வியாழன், 3 அக்டோபர், 2019


வாங்க வாசிக்கலாம் – 15 – எம்.சேகர்
மக்கள் ஓசை (1-9-19)


வே.இராஜேஸ்வரி சிறுகதைகள்


அறிமுகம்


வே.இராஜேஸ்வரி அறிமுகம் தேவையில்லாத ஒரு பண்பட்ட படைப்பாளர். இந்நாட்டின் முத்திரைப் படைத்த மூத்த படைப்பாளி. சுமார் நாற்பதாண்டு மலேசிய தமிழ்ப் படைப்புலக நீரோட்டத்தில் சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள் என நிறைவான பங்களிப்பைச் செய்திருக்கும் இவரை மலேசியப்  புதுக்கவிதைப் படைப்பாக்கத்தில் முதல் பெண் படைப்பாளியாகப் பல ஆய்வு மேடைகள் அடையாளம் காட்டியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் நான் விரும்பிப் படிக்கும் படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என அடையாளம் காட்டுகிறார் நம் எழுத்துலக பிதாமகர் ஆதி. இராஜகுமாரன். வே. இராஜேஸ்வரியைப் பற்றி மேலும் இப்படிக் கூறுகிறார்.


வயல்களில் நெற்பயிர் நடுவதுபோல சிறுகச் சிறுக எழுதி நெடுக வளர்ந்திருக்கிறார். அவரது கதைகளைப் படித்தபோதுதான் மலேசிய இலக்கிய உலகில் அவரது உயரம்  உணரமுடிகிறது.
வே.இராஜேஸ்வரி சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு, மழைச்சாரல் புலனக்குழுவின் நூல் திட்டம் வழி வெளியிடப்பட்டது. அன்று ஒரே மேடையில் பத்து நூல்கள் வெளியீடு கண்டன. இத்தொகுப்பில் மொத்தம் 45 சிறுகதைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் உங்களோடு இங்குப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு நிலையில் அதிலிருக்கும் 12 சிறுகதைகளை மட்டுமே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


நான் மட்டும் ஒரு .............


முரண் கதாபாத்திர அமைப்புடன் அமையப்பெற்ற கதை. வாழ்வில் எதுவும் நம்மைப் பாதிக்காதவரை நாம் பலவிதமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் மிக எளிதாக நம் வாயிலிருந்து துப்பிவிட்டுப்  போய்விடமுடிகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவனுக்குத்தான் வலியும் வேதைனையும் அதிகமாக இருக்கும். அவ்வலியால் பாதிப்படையாதவன் எனக்கு நடந்திருந்தால் நான் இப்படிச் செய்திருப்பேன் அப்படிச் செய்திருப்பேன் என்பதெல்லாம் வெறும் வாய்ச் சவாடலாக மட்டுமே இங்கு இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. சமகால நடப்பியல் சூழல்களோடு இக்கதை நமக்குள் இருக்கும் நாம் உணராத குறைகளை உணர்த்தும் தன்மையில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான கதாபாத்திரத் தேர்வுகளும் அதற்கு ஏற்ற சம்பவக் கோர்வைகளும் இயல்பான கதைப்போக்கும் கதையை ஆர்வத்தோடு வாசிக்க வைக்கிறது.


101 வது கனி


ஒரு பெண்ணின் மன ஓட்டங்களோடு பயணிக்கும் கதை ஒரு பெண்ணால் சொல்லப்படும்போது நம்மை நெகிழ வைக்கிறது. ஒரு பெண்ணால்தான் இன்னொரு பெண்ணின் மன உணர்வுகளை இத்தனை ஆழமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தமுடிகிறது. இந்த மலேசிய நாட்டில் இருநூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நம் சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார இயலாமையே இத்தனை வேதனைகளுக்கும் வடுக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இன்னும் எத்தனைப் பெண்களைத்தான் குடும்பம் என்ற பந்தத்திற்குள் பூட்டிவைத்துப் பலி ஆடுகளாக நாம் களம் இறக்கப்போகிறோம்? என்ற கேள்வியே இந்தக் கதையை வாசித்தப் பிறகு எனக்குள் தொக்கி நிற்கிறது. பெண்ணியத்தைப் பற்றி இன்றைய படைப்பிலக்கியங்கள் பேசும் முன்பே வே. இராஜேஸ்வரி பேசியிருப்பதும் அவரின் பெரும்பாலான கதைகளும் பெண்ணியம் சார்ந்தே புனையப்பட்டிருப்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது.


போதி மரங்கள் புத்தனுக்கு மட்டுமல்ல


சந்தர்ப்பமும் சாட்சிகளும் ஒரு நல்லவனுக்கு எதிராக இருக்கையில் இங்குக் கத்தியும் கூப்பாடு போட்டும் எதுவும் மாறிவிடப்போவதில்லை. எல்லாம் அதனதன்படிதான் நடக்கும் என்பதற்கேற்ப மிகவும் நேர்த்தியாகக் கதை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நிலையாமையை மையமாகக் கொண்ட கதைப்பின்னலில் சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகளில் ஒன்றான,


ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்பதற்கேற்பக் கதையின் முடிவும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஓர் ஆணுக்குள் இருக்கும் மெல்லிய உணர்வுகளை ஆங்காங்கே கதையோட்டத்தில் தவழவிட்டு இயற்கையையும் அதன் அழகையையும் ரசிக்கும்படி மிக நேர்த்தியாகத் தன் கற்பனைத்தேரில் பவனி வந்திருக்கிறார் வே. இராஜேஸ்வரி.


எங்கள் ஊர் மாதவி


கதை ஒரு குறியீட்டுப் படிமமாக ஒரு செய்தியை இந்தச் சமூகத்திற்குச் சொல்லிச் செல்கிறது. மாதவி என்ற பெயர் ஒரு குறியீடாக இந்தக் கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனித்து வாழ்பவர்களை மாதவி என்று அடையாளப்படுத்தும் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கும் கதையாடல். இந்தக் கதையின் தலைப்பே இந்தக் கதைக்கும் மையமாகப் புனையப்பட்டுப் பெண்ணியப்  படைப்பாக மிளிர்கிறது. மாதவி என்பதை வெறும் பெயராக மட்டும் பார்த்தால் இந்தக் கதையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மாதவி என்ற பெயரைச் சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரத் தன்மையோடு ஒரு குறிப்பிட்ட ஒரு பண்பியல் கூறோடு உற்று நோக்கினால்தான் இக்கதையும் சிறக்கும். இதுபோன்ற கதைகளின்மூலம் நம் தொன்மத்தின் கதாபாத்திரங்களை வாசகர்களுக்கு மிக அருகில் நம்மால் நிழலாட வைக்க முடிகிறது. ஒரு தேடலை நோக்கி வாசகர்களை நகரவும் வைக்கிறது.


பழைய பல்லவி புதிய சரணம்


அழகானதொரு காட்சிச் சித்தரிப்பு, எதிர்பார்ப்புடன் கதைக்குள் நுழையவைக்கிறது. சாவதற்காக ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சாவைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு வாழ்வதற்கான ஆயிரம் காரணங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது என்பதை மையமாகக் கொண்ட கதைப்பின்னல் மிகவும் நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளது. பலரும் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதை இதுவென்றாலும் கதை சொல்லலிலும் காட்சி விவரிப்புகளிலும் இக்கதை தனித்து நிற்கிறது. தொன்மம், புரணம் என எதைப் பார்த்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் அப்படியேதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சகுந்தலைகளும் குந்தி தேவிகளும் பாஞ்சாலிகளும் சீதைகளும் பாதிக்கப்பட்ட அளவிற்கு அவர்களின் பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆண்கள் பாதிக்கப்படுவதேயில்லையே என நமது தொன்மப் புராண இதிகாசங்களையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.


ஆறாவது காப்பியம்


தன்கூற்று உத்திமூலம் தன்னிலையாகக் கதையைச் சொல்லி சுவாரஸ்யமாகக் கொண்டுசென்றுள்ளார் வே.இராஜேஸ்வரி. அம்மாவின் உணர்வுகளும் மகளின் உணர்வுகளும் மிகவும் ஆழமாகவும் நிதானமாகவும் கதைக்குள்ளே கட்டமைக்கப்பட்டுள்ளது. சமகால இலக்கியப் படைப்புகளில் நவீனம், பின்நவீனத்துவம் அதிகம் பேசப்படும் சூழலில் 1990 களிலேயே பின்நவீனத்துவச் சிந்தனையுடன் கதை எழுதியிருக்கிறார் இந்தப் பெண்ணியப் படைப்பாளி. வெறும் பெண்ணியம் பேசும் கதை என்று இக்கதையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட்டுப் போகமுடியாத கதை. இது நம் சமூகத்தின் கதை. அதன் அவலத்தின் வெளிச்சம். நாடு சுதந்திம் பெற்று அறுபது ஆண்டுகள் மேலாகியும் நம் சமூகம் மட்டும் இன்னும் பல நிலைகளிலும் விழிப்புணர்வு இல்லாமலும் முன்னேற்றம் அடையாமலும் இருப்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருக்கிறது. கதையின் முடிவு நிச்சயமில்லாத மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்திற்கான ஒரு குறியீடாகவே தென்படுகிறது. இக்கதை பெண்ணின் ஆழ்மன உளவியலை மிகவும் நுட்பமாகவும் துல்லியமாகவும் சித்தரிப்பதில் தனித்து நிற்கிறது.


சிலம்பு தேடும் கண்ணகி


மலேசியக் கணவரைப் பெற்ற ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணின் கதை. தமிழ்நாட்டுப் பெண்ணோ அல்லது மலேசியப் பெண்ணோ, பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு இன்னொரு பெண்ணே காரணமாகிப்போவதென்னமோ உலகம் முழுக்க எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்து இவளை விவாகரத்து செய்துவிடுகிறான். இந்த மையத்தில் இந்தக் கதை சுழன்றாலும் தமிழ்நாட்டுப் பெண் என்பதாலும் மலேசியரைக் கணவராகப் பெற்ற அவர் விவாகரத்துப் பெற்றபின் அவருடன் வாழ முடியாத சூழலில் இந்த நாட்டில் அப்பெண் இருக்கமுடியாது என்பதாலும் மலேசியப் பிரஜைகளான இரண்டு பிள்ளைகளையும் அவளோடு தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல மலேசியக் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பதாலும் அவள் இங்கு நிரந்தரமாகத் தங்கி தன் பிள்ளைகளைத் தன்னிடமே திரும்பப் பெற போராட முடிவெடுத்து அதற்காக ஒன்றைச் செய்ய நினைக்கிறாள். கதைக்கு மிகவும் பொருந்திப்போகும் கதைத் தலைப்பு. ஆணாதிக்கச் சமூகத்திற்குச் சாட்டை அடிகளாக விழும் கதையின் முடிவு வாசக இடைவெளிக்காக வழிவிட்டுக் காத்துக் கிடக்கிறது.


என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்


இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஒரு நல்ல வேலையில் சேர்ந்து ஒரு தரை வீடாவது வாங்கியிருக்கலாம் எனக் கதைநெடுக வாசகனுடன் பேசிக்கொண்டே போகும் கதாநாயகன். அவனின் மனவோட்டங்கள் அருமையான உரையாடல்கள் போலவே வாசகனைத் தொடர்ந்து செல்கின்றன.


மலேசியாவின் நகர்ப்புறத்து மலிவுவிலை அடுக்குமாடி வீடுகளின் அவலங்களையும்  சாதாரண தொழில் செய்துகொண்டு பேருந்தை நம்பி வேலைக்குப் போகும் மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் பிடித்துக்காட்டும் இடங்களும் மெல்லியதானதொரு நகைச்சுவையுணர்வும் கதைக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கின்றன. ஓர் அழுத்தமான கதைக்கரு மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் ஆரம்பமும் முடிவும் முரணாக அமையப்பெற்ற கதை. மனித வாழ்வின் அவலங்களும் அனுபவங்களும்தான் சொற்களாக வாக்கியங்களாக இக்கதையை வடிவமாக்கியுள்ளது.


‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என கண்ணதாசனின் வரிகள் கதையைப் படித்து முடிக்கும்போது வாசகனின் நினைவலைகளைத் தாலாட்டியும் செல்லலாம்.


அகம் புறம்


திருநங்கைகளைப் பற்றிய ஒரு சில பார்வைகளுடனான கதை, குழந்தை வளர்ப்பைப்  பற்றியும் சிலவற்றை முன்வைக்கிறது. திருநங்கை என்ற சொல்லால் ஒம்போது என்று அழைப்பதும் குறிப்பதும் மட்டுமே மாறியிருக்கிறது எனவும் அவர்களின் மீதான சமூகத்தின் பார்வை இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது என்பதையும் உணர்த்தும் கதை. தன் மகனை சிலர், ஒம்போது என அழைத்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல் புலம்பும் ஒரு தாயின் மனத்தையும் அப்படி மாறிப்போன பிள்ளைகளைப்  பெற்றவர்கள் எந்த அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார்கள் எற்பதைப் பற்றியும் கதை விவரித்துச் செல்கிறது. ஓர் ஆண் பிள்ளையை எப்படிக் கொஞ்சவேண்டும், அதுபோல ஒரு பெண் குழந்தையை எப்படிக் கொஞ்சவேண்டும் என பிள்ளை வளர்ப்பின் சில விஷயங்களையும் கதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.


ஆமையும் வெல்லும்


சமகாலப் பதிவுகளைக் களமாகக் கொண்டு காலத்திற்கேற்ற கருவில் சொல்லப்பட்ட கதை, இன்றைய அடிப்படைக் கல்வி முறை மதிப்பெண் சார்ந்த தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாறிவிட்டதையும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தையும் தேர்வு பயத்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றின் முரண்பட்ட பார்வைகளையும் தன்னகத்தே கொண்டு, தன் கூற்று உத்தி முறையின் மூலம் இக்கதையை நகர்த்தியுள்ளார் வே. இராஜேஸ்வரி. இன்றைய கல்விக் கொள்கைகளை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டிய தேவைகளையும் அவசியத்தையும் இக்கதை பேசியிருக்கிறது. கதையின் முடிவும் வாசகனுக்காகக் காத்திருக்கிறது.


பாடாத இராகங்கள்


கணவனை இழந்த ஒரு பெண்ணின் கதை. இன்னொரு பெண்ணின் பார்வையில் நமக்குக் கதையாகக் கிடைத்திருக்கிறது. ஒரு கணவனின் இழப்பு ஒரு மனைவிக்கு எவ்விதப் பாதிப்பையையும் அவ்வளவாகக் கொடுக்கவில்லை எனில், அவர்கள் மேற்கொண்டிருந்த அந்தக் குடும்ப வாழ்வில் ஏதோ ஒன்று அந்நியமாக இருந்திருக்கிறது என்பதையோ அல்லது அந்தப் பெண் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் அவளாக வாழமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கும் என்பதாக ஏதோ ஒன்று நம் மனத்திற்குள் வருடிக்கொண்டிருக்கிறது. இது இக்கதையில் மட்டுமல்ல. பெரும்பாலான குடும்பச் சூழலில் பெண்கள் பலவற்றையும் விட்டுக்கொடுத்துதான் அல்லது இழந்துதான் வாழவேண்டிய ஒரு வாழ்க்கையைத்தான் இந்த ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு இக்கதை நல்லதோர் உதாரணம்.
கதையின் இறுதி வரி இப்படி முடிகிறது.


எல்லா இறப்புகளும் இழப்புகள் அல்லதான். ஆனால், ஒரு பெண்ணுக்கு எல்லாமுமான கணவனின் இறப்பு, ஓர் இழப்பாகத் தோன்றாமல் போகுமானால், அதற்குமுன் அவள் நிறைய இழந்திருக்க வேண்டுமே.’ பெண்களின் ஆழ்மனப் பதிவுகளுக்கு ஓர் உதாரணமாக இக்கதையும் பெண்களின் மொழியாக தனித்து சிறந்து விளங்குகிறது.



குழந்தை இன்பம்


சமகால நவீன இலக்கியப் படைப்புகள் மனிதர்களின் அக உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்து யதார்த்த வாழ்வின் யாதார்த்தங்களை யதார்த்தங்களாகக் காட்டும் ஓர் இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு யதார்த்த கதையுலகிற்குள் 2004 இல் எழுதப்பட்ட இக்கதையும் அமர்ந்துகொள்கிறது என்பதைப் பார்க்கும்பொழுது நமக்கும் மலேசிப் புனைவிலக்கியத்திற்கும் பெருமையாக இருக்கிறது. இக்கதையின் இறுதி வரிகளை வாசித்தவுடன் எனது வாசகமனம் அதிர்ந்துவிட்டது.  எதையும் சிந்திக்கமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. மீண்டும் நான் சமநிலைக்கு வர சில நிமிடங்கள் பிடித்தன. இப்படியொரு தாக்கத்தை ஏற்கனவே ஒரு முறை சு.வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி என்ற சிறுகதையும் சந்தோஷின் பிரியாணி என்ற சிறுகதையும் ஏற்படுத்தியிருந்தன. இக்கதைகளின் இறுதி வரிகள் வாசிப்பவர்களை ஓர் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி அவர்களை உறைய வைத்துவிடும் தன்மை கொண்டவை. இப்படியெல்லாம் நாம் வாழும் நடப்பியல் வாழ்க்கை முறையில் நடந்துகொண்டு இருக்கிறதா? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு வெளியே சொல்லமுடியாத எண்ணற்ற ஜீவன்களைத்தான் நாம் இங்குத் தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோமா?


இப்படிப்பட்ட அதிர்வு அலைகளையும் மனித ஜீவனுக்குள் இருக்கும் மௌனங்களை வெளிப்படுத்தும் குரலாகவும் இன்றைய நவீன தமிழிலக்கியம் நேற்று இல்லாத ஒன்றை எழுத முயன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் வே.இராஜேஸ்வரியின் இந்தக் கதையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். நவீன புனைவிலக்கியமாக இக்கதையையும் நாம் கொண்டாடலாம்.


வே.இராஜேஸ்வரியின் கதைகளுக்கு உதிரி மனிதர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதை அவரின் எழுத்து மெய்ப்பித்திருக்கிறது. மௌனத்தால் உலுக்கும் பெண்மொழி அவரின் எழுத்தினூடே பாய்ந்து வருவதை உணரமுடிகிறது. பெண்ணிய உணர்வுக்குள் காணக்கிடக்கும் அவர்களுக்கான வாழ்க்கையையும் அதற்கான மாற்று வழிகளாகவும் புதிய குரல்களாகவும் இக்கதைகள் ஒலிக்கின்றன.


எனது இந்தப் பார்வையானது அவரின் கதைகள் மீதான என் வாசிப்பில் ஒரு திறப்பு மட்டுமே என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். முழுமையான ஓர் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டால் இக்கதைகள் நமக்காக இன்னும் நிறையவே பேசும். மற்றவர்களையும் நிறையவே நிறைவாக எழுதவும் வைக்கும்.


நிறைவாக....


மனித வாழ்வின் ஒவ்வொரு கணமும் திருப்பங்களும் திடுக்கிடல்களும் எதிர்பார்ப்புகளும் கலகங்களும் சுவாரசியங்களும் சோகங்களும் கொண்டாட்டங்களும் குதூகலங்களும் கொண்டதாகத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்தாலும் அவரவருக்கு வாழ்க்கை கொடுக்கும் அனுபவம் என்பது வெவ்வேறாகத்தான் இருக்கிறது. அத்தகைய அனுபவங்களும் உணர்வுகளுமே மனிதனின் மன வெளிகளில் புனைவுகளாகத் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.


மனிதப் பெருங்குழுவும் அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுமே மொழியின்வழி புனைவுகளாகக் கசிந்து திசை எங்கும் மிதந்துகொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் உடைப்பெடுத்துப் பெருகியும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதுபோன்ற படைப்புகளைக் கூர்ந்து கவனித்துத் தீவிரமான வாசிப்புக்கு உட்படுத்துவதும் அதன்வழி மானுட  விரிவின் நுண்ணிய முடுக்குகளின்  சூட்சமங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதும் இன்றைய படைக்காக்கச் சூழலில் தவிர்க்க இயலாத அவசியமாகிறது.
அத்தகைய படைப்புகளைக் கண்டறிவதற்கு முதலில் நமக்கு வாசிப்பும் தேடலும் என்பது அவசியமாகும். இந்த அவசியச் செயற்பாட்டைச் சாத்தியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த வாங்க வாசிக்கலாம். 


சில நண்பர்கள் என்னிடம், நிறைகளை மட்டுமே எழுதுகிறீர்களே குறைகளையும் சுட்டிக்காட்டலாமே என்றனர். அவர்களுக்குத் தாழ்மையுடன் நான் கூறும் பதில் இதுதான்.


அதற்கான களம் இதுவல்ல. இக்கட்டுரை எழுதுவதன் முதன்மை நோக்கமே வாசகர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும் அதற்காக நான் வாசித்த சில நூல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதும்தான். வாய்ப்புக் கிடைத்தால் வேறொரு தலைப்பில் சமகால சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி எழுதலாம்.


இந்தத் தொடர்க் கட்டுரையை எழுத வாய்ப்பளித்த மக்கள் ஓசைக்கும் அதன் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு. மோகனன் பெருமாள் அவர்களுக்கும் பக்க வடிவமைப்பை மிக நேர்த்தியாக வடிவமைத்த வடிவமைப்பாளருக்கும் நான் பகிர்ந்துகொண்ட நூல்களின் படைப்பாளிகளுக்கும் கடந்த பதினாறு வாரங்களாக என்னோடு பயணித்த உங்களுக்கும் என் அன்பான நன்றி.



-       நிறைவு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக