வியாழன், 3 அக்டோபர், 2019வாங்க வாசிக்கலாம் (10) – எம். சேகர் 
மக்கள் ஓசை (21-7-19)


வாழ்வியல் வடிவமைப்பின்படி பிறந்து வளர்ந்து பதின்ம வயதில் தொடங்கி மனிதன் வாழும்வரை அவனின் வாழ்நாளின் பெரும்பகுதி காதல் என்ற சக்தியால் இயக்கப்படுகிறது. காதல் தெய்வீகமானது. காதலுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மனித இனம் தோன்றிய அன்றே காதல் உணர்வுகளும் தோன்றியிருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறள்கூட காதல் மென்மையானது. இனிமையானது என்று கூறுகின்றது. இதனை,


மலரினும் மெல்லியது காதல் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்


என்ற குறள்மூலம் விளக்குகிறார் திருவள்ளுவர். காதலின் மென்மையை மனத்தில் கொண்டு அதனை அப்படியே எழுத்து வடிவில் தந்து காதலர்களின் இன்பச் சூழலையோ அல்லது துன்பச் சூழலையோ கவிதைக்குள் கொண்டு வந்து இதயத்தை வருடிக்கொடுக்கும் சொற்களால் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளது இந்த நினைத்துப் பார்க்கிறேன் கவிதைத் தொகுப்பு.
கவியரசு கண்ணதாசனும் தன்னையும் அறியாமல் பொங்கிவரும் கவித்துவத்தின்மூலம் மனிதகுலம் எழுச்சியுற ஞானமுற பல அரிய தத்துவப் பாடல்களை எழுதியவர். இவரும் காதல் இயற்கையானது என்ற உணர்வை முன்வைத்து,


காற்று வந்தால் தலை சாயும் – நாணல்
காதல் வந்தால் தலை சாயும் – நாணம்
ஒருவர் மட்டும் படிப்பது தான் – வேதம்
இருவராகப் படிக்கச் சொல்லும் – காதல்


எனும் தம் வரிகளின் மூலம் பல திரைப்படங்களில் இரண்டு மூன்று மணி நேரம் கதை சொல்லிப்  புரியவைக்கும் புனித உறவின் புரிதலை நோக்கி நான்கே வரிகளில் எழுதி நம்மை நகர்த்திச் செல்கிறார்.


கவிதை எழுதுவதற்கு அவரவர்க்கு அவரவர்க்கான காரணங்கள் இருக்கும். சிலர் தங்களின் மகிழ்ச்சியைக் கவிதையாக்குவார்கள். சிலர் தங்களின் துக்கங்களைக் கவிதையாக்குவார்கள். சிலர் சமூகத்தின் வலிகளையும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் கவிதையாக்குவார்கள். வெகு சிலரோ தங்களின் வாழ்வியல் தேடல்களைக் கவிதையாக்குவார்கள். எது எப்படி இருப்பினும், பொதுஜனப் புத்தியில் மிகவும் இயல்பாக வந்து போகும் காதலைப் பற்றிய பதிவுகளே இந்த நூலிலும் நிறைவாக இருக்கின்றன.


இன்றைய படைப்பாக்க நவீன கவிதைகள் சொற்களின் வழியே முளைத்து அச்சொல்லுக்கு முரணாக வீரிட்டு எழுந்து ஒருவித மௌனத்தையும் அதற்கான பல புரிதல்களையும் நோக்கி வாசகனை நகர்த்திச் செல்வதாக இருக்கும். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் வாசகனுக்கு அத்தகைய சிரமத்தையும் இடைவெளிகளையும் கொடுக்காமல் மிக இயல்பான மொழிநடையில் வாசகனை மிக எளிதாகச் சென்றடையும் வகையில் புனையப்பட்டவையாக இருக்கின்றன. இந்த இயல்பு நிலை கவிதைப் படைப்பு தன்னளவில் ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு அதனை ஒட்டியே பயணித்து வாசகர்களையும் தன்னோடு பயணிக்க வைக்கிறது. காட்டு வெள்ளம்போல் புறப்பட்டு வரும் இத்தகைய படைப்புகளுக்குப்  புதிய நியதிகள் எதுவும் இருக்கப்போவதில்லை. அதனதன் பாதையில் அவை பயணித்துக்கொண்டே இருக்கும்.


படைப்பாளர்கள் அறிமுகம்


எண்பதுகளில் வானம்பாடி இதழில் எழுதத்தொடங்கியவர், நைகல் கார்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அந்தோணி. ஆரம்பத்தில் துணுக்குகள், கேள்விகள் எனத் தொடங்கியவர் பின்னாளில் கதை, கவிதை, கட்டுரை என எழுதத் தொடங்கினார். இதுவரை பல நூறு புதுக்கவிதைகளை நாட்டின் எல்லா வார, மாத, நாளிதழ்களிலும் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதியும் வருகிறார். பல புதுக்கவிதைப் போட்டிகளிலும் பங்குபெற்றுப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.


லீமா பெலாஸ் தோட்டம், சிலிம் ரீவர் என்றவுடன் ஞாபக அலைகளில் வருபவர் எம். ஜெயபாலன். சராசரி வாசகராய் இருந்து கதை, கவிதைகள் எழுதத் தொடங்கி நாடு தழுவிய நிலையில் புகழ் பெற்றவர். தற்போது, காப்பார் வட்டாரத்தில் வசித்து வரும் இவர், பன்னெடுங்காலமாய் புதுக்கவிதைப் படைப்பிலக்கியத்தில் தனக்கெனத் தனியொரு பாணியை அமைத்துக்கொண்டு எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புலனக்குழு ஒன்றில் நாளொரு கவிதை எழுதி பாராட்டைப் பெற்றிருப்பவர்.


விகடகவி, நிழல் தேடும் நெஞ்சம், உலக மகா துரோகி, துரோகி என வாசகர் நெஞ்சங்களில் இடம் பிடித்திருப்பவர் எம். ஆர். துரோகி. கிருஷ்ணன் என்பது இவரது இயற்பெயர் ஆகும். பழகுவதற்கு இனியவரான இவரது கவிதைகள் செல்லமாய்ச் சிணுங்கும். வானம்பாடி, தென்றல், நம் நாடு இதழ்களில் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. நிழல் தேடும் நெஞ்சமான இவரோடு பல நூறு வாசக நெஞ்சங்களே நட்பின் நிழலாய் இருக்கிறார்கள் என்பது நிஜம்.


ஞானப்பிரகாசம் அந்தோணி, எம். ஜெயபாலன் மற்றும் எம். ஆர். துரோகி மூவரும் இணைந்து நமக்கு வழங்கியுள்ள கவிதைத் தொகுப்புத்தான் இந்த நினைத்துப் பார்க்கிறேன். இந்நுலின் கவிதை மொழி இலகுவானது. சிக்கலற்றது. 


அதே சமயத்தில் ஒரே நேர்கோட்டில் பயணித்து நேர்கொண்ட பார்வையுடன் வாழ்வின் சிக்கல்களைக் குறிப்பாக மலேசிய மண்ணின் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பேசுவதாக இருக்கிறது. காதல், காமம், வன்மம் என தமிழ்ச் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் நாம் எவ்வித மனத் தடைகளுமற்று கடந்து செல்ல முடிகிறது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி இக்கவிதைகளை அணுகத் தொடங்கியபோது இப்படைப்பாளர்களுக்கு நாம் வாழும் காலம் வழங்கியிருக்கும் பாடுபொருளை நம்மாலும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.


காதலியின் மடியில்
ஓ வெனக் கதறி அழ வேண்டும்
போல் இருக்கு.......
மனைவி என்பவள்
சாத்தானாக மாறியபோது


என்று முடியும் கவிதை, முரண் உத்திமூலம் ஒரு கவிதைக்கான மொழி அழகை, வடிவ ஒழுங்கை, கவித்துவ அமைதியைக் கொண்டு விளங்குகிறது.


நீ என்னைத் தொட்டுக்
கழுத்தில் கட்டிய தாலி
இன்னும் என் நெஞ்சில் இருக்கு


என்ற வரிகள், ஆணாதிக்கச் சமூகத்தினால் ஆண்டாண்டு காலமாகப் பெண்ணினத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் சுயநலமான விழுமியத்தையும் பெண்ணியம் பேசும் இந்தக் காலத்தில் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாத ஒரு பெண்ணையும் அடையாளம் காட்டுகிறது. இது நிஜம். சமூகத்தில் நாம் அறிந்தும் அறியாமல் இது இப்படித்தான் இருக்கிறது.  


சாமானிய மனிதனின் காதல் உணர்வுகள் மிக மென்மையானவை. அதைச் சொல்லும் கவிதைகளும் அதற்கேற்ப நம் உணர்வுகளைத் தென்றலாய்த் தழுவிச் செல்கின்றன.


நிழலில்கூட
உன் நாமம் இருப்பதால்
என்ற வரிகள்,


நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே


என்ற குறுந்தொகையின் தலைவியின் கூற்றை நினைவுப்படுத்துகிறது. உண்மைக் காதல் தலைவி உள்ளத்தே நிறைந்திருந்தமையால் இவ்வாறு கூறுகிறாள். தலைவனோடு கொண்ட உறவின் பெருமையை நினைத்து அவள் நெஞ்சத்தில் பெரிய நிலவுலகம் உவமையாக நின்றது. உயர்வைக் கூறுமிடத்து வானத்தையும் ஆழத்தையும் கூறுமிடத்து கடல்நீரையும் அவள் உவமையாக்கித் தலைவன்மேல் தான் கொண்ட நட்பை சிறப்படையச் செய்கிறாள்.


நாளை வரும்
நனைந்ந இரவுகள்


எனும் வரிகள் குறியீட்டுப் படிமக் கூறாக அமைந்து அந்த எழுத்திற்கான கவித்துவத்தை வழங்கிச் செல்கின்றன.


உண்மைகளைக் காதலித்தேன்
அவை ஊமைகளாகிவிட்டன


வரிகளில் சமூகச் சிந்தனையுடன்கூடிய வாழ்வியல் சிக்கலையும் காண முடிகிறது. காதலின் உருவத்தைத் தேடும் ஒரு குறியீட்டுக் கவிதை இப்படி முடிகிறது.


உன் உருவத்தைத் தேடித் தேடித்தான்
வாழ்க்கைக்கே வயதாகிறது


தனது, ஒரு தேவதை தூங்குகிறாள் சிறுகதையில் ஆதி. இராஜகுமாரன் காதலைப்பற்றி,


காதலைப்போல் ஒரு மனிதனை அடிமையாக்கும் விலங்கு வேறு எதுவும் இல்லை.
என்று கூறுவார்.

காதலைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் ஒரு பார்வை இருக்கும் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு. நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒரு மாபெரும் தேடலின் சூட்சுமத்தைக் கொண்டுள்ளது. அதனால்தான் இத்தொகுப்பில் ஒரு கவிதையின் வரிகள் இப்படி வந்து விழுகின்றன.


வாழ்க்கையை ஆராய்ந்து பார்
உண்மை விளங்கும்


சமூக அக்கறையுடன் பல வரிகள் இக்கவிதை நூலில் இருக்கின்றன. படைப்பாளனின் வலிகளாகவும் எதிர்பார்ப்புகளாகவும் இயலாமைகளாகவும் இவை அமைந்திருக்கின்றன. வாழும் சூழலும் இங்கு இடர்படும் இடர்களும் அவனைத் தொல்லைப்படுத்தும்போது அவனுக்குள்ளே எழும் எண்ண அலைகள் தான் சார்ந்த சமூகத்தின் பலவீனமான பக்கங்களைக் கண்டறிந்து அதைத் தயக்கமின்றி வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இந்தச் சமூகத்தின்மீது இயல்பாகவே இவர்களுக்கு இருக்கும் ஒரு வித தவிப்பு இந்த வரிகளின் வழி வெளிப்படுகிறது.


எங்கும் துயரம் எதிலும் துயரம்
ஏங்கிக் கொண்டிருந்தால் ஏளனமாகும்
என்னினத்தின் வாழ்வு


இந்த மலேசிய மண் வெறும் துகள்களைக் கொண்டதல்ல. இது பன்னெடுங்காலமாய் தமிழர் என்ற அடையாளத்தின் இருப்பிடமாக இருந்திருக்கிறது என்பதை இங்கிருக்கிற மரபார்ந்த கலாசார வாழ்வின் சூழலையும் பின்னணியையும் கொண்டு நன்கு உணரமுடியும். நான்கு ஐந்து தலைமுறையாய் சிலர் அதையும் தாண்டி இந்நாட்டை வடிவமைத்த ஆதித் தமிழர்களின் அடையாளம் இந்த மண்ணில் வேர்விட்டுக் கிளைத்துப் பரவியிருப்பது அரசியல் சூழலில் மறைக்கப்பட்டிருந்தாலும் மறுக்கப்பட்டிருந்தாலும் நம் ரத்தம் தோய்ந்து சிவந்த மண் சிவந்த மண்தான். அதை யாரும் இங்கு மாற்றிவிட முடியாது. வெட்ட வெட்டத் தளைப்பதுபோல் தமிழர் அடையாளம் இந்நாட்டில் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் வீறுகொண்டு அவ்வப்போது முகம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.


ஆழ்மன உணர்வுகளை உணர்த்தும் வரிகளும் இருண்மை உணர்வோடு இத்தொகுப்பில் ஆங்காங்கே வந்து விழுந்துள்ளதைக் காண முடிகிறது.


ஆழ்மனம் காட்டும் அற்புதம்
அதிர்ச்சியோடு விடிகிறது


ஞாபகம் வருதே எனும் கவிதை நமது பாலிய காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது. தொன்மக் கூறுகளூடனும் சமூக அவலங்களுடனும் ஒரு படைப்பு இப்படி வருகிறது.


மகாபாரதச் சண்டை
இன்றும்
அண்ணன் தம்பி
மாமன் மச்சான்
தலை கொய்த கதைகளாய்.....


இத்தொகுப்பின் படைப்பாளர்கள் அவரவருக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு ஏற்பப் படைப்புருவாக்கங்களைத் தந்திருக்கின்றனர். பழங்காலங்களில் பண்டைய தமிழரது வாழ்வியலை நிலைபடுத்தியே காதல், போர், வீரம், பண்டமாற்றுதல் முறைகள் நடந்ததாகவும் இவைகளை மையப்படுத்தியே பழங்கால நூல்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மையங்களின் அடிப்படையில்தான் சிறிது சிறிதாக மாற்றம் கண்டு இன்றளவும் இலக்கிய உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது.


சமாதிக்குள்
சமாதானம்  ஆகிவிடுகிறான்


என முடியும் ஒரு கவிதை இந்த வாழ்வின் தத்துவத்தையும் இயங்கியலையும் மிக இயல்பான மொழி நடையில் சொல்லிச் செல்கிறது. வாழும் காலத்தில் எதையும் எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் இந்த வாழ்வை அதன் இயல்பில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போராடும் மனிதன் இறுதியில் சமாதானம் ஆவது அவனது சாமாதியில்தான் என்பதைப் பாடுபொருளாகக் கொண்டு இவ்வரிகள் படைக்கப்பட்டுள்ளன.


பெரும்பாலான கவிதைகள் ஆரம்பகால காதல், மன ஈர்ப்பு, இயற்கை, பிரிவு, அன்றாட வாழ்க்கை அனுபவங்கள், மனிதாபிமானம், தோட்டப்புற வாழ்க்கை, புறம்போக்கு நில வாழ்க்கை நகர வாழ்க்கை போன்ற உள்ளடக்க ரீதியில் தனி உணர்வு சார்ந்தவைகளாகவே புனையப்பட்டுள்ளன. ஒரு சில கவிதைகள் இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களின் குரலாகவும் ஒலிக்கின்றன. புதுக்கவிதை வடிவம் சார்ந்த வெளிப்பாட்டை இந்த எழுத்துகளில் ஓரளவு அவதாணிக்க முடிகிறது. இன்றைய நவீன படைப்பாக்கம் வாசிப்பவர்களைத் தொல்லைப்படுத்துவதாகவும் மனத்தில் தைக்கின்றன ஒரு வகையான நிம்மதியின்மை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாகவும் விளங்குகிறது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இத்தகைய தன்மையில் இருந்து விலகி, நம் மனத்தோடு மிக இயல்பாக உரையாடுகின்றன.


இப்படியாக இன்னும் நிறைய சொற்கள் உங்களின் தேடல்களுக்காகக் காத்திருக்கின்றன. புரிதல்கள் எதுவாக இருந்தாலும் இந்த எழுத்துகள் நமக்கான அடையாளங்கள். மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் ஞானப்பிரகாசம் அந்தோணி. எம். ஜெயபாலன், எம். ஆர். துரோகி மூவரும் இணைந்து, நினைத்துப் பார்க்கிறேன் என்ற கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. மூவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.


மென்மையாக மயிலிறகாய் நம்மை வருடிச் செல்லும் எழுத்துகள் நம் இதயத்தை இதமாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. நான் அனுபவித்து ரசித்ததை  நீங்களும் அனுபவிக்க வேண்டும். நீங்களும் ரசிக்க வேண்டும். கவிதைகளை வாசியுங்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த முதல் காதலை  மீண்டும் ஒரு முறை நீங்கள் சுவாசிக்க ஒரு வாய்ப்பும் கிடைக்கலாம்.

- தொடரும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக