வியாழன், 3 அக்டோபர், 2019



வாங்க........வாசிக்கலாம்! (2) –எம். சேகர்
மக்கள் ஓசை (26-5-19)
சென்ற வாரம் மலேசியப் படைப்புகளில் ஒன்றான எம்.கருணாகரனின் கணங்களின் சந்திப்பு நூலை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்த வாரம் சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர் திரு. சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் நாவலைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அதற்கு முன்பாகச் சிங்கப்பூர் இலக்கியம் அதன்  தொடர்பான இலக்கிய விருதுகள் குறித்தும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

அறிமுகம் – சிங்க்பபூர்ச் சூழல்

சிங்கப்பூரின் அரசு ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளை அதிகாரத்துவ மொழிகளாகக் கொண்டுள்ளது. இது சிங்கப்பூரின் தனித்தன்மைக்குச் சான்றாகும். இங்குப் பழக்கத்தில் உள்ள மொழிகளும் பல தரப்பட்ட இன, மத, பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலித்துப் பல்லினப் பண்பாட்டுக் கூறுகள் சூழ்கொண்டுள்ளதைக் காணலாம். அன்றே சிங்கப்பூர் ஒரு வணிக மையமாக இருந்து தற்போது உலகின் முதன்மையான வணிகம், சேவைத் துறையின் மையமாகத் திகழ்வதும் ஆசியாவிலிருந்தும் உலகின் பிற நாடுகளிலிருந்தும் மக்கள் தொடர்ந்து இங்கு வந்து குடியேறுவதற்கும் வியாபாரம், தொழில் சார்ந்து இயங்குவதற்கும் அனைத்து வகையிலும் தகுதி நிறைந்த ஒரு நாடாக விளங்குகிறது.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம்
படைப்பிலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். சமகால வாழ்க்கையைப் படைப்பிலக்கியம்வழி கலையாக்கும்போது, எழுத்தாளன் அவனை அறியாமலேயே கால மாறுதல்களுக்கு ஏற்ப மாறும் சமூக மாற்றத்தைத் தன் படைப்புகளில் காட்டுகிறான் எனவும் சிங்கப்பூரில் மலர்ந்த சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள் சிங்கப்பூர்ப் பின்னணியைச் சித்தரிக்கும் வகையில் தீட்டப்பட்டன எனவும் திரு. நா.கோவிந்தசாமி தனது, ‘சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் எனும் ஆய்வுக் கட்டுரையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் குறித்துக் குறிப்பிடுகிறார்.
1872ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட முனாஜாத்துத் திரட்டு என்ற கவிதை நூலே சிங்கப்பூரின் பழமையான நூலாகும் எனவும்  இந்நூலே சிங்கைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி நூலாகத் திகழ்வதற்குரிய சான்றுகள் கிடைத்திருப்பதாக முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் தனது, ‘மரபுக் கவிதை எனும் ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். இந்நூல் நாகூர் முகம்மது அப்துல் காதர் என்ற புலவரால் எழுதப்பட்டதாகும்.

நா.கோவிந்தசாமி, சிங்கப்பூர்த் தமிழிலக்கிய வளர்ச்சி நிலைகளை இங்கு நடந்த சமூக மாற்றங்களுக்கு ஏற்ப ஏழு பகுதிகளாக வகைப்படுத்திப் பிரித்துக் காட்டியுள்ளார்.
1.   தொடக்க காலம் (1887-1900)
2.   சீர்திருத்தக் காலம் (1900-1942)
3.   ஜப்பானியர் காலம் (1942-1945)
4.   இன எழுச்சிக் காலம் (1946-1960)
5.   குழப்பமாக அறுபதுகள் (1961-1970)
6.   நிலைபெற்ற எழுபதுகள் (1971-1980)
7.   அங்கீகாரம் கிடைத்த எண்பதுகள் (1981-1989)

மேலே குறிப்பிடப்பட்ட வகைகளின் தொடர்ச்சியாக, முனைவர் சீதாலட்சுமி, மேலும் இரண்டு பிரிவுகளைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம் என்ற ஓர் ஆய்வு நூலில், சிறுகதை என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

8.   புதிய வரவுகள் நிறைந்த தொண்ணூறுகள் (1990-2000)
9.   புதிய அலையை எதிரநோக்கும் 21ஆம் நூற்றாண்டு (2001 – இன்றுவரை)

மேலும், சிங்கப்பூர் இலக்கிய போக்குகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் சிங்கப்பூர்ச் சிறுகதைகளைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்,
1.   அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட முல்லைவாணனின் காலகட்டம்
2.   அடையாளத்தை வரையறுத்து அதனடிப்படையில் சீர்திருத்தம் பேசிய மா.இளங்கண்ணனின் காலகட்டம்
3.   அடையாளத்தைத் தன் ஆழ்மனத்தைக்கொண்டு பரிசீலித்த நா.கோவிந்தசாமியின் காலகட்டம்

இப்போது, அடையாளம் உருவாகி வந்த மொத்த வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலையும் கருத்தில்கொண்டு ஒவ்வொரு வாழ்க்கைத் தருணத்தையும் பார்க்கும் நான்காவது காலகட்டத்தில் சிங்கப்பூர்ச் சிறுகதை இலக்கியம் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

சிங்கப்பூர் இலக்கிய விருது

சிங்கப்பூர் இலக்கிய விருது சிங்கப்பூர் புத்தக மன்றத்தால் நடத்தப்படும் ஒரு தேசிய விருதாகும். சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளாக இருக்கும் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என நான்கு மொழிகளுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 1991 இல் நிறுவப்பட்ட இந்த விருதுகளின் நோக்கம்:
1.   சிங்கப்பூர் எழுத்தாளர்களால் அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதி வெளியிடப்பட்ட மிகச் சிறந்த படைப்புகளை அங்கீகரித்து சிங்கப்பூர் இலக்கியத் திறனுக்கு ஊக்கம் கொடுப்பது.
2.   சிங்கப்பூரின் புத்தாக்க எழுத்துத் திறனை பொதுமக்களிடையே கொண்டு சேர்ப்பதும் ஆதரவு ஊட்டுவதும் ஆதரவு பெறுவதும் ஆகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியில் சிங்கப்பூர்க் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம். சிறுகதை/புதினம், கவிதை, புனைவு அல்லாத படைப்புகள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் (1992) ஆங்கில மொழி படைப்புகளுக்கு ஊக்கமளிக்க ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டது. வெளியிடப்படாத சிறந்த படைப்புக்கு 10,000 சிங்கப்பூர் வெள்ளி வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2014 இல் புனைவு அல்லாத பிரிவும் கவிதைப் பிரிவும் இப்போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

சித்துராஜ் பொன்ராஜ் – ஓர் அறிமுகம் 

சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய மாறிலிகள் என்ற சிறுகதை நூல், 2016ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் விருதினைப் பெற்றது. இந்நூலுக்கு 2017ஆம் ஆண்டின் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவரின், ‘காற்றாய்க் கடந்தாய் எனும் கவிதை நூலும் 2016 ஆம் ஆண்டு கவிதைப் பிரிவிலும் இலக்கிய விருதினைப் பெற்றுள்ளது. விளம்பர நீளத்தில் ஒரு மரணம் என்ற நாவலும் சனிக்கிழமை குதிரைகள் என்ற கவிதை நூலும் இவரின் அண்மையப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.

சித்துராஜ் இளவயது முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருபவர். தமிழில் இருந்து சிறுகதை, கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் இருந்து சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழ்மொழியில் பெயர்த்திருக்கிறார். கன்னடத்தை வீட்டின் மொழியாகக் கொண்ட இவர், சமஸ்கிருதம், ஹீப்ரூ, பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளிலும் தேர்ச்சிக் கண்டவர்.

படைப்பின் உயிர்ப்பைக் கண்டறிந்து அதன் நூல்பற்றிச் செல்ல சில வரிகளை வாசித்சாலே போதும். அப்படைப்பின் பிரவாகத்தில் ஆழ்ந்து மன எழுச்சியில் அதன் ஆளுகைக்கு உட்பட்டுவிடுவோம். அப்படி ஈர்க்கிற படைப்புகள் எப்போதாவது நம்மை வந்தடைகின்றன. அவ்வகையில் இவரின் கதைகளில் இருக்கும் செய்நேர்த்தியும் சிறந்த எழுத்து நடையும் சிறந்ததொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது என்கிறார் எழுத்தாளர், கவிஞர் பொன். வாசுதேவன்.
இவரின் மாறிலிகள் கதையை வாசித்து முடித்தபோது சிங்கப்பூரையே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்துவிட்ட திருப்தி கிடைக்கிறது. வாழ்வின் ஊழ் காரணமாக சிங்கப்பூரின் வாழ்நிலைமைகள் சிலவற்றை கதைகளில்மூலம் நமக்குக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் க.சீ.சிவகுமார்.
அடுத்து இவரின் நாவலைப் பற்றிய என் வாசிப்பனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

விளம்பர நீளத்தில் ஒரு மரணம் – சித்துராஜ் பொன்ராஜ்

பல ஆண்டுகளாக சித்துராஜ் பொன்ராஜ் தொடர்ச்சியாக உருவாக்கி முன்னெடுத்துவரும் தனித்தன்மை கொண்ட எழுத்து முறையின் சமீபத்திய சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக, விளம்பர நீளத்தில் ஒரு மரணம் என்ற நாவலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நாவலின் தலைப்புக்குக்கீழ், முப்பது அத்தியாயங்களில் ஒரு நீதிக் கதை என்ற ஒரு சிறு குறிப்பும் அடிக்கோடிடப்பபட்டுள்ளது.

தஸ்தயேவ்ஸ்கி எப்போதும் புறவயமான யதார்த்தங்களில் தன் படைப்பை ஊன்றுவதில்லை. அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டக்கூடியதாகவே இருக்கிறது. அல்பேர் காம்யூ, மரணம் அதுவரை இல்லாத ஒரு அர்த்தத்தை வாழ்க்கைக்குக் கொடுக்கிறது என்கிறார் (புதிய காலம், ஜெயமோகன்). தமிழில் பல நாவல்கள் இத்தகையைப் பார்வைகளின் நீட்சியாக அவ்வப்போது புனையப்பட்டு நம் வாசிப்புக்கு வருகின்றன. குறிப்பாக, சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் மரணமடைந்த ஒரு மனிதனுக்குள் ஊர்ந்து சென்று, அவனுக்குள் மூழ்கி, அவனைப்பற்றிய ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்வதுபோல் இறப்பிற்குப் பின்னர் பேராசிரியர் மிட்சுயீ வாட்டாதாவைப் பற்றியும் அவன் சார்ந்த மனிதர்கள் சூழல் பற்றியும் பல்வேறு கோணங்களிலும் பாத்திரப் படைப்புகளிலும் மெல்ல மெல்ல நகர்ந்து தனிமனித ஆழ்மனம் நிகழ்த்தும் மனோவியல் குரூரங்களையும் தனிமனித அகப் பிரச்சினைகளையும் தன்னகத்தே கொண்டு முக்கியமாக வாட்டதாவின் மரணத்தைப் பற்றிய சிக்கலுடனும் அதற்கான காரணத்தைக் கண்டடையும் பல்நோக்குப் போக்கிலான நடைச்சித்திரமாக இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.

இந்நாவலின் கதை கட்டுமானம் பிரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜாக் டெரிடாவின் பின்கட்டமைப்பு வாதத்தைப் பற்றிய வரிகளிலிருந்து ஒவ்வோர் அத்தியாயத்தின் முன்னும் எடுத்தாளப்பட்டுள்ள சொல்முறை தமிழ் நாவலுக்குப் புதிது. நவீன வாழ்வியல் சிக்கல்களை இத்தனை நவீனமாக முன்னுரைத்திருப்பதும் பாத்திரப் படைப்பில் புதியதோர் அணுகுமுறையைப் பின்பற்றி கதையை இல்லை இல்லை தனிமனித ஆழ்மன உணர்வு பேதங்களை நாடு, இனம், மொழி, சமயம், மரபு, பண்பாடு என இத்தனையையும் கடந்து, இவ்வளவு நுட்பமாகத் துல்லியமாகச் சொல்லிச் செல்வது தமிழ் நாவல் நடைக்குப் புதியது. சிங்கப்பூர்ப் படைப்பாளரின் படைப்பு இது என்பதுதான் இங்கு நமக்குக் கூடுதல் மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியவாதிகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் நாவல் இதுவென்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் தாங்களாகவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் தங்களைப் பற்றி நம்முடன் உறவாடுவது போன்ற பாத்திர வடிவ அமைப்பு இந்நாவலுக்குத் தனிச்சிறப்பைக் கொடுத்துள்ளது. இது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாம் கடந்துசெல்ல வாய்ப்பளிக்கிறது. ஒவ்வொரு மனமும் சுதந்திரமாகத் தன் கருத்தப் பதிவு செய்வதற்கும் வாய்ப்பளித்திருக்கிறது.

டெரிடா கதாபாத்திரத்தின் உரையாடலுடன் தொடங்கும் இந்நாவல் சுசிலா, வாட்டாதாவின் மரணம், வாசுதேவன், மார்க்கரெட், யூரிகோ போன்ற கதாபாத்திரங்களுடன் தொடர்கிறது. அடுத்துவரும் அத்தியாயங்கள் வாட்டாதா-டெரிடா சந்திப்பு, மொழியியல் கட்டமைப்பு வாதம், திருமண கட்டமைப்பு என பலவற்றைப் பற்றிய பார்வையை முன்வைத்து நகருகின்றனது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கிய கதாபாத்திர வாக்குமூலங்களோடு சிறுச் சிறு கதாபாத்திர அறிமுகங்களும் கதையை நகர்த்திச் செல்ல முக்கியப் பங்காற்றியுள்ளன. வட்டாதாவின் மரணத்திற்கான காவல் நிலைய அதிகாரிகளின் துல்லியமான ஆய்வுகளும் விசாரணைகளும் அந்த மரணம் ஒரு கொலையா? ஒரு விபத்தா? என்ற இருகோணங்களிலும் மாறி மாறி சிந்திப்பதும் விவாதிப்பதும் அதற்கான காரண காரியங்களை அலசி ஆராய்வதிலும் கதை விறுவிறுப்பாக நகர்வது வாசிப்புக்கான ஆர்வத்தைத் தக்க வைப்பதிலும் இந்நாவல் வெற்றிபெற்றுள்ளது என்பதையும் இங்குக் கூறத்தான் வேண்டும்.

ஓர் அத்தியாயத்தில் இராமாயணத்தில் அகலிகை கதாபாத்தித்தின்மீது ஒரு கட்டவிழ்ப்பை நிகழ்த்தியுள்ளார் சித்துராஜ் பொன்ராஜ். இராமனை நியாயவான் என நிறுவதற்காகவே அகலிகை கதாபாத்திரக் கட்டமைப்பும் ஆணாதிக்கம் மேலிட்ட படைப்புவாதமுமே இராமாயணம் என்ற ஒரு கருத்துச்செறிவும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. கௌதமன் அகலிகைக்கும் இந்திரனுக்கும் கொடுக்கும் சாபங்களே இதற்கு உதாரணங்களாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆணான இந்திரனுக்கு அவன் விரும்பிய யோனியை எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் வகையில் அவன் உடம்பிலேயே ஆயிரம் யோனிகள். ஆனால், பெண்ணான அகலிகைக்கு இனி எந்தக் காலத்திலும் எப்பேர்ப்பட்ட பேரழகனின் ஸ்பரிசத்திலும் மேனி நனைய முடியாதபடி பாறை வடிவம்.
இதை இங்குக் கூறுவதற்குக் காரணம் அன்று தொட்டு இன்றுவரை ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதைச் சுட்டுவதற்கே ஆகும்.  இந்நாவலிலும் ஆண் கதாபாத்திரங்களின் ஆணாதிக்க உணர்வுகள் மேலிடுவதைப் பல சிறுச் சிறு சம்பவங்கள்மூலம் நிறுவியுள்ளார் நாவலாசிரியர். இத்தனை நூற்றாண்டுகளாகியும் ஐரோப்பியர்களால் பெண்களைப் பரிசுத்தமான கன்னிகளாவோ அல்லது தேவடியாக்களாவோதான் பார்க்கமுடிகிறது. இந்த இரண்டு வகையைத் தவிர்த்துப் பெண்களை எப்படி அணுகுவது என்பது இந்தக் காலசாரத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது என்று வட்டாதா மியூனிக் நகரில் சுசிலாவிடம் கூறும் இடம் கவனிக்கத்தக்கது. மேலும், இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமுதாய வழக்கம் இருந்திருக்கிறது என்றும் அதுமாதிரி சமயங்களில் தலைமையில் இருக்கும் பெண்களே தனக்கு ஏற்ற மாதிரி பலமுள்ள ஆணையோ ஆண்களையோ துணைகளாத் தேர்ந்தெடுத்துப் பிள்ளை பெறுவதற்கு மட்டும் ஆண்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் அல்லி ராஜ்ஜியமெல்லாம் வெறும் கற்பனையில்லை எனவும் வட்டாதாவின்மூலம் இந்நாவல் பதிவு செய்துள்ளது.

இதற்கு வலுசேர்க்கும் வகையில், திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும் என்ற நூலில், ‘மனிதன் தோன்றிய தொடக்கக் காலத்தில் இனக்குழு வாழ்க்கையில் தாயே முதலிடம் வகித்தாள். குழுவை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் அவளிடமே இருந்தது. ஏனென்றால், ஒரு குழுவிற்குள் தந்தை யாரென்று தெரியாது. தாய் மட்டுமே சந்ததியினருக்கு உறுதியாகத் தெரியும். அச் செம்மூதாய் மட்டுமே குழுவைத் தலைமை தாங்க முடியும் எனவும் பின்னாளில், குடும்பம், தனி உடைமை எனும் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின், ஆண், தாய்வழிச் சமூக அமைப்பைக் கைப்பற்றி தந்தைவழிச் சமூக அமைப்பாக மாற்றிவிட்டான் எனப் பதிவிட்டுள்ளார் அதன் நூலாசிரியர் ந. இரத்தினக்குமார் என்பதையும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.


பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூர்ச் சூழலில் சீனர்களின் வருகையும் அதற்கான காரண காரியங்களையும் வரலாற்றுப் பூர்வமான ஒரு பார்வையோடும் அவர்களின் மரபு, பண்பாடு, நம்பிக்கை என மிகவும் நுணுக்கமாக ஒவ்வொன்றையும் இவர் சொல்லிச் செல்லும் விதம் பிரமிக்கவைக்கிறது. கடுமையான ஓர் உன்னதமான உழைப்பில்லாமல் இவற்றையெல்லாம் எழுதிவிடமுடியாது. தமிழ்நாட்டிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இங்கு வந்து மேல்நிலைத் தொழில்புரிபவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்களும் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்பெண்ணின் மனவோட்டங்களின் பிம்பங்களும் அவள் சார்ந்த பின்னணியிலும் சிங்கப்பூரியர்களுக்கே உரிய தனித்த அடையாளங்களும் அக்கம் பக்க உறவுநிலை சார்ந்த சின்ன சின்ன சம்பவங்களும் மிகவும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. நாவலில் அலசப்படும் சிக்கல், அச்சிக்கலுக்கான சூழல், அச்சிக்கலுக்குள் பொதிந்துகிடக்கும் அக உணர்வுகளின் வெளிப்பாடுகள் என அனைத்தும் மிகவும் திட்டமிடப்பட்டுப் படைக்கப்பட்டுள்ளது. மனித மனத்தின் அடி ஆழம்வரை சென்று ஸ்கோப் செய்யும் கருவியைப்போல மனித மன ஆழங்களின் விளிம்புகளையும் தாண்டி உள்ளே சென்று, அவரவர் ஞாயங்களுக்கான தேடல்களுடன் நம்மை பயணிக்க வைத்துள்ளார் திரு. சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள்.

ச்சியோ கிடாஹாராவின் கவிதை வரிகளும் இந்த இலக்கியத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் கொண்டிருந்த பார்வைகளும் சிந்திக்க வைக்கின்றன. அதில் ஒன்று.

படிப்பினையோ போதனையோ செய்யத் தொடங்கும் தருணத்திலேயே கலை செத்துப்போய்விடுகிறது
படைப்பாளிகள் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டிய விஷயம் இது.

ஒரு தனிமனிதனின் வாழ்வில் அவனுக்கு ஏற்படும் சம்பவங்களும் அனுபவங்களும் எப்படியெல்லாம் உருமாறி மற்றவர்மேல் ஏற்றிவைக்கப்படுகிறது என்பது இந்நாவலில் தெள்ளத்தெளிவாகப் பேசப்பட்டுள்ளது. புறவயச் சிந்தனைப்போக்கில் அவரவர் போக்கில் கதை போவதுபோல் தெரிந்தாலும் அகவயத் தாக்கங்களே கதையில் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அகம் சார்ந்த உணர்வுகளும் அதனால் அவனுக்கு ஏறபடுகின்ற புரிதல்களுமே மனிதனுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது என்பதால் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவரவர் ஞாயங்களைச் சொல்ல முழுமையான சுதந்திரம் நாவலாசிரியரால் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நாவலின் மொழியும் அதன் நடையும் கதைக்களமும் கதாபாத்திரப் பயன்பாடும் அள்ள அள்ள குறையாமல் வந்துகொண்டிருக்கும் நீரைப்போன்ற உவமைக் களஞ்சியமும் சிங்கப்பூருக்கே உரிய அந்த நகர வாசனையும் அவ்வாசனையிலேயை மூழ்கிக்கிடக்கும் அகத் தோரணங்களும் சிங்கப்பூர் புனைவிலக்கியத்திற்குப் புதியதோர் அடையாளத்தை வழங்கியிருக்கிறது. மேலும், சிங்கப்பூரில் நாவல்கள் அதிகம் வெளிவராத இன்றையச் சூழலில் இந்நாவல் தன் தடத்தை உலகளாவிய தமிழ் இலக்கிய நிலையில் பதித்து, நாவல் இலக்கியத்திற்குப் புதியதொரு முகத்தையும் தந்துள்ளது எனலாம்.

நிறைவாக, சித்துராஜ் பொன்ராஜ் அவர்களிடம் இந்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு தரிசனம் இருக்கிறது. அத்தரிசனத்தை வாசகர்களிடத்தில் கடத்தும் ஒரு முயற்சியின் நீட்சியாக இந்நாவல் அமைந்திருக்கிறது. முறையாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட ஒரு நாவலாக இதைப் பார்க்கிறேன். அதனால், புதிதாகக் கதை, புதினம் எழுத வருபவர்கள் தங்களின் வாசிப்புத் தளத்தை திரு. சித்துராஜ் பொன்ராஜ் படைப்புகளிலிருந்து ஆரம்பித்தால் அவர்களும் எதிர்காலத்தில் சிங்கப்பூர், மலேசியத்  தமிழ் இலக்கியப் படைப்புச் சூழலில் தனிமுத்திரையைப் படைப்பார்கள் என்பது திண்ணம். இவர்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் பூத்துக்குலுங்கிக் கொண்டிருப்பவர்களும் அவசியமாக வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது.

-         தொடரும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக