வியாழன், 3 அக்டோபர், 2019


வாங்க வாசிக்கலாம் 

மக்கள் ஓசையில் வந்த தொடர் கட்டுரை (19-05-19)

வாங்க...........வாசிக்கலாம்!  - எம்.சேகர்                (1)


வாசிப்பு என்பது அன்றாட வாழ்கைகயின் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்கவேண்டும்  என்கிறார் எஸ்.இராமகிருஷ்ணன். அன்றாடம் நாம் சாப்பிடுவதுபோல குளிப்பதுபோல வாசிப்பும் நம்முடன் இயல்பாக இருக்கவேண்டிய ஓர் அற்புதமான பழக்கமாகும். ஆனால், வாசித்தல் எனும் இந்த அற்புதமான பழக்கம் நம் மக்களிடையே குறைந்துகொண்டே வருவதாக பல ஆய்வுகள் சுட்டுகின்றன.

ஒரு மனிதன் தன்னை மட்டுமன்றி, தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி எப்போது சிந்திக்கத் தொடங்குகின்றானோ அப்போதுதான் அவன் வரலாறுகளில் பதியப்படும் மனிதனாக மாறுகிறான். அப்படிப்பட்ட மனிதனை உருவாக்கும் பெரும் பங்கு புத்தக வாசிப்பிற்கு இருக்கிறது. ஒரு வடிவமே இல்லாத ஒரு கல்லை ஒரு சிற்பி எவ்வாறு செதுக்கி ஒரு சிலையாக மாற்றுகிறானோ அதுபோல இலக்கே இல்லாத ஒரு மனிதனுக்கு இலக்கைக் காட்டி, அந்த இலக்கை நோக்கி அவனை இட்டுச் செல்லும் மாபெரும் ஆற்றலைக் கொண்டது இந்த வாசிப்புப் பழக்கம்.

மக்களிடையே வாசிப்புப் பழக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் இலக்கியவாதியுமான ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளாகும்.

இன்றைய பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் வாசிப்புப் பழக்கம் இல்லாததால், அவர்களிடம் சமூக சிந்தனைகளை எதிர்பார்க்க முடிவதில்லை. நம்மில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பு வேலைக்கு உத்திரவாதம் என்று நம்புகின்றோம். ஆனால், வாசிப்புப் பழக்கம் வாழ்க்கைக்கு ஊட்டமானது என்று யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்குவதில்லை. பொதுவாக, யாரும் இதை ஆழமாக உணர்வதுமில்லை. இதனால்தான் பலரின் வாழ்க்கையில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. இப்படித் தோன்றும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சரிவரக் கையாள வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிச் சிந்திக்கவேண்டும் (Thinking Out Of Box). இப்படிப் பார்க்க உதவுதான் வாசிப்புப் பழக்கம்.

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது, ‘ஓரு நூலகம் கட்டுவேன் என்றாராம் மகாத்மா காந்தி. என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது என்றாராம் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் மிகப்  பெரிய கண்டுபிடிப்பு எது? என ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் கேட்டபோது அவர் சொன்னாராம் புத்தகம் என்று. நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டபோது, ‘எனக்கு வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்கவேண்டும்  என்றாராம். பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது, மார்டின் லூதர், ‘புத்தகங்கள்தான் எனப் பதிலளித்தாராம். தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங். ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்கும் பழக்கமுடையவர் சார்லி சாப்லின்.

போதும் என்று
நொந்துபோய்
புது வாழ்வைத் தேடுகிறீர்களா
ஒரு புதிய புத்தகத்தை
வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் என்கிறார் இங்கர்சால்.

இப்படியாக வாசிப்பின் பெருமைகளைப் பலரின் கூற்றுகளாக நாம் எடுத்துரைத்துக்கொண்டே போகலாம். இன்னொரு விஷயம். இலக்கியம் மட்டும் வாசிப்பல்ல. வாசிப்பு என்பது அவரவர்க்கு விருப்பப்பட்ட எந்தத் துறையையும் சார்ந்து இருக்கலாம். மேலும், தன் தொழில் சார்ந்து வாசிப்பதை வாசிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் எஸ். ரா. ஆனால், எந்த ஒரு வாசிப்பும் மனிதனுக்கு நல்வழி காட்டுகிறது என்றால் அது சிறந்ததுதானே. தன் துறை சார்ந்தோ அல்லது துறை சாராததோ எதுவாகினும் வாசிப்பு என்பது வாசிப்புதான்.

வாசிப்பின் தாகத்தைத் தூண்டும் வகையிலும் நீங்கள் வாசித்த நூல்கள் தொடர்பாக நீங்களும் உங்களின் வாசிப்பனுபவத்தை எழுத இக்கட்டுரை ஒரு வழிகாட்டியாக இருக்கும் எனவும் நம்புகிறேன். அந்த நோக்கத்திற்காகவே நான் வாசித்த ஒரு சில புத்தகங்களை இந்தத் தொடரின்மூலம் உங்களோடு பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். அந்த வகையில் முதல் புத்தகமாக நம் நாட்டு எழுத்தாளர், நவீன கவிதையாடல் கவிஞர் எம். கருணாகரன் அவர்களின், ‘கணங்களின் சந்திப்பு என்ற கவிதை நூல்வழி எனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். எம்.கருணாகரன் நம் நாட்டில் தமிழினச் சமூக நிலை பற்றிக் கோபமும் மனித நேயமும் தனது கவிதையாக்கத்தில் கவி நயத்தை வெளிப்படுத்துவதில் கடும் சிரத்தையும் எடுத்துக்கொள்பவர். அந்தக் கணநேர வலிக்கான பிறப்புகளே அவரின் கவிதைகள்.

கணங்களின் சந்திப்பு –எம்.கருணாகரன் (2014)

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பட்டாம் பூச்சி இருக்கிறது. அந்தப் பட்டாம் பூச்சியின் சிறகுகள் மெல்ல அசைய எத்தனிக்கும்போது மனம் மெல்லிய உணர்வுகளால் தீண்டப்படுவதுண்டு. அந்த மனத்தீண்டல்களின் வெளிப்பாடுகள் விரல்நுனியில் சிதறும்போது அவை படைப்புகளாகின்றன. அந்தப் படைப்புகள் தத்தம் வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு வாசகனைச் சென்றடைகின்றன. அதில் ஒன்று கவிதை வடிவம்.
கவிதை என்றால் என்ன? எது கவிதை? எது கவிதையாக உருக்கொள்கிறது? அதில் கவித்துவம் எங்கு இருக்கிறது? எழுதும் அனைத்தும் கவிதைகள்தானா? என்ற கேள்விகள் பரவலாக் கேட்கப்படுவதுதான். உள்ளத்தில் உள்ளது கவிதை. உண்மையை உரைப்பது கவிதை. இயற்கையாகப் பொங்கி வருவது கவிதை. படித்ததும் மனத்தில் பதிவது கவிதை. இப்படிக் கவிதைக்குப் பல்வேறு விளக்கங்கள்  எழுதிக் கொண்டே போகலாம்.

எந்த ஒரு கலைப்படைப்பும் உணர்வுகளின் கடத்தல் என்றே கூறப்படுகிறது. பனி கொட்டுகிறது, தீ சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வையும் வலியையும் வாசிப்பவன் உணரத்தக்க வகையில் ஒரு கவிதை அமையவேண்டும். அப்போதுதான் கவிதை அங்கே சிறந்து நிலைத்து நிற்கும்.

ஓவியம் ஒரு பார்வையாளனுடைய அல்லது இசை ஒரு கேள்வியாளனுடைய உணர்வை நேரடியாகச் சென்று தொடுவது போல கவிதைக்கும் வாசகனுடைய உணர்வுக்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் இல்லை. இங்கு அறிவு என்ற ஒன்று படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் குறுக்கே நிற்கிறது. அறிவு குறுக்கிடுகிற காரணத்தால், அதன் அடிப்படைத் தேவையான சொல்நிலை அர்த்தம் (Verbal Level Meaning) நிறைவேறுமாறு, முதலில் கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அடுத்து, தன் அணிநலன்களும் தர்க்க விசித்திரங்களும் உணர்வோடு உறவாட, கவிதை தன்னைக் கவிதையாக நிலைநாட்டிக் கொள்கிறது. அதன்பிறகு, மீண்டும் அறிவைத் துணைக்கழைத்து, தன் உள்நிலை அர்த்தங்களை வெளிப்படுத்தி, தன் மகத்துவத்தை நிறுவுகிறது.

ஆகவே, சொல்நிலை அர்த்தம், உணர்வுக் கூறுகள், உள்நிலை அர்த்தங்கள் என்று இம்மூன்றும் இருக்க வேண்டியது கவிதையின் அவசியமாகும் என்று விளக்குகிறார் காலச்சுவடு இதழில் வெளிவந்த ஒரு விமர்சனக் கட்டுரையில் கவிஞர் ராஜசுந்தரராஜன். 

          பழையன கழிதலும் புதியன புகுதலும்
           வழுவல கால வகையி னானே  (நன். 462)
என்னும் இலக்கண மரபின்படி, பழைய இலக்கிய மரபு வழக்கிழந்து போவதும் புதிய இலக்கிய மரபு தோன்றுவதும் மொழியின் வளர்ச்சிப் பண்புகளாகும்.

சங்கப்பாடல்கள் தொடங்கி இன்றைய மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக், லிமரைக்கூ, சானெட், குக்கூ என வளர்ந்துவிட்ட சூழலில் எத்தனையோ வித சோதனை முயற்சிகள் இன்றளவும் நடந்துகொண்டிருக்கின்றன. பாவின வரிசையில் கவிதை எழுதுவதற்கு முதலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணத் தரவுகள் அவசியமாகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் நவீன அதிவேகப் பாய்ச்சலான வாழ்க்கைச் சூழலில் படைப்பவனுக்கும் வாசிப்பவனுக்கும் போதிய நேரமின்றி எளிய வடிவங்கள் புதுக்கவிதைகளாய், ஹைக்கூகளாய், சென்ரியூகளாய் விரிந்து வருகின்றன. அதிலும் புதுக்கவிதை இன்று நவீனக் கவிதைகளாகவும், பின்நவீனத்துவக் கவிதைகளாகவும் தன் அகலத்தையும் ஆழத்தையும் விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் மேலும் இந்தத் தளம் இன்னும் விரிவடையலாம்.

பொதுவாகவே, கவிதைக்குள் பயணப்படுகின்ற அனுபவம் என்பது வித்தியாசமானது மட்டுமல்லாமல் அது மனத்துக்கு மகிழ்ச்சியைத் தரவல்லது. எம். கருணாகரனின் கணங்களின் சந்திப்பு கவிதைத்தொகுப்பை வாசித்தபோது எனக்கும் அப்படி ஓர் அனுபவம் கிடைக்கும் என்று கவிதைக்குள் உள்நுழைந்தபோது, இறுக்கமான ஒரு மேகக்கூட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது என்றே சொல்லவேண்டும். தெள்ளத்தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உரைத்ததுபோல், வாழும் சமகால சமூகத்தின் உண்மையான முகங்களை அடையாளம் காட்டியுள்ளார் கவிஞர். சமூகத்தில் அவர் வைத்துள்ள பார்வை புதுச் சிந்தனையாக அழகுற இந்நூலில் ஒளிர்கிறது. சமுதாய மேம்பாட்டிற்கு ஆக்ககரமான உணர்வு இருத்தல் வேண்டும். கவிஞரிடம் அது இயல்பாகவே இருக்கிறபடியால் சமுதாயத்தில் காணும் பல சிக்கல்களை மிகவும் திறம்பட தம் கவிதைகளில் நிறுத்தியுள்ளார். புத்தார்வமும் புதுமை நோக்கும் பொருளின் ஆழமும் அவற்றை உணர்த்தும் முறையும் அவர் எழுத்துகளில் மிளிர்கிறது என்பதைக் கவிஞரின் ஒவ்வொரு கவிதையும் நிருபனம் செய்துள்ளது. தமிழ்ச் சமூகத்தையும் அவர் சார்ந்த மனிதர்களையும் ஆழமாகவும் நுட்பத்துடனும் மிகவும் சொற்செறிவுடன்  அவர் கவிதையாக்கி, ஒரு கைதேர்ந்த சிற்பி செதுக்குவதுபோல ஒவ்வொரு பக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

விண்வெளியில்
மலேசியா
குடிசையில் குப்புசாமி

என்ற வரிகளில், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய இயலாமையைக் காட்சிப்படுத்துகிறார். வாசிப்பவனின் விரிந்த வாசிப்பும் வாழ்க்கை அனுபவமும் அறிவின் ஆழமும் இக்கவிதையின் பொருளை விரித்துச் சொல்லும்.

தினம் காலை
வந்துபோன புறாக்கள்
இப்போதும்
கொத்திக்கொண்டிருந்தன
வெறுந் தரையை

தடம் என்ற கவிதையில் வரும் இவ்வரிகள் நடப்பியல் அனுபவங்களின் பதிவாகவே வருகின்றன. காலத்திற்கேற்ப அதன் சூழலுக்கேற்ப மனிதன் மாறிக்கொண்டிருக்கிறான். ஆனால்,மாறாமல் வந்து போய்க்கொண்டிருக்கும் பறவையினத்தின்மேல் கவிஞனின் பார்வை விழுந்துள்ளது. அன்றாடக் காட்சிகளாகத் தென்படுவதைக் கூர்ந்து நோக்கும் கவிஞர் அதனை அழகாகக் காட்சிப்படிமமாகக் காட்டியுள்ளார்.

உன் வருகைக்குள்
ஒரு நூறு ஆண்டுகள்
புதையப்போவது
புலப்பட்டிருக்காது

இரப்பர்த் தோட்டங்களில் மூழ்கிப்போன, தொலைந்துபோன ஓர் இனத்தின் வரலாற்றுச் சுவட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வரிகள், தான் வாழும் சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள தீவிரமான பார்வையை முன் வைக்கின்றன. அனலும் கனலுமான சொல்விளையாட்டுகளைக் கவிதைகளில் காணமுடிகிறது. தன் சமூகத்தின் இயலாமையைக் கண்டு கொதித்துப் பொங்கி எழுந்துள்ள கவிதைகள் இத்தொகுப்பு முழுக்க மகரந்தங்களைத் தெளித்து அதனூடே சயனைட்டையும் கலந்துள்ளன.

குருதி வேட்டை என்ற கவிதையில் ஈழமண்ணின் ஈரம் குருதியாய்க் கொட்டியுள்ளது. அந்த மண்ணுக்காகத் தன்னால் எதுவும் செய்ய இயலாத ஒரு கவிஞனின் பார்வை இறுதி வரிகளில் வெகு இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.  எழுத்திலும் பேச்சிலும் வெறுமனே பொங்கி எழுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதைக் கவிதை மறைமுகமாக வலியுறுத்திச் சொல்கிறது. பாரதியைப்போல் வெளிநாட்டில் உழைக்கும் தமிழர்களின் அவலம் பற்றியும் பாரதிதாசனைப்போல் மொழிப்பற்று, தமிழினப் பற்று மற்றும் தான் சார்ந்த சமூகத்திற்குத் தேவையான சீர்திருத்த எண்ணங்களையும் இயலாமைகளையும் தம் கவிதைகளில் உள்ளடக்கமாகக் கொண்டு பயணித்திருக்கிறார் கவிஞர் எம். கருணாகரன்.

எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் இடையில் ஒரு மயிரிழைகூட இடைவெளி இருக்கக்கூடாது. உள்மனத்தை நேரிடையாகப் பேசு. எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல் என்கிறார் ஜப்பானிய ஹைக்கூவின் தந்தை பாஷோ’. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் இக்கூற்றை ஒற்றியே படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தக் கவிதைத் தொகுப்பு நம் வாழ்க்கையைப்போல் விரிந்து பரந்து கிடக்கிறது. நவீனத்தின் முகங்களுடன் கொட்டிக் கிடக்கும் வார்த்தைக் குவியல்கள் நுகர்கின்ற வாசகனின் மனத்தைக் கிளரிப் பார்த்து உணர்வுக்குள் உள்பாயும் வீரியம் கொண்டவை. கவிஞரின் எழுத்து இயக்கத்தைக் கூர்ந்து நோக்கின், அவர் தம் வாழ்க்கை அனுபவங்களைக் கவிதையோடு இழையோடி உறவாட வித்திட்டுள்ளார் என்பதை உணரமுடிகிறது.

ஒவ்வொரு கவிதையும் உவமை, உருவகம், படிமம், முரண், இருண்மை, அங்கதம், தொன்மம், குறியீடு போன்ற உத்தி உளிகளால், தாம் வாழும் நாடும் சமூகமும் மொழியும் மட்டுமன்றி உலகலாவிய நடப்புகளையும் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டு மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. கவிஞரின் விரல் நளினங்களில் மனம் களித்த ஓரிரு கவிதைகளை மட்டுமே இங்கு உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். நான் அதிகம் சொல்வதைவிட நீங்கள் வாசிக்கும்போது கவிதைகள் நிறையவே பேசும் உங்களிடம்.

எம். கருணாகரனின் படைப்புலகம் வேறொரு மனவெளிக்கு நம்மை அழைத்துச் செல்பவை. அங்கு கறுப்பு வெள்ளை பட்டாம் பூச்சிகளே அதிகமாகச் சிறகடித்துப் பறக்கின்றன. அவை வரும் காலங்களில் மென்மேலும் வளர்ந்து மலர்ந்து பல வண்ணங்களில் மணம் வீசட்டும் என வாழ்த்துவோம்.

(தொடரும்)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக