வாங்க
வாசிக்கலாம் (11) –
எம். சேகர்
மக்கள் ஓசை (4-8-19)
ஜே.ஜே. சில குறிப்புகள்
என்ற நாவலுக்குப் பிறகுதான்தான் தமிழ் மொழியிலும் நவீனப் போக்குகள் உருவாகி
வளர்ந்திருக்கின்றன என்று மற்ற மொழி இலக்கியவாதிகளும் வாசகர்களும் நம்ப
முன்வந்தார்கள் என்ற ஓர் கூற்று இருக்கிறது. இன்றைய படைப்பாளிகளுக்கும் இனி
வரப்போகும் படைப்பாளிகளுக்கும் நவீன படைப்பிலக்கிய அறிமுகத்திற்கான முக்கியமான ஒரு
படைப்பாக இந்த நாவல் அமைந்திருக்கிறது. அத்தகைய ஒரு நாவலையும் பின்நவீனத்துவப்
படைப்பிற்காக உப்பு நாய்கள் என்ற ஒரு நாவலையும் இந்த வாரம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
ஜே.ஜே.
சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
22.05.1982 அன்று கோவை
வானொலியில் ஞானிக்கு அளித்த பேட்டியில் இந்நாவலைப் பற்றி சுந்தர ராமசாமி,
‘வாழ்க்கையைப்
பற்றிய என் விமர்சனம்’ என்று கூறுகிறார். மேலும்,
‘நாவலின்
அடிப்படையே உண்மையைச் சொல்லப்போனால் நீங்கள் எந்தத் தளத்தைச் சேர்ந்தாலும்
உங்களுடைய பார்வை எப்படியிருந்தாலும் நீங்கள் உண்மைவாதியாக இருப்பீர்கள் என்றால்,
ஏதோ ஒரு விதத்தில் உலகத்திற்கு Contribute செய்யவேண்டும்.
பரஸ்பரம், சந்தித்து உரையாடுவதன்மூலம்
நம்மைத் திருத்திக்கொள்ளமுடியும். ஆனால்,
நீங்கள் ஒரு பொய்யனாக இருந்தால் எந்தவித பயனும் இல்லை. இதுதான் இந்நாவலின்
அடிடப்படைச் செய்தி.
ஒரு கவிதையில்,
சிறுகதையில், நாவலில் என்ன சொல்லியிருக்கிறது
என்று அணுகுவது ஒரு மனோபாவம். தாங்கள் எதிர்பார்ப்பதை இந்தப் படைப்புச்
சொல்லியிருக்கிறதா என்ற முன் தீர்மானத்துடன் அணுகுவது இன்னொரு மனோபாவம் (சுந்தர
ராமசாமி நேர்காணல்கள்). இந்த இரண்டாவது
மனோபாவத்தோடு இந்த நாவலை அணுகுபவர்களுக்கு இது எட்டாத கனியாக இருக்கும். அல்லது,
நரிக்கதையில் வருவதுபோல், இந்தப்
பழம் புளிக்கும் என்ற கதையாகிவிடுவதும் தவிர்க்க இயலாதது.
இலக்கியப்
பார்வை
இதுதான் இலக்கியம். ஒரு
படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். இதை இப்படித்தான் எழுதவேண்டும். இதுதான்
எனது கோட்பாடு. இதுதான் எனது தர்க்கம். இந்தச் சமூகத்துக்கு இதுதான் ஏற்றது. இதைச்
இச்சமூகத்துக்கு இப்படித்தான் சொல்லவேண்டும் போன்ற முன்தீர்மானங்கள் இல்லாமல்,
இந்த எல்லாவற்றிலும் இருந்து விடுதலைப் பெற்று,
எழுதியவன் என்ன சொல்ல வருகிறான், என்ன
சொல்லியிருக்கிறான் என்று ஒரு எளிய மரியாதையை அந்தப் படைப்புக்குக் கொடுத்து,
யார் அந்தப் படைப்பை அணுகுகிறார்களோ அவர்களுக்கு அந்தப் படைப்புத் தன்னைத் திறந்து
காட்டக்கூடிய நிலையில் இருக்கும் என்பதே உண்மை.
ஜே.ஜே
சொல்லும் செய்தி
தன் சார்ந்த
சமூகத்திற்கும் தன் படைப்பிற்கும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் ஒருவனைவிட,
தன் சமூகத்துக்கும் படைப்புக்கும் பொய்மையாக இருக்கும் ஒருவனே இங்கு இலக்கிய
உலகில் மிகுந்த செல்வாக்கோடு வலம் வருகிறான். நூறாண்டு வாழ்ந்தும் விடுகிறான். முன்னதுக்கு
ஜே.ஜே. வும் பின்னதுக்கு முல்லைக்கல் போன்றவர்களும் இந்நாவலில் மேற்சொன்ன
கூற்றுக்கேற்பப் புனைவாக்கம் செய்யப்பட்டுள்ள நிஜ மனிதர்களின் புனைவுப்
பாத்திரங்கள்.
ஆல்பெர்
காம்யு
ஆல்பெர் காம்யு விபத்தில்
மாண்ட மறுநாள் ஜே.ஜே. 1960 இல், ஜனவரி
5 ஆம் தேதி இறந்தான் என்று தொடங்கும் நாவலின் முதல் வரியே நாவலுடனான வாசக உறவை
வலுப்படுத்திக்கொள்ளும் ஆர்வத்தைக் கூடுதலாக்குகிறது.
யார் இந்த ஆல்பெர் காம்யு?
இவர் 1957இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். நாவல்கள்,
சிறுகதைகள், நாடகங்கள் எழுதியிருக்கிறார்.
இவரின், ‘The Stranger’ என்ற
புகழ்ப்பெற்ற நாவல் தமிழில், ‘அந்நியன்’
(சங்கரின் அந்நியன் திரைப்படம் அல்ல) என்ற பெயரில் வெ. ஸ்ரீராம் என்பவரால்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த நூலை நான் 1989 இல் பினாங்கு அறிவியல்
பல்கலைக்கழகத்தில் (USM) இளநிலைப் பட்டப் படிப்புக்காக
மலாய் இலக்கியப் பாடத்தைப் பயின்றபோது உலக இலக்கியத்துக்கான நூல்களின் வரிசையில் பாடநூலாக
இருந்தபோது வாசித்திருக்கிறேன். (Orang Terasing) என்று
மலாய் மொழியில் Ainon Muhammad
என்பவரால் அந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. பாடத்திற்காகப் படித்தாலும்
விரும்பி வாசித்தேன் என்பதுதான் உண்மை. இதுபோன்ற வாசிப்புகளும் தேடல்களும்தான்
என்னை இந்த அளவுக்காகவது இன்று எழுத வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை
மறுப்பதற்கில்லை. சரி. இனி ஜே.ஜே, வுக்கு
வருவோம்.
தமிழில்
வெளியான முதல் நவீனத்துவ முயற்சி
நாவல் என்பது கதையை
முன்னிறுத்தி விரிவடையும் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு முரணாக இருக்கிறது இந்ந
ஜே.ஜே. சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் இந்நாவலின்மீது நமக்கு ஒரு பிரமிப்பை
ஏற்படுத்துகிறது என்கிறார் இந்நாவலுக்குப் பின்னுரை எழுதியுள்ள சுகுமாறன். மேலும்,
புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த
விவாதத்துக்கான களமாக இந்நாவல் திறந்துவிடப்பட்டிருப்பதாகக் கூறும் இவர்,
தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி என்றும் நடை காரணமாகவே கவனம் பெற்று
வாழ்வனுபவங்களைப் பரிசீலனைச் செய்யத் தூண்டிவிட்ட தமிழின் முதல் படைப்பு இந்நாவல்
என்றும் பதிவு செய்கிறார்.
ஒரு படைப்பாக்கத்தின் நடை
என்பது மொழி சார்ந்த உத்தியாக இல்லாமல்,
எழுதியவனின் கண்ணோட்டத்தையும் பரிவையும் சார்பையும் விலகலையும் உள்ளடக்கிய ஒன்றாக
அமைவது பல தளம் கொண்டு இயங்கி, வாசகனுக்குள்
ஒரு சிந்தனைப் பாதிப்பையும் உருவாக்கவல்லது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு
புதுமைப்பித்தனின் சிறுகதைகள். நாவலுக்கான உதாரணம் ஜே.ஜே. சில குறிப்புகள்.
நாவலைப்
பற்றி சுந்தர ராமசாமி
தன்னுடைய நாவலைப் பற்றி
சுந்தர ராமசாமி,’ ஜே. ஜே. சில குறிப்புகள் தமிழ்
கலாசாரம் சார்ந்து முன்வைக்கப்பட்ட விமர்சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த
விமர்சனம்’ என்று பின்னாளில்,
ஒரு கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும்.
நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தின்மீதும் பார்வையைச் செலுத்தி ஒவ்வொன்றுக்குள்ளும்
நுழையும்போது இந்த வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும் நாம் கொண்டுள்ள
வாழ்வியல் கருத்துகளுக்கும் உள்ள முரண்கள் நம்மோடு மோதிப் புரளுகின்றன. எழுந்தால்
வாழ்வைப் புரிந்துகொண்டு வெற்றிநடை போடலாம். வீழ்ந்தால் கீழிருந்து அனைத்துக்
காலடி வசைகளின் வலிகளைத் தாங்கியே ஆகவேண்டும்.
வாழ்வைப் புரிந்துகொள்ளுதல் என்பதில்தான் இங்கு ஒரு மாயச்சிக்கல் அடங்கியிருக்கிறது.
அவரவருக்கு ஏற்ப இந்த வாழ்வியல் புரிதல் என்பது பல தர்க்கங்களையும் வெவ்வேறு
மெய்யியல் உணர்வுகளையும் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. இதில் உண்மையைத் தேடித்தேடி
உண்மையைப் பேசிப்பேசி உருக்குலைந்து
தொலைந்து போனவன்தான் இந்த ஜே.ஜே. ஆனால் அவனுக்குள் இருக்கும் தேடல்கள் அவனுக்கானது
மட்டுமல்ல. நமக்கானதும்தான்.
கதாபாத்திர
படைப்புகளும் நாவலின் புரிதல்களும்
பாலு என்ற கதாபாத்திரம்,
ஜே.ஜே. என்ற கதாபாத்திரத்தின் தேடலில் புனைவாக்கத்தோடு ஜே.ஜே. என்ற மனிதனைப்
பற்றியும் அவனைச் சார்ந்த, அவனோடு
பழகிய பலரின் குறிப்புகளையும் ஆவணத்தையும் முன்நிறுத்தியுள்ள நவீனத்துவப் படைப்பு
இந்நாவல்.
இந்நாவலில் உள்ள பல
விஷயங்கள் சொல்லிப்புரிவதில்லை. வாசித்தால்தான் புரியும். அதுவும் இந்த
வாழ்வியலோடும் பிரபஞ்சத்தோடும் நமக்கான உறவும் நேசமும் வலுவான ஒன்றாக இருந்தால்
மட்டுமே இது சாத்தியப்படும். நானும் இந்நாவலை எடுத்துக்கொண்டு வாசிக்க பல தடவை (பல
ஆண்டு) முயன்றும் அதனுள் போக முடியாமல் தத்தளித்தவன்தான். ஆனால்,
இன்று என்னால் எவ்விதத் தடங்கல்களும் இல்லாமல் இந்நாவலுக்குள் விரிந்து செல்ல
முடிகிறதென்றால் உங்களாலும் முடியும்.
படைப்பாக்கத்தில்
இருக்கின்ற ஒவ்வொருவரும் படைப்பாக்கத்தில் இல்லாத ஒவ்வொருவரும் வாசித்து,
நாம்
வாழும் இந்த வாழ்க்கைத் தொடர்பாக உணர்ந்துகொள்ளவேண்டிய ஒரு நாவல் இந்த ஜே. ஜே. சில
குறிப்புகள்.
உப்பு
நாய்கள் – லட்சுமி சரவணகுமார்
சமூகத்தின் ஓர் அங்கமாய்,
அதனோடு இயைந்தும் முரண்பட்டும் மோதியும் இசைந்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில்
வாழ்கின்றவன் மனிதன். மனித குலத்தில் தானும் ஒருவனாக வாழும் அவன்,
வாழ்க்கை நடைமுறைகளின் காரணமாக அமையும் உணர்வுநிலையின் ஒரு வெளிப்பாடாக
இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான். அவனிலிருந்து தோன்றுகின்ற இலக்கியத்திலே அவன்
இருக்கின்றான். அவன் போன்ற பிறர்
இருக்கிறார்கள். அவனைப்போன்ற பிறர் அதனை எதிர்கொள்கிறார்கள். எனவே,
இலக்கியமானது அதன் தோற்றம், அதன்
பொருள், அதன் பயன்பாடு ஆகிய மூன்று
நிலைகளிலும் மனிதகுலத் தொடர்புடையதாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்
தி.சு.நடராசன்.
லட்சுமி சரவணண்
எழுதியுள்ள, ‘உப்பு நாய்கள்’
என்ற நாவலை மேற்கூறப்பட்ட கருத்துப்பார்வையோடு எனது வாசிப்பனுபவத்தை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இது.
படைப்பாளனும்
படைப்பும்
சமுதாய வரலாற்று மரபின்
ஒரு காலத்தில் தோன்றுகின்ற குறிப்பிட்ட ஒரு படைப்பு,
அப்படைப்பாளியின் அனுபவ உணர்வுகளையும் அவன் சார்ந்த வாழ்வியல் சூழலையும் பெற்று
வருகின்றபோது, அன்றைய சூழலுக்கேற்பவும்
தேவைக்கேற்பவும் படைப்பாளியின் படைப்பாற்றலுக்கு ஏற்பவே அப்படைப்பின்
வடிவமைப்பிலும் கதை உருவாக்கத்திலும் பாத்திரக் கட்டமைப்புகளிலும் சொற்பயன்பாட்டு
வழமைகளிலும் ஒரு குறிப்பிட்ட தன்மைகளையும் போக்குகளையும் பெற்றுவருவது இயல்பானதே.
இவ்வகையில், இந்த ‘உப்பு
நாய்கள்’ நாவல் நவீன வாழ்வின்
பரிமாணங்களைக் குற்றம்,
உடலரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டு பெரும் உருவாக்கத்துடன் புனையப்பட்டுள்ளது
என்று சொல்வதைவிட அந்த மனிதர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே
நிழலாடவிட்டிருக்கிறது என்று கூறுவதே சிறப்பானதாக இருக்கும். மேலும்,
இந்நாவலை வாசிக்கும்போது இது ஒரு திரைப்படம்போல நம் கண்முன்னே காட்சிப்படிமமாக
விரிந்துசெல்வதையும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. நல்லதொரு திரைக்கதை
அமைப்பைப்போன்ற நாவலின் வடிவமும் கதை சொல்லும் முறைமையும் வாசிப்பவர்களின்
கவனத்தைத் தன் பக்கம் எளிதில் ஈர்த்திடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
கதாபாத்திரங்களின்
கட்டமைப்பு
சம்பத்,
செல்வி இரு முக்கிய பாத்திரக் கட்டமைப்புகளின்மூலம் கதை பயணித்து இரண்டாம்
பகுதியில் ஆதம்மா, ஷிவானி,
செல்வி, சம்பத் என முதன்மைப்
பாத்திரப் படைப்புகளோடும் இந்த முதன்மை பாத்திரங்களின்மூலம் அறிமுகப்படுத்தப்படும்
துணை கதாபாத்திரப் படைப்புகளான தவுடு,
இவாஞ்சலின் கிளிஸ்டி, பாதிரியார்,
இராமலிங்க உடையார், சுந்தர்,
பாஸ்கர், எருமை சுந்தரவள்ளி,
போலி டாக்டர் முத்துலெட்சுமி, மணி,
சம்பத் அம்மா, நாய்க்கறி கோபால்,
சோஃபி, மகேஸ்,
ஜாஃபார், சுந்தரி,
ஆர்த்தி, சேட்,
சேட்டன், ஆதம்மாவின் அம்மா,
அப்பா, நிஜ வாழ்வின் மறுபிரதிகளாகவே இந்நாவலில்
முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
கதையாடல் உத்திக்கும் கதை விவரிப்புக்கும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.
பொட்டலங்களைக் கைமாற்றும்
நுண்ணியத் திறன்கொண்டு நிழலோடு நிழலாக மறையும் சம்பத்,
மற்றவர்களின் பொருளை (பிக்பாக்கெட்) மிகவும் நளினமாகக் களவாடும் விரல்களைக்கொண்ட
செல்வி, பாம்புகளோடு மிகவும் இயல்பாய்
விளையாடும் சிறுமி ஆதம்மா என முக்கிய கதாபாத்திரப் படைப்புகளும் அவர்களைச்
சுற்றிப் பின்னப்பட்ட கதைக்களமும் நாவலின் கதை விரிவுக்குத் துணையாக இருக்கின்றன.
கதையின்
பின்புலம்
ஆர்மீனியச் சர்ச்,
இரயில்வே ஸ்டேசன்கள், சிறைச்சாலைகள்,
கடற்கரை எனவும் அவை சார்ந்த கதைப்பகுதிகளில் வாழும் கதாபாத்திரங்களோடு நாமும் பல
வாழ்வியல் இடங்களின் பின்னணியோடு சென்னை,
கும்பகோணம், காஞ்சி,
மதுரை, திருச்செந்தூர் எனப் பல
நகர்களையும் அதன் தெருக்களையும் சுற்றிவருகிறோம். பல குற்றப் புலன்களுக்குப் பின்னணியில் நிழலாக இருக்கும் ஆர்மினியச் சர்ச்,
அதன் பாதிரியார்கள், கன்னிகாஸ்திரிகள் என
இவர்களின் செயல்பாடுகள், சமயம்
சார்ந்த மற்ற அமைப்புகளின் நிலைப்பாடுகளையும் இந்நாவல் நமக்குள் ஒரு
மறுமதிப்பீட்டுக்கு இட்டுச்செல்வதைத் தவிர்ப்பதற்கில்லை.
எல்லா
வெளிச்சங்களும் இருளின் பிம்பங்களே
யதார்த்த வாழ்வின்
உதிரிகளாக வரும் இந்நாவலின் கதாபாத்திரங்கள்,
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய பாத்திர வடிவத்தின் சிற்பங்கள்.
விளிம்புநிலை மனிதர்களோடு நம் உறவை வலுப்படுத்தும் பாத்திரப்படைப்பும் அதன் கனமும்
அதன் உண்மைத்தன்மையும் நேர்மையான,
இருப்பதை இருப்பதுபோலவே காட்டும் புனைவுத் திறனும் இந்நாவலை நமக்குள் பல
அதிர்ச்சியூட்டும் தன்மைகளையும் அவ்வப்போது
ஏற்படுத்திவிடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. நாவலாசிரியர்,
வாழ்க்கையையும் அனுபவங்களையும் மற்றும்
சுற்றியிருப்பவற்றையும் மிகவும் துல்லியமான விவரங்களுடன் இயல்பு நவிற்சியாகச்
சித்தரித்தும் அவற்றைக் கதைப்படுத்தும் செய்தியோடு இன்று இறுகிக் கிடக்கும்
வாழிடச் சூழல், சாதியமைப்பு,
வறுமை,
சுரண்டல், வாழ்வாதாரப் போராட்டங்கள்,
உடல் தேவைகளின் அபத்தம் அதன் குரூரம், சுயநல
வன்மம், திருமண உறவுகள்,
காமம், கோபதாபங்களுக்கிடையே மனித நேய
உணர்வின் நெகிழ்ச்சிகள்,
முரண்கள், மாற்றங்கள் என இழையோட
விட்டிருப்பது இச்சமூகத்தில் நாம் காணாமல் கடந்துசெல்லும் சில ஆத்மாக்களின்
உயிர்ப்புகளாக இந்நாவலில் நடமாடவிட்டுள்ளார்.
சூழியற்
பெண்ணியம்
ஓவியம்,
நாடகம், திரைவெளி ஆகிய மூன்றும்
பெண்ணின் உடலாற்றலைப் பிரபஞ்சத்தோடு இணைத்துக் காட்டுகின்றன. இதைச் சூழியற்
பெண்ணியம் என்கின்றனர் திறனாய்வாளர்கள்.
‘மயிர்கள்
சிரைக்கப்படாத என் நிர்வாணம்,
அழிக்கப்படாத காடுகளைப்போல் கம்பீரம் வீசுகிறது.’
பெண்ணென்னும் பேரிருப்பு
இயற்கையை மையமாகக் கொண்டே இயங்கிவருவதையே சுகிர்தராணி கவிதையொன்று இப்படிச்
சுட்டுகிறது. பெண், இயற்கை இரண்டின்
அழிவுகளுமே பிரபஞ்சத்தின் அழிவுகள் எனும் குறியீட்டு அர்த்தத்தை இன்றைய பல
படைப்புகள் உணர்த்தி வருகின்றன. பெண்ணுடல்,
ஆண்களின் வேட்டைக்களமாக ஆகிவிட்டதை இந்நாவல் பல இடங்களில் நிறுவியுள்ளது இன்றைய
வாழ்வின் அபத்தமான சூழலாகும். இதற்கு முரணாக ஆதம்மாவின் அம்மாவின்மூலம்,
‘ஒரு
ஆணின் துணையின்றி வாழ்வதென்ன இவ்வளவு சிரமமா?
என்ன இம்சை என்றாலும் ஆண்களை சகித்துகொண்டுதான் வாழவேண்டுமென்றால் என்ன வாழ்க்கை
இது’, இந்தக் கூற்றின்மூலம் பெண்ணியச்
சிந்தனையையும் தூண்டும் இந்நாவல், ஆணின்
இச்சைக்கு மிகவும் எளிதில் இயைந்துபோகும் பெண் கதாபாத்திரப் படைப்புகளோடு பல
களங்களிலும் மீண்டும் மீண்டும் பதிவாவது,
பெண்களின்மேல் உள்ள சமூக மதிப்பீட்டைக் கீழிறக்கிப் பார்ப்பதாகவே இருக்கிறது. இது
அந்தச் சூழலில் இயல்பான வாழ்க்கையின் பதிவாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பழக்கம்
வழக்கமாகிப் பின் வழமையாகும்போது பின்னாளில் இங்கு எதுவும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். ஏனென்றால்,
சமூக மதிப்பு அல்லது சமூக விழுமியம் இந்தச் சமூக உறவுகளின் பிணைப்பிலே,
சமூக நடப்பின் காரணமாகத் தோன்றுகிற சமூக உணர்வின் வடிவங்களே ஆகும். காலத்திற்குக்
காலம், நாட்டுக்கு நாடு,
இனத்திற்கு இனம், மனித குழுக்களுக்குக்
குழுக்கள் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதே இந்த
வாழ்வின் நியதியாகும். எடுத்துக்காட்டாக கற்பு எனும் மதிப்பு காலந்தோறும் பல
நிலைகளிலும் வெவ்வேறு வழக்காறுகளைப் பெற்று வந்துள்ளதையும் இங்குக் கவனத்தில்
கொள்ளல் வேண்டும். தொல்காப்பியர்க் காலம்,
இளங்கோ, கம்பன்,
நீலகேசி, குண்டலகேசி,
பெரிய புராணம் என இப்படிப் பலவகையில் இக்கருத்து நிலையின் வேறுபட்ட வளர்ச்சிப்
போக்குகளைக் காணமுடியும். மேலும், இன்று
காதலைத் தொலைத்துவிட்டு, காமம்
மட்டுமே வெகு முன்னுக்குச் சென்றுகொண்டிருப்பதையும் பரவலாகக் காணமுடிகிறது.
கடக்க
முடியாத வெளிகள்
ஆணுடன் ஆண் புணர்ச்சிக்
கொள்வதும் பெண்ணுடன் பெண்ணும் புணர்ச்சிக்கொள்வதுமான வாழ்க்கையின் அபத்தங்களையும்
மிகவும் துல்லியமாகப் பதிவு செய்துள்ள இந்நாவலில் பல வழக்காறுகள் (நாம்
பேசுவதற்கும் கேட்பதற்கும் கூச்சப்படும் வார்த்தைகள்) பயன்படுத்தப்பட்டிருப்பது
அங்குள்ள வாழ்வியல் சூழலில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால்,
சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில்
இன்னமும் பொதுவழக்குப் பேச்சிலும் எழுத்திலும் ஒரு வகை கண்ணியத்தைக் கடைப்பிடித்து
வருகிறோம் என்பதால் இதுபோன்ற வழக்காறுகளைக் கடந்துசெல்வது கடினமான ஒன்றாகவும் நமது
வாழ்வியல் சூழலுக்கு ஒவ்வாததாகவும் இருக்கிறது. இத்தகைய வழக்காறுகளையும் உடல்
புணர்ச்சிக்கான விரிவான காட்சிப்படுத்துதலும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நாவல்
இங்கும் எல்லோராலும் வாசிக்கப்படும் ஒரு பிரதியாக இருந்திருக்கும்.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும்
இப்படியானதொரு வாழ்க்கைச்சூழலில் யாரும் வாழ்கிறார்களா?
நாம்தான் இதைக் கவனிக்காமல் புறந்தள்ளியிருக்கிறோமா?
இல்லை, இதுபோன்ற வாழ்க்கையின் பதிவுகளை
நோக்கி யாரும் தம் எழுத்துகளை நகர்த்தவில்லையா என்ற கேள்வி இந்நாவலை வாசிக்கும்போது
எனக்குள் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.
சித்துராஜ் பொன்ராஜ் தனது,
‘விளம்பர நீளத்தில் ஒரு மரணம்‘
நாவலில் சிங்கப்பூரில் வாழும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையின் சில நிஜமுகங்களை
அந்நாவலில் புனைவாக்கியிருப்பார். அதுபோல,
சிங்கையின் சூர்ய ரத்னா தனது, ‘பரமபதம்’
என்ற நாவலில் சிங்கப்பூரின் இரவின் ‘பப்’
வாழ்க்கையின் பிரதிகளை மையப்படுத்தித் தன் நாவலைப் படைத்திருப்பார். இவ்விரண்டு
நாவல்களையும் வாசிக்கும்போது நமக்குள் எவ்வித முகச் சுணக்கமும் ஏற்படாதவாறு
சொற்பயன்பாடுகளும் காட்சி விவரிப்புகளும் ஆபாசம்,
அருவருப்பு இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். மலேசியாவின் மகாத்மன்
கதைகளிலும் உப்பு நாய்கள் போன்ற பாத்திரப் புனைவுகளைக் காண முடிகிறது.
நிறைவாக,
ஒரு சில வழக்காறுகளையும் உடலுறவுச் சித்தரிப்புகளையும் தவிர்த்து,
நல்லதொரு வாழ்க்கையனுபவத்தைக் கொடுத்திருக்கும் லட்சுமி சரவணக்குமாரின்,
‘உப்பு நாய்கள்’,
புனிதம் என்று ஒரு சாரார் அடைத்து வைத்திருக்கும் ஒன்றின்மேல் கட்டவிழ்ப்பு
நடத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. ‘இலக்கியம்
காலத்தைக் காட்டும் கண்ணாடி’
என்கிறோம். அவ்வகையில் நிஜவாழ்வின் பிம்பங்களாக இந்நாவலைப் பார்ப்பதில்
தவறேதுமில்லை.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக