திங்கள், 30 ஜூலை, 2018

உப்பு நாய்கள் – லட்சுமி சரவணகுமார் - ஒரு வாசிப்பனுபவம்


உப்பு நாய்கள் – லட்சுமி சரவணகுமார்
சமூகத்தின் ஓர் அங்கமாய், அதனோடு இயைந்தும் முரண்பட்டும் மோதியும் இசைந்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்றவன் மனிதன். மனித குலத்தில் தானும் ஒருவனாக வாழும் அவன், வாழ்க்கை நடைமுறைகளின் காரணமாக அமையும் உணர்வுநிலையின் ஒரு வெளிப்பாடாக இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான். அவனிலிருந்து தோன்றுகின்ற இலக்கியத்திலே அவன் இருக்கின்றான். அவன் போன்ற பிறர் இருக்கிறார்கள். அவனைப்போன்ற பிறர் அதனை எதிர்கொள்கிறார்கள். எனவே, இலக்கியமானது அதன் தோற்றம், அதன் பொருள், அதன் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதகுலத் தொடர்புடையதாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார் தி.சு.நடராசன்.

லட்சுமி சரவணண் எழுதியுள்ள, உப்பு நாய்கள் என்ற நாவலை மேற்கூறப்பட்ட கருத்துப்பார்வையோடு எனது வாசிப்பனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இது.

சமுதாய வரலாற்று மரபின் ஒரு காலத்தில் தோன்றுகின்ற குறிப்பிட்ட ஒரு படைப்பு, அப்படைப்பாளியின் அனுபவ உணர்வுகளையும் அவன் சார்ந்த வாழ்வியல் சூழலையும் பெற்று வருகின்றபோது, அன்றைய சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் படைப்பாளியின் படைப்பாற்றலுக்கு ஏற்பவே அப்படைப்பின் வடிவமைப்பிலும் கதை உருவாக்கத்திலும் பாத்திரக் கட்டமைப்புகளிலும் சொற்பயன்பாட்டு வழமைகளிலும் ஒரு குறிப்பிட்ட தன்மைகளையும் போக்குகளையும் பெற்றுவருவது இயல்பானதே. இவ்வகையில், இந்த உப்பு நாய்கள் நாவல் நவீன வாழ்வின் பரிமாணங்களைக் குற்றம், உடலரசியல் பின்புலத்தை மையமாகக் கொண்டு பெரும் உருவாக்கத்துடன் புனையப்பட்டுள்ளது என்று சொல்வதைவிட அந்த மனிதர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிழலாடவிட்டிருக்கிறது என்று கூறுவதே சிறப்பானதாக இருக்கும். மேலும், இந்நாவலை வாசிக்கும்போது இது ஒரு திரைப்படம்போல நம் கண்முன்னே காட்சிப்படிமமாக விரிந்துசெல்வதையும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. நல்லதொரு திரைக்கதை அமைப்பைப்போன்ற நாவலின் வடிவமும் கதை சொல்லும் முறைமையும் வாசிப்பவர்களின் கவனத்தைத் தன் பக்கம் எளிதில் ஈர்த்திடும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

சம்பத், செல்வி இரு முக்கிய பாத்திரக் கட்டமைப்புகளின்மூலம் கதை பயணித்து இரண்டாம் பகுதியில் ஆதம்மா, ஷிவானி, செல்வி, சம்பத் என முதன்மைப் பாத்திரப்  படைப்புகளோடும்  இந்த முதன்மை பாத்திரங்களின்மூலம் அறிமுகப்படுத்தப்படும் துணை கதாபாத்திரப் படைப்புகளான தவுடு, இவாஞ்சலின் கிளிஸ்டி, பாதிரியார், இராமலிங்க உடையார், சுந்தர், பாஸ்கர், எருமை சுந்தரவள்ளி, போலி டாக்டர் முத்துலெட்சுமி, மணி, சம்பத் அம்மா, நாய்க்கறி கோபால், சோஃபி, மகேஸ், ஜாஃபார், சுந்தரி, ஆர்த்தி, சேட், சேட்டன், ஆதம்மாவின் அம்மா, அப்பா,  நிஜ வாழ்வின் மறுபிரதிகளாகவே இந்நாவலில் முழுமையாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது கதையாடல் உத்திக்கும் கதை விவரிப்புக்கும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.

பொட்டலங்களைக் கைமாற்றும் நுண்ணியத் திறன்கொண்டு நிழலோடு நிழலாக மறையும் சம்பத், மற்றவர்களின் பொருளை (பிக்பாக்கெட்) மிகவும் நளினமாகக் களவாடும் விரல்களைக்கொண்ட செல்வி, பாம்புகளோடு மிகவும் இயல்பாய் விளையாடும் சிறுமி ஆதம்மா என முக்கிய கதாபாத்திரப் படைப்புகளும் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைக்களமும் நாவலின் கதை விரிவுக்குத் துணையாக இருக்கின்றன.

ஆர்மீனியச் சர்ச், இரயில்வே ஸ்டேசன்கள், சிறைச்சாலைகள், கடற்கரை எனவும் அவை சார்ந்த கதைப்பகுதிகளில் வாழும் கதாபாத்திரங்களோடு நாமும் பல வாழ்வியல் இடங்களின் பின்னணியோடு சென்னை, கும்பகோணம், காஞ்சி, மதுரை, திருச்செந்தூர் எனப் பல நகர்களையும் அதன் தெருக்களையும் சுற்றிவருகிறோம். பல குற்றப் புலன்களுக்குப்  பின்னணியில் நிழலாக இருக்கும் ஆர்மினியச் சர்ச், அதன் பாதிரியார்கள், கன்னிகாஸ்திரிகள் என இவர்களின் செயல்பாடுகள், சமயம் சார்ந்த மற்ற அமைப்புகளின் நிலைப்பாடுகளையும் இந்நாவல் நமக்குள் ஒரு மறுமதிப்பீட்டுக்கு இட்டுச்செல்வதைத் தவிர்ப்பதற்கில்லை.

யதார்த்த வாழ்வின் உதிரிகளாக வரும் இந்நாவலின் கதாபாத்திரங்கள், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய பாத்திர வடிவத்தின் சிற்பங்கள். விளிம்புநிலை மனிதர்களோடு நம் உறவை வலுப்படுத்தும் பாத்திரப்படைப்பும் அதன் கனமும் அதன் உண்மைத்தன்மையும் நேர்மையான, இருப்பதை இருப்பதுபோலவே காட்டும் புனைவுத் திறனும் இந்நாவலை நமக்குள் பல அதிர்ச்சியூட்டும் தன்மைகளையும் அவ்வப்போது  ஏற்படுத்திவிடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.  நாவலாசிரியர், வாழ்க்கையையும் அனுபவங்களையும்  மற்றும் சுற்றியிருப்பவற்றையும் மிகவும் துல்லியமான விவரங்களுடன் இயல்பு நவிற்சியாகச் சித்தரித்தும் அவற்றைக் கதைப்படுத்தும் செய்தியோடு இன்று இறுகிக் கிடக்கும் வாழிடச் சூழல், சாதியமைப்பு, வறுமை, சுரண்டல், வாழ்வாதாரப் போராட்டங்கள், உடல் தேவைகளின் அபத்தம் அதன் குரூரம், சுயநல வன்மம், திருமண உறவுகள், காமம், கோபதாபங்களுக்கிடையே மனித நேய உணர்வின் நெகிழ்ச்சிகள், முரண்கள், மாற்றங்கள் என இழையோட விட்டிருப்பது இச்சமூகத்தில் நாம் காணாமல் கடந்துசெல்லும் சில ஆத்மாக்களின் உயிர்ப்புகளாக இந்நாவலில் நடமாடவிட்டுள்ளார்.

ஓவியம், நாடகம், திரைவெளி ஆகிய மூன்றும் பெண்ணின் உடலாற்றலைப் பிரபஞ்சத்தோடு இணைத்துக் காட்டுகின்றன. இதைச் சூழியற் பெண்ணியம் என்கின்றனர் திறனாய்வாளர்கள். மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம், அழிக்கப்படாத காடுகளைப்போல் கம்பீரம் வீசுகிறது பெண்ணென்னும் பேரிருப்பு இயற்கையை மையமாகக் கொண்டே இயங்கிவருவதையே சுகிர்தராணி கவிதையொன்று இப்படிச் சுட்டுகிறது. பெண், இயற்கை இரண்டின் அழிவுகளுமே பிரபஞ்சத்தின் அழிவுகள் எனும் குறியீட்டு அர்த்தத்தை இன்றைய பல படைப்புகள் உணர்த்திவருகின்றன. பெண்ணுடல், ஆண்களின் வேட்டைக்களமாக ஆகிவிட்டதை இந்நாவல் பல இடங்களில் நிறுவியுள்ளது இன்றைய வாழ்வின் அபத்தமான சூழலாகும். இதற்கு முரணாக ஆதம்மாவின் அம்மாவின்மூலம்


ஒரு ஆணின் துணையின்றி வாழ்வதென்ன இவ்வளவு சிரமமா? என்ன இம்சை என்றாலும் ஆண்களை சகித்துகொண்டுதான் வாழவேண்டுமென்றால் என்ன வாழ்க்கை இது’, இந்தக் கூற்றின்மூலம் பெண்ணியச் சிந்தனையையும் தூண்டும் இந்நாவல், ஆணின் இச்சைக்கு மிகவும் எளிதில் இயைந்துபோகும் பெண் கதாபாத்திரப் படைப்புகளோடு பல களங்களிலும் மீண்டும் மீண்டும் பதிவாவது, பெண்களின்மேல் உள்ள சமூக மதிப்பீட்டைக் கீழிறக்கிப் பார்ப்பதாகவே இருக்கிறது. இது அந்தச் சூழலில் இயல்பான வாழ்க்கையின் பதிவாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பழக்கம் வழக்கமாகிப் பின் வழமையாகும்போது பின்னாளில் இங்கு எதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். ஏனென்றால், சமூக மதிப்பு அல்லது சமூக விழுமியம் இந்தச் சமூக உறவுகளின் பிணைப்பிலே, சமூக நடப்பின் காரணமாகத் தோன்றுகிற சமூக உணர்வின் வடிவங்களே ஆகும். காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மனித குழுக்களுக்குக் குழுக்கள் என ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதே இந்த வாழ்வின் நியதியாகும். எடுத்துக்காட்டாக கற்பு எனும் மதிப்பு காலந்தோறும் பல நிலைகளிலும் வெவ்வேறு வழக்காறுகளைப் பெற்று வந்துள்ளதையும் இங்குக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். தொல்காப்பியர்க் காலம், இளங்கோ, கம்பன், நீலகேசி, குண்டலகேசி, பெரிய புராணம் என இப்படிப் பலவகையில் இக்கருத்து நிலையின் வேறுபட்ட வளர்ச்சிப் போக்குகளைக் காணமுடியும். மேலும், இன்று காதலைத் தொலைத்துவிட்டு, காமம் மட்டுமே வெகு முன்னுக்குச் சென்றுகொண்டிருப்பதையும் பரவலாகக் காணமுடிகிறது.

ஆணுடன் ஆண் புணர்ச்சிக் கொள்வதும் பெண்ணுடன் பெண்ணும் புணர்ச்சிக்கொள்வதுமான வாழ்க்கையின் அபத்தங்களையும் மிகவும் துல்லியமாகப் பதிவு செய்துள்ள இந்நாவலில் பல வழக்காறுகள் (நாம் பேசுவதற்கும் கேட்பதற்கும் கூச்சப்படும் வார்த்தைகள்) பயன்படுத்தப்பட்டிருப்பது அங்குள்ள வாழ்வியல் சூழலில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இன்னமும் பொதுவழக்குப் பேச்சிலும் எழுத்திலும் ஒரு வகை கண்ணியத்தைக் கடைப்பிடித்து வருகிறோம் என்பதால் இதுபோன்ற வழக்காறுகளைக் கடந்துசெல்வது கடினமான ஒன்றாகவும் நமது வாழ்வியல் சூழலுக்கு ஒவ்வாததாகவும் இருக்கிறது. இத்தகைய வழக்காறுகளையும் உடல் புணர்ச்சிக்கான விரிவான காட்சிப்படுத்துதலும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நாவல் இங்கும் எல்லோராலும் வாசிக்கப்படும் ஒரு பிரதியாக இருந்திருக்கும்.

சிங்கப்பூரிலும் இப்படியானதொரு வாழ்க்கைச்சூழலில் யாரும் வாழ்கிறார்களா? நாம்தான் இதைக் கவனிக்காமல் புறந்தள்ளியிருக்கிறோமா? இல்லை, இதுபோன்ற வாழ்க்கையின் பதிவுகளை நோக்கி யாரும் தம் எழுத்துகளை நகர்த்தவில்லையா என்ற கேள்வி இந்நாவலை வாசிக்கும்போது எனக்குள் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை. சிங்கையின் சித்துராஜ் பொன்ராஜ் தனது, விளம்பர நீளத்தில் ஒரு மரணம் நாவலில் சிங்கப்பூரில் வாழும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையின் சில நிஜமுகங்களை அந்நாவலில் புனைவாக்கியிருப்பார். அதுபோல, சிங்கையின் சூர்ய ரத்னா தனது, பரமபதம் என்ற நாவலில் சிங்கப்பூரின் இரவின் பப் வாழ்க்கையின் பிரதிகளை மையப்படுத்தித் தன் நாவலைப் படைத்திருப்பார். இவ்விரண்டு நாவல்களையும் வாசிக்கும்போது நமக்குள் எவ்வித முகச் சுணக்கமும் ஏற்படாதவாறு சொற்பயன்பாடுகளும் காட்சி விவரிப்புகளும் ஆபாசம், அருவருப்பு இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். மலேசியாவின் மகாத்மன் கதைகளிலும் உப்பு நாய்கள் போன்ற பாத்திரப் புனைவுகளைக் காண முடிகிறது.

நிறைவாக, ஒரு சில வழக்காறுகளையும் உடலுறவுச் சித்தரிப்புகளையும் தவிர்த்து, நல்லதொரு வாழ்க்கையனுபவத்தைக் கொடுத்திருக்கும் லட்சுமி சரவணக்குமாரின், உப்பு நாய்கள்’, புனிதம் என்று ஒரு சாரார் அடைத்து வைத்திருக்கும் ஒன்றின்மேல் கட்டவிழ்ப்பு நடத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்கிறோம். அவ்வகையில் நிஜவாழ்வின் பிம்பங்களாக இந்நாவலைப் பார்ப்பதில் தவறேதுமில்லை.

திரு. லட்சுமி சரவணக்குமாருக்கு அன்பான வாழ்த்துகள்.
அன்புடன்,
எம்.சேகர்

மாதொருபாகன் – பெருமாள் முருகன் (ஒரு வாசிப்பனுபவம்)


மாதொருபாகன் – பெருமாள் முருகன்
(ஒரு வாசிப்பனுபவம்)

தமிழகத்தின் நிலப்பரப்புகளில் எங்கோ ஒரு பகுதியில் உள்ள தமிழ் இனக்குழுக்களின் வாழ்வையும் எளிய மனிதர்களின் ஆசைகளையும் கனவுகளையும் தொன்மங்களையும் குலமரபுச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பூர்வகுடிகளின் கதைகளையும் அவர்களிடையே கனன்று கவியும் மன உணர்வுகளையும் மிகவும் அழகாகவும் அதே சமயத்தில் மிகவும் நெகிழ்ச்சியாகவும் ஆவணப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர் பெருமாள் முருகன். பலதரப்பட்ட மனித மனங்களின் பல்முரண் உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் பதிவு செய்திருப்பது வாசிப்பின் படிநிலைகளை வாசகர்களிடையே பன்முகப்படுத்தியிருப்பது இந்நாவலின் தனித்துவம்.

நாட்டுப்புற வழக்காறுகளும் தொன்று தொட்டு நீண்ட பாரம்பரியத்தைக்கொண்ட பழங்கதைகளும் (ஆதிதெய்வம் தேவாத்தா, குலதெய்வம் கூளியாள், ஆணாகவும் பெண்ணாகவும் பார்ப்பவர் பார்வைக்கேற்பத் தெரியும் மாச்சாமி, தாண்டியான் கோயில், பிள்ளை தரும் மொட்டைக்கல், எழுபது சத்தியப்படிகள், காட்டூர் நோம்பி, கரடேறும் இரவு) கதையின் பின்புலமாகத் தொன்ம நம்பிக்கைகளின் வடிவில் பின்னப்பட்டுள்ளது தமிழக மண்வாசனையற்ற என்னைப் போன்றவர்களுக்கு ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் தருவதாக அமைந்திருக்கிறது.

காளி, பொன்னாள், முத்து, சித்தப்பா நல்லையா என முக்கிய கதாபாத்திரங்களின் தனித்தன்மைகள் நாவலின் பல இடங்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. காளியின் அம்மா சீராயி, பாட்டி, மற்றும் அவர்களின் கதைகளில் வரும் தாத்தா நாச்சி, சடையப்பன் என கதையின் மையத்துக்கேற்ற கதாபாத்திர வார்ப்புகளுடன் வளர்ச்சிப்பெற்றுள்ளன. இதைத் தவிர்த்து கதையை மையத்தை நோக்கி நகர்த்துவதற்காக அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் நாவலுக்கு வலுவான தாக்கத்தைத் தந்துள்ளன.

காளியின் பாத்திரப்படைப்பில் இயற்கையோடு இயைந்து வாழும் மனப்போக்குள்ள ஓர் ஆத்மாவைக் காண முடிகிறது. அந்த வானத்தையும் அந்த இரவின் நட்சத்திரங்களையும் பூவரசம் மரமும் அதன் கிளைகளும் பூக்களும் அவன் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய் என அனைத்தையும் நேசிப்பதைக் காண முடிகிறது. இதற்கெல்லாம் மேலாக, பொன்னாள்மேல் அவன் கொண்டுள்ள அன்பு அலாதியானது. அவளைத் தன்னில் பாதியாகப் பார்க்கிறான் அவன். பன்னிரண்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அவன் மனம் ஒப்பவில்லை. தான் இன்னொரு திருமணம் செய்துகொண்டால் பொன்னாள் என்னாவாள்? என்ற கேள்விக்குப் பதில் தெரிந்திருந்ததால், அவன் அம்மாவும் மற்றவரும் பல தடவை வற்புறுத்திக் கூறினாலும் அவன் ஏற்றுக்கொள்ளாமல் குழந்தை இல்லாவிட்டால் என்ன? இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற எண்ணத்தில் அவளுடன் மிகவும் அன்பாக இருக்கிறான்.

பொன்னாள் அவனுக்காகத் தான் எதையும் செய்யும் பண்புடையவளாய் இருக்கிறாள். அவளை வறடி என்று பலரும் தூற்றும்போதும் அவமானப்படுத்தி ஒதுக்கிவைத்த போதும் அவள் பெரும் மன உளைச்சலுக்கு ஆனாலும், காளியை மற்றவர் யாரும் வறடன் என்று கேவலப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாள். கிளி ஜோசியம் முதல் குறி சொல்பவர்வரை அவர்கள் சொல்லும் அனைத்து பரிகாரங்களையும் ஒன்றுவிடாமல் செய்து முடித்துவிடுவாள். ஒவ்வொரு முறையும் அப்படி செய்துவிட்டு விலக்குத் தள்ளிப்போகுமா எனக் காத்திருந்து ஏமாந்து போவாள். பன்னிரண்டு வருடங்களாகத் தொடரும் ஏமாற்றம் இது. உயிரைப் பணயம் வைத்து, மொட்டைக் கல்லைக்கூடச் சுற்றிவந்து விட்டாள். அவள் அம்மாவும் மாமியாரும் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்கியவள், உறவுகளின் சூழ்ச்சிக்குழிக்குள் வீழ்ந்து விடுகிறாள். அதுவும் காளி ஒத்துக்கொண்டான் என அவள் அண்ணன் முத்து சொன்னபிறகே அவளும் காட்டூர் பெருநோம்பிக்கு வர சம்மதிக்கிறாள்.

முத்து காளியின் சிறுவயது நட்பில் வளர்ந்து தன் தங்கையைக் காளி விரும்புகிறான் எனத் தெரிந்தவுடன் பெற்றோரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்துவைக்கிறான். காளியின்மீதும் தன் தங்கையின்மீதும் அதீத அன்பு கொண்டுள்ளதால் அவர்கள் இருவரும் படும் வேதனைகளுக்கு ஒரு நல்ல பலன் இதன்மூலம் கிடைத்தால் இருவரும் மகிழ்ந்துபோவார்கள் என நம்புகிறான். அதற்காகத் தன் பெற்றோருடனும் காளியின் அம்மாவுடனும் சேர்ந்து பொன்னாளைப் பெருநோம்பிக்கு வரவைக்க காய் நகர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் எவ்விதச் சந்தேகமும் வராமல் பார்த்துக்கொள்கிறான்.

காளி – முத்து இருவரின் நட்பின் வாசம் அவர்களின் சிறுவயது அனுபவம் முதல் இன்றைய அனுபவம் வரை கதை நெடுக அவ்வப்போது வந்து நம்மைப் பரவசப்படுத்துகிறது. அவர்களின் மகிழ்வான அந்தத் தருணங்களை நாவலாசிரியர் இப்படிப் பதிவு செய்கிறார்.

அந்த வயதின் மனத்தை இழந்துபோனபின் அவையெல்லாம் அர்த்தமற்றவை என மூளை முடிவுசெய்து எல்லாவற்றையும் அழித்திருக்கக்கூடும். ஆனால், அந்த சந்தோச உணர்வை ஒன்றும் செய்ய முடியவில்லை. பெருவெளியாக விரிந்து கிடக்கிறது அது.

இவர்களின் பால்ய அனுபவங்கள் நம்முடைய வாழ்க்கையையும் பின்னோக்கி நகர்த்திப் பார்க்கின்றன. வண்ணதாசன், அந்தப் பன்னீர்மரம் இப்போது இல்லை என்ற கதையில்

நினைப்பு மட்டுமே வாழ்வில் அழகாக மிஞ்சும்போல இருக்கிறது

என்பார்.
அந்தந்தக் காலத்தில் அது அது நடப்பது இயல்பானது என்றாலும், ஒரு நாள் என்றாவது ஒரு நாள் அந்த நினைப்பு வரும்போது வாழ்வின் இன்பதுன்பம் இரண்டும் வெவ்வேறு வெளிகளில் நின்றுகொண்டு நமக்கான உணர்வலைகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. இந்நாவலும் அப்படித்தான். மனித மனத்தின் சுயம்புகளை அவரவர் சூழலுக்கேற்ப மிகவும் இயல்பாகப் பதிவு செய்துள்ளது.

எத்தனை வருஷக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்களே வாய்க்காமல் உள்ளே மூடிக்கிடக்கும் முகங்கள் எத்தனையோ வெளிப்படாமலேயே புதைந்துபோய் விடுகின்றன.

மனிதன் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு தன் முகத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் அவனின் நிஜ முகம் அவனுக்கே மறைந்துபோகிறது. நாளடைவில் அதனுள் அவனே தொலைந்தும் போகிறான்.

இந்நாவலில் வரும் பேச்சு வழக்காறுகள் பல தலைமுறையாகத் தொடர்பவையாக இருக்கின்றன. காடு, தொண்டுப்பட்டி, மண்டி, நோம்பி, பெருநோம்பி, சாமி கரடிறங்கி கரடேறுதல் என அவர்களின்  வாழ்வியல் மண்டலத்தைப் பின்னிப் பிணைத்தவையாகவும் அன்றைய பண்பாட்டின் அசைவாக்கங்களாகவும் இருக்கின்றன. கதைக்குத் தேவையான பட்சத்தில் அவ்வப்போது சில இடக்கர் சொற்கள் பேச்சினூடே வந்து விழுந்துவிடுவதையும் தவிர்ப்பதற்கில்லை. அவற்றைக் கடக்கும்போது மனத்தை நெருடினாலும், கதைக்கு இயல்பான வழக்காறுகளாக இருப்பதால் சமாதானத்துடன் கடந்து செல்ல முடிகிறது. ஆனால், எத்தனை பேருக்கு இப்படிக் கடந்து செல்ல இயலும் என்பதே இங்குக் கேள்வியாக இருக்கிறது. ஆனால், தனது முன்னுரையில் நாவலாசிரியர், இதை வாசிப்போரில் சிலர் அசௌகரியாங்களை உணர்ந்தால் வாசிப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம் எனக் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

பெருநோம்பி அன்னைக்கு காலடி எடுத்து வைக்கற ஆம்பளைங்க எல்லாரும் சாமிதான். கொடுக்கறது சாமிதான். சாமியா நெனச்சுக்கிட்டாப் பிரச்சினை ஒன்னுமில்ல. எந்தச் சாமி எந்த மூஞ்சியோட வரும்னு ஆருக்குத் தெரியும். மூஞ்சி தெரியாத கொடுத்திட்டுப் போறதுதான் சாமி

காளியின் அம்மா அவனுடன் பேசும் இந்தப் பேச்சு, இதை ஒரு தொன்மத்தின் வழமையாகத்தான் அவர்கள் அணுகுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. குழந்தை பிறப்பதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு வழமை வழக்கிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றால், அவ்வளவு எளிதில் சுலபமாக நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. நம் சமூகத்தில் அன்று மட்டுமல்ல, இன்றும்கூட பொது இடங்களில் நாங்களும் மனிதர்கள்தான் என்று காட்டிக்கொள்ளத் தம்பதியினருக்குக் குழந்தை பிறப்பு அவசியமாக இருக்கிறது. நாலு இடத்திற்குச் சென்றுவர அவர்களுக்குக் குழந்தை பிறப்பு அவசியமாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் பல நவீன சிகிச்சைகள்மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனைத்து சாத்தியக்கூறுகளும் நம்மிடையே இருக்கின்றன. ஆனால், அன்று நம்பிக்கைகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பரிகாரங்களும் மட்டுமே. இந்தப் புரிதல் இருந்தால் இந்நாவல் நமக்கும் பிடிக்கும். நாவலின் கதாபாத்திர வாழ்க்கையின் யதார்த்தங்களோடு நம்மால் பயணிக்க முடியும்.

நாவலின் எளிய நடையும்  அழகியக் காட்சி விவரிப்புகளும் உணர்ச்சிகளின் ஏந்தல்களும் தொன்மங்களின் முரண்களும் நம்மை இந்நாவலுக்குள் ஆர்வத்தோடு பயணிக்க வைக்கின்றன. நல்லையா சித்தப்பாவின்மூலம் இந்த வாழ்க்கைக்கான அவரின் வித்தியாசமான தரிசனத்தைப் பதிவுசெய்துள்ளது இந்நாவல்.

நமது வாசிப்புத் தளத்தை இன்னொரு வெளியில் நிறைத்திருக்கிற நாவலாசிரியர் திரு. பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்.

அன்புடன்,
எம். சேகர்.


வியாழன், 12 ஜூலை, 2018

விளம்பர நீளத்தில் ஒரு மரணம் – சித்துராஜ் பொன்ராஜ்
விளம்பர நீளத்தில் ஒரு மரணம் – சித்துராஜ் பொன்ராஜ்


பல ஆண்டுகளாக சித்துராஜ் பொன்ராஜ் தொடர்ச்சியாக உருவாக்கி முன்னெடுத்துவரும் தனித்தன்மை கொண்ட எழுத்து முறையின் சமீபத்திய சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக, விளம்பர நீளத்தில் ஒரு மரணம் என்ற நாவலைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நாவலின் தலைப்புக்குக்கீழ், முப்பது அத்தியாயங்களில் ஒரு நீதிக் கதை என்ற ஒரு சிறு குறிப்பும் அடிக்கோடிடப்பபட்டுள்ளது.


தஸ்தயேவ்ஸ்கி எப்போதும் புறவயமான யதார்த்தங்களில் தன் படைப்பை ஊன்றுவதில்லை. அவர் கதைகளில் ஒவ்வொரு கணமும் அகத்தின் தன்னிச்சையான நகர்வை காட்டக்கூடியதாகவே இருக்கிறது. அல்பேர் காம்யூ, மரணம் அதுவரை இல்லாத ஒரு அர்த்தத்தை வாழ்க்கைக்குக் கொடுக்கிறது என்கிறார் (புதிய காலம், ஜெயமோகன்). தமிழில் பல நாவல்கள் இத்தகையைப் பார்வைகளின் நீட்சியாக அவ்வப்போது புனையப்பட்டு நம் வாசிப்புக்கு வருகின்றன. குறிப்பாக, சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் மரணமடைந்த ஒரு மனிதனுக்குள் ஊர்ந்து சென்று, அவனுக்குள் மூழ்கி, அவனைப்பற்றிய ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்வதுபோல் இறப்பிற்குப் பின்னர் பேராசிரியர் மிட்சுயீ வாட்டாதாவைப் பற்றியும் அவன் சார்ந்த மனிதர்கள் சூழல் பற்றியும் பல்வேறு கோணங்களிலும் பாத்திரப் படைப்புகளிலும் மெல்ல மெல்ல நகர்ந்து தனிமனித ஆழ்மனம் நிகழ்த்தும் மனோவியல் குரூரங்களையும் தனிமனித அகப் பிரச்சினைகளையும் தன்னகத்தே கொண்டு முக்கியமாக வாட்டதாவின் மரணத்தைப் பற்றிய சிக்கலுடனும் அதற்கான காரணத்தைக் கண்டடையும் பல்நோக்குப் போக்கிலான நடைச்சித்திரமாக இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது.


இந்நாவலின் கதை கட்டுமானம் பிரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜாக் டெரிடாவின் பின்கட்டமைப்பு வாதத்தைப் பற்றிய வரிகளிலிருந்து ஒவ்வோர் அத்தியாயத்தின் முன்னும் எடுத்தாளப்பட்டுள்ள சொல்முறை தமிழ் நாவலுக்குப் புதிது. நவீன வாழ்வியல் சிக்கல்களை இத்தனை நவீனமாக முன்னுரைத்திருப்பதும் பாத்திரப் படைப்பில் புதியதோர் அணுகுமுறையைப் பின்பற்றி கதையை இல்லை இல்லை தனிமனித ஆழ்மன உணர்வு பேதங்களை நாடு, இனம், மொழி, சமயம், மரபு, பண்பாடு என இத்தனையையும் கடந்து, இவ்வளவு நுட்பமாகத் துல்லியமாகச் சொல்லிச் செல்வது தமிழ் நாவல் நடைக்குப் புதியது. சிங்கப்பூர்ப் படைப்பாளரின் படைப்பு இது என்பதுதான் இங்கு நமக்குக் கூடுதல் மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியவாதிகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் நாவல் இதுவென்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் தாங்களாகவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் தங்களைப் பற்றி நம்முடன் உறவாடுவது போன்ற பாத்திர வடிவ அமைப்பு இந்நாவலுக்குத் தனிச்சிறப்பைக் கொடுத்துள்ளது. இது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாம் கடந்துசெல்ல வாய்ப்பளிக்கிறது. ஒவ்வொரு மனமும் சுதந்திரமாகத் தன் கருத்தப் பதிவு செய்வதற்கும் வாய்ப்பளித்திருக்கிறது.


டெரிடா கதாபாத்திரத்தின் உரையாடலுடன் தொடங்கும் இந்நாவல் சுசிலா, வாட்டாதாவின் மரணம், வாசுதேவன், மார்க்கரெட், யூரிகோ போன்ற கதாபாத்திரங்களுடன் தொடர்கிறது. அடுத்துவரும் அத்தியாயங்கள் வாட்டாதா-டெரிடா சந்திப்பு, மொழியியல் கட்டமைப்பு வாதம், திருமண கட்டமைப்பு என பலவற்றைப் பற்றிய பார்வையை முன்வைத்து நகருகின்றனது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கிய கதாபாத்திர வாக்குமூலங்களோடு சிறுச் சிறு கதாபாத்திர அறிமுகங்களும் கதையை நகர்த்திச் செல்ல முக்கியப் பங்காற்றியுள்ளன. வட்டாதாவின் மரணத்திற்கான காவல் நிலைய அதிகாரிகளின் துல்லியமான ஆய்வுகளும் விசாரணைகளும் அந்த மரணம் ஒரு கொலையா? ஒரு விபத்தா? என்ற இருகோணங்களிலும் மாறி மாறி சிந்திப்பதும் விவாதிப்பதும் அதற்கான காரண காரியங்களை அலசி ஆராய்வதிலும் கதை விறுவிறுப்பாக நகர்வது வாசிப்புக்கான ஆர்வத்தைத் தக்க வைப்பதிலும் இந்நாவல் வெற்றிபெற்றுள்ளது என்பதையும் இங்குக் கூறத்தான் வேண்டும்.


ஓர் அத்தியாயத்தில் இராமாயணத்தில் அகலிகை கதாபாத்தித்தின்மீது ஒரு கட்டவிழ்ப்பை நிகழ்த்தியுள்ளார் சித்துராஜ் பொன்ராஜ். இராமனை நியாயவான் என நிறுவதற்காகவே அகலிகை கதாபாத்திரக் கட்டமைப்பும் ஆணாதிக்கம் மேலிட்ட படைப்புவாதமுமே இராமாயணம் என்ற ஒரு கருத்துச்செறிவும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. கௌதமன் அகலிகைக்கும் இந்திரனுக்கும் கொடுக்கும் சாபங்களே இதற்கு உதாரணங்களாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆணான இந்திரனுக்கு அவன் விரும்பிய யோனியை எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் வகையில் அவன் உடம்பிலேயே ஆயிரம் யோனிகள். ஆனால், பெண்ணான அகலிகைக்கு இனி எந்தக் காலத்திலும் எப்பேர்ப்பட்ட பேரழகனின் ஸ்பரிசத்திலும் மேனி நனைய முடியாதபடி பாறை வடிவம்.


இதை இங்குக் கூறுவதற்குக் காரணம் அன்று தொட்டு இன்றுவரை ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதைச் சுட்டுவதற்கே ஆகும்.  இந்நாவலிலும் ஆண் கதாபாத்திரங்களின் ஆணாதிக்க உணர்வுகள் மேலிடுவதைப் பல சிறுச் சிறு சம்பவங்கள்மூலம் நிறுவியுள்ளார் நாவலாசிரியர். இத்தனை நூற்றாண்டுகளாகியும் ஐரோப்பியர்களால் பெண்களைப் பரிசுத்தமான கன்னிகளாவோ அல்லது தேவடியாக்களாவோதான் பார்க்கமுடிகிறது. இந்த இரண்டு வகையைத் தவிர்த்துப் பெண்களை எப்படி அணுகுவது என்பது இந்தக் காலசாரத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது என்று வட்டாதா மியூனிக் நகரில் சுசிலாவிடம் கூறும் இடம் கவனிக்கத்தக்கது. மேலும், இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமுதாய வழக்கம் இருந்திருக்கிறது என்றும் அதுமாதிரி சமயங்களில் தலைமையில் இருக்கும் பெண்களே தனக்கு ஏற்ற மாதிரி பலமுள்ள ஆணையோ ஆண்களையோ துணைகளாத் தேர்ந்தெடுத்துப் பிள்ளை பெறுவதற்கு மட்டும் ஆண்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் அல்லி ராஜ்ஜியமெல்லாம் வெறும் கற்பனையில்லை எனவும் வட்டாதாவின்மூலம் இந்நாவல் பதிவு செய்துள்ளது.


இதற்கு வலுசேர்க்கும் வகையில், திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும் என்ற நூலில், மனிதன் தோன்றிய தொடக்கக் காலத்தில் இனக்குழு வாழ்க்கையில் தாயே முதலிடம் வகித்தாள். குழுவை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் அவளிடமே இருந்தது. ஏனென்றால், ஒரு குழுவிற்குள் தந்தை யாரென்று தெரியாது. தாய் மட்டுமே சந்ததியினருக்கு உறுதியாகத் தெரியும். அச் செம்மூதாய் மட்டுமே குழுவைத் தலைமை தாங்க முடியும் எனவும் பின்னாளில், குடும்பம், தனி உடைமை எனும் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின், ஆண், தாய்வழிச் சமூக அமைப்பைக் கைப்பற்றி தந்தைவழிச் சமூக அமைப்பாக மாற்றிவிட்டான் எனப் பதிவிட்டுள்ளார் அதன் நூலாசிரியர் ந. இரத்தினக்குமார் என்பதையும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.


பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூர்ச் சூழலில் சீனர்களின் வருகையும் அதற்கான காரண காரியங்களையும் வரலாற்றுப் பூர்வமான ஒரு பார்வையோடும் அவர்களின் மரபு, பண்பாடு, நம்பிக்கை என மிகவும் நுணுக்கமாக ஒவ்வொன்றையும் இவர் சொல்லிச் செல்லும் விதம் பிரமிக்கவைக்கிறது. கடுமையான ஓர் உன்னதமான உழைப்பில்லாமல் இவற்றையெல்லாம் எழுதிவிடமுடியாது. தமிழ்நாட்டிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இங்கு வந்து மேல்நிலைத் தொழில்புரிபவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்களும் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்பெண்ணின் மனவோட்டங்களின் பிம்பங்களும் அவள் சார்ந்த பின்னணியிலும் சிங்கப்பூரியர்களுக்கே உரிய தனித்த அடையாளங்களும் அக்கம் பக்க உறவுநிலை சார்ந்த சின்ன சின்ன சம்பவங்களும் மிகவும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. நாவலில் அலசப்படும் சிக்கல், அச்சிக்கலுக்கான சூழல், அச்சிக்கலுக்குள் பொதிந்துகிடக்கும் அக உணர்வுகளின் வெளிப்பாடுகள் என அனைத்தும் மிகவும் திட்டமிடப்பட்டுப் படைக்கப்பட்டுள்ளது. மனித மனத்தின் அடி ஆழம்வரை சென்று ஸ்கோப் செய்யும் கருவியைப்போல மனித மன ஆழங்களின் விளிம்புகளையும் தாண்டி உள்ளே சென்று, அவரவர் ஞாயங்களுக்கான தேடல்களுடன் நம்மை பயணிக்க வைத்துள்ளார் திரு. சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள்.


ச்சியோ கிடாஹாராவின் கவிதை வரிகளும் இந்த இலக்கியத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் கொண்டிருந்த பார்வைகளும் சிந்திக்க வைக்கின்றன. அதில் ஒன்று.


படிப்பினையோ போதனையோ செய்யத் தொடங்கும் தருணத்திலேயே கலை செத்துப்போய்விடுகிறது


படைப்பாளிகள் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டிய விஷயம் இது.


ஒரு தனிமனிதனின் வாழ்வில் அவனுக்கு ஏற்படும் சம்பவங்களும் அனுபவங்களும் எப்படியெல்லாம் உருமாறி மற்றவர்மேல் ஏற்றிவைக்கப்படுகிறது என்பது இந்நாவலில் தெள்ளத்தெளிவாகப் பேசப்பட்டுள்ளது. புறவயச் சிந்தனைப்போக்கில் அவரவர் போக்கில் கதை போவதுபோல் தெரிந்தாலும் அகவயத் தாக்கங்களே கதையில் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அகம் சார்ந்த உணர்வுகளும் அதனால் அவனுக்கு ஏறபடுகின்ற புரிதல்களுமே மனிதனுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது என்பதால் இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவரவர் ஞாயங்களைச் சொல்ல முழுமையான சுதந்திரம் நாவலாசிரியரால் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நாவலின் மொழியும் அதன் நடையும் கதைக்களமும் கதாபாத்திரப் பயன்பாடும் அள்ள அள்ள குறையாமல் வந்துகொண்டிருக்கும் நீரைப்போன்ற உவமைக் களஞ்சியமும் சிங்கப்பூருக்கே உரிய அந்த நகர வாசனையும் அவ்வாசனையிலேயை மூழ்கிக்கிடக்கும் அகத் தோரணங்களும் சிங்கப்பூர் புனைவிலக்கியத்திற்குப் புதியதோர் அடையாளத்தை வழங்கியிருக்கிறது. மேலும், சிங்கப்பூரில் நாவல்கள் அதிகம் வெளிவராத இன்றையச் சூழலில் இந்நாவல் தன் தடத்தை உலகளாவிய தமிழ் இலக்கிய நிலையில் பதித்து, நாவல் இலக்கியத்திற்குப் புதியதொரு முகத்தையும் தந்துள்ளது எனலாம்.


நிறைவாக, சித்துராஜ் பொன்ராஜ் அவர்களிடம் இந்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு தரிசனம் இருக்கிறது. அத்தரிசனத்தை வாசகர்களிடத்தில் கடத்தும் ஒரு முயற்சியின் நீட்சியாக இந்நாவல் அமைந்திருக்கிறது. முறையாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட ஒரு நாவலாக இதைப் பார்க்கிறேன். அதனால், புதிதாகக் கதை, புதினம் எழுத வருபவர்கள் தங்களின் வாசிப்புத் தளத்தை திரு. சித்துராஜ் பொன்ராஜ் படைப்புகளிலிருந்து ஆரம்பித்தால் அவர்களும் எதிர்காலத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புச் சூழலில் தனிமுத்திரையைப் படைப்பார்கள் என்பது திண்ணம். இவர்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் பூத்துக்குலுங்கிக் கொண்டிருப்பவர்களும் அவசியமாக வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது.


விளம்பர நீளத்தில் ஒரு மரணம்


திரு. சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் தொடரவும் பல புதிய இலக்கிய முயற்சிகளில் அவர் தொடர்ந்து தடம் பதித்திடவும் அன்பு வாழ்த்துகள்.


அன்புடன்
எம்.சேகர்
ஞாயிறு, 8 ஜூலை, 2018

ஞஞ்ஞை - மில்லத் அஹ்மது - ஒரு விமர்சனப் பார்வை


ஞஞ்ஞை – மில்லத் அஹ்மது – தமிழ் முரசு (8 - 7 - 2018) 
ஒரு விமர்சனப் பார்வை

இருத்தியல் வாதம் அல்லது இருத்தவியல் வாதம் தற்போதைய மனிதனின் இருப்புநிலையைப் பற்றிப் பேசுகிறது என்பர். இறந்தகாலமோ எதிர்காலமோ இங்கு முக்கியமாகப்படுவதில்ல. வாழ்வின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதன் தன் இருப்புக்குத் தேவையானவையை மட்டும் முன்நிறுத்தி அதையே பற்றிக்கொள்ள முனைகிறான். இந்தச் சமூக வாழ்க்கையில் பல நெருக்கடிகளைச் சந்திக்கும்போது அவனால் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படமுடியாமல் போகிறது. ஆற்று வெள்ளத்தில் சிக்கியவன்போல் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறான். அச்சமயத்தில் அதுதான் அவன் வாழ்க்கைக்கான இருப்பு. தனக்கு விருப்பப்பட்டதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு சமூகப் பண்பாட்டு விழுமியங்களைச் சிந்திக்கவியலாமல் அவனின் இருப்புநிலையில் சுதந்திரமாகச் செயல்பட விரும்புகிறான். சூழ்நிலைக்கேற்பத் தனக்கேற்றதைத் தானே முடிவெடுத்துக்கொள்ளும்போது சில விபரீதங்களும் நம்மையும் மீறி நிகழ்ந்துவிடுவது உண்டு.

இப்படிப்பட்ட ஒரு சூழலையொற்றியே படைப்பாளர் மில்லத் அஹ்மது தனது ஞஞ்ஞை என்ற சிறுகதையில் ரகு, சந்திரன், புகழேந்தி, பவித்திரா, அஷ்ரப் போன்ற பாத்திர வார்ப்புகளின்மூலம் தனது புனைவியலில் கற்பனா சக்தியின் துணையுடன் ஒரு கதைக்களத்தை உருவாக்கி நம்மையும் அவருடைய எழுத்தினூடே பயணிக்க வைக்கிறார். மேலும், இக்கதையை அவர் நகர்த்திச் செல்லும் விதம், மனித மனத்தின் மனப்போக்குகளின் விகாரங்கள் என்னென்ன என்பதை நாசுக்காகவும் ஆனால், மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டும் பாங்கு மில்லத் அஹ்மத் அவர்களின் தனிச்சிறப்பு என்றே கூறலாம்.

இக்கதையின் வாயிலாக படைப்பாளரின் கதை கூறும் முறைமை, பாத்திர வார்ப்பு, கதைக்களம், மொழிநடை போன்ற அம்சங்கள் தெளிவாகக் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இறுதிவரை கதையினுள்ளே வாசகனை இழுத்து வைத்திருக்கும் விதமும் முடிச்சுகளின் கட்டவிழ்ப்புகளும் மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது போன்றவை திரு. மில்லத் அஹ்மது  அவர்களை நமக்கு நல்லதொரு கதைசொல்லியாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.

ஓர் எழுத்தாளனைக் காட்டிலும் வாசகனுக்கும் வாசிப்புப் பிரதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் இலக்கியச் சூழலில் நாம் வாழ்கிறோம். எந்தவொரு யதார்த்தவாதப் படைப்பாளனும் தன்முன் விரிந்து கிடக்கும் யதார்த்தங்களில் ஒரு சிலவற்றையே தேர்வுசெய்து, அந்த சிலவற்றுக்குள் அதிக முக்கியத்துவம் கொடுத்து, சிலவற்றை வேறு சிலவற்றில் பொதித்துவைத்துக் காட்ட முற்படுகின்றான். இக்கதைப் படைப்பிலும் சமகாலத்தில் நடப்பதைத் தன் கதையாடலின்மூலமாக நமக்குள் கடத்திவிடக் கதாசிரியர் இம்முறையைக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

புனைகதைகளை வாசிக்கும்போதும் கேட்டும்போதும் ஒவ்வொருவரும் தத்தம் உள அமைப்பிற்கு ஏற்பவே காட்சிகளை மனத்தில் கட்டமைத்துக்கொள்கின்றனர். அவ்வாறான கட்டமைப்பைக் கதையின் மையத்துடன் இணைத்து ஏற்றம் பெறச் செய்வதற்கான சொற்கோப்புகள் முக்கியமானவையாகும். சொற்களால் உள்ளத்தில் காண்பியங்கள் உருவாக்கப்பட்டாலும் அச்சொற்களைக் காட்டிலும் காண்பியங்களே வாசகனின் உள்ளத்தில் ஒருவகை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் இக்கதையின் மையத்திற்கு ஏற்ற சொற்களின் கட்டமைப்புகள் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. கதையை எடுத்துரைக்கும் முறைமையும் வாசகர்களிடத்தில் வெறும் எழுத்துவடிவத் தொடர்பாடல் என்ற நிலையையும் கடந்து காண்பியத் தொடர்களாக அல்லது காண்பிய அலைகளின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளதும் இக்கதைக்குத் தனிச்சிறப்பைத் தருகிறது. எடுத்துக்காட்டாக,

சந்திரனை ராகு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க... என்ற குறியீட்டுப்படிமம் இருமுறை கதையில்கையாளப்பட்டுள்ளதும் பதினாறாம் நாள் சூழல்களின் விவரிப்பும் புகழேந்திக்கு எற்படும் யாதார்த்தை மீறிய சொல்லுரைப்புகளும் காட்சிப்படுத்துதலும் ஒருவித அமானுஷ்ய உணர்வும் வாசகர்களிடையே கதைக்கான இருப்பை தக்கவைத்துக்கொள்கின்றன.

ஒரு கொலையில் தொடங்கும் கதை, அதற்கான காரணகாரியங்களைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் அதன் தொடர்பான இன்னொரு மரணத்தின் வாயிலாக நம்முன் காட்சிப்படுத்தப்பட்டு, இதில் இரண்டிலுமே சம்பந்தப்படாத ஒருவரின்மூலம் கதையின் முடிச்சு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

நிறைவாக, சமூக விழுமியங்ளை மீறுகின்றபோது அதற்காக நாம் கொடுக்கின்ற விலையும் அதிகமாகவே இருக்கும் என்கிற ஒருவரிச் செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லிச் செல்கிறது ஞஞ்ஞை என்று நல்ல தமிழில் தலைப்பிடப்பட்டுள்ள கதை. ஞஞ்ஞை என்பதற்கு மயக்கம் என்று பொருள் கொள்ளலாம். ரகு – பவித்ரா இருவருக்குமான அந்த மயக்கமே கதைக்கான மயக்கம். ஆனால் அம்மயக்கத்தில் பவித்ரா தொடர்பயணத்தில் இருப்பது மனத்தைக் கொஞ்சம் வருடவே செய்கிறது. சிகப்பு ரேஜாக்கள் வசனத்தைப்போன்ற அந்த வசனத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்று கதையின் முதல் வாசிப்பில் தோன்றியதையும் மறுப்பதற்கில்லை.

நல்ல முயற்சி. வாழ்த்துகள் திரு. மில்லத் அஹ்மது.
அன்புடன்,
எம். சேகர்