கூறமுடியும். அதுவும் குறிப்பாகத் தமிழர்களின் நாடு விட்டு நாடு தாவுதல் படலம் கணிசமாக அளவு நடந்துகொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டம் நம் உறவுகளைப்  பல வகைகளிலும் உடைத்துப்போட்டு விட்டிருக்கிறது எனலாம்.

பொதுநலம், குடும்ப நலம் என்ற மனப்போர்வைகள் கிழத்தெறியப்பட்டு, தன் சுயநலத்தேவையை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு மனிதர்கள் இன்று மாறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். மூத்தோன் இருக்க அல்லது மூத்தவள் இருக்க இளையவனுக்கோ அல்லது இளையவளுக்கோ திருமணம் செய்து வைப்பது வழக்கில் இல்லாத பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்த இனம், இன்றோ அதை உடைத்தெறிந்து மனித மனங்களை நொறுக்கிவிடுகிறது. விரிசல் கதையும் குடும்ப உறவில் ஏற்படுகிற மாற்றங்களை மிகத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. அன்பான ஓர் அம்மா மகன் உறவு காலப்போக்கில் எப்படி ஒன்றுமே இல்லாதததுபோல் மாறிப்போகிறது என்பதை கதை விரிவாகக் கட்டம் கட்டமாக விவரித்துக் கதையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்கிறது. கதையை மட்டுமல்ல. நமது பண்பாட்டுக் குடும்ப வாழ்வியல் சூழலையும்தான்.

உடற்றும் பசி

சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் பாரதி. இன்னமும், சாதியின் பெயரால் மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்கூட கிடைக்காமல் போவது நம்மினத்தில் மட்டும்தான். உயர்ந்த சாதியில் பிறந்து அனாதையாக இருந்தாலும் ஒரு வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் இருந்தாலும், எவ்வித சலுகையும் கிடைக்காத ஓர் அரசியல் கட்டமைப்புக்குள்தான் நாம் வாழும் சூழல் இருக்கிறது. இங்கு எல்லாமே சாதியின் கட்டமைப்புக்குள்தான் இயங்கிக்கொண்டும் இயக்கிக்கொண்டும் இருக்கின்றன. பெற்றோரை இழந்த கார்த்திக். ஹாஸ்டலில் தங்கி பள்ளியில் படித்தாலும் அவனுக்கு ஏற்படும் பசி உணர்வு, இச்சமூக கட்டமைப்புகளால், அவனைப் பல குப்பைத் தொட்டிகளையும் கிளறிப்பார்த்துக் கிடைப்பதைச் சாப்பிடவைக்கிறது. சில சமயம் நக்க வைக்கிறது. காய்ந்த மலத்தில் விழுந்த கொய்யாக்காயைக் கழுவிவிட்டுச் சாப்பிடும் ஒரு நிலைக்கு ஒரு பள்ளி மாணவனைத் தள்ளியது யார்? குப்பைத் தொட்டிப்  பொட்டலங்களில் ஏதோ உணவுதான் இருக்கிறது என அவன் ஆவலாய்த் தொட்டுப் பார்த்துப் பிரிக்கும்போது சின்னப் பிள்ளைகளின் மலத்தோடு இருக்கும் பேம்பர்ஸ்களும் இரத்த வாடையோடு இருக்கும் நாப்கின்களும் அவனுக்குள் குமட்டல்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் குமட்டிக்கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு ராம் தங்கத்தின் எழுத்து, வாழ்வியலோடு இயைந்து மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால், தனியொருவனுக்கு உணவில்லை என்றுத் தெரிந்தும் உதவ மனமில்லாமல் மனிதப் பிண்டங்கள்தான் நம்முடன் அன்றாடம் நடமாடிக்கொண்டிருக்கின்றன என்பதை இக்கதை பல சம்பவங்களின்மூலம் நம் மனதத்தை நெருடிச்சென்று கனக்க வைக்கின்றது. நெகிழ வைக்கும் காட்சிகளின் சித்தரிப்புகளும் சிறுகதைப்  படைப்பிலக்கியத்திற்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்துச் செல்கிறது. எது எப்படியிருப்பினும் ராமின் படைப்புகளில் அவ்வப்போது சில நல்ல மனிதர்களும் வந்துபோய்க்கொண்டிருப்பது மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. இந்த வாழ்வின்மீது நம்பிக்கை கொள்ளவைக்கிறது.

பானி

காசி, இராமேஸ்வரம் எனத் தீர்த்தமாடிவிட்டுத் தங்கள் பழிபாவங்களைத் தொலைக்க மக்கள் கன்னியாகுமாரிக்கு வருகிறார்கள். வட இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்கள் பாவங்களோடு, வீட்டில் உள்ள மனநோயாளிகளையும் அங்கே தொலைத்துவிட்டுச் செல்கிறார்கள். அப்படித் தொலைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமான பானிதான் இக்கதையின் மையமாக இருக்கிறான். சுரேஷ் என்ற கதாபாத்திரத்தின்மூலம் பானியின் அறிமுகப் படலம் இக்கதையில் தொடங்கி, சுரேஷ் – பானி இருவருக்குமான நட்பின் பரிணாமம், பிறகு சுரேஷின் அப்பா அய்யாத்துரை, அம்மா பாக்கியம், பின் குமரிமங்களம் முழுவதும் கதையோட்டத்தின் பல  சம்பவங்களின் கோர்வையோடு  தொடர்கிறது.
மனநோயாளிகள் அனைவருமே உண்மையிலே மனநோயாளிகள்தானா? என்ற ஒரு கேள்வி இக்கதை முழுக்க நம்மோடு பயணிக்கிறது. வாழ்க்கையின் நிதர்சனம் என்னவென்பதை நோக்கி நம் தேடலை ஆழப்படுத்துகிறது. பல மனநோயாளிகள் மனிதன் என்ற போர்வைக்குள் நம் சமூகத்தில் அப்போதும் இப்போதும் எப்போதும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான், இன்னமும் நம் பெண்கள் தைரியமாக எங்கும் வெளியே சென்று வர இயலாத ஒரு சூழல் இருக்கிறது. கற்பழிப்பு, பாலினக் கொடுமைகள் என இன்னும் என்னென்னவெல்லாமோ தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் பல பொதுமைப் பார்வைகளை இக்கதை கேள்விக்கு உட்படுத்துகிறது. இதுபோன்ற பொதுமைப் பார்வைகள் தொடர்பான நமது நிலைப்பாடுகளையும் தர்க்கரீதியில் நாம் கண்டுணர ஒரு வாய்ப்பையும் இக்கதை நமக்கு வழங்குகிறது. ஒவ்வொரு கதையிலும் ராமின் உழைப்பு தெரிகிறது. அவரது வாழ்வின் அனுபவம் வெளிப்படுகிறது. அவர் உள்வாங்கிய அந்தந்த வட்டார வழக்கு மொழிகள் இயல்பாகவே அவரின் கதைகளில் வந்து விழுகின்றன. இக்கதையும் அதற்கு விதிவிலக்கல்ல.

காணி வாத்தியார்

இக்கதையைத் தன்னலமற்று உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்குக் காணிக்கையாக்கலாம். இக்கதையில் வரும் காணி வாத்தியார் அனந்தன், பழங்குடி மக்களையும் நாட்டையும் அடுத்த நிலைக்கு நகர்த்திச் செல்லும் ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாக வருகிறார். அரசு தொடக்கப்பள்ளி தச்சமலை உருவாக்கத்திற்குச் செயல்வீரராக இருந்திருக்கிறார். நல்லதை எண்ணி நல்லதையே செய்தால், அனைத்தும் இங்கு நல்லதாகவே நடக்கும் என்பதற்கு இக்கதை ஒரு வாழ்வியல் உதாரணம். நேர்மறை எண்ணங்கள் என்றும் நம் வாழ்கைகையை மகிழ்ச்சிகரமான ஒரு நிலைக்கே அழைத்துச் செல்லும். அங்கிருந்து பார்க்கும்போது தாத்தா, மலை முகடுகளைவிட உயரமாகத் தெரிந்தார் எனும் கதையின் இறுதி வரி வாழ்வின் உண்மை உழைப்பிற்கான சத்தியவரி.
தச்சமலையின் இயற்கைச் சூழல், பெருஞ்சாணி அணைக்கட்டு, காணிப் பழங்குடி நடப்பியல் வாழ்வாதாரம், தாத்தாவிற்கும் பேரனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் போன்றவைக் கதை நகர்விற்குப்  பக்கபலமாகவும் நமக்கான புரிதலுக்காகவும் மிகவும் எளிய நடையோடு கதையோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்து போகும்

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு சிறுவனின் கதை. அப்பா தாணுமூர்த்தி ஒரு குடிகாரன். அதனாலேயே அவன் அம்மா வேறெருத்தனுடன் ஓடிப்போய்விடுகிறாள். அவன் பாட்டி கோமதி அவனுடன் தங்கி சமைத்துப்போட்டுக் கொண்டிருக்கிறாள். முதல் தடவை வெளியேற்றப்பட்டபோது, பொது கழிவறையில் குடத்தில் தண்ணீர் கொண்டுவரும் வேலை. ஒரு குடத்துக்கு 1ரூபாய் கூலி. கழிவறையைச் சுத்தம் செய்தால் கூடுதல் 3ரூபாய் கூலி. சுகந்தி ஆசிரியை மூலம் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு மீண்டும் வெளியேற்றப்படுகிறான். பிறகு, ஒரு ஜூஸ் கடையில் ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பள வேலைக்குச் சேர்கிறான். அதன்பிறகு, மாட்டிறைச்சிக் கடைக்காரரான முத்துக்குமார் 60 ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி அவனைத் தன்னுடைய மாட்டிறைச்சிக் கடையிலும் அதன்பிறகு, சூப்புக் கடையிலும் வேலைக்கு வைத்துக்கொள்கிறார்.
மாட்டுச் சூப் கடையில் எச்சில் பாத்திரங்களைக் கழுவி கழுவி அவன்மேலேயும் மாட்டுக் கொழுப்பின் வாடை ஒட்டிக்கொள்கிறது. அங்கு அவனுக்கு ஏற்படும் வாதையும் வலியும் கதை நெடுகத் தொற்றிக்கொண்டு வருகிறது. அதனாலேயே நமக்குள்ளும் உடல் வாதையைவிட மனவாதை அதிகமாகிவிடுகிறது. படைப்பாளனின் உண்மையான வலியை மிகவும் நேர்மையாக இக்கதை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. அதனால்தான், இதை வாசிக்கும் வாசகனுக்குள்ளும் இத்தகைய வேதனைகள் ஆர்ப்பரிக்கின்றன. இதுவும் கடந்துபோகும் என்ற தலைப்பு மட்டுமே இங்கு நமக்கு நம்பிக்கையின் சிறு ஒளியாகத் தூரத்தில் எங்கோ தெரிகிறது. ஆனால், அது பெரிய ஜோதியாகச் சுடர் விட்டும் பிரகாசிக்கலாம் அல்லது தொலைதூரத்தில் எங்கோ ஒரு மூலையில் யார் கண்ணுக்கும் படாமல் தொலைந்தும் போகலாம்.


ராம் தங்கத்தின் பதினொன்று கதைகளுக்குள்ளும் நிஜ வாழ்க்கையின் வலி மட்டுமே தெரிகிறது. அவருக்கான கதை உலகில் வார்த்தை ஜோடனைகள் கிடையாது. மொழி அலங்காரம் கிடையாது. வீண் வார்த்தைப் பிரயோகம் கிடையாது. மற்றவர் போல சொல்வதும் கிடையாது. அவருக்கான கதை உலகம். அவருக்கான இயல்பு மொழி நடையில் இருக்கிறது. யதார்த்தம் அவர் கதை நெடுக வரிசைப்பிடித்து நிற்கிறது. சிறுவர்களின் வாழ்க்கைப் பதிவுகள் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு நாவலாக தாண்டவம் ஆடுகிறது. அவரின் கதைகளில் சாமானியர்கள் மேலான பரிவு மிகவும் விசாலமானதாகவும் ஆழமானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கிறது.
இக்கதைகளில் வரும் சிறுவர்களும் பெரியவர்களும் மாபெரும் இலட்சியங்களை இலக்காகக் கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள் அல்ல. கதைசொல்லிக்கும் இலட்சிய மாந்தர்களை உருவாக்க வேண்டிய அவசியமும் இங்கு இல்லை. இலட்சியம், குறிக்கோள், புனிதம் இவையாவும் சாமானியர்களின் வாழ்வு வெளிக்குள் திட்டமிட்டு முன்தீர்மானத்தோடு வருவதற்கான எந்த முகாந்திரத்தையும் நடைமுறை வாழ்க்கை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்ததில்லை. அன்றாடச் சம்பவங்களே அவர்களின் அந்தந்த நாளுக்கான அறங்களைக் கட்டமைக்கின்றன. ராம் தங்கத்தின் கதைகளில் இவை மிகத் துல்லியமாகக் கையாளப்பட்டுள்ளன.


வட்டார வழக்குகள் இயல்பாக அவர் சார்ந்த அல்லது பழக்கப்பட்ட அல்லது பழகிப்போன வாழ்க்கையினால் அவருக்கு மிக இயல்பாக வந்து விழுகிறது என நினைக்கிறேன். அவரைச் சுற்றி நடக்கும் அனைத்தையுமே அவர் மிகவும் நுட்பமாக உள்வாங்கிக் கொள்ளும் திறன் உள்ளவராக இருக்கிறார். உள்வாங்கியதை மிகச் சிறப்பாக மொழிகின்ற மொழிவளமும் அவருக்குள் இருக்கிறது. இல்லையென்றால் எல்லா கதைகளும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் ஒருசேர அழவைத்திருக்க முடியாது.


நிறைவாக, பல கதைகள் பள்ளிப்பருவத்துச் சிறுவன் ஒருவனின் அனுபவங்களாக, அன்றாட வாழ்வியலின் வாழ்க்கைப்பாடுகளின் பதிவுகளாக, வாழ்க்கையில் நாம் உணர்ந்திராத இன்னொரு முகத்தின் வடுக்களாக வலிகளாக நம் நெஞ்சத்தைக் கிள்ளிச் செல்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப்  பாருங்கள். இக்கதைகள் எனது நெஞ்சத்தில் ஏற்படுத்திய காயங்களை நீங்களும் உணர்வீர்கள். இதுபோன்ற, நமக்கான படைப்பாக்கங்களை நோக்கி உங்கள் எழுத்தும் நகர்ந்து செல்லும்.

- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக