புதன், 10 ஜூன், 2020

மரயானை (நாவல்) - சித்துராஜ் பொன்ராஜ்மரயானை – சித்துராஜ் பொன்ராஜ்

அகநெருக்கடிகளும் அதனால் விளையும் மௌனங்களும் நம்மிடையே ஒவ்வொரு நாளும் நிகழ்த்தும் மாற்றங்களும் நாம் அறியாமலேயே நம்மைக் கடந்துபோய்க் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஒரு சூழலில் நாம் வாழும் காலத்தில் நம்மோடு பயணித்தவர்களையும் நம்முடன் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கி உறவாடியவர்களையும்கூட நினைத்துப்பார்க்க முடியாதவர்களாய் வாழ்க்கையின் சுமை நம்மை அழுத்தி அமுக்கிக்கொண்டுபோய்விடுகிறது. இப்படியிருக்க நாம் வாழும் நிலத்தையும் அதைப்பற்றிய விஷயங்களையும் நாம் அடியோடு மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்துபோன அல்லது கவனிக்கத்தக்க பல விஷயங்களை இந்நாவல் சிங்கப்பூரின் பின்புலத்திலிருந்து அலசிப் பார்க்கிறது.

சிங்கப்பூரின் ஒவ்வோர் இடத்திற்கும் தனிப்பட்ட வரலாறும் அடையாளமும் இருக்கிறது. அவ்வகையில் இந்நாவல், சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் நிலத்தின் வரலாற்றையும் அடையாளத்தையும் நம்முன்னே கொண்டுவருகிறது. இன்றைய தலைமுறையினருக்கும் புதிதாக வந்த குடியேறிகளுக்கும் கண்ணில் தெரிவது வெறும் அடுக்குமாடிக் கட்டிடங்களும் உயர்ந்த காண்டோமினியம்களும் புதிது புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பேரங்காடிகளும்தான். ஆனால், இந்தக் கட்டடங்களுக்குக் கீழே அந்தந்தப் பகுதிகளின் வரலாறும் அடையாளங்களும் புதையுண்டு கிடக்கின்றன என்பதை நம்மில் எத்தனைபேர் தெரிந்து வைத்திருக்கிறோம்.  புக்கிட் தீமா சாலையின் பழைய பத்தாங் கட்டையை (இன்று 10 மைல் ஜங்ஸன் இருக்கும் சுற்றுவட்டாரம்) எத்தனைபேர் அறிந்திருக்கிறோம். புக்கிட் பஞ்சாங் வட்டாரத்தின் ஈரச்சந்தை, சின்ஹூவா திரையரங்கம், காவேரி பாட்டியின் தோசைக்கடை, பொன்மணி விலாஸ், துளசிதாஸ் புத்தகக்கடை, தாமோதரன் தையற்கடை என பலவும் இன்றைய அடையாளத்தின் இல்லாமைகளை நாவல் அடையாளப்படுத்துகிறது.
     
சுகவனம் என்ற மையக் கதாபாத்திரத்தின் முன்னுக்கும் பின்னுக்கும் கலைந்த நினைவுகளைக் கொண்ட நாவலின் கதையாடல் சமகாலத்திலும் பின்னோக்கியும் நம்மை நகர்த்திக்கொண்டு செல்கிறது. சுகவனத்தின் அப்பா ஆறுமுகம், அம்மா பொன்னம்மாள், அக்கா தனம், கணவர் குணசேகரன், மனைவி ஜெயக்கொடி, மகன் மோகன், மருமகள் பாமா, மகள் நீலா மருமகன் மால்கம் (நைஜீரியன்), பேரன் ராகேஷ், பேத்தி ஜெசிந்தா, யொங்பேங் மரைக்கான் பாய், டிரைவர் ரங்கநாதன், சித்தர் பாலு சாமி, கெங்கம்மா, உயர்நிலைப்பள்ளி தோழர்கள் செபாஸ்டியன், சின்னராசு, ஜெயக்கொடியின் அப்பா கதிரேசன், பாமாவின் அப்பா சிவபாலன், புக்கிட் பாஞ்சாங் துப்புரவுத் தொழிலாளி யூனூஸ் முகமது ஆகியரோடு நாவலில் முக்கியத் திருப்பத்தைத் தரும் ஐஸ் விற்கும் சீனக்கிழவன் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தனித்த பண்புகளுடனும் அடையாளங்களுடனும் நமக்கு அறிமுகமாகி நம்மை நாவலோடு பயணிக்க மட்டும் வைக்காமல் நாவலுக்குள்ளே நம்மை இழுத்துக்கொள்கின்றன.

இனவரைவியல் எனும் முறையியல் மானுடவியலின் ஒரு பிரிவாகக் கூறப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் புவிச்சூழல், பண்பாட்டு மயமாகும் காரணிகள், வாழ்வியல் பகுப்புமுறைகள், சமூகங்களின் வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், சமூகம் மற்றும் தனிப்பட்ட மனிதனின் உளவியல் பாங்குகள் போன்ற இன்னும் பலவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பட்ட ஒரு மானிடக் குழுவில் அல்லது ஒரு வட்டாரத்தில் காணப்படும் அனைத்து வகையான மரபுகள் பற்றி மேற்கொள்ளப்படும் விளக்கமுறை ஆய்வே இனவரைவியல் ஆகும்.’என்று புருன்வாண்ட் ஹாரோல்ட் குறிப்பிடுகிறர் (திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும், ந.இரத்தினக்குமார், ப. 152).

ஓர் இனவரைவியல் ஆய்வாளனுக்குக் கிடைக்காத வாய்ப்பு இனவரைவியல் புனைகதையாளருக்குக் கிடைக்கிறது என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன் (இனவரைவியலும் தமிழ் நாவலும், ப.38). இனவரைவியலாளர் ஒதுக்கக்கூடிய அக உணர்வுகளின் மோதல்கள், கோபம், வெறுப்பு, தனிமை, மௌனம் போன்றவற்றை இனவரைவியல் நாவலாசிரியர் ஒதுக்கவேண்டியதில்லை. இத்தகைய வாய்ப்பினை மிகவும் திறமையாக, அழகாகப் பயன்படுத்தி சுவாரஸ்யம் குறையாமல் இந்நாவலைப் படைத்திருக்கிறார் சித்துராஜ். சென்ற தலைமுறையினருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்குமான  நெருக்கங்களையும் இடைவெளிகளையும் நாவல் மிகவும் இயல்பாகப் பகுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் ஓர் எச்சரிக்கை மணியாகவும் புனையப்பட்டுள்ளது. ஜோகூரின் லாபிஸ், யொங்பேங், கெங்கம்மா சமாதி, மலேசிய சாலைகளில் குறிப்பாக மெர்சிங் சாலையில் நிகழ்ந்த அமானுஷியங்கள், சித்தர்கள், சிங்கப்பூரின் அறுபதுகளின் வாழ்க்கைச்சூழல், அன்றைய புக்கிட் பாஞ்சாங் அதன் படிப்படியான வளர்ச்சி என அனைத்தும் கதையாடலின் ஊடே அடையாளப்படுத்தப்படுகிறது.

296 பக்கங்கள் எனப் பார்த்ததும் ஏற்பட்ட பிரமிப்பு, நாவலை வாசிக்க வாசிக்க கடைசி அத்தியாயம் அதற்குள் வந்துவிட்டதே என எண்ண வைத்துவிடுகிறது. நாவலை வாசிக்கும்போதே சுகவனத்திற்கென ஒரு இமேஜ் நம் மனத்துக்குள் வந்து விடுகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரங்களின் விவரணைகள் மிகவும் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியும் படிமமாக நம் கண் முன்னே நிகழ்வது போலவே இருக்கிறது. அந்த அளவிற்கு நாவலின் கட்டமைப்பு சிறந்து விளங்குகிறது.

சிங்கப்பூருக்கென இருக்கும் தனித்த அடையாளங்களை இந்நாவலின்மூலம் அடையாளப்படுத்திய நாவலாசிரியர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். இரண்டு நாட்களாக மரயானையில் ஊர்வலம் நல்லதொரு அனுபவம். அதற்கு உங்களுக்கு என் நன்றி.
மரயானை எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம்.
நகர்ந்துகிட்டே நகராம இரு
அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக