வியாழன், 3 அக்டோபர், 2019






பன்முகப் பார்வையில் தமிழ்மொழியும் இலக்கியமும் & கற்றல் கற்பித்தலில் தமிழ்மொழியும் இலக்கியமும்

            மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்
                          (04-05-2019) 

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு நூலில் பெண் கதாபாத்திரப்  பதிவுகள் -எம். சேகர் 

அறிமுகம்

அண்மையில் கோவை ஸ்ரீ நேரு வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மலேசியத் தமிழ்ச் சிறுகதைககள் எனும் தொகுப்பு நூல் அவர்களின் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தமிழ் நாட்டில் அயல்நாட்டுப் படைப்பிலக்கியத்திற்குக் கொடுக்கப்பட்ட ஓர் ஆங்கீகாரமாகும். குறிப்பாக மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்ததொரு தருணமாக இது அமைந்திருக்கிறது. மலேசிய இலக்கியத்தை அயல் நாடுகளில் தொடர்ந்து அறிமுகம் செய்துவரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பல்லாண்டு கால தொடர் முயற்சியின் பயனாக இது இன்று சாத்தியமாகியிருக்கிறது.

பெண்ணியக் கதாபாத்திரங்கள்

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களை வெளிப்படுத்துவதில் இன்றைய படைப்பாக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின்மூலம் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் நடைமுறை வாழ்வியலில் உள்ள சிக்கல்களையும் அதற்கான மாற்றுச் சிந்தனைகளையும் தம் படைப்புகளினூடே படைத்து வருபவர்கள் இன்றைய படைப்பாசிரியர்கள்.

ஓர் எழுத்தாளன் என்ற முறையில், படைப்பாளி என்ற முறையில் முழுக்கவும் நான் சமூகம் சம்பந்தப்பட்டவன். சமூகம் சம்பந்தம் என்பதின், அந்த உறவின் மேன்மையை உணர்பவனே சிறந்த தனி மனிதன். ஒரு சமூக வளர்ச்சியின் முன்னோடியைத்தான் நான் தனி மனிதன் என்று கருதுகிறேன்,’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

அவ்வகையில், பெண்களின் வளர்ச்சி படிப்படியாக முன்னேறி உச்சத்தில் இருக்கும் இக்கால கட்டத்தில் பெண்களின் பல்வேறு பண்புக் கூறுகளைத் திறனாய்வது அவசியமாகிறது. அந்த வகையில், மலேசிய எழுத்தாளர்களில்  பெரும்பான்மையினர் தம் நாட்டு அடித்தள மக்களின் வாழ்க்கைச் சூழல்களைத் தத்தம் படைப்புகளின்வழி சித்தரித்துப் பெண்களின் ஆளுமைப் பண்புகளைக் கதாபாத்திரத்தில் அமைத்துக் கதை பின்னியிருப்பது இச்சிறுகதைத் தொகுப்பிற்குத் தனிச்சிறப்பினைக் கொடுத்துள்ளது.

பெண்கள் இச்சமூகத்தில் தங்களின் நிலை என்ன என்பதையும் குடும்ப அமைப்பில் தங்களுடைய நிலை என்ன என்பதையும் தாங்கள் தற்போது எத்தகைய நடத்தையைக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தங்களுடைய பண்புகள் என்ன என்பதையும் பெண்கள் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகின்றது.

தனக்குள் தன்னைத் தேடுதல் என்பதன்மூலம் பெண்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளவும் இதன்வழி தங்களை ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்திக்கொண்டு, தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற வாய்ப்புகளைப் படைப்பிலக்கியத்தில் வரும் கதாபாத்திரங்களின் வழியாக பெண்கள் பெற்றுக்கொள்வதும் உண்டு. அத்தகையப் பெண் கதாபாத்திரங்களை மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் என்ற நூலின்வழி நின்று அறிமுகம் செய்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் பெண் கதாபாத்திரங்கள்


இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துச் சிறுகதைகளிலும் பெண் கதாபாத்திரப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதைக் காணும்போது பெண்களின் ஆளுமை இச்சமூகத்தில் எந்தளவுக்கு அவசியமாகிறது என்பதை அவதானிக்க இயல்கிறது.

தங்கக் கூண்டில் தாமரை மலர்

இத்தொகுப்பின் முதல் கதையில் கதைசொல்லியாகப் பெண் கதாபாத்திரம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ஓரு தாயின் பார்வையில் தாய்மையின் உணர்வுகளைத் துல்லியமாக எடுத்தியம்புவதற்கு மிகச் சரியான ஒரு தேர்வை இக்கதையின் படைப்பாளர் திருமதி. பாவை முன்னெடுத்திருக்கிறார். மகன் வீட்டிற்கு வரும் ஒரு தாயின் பார்வையில் கதைச் சொல்லப்படுவதும் காட்சிகள் நகர்த்தப்படுவதும் வளர்ப்புப் பிராணிகளே ஆனாலும் அவைகளுக்குள்ளும் இருக்கும் ஒரு வித மெல்லிய உறவுகளை மிக யதார்த்தமாகப் பதிவு செய்வதற்கு அந்த அம்மா கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகப் பயன்படுத்தியுள்ளார் கதாசிரியர். கதையின் இறுதியில்,

குட்டியின் முகத்தில் ஏக்கம் படிந்திருப்பதாக எனக்குப் பட்டது என வரும் வரிகள், பிறந்து ஐந்து மாதத்திற்குள் இரண்டு எஜமானர்களின் கையிலிருந்து இப்போது மூன்றாவது கைக்கு மாறியிருக்கும் லக்கி என்ற அந்த நாய்க்குட்டியின் உணர்வலைகளின் ஏக்கம் ஒரு தாய்மையால் மட்டுமே உணரமுடியும் என்பதைக் காட்டுகிறது.

சாயா நாமா செல்வி (என் பெயர் செல்வி)

மலேசிய மண்ணின் அடித்தட்டு வர்க்கப் பெண்களின் பிரதிநிதியாக இக்கதையில் வரும் செல்வியின் தாயாக வரும் ஒரு பெண் கதாமாந்தர் படைப்பு அமைக்கப்பட்டு, அதற்கேற்ற கதைப் பின்னலுடன் அவர்களுக்கு ஏற்படும் அன்றாட வாழ்வியல் சிக்கல்களும், அந்தச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அடுத்த தலைமுறைப் பெண்ணான செல்வியின் எண்ண ஓட்டத்தில் கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. அம்மா என்ற பெண் பாத்திரத்தின்மூலம் ஒரு தலைமுறையின் வாழ்வும் செல்வி என்ற பெண் பாத்திரத்தின்மூலம் அடுத்த தலைமுறையின் வாழ்வையும் மலேசிய வாழ்த் தமிழர்களின் எதிர்கால வாழ்வியல் சூழலைக் கேள்விக்கு உட்படுத்தி மிகவும் இயல்பாகப் பதிவு செய்துள்ளார் இக்கதையின் படைப்பாளர் திரு. ஜி.எஸ்.தேவகுமார்.

புகை

கணவனின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால், அதனை அளவுக்கு அதிகமாகச் சுவாசித்துப் பாதிக்கப்படும் சங்கீதா என்ற ஒரு பெண்ணின் நிலையையும் அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் சுவாசக் குழாயில் கரும்புகை படிந்து, மூச்சித் திணறலால் ஐ.சியு வில் இருக்கும் ஒரு சூழலையும் இக்கதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆண்களின் ஹிரோயிஸம் பெண்களின் முகத்துக்கு நேரே புகைவிட்டும் மகிழும் தருணங்கள் அடுத்தவர்களுக்குக் குறிப்பாக மனைவிகளுக்கு எற்படும் தாக்கத்தையும் அதன் வாயிலாகச் சிசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் இக்கதையின்மூலம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் திருமதி. ஆதிலெட்சுமி.

வானத்தில் ஏறப் படிகளா இல்லை.....?

ஒரு சராசரி தாயின் எதிர்பார்ப்புகள் மிகவும் இயல்பாக இக்கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழ்மைச் சூழலில் இருந்து தங்களைத் தங்கள் பிள்ளைகள் மீட்டெடுப்பார்கள் எனும் ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்பையே இக்கதையின் மையமாகக் கொண்டு புனைந்துள்ளார் திரு. மு.வரதராசு. பரீட்சை என்னாயா ஆச்சு?’ என்ற அந்தத் தாயின் கேள்வியின்மூலம், மலேசிய நாட்டில் தமிழினம் தலையெடுப்பதற்குக் கல்வியைத் தவிர, வேறெதுவும் துணைவரப் போவதில்லை என்பதைக் குறியீடாக உணர்த்திச் செல்கிறது.

தரிசனம்

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, அம்மாவின் வாழ்க்கையைப் பின்னி கதையாடல் தொடர்கிறது. பெரும்பாலோர் இயல்பாகக் கடந்துபோகும் ஒரு மரணம், ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் மாறாத மாற்றத்துடன் நிலைத்துவிடுவதை இக்கதையின்வழி புனைந்திருக்கிறார் திரு. கோ.புண்ணியவான். அப்பா இறந்த பிறகும் கூட அவருக்காகக் கேட் கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்கும் அம்மா. கணவன் தன்னுடனே இன்றும் இருப்பதாக வாழும் அம்மா. மரணத்திற்குப் பிறகும் கணவனின் இருப்பில் வாழும் ஒரு பெண்ணின் உணர்வுகளை உணர்வு சார்ந்த நிலையிலேயே அறிந்துகொள்ள முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டில் இக்கதை தன் நிறைவை எய்துகிறது.

கெத்துவா கம்போங் முனுசாமி (கிராமத்துத் தலைவர் முனுசாமி)

ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அதனையொட்டிய காட்சிப் படிமங்கள் கதையை நகர்த்திச் செல்கின்றன. இறந்த மனிதரால், வாழ்க்கையில் முன்னுக்கு வந்த இரண்டு பெண் கதாபாத்திங்கள் நன்றியை மறக்காமல் அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, தங்களால் இயன்றதைச் செய்வதாகக் கதை பதிவு செய்கிறது. ஒற்றைத் தாயார்களான மாச்சிக் சுலேஹா’, கீதா இருவரும் மற்றவர்களைப்போல கிராமத்துத் தலைவரான முனுசாமியின் உதவியால், வாழ்க்கையில் தங்களுக்கான ஒரு நிலையான இடத்தை நிரப்பிக்கொண்டவர்கள். பல்லின மக்களின் வாழ்வியல் சூழலையும் இக்கதை ஓர் இறப்பின்மூலம் நடவு செய்கிறது. மேலும், கணவன்களால் பெண்கள் கைவிடப்படுவதற்கும் நிர்க்கதியாய் நிற்பதற்கும் மற்றொரு பெண்ணே முழுகாரணமாய் அமைந்துவிடுவதையும் கதையினூடே மிக இயல்பாப் பதிவு செய்துள்ளார் திரு. எம்.கருணாகரன்.

மறுபக்கம்

இங்கும் ஓர் இறப்பு. சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் மிக்க ஒருவரின் மரணம். மருத்துவமனையில் இறந்துவிடுகிறார். அவருக்கு முதல் மனைவி. இரண்டாவது மனைவி. மூன்றாவதாக ஓர் அம்மாள். மூவரும் அவரால் பயனடைந்தவர்கள். ஆனால், அவரின் பிரதேத்தைப் பெற்றுக்கொள்ள எந்தக் குடும்பமும் முன் வராததால், வெண்மை உடை போற்றப்பட்ட உயிரற்ற உடல் மார்ச்சுவரி க்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது என கதை முடிகிறது. மூன்று பெண் கதாபாத்திரங்களின் சுயநலப் போக்கை இக்கதையின்மூலம் எடுத்துக்காட்டி, சமூகத்தில் இருக்கும் அவலங்களை வெளி உலகக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் திரு. நிலாவண்ணன்.

புதிய டீச்சர்

ஆசிரியராகப் பணியில் சேர்ந்து துணைத் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பின்னர், தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று,, இனி குடும்பமே தனக்கு எல்லாம் என நினைத்து, இனி ஆசிரியர்த் தொழிலுக்கு வரக்கூடாது என்ற வைராக்கியத்துடன் பணி ஓய்வு பெற்று பின், குடும்பத்தில் தனது இருப்பை உணர்ந்துகொண்டு மீண்டும் ஆசிரியர் தொழிலுக்கு வரும் ஒரு பெண்ணின் கதை. வெளி உலகில் யார் யாராலோ எப்படி எப்படியெல்லாமோ புகழ்ந்து பாராட்டப்படும் ஓர் ஆசிரியை, குடும்ப நிலையில் வெறும் ஒரு சராசரி அம்மாவாக, மாமியாராக, பேரப்பிள்ளைகளின் பாட்டியாக, வயதானவராகப் பார்க்கப்படும் ஓர் அவலம் இக்கதையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவரின் ஆற்றலும் திறமையும் குடும்பத்தினரால் புரிந்துகொள்ளமுடியாமல் போகிறது.

உலகம் நம்மைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு உறவுகள் நம்மைப் புரிஞ்சுக்கிறது இல்ல என்ற ஓர் ஆசிரியையின் ஏக்கங்களை இக்கதையின்மூலம் மிக யதார்த்தாகப் புனைந்து காட்டியிருக்கிறார் திரு. மு.மணிவண்ணன்.

நந்தியாவட்டைப் பூக்கள்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த தன் முன்னாள் ஆசிரியை நதியா டீச்சரை இந்நாள் ஆசிரியையாக ஒரு பள்ளிக்குச் செல்லும்போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறாள் காவியா. இந்த இரு பெண் கதாபாத்திரங்களையும் காவியாவின்மூலம் பின்னோக்கிப் பார்க்கும் உத்தியால் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திருமதி. உதயகுமாரி கிருஷ்ணன். நதியாவக்குப் பிடித்த நந்தியாவட்டைப் பூக்களுடன் நெருங்கி பயணிக்கும் கதையின் போக்கு, இறுதியில் நாம் எதிர்பார்ப்பதுபோல் அனைத்தும் இங்கு நடந்துவிடுவதில்லை என்பதை மிக யதார்த்தமாகப் பதிவு  செய்து செல்கிறது.

இதுநாள்வரையில் காவியாவின் கற்பனையில் சற்றே பூசின உடம்போடு அதே நீண்ட முடியோடு உலா வந்த நதியா டீச்சர் இன்று, தலைமுடி எல்லாம் இழந்து, சர்க்கரை வியாதியின் உச்சத்தில் இருக்கும் தன் இரண்டு வயது பிள்ளையை வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் பின்னிப் பிணைத்திருப்பதைக் காண முடிகிறது. இது நதியா டிச்சருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான டீச்சர்களுக்கும் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில் பொருந்தும் ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது.

பிடிசாதம்

ஈப்போவில் சைவ உணவிற்குப் பிரசித்திப் பெற்ற ஐயர் கடை ஒன்றையும் அதனை நடத்தும் மணி ஐயரையும் சமையலைக் கவனிக்கும் அண்ணன் இராம ஐயரையும் அறிமுகப்படுத்துகிறது கதை. ஊருக்கெல்லாம் உணவு சமைக்கும் இராம ஐயர், தான் சாப்பிடுவதற்காக வீட்டிற்குச் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஊருக்கெல்லாம் நான் உபசாரம் பண்றேன். நேக்கு உபசாரம் பண்ண ஓர் ஆள் வேண்டாமா? .........கடையில எல்லாத்தையும் அருஞ்சுவையாக சமைத்தாலும் நேக்கு அவ கையால பரிமாறிச் சாப்பிட்டாதான் மனசுக்குத் திருப்தியா இருக்கும்....தினசரி நெருப்புலே கெடந்து சாகிற நேக்கு...ஆத்துக்குப் போயி அவளோட ஒரு கைப்பிடிசாதம் சாப்பிட்டாதான் மனசுக்குச் சாந்தி ஏற்படும்’.

கதைக்குள் அவர் மனைவியின் கதாபாத்திரப் படைப்புக்கென தனி பாத்திரமாக எதையும் உருவாக்காமல் இராம ஐயரின் கூற்றின்மூலம் மனைவி என்ற பெண் கதாபாத்திரத்தின் அறிமுகத்தை மிக இயல்பான குணநலன்களுடன் புனைந்துள்ளார் திரு. சித.நாராயணன்.

முடிவுரை

பெண்ணியக் கருத்துகளும் அதன் தொடர்பான வெளிப்பாடுகளும் ஒவ்வொரு நாட்டின் வாழ்வியல் சூழல், பண்பாட்டிற்கேற்பப் புத்தம் புது விளக்கங்களைப் பெற்று அறிமுகமாவதைக் காணமுடிகிறது. மேலை நாட்டில் உருவான பெண்ணியச் சிந்தனைகள், அதனையொட்டி இந்தியா, தமிழ் நாட்டில் உருவான பெண்ணியச் சிந்தனைகள் மலேசிய நாட்டிலும் பிரதிபலிப்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் வாயிலாக அதன் பிம்பங்களை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

(4-5-2019 - மலாயப் பல்கலைக்கழகத்தில் படைக்கப்பட்ட கட்டுரை)

துணைநூல்கள்

1.   மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். கோலாலம்பூர். 2018.
2.   தற்காலப் பெண்கவிஞர்களின் படைப்புகள்-ஓர் ஆய்வு. ஜெ.சா.ஜிஜிகிறிஸ்டோபெல். மதுரை. 2009.
3.   ஜெயகாந்தன் படைப்புகளில் பெண்களின் ஆளுமைப்  பதிவுகள், கோ.விஜெயம். மதுரை, 2004.
4.   சன்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ். அரசு கலைக் கல்லூரி, மேலூர். மதுரை. மலர் 3, சிறப்பிதழ் 2, டிசம்பர் 2018.
5.   திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும். ந.இரத்தினக்குமார், கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2016.
6.   புனைகதை இயல், சபா.ஜெயராசா, சேமமடு பதிப்பகம், கொழும்பு. 2009.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக