வியாழன், 3 அக்டோபர், 2019


மக்கள் ஓசையின் நேர்காணல் (2017)

ஆரம்பகால வாசிப்பு உலகம்


முதலில் என் அப்பா திரு. முனியாண்டி, அம்மா திருமதி. பாப்பாத்தி இருவருக்கும் என் முதற்கண் நன்றியை இங்குப் பதிவு செய்வதில் பெருமைகொள்கிறேன். எனக்கான வாசிப்பு அனுபவம் என்பது என் பெற்றோர் மூலமாகவே என்னை வசீகரித்துக்கொண்டது.


அவர்கள் ஞாயிற்றுக் கிழமை நாளிதழ்களில் வரும் கதை, தொடர்கதைகளை வாசிக்கும் பழக்கம்  உள்ளவர்கள். பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் வகுப்புப் பயிலுப்போதே நாளிதழ்களில் வரும் கதை, கவிதை, தொடர்கதை எனப் பலவற்றையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இதைத் தவிர்த்து, இன்னொரு முக்கியமான வாசிப்பு அனுபவத்தை எனக்குக் கொடுத்தது அன்றைய அம்புலிமாமா இதழில் வெளிவந்த  விக்கிரமாதித்தன் கதைகள். விக்கிரமாதித்தன் தன் இடுப்பில் வாளுடன், வேதாளத்தைத் தன் தோளில் சுமந்து வருவதுபோல ஓர் ஓவியம் இருக்கும். விக்கிரமாதித்தன் வேதாளத்தைச் சிறைப்பிடித்து வரும்போதெல்லாம், வேதாளம் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி இறுதியில் மன்னனிடம் ஒரு கேள்வியைக்கேட்டுத் தப்பித்துக் கொண்டேயிருக்கும் ஒரு கதைக்களம் அது. இதே கதைக்களத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டதுதான் இன்றைய விக்ரம் தேவா திரைப்படம். இந்த அம்புலிமாமாவில் இருந்துதான் மகாபாரதமும் இராமாயணமும் எனக்கு அறிமுகமாயிருந்தன. மேலும், அம்புலிமாமாவில் வருகின்ற மனித அறநெறிகளைப் போதிக்கும் குட்டிக் குட்டிக் கதைகளையும் மிகவும் விருப்பத்துடன் வாசித்து, அதுபோன்ற கதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிப் பார்த்ததும் உண்டு. குப்பைத் தொட்டிகளில் போட்டதும் உண்டு.


எழுத்தில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது ?


என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எல்லா திரைப்படங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்வார். படம் பார்த்து வந்த பிறகு, என் வகுப்பு நண்பர்களிடம் திரை திறந்ததிலிருந்து மூடும்வரை ஒவ்வொரு காட்சியாக மிகவும் துல்லியமாகச் சொல்லி வருவேன். இதுவும் பின்னாளில் என்னை ஒரு கதைசொல்லியாக மாற்றியிருக்கலாம். வாசிப்பும் பார்த்த படங்களின் கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுதலும் எனக்குள் கதைசொல்லும் திறனை வளர்த்திருக்கலாம். இவையே இலக்கியம் எது என்று அறியாமலேயே என்னை எழுதவைத்தது. எழுதி எழுதி வைத்துக்கொள்வேன். மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது கதையை மாற்றிக்கொண்டேயிருக்கத் தூண்டும்.


அன்றைய மணல்மேட்டில் மின்சார வசதிகள் இல்லை. இரவில் அனைவரும் உறங்கியபின் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக்கொண்டு வாசித்தும் இருக்கிறேன். பல கதைகளை எழுதியும் இருக்கிறேன். பத்தொன்பதாவது வயதில் நான் எழுதி, தமிழ் ஓசையில் தொடராக வந்த, ‘சிங்காரக் காலத்துப் பூக்கள் என்ற தொடர்கதை இரவில் மண்ணெண்ணெய் விளக்கொளியில் எழுதியதுதான்.


பெட்டாலிங் இடைநிலைப் பள்ளியில் படிவம் ஐந்து பயிலும்போதுதான் நண்பர் பொன்.சசிதரன் எங்கள் பள்ளிக்கு வந்தார். அப்போதே அவரின் சில கதைகள் அன்றைய தினசரிகளில் வந்திருந்தன. அவரின் வருகை எனக்குள் இருக்கும் எழுத்தின் தாகத்தை அதிகரித்தது. அன்று, என்னோடு பயின்ற தா.விஜயநாதன், ந.தர்மலிங்கம், பில்மோர் பாலசேனா போன்றோரும் இணைந்து இலக்கியமும் கலையும் சார்ந்த பல விஷயங்களைக் கலந்துரையாடுவோம். இலக்கிய வகுப்பில் அனைவரும் ஒன்றாகப் பயிலும்போது அகிலனின், சிநேகிதி நாவல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முரணாகவும்கூட முன்வைத்து உரையாடியிருக்கிறோம். ஒரு வகுப்பில், இரவிலே வந்தவள் என்ற தலைப்பில் கதை எழுதி முடித்துவிட்டு சசியிடம் வாசிக்கக் கொடுத்திருந்தேன். கதை நன்றாக இருக்கிறது என்றவர் சில மாற்றங்களையும் செய்யச் சொன்னார். பின் அவரே, பூச்சோங் எம்.சேகர் என்ற பெயரில் எழுதுங்கள் என்றார். அதுவே பின்னாளில் நிலையாக நிலைத்துவிட்டது. பல வாசிப்புகளுக்கும் பல திருத்தங்களுக்கும் உள்ளான பல கதைகளைத் தினசரிகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் எதுவும் வரவில்லை.


நான் அனுப்பிய பதினொன்றாவது சிறுகதைதான் எனது முதல் சிறுகதையாக, ‘புது வாழ்வு என்ற பெயரில் தமிழ் மலரில் வெளிவந்தது. அதை அடுத்து, ‘கந்தசாமி வேலை தேடுகிறார் என்ற கதை தமிழ் நேசனிலும் ஒரு பாதை சில பள்ளங்கள் சிறுகதை வானம்பாடியிலும் வெளிவந்து சிறுகதைத் துறையில் எனக்கான அடிதளத்தை அமைந்துக் கொடுத்தன. நானும் சசியும் விஜயநாதனும் ந.தர்மலிங்கமும் இணைந்து எழுதிய மணலில் பூத்த தாமரைகள் என்ற ஒரு குறுநாவலும் தமிழ் ஓசையில் வெளிவந்து, அன்றே தமிழ்நாட்டுக் கதைகளுக்கு இணையாகப் பேசப்பட்டது.


நால்வரின் நட்பில் ஐந்தாவது இலக்கிய உறவாக வந்து சேர்ந்தார் சுபன் சுங்கைவே என்ற பெயரில் அன்று எழுதிய எம்.கருணாகரன். இன்றுவரை எனது இலக்கிய உரையாடலில் முக்கியமான ஓர் இடத்தில் இருப்பவரும் அவரே. இன்றும்கூட நான் எழுதிய கதைகளை அவருக்கு அனுப்பி அவரின் கருத்தைக் கேட்கும் பழக்கம் இருக்கிறது. அவரும் அப்படித்தான். எங்களுக்கான இலக்கிய உரையாடல்களே எங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது எனலாம். அதுதான் உண்மையும்கூட. அவரின் நவீன கவிதைகளுக்கு மிகவும் அருகில் சென்று, மையத்தை அணுகும் வாய்ப்பும் எனக்கு மட்டுமே இருக்கிறது என்பதில் பெருமையும் இருக்கிறது.


இலக்கியத்தின் தொடர் பயணம்


தமிழ்நாட்டில் இருந்த ஒரு வானம்பாடி இயக்கத்தைப்போல் இங்கும் வானம்பாடி வார இதழ் பெரும் வரவேற்புப் பெற்றிருந்த காலம் அது. இங்குதான் நிறைய புதியவர்களுக்கு எழுத வாய்ப்புக் கொடுத்து ஆதி. குமணன், ஆதி. இராஜகுமாரன், வானம்பாடி பாலு,  போன்றவர்கள் வழிகாட்டிகளாகவும் செயல்பட்டனர். குறிப்பாக ஆதி.இராஜகுமாரன் ஒரு கதைக்கான வாக்கிய அமைப்புகளை எப்படியெல்லாம் எழுதலாம் என்றும் பகிர்ந்துகொள்வார்.  இங்குதான், அக்கினி, எம்.ஏ.இளஞ்செல்வன், இளந்தமிழன், செர்டாங் எல்.முத்து, சீ.முத்துசாமி போன்றவர்களும் அறிமுகமானார்கள். வானம்பாடி அறிமுகத்தின் மிக முக்கியமானவர்களில் ஒருவர், இன்றுவரை எனது நலன்விரும்பியாகச் செயல்பட்டுவருபவர் இன்றைய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்தரன் என்பது குறிப்பிடத்தக்கது.



அகிலன், மு.வரதராசன், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் நாட்டம் கொண்டு அதிகம் வாசித்து வந்தேன். அதன் பிறகு, ஜெயகாந்தன், புஷ்பா தங்கதுரை, சுஜாதா, பாலமுருகன் எனப் பயணித்தவன் பின்னாளில் புதுமைப்பித்தன், மௌலி, கு.ப.ரா, கல்கி, ஆதவன், வண்ணநிலவன், நகுலன், அசோகமித்திரன், சுந்தர இராமசாமி, வண்ணதாசன், எஸ்.ரா, ஜெயமோகன், சா.கந்தசாமி, சு,வெங்கடேசன், பெருமாள் முருகன் என இன்றும் நீளுகிறது பட்டியல். இந்த ஆண்டு இதுவரை, மலேசிய சிங்கப்பூர் நூல்கள் உட்பட இருபத்து நான்கு நூல்களை வாசித்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மனத்துக்கு நிறைவாக இருக்கிறது.


இதை இங்குப் பதிவு செய்வதற்குக் காரணம் வாசிப்புத்தான் எனது முக்கியத் தளம். அதுவே எனக்கான இலக்கியத தடத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய சூழலும் சில சமயங்களில் அமைந்துவிடுகிறது. எனக்கான ஓர் இலக்கியவெளி இருப்பதாக உணர்கிறேன். அதை நோக்கிய என் பயணம் தொடர்கிறது.


படைப்பாளியாக வலம் வந்த தங்களின் விமர்சன பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?


சிறுகதை, கவிதை, வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம் என தொடர்ந்து படைப்பாக்கக் களத்தில் செயல்பட்டு வந்த நான், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டத்திற்காகப் பயின்றபோதுதான் இந்தத் திறானாய்வுத் துறை எனக்கு அறிமுகமானது. கற்றலுக்காகச் சில ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம். அதில் விருப்பத்தோடு ஈடுபட்டபோது எனக்கான இலக்கிய வட்டத்தில் இன்னுமொரு தடம் தெரிந்தது. அந்தத் தடத்தில் பயணித்தபோதுதான் இலக்கியத்தின் இன்னொரு வாசல் எனக்காகத் திறந்திருக்கிறது தெரிந்தது. அப்படி உருவானதுதான், ‘எழுத்தும் எண்ணமும்என்ற எனது ஏழாவது நூல். இதுவரை எனது படைப்பாக்கங்களாக மூன்று சிறுகதை நூல்களும் இரண்டு கவிதை நூல்களும் இரண்டு கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. எனது அடுத்த கவிதைத் தொகுப்பான, ‘இராவணனின் சீதை இப்போது அச்சில் இருக்கிறது.


நவீனம் மற்றும் தீவிர இலக்கியத்தைப் பற்றிய உங்களின் பார்வை?


இன்றைய இலக்கியச் சூழலில் நவீன இலக்கியம் பற்றியும் தீவிர இலக்கியம் பற்றியும் அதிகமாகப் பேசப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து இங்கு வருபவர்களும் இங்குள்ள படைப்புகளை முழுமையாக வாசிக்காமல் யாரோ சிலர் சொல்வதைக் காதில் போட்டுக்கொண்டு தேடல்கள் அற்று, இங்கு நவீன படைப்புகள் இல்லை என முன்மொழிகின்றனர். எம்.ஏ.இளஞ்செல்வன், ஆதி.இராஜகுமாரன், சீ.முத்துசாமி, இளந்தமிழன் எனப் பலரும் நவீன படைப்புகளைக் கொடுத்துள்ளனர். எண்பதுகளில் எழுத வந்த பொன்.சசிதரன், தா. விஜயநாதன், எம்.கருணாகாரன், நான் உட்பட நவீனக்கூறுகளுடன் கதைகளை எழுதியுள்ளோம் என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கதாகும். நவீனம் என்றால் என்ன என்ற புரிதல் இங்கு அவசியம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சிலர் எழுதும் படைப்புகளை நவீனம் நவீனம் எனக் கொண்டாடுகின்றனர். அக்கதைகளை வாசிக்கின்றபோது எண்பதுகளிலேயே அத்தகைய முயற்சிகள் இங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்குத் தெரிய வருகிறது. தொழிற்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களினால் எழுத்தில் மாற்றங்கள் தோன்றின. அன்றே நவீனம் பிறந்துவிட்டது. வால் மில்டனின் கவிதைகள் மூலம் பாரதியும் தனக்காக எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்து வசன கவிதைகளை இயற்றியதும் நாம் அறிந்ததே.


நவீன படைப்பு அல்லது தீவிர இலக்கியம் என்றாலே விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியும் கீழ்த்தட்டு மக்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்ற ஒரு தப்பான பார்வை பலரிடம் இருக்கிறது. சிக்கல்கள் விளிம்புநிலை மனிதர்களுக்கு மட்டுமல்ல. நடுத்தர வர்க்கத்திற்கும் இருக்கிறது. பெரும் பணக்காரனுக்கும் இருக்கிறது. அந்தந்த உணர்வுகளை மேலெடுத்து மையத்தில் வைத்து அலசிப் பார்க்கும் தன்மை கொண்ட படைப்புகளே நவீனமாகும் தீவிர இலக்கியமாகும். சிலர், தீவிர இலக்கியமும் நவீன இலக்கியமும் தங்களுக்கே சொந்தம் என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர்.


நம்நாட்டு இலக்கியத்தில் நவீனத்திற்கான அல்லது தீவிர இலக்கியத்திற்கான பார்வைகள் எப்படி இருக்கின்றன?


நமது இலக்கியத்தில் இருக்கின்ற இதற்கான இடைவெளி என்பது, நம்முடைய படைப்புகள் முழுமையான ஆய்வுகளுக்கு முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான். 1957 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து நம்முடைய படைப்புகள் முழுமையான ஓர் இலக்கிய ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். மேம்போக்கான ஆய்வுகள், முனைவர் பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலக்கியத்தில் ஒரு தேடல் இல்லாதவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படும்போது ஆய்வு என்ற பெயரில் மாநாடுகளிலும் கலந்துரையாடல்களிலும் எதை எதையோ எழுதியும் பேசியும் வருகின்றனர். இதுவே ஆய்வுத்துறையிலும் நமது இலக்கியத்தை முன்னெடுப்பதிலும் நமக்கிருக்கிற ஒரு சவாலாகும். பொதுவாக இங்குப் படைக்கப்படும் அனைத்துக் கதைகளிலுமே நவீனத்தின் ஏதாவது ஓர் கூறு இருக்கத்தான் செய்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. முறையான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படும்போது உலகிற்கு இது தெரியவரும்.


1957 லிருந்து 1970 வரையிலான கதைகள், 1970 லிருந்து 1980 வரையிலான கதைகள், 1980 களிலிருந்து 1990 வரையிலான கதைகள், 1990 லிருந்து 2000 வரையிலான கதைகள், 2000 லிருந்து 2010 அல்லது 2016 வரையிலான கதைகள் எனத் தேர்ந்தெடுத்து ஆய்வுகளை முன்னெடுத்தால் நமது கதை இலக்கியத்தையும் உலகத் தமிழ் இலக்கியத்திற்கு ஈடாகக் கொண்டு செல்லமுடியும் என்று நான் நம்புகிறேன். இதை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கோ முதுநிலை பட்டத்திற்கோ பயில விரும்புபவர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் முன்வைக்கலாம். இதுபோன்ற ஆய்வுகளே இப்போது நமக்குத் தேவை. எதிர்கால நம் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் இலக்கியச் செல்வமாகவும் இருக்கும்.


இளையர்களை எப்படி இலக்கியம் பக்கம் ஈர்க்கலாம்?


அதற்கு நல்லதொரு திட்டமிடுதல் தேவை. உதாரணமாக முன்பு புதுக்கவிதைப் பட்டறைகளை நடத்தியது போன்று இளையர்களுக்காகச் சிறுகதைப் பயிலரங்குகளையும் பட்டறைகளையும் நடத்தலாம். மாநில வாரியாகவோ அல்லது மாவட்ட வாரியாகவோ இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கலாம். மாநில அளவில் சிறுகதைப் பயிலரங்கை எற்பாடு செய்யலாம். அதன்பின், அந்தந்த மாநிலத்தில் இருக்கின்றன படைப்பாளிகள் மூலம் மாதம் ஒரு முறை கலந்துரையாடல் நடத்தலாம். நான் சிங்கையில் இருப்பதால், ஜொகூர் மாநிலத்தின் குழுவோடு மாதம் ஒரு முறை சந்திப்புகளை ஏற்பாடு செய்யலாம். அதுபோல நம்முடன் இணைந்து செயலாற்றக்கூடியவர்களை அந்தந்த மாநிலம் வாரியாகவும் செயலில் ஈடுபடவைக்கலாம். இது ஓர் ஆக்ககரமான ஒரு முன்னெடுப்பாக இருக்கும். மாநில வாரியாகக் கதைகளை எழுத வைத்து தேசிய அளவில் இளையர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து அங்கீகரிக்கலாம். இப்படியாகத்தான் நாம் அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கவேண்டியுள்ளது. ஆனால் யார் இவற்றை முன்னெடுப்பது?


விமர்சனம் பற்றிய உங்கள் பார்வை?


இலக்கியத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்பது  ஓர் அறிவார்ந்த அறிதல் முறை. வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் முறை. படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளச் செய்து, இலக்கியத்தின் சிக்கல் தன்மைக்கும் வாழ்க்கையின் சிக்கல் தன்மைக்கும் அடிப்படைக் காரணிகளையும் அதற்கான தொடர்புகளையும் அலசி ஆராய்வதாகவும் அமையும். மேலும், திறனாய்வு இலக்கியத்தின் சமூக அடித்தளத்தையும் அதன் சமூக வேர்களையும் புரிந்துகொள்ளவும் இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காண நமக்கு உதவுகிறது எனக் குறிப்பிடுகிறார் எம்.ஏ.நுஃமான்.
வாசிப்பவனுக்கு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும் இணைத்துப் பல்வேறு நிலைகளில் பயணிக்கும் இயல்பைத் தூண்டக்கூடியதாக ஒரு படைப்பு இருக்கவேண்டும். அந்த வகையில் நாம் வாசித்த ஒரு படைப்பு நமக்கு அந்த வாழும் அனுபவத்தைக் கொடுத்துள்ளதா எனவும் அந்த வாழும் அனுபவம் எத்தகைய விரிதல்களை நமக்குள்ளே நிகழ்த்துகின்றன போன்றவற்றை உள்வாங்கிக்கொண்டு அந்தப் பனுவலின்மீது நம் பார்வையை நம் சுயம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் விருப்பு வெறுப்பில்லாமல் முன் வைக்கவேண்டும். 


விமர்சனத்தின் நோக்கம்?


கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் விமர்சனம் என்ற சொல்லுக்கு ஒருவரின் அல்லது ஒன்றின் நல்ல அம்சங்களையும் குறைகளையும் ஆராய்ந்து வழங்கும் ஒரு மதிப்பீடு என்று கூறப்பட்டுள்ளது.
விமர்சனம் என்பது இலக்கியத்தைத் தளமாகக் கொண்ட ஓர் அறிவுத் தேடல் என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒரு படைப்பில் அறியப்படாத அல்லது புரிந்துகொள்ள வேண்டிய இடங்கள் இருக்கின்றன. அந்த வெற்றிடங்களை விமர்சனம் நிறைவு செய்கிறது. வாசக இடைவெளிகளை அடையாளம் கண்டு அவற்றோடு மையத்தைத் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடியது.
படைப்பாளனுக்கு உற்சாகம் தருவதும் சில வேளைகளில் போதனை தருவதும் பல வேளைகளில் அது ஒரு தோழனாகவும் இயங்குகிறது.
வாசகனுக்கு அது ஒரு நல்ல துணையாகவும் விசாலமான ஓர் உலகத்தை அவனின் புரிதலையும் தாண்டி வேறுபடுத்திக் காட்டுவதாகவும் அமைகிறது.


யாரெல்லாம் விமர்சனம் செய்யலாம்?


ஒரு தாய் தன் குழந்தைக்குத் தலைவாரி விட்டுப் பின் அக்குழந்தையிடம் கண்ணாடியில் போய் நல்லாயிருக்கா என்று பார்த்துவிட்டு வா என்று சொல்கிறாள். உடனே அக்குழந்தையும் கண்ணாடியில் பார்த்துவிட்டு, நல்லாயிருக்கு அல்லது நல்லாயில்லை என்றுச் சொல்லும்போதே விமர்சனக்கலை தொடங்கிவிடுகிறது. அதுபோல, வாசிப்பவர் தன் கருத்தை முன்வைக்குமபோதே விமர்சனம் தொடங்கிவிடுகிறது. அதனால் இவர்தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இங்கு இல்லை.


திறனாய்வு என்ற சொல் பெரும்பாலும் கல்வியாளர்  மத்தியிலும் விமர்சனம்  என்ற சொல் கல்வியாளர் அல்லாத பிறரிடத்திலும் அதிகமாக வழக்கில் இருக்கிறது.


1944 இல், ரசனை முறைத் திறனாய்வாளரும் அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமாகிய ஆ.முத்துசிவன் என்பவர் தமிழில் விமரிசனம் என்ற சொல்லைப் பயன்படுத்தியாகவும்
1948 இல், தமிழில் முதன்முதலாக இலக்கிய விமரிசனம் என்ற நூலை தொ.மு.சி. ரகுநாதன் எழுதியதாகவும்
1951 இல், க.நா.சுப்பிரமணியம், ‘விமரிசனக் கலை என்ற நூலை எழுதியுள்ளார் என்றும் கூறும் குறிப்புகள்,
1953 இல், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் திறனாய்வு என்ற சொல்லைத் திறனை ஆய்தல் என்ற பொருளில் முதன்முறையாகப் பயன்படுத்தினார் என்றும் பதிவு செய்துள்ளன.


விமர்சனப் பார்வை எப்படி இருக்க வேண்டும்?


ஆரோக்கியமானதாக படைத்தவன் மனத்தைக் காயப்படுத்தாததாக இருக்கவேண்டும். குறைநிறைகளை நியாயமாக முன்வைக்க வேண்டும். சில கோட்பாடுகளுக்குள்ளும் இசங்களுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்திக்கொண்டு படைப்பின் உள் நூழைவதைத் தவிரக்க வேண்டும். திறந்த மனத்தோடு ஒவ்வொரு படைப்பையும் அணுகவேண்டும். எந்தவித அனுமானங்களும் இல்லாமல் வாசிப்பதற்கு முன்பே படைப்பாளனின் முந்தைய படைப்பின் தாக்கங்களோடு அடுத்த படைப்புகளை அணுகவேண்டிய அவசியம் இல்லை. அப்படி அணுகினால் இங்கு எல்லாமே தப்பாகவே தெரியும். இன்னுமொரு விஷயத்தையும் விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. அது அ.முத்துலிங்கம் கூறியது.

ஓர் எழுத்தாளனின் படைப்பை அவன் எழுதியதை வைத்து மதிப்பிடவேண்டும். எழுதாத எழுத்தை அல்ல.


இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் அவசியமா?


கண்டிப்பாக விமர்சனம் வேண்டும். ஆனால் அது மிகவும் கண்டிப்பானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நியாயமானதாக இருந்தாலே போதுமானது. நியாயமான விமர்சனங்களே நல்ல படைப்பிலக்கியதை நோக்கி நம்மை நகர வைக்கும்.


அதன் நோக்கம் நிறைவேறியதா?


நோக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குழுக்களுக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் வேறுபட்டே இருக்கும். அவரவர் நோக்கில் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதை வைத்தே அதனதன் நோக்கம் நிறைவேறியதா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
அடிப்படையில் திறனாய்வு அல்லது விமர்சனம், இலக்கியம் எதனை மையமிட்டிருக்கிறது என்பதை ஆராய்கிறது. வினாக்களை முன் வைக்கிறது. வினாக்களை எதிர்கொள்கிறது. அவற்றிற்கான பதில்களையும் தருகிறது. அது இலக்கியத்தை விளக்குகிறது. மதிப்பீடு செய்கிறது. வாசிப்புகளுக்குப் பல புதிய பரிமாணங்களைத் தருகிறது.
இது ஒரு தொடர்நிகழ்வாகும்.


எழுத்தாளர்கள் விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும்?


திறந்த மனத்தோடு விமர்சனத்தை அணுகவேண்டும். அப்போதுதான் அவர்களால் தம் எண்ணத்தையும் எழுத்தையும் முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும். வேறுபட்ட மனநிலையில் இருந்து சிந்தித்துப் பார்க்க இயலும். முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு வி‌ஷயம், விமர்சனம் என்பது ஒரு தனிமனிதனின் கருத்து மட்டுமே.



எதிர்மறை விமர்சனத்தை நிராகரிப்பது சரியா?


எதிர்மறை விமர்சனத்தில் இருக்கின்ற நியாயங்களை ஆராய்ந்து அறிந்து தேவையிருப்பின் அதற்கேற்றாற்போல் நம்மை மேம்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனாலும், எதிர்மறை விமர்சனத்தை வைப்பவர் யார் என்று அடையாளம் காணுவதும் அவசியம். சிங்கையின் பல்லின கோட்பாடுகளும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அரசுக் கொள்கையையும் குறிப்பாகச் சிங்கைத் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளையும் அவர்களின் வாழ்வியல் சூழலையும் அறிந்தவர்களாக இருப்பின் விமர்சனம் நியாயமாக இருக்க வாய்ப்புண்டு. வேறொரு மனநிலையில் எங்கோ இருந்துகொண்டு தன் தனிப்பட்ட சுய விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தும் விமர்சனத்தால் சிங்கப்பூர் மலேசியப் படைப்பிலக்கியத்திற்கு எவ்வகையிலும் பங்களிக்க இயலாது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.


விமர்சனப் போக்குத் தன் இலக்கை அடைந்ததா?


இது ஒரு தொடரும் போக்கு. இலக்கியமும் அதற்கான கண்ணோட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றம் காணக்கூடிய ஒன்று. இலக்கியத்தின் நோக்கம் ஒவ்வொரு காலமும் வேறுபட்டு நிற்பதால் அதற்கான விமர்சனப் போக்கின் இலக்குகளும் காலந்தோறும் வேறுபட்டே இருக்கும் என்பதை இங்கு மனங்கொள்ளல் அவசியம்.


முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக