திங்கள், 24 ஏப்ரல், 2017

கவிதைகளுடன் உரையாடல் 10 - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர்(10)


நீர் படரும் அடையாளம்


காட்சி காட்டும் அடையாளங்கள்
ஏதோ சங்கடத் தவிப்புகளாய்
நிறம் கண்டு அழிந்தொழித்தும்


மீண்டும் மீண்டும் தன் சுயத்தை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது


முன்னவன் எதனையும் தனக்கென்று இல்லாமல்
உலகுக்கு ஈந்தவன்


என் பேரனின் பிஞ்சுக் கரங்களில்
அழுந்தி பிடிக்க தேடியும் கிடைக்கப்பெற்றதில்லை
எந்த அடையாளமும்


நதிக் கரையின் படுகைகளில்
பரந்துக் கிடந்தவை
யாருமற்றதாய் ஆகிப்  போனது


மூழ்கியவனுக்குத்
தட்டுப்பட்ட அடையாளம்


என் பேரனின் நெஞ்சு குருதியின்
தவிப்பை ஆசுவாசப்படுத்தும்


@@@@@@@@@@


யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடிச்சென்றார் சங்க காலப்புலவர் கணியன் பூங்குன்றனார்.  இதுவே நம் முன்னோர்களின் இவ்வுலகைப் பற்றிய பரந்த விரிந்த பார்வைக்கு நல்லதொரு முன்னுதாரணமாகும். பொதுவுடைமையை அன்றே தனது வாழ்வியல் சித்தாந்தமாகக் கொண்டு வாழ்ந்தவன் அன்றைய தமிழன் என்பதற்கு இதைவிட வேறு நல்ல சான்றுகள் வேறென்ன வேண்டும். தொல்காப்பியரும் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இலக்கணம் கண்டு, உலகில் வேறெந்த மொழியின் இலக்கணத்திலும் இல்லாத பொருளதிகாரத்தையும் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார். வள்ளுவரோ வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் விழுமியங்களையும் அறம், பொருள், இன்பம் எனப் பிரித்து, தனித்தனியாக குடிமக்கள் முதல் அரசாள்பவர்கள் என உலக மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு திருக்குறளைப் படைத்தார். நம் முன்னோர்களின் ஆக்கங்களைக் கவிதையில் நயமாகச் சொல்கிறார் கவிஞர் எம்.கருணாகரன் இப்படி.


முன்னவன் எதனையும் தனக்கென்று இல்லாமல்/உலகுக்கு ஈந்தவன்


பொருள் தேடவும், வணிகத் தொடர்பாகவும் தமிழர்கள் கடல் கடந்து சென்றதும் தமிழ் இலக்கியங்களில் செய்திகளாத் தொகுக்கப்பட்டுள்ளன.


‘’கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’’ என்ற பெயரால் கடலில் இறந்த செய்தியும்,


‘’கடல் பிறக் கோட்டியவன்’’ என்ற சிறப்பால் கடலுள் சென்று வென்ற செய்தியும் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.


‘’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’’ என்பதும்,


‘’முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை’’ என்பது போன்றவையும் தமிழன் கடல் கடந்து சென்ற செய்திகளை நமக்குக் குறிக்கின்றன. கப்பற்படை, நாவாய் ஓட்டம், நெய்தல் வாழ்க்கை இவையெல்லாம் தமிழரின் கடல் வெல்லும் ஆற்றலைக் காட்டுகின்றன. பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையில், கடியலூர் உருத்திரங்கண்ணனார்,


கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்


பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் பாடுகிறார். இவ்வரிகளில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை மலாயாவின் அன்றைய காடாரத்தைக் (கெடா) குறிப்பதாகும். இப்படிப் பல வரலாற்றுச் செய்திகளைப் பண்டைய தமிழர்கள் இலக்கியத்தினூடே சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால் இலக்கிய ஆதாரங்களின் நம்பகத்தன்மையின் காரணமாக அவை முற்றாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்கூட, அவ்வப்போது அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்கள் வாழ்ந்த சுவடுகள் கண்டுபிடிக்கப்படுவதும் பின், அது வெறுமனே கிடப்பில் போடப்பட்டு ஓர் இனத்தின் வரலாறு திட்டமிடப்பட்டு மூடி மறைக்கப்படுவதும் இன்றைய சூழலில் அனைவரும் அறிந்ததே. நான் படித்த காலத்தில், வரலாற்றில் இருந்த பரமேஸ்வரன் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் இருக்கிறானா என்பதும் சந்தேகமே.கெடாவின் பூஜாங் பள்ளத்தாக்கு, போராக்கின் கங்கா நகர், ஜொகூரின் கோத்தா கெலாங்கி முதல் அண்மைய மாலாக்கா ஆற்றுக்குக் கீழே இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நம் சார்ந்த வரலாறுகள் எல்லாம் வெறும் வாய்ஜாலங்களாக மட்டும் வந்து பின், சமாதிநிலை அடைந்து விடுகின்றன. இதனைக் கவிதை வரிகள் அழகாகப் பதிவு செய்துள்ளன.


நதிக் கரையின் படுகைகளில்/பரந்துக் கிடந்தவை/யாருமற்றதாய் ஆகிப்  போனது


மேலும், நமக்கான அடையாளத்தைத் தேடும் அடுத்த தலைமுறையினருக்கு இதுபோன்ற வரலாற்று ஆவணங்கள் தொடர்பான செய்திகள் வரும்போது அவர்கள் மனம் கிளர்ச்சி கொள்கிறது. இத்தகைய வரலாற்றுக்கு உரிய தலைமுறையின் வாரிசா நான் என்ற பெருமிதம் கொள்ளச் செய்யும். தம் அடையாளத்தை நோக்கிய அவர்களின் பயணத்தைத் தொடரச் செய்யும். ஒரு தனிமனிதனோ அல்லது ஓர் இனமோ தாங்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள முனைந்தால், தங்களின் அடையாளத்தையும் சுயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினால், அதற்கான தேடலைத் தீவிரப்படுத்தினால் அந்தத் தனியொருவனின் வெற்றியையோ அல்லது அந்த இனத்தின் எழுச்சியையோ யாரும் தடுத்துவிட முடியாது. இக்கருத்தினை தனது கவிதையில் மிக ஆழமாகவும் யதார்த்தமாகவும் சமகாலத்தின் அண்மைய செய்தித் தொகுப்புடன் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

மூழ்கியவனுக்குத்/தட்டுப்பட்ட அடையாளம்/என் பேரனின் நெஞ்சு குருதியின்/

தவிப்பை ஆசுவாசப்படுத்தும்


அண்மைய காலமாக ஒவ்வொரு கவிதையிலும் எம். கருணாகரனின் கவிதையாக்கம் வெவ்வேறு உணர்வுகளைக் காட்டி வருவது பாராட்டுக்குரியது. அவரின் கவிதை மொழி அதற்கான பாடுபொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் மிகவும் கவனமாகவே நடைபயில்கிறது. அவரின் எழுத்து தமிழனின் மேன்மைக்கும் எழுச்சிக்கும் சான்றாய் விளங்கட்டும். வாழ்த்துகள்.-    முற்றும் 

திங்கள், 17 ஏப்ரல், 2017

மக்கள் ஓசை கட்டுரைத்தொடர் - கவிதைகளுடன் உரையாடல் 9(9)
மேடை நடிகன்
ஒரு சித்திரக்காரனின் கலை நுட்பத்தோடு
அவனது பேச்சு
பேசும்போதெல்லாம் தேவைக்கேற்ற
சாயம் பூசிய முக மூடியோடு பேசுவான்

கேட்பவரின் காதில் ரீங்காரமிடும்
அவனது மொழியின் நளினம்

தன் பொய் முகம்
தெரியாமல் இருக்க
சட்டென மாற்றி கொள்வான்
அதற்கேற்ற சாயத்தை

யாரும் அறியும் முன்
பூசிய சாயத்தை லாவகமாய் அழித்து விட்டுப்
புன்னகையை உதிர்க்கும் அவனுக்கும்
தன் கைக்குலுக்களில் மறைத்து கொள்ளும்
முன் நிற்பவனின்
கயம புன்னகையின் அர்த்தம் புரிந்தும்
மீண்டும் மீண்டும்
பொய் முகம் கொண்டு
புன்னகைக்கும் அவனுக்கு
ஒரே நம்பிக்கை அது மட்டும் தான்

உங்கள் முன் கைக்குலுக்கிச் சிரிக்கும் அவனுக்கு
ஒரு புன்னகையைக் காட்டி விட்டுப் போங்கள்


கடைசியில் அது மட்டுமாவது
மிச்சமாகட்டும்

@@@@@@@@@@


எல்லாம் நாடகமேடை. இதில் எங்கும் நடிகர் கூட்டம். உருவம் தெரிவதுபோல அவர் உள்ளம் தெரிவது இல்லை என ஜெமினி கணேசன் நடித்த ஒரு படத்தில் இப்படியாக ஓரு பாடல் தொடங்கும். உலக வாழ்க்கையின் இந்த இருப்பை அன்று அப்பாடல்வழி பதிவு செய்திருப்பினும் இன்றும் நமக்கு அவ்வரிகள் பொருத்தமானதாகவே இருக்கின்றன என்றால் அது மிகைப்படாது. பொய்முகங்களுக்கு நடுவில்தான் தினமும் நம்மைச் சுதாகரித்துக்கொண்டு நடக்கவேண்டியுள்ளது என்ற கருத்தினையே இக்கவிதை வலியுறுத்துகிறது.


முகமூடிக்காரர்கள் தங்களின் இருத்தலை எப்படியெல்லாம் நிலைநாட்டிக் கொள்கிறார்கள் என்பதை,


ஒரு சித்திரக்காரனின் கலை நுட்பத்தோடு / அவனது பேச்சு / பேசும்போதெல்லாம்  / தேவைக்கேற்ற சாயம் பூசிய / முக மூடியோடு பேசுவான் /


என்ற வரிகளின் மூலம் அடையாளப்படுத்துகிறார் கவிஞர். 


ஓவியனின் கலைநுட்பமானது அலாதியானது. அவனின் அந்த மாய வண்ணங்களோடு நாம் பயணிப்பது போலவே அந்த வண்ணங்கள் நமக்குள்ளும் ஊருறுவி நமக்குள் வேறொன்றாக உருமாறி நின்று, நமக்கான ஒரு புரிதலை வழங்கும் தன்மை கொண்டதாக மாறி நிற்கும். அந்த மாய சக்தியைப் போன்றே பொய்யர்களின் பேச்சில் தெறித்துவிழும் நளினமும் சுவையும் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பதை நிறுவி விடும் தன்மையில் இருக்கும்.


அரசியல், சமூகம் என அனைத்திலும் இந்தப் பொய்யர்களின் தாக்கத்தால் அவர்கள் சார்ந்த அந்தச் சமூகம்தான் தனக்கான அனைத்தையும் இழந்து நிற்கும் சூழலும் இருக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கூற்றெல்லாம் இந்தக் காலத்தில் எடுபடுவதில்லை என்பதையும் இங்குப் பதிவு செய்தல் வேண்டும் என்ற அளவுக்கு இன்று நம் சமூகத்தில் பொய்முகக்காரர்களின் வாழ்வியல் வளர்ச்சியும் அவர்களின் எண்ணிக்கையும் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இப்படி வாழ்ந்தால்தான் இந்த வாழ்க்கையில் தான் பேர்போட முடியும் என்ற தவறான ஓர் அபிப்பிராயம் இந்த வாழ்வியல் சூழல் அவர்களுக்கு உணர்த்தியிருக்கக்கூடும்.


ஒரு பொய்யை மறைப்பதற்காகப் பல பொய்களைக் கூறுவதுபோலத்தான் இதுவும். ஒரு முகம் கலைய உடனேயே அதற்கு ஈடாக இன்னொரு புதிய முகத்துக்குள் தன்னைப் புதைத்துக்கொள்ள இவர்கள் தயங்குவதில்லை. ஒன்றின் வேஷம் கலைந்தாலும் இன்னொரு வேஷம் அவர்களால உடனடியாக உருவாக்கப்பட்டு விடுகிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல வேட்கையில் சமூகம் சார்ந்தே பொதுவில் சிந்திப்பதுபோலவே அனைத்துக் காரியங்களையும் செயலாற்றித் தன்னை மட்டும் நிலைநிறுத்திக்கொள்வர் என்பதை,


தன் பொய் முகம் / தெரியாமல் இருக்க/ சட்டென மாற்றி கொள்வான் / அதற்கேற்ற சாயத்தை / யாரும் அறியும் முன்/ எனவும்,
பூசிய சாயத்தை லாவகமாய் அழித்து விட்டுப் / புன்னகையை உதிர்க்கும் அவனுக்கும் / தன் கைக்குலுக்களில் மறைத்து கொள்ளும் /


என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார் எம். கருணாகரன்.


மேலும் இத்தகையோர்கள் வாழ்வில் உச்சத்தைத் தொட்டவர்போல் தோற்றம் அளித்தாலும், நிஜ வாழ்க்கையின் தர்மப்படி அவர்கள் ஏதாவது ஒரு வகையில் எங்காவது தோற்றுத்தான் நிற்பார்கள். அது அவர்களுக்கும் நிகழலாம் அல்லது அவர் சார்ந்த சந்ததியினருக்குக் கூட நிகழலாம். எதுவாக இருந்தாலும் வாழும் காலத்திலேயே அவரவர் விதைத்ததை, அவரவர்களே அறுவடை செய்யும் ஒரு இக்கட்டான இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.


நிலையாமையே இந்த வாழ்க்கையின் நிலை. இந்தப் புரிதல் இருந்தால் அனைவரின் வாழ்வும் வளம்பெறும் வகையில் அனைவரின் செயல்பாடுகளும் அமையும். இந்த மனித வாழ்க்கையே நிலையானதாக இல்லாமல் காற்றடைத்த ஒரு பையாகத்தான் இருக்கிறது. இதனையே சித்தர் ஒருவர்,


காயமே இது பொய்யடா – வெறும்
காற்றடித்த பையடா


எனப் பாடியுள்ளார்.


வெறும் பொய்யுரைகளும் புகழ்மாலைகளும் வஞ்சப்புகழ்ச்சிகளாகவே இங்கு மலிந்து கிடக்கின்றன. எங்கும் பொய்மையின் ஆளுமை நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தலைவனுக்குப் பின்னால் போகும் ஒரு கூட்டமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்தத் தலைவனை மகிழ்ச்சிபடுத்தும் வெறும் வெட்டுவேட்டாக நாம் அந்த பொய்மைக்குள் அடங்கிப்போகிறோம் என்பதையும் மறைபொருளாகக் கவிதை சுட்டுகிறது.


புன்னகை உன்னதமானது. அந்த உன்னதம் கொடுக்கும் இன்பம் அலாதியானது. இந்த வாழ்க்கையில் புன்னகையின் அந்த உன்னதத்தை மறைத்துக்கொண்டு, மின்னலைப்போல் தோன்றும் ஒரு வெற்றுச் சிரிப்பை மட்டும் உதிர்த்துப்போக அனைவரும் பழகியிருக்கிறோம்.


கலைகளில் சிறந்த கலை வாழ்வதுதான் என்கிறார் நவீன ஓவிய உலகில் அனைவராலும் மாஸ்டர் என அழைக்கப்படும் ஓவியர் சந்ரு. வாழ்க்கை அழகானது. அதை அழகாக வாழப் பழகிக்கொள்வோம் என்றார் எழுத்தாளர் அகிலன். இப்படியாக, இந்த அழகான வாழ்வை அழகாக்கிக்கொண்டு வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இந்த மண்மீது கொட்டிக்கிடக்கிறது. மனமகிழ்வோடு நமக்கான வாழ்க்கையை வாழுவோம். மற்றவரையும் நம் புன்னகையால் மனம் மகிழ்வுகொள்ள வைப்போம். உண்மையாக இருப்போம். உண்மையாக உழைப்போம். உண்மையாக வாழுவோம். இந்த இயற்கை நம்மை வாழவைக்கும்.


தான் உணர்ந்த விஷயத்தைப் பிறிதொரு மனிதனுக்குக் கடத்தும்போது அவனுக்குள் அது அனுபவமாக மாறும். அந்த அனுபவத்தில் இருந்து அவன் பெற்றுக்கொண்டவை இந்த வாழ்க்கையின் ஏதாவது ஒரு புரிதலை அவனுக்குள் ஏற்படுத்தும். எம். கருணாகரன் தன் எழுத்தின் மூலம் தன் உணர்வுகளை இன்னொருவருக்குள் கடத்தும் முயற்சியின் வெளிப்பாடே இதுபோன்ற கவிதைகளாகின்றன.-    தொடரும்...........  

(நன்றி மக்கள் ஓசை  

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் உரையாடல் 8
(8)

தீ


பிம்பம் உடைந்து சிதைவுக்குள்ளாவதை
மறைக்க சக்தியின்றி குமுறி அழுகையில் யாருமிருப்பதில்லை


எங்கனம் தாங்கிட இயலும்


கண நேரத்திலும் அதிர்வின்றி
வேய்ந்த அம்பின் விஷம்
சாய்த்து விட்டு
கமுக்கமாய்
புறப்பட்டு போய்விடுகிறது


அதன் வீச்சு
கனன்று எரியும்
எரித் தனலைக் காட்டிலும்
வெப்ப உணர்வில்
அமிழ்கிறது


ஏதும் அறியா இந்தப்  பறவை
தேடியலையும் திசையின்றி
மீண்டும் வந்தமரும்
மரக் கிளையிலும்
பற்றி எரிகிறது
தீ


@@@@@@@@@@


சமூகத்தின் ஓர் அங்கமாய் அதனோடு இயைந்தும் முரண்பட்டும் பல சூழல்களில் வாழ்கின்றவன் மனிதன். மனித குலத்தில் தானும் ஒருவனாய் வாழும் அவன், வாழ்க்கைச் சூழலின் நடைமுறைகளின் காரணமாக அமையும் உணர்வுநிலையின் வெளிப்பாடுகளின் ஒரு வடிகாலாகக் கவிதையைக் கையாளுகிறான். அவனால் வடிவமைக்கப்படுகின்ற அக்கவிதையில் அவன் வாழுகிறான். அவனைப்போன்ற பிறரும் வாழுகிறார்கள். அவனைப்போலவே பிறரும் அதனை அவரவர் நிலையில் இருந்தும் புரிதலில் இருந்தும் எதிர்கொள்கிறார்கள். எனவே கவிதையானது அதன் தோற்றம், அதன் பொருள், அதன் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளிலும் சமூகத்தோடு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையதாக விளங்குகின்றது.


மேலும், சமுதாய வரலாற்று மரபின் ஒரு காலகட்டத்தில் தோன்றுகின்ற ஒரு குறிப்பிட்ட இலக்கியம், படைப்பாளியின் அனுபவ உணர்வுகளைப் பெற்று வருகின்றபோது, அக்காலச் சூழலின் தேவைகளுக்கும் படைப்பாளியின் படைப்பாற்றல்களுக்கும் மற்றும் நோக்கங்களுக்கும் ஏற்ப வடிவமைப்பிலும் பாணியிலும் குறிப்பிட்ட சில தன்மைகளையும் போக்குகளையும் பெற்றுவிடுவது தவிர்க்க இயலாததாகும். இந்த மாற்றமானது வலியச் சென்று நிகழ்த்தப் பெறுவதில்லை. இயல்பாக யதார்த்தமாக நிகழ்வது. இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவுகள் புலனறிவு போல மிக இயல்பானதும் எளிமையானதுமாகும். ஒப்பிலக்கிய அறிஞர் ஹேரி லெவின், படைப்பிலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவானது சமுதாய காரணங்களின் விளைவு மட்டுமல்ல, சமுதாய விளைவுகளின் காரணமுமாகும் என்று கூறுகின்றார்.நம் சமூகத்தின் இணைமுரண் சிந்தனைகளை எதிர்நோக்கும் ஒரு படைப்பாகவே எம்.கருணாகரனின் தீ என்ற கவிதை எனக்குள் கிளை விட்டு விரிந்து படர்கிறது. ஒரு தனிமனிதனுக்குள்ளிருந்து வெடித்துச் சிதறும் உள்ளக்குமுறலாகவும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு மொழியாகவும் மொழியப்பட்டுள்ளது. கவிதையின் சுதந்திரமான மொழி விளையாட்டும் வார்த்தைத் தேர்வுகளும் இக்கவிதை சொல்லவரும் செய்தியை அவரவர் புரிதலுக்கு ஏற்ப விரித்துப் பார்க்கும் தன்மை வாய்ந்ததாகும். இன்றைய படைப்புலகில் படைப்பவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைவிட, அப்படைப்பின் மூலம் வாசகன் எதைப் புரிந்துகொண்டான் என்பதே பிரதானமாகும். இதுபோன்ற கவிதைகள், முடியும் இடத்திலிருந்துதான் இன்னொரு தொடக்கத்தை நோக்கி நகரும்.தீ என்பது வீட்டில் சமைக்கவும் ஒளிதரவும் உதவும். அதற்கு முரணாக வீட்டை அழிக்கவும் தயங்காது. அதன் சீற்றம் தேவைகளுக்கேற்ப இருக்கும்போது யாருக்கும் எந்தத் தீங்கும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் அச்சீற்றமானது அதன் எல்லையத் தாண்டினால் அழிவு என்பது நிச்சயமானதாகிவிடும். தமிழினத்திற்கு ஓர் அபாயச் சங்காகவே இக்கவிதை எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறது. இப்போதே விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி நம்மால் எப்பவுமே எழுந்திரிக்க முடியாத அளவுக்கு அடிகள் நம்மேல் விழக் காத்திருக்கின்றன என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறது.


கண நேரத்திலும் / அதிர்வின்றி வேய்ந்த அம்பின் விஷம் / சாய்த்து விட்டு / கமுக்கமாய் புறப்பட்டு போய்விடுகிறது /


என்ற வரிகள் நம்மையறிமாலேயே நாம் இழந்துகொண்டிருப்பதை நிறுவுகிறது.


ஒரு தனிமனிதனாக, ஒரு சமூகமாக, ஓரினமாகக் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், நாம் அடைந்ததைவிட இழந்தவைகள்தான் அதிகமாக இருக்கும். எதையும் யாரும் நம்மிடமிருந்து பிடுங்குவதில்லை. நம்மைத் தூக்கி எறிவதுமில்லை. ஆனால் அது இயல்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. இறுதியில் நாமாகவே தூக்கிப் போட்டுப் போயிவிடுகிறோம். நம் கண்முன்னே தெரிபவை மட்டும் இழப்புகள் அல்ல. நமக்குத் தெரியாமலேயே பல இழப்புகள் இரகசியமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. இது இன்றோ நேற்றோ போட்ட திட்டமில்லை. இச்சமூகத்தைத் திட்டமிட்டு அழித்திட, இழிவு படுத்த பல்லாண்டு காலமாகவே  திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்கள் அவை. இதுதான் இங்கு நிதர்சனமான உண்மையாகும். இக்கருத்தினை மிகவும் இயல்பாக விளக்கிச் செல்கின்றன அடுத்து வரும் வரிகள்.


அதன் வீச்சு / கனன்று எரியும் / எரித் தனலைக் காட்டிலும் / வெப்ப உணர்வில் அமிழ்கிறது /


மேலும், நம் சமூகத்தின் இயலாமையை உணர்த்தும் வகையில் வரும் அடுத்த வரிகள்,
மிகவும் மென்மையாக ஓர் இனத்தின்மீது மிகவும் கவனமாகத் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட அவலங்களை வன்மமாக வரைகிறது.


ஏதும் அறியா இந்தப்  பறவை / தேடியலையும் திசையின்றி / மீண்டும் வந்தமரும் மரக் கிளையிலும் / பற்றி எரிகிறது / தீ /


இக்கவிதை ஒரு தனிமனிதன் வாழ்க்கைக்குள் அவன் சார்ந்த சமூகத்தின் வாழ்க்கையைக் காட்டுகிறது.-    தொடரும்  (நன்றி மக்கள் ஓசை)

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கவிதைகளுடன் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் 7(7)

நிழல் முகங்கள்


என்னை
துரத்திக் கொண்டிருக்கும்
நிழல் முகங்கள்
எனக்கான
அடையாளங்களற்றவை


மனப்படுகையில்
சேர்ந்தடர்ந்த
நினைவுக் கோர்வையில்
பிறந்து வளர்ந்த முரட்டு உருவங்கள்


அழிக்க முயலும் போதெல்லாம்
திமிறிக் கொண்டு
அச்சம் மூட்டும்
முகங்களோடு திரியும் அவை


பதுமை முகம் காட்டி
திடுப்பென இரத்தம் கசியும்
கோரப் பற்களோடு அவள் முகம்


அழுக்கைச் சுமந்து என் மீது படரும்
அந்தக்  கறுத்த உருவம்
குழந்தை முகம் காட்டி
குரல் நெரிக்கும் பெருத்தக் கரம்


என்னைச் சுற்றி தினம் தினம்
கூத்தாடும் அகோர முகங்கள்
எனக்குள் முகிழ்ந்த
விநோதங்கள்


தனித்து நடக்கையில்
தானாகப் பேசிப் போவது
தெரியவில்லை


அந்த நிழல் முகங்களோடு கத்தி
கூச்சலிடுவது உணர்வதில்லை


என்னை தொடரும் நிழல் முகங்களை
அழிக்க முயன்று
நான்
அழிந்து கொண்டிருக்கிறேன்


@@@@@@@@@@சர்ரியலிசம் என்னும் நனவிலி நடப்பியற் கோட்பாடு கற்பனை எழுச்சியை நனவு மனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறது. மரபு வழியான சமூகக் கடப்பாடுகளிலிருந்தும் பிற அழுத்தங்களிலிருந்தும் கற்பனையும் அதன் வெளிப்பாடுகளும் விடுவிக்கப்படவேண்டுமென கூறப்படுகின்றன. அந்த வகையில், உளப்பகுப்பு உளவியலை அடியொற்றி எழுதப்பட்ட ஒரு படைப்பாகவே நிழல் முகங்கள் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. கனவுகளை அடியொற்றி எழும் கற்பனைகளுக்கும் சமூக அழுத்தங்களிலிருந்து விடுபட்ட கற்பனைகளுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வகையான படைப்புகளில் பூர்விகச் சிந்தனைகள், தருக்க மறுப்பு, எதிர் நுண்மதிப்பாங்கு முதலியவற்றை அடியொற்றி கற்பனைகளின் ஆட்சி வலியுறுத்தப்படுகின்றது என முனைவர் சபா.ஜெயராசாவின் புனைகதையியல் எனும் நூலில் குறிப்பிடப்படுகிறது. ஒரு தனிமனிதனின் சமூகப்பார்வைக்குள் முன்னெடுக்க முடியாத சில விஷயங்களை அவனின் கூர்மையான அகப்பார்வைக்குள் கொண்டுவந்து கற்பனையின் சிறகுகளில் அதற்கான விமர்சனங்களை நோக்கி நகரும் அவனின் தேடல்களில் அவனையறியாமல் எதிர்படும் உளவியல் பாதிப்புகள் எழுத்துக் கோர்வைகளாக இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளன.


மனிதன் நிதானத்துடனும் பக்குவப்பட்ட மனத்துடனும் இருத்தல் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு மனிதனும் எந்த ஒரு விஷயத்திற்கும் அளவுக்கதிகமாக உணர்ச்சி வயப்படும்போது இப்படி நிகழ்வது சாத்தியமாகும். ஆனால் மனிதர்கள் உணர்ச்சி வயப்பட்ட பின்பே பக்குவநிலை அடைவார்கள் என்பது இங்கு அனுபவமாக உள்ளது. மனவெழுச்சியின் முதிர்வு ஒருவனது வாழ்வில் நிலைத்தன்மையான முடிவினை எடுக்க உறுதுணையாக இருக்கும் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. அந்தக் கண விடுப்பில், அவனின் முரண் எண்ணங்கள் அனைத்திலும் இருந்து முற்றாக விலக்கப்பட்டு, வேறொரு தெளிந்த மனவெளிக்குள் பிரவேசிக்கிறான். மனச்சலனம் ஓய்ந்த அலைகளாக அவனுக்குள் ஒரு நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். மனத்திலிருந்து கொட்டிய வார்த்தைகளால் மனம் சுத்தமாகிப் போயிருக்கும். இவ்வகைக் கவிதைகள் முழுக்க முழுக்க அகவயமானதாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் புறவயத் தன்மைகளின் பாதிப்புக்களின் பிம்பங்களாகவே இருக்கின்றன.


சூரியன் சந்திரன் ஆகியவை கூட சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றன. அந்தக் கட்டுப்பாட்டை மீறினால், அவை சிதறுண்டு போகும். அதுபோலவே, மனிதர்கள் தமக்குரிய கட்டுப்பாட்டைக் காப்பாற்றி வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் சிதறுண்டு போவார்கள் என்கிறார் மகாத்மா காந்தி. அப்படிச் சிதறுண்டு போன ஒரு மனிதனின் மனஓலங்கள்தான் இத்தகைய கவிதைவரிகளாய் பிரவசம் எடுக்கும். அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வாழ்க்கைத் தொடர்பான பிரச்சினைகளும் பயமும் இயலாமையும் இப்படி அசூர கற்பனை வளையத்திற்கும் அவர்களைப் கட்டிப்போட்டுவிடும். அந்தக் கணத்தில் அதிலிருந்து விடுபட அவனின் ஆழ்மனம் அவனுக்குத் தெரிந்த எழுத்தின் மூலம் அவற்றை வெளிக்கொணர்ந்து, அவனுக்குள் இருக்கும் எதிர்மறை பேய்களை விரட்டியடித்துவிடும் முயற்சியில் இறங்கிவிடுகிறது. அவனுக்குள் ஒளிந்துகொண்டு பேயாட்டம் போட்டதெல்லாம் அவனிடமிருந்து வெளியேறி, அவனை ஒரு தூய ஆத்மாவாக மாற்றியிருக்கும்.


என்னை தொடரும் / நிழல் முகங்களை / அழிக்க முயன்று / நான் / அழிந்து கொண்டிருக்கிறேன் /


என வரும் கவிதையின் இறுதிவரிகள் முரணானத் தன்மையில் முடிக்கப்பட்டிருந்தாலும் கவிஞன் தன் அகஉணர்வுகளைக் கொட்டித் தீர்த்துத் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்ட ஒரு தன்மையையே இக்கவிதை உணர்த்துகிறது. 


ஒரு கண நேர உணர்வுகளின் வெளிப்பாடான இக்கவிதையை நாம் எப்படியும் அணுகலாம். அது அவரவர் உணர்வு நிலைகளைப் பொறுத்ததாகும். இதுதான் விஷயம் என அடித்துச் சொல்லுவது புதுக்கவிதை. இதுவும் இருக்கலாம், இதைத் தாண்டி இன்னும் பலவும் இருக்கலாம் என்றுச் சொல்லி விரிவது நவீன கவிதை. இந்தப் புரிதல் இருந்தால் கவிதை சுவைக்கும்.-    தொடரும்   (மக்கள் ஓசை (02-04-2017)