வியாழன், 3 அக்டோபர், 2019















வாங்க வாசிக்கலாம் (12) – எம். சேகர்  
மக்கள் ஓசை (11-8-19)


மனிதனை முன் வைக்காமல் இலட்சியங்களையும் கொள்கைகளையும் முன் வைத்து நாம் காரியங்களை ஆற்றியிருந்தால் ஒரு தலைவனைத் தேட வேண்டிய அவலநிலை இன்று நமக்கு ஏற்பட்டிருக்காது.”


என சமூகத்தின் எழுச்சிக் குரலாகத் தம் புனைவிலக்கியப் படைப்புகளில் குரல் கொடுத்தவர் சிங்கையின் நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி. அந்தப் படைப்பாளியின் ஓர் இலக்கியப் போராளியின் மனம் கவர்ந்த தோழர் நமது ஆதி.இராஜகுமாரன் அவர்கள்.


1970 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வானம்பாடியில் எனது மூன்றாவது சிறுகதையான, ‘ஒரு பாதை சில பள்ளங்கள் டிசம்பர், 1980 இல் பிரசுரமாயிருந்தது. அதன்பிறகு என் பள்ளி இலக்கிய நண்பர்கள் பொன்.சசிதரன், ந. தர்மலிங்கம், த. விஜயநாதன் (ஓவியன்) போன்றோருடன் அடிக்கடி பெட்டாலிங்கில் இருந்த வானம்பாடி அலுவலகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்து. அங்கே ஆதி. குமணன், ஆதி. இராஜகுமாரன், அக்கினி, ‘வானம்பாடி பாலு, பெ. இராஜேந்திரன், ஓவியர் ஜோலி போன்றோருடன் எங்களின் நட்பு மலர ஆரம்பித்திருந்தது. எழுத்துலகில் ஆரம்ப நிலை படைப்பாளர்களாக இருந்த எங்களுக்குச் சிறுகதைகளைப் பற்றிய சில நுணுக்கங்களை அவ்வப்போது கூறி எங்கள் கதைகளைப் பற்றியும் விமர்சித்தும் ஆர்வமூட்டியும் வந்தவர்களில் மிக முக்கியமான ஆளுமையாக இருந்தவர் திரு. ஆதி. இராஜகுமாரன்.


ஓர் இதழியலாளராகவும் ஓர் எழுத்தாளராகவும் ஒரு கவிஞராகவும் ஓர்  அன்பான மனிதராகவும் அவரின் வெவ்வோறு அவதானிப்புகள் நாம் அனைவரும் அறிந்ததே. என் சார்ந்த, என் நட்பு வட்டம் சார்ந்த இராஜகுமாரனையும் அவரின் சிறுகதைகளைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவதே இன்றைய பதிவின் நோக்கமாகும்.


அன்று வானொலியின் இரவு நேரப் பழம்பாடல் ஒலிபரப்புகளின்போது ஒரு சின்ன மண்ணெண்ணெய் விளக்கில் கதை எழுதிக் கொண்டிருந்தவன்தான்  நான். நள்ளிரவிற்குப் பிறகும்கூட வீட்டின் வாசலுக்கு வெளியே நின்று அன்று பூத்திருந்த ரோஜாக்களோடு பனியிலும் மழைச்சாரலிலும் உறவாடிக் கொண்டிருந்தவன்தான் இந்த சேகர். இன்று இந்தக் கட்டுரையை எழுதும்போதுகூட வானொலியில் ஒரு பழைய பாடல், ‘மலரோடு விளையாடும் தென்றலே வாராய் என ஒலித்துக்கொண்டிருக்கிறது. இடம் மாறியிருக்கிறது. மண்ணெண்ணை விளக்குக்கு மாற்றாக மின்சார விளக்கும் குளிரூட்டியும் பேனா தாள்களுக்குப் பதிலாக மடிக்கணினியும் என வசதிகள் பெருகியிருக்கின்றன.  ஆனால், மனம் மட்டும் இலக்கியத்திலேயே மூழ்கியிருக்கிறது அன்றுபோல் இன்றும் என்றால், அதற்கு திரு. இராஜகுமாரன் அவர்களும் நால்வராக இருந்த எனது இலக்கிய நண்பர்களும் அந்தக் குழுவில் ஐந்தாவதாக வந்து இணைந்திட்ட நண்பர் எம். கருணாகரனும் என்றும் எனக்கு ஆதரவாக நட்பாக என்னை பல இலக்கிய நிகழ்ச்சிகளில் முன்னெடுத்துச் செல்லும் சகோதர நண்பர் பெ. இராஜேந்தரன் அவர்களும்தான் முக்கியக் காரணிகளாக இருப்பார்கள்.


19 வயதில் நான் எழுதிய, ‘சிங்காரக் காலத்துப் பூக்களேஎன்ற தொடர்கதையை அன்றே தமிழ் ஓசையில் பிரசுரித்து என் இலக்கிய வீதியில் வெளிச்சத்தையும் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எனக்கொரு முகவரியையும் கொடுத்தவர் திரு. இராஜகுமாரன். அதன்பிறகு தமிழ் ஓசையில் மணலில் பூத்த தாமரைகள் என்ற குறுநாவலை எங்கள் நால்வரையும் (சசி, தர்மா, நாதன்) எழுதச்சொல்லி ஆர்வமூட்டி பிரசுரித்தவர். அன்றைய காலக்கட்டத்தில் தமிழகக் கதைகளுக்கு இணையாகப் பாராட்டப்பட்ட ஒரு படைப்பு இந்த மணலில் பூத்த தாமரைகள்’. எனது, ‘எனக்கு மட்டும் சொந்தம் என்ற ஆவிகள் தொடர்பான தொடர்கதையை மலேசிய நண்பனிலும் நெஞ்சைத் தொட்டு சொல்லு,’ என்ற எனது நாவலை முழுமையாக வெளிச்சம் என்ற மாத இதழிலும் வெளியிட்டவர்.


நான் எழுத்துலகிலிருந்து வனவாசம் மேற்கொண்டிருந்த ஒரு சமயத்தில் நயனத்திற்கு மாதந்தோறும் ஒரு கதை கண்டிப்பாக எழுதவேண்டும் என அன்புக் கட்டளையிட்டு, அந்தத் தொடரில் வந்த எனது ஒரு சிறுகதையான, ‘மனசுக்குள் காதல் சிறுகதைக்குக் கணையாழி விருது (2000) கொடுத்து அழகுப் பார்த்தவர்.


ஒரு சிறுகதைப் படைப்பாளியாக அவரின் கதைகள் அன்றே மற்ற படைப்பாளர்களிடமிருந்து வேறுபட்டிருக்கும். கதைக்கு அவர் வைக்கும் தலைப்பாகட்டும், மொழிப் பயன்பாடாகட்டும், கதைச் சொல்லும் விதமாகட்டும், எவ்வித ஆரப்பாட்டமுமின்றி வாசகனுக்கு இடைவெளி அதிகம் கொடுக்கும் நடையாகட்டும், அன்றே நவீனக் கதைகளைப் பரிட்ச்சார்த்த முறையில் எழுதி  மலேசியச் சிறுகதை இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தில் இராஜகுமாரனாய் வீற்றிருப்பவர்.


பெரும்பாலும் மௌனத்துடன் கூடிய மெல்லிய புன்னகைதான் அவரின் மொழியாக இருந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தலைநகரில் மலேசியப்  பெண் எழுத்தாளர்களின் தொகுப்பு நூலுக்கு அறிமுக உரை ஆற்ற வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜாலான் ஈப்போவில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். 

ஏறக்குறைய விடியற் காலை மூன்று மணிவரை பேசிக்கொண்டிருந்தோம் என்பதைவிட அவர் பேசிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம் என்பதுதான் உண்மை. என்னுடன் நண்பர்கள் பொன். சசிதரன், தா.விஜயநாதன், எம். கருணாகரன் மற்றும் ப. ராமுவும் உடன் இருந்தனர். அந்த அதிகாலை வேளையில் என்னுடன் சேர்ந்து அவரும் கொக்கோ கோலா குடித்தது இன்றும் நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது. பின் அவரே சொன்னார்,


நா ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட இவ்வளவு நேரம் பேசுனேனு தெரியல. ஆனால், எங்களுக்குத் தெரியாமல் போனது அதுதான் அவருடனான எங்களின் இறுதி உரையாடல் என்பது. இதை எழுதும்போது மனம் கனத்து வலிக்கிறது. கண்கள் கலங்கித் துடிக்கின்றன.


அந்த இலக்கிய ஞானரதம் இன்று நம்மிடையே இல்லை. அந்த ஞான ரதத்தின் ஞாபகப் படிமங்களில் நமக்கு வேண்டிய இலக்கிய ஞானங்களையும் மனித ஞானங்களையும் தேடி எடுத்துக் கொள்ளவேண்டியது நமது கடமையாகும். அந்த ஞானரதம் வாழ்ந்த காலத்தில் நானும் ஒரு படைப்பாளியாக இருந்தது அதுவும் அவருக்குப் பிடித்தமான ஒரு படைப்பாளியாக இருந்தது எனக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். இன்று வாங்க வாசிக்கலாம் தொடரில் அவரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதை என் எழுத்துலக வாழ்வின் தவமாகக் கருதுகிறேன்.


முகவரி தேடும் மலர்கள் (1984) – ஆதி. இராஜகுமாரன்
(ஆதி.  இராஜகுமாரன் சிறுகதைகள் - மறுபதிப்பு 2019)


ஒரு தேவதை தூங்குகிறாள்


ஒரு மரம் வெட்டியின் மனப்போக்கில் அவன் கற்பனையாக உருவாக்கம் கொடுக்கும் கதைகக்களத்தோடும் சம்பவங்களோடும் மாயத்தின் எதார்த்தங்களோடு புனையப்பட்டுள்ள கதை. நவீன படைப்பிலக்கியச் சூழலின் ஓர் கூறாக இத்தகைய கதைகள் இன்று அதிகமாகப் படைக்கப்பட்டு வருவதைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் நாம் தெரிந்துகொள்ளலாம். கதையின் ஆரம்பத்திலேயே அந்தப் பஞ்சவர்ணக் குதிரை காதலைப் பற்றிச் சொல்லும் கருத்தும் விளக்கமும் கதையின் முடிவில் நமக்குத் தெளிவான ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. இங்குக் கற்றுத் தருவது கதாசிரியரின் நோக்கமாக இல்லாதபோதும் ஒரு வாசகனாய் கதையின் இறுதியில் ஒரு தெளிவைப் பெற முடிகிறது. தனி மனிதனின் ஆசைகள் அவனுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பாளியாக இருக்கமுடியும் என்பதைக் கதை மிக இயல்பாகப் பதிவு செய்கிறது.


திரைகள்


காதலைப் பற்றிப் பேசாத ஒரு காதல் கதை. மிக எதார்த்தமாக ஒரு மனிதனின் வாழ்கைகயில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளையும் அதற்காக அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் மிக இயல்பாகக் கதைப்போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குறும்படம் பார்த்த உணர்வே கதையை வாசித்து முடித்தபோது ஏற்பட்டது. மிக நேர்த்தியான சம்பவக் காட்சிப் படுத்துதலும் அதற்கான விவரணைகளும் கதையை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிறது. சிறுகதைக்கே உரித்தான கதைச்சம்பவ ஒருமையோடு இக்கதைப் புனையப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.


தனிமரங்கள்


தனிமனித மனங்களின் அறத்தைப்  பற்றிய கதையாடல். வெளிப் பார்வைக்கு வேறாகத் தெரிந்து விரியும் ஒன்று உண்மையில் அப்படியிருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தும் கதை. இங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் அவை அவைக்கான காரண காரியங்கள் இருக்கும். வெவ்வேறு மனங்களின் அற நிலைகளும் வெவ்வேறு சூழலில் வேறுபட்டே இருக்கும் என்பதைப்  புரிய வைக்கும் கதை. மன ஒருமைப்பாடு ஏற்பட்டால் இங்கு எல்லாமே நன்றாகவே நடக்கும் என்பதும் நமக்கான இந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் உறவுகளையும் பகைமைகளையும் நாமே உருவாக்கிக் கொள்கிறோம் என்பதும் அனைத்திற்கும் நம் மனத்தில் தோன்றும் அல்லது நாம் நிறுவி வைத்திருக்கும் அறநிலைகளே காரணமாகின்றன என்பதையும் விளக்கும் கதை.


போராட்டங்கள்


மனிதனின் புறவயச் செயல்பாடுகளின்மூலம் அவனின் அகத்தை நோக்கி நம்மை நகர வைக்கும் கதை. மனித மனத்தின் அசாதரண ஆழங்களும் நுட்பங்களும் இக்கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஒரு மரணத்திற்காகத் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொண்டு ஒரு மாவீரனைப்போல் காத்திருக்கும் ஒரு மனிதனின் கதை. இவ்வளவுதானா வாழ்க்கை என்ற எண்ணம் மாறி, இருக்குற கொஞ்ச காலத்திலேயே இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்கிறபோது, நமக்குக் கிடைத்திருக்கிற இந்த வாழ்க்கையில் எத்தனை நல்ல காரியங்களை நம்மால் செய்திட முடியும் என்ற ஒரு நம்பிக்கையை முரணான இருண்மை உத்தியின் துணைகொண்டு இக்கதையின்மூலம் உணர்த்தியுள்ளார் ஆதி. இராஜகுமாரன்.


இரவுகள் வெளிச்சமானவை அல்ல


இரண்டு கதாபாத்திர முரண் உணர்வுகளை மிக இயல்பாக எடுத்தியம்பும் கதைப்போக்கு நம் மனத்துக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு மனிதனின் இருப்பு நிலைக்கு ஏற்பவே அவனது எண்ணங்களும் விருப்பங்களும் நிலைபெற்று நிற்கின்றன என்ற மையத்தை இரு கதாபாத்திரப் படைப்புகளின்மூலம் நிறுவ முயலும் கதை. தலைப்புக்கு மிகப் பொருத்தமான கதை முடிவு முரண் அலைகளால் நம்மை மூழ்கடித்து விடுகிறது.


சராசரி


கதை முழுக்க உரையாடல் உத்திமூலம் நகர்த்தப்பட்ட கதை. ஒரு மாலை நேரத்தில், வழக்கத்திற்கு மாறாக வீட்டிற்குச் சீக்கிரமாக வந்துவிட்ட கணவனோடு மனைவி உரையாடும் சூழல். மனைவிக்குப் பழக்கமில்லாத அந்தச் சூழலில் எதைப்பேசுவது எதைச்செய்வது என்பதை அறியாமல் அவள் எதையாவது செய்து, பேசி அவனிடம் திட்டு வாங்கிக் கொள்கிறாள். கணவன் மனைவி என்ற குடும்பக் கூட்டுக்குள் ஆணாதிக்க நிலையினைக் குறியீடாகச் சொல்லும் கதை.


வானம் பழுப்பதில்லை


சிங்காரப் புன்னகை
கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா


என்ற மகாதேவி படப் பாடலைக் கொண்டு கதை அமைக்கப்பட்ட விதம் சிறப்பாக இருக்கிறது. பாடல் வரிகளுக்கு முரணாகச் சம்பவக் கோர்வைகளைக் கதையில் புனைந்திருப்பது நவீனத்தை நோக்கி நமது படைப்புகளை நமது படைப்பாளர்கள் எண்பதுகளிலேயே நகர்த்தியிருப்பது தெரிகிறது. அத்தகைய படைப்பாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் நாம் முறையே அடையாளம் கண்டு அனைத்துலக அரங்குகளில் முன்னெடுக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் இதுபோன்ற கதைகளை மீள்பார்வை செய்கின்றபோது ஏற்படுகிறது.


சீசர்கள் குருசோக்கள்தான்


தாம் கொண்ட கொள்கைகளுக்காக வாழ்ந்து வாழ்க்கைகயில் தன்னளவில் நிறைவுபெற்ற ஒரு கதாபாத்திரப் படைப்பு இக்கதையில் நிறைவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நிஜத்திலும் இங்கு அப்படித்தான் இருக்கிறது. நீதி, நேர்மை, நியாயம், தர்மம் எனப் பேசுபவர்களும் அவ்வழியில் வாழ்பவர்களும் சமூகத்தின் பார்வையில் தோற்றுப்போனவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். பொருளாதாரம் என்ற ஒன்று இன்று நம் மானத்தையும் பகுத்தறிவையும்விட மகத்தான ஒன்றாக பேரியக்க சக்தியாக உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு தாடிக்காரப் பெரியவரின் தாக்கத்தால் இங்கும்  சீர்த்திருத்த இயங்கம் அன்று உருவாகியிருப்பதையும் அன்றைய அவர்கள் வாழ்க்கையாலும் கொள்கையாலும் உண்மையாக இருந்தனர் என்பதையும் அவர்களை அடுத்து வந்த தலைமுறை நுனிப்பபுல் மேயும் விடலைகளாக மாறிவிட்டையும் கதை பதிவு செய்கிறது.


ஞானரதம்


உரையாடல் உத்தியின்மூலம் வாழ்வின் தத்துவத்தை எடுத்துச் சொல்லும் கதை. இந்த வாழ்க்கையின் மீதான நமது புரிதல்களையும் இருப்புகளையும் மீள்பார்வைக்குக் கொண்டு வரும் ஒரு மனோவியல் புனைகதை. இந்த வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் கதை. இந்த வாழ்க்கையை நமதாக்கிக்கொள்ள வழிகாட்டும் கதை. வாழ்க்கையின்மீது கதாசிரியர் வைக்கும் விமர்சனங்களும் அதன்மீதான அவரின் தரிசனங்களும் இவரை நம்மூர் டால்ஸ்டாயாகவும் ஸ்டெல்லா புரூஸ்ஸாகவும் அடையாளம் காட்டுகிறது.


எரியாத நட்சத்திரங்கள்


ஒரு கதாபாத்திரத்தின்மூலம் அன்றைய தமிழர்களுக்கெல்லாம் பெரும் சுமையாக இருந்த எட்டாத கனியாக இருந்த நீல நிற அடையாள அட்டையின் தேவையை உணர்த்தும் கதை. பலருக்கு ஒரு காலத்தில் பிடித்திருந்த சிவப்பு நிறம் இந்தக் குடியுரிமை பிரச்சினைகளால் பிடிக்காமல் போய்விடுகிறது. எளிமையான சொல்லாடல்களின்மூலமாகச் சமூகத்துக்கான செய்தியைத் தாங்கிவரும் கதை.

சளி உறைந்துபோன மூக்கின் நமநமப்புகளை அவன் உடம்பில் வைத்து லேசாகத் தேய்த்தும் இறுக அலுத்தியும் போக்கிக் கொள்ளும்,’

என அப்பா மகள்களுக்கிடையே உறவின் அணுக்கதைக் குறிக்கும் இடத்திலும் சரி, ‘அவன் யாரிடமும் எதிர்த்துப் பேசவே மாட்டான். ஆனால், அத்தனையையும் அவன் மனம் சொல்லும் என்ற இடமானாலும் சரி, மரத்தையும் நாணலையும் ஒப்பிட்டுக்கூறும் இடமானாலும் சரி,  இயற்கையையும் ஒரு கதாபாத்திரத்தின் நுண்ணிய உணர்வுகளையும் மிக இயல்பாகப் பதிவு செய்துவிடுவதில்  ஒரு வண்ணதாசனாகவும் இராஜகுமாரன் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.


மனக்குதிரை
 

வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் எப்போது ஒருவருக்கு ஏற்படுகிறதோ அப்போதே அவர் உண்மையில் இறந்து விடுகிறார். இவர்கள் எல்லாம் உடல் சாவதற்கு முன்பே மனத்தால் செத்துவிடுகிறார்கள்.


என்று ஆரம்பிக்கும் கதை வாழ்க்கையின் சுவாரஸ்யமான ஒரு பகுதியை மிகவும் நேர்த்தியான சம்பவக் கோர்வைகளுடன் வாழ்வதற்கான காரணங்கள் இந்த உலகில் இன்னும் நிறையே இருக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு நிறைவு பெறுகிறது. இக்கதை, இறப்பு என்ற இருண்மைக்குள் தெரியாமல் போய் விழுவதைவிட நமக்குத் தெரிந்த இந்த வாழ்வின் வெளிச்சங்ளைத் தேடி நாம் ஏன் நம்மை நகர்த்திக்கொள்ளக்கூடாது என்ற சிந்தனையை மனித மனத்துக்குள் விதைக்கும் விதை.


என் வாரிசுகள்


இன்றைக்கும் நமக்குத் தேவையான கதை. கதைசொல்லியின் மூலமாக இந்த வாழ்க்கையின் நிஜ தரிசனத்தை முன் வைக்கும் கதை. இலக்கியம், தமிழ்ப் பத்திரிக்கைகள், தமிழ்ச்சமூகம், கல்வி என அனைத்தையும் இக்கதை விவரணை செய்தாலும் இந்த நாட்டில் நம் அடுத்த தலைமுறையினர் எதை, எப்படி செய்யவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கிறது. கதாசிரியருக்குள் இருக்கும் ஒரு புரட்சிக்காரன் இக்கதையில் மிக ஆவேசமாக ஆனால், மிக மிக நிதானமாக வெளிவருவது தெரிகிறது. அந்த மாபெரும் புரட்சிக்காரனின் அடுத்த வாரிசு யார் என்பதுதான் இன்று நம்மிடையே தொக்கி நிற்கும் ஒரு கேள்வியாகும்.


நான் தனியாக இல்லை


நாற்பது வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வுப்பெற முடிவெடுத்து அதன்படியே சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்த்து பின் குறிப்பிட்ட வயதில் வேலையிலிருந்து ஓய்வுப் பெறும் ஒரு மனிதனைப் பற்றிய கதை, ஓரிடத்தில் பலருடன் சேர்ந்து வேலை செய்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல எனவும் எதிலும் சமரசமாகிக் கொண்டு சுய தன்மானத்தை இழந்து வாழவேண்டிவருகிறது என்பதையும் திட்டமிட்டு வாழ்ந்தால் இந்த வாழ்க்கையை எப்படியெல்லாம் நாம் வாழவேண்டி நாம் ஆசைப்படுகிறோமோ அப்படியெல்லாம் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை வாசக மனங்களில் ஏற்றி வைக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனையும் மனிதனால் செய்யப்பட்டது எனவும் அவற்றை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இங்கு யாரும் தனியன் இல்லை என்பதையும் இக்கதை உணர்த்திச் செல்கிறது.


பழைய தரையில் புதிய படுக்கைகள்


இது பணிப்பெண்களைப் பற்றிய கதை. இன்று இருப்பதுபோல் அயல்நாட்டுப் பணிப்பெண்களைப் பற்றிய கதையல்ல. இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பணிப்பெண்களைப்  பற்றிய கதை. நீக்ரோ அடிமைகளின் படத்தைப் பார்த்து வாயார இரக்கப்பட்டுப் பேசும் பெரிய வசதியான தமிழ்ப்பேசத் தெரிந்தும் தமிழ்ப்பேசாத பெரிய இடத்து வீட்டுக்காரர்கள் தத்தம் வீட்டில் வைத்திருக்கும் பணிப்பெண்களைப் பற்றி ஒன்றுகூடும் போதெல்லாம் அவதூறாகப் பேசுவதும் அவர்களை கிண்டலடித்தும் கேலி செய்தும் வருவதையும் கதை பதிவு செய்துள்ளது. போலிகளின் ஆடம்பரத்தில் மதிமயங்கி தம் வீட்டுப் பெண் பிள்ளைகளை இதுபோன்ற பெரியபெரிய மாடி வீடுகளுக்கு மட்டுமே வேலைக்கு அனுப்பிப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அப்பாக்களையும் இக்கதை பதிவு செய்துள்ளது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகள் இன்றைய நவீன படைப்பாக்கங்களில் மீட்சிப்பெறும் வேளையில், எண்பதுகளிலேயே அத்தகைய முயற்சி நம் மண்ணில் தொடங்கியிருக்கிறது என்பதற்கு இக்கதை நல்லதொரு முன்னோடியாகும்.


மனமெல்லாம் கைகள்  

   
மனிதர்களின் அலட்சியத்தை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்து வாழ்க்கையில் தன்னைக் குறுக்கிக்கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டங்களோடு அவரின் இயலாமைகளும் குடும்பத்தார் மற்றும் சுற்றுப்புறத்தாரின் அலட்சியப் போக்குகளும் புறக்கணிப்புகளும் அக்கதாபாத்திரத்தின் வாயிலாகவே மிகவும் இயல்பாக எடுத்துரைக்கும் கதை. மனிதனைப் பற்றியும் மனிதத் தனம் பற்றியும் பல வகையான விமர்சனங்களையும் பார்வைகளையும் முன்வைக்கிறது. அவற்றில் ஒன்று இப்படி வருகிறது.


ஆதிக்கம், ஆணவம், அகங்காரம் இதுதான் மனிதன். இளைத்தவனை எல்லாம் சுருக் சுருக் என்று இந்த ஊசிகளால் குத்திக்கொண்டிருப்பதுதான் மனிதத் தனம்.’


ஆதி. இராஜகுமாரன் அவர்களின் கதைகளின் கதைப்போக்கும் கதைகூறும் முறைமையும் எளிய மொழிப் பயன்பாடும் மலேசியத் தமிழ்ப்புனைவு வெளியில் ஒரு புதிய வகை எழுத்தின் வெளிப்பாடாக தொடக்கம் கண்டிருக்கிறது என்பதை நேர்மையான மனசுடன் நாம் ஏற்க வேண்டும். அவருடைய எழுத்தில் தமிழ்ச் சிறுகதைகளில் நவீனத்துக்கு வித்திட்ட புதுமைப் பித்தன் முதல் இன்றைய ஜெயமோகன்வரை அனைவரையும் கடந்துபோக முடிகிறது.


அவருக்குச் சூரியனுக்குக் கீழ் இருக்கும் எல்லாவற்றின்மீதும் ஓர் அக்கறை இருக்கின்றது என்பதை அவரின் ஒவ்வொரு கதையும் உணர்த்தும். மொழியின் அதிகாரத்தையும் இறுக்கத்தையும் சிதைக்காமல் எளிய புனைவின் வழியே வாசகர்களைச் சென்றடைவது அவரின் தனித்துவமாகும். வெறுமனே சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பாகக் கதை சொல்லுவதில் அவருக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் காணும் காட்சிகளைப் போல எதார்த்தத்திலிருந்து விலகி, கலையழகுடன் வேறு ஒன்றை வெளிப்படுத்த அவரின் படைப்புகள் முயலுகின்றன. இயல்பான மொழிக்கட்டமைப்பால் ஆன கதைகள் ஆழ்ந்த வாசிப்பின்போது நடப்பு வாழ்க்கைக் குறித்துப் பரிசீலிக்ககத் தூண்டுகின்றன.


இன்றைய நமது படைப்பாளர்களும் வாசகர்களும் வாய்ப்புக் கிடைத்தால் இந்த நூலை வாசித்துப் பாருங்கள். ஏற்கனவே வாசித்தவர்கள் மீண்டும் வாசித்தப் பாருங்கள். இன்றும் அனைத்துக் கதைகளும் புதுசாய்த் தோன்றும்.



சிறந்த எழுத்தாளர்கள் தங்களின் நூல்களின் மூலமாகத் தங்களின் படைப்புகளின் வாயிலாகத் தங்களுக்குப் பிந்தைய எண்ணற்ற தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆதி. இராஜகுமாரனும் அத்தகைய ஓர் எழுத்தாளர்தான் என்பதை அவரின் படைப்புகள் உறுதிசெய்கின்றன. ஒரு சிறிய வேண்டுகோள். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமோ அல்லது இலக்கிய வெளியில் உலாவரும் இயக்கங்களோ, ஆதி. இராஜகுமாரன் அவர்களின் சிறுகதைகள் மீதான ஒரு நாள் கருத்தரங்கை நடத்தி, முறையாக முன்னெடுத்துச் சென்றால் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி நம் மலேசியத் தமிழ்ச் சிறுகதைப்  படைப்பாக்கத்தில் உருவாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.


- தொடரும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக