வாங்க
வாசிக்கலாம் – 14 – எம்.சேகர்
மக்கள் ஓசை (25-8-19)
இலக்கிய
நண்பர்களின் இதய இராகங்கள் – கவிதைத் தொகுப்பு
(தொகுப்பாசிரியர் ந.கு.முல்லைச்செல்வன்)
காலங்
காலமமாய்க் காதல் கவிதைகள் எழுதப்பட்டாலும் அது ஒவ்வொருவரின் தொடுதலின்மூலமும்
வெவ்வேறு விதமான பரிணாமங்களைப் பெற்றுவிடுவது இயல்பாக நடக்கக் கூடியதே. அவ்வகையில், இத்தொகுப்பில் உள்ள ந.கு.முல்லைச்செல்வனின் எழுத்துகளும் காதலிக்காக
வார்த்தைகளைத் தேடிப் பயணிக்கையில் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றன. அதுதான், தமிழும் அவரின் காதலியின்மேல் வாஞ்சைக்கொண்டு சொற்களைக் கொடுக்க
மறுத்துவிடுகிறதாம். அதை இப்படித் தன் புனைவில் காதலியையும் தமிழையும் சமதட்டில்
வைத்து முரண் உத்தியோடு பரிமாறுகிறார்.
உன்னை
வர்ணிக்க
வார்த்தைகளின்
தேடல்களில்
பயணிக்கும்போதுதான்
தெரிகிறது
தமிழுக்கு
உன் மீதில்
இருக்கும்
காழ்ப்புணர்வு (தேவை ஒரு வார்த்தை)
மனிதனுக்கு
எல்லாம் இருந்தாலும் அவன் தொடர்ந்து தன் நிலையை இச்சமூகத்தில் தக்க வைத்துக்கொள்ள, வெற்றிபெற அவன் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பது அவசியமானது. அதைவிட
முக்கியமானது தான் யார் என்ற அறிதல் அவனுக்குள் இருக்கவேண்டும். அதில் அவன்
தெளிவாக இருக்கவேண்டும். உலகம் ஒரு நாடகமேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்றார் வில்லியம்
ஷேக்ஸ்பியர். இங்கு நாம் எப்போதுமே நமக்காக வாழாமல் பிறருக்காக வாழப்
பழகிக்கொள்கிறோம். அதையே பழக்கமாக்கி வழக்கமாக்கி வைத்திருக்கிறோம். நமக்கான
வாழ்க்கையை நம்மில் எத்தனைபேர் வாழ்கிறோம்? அதற்கான ஒரு
விழிப்பு நிலையைத் தமிழ்ச்செல்வத்தின் கவிதை வரிகள் தட்டிப் பார்க்கின்றன.
நாம்
யார் என்று நாமே
உணர்கிறோமோ
அதுதான்
‘விழிப்பு’ களுக்கெல்லாம்
தலை (விழிப்பு)
சண்.சிவாவின்
அப்பா பற்றிய கவிதையை வாசித்தபோது, கவிஞர்
பா.மீனாட்சி சுந்தரத்தின் கவிதையொன்று ஞாபகக் கதவினூடே கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
‘கடைசியாய் வாசித்த புத்தகங்களின் ஊடே
கோணலாய்ப்
போய்க்கொண்டிருந்த
அடிக்கோடுகளின்
வழியே தெரிந்தன
அப்பாவின்
எண்ணப்படும் நாட்கள் (நிறமறியாத் தூரிகை )
சண்.சிவா
அப்பாவின் நினைவில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து இப்படி எழுதுகிறார்.
அப்பாவைப்
பற்றி எழுதலாம்
என்று
நினைக்கையில்
முந்திக்கொண்டு
கண்களே
எழுதத்
தொடங்கிவிட்டன
அப்பாவிற்கான
வரிகளை (அப்பா)
இன்னொரு
கவிஞரும் வீட்டு அலமாரியில் மஞ்சளாகிக்கொண்டிருக்கிற பழைய புத்தகங்களின்
பக்கங்களில் அப்பாவின் வாசனையை முகர முடிகிறது என்கிறார். இப்படியாக அப்பாவைப்
பற்றிய நிறைய கவிதைகள் தமிழ்கூறும் நல்லுலகில் சமீப காலமாக அதிகமாக வருவதைக் காண
முடிகிறது.
சமகால
சமூகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களின் கவிதைகளைப் புரிந்துகொள்ள அவர்கள் எழுதிய
மனோநிலைக்கு அருகாமையில் வாசகன் செல்வது இங்கு அவசியமாகிறது. எம்.கருணாகரனின் கவிதைகளை அவ்வகையில்தான் நாம் அணுகமுடியும். அந்த வகையில்
அவரின் உறைப்பிணம் என்ற கவிதையின் வரிகள் சில இப்படித் தெறிக்கின்றன.
ஆடைகளைக்
களைந்து
நிர்வாணமாக்கியும்
கோபமின்றி
புன்னகைக்க
முடிகிறது
முகம்
முழுக்க உமிழ்ந்தும்
நிதானமாய்த்
துடைத்து
கைக்குலுக்கிப்
பேசிக் கொள்கிறோம் (உறைப்பிணம்)
துரை
முனியாண்டியின் துயிலா இரவுகள் கவிதையும் அத்தகையத் தன்மையுடன்
படைக்கப்பட்டுள்ளது. அவர் தேடும் விடைக்கான பதில்கள் பல்வேறு புரிதல்களாய் வாசகப்
பார்வைகளால் வேறுபட்டு நிற்கலாம். புரிதல்களின் வகைகள் மாறுபட்டிருந்தாலும்
அவைகளெல்லாம் சமகாலத்திய மக்களின் வாழ்வியலாகவும் பொருளாதார ஒடுக்குதல்களாகவும்
வர்க்கங்களின் முரண்பட்ட யதார்த்தங்களாகவும் அரசியல் தர்க்கங்களாகவும் சிறுபான்மையினரின்
தேவைகளின் முடக்கல்களாகவும்தான் இருக்கும்.
எதற்கும்
பதிலில்லாமல்
உடல்
களைத்து
உறக்கம்
கேட்டாலும்
இமைகளிடம்
இரக்கம்
இல்லாததால்
விழித்துக்கொண்டே
விடை தேடுகிறேன் (துயிலா இரவுகள்)
இன்றைய
நடப்பியல் சூழலில் அன்பு, கருணை,
இரக்கம் என்ற மனிதநேய உணர்வற்ற நிலைகளில்தான் மனிதம் கல்லறைகளுக்குள் புதைக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம்
இனி உண்டோ
மனிதர்
நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை
இனி உண்டோ’
என்ற
பாரதியின் கூற்றுக்கேற்ப, மனிதநேய சமநிலை சமூகம்
தோன்றியிருந்தால், பூ.பா.சிவகுமார் மனிதாபிமானம் என்ற
கவிதையை இயற்றிடும் நிலையும் இங்கு வந்திருக்காது.
உணவிற்காக
எட்டிப்பார்த்து
குப்பைத்
தொட்டிகள் சொல்லும்
ஏழ்மையின்
வலியை
அள்ளிப்
பருகிய
குழாய்
நீர்களின் ஓசையில்
உதிர்ந்திருக்கும்
இவர்களின்
வயிற்றின்
வறுமையின் வலி (மனிதாபிமானம்)
இந்நிலவுலகில்
மீண்டும் மனிதத்தைப் பிரசவிக்க வைக்கவேண்டிய கடமை கவிஞர்களுக்கும்
எழுத்தாளர்களுக்கும் உள்ளது என்ற மறுக்கவியலாத உண்மையை எடுத்தியம்பும் படைப்பு.
சூழலிலிருந்து
நம்மை வேறுபடுத்திக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழலின் தாக்கத்திலிருந்து
உருவாகுவதுதான் படைப்பிலக்கியம். இலக்கியம் என்பது வெறும் கற்பனைகளை மட்டும்
கொண்டது அல்ல. படைப்பிலக்கியத்துக்குள் நாம் மனிதனைத்தான் காண்கிறோம். அவனின் அனைத்துச்
செயல்பாடுகளைத்தான் நகலெடுக்கிறோம். கவிதை என்பது வெறும் எதுகையையும் மோனையையும்
கொண்டதல்ல. அதில் கவித்துவம் இருக்கவேண்டும். கவித்துவத்தின் ஓர் கூறுதான் கவிதை.
கவித்துவம் என்பது படைப்புத்திறன். இந்தப் படைப்புத் திறன்தான் கவிதையை
உரைவீச்சிலிருந்து வேறுபடுத்தித் தனித்துக் காட்டுகிறது. இவ்வகைப் படைப்புத்
திறனைக் கைவரப்பெற்றிருப்பவர்களில் ம.கனகராஜனும் ஒருவர். அவரின் சிதை என்ற
கவிதையில் சில வரிகள் இப்படி வருகின்றன.
நான்
தொலைந்துபோன தினம்
நினைவில்
இல்லை
முகமற்ற
நிழலாய்க் காற்றுக்குள் நுழைந்து
என்னைத்
தேட முடியவில்லை
கடவுள்
என்னோடுதான் இருந்தார் (சிதை)
இவ்வாறு, ஒவ்வொரு சொல்லும் மிகவும் நேர்த்தியாகவும் கவனத்துடனும் அவரின்
கவிதையினூடே எடுத்தாளப்பட்டுள்ளது.
ஜெயந்தி
கைலாசத்தின் கவிஞன் என்ற கவிதை கவிஞனின் புகழைப் பாடுகிறது இப்படி.
ஞாலத்தைத்
தளமாக்குவான்
ஞானத்தை
அதில் விதையாக்குவான்
காலத்தை
அதனால் வென்றிடுவான்
கவிஞன்
எனப் பேரெடுப்பான் (கவிஞன்)
வத்சலா
விஜியேந்திரத்தின் கவிதை வழிமுறை நம்பிக்கை, காலையில் பூத்த
பனிப்பூக்களாய் ஜில்லென்று வீசும் காலைத் தென்றலாய் இதயத்தை வருடிச் செல்கிறது.
எனக்கான
பனித்துளியில் மட்டுமே
என்னால்
பல் துலக்க முடிகிறது
என்
இரவுநேர ஓய்வுகள்
என்னைப்
புதுப்பித்துள்ளன (வழிமுறை நம்பிக்கை)
மனித
அகத்தினுள் மையமிட்டுள்ள இருளை அகற்றும் வரிகளாகக் குழந்தைமேரி கதிர்வேலுவின்
எதிர்காலம் என்ற கவிதை அமைந்திருக்கிறது. தன்னம்பிக்கை பெறுவதற்கு உரிய
உரமும் உள்ளத்து உறுதியும் உன்னிடம்தான்
இருக்கின்றன என்பதை விளிக்கிறது.
உனக்கான
வாசலில் புன்னகையுடன்
வரவேற்கத்
துடித்துக் கொண்டிருக்கும்
ஓர்
ஒளிமயமான எதிர்காலம் (எதிர்காலம்)
இராதை
சுப்பையாவின் ஆடும் மனிதன் எனும் கவிதை புல்லாங்குழலையும் மூங்கில்களையும்
உருவகமாகக் காட்டி ஆழமான கருத்து நலங்களைப் புலப்படுத்துகிறது.
புல்லாங்குழல்
மறந்துபோனது
மூங்கில்களை
(ஆடும் மனிதன்)
சுப்ரமணியம்
பெருமாளின் அறம் எனும் கவிதையின் இறுதி வரிகள்,
அனுப்புவது
அன்பு இல்லங்களுக்கு (அறம்)
என்று
நிறைவு பெற்றாலும் நில்லாமல் ஓடி பல நிகழ்வுகளைக் காட்சிப் படிமங்களாத் தொகுத்துக்
காட்டுகிறது.
ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் எங்கோ ஒரு மூலையில் ஒரு பைத்தியக்காரன் ஒளிந்துகொண்டுதான்
இருக்கிறான் என்பதை மையமாகக் கொண்டுள்ளது கே.எல்.நாராயணனின் ஆத்மாக்கள் கவிதையின்
வரிகள்.
பல
பிரச்சினைகளால்
பைத்தியமாகத்
தாங்கள் அலைவதை
மறந்த
மனிதர்கள் (ஆத்மாக்கள்)
சஞ்சிக்
கூலிகளாக இங்கு வந்த தமிழனின் வாழ்வியலைக் குறியீட்டுத் தன்மையில் சாசனமாகச்
சொல்லிச் செல்கிறது ஆறுமுகம் மாரிமுத்துவின் செம்மண்சாலை எனும் கவிதை.
தென்றலில்
உதிர்ந்த சருகுகளுடன்
மழைநீரில்
நாங்கள்
குளிர்ந்துபோகிறோம் (செம்மண் சாலை)
பெ.கணேஸ்ராவின்
போலி தலைவன் எனும் கவிதையின் வரிகள் இன்றைய சமகால அரசியல் நிலையைப் பகடிச்
செய்கிறது. மாற்றம் ஒன்றுதான் இவ்வுலகை இன்னமும் மாறாமல் இயங்க
வைத்துக்கொண்டிருக்கிறது. சொல் புத்தி அல்லது செயல் புத்தி ஏதாவது ஒன்று நமக்கு
இருக்கவேண்டும். இரண்டுமே இல்லையென்றால் அந்த ஆண்டவனாலும் நம்மைக் காப்பாற்ற
முடியாது. இன்றைய அரசியல் கட்சிகளும் காட்சிகளும் அவரின் கவிதைக்குப்
பொருளாகிப்போகின்றன.
சிந்திக்கக்
கூடிய மனித புத்தி
சிந்தனையற்று
போலி
வாழ்க்கையில் சிக்குண்டு (போலி தலைவன்)
கி.விஜயகுமாரனின்
ஆசை மனித மனத்துக்குள் இருக்கும் ஆசைகளைப் பட்டியலிட்டுச் செல்கிறது இப்படி.
சிற்பியாக
ஆசை
உன்னைச்
சிலை வடித்து
என்
மனத்தினில் பதித்திட (ஆசை)
கோபால்
இராமனின் வேதனை அவருக்கான வேதனை அல்ல. இந்த ஒட்டு மொத்த தமிழினத்துக்கான வேதனை.
அதிகாலையின் அழகியல் காட்சியோடு தொடங்கி அதனோடு முரண்பட்ட வாழ்க்கையைப் பதிவு
செய்கிறது.
அதிகாலை
முகம்
தெரியா இருட்டு
விதியை
நொந்தபடி பாலைச் சேகரித்துக்
காண்டாவின்
சுமையை நெஞ்சில் ஏந்தியபடி (வேதனை)
சாம்பசிவம்
ஆறுமுகத்தின் நட்புப் பூ, துரியோதனன் கர்ணனிடம் காட்டிய
நட்பின் அழகையும் கண்ணன் குசேலரிடம் காட்டிய நட்பின் மாண்பையும் தொன்மக் குறியீட்டோடு
சொல்லிச் சமகால இலக்கிய நண்பர்களின் நட்புதனை உயர்வு நவிர்ச்சியில் உரைக்கிறது.
அக
மகிழ்ந்திடும் அற்புத நட்பு
கர்ணன்
துரியோதனன்
கண்ணன்
குசேலர் நட்பின் மாண்பு (நட்புப் பூ)
வேலு
இரத்தினத்தின் இமயம், தமிழனின் மேன்மையையும் தமிழின்
அழகையும் பாடுபொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
மழலையில்
தமிழ் உள்ளதடா
மழை
பொழிவிலும்
மகிமை
தமிழொலி கேட்குதடா (இமயம்)
வீ.மா.சண்முகத்தின்
மனிதனைத் தேடி வருமா எனும் கவிதை வரிகள், ஆழ்மனத் தேடலுக்குள்
தன்னைத்தேடித் தேடி தொலைந்துபோன ஒருவனின் வாக்குமூலமாய்ப் பதிவாகியுள்ளது.
நித்திரை
இல்லாத கண்ணீர்த் துளிகள்
பனித்துளிகளாய்
(மனிதனைத்தேடி வருமா)
கண்ணதாசனின்
ஒரு பாடலில்,
‘தனக்குத் தானே துணை என நினைத்தால்
உலகத்தில்
ஏது தனிமை?’ எனும் வரிகளை ஞாபகப்படுத்தியது உத்ராபதி
இராமனின் தனிமை எனும் கவிதை.
சாமானியன்
சன்னியாசித் தேரில்
வலம்
வரும் சாகசம் (தனிமை)
எத்தனைக்
கூட்ட நெருக்கடியில் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனிமை இருந்துகொண்டு, அவனுக்கு வழித்துணையாக வந்துகொண்டுதான் இருக்கிறது. அதனால், இங்கு யாரும் தனியாள் அல்ல.
இத்தொகுப்பில்
இடம்பெற்றுள்ள சில கவிதைகள் சமூகத்தைப் பரிவாய்ப் பார்க்கின்றன. மற்றும் சில
கவிதைகள் சமூகத்தைக் கீறிப் பார்க்கின்றன. இன்னும் சில கவிதைகள் மனங்களை உழப் பார்க்கின்றன. பொதுவாக, மனித மனங்களைப் பண்படுத்தும்
கவிதைகளாகவே அனைத்தும் மிளிர்கின்றன.
படைப்பாளன்
தன் உணர்ச்சி மேலிட்டால் உருவமைக்கும் சொற்களுக்குப் பொருள் தேடுவது என்பது
எளிதல்ல. சிலருக்கு எளிதில் சென்றடையும். பலருக்குப் பல வாசிப்புகளின்மூலம் சென்றடையலாம்.
சிலருக்கு விளக்கும் கொடுத்த பிறகு சென்றடையலாம். ஓரிருவருக்குக் கடைசிவரை
புரிந்துகொள்ள முடியாததாகவே போகலாம். எது எப்படியிருப்பினும், படைப்பாளனின் அந்தக் கணநேர உணர்ச்சிப் பிழம்புகள் வெவ்வேறு புரிதல்களை
வாசிப்பவனுக்குக் கொடுத்துச் செல்வது நவீன படைப்பாக்கத்தின் ஓர் உச்சக் கூறாகும்.
இருப்பினும், இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள்
நேரிடையாகவே தான் சொல்ல வந்த செய்தியைச் சொல்லிவிட்டுச் செல்வதால் இக்கவிதைகளை
உள்வாங்குவதில் வாசகனுக்கு எவ்விதச் சிரமமும் இருக்காது என்றே தோன்றுகிறது.
மனிதர்களைச்
சொற்களால் தொடுவது ஒருவகை கலை. அது ஒரு சிலருக்கு இயல்பாக வந்திருக்கிறது. ஒரு
சிலரோ, வார்த்தைகளின் தேடல்களுக்குள் ஆன்மாவை ஒளித்து வைத்து கவிதையை
மொழிந்துள்ளனர். வேறு சிலரோ, வானத்து நட்சத்திரங்களின்
வசீகரிக்கும் வெளிச்சங்களைச் சில வரிகளுக்குள் பொழிந்துள்ளனர். வாய்ப்புக்
கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
நிறைவாக, இக்கவிதைத் தொகுப்பின் நூலாசிரியர் கவிஞர் ந.கு.
முல்லைச்செல்வனுக்கும் கவிதைகளைப் படைத்த கவிஞர்களுக்கும் பேரா மாநிலத் தமிழ்க்
கவிஞர் இயக்கத்தினருக்கும் என் வாழ்த்துகள்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக