வியாழன், 3 அக்டோபர், 2019




வாங்க வாசிக்கலாம் (7) – எம்.சேகர் 
மக்கள் ஓசை (30-6-19)


இந்த வாரம்,  தாயாக வேண்டும் என்ற தன் முதல் நாவலின்மூலம் நாவலுலகில் முத்திரைப் பதித்த எஸ். பி. பாமா அவர்களின் புதிய நாவலின் இன்னொரு முகத்தைப் பார்க்கவிருக்கிறோம். தாயாக வேணடும் நாவலைப் போலவே இந்த நாவலிலும் கதாபாத்திர உணர்வுகளோடும் ஏக்கங்களோடும் எதிர்பார்ப்புகளோடும் இயலாமைகளோடும் உணர்வு சார்ந்து நாம் பயணிக்க வேண்டியுள்ளது. இது ஒரு புதுவகையான அனுபவமாகக்கூட உங்களில் சிலருக்கு இருக்கலாம். ஆனால், இது வாழ்க்கை. இது இப்படித்தான் இருக்கவேண்டும்; இப்படித்தான் வாழவேண்டும் என்று சில நீதிகளும் நியாயங்களும் இருந்தாலும், அந்தச் சூழல் என ஒன்று இருக்கிறதே அதன் சுழற்சியில் சிக்கிக் கொண்டால் மீள்வதென்பது என்னமோ சிரமமான ஒன்றாகவே எப்போதுமே இருந்து வருகிறது. அத்தகையச் சூழ்நிலைக் கைதிகளின் கதாபாத்திரக் கட்டமைப்பு எஸ்.பி. பாமாவிற்கு மிக இயல்பாக வருகிறது என்பதைத் தாயாக வேண்டும் நாவலைப்போலவே இந்த நாவலிலும் கதாபாத்திரப்  படைப்புகளின்மூலம் உணரமுடிகிறது.


மலேசியாவின் சிறந்த படைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் இவர் குறிப்பிடத்தக்க பெண்ணியப் படைப்பாளராகவும் பல்துறை வல்லுனராகவும் சிறப்பாகவும் துடிப்புடமுன் இயங்கிக்கொண்டிருப்பவர். இவரின் சாதனைகளைப் பாராட்டி, மலேசியத் தமிழ்க் கலைஞர் இயக்கம் போன்ற பல அமைப்புகள் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளன. இனி, இவரின் இன்னொரு முகத்தில் உங்களுக்கான எனது பகிர்வினைப் பார்ப்போம்.


இன்னொரு முகம்  – எஸ். பி. பாமா


இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் தொடங்கி தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை எனத் தொடர்ந்து 1879 இல் வேதநாயகம் பிள்ளையினால் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம்’, ராஜம் ஐயர் எழுதிய, ‘கமலாம்பாள் சரித்திரம் (1896), அ. மாதவய்யா எழுதிய, ‘முத்து மீனாக்ஷி (1903), தமிழில் முதல் வட்டார நாவலாகக் கருதப்பபடும் ஆர். சண்முகத்தின் நாகம்மாள் (1942) என இன்றுவரை இலக்கியப் படைப்புகளில் பெண்களை முன்வைத்து புனையும் புனைவுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய படைப்புகளில் பெண்களின் மனவிசாலங்கள், மன விகாசங்கள், மன விரிப்புகள் , மன மடிப்புகள், மனச்சிறகடிப்புகள் என அவர்கள் சார்ந்த உலகமும் அதற்கான அவகாசங்களும் காரணக் காரியங்களும் தெளிவுப்பெற முற்பட்டு அவர்களின் குரலாக ஒலிக்கின்றன.


மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் இத்தகைய நாவல்கள் பல தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. பெண் கதாபாத்திரங்களை முன்நிறுத்திப் படைக்கப்படும் இத்தகைய புனைகதைகளில் பெண்ணியத் தன்மையையின் புனிதத்தைக் கட்டிக்காப்பதற்காகவே இப்பாத்திரப்படைப்புகள் போட்டிப்போட்டுக்கொண்டு படைக்கப்படுவதையும் இங்குக் காண முடிகிறது. எத்தகைய பிரச்சினையாகவும் சிக்கலாகவும் இருந்தாலும் பெண் என்பவள் பெண் என்றும் தாய் என்றும் ஒரு புனிதத்தை நோக்கி இந்தச் சமூகக் கட்டமைப்புகளுக்குள் வாழவேண்டிய ஒரு சூழலையே பெரும்பாலான கதைகளுக்குள்ளும் கட்டமைக்கப்படுகின்றன.  குடும்ப ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்பது பெண்களுக்கானதான ஒன்றாகத்தான் இன்றைய வாழ்வியல் மரபில் காலங்காலமாய் எழுதப்படாத சட்டமாய்ப் பின்பற்றப்பட்டும் வருகிறது.


இந்தக் கட்டமைப்பின் வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்திருப்பதுதான் இந்த, ‘இன்னொரு முகம். பொதுவாசகன் இதனைக் கடந்து செல்லும்போது அவனுக்குச் சில சிக்கல்கள் வரலாம். காலங் காலமாய் கட்டமைத்து வைத்திருக்கின்ற சில மரபுகளும் அவை சார்ந்த விழுமியங்களும் அவனைத் தடுமாற வைக்கலாம். எனவே, இத்தகைய கதைகளுக்கான வாசக மனங்கள் மிகவும் விசாலாமானவைகளாகவும் சமகாலப் படைப்பிலக்கியத்தில் அணுக்கமான பார்வையுடையவைகளாகவும் இருக்கவேண்டும். எல்லா கதைகளும் எல்லாராலும் விரும்பி வாசிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வாசகனுக்கும் இருக்கும் விருப்பு வெறுப்பு, வாழும் சூழல், அவனின் பரந்த வாசிப்பனுபவம் வெவ்வேறு காலத்திற்கும் வேறுபட்டுக்கொண்டுதான் இருக்கும். இது இயற்கையின் நியதி.


ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு மாறுதலுக்கும் இடம்கொடுக்காமல் இருக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பாளிகளாக இருக்கமுடியும். சககாலப் படைப்புகளில் நுகர்தல் இல்லாமையும் பரந்த வாசிப்பனுவம் இல்லாமையும் இத்தகைய படைப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனமில்லாமையும் அதற்கான களம் இங்கு அதிகம் இல்லாமையும் இதற்கான காரணகாரியங்களாக இருக்கலாம். இவையனைத்தையும் கடந்துதான் இத்தகைய எழுத்து முயற்சிகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.  


அவ்வகையில், எஸ். பி. பாமாவின் இந்த, ‘இன்னொரு முகம் நவீனப் படைப்பாக்கக் கூறுகளின் தன்மையுடன் கதையாடல்களினூடே எழுப்பப்ட்டுள்ளது என்பதும் பலரும் தொட்ட கதைக்களத்தில் சிலர் மட்டுமே தொட்டுப்பார்க்கும் சில மையங்களுடன் மிகவும் நேர்மையாக எஸ். பி. பாமா இந்நாவலை உருவாக்கியுள்ளார் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  வாழ்க்கையிலிருந்து பெற்ற ஓர் அனுபவத்தை (கேட்டதாகவும் பார்த்ததாகவும் அல்லது வாசித்ததாகவும் இருக்கலாம்) தனது இயல்பான கதைசொல்லல் முறைமையால் முன்வைக்கும் எழுத்தாற்றல் கதாசிரியருக்கு இருக்கிறது என்பதையும் இந்நாவல் எடுத்தியம்பியுள்ளது.


நாம் அறியாத மன ஆழங்களின் பெரும்வலையில் சிக்கியுள்ள ஒரு சின்னஞ்சிறு துகள்தான் இந்நாவல். நாம் காணும் இப்புறவுலகம் அதன் சாரமான இன்னொன்றால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது  என்பதையே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியப் படைப்புகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்தச் சாரத்தையே அவை மீண்டும் மீண்டும் புதிது புதிதாக வரையறை செய்துகொண்டிருக்கின்றன (புதிய காலம். ஜெயமோகன். 2009) என்பதற்கேற்ப இந்நாவல் ஆணாதிக்க மைய உணர்வுகளால் உடைந்துபோன பல பெண் மனங்களை மீண்டும் உடைத்துப் பார்த்துச் சிதைந்துபோன வாழ்விலிருந்து மீண்டெழப் பார்க்கிறது. 


சுந்தர் – ரஞ்சனி, அல்லி – முத்தையா, பாண்டியன் – கௌரி, நித்யா – முரளி, ரகு, ஆக்ஷா, மல்லிகா, காளிமுத்து – எல்லம்மாள் என இந்நாவலில் கதாபாத்திரங்களும் அவரவர் இயல்புப் போக்கிலேயே படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. எங்கும் எதிலும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் அந்தந்தக் கதாபாத்திரங்கள் அதனதன் போக்கிலேயே வந்து, சமகால கணவன் மனைவி உறவின் அணுக்கங்களையும் விரிசல்களையும் நம் முன்னே விரித்துக்காட்டுகின்றன. மனித மனத்தின் பலவீனங்களையும் அதனால் ஏற்படும் முரண்களையும் இந்நாவல் அலசுகிறது. மனிதன் புறவயமாகச் செயல்படும் அனைத்திற்குள்ளும் அகவயமான ஏதோ ஒன்று நின்று இயக்கிக்கொண்டிருப்பதை இக்கதாபாத்திரப்படைப்புகள் தெள்ளத்தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளன. மேலும், இப்பாத்திரப்படைப்புகள் நம் பக்கத்து வீட்டிலோ, தெருவிலோ நாம் தினந்தோறும்  காணும் நமக்கு மிகவும் நெருக்கமான உறவுகள்போல் நம்மோடு சகஜமாக உறவாடிச் செல்கின்றன. அவரவர் நியாயங்கள் அவரவர்களுக்கே நியாயமாகப்படும் என்பதற்கேற்ப ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நிலையில் நின்று தனக்காகவே வாதாடுகின்றன.  


மனிதன் தோன்றிய காலத்திலுருந்தே இனக்குழு வாழ்க்கையில் பெண்ணே தாய் என்ற ஸ்தானத்தில் முதலிடம் வகித்தாள். குழுவை வழி நடத்திச் செல்லும் அதிகாரம் பெண்ணிடமே இருந்தது. ஏனென்றால், ஒரு குழுவிற்குள் தந்தை யாரென்று தெரியாது. தாய் மட்டுமே சந்நதியினருக்கு உறுதியாகத் தெரியும். அச் செம்மூதாய் மட்டுமே குழுவைத் தலைமை தாங்க முடியும். அன்றைய சூழலில், அனைத்தையுமே பெண்கள்தான் நீண்ட காலம் மேலான்மை செய்து வந்தனர் எனப் பல ஆய்வுகள் கூறுகின்றன.  குடும்பம், தனிஉடைமை எனும் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின், ஆண், தாய்வழிச் சமூக அமைப்பைக் கைப்பற்றி தந்தைவழிச் சமூக அமைப்பாக அதை மாற்றிவிட்டான் (திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும். ந. இரத்தினக்குமார். 2016). சுந்தரின் கதாபாத்திரம் வெகுஜனப் பார்வையில் நல்லதொரு கதாபாத்திரமாகத் தெரிந்தாலும் அவனுக்குள்ளும் ஆணாதிக்கம் மையம் கொண்டிருப்பதைக் காணமுடிவதானது பெரும்பாலான ஆண்களின் ஒட்டுமொத்த உருவகமாகவே அக்கதாபாத்திரத்தை நாவலாசிரியர் படைத்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. மேலும், ரகுவின் கதாபாத்திரமும் எந்நிலையிலும் பெண்களுக்கெதிரான ஒரு முரணான பார்வையுடன் படைக்கப்பட்டுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளல் வேண்டும். 


அக்காலத்திலேயே பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பிய பாரதி, புதுமைப் பெண்களைப் புரட்சி நாயகிகளாய்த் தம் கவிதைகளில் வாழவைத்தார்.


‘’கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’’ என்றும்,
‘’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்’’ என்றும், மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்திவோம் எனவும் பெண்ணியத்தைப் பற்றி அன்றே நிறையவே எழுதியுள்ளார்.


ஆண் எப்படியும் வாழலாம் என்றும் பெண் என்பவள் இப்படித்தான் வாழவேண்டும் என்றும் ஆணாதிக்க வர்க்கம் எழுதாத சட்டங்களை உருவாக்கி, பெண் இனத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலகட்டத்தில்தான் பாரதிதாசன்,
‘’பெண்ணுக்கும் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ
மண்ணுக்கக் கேடாய் மதித்தீரோ பெண்ணிணத்தை’’,
என பெண்களுக்காக முழக்கமிட்டார். மேலும்,
‘’ஆண்உயர் வென்பதும் பெண் உயர் வெண்பதும்
நீணிலத் தெங்கனும் இல்லை’’
எனத் தொடங்கும் பாடலில் பெண்ணியத்திற்கு விளக்கம் தந்துள்ளார். 


பெண்ணிய விமர்சகரும் தத்துவவாதியாகவும் செயல்படும் ஜுலியா கிறிஸ்துவா, மனித மனம் குடும்பம், சமூகம், மரபு, பண்பாடு ஆகியவற்றால் அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்று தனது நூலில் (Revolution in Poetique – language 1974) விரிவாகக் கூறுகிறார். மனிதத் தன்னிலை, மனப்பரப்பில் பிளவுகொண்டு உறவு வெளிப் பிரதேசங்களைக் கடந்து பயணிப்பதைத் தவிர்க்க இயலாது என்றும் குறிப்பிடுகிறார். குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்கள் சமூக விழுமியங்களால் கட்டுப்படுத்தப்படும்போது அவர்களின் மனிதத் தன்னிலை, அவர்களைச் சமூக ஒழுக்கச் சட்டகங்களிலிருந்து வெளியேறத் தூண்டுவதற்குச் சூழலியலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. இந்நாவலில் வரும் ஆக்ஷாவின் தடுமாற்றத்திற்கும் பிறழ்விற்கும் கதாபாத்திர நசிவிற்கும் அத்தகைய ஒரு சூழலே காரணமாகிறது. அதுபோல, சுந்தர், ரஞ்சனி, அல்லி, பாண்டியன், கௌரி போன்றோரின் மனப்பதிவின் அடுக்குகளின் நேர்இசைவுகளுக்கும் முரண்களுக்கும் அவரவருக்கு ஏற்படும் சூழலியல் அனுபவமே முக்கியக் காரணிகளாக இந்நாவலின் மூலம் சுட்டப்பட்டுள்ளது.


சுமார் இருநூறு ஆண்டுகால மலேசியத் தமிழர்களின் வரலாற்றுச் சுவட்டில், தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்ட தமிழ்ப்பெண்களின் வாழ்வாதாரம் மேலோட்டமாகப் பார்க்கும்போது போற்றுதலுக்குரியதாகத் தோன்றினாலும் அப்போற்றுதல்களுக்குப் பின்னால் அமுக்கப்பட்டிருக்கும் இருட்டடைப்புச் செய்யப்பட்டிருக்கும் பெண்களின் தனிசுதந்திரம், பெண்ணடிமை என்பது இன்றும் அவலநிலையிலேயே உள்ளது என்பதற்கு இந்த, ‘இன்னொரு முகம் நல்லதொரு எடுத்துக்காட்டு. இன்றைய நவநாகரிக காலத்தில், மனத்திலே அழுத்தங்களைச் சுமந்துகொண்டு வெளிவாழ்க்கைக்காக முகப்பூச்சுகளைப் பூசி வேடம் தரிக்கும் பெண்கள் தினந்தோறும் புன்னகையோடு நம்மைக் கடந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.


ஒரு நாவல் எங்கும் தொடங்காது என்றும் எங்கும் முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும், நாவலின் தொடக்கத்தின் முன்னும் முடிவுக்கும் பின்னும் ஒருவித முடிவின்மை உள்ளது என்றும் அது வாழ்வின் முழுமையைச் சித்தரிக்க வேண்டிய ஓர் இலக்கிய வடிவமாகும் (நாவல். ஜெயமோகன். 2010) என்றும் சுட்டப்படுகிறது. கவிதையில் அதன் மௌனம் சொற்களுக்கு இடையே இருப்பது போல, சிறுகதையில் அதன் மௌனம் அதன் முடிவில் இருப்பதுபோல, நாவலின் மௌனம் அதன் இடைவெளிகளில்தான் இருக்கிறது. நாவலில் விடப்படும் அல்லது உருவாக்கப்படும் இடைவெளிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் எழுதப்படாத இன்னொரு கதை மறைந்துள்ளது. வாசகர்கள் இத்தகைய இடைவெளிகளைத் தங்களுடைய வாசிப்பனுபவத்தையும் கற்பனையையும்  மனவிரிவையும் கொண்டு நிரப்பும்போது நாவல் இன்னொரு நிலையையும் வாசகன் இந்த வாழ்வின் இன்னொரு தரிசனத்தையும் காணும் வாய்ப்பையும் பெறுகிறான்.


இத்தகைய ஓர் அமைப்பில்தான் இந்த இன்னொரு முகம் தொடங்கி முடிவடைகிறது. சுந்தரின் நினைவோட்டங்களில் வரும் அந்தத் தோட்டப்புற வாழ்வியல் சூழலும் அன்றைய பெண்களும் அவர்கள் ஆண்களுக்குப் பணிந்துகிடக்கும் போக்கும் அடிமைத்தனமும் இன்னொரு நாவலுக்குரிய ஒரு களத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. பின்னோட்டமாக வரும் சில சம்பவங்களை வாசகன் நுணிகிச் செல்லும்போது இன்னொரு நாவலுக்கான கதைக்களம் விரிந்து செல்வதை உணர முடியும்.


நாவலாசிரியர், சிதறடிக்கப்பட்ட வாழ்வியலின் நுண் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு மனிதக் கூட்டங்களுக்குள் அமுங்கிக் கிடக்கும் அகநெருக்கடிகளைப் பலதரப்பட்ட பல்முரண் கொண்ட கதாபாத்திரங்களால் பதிவு செய்து, நாவல் வாசிப்பின் படிநிலைகளைகளைப் பன்முகப்படுத்துவதில் தனது தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார். மலேசிய நாவல்களில் சொல்லப்படாத வாழ்க்கைப் புத்தகத்தின் சில அகப்பக்கங்களை நம் கண் முன்னே நிழலாடவிட்டுள்ளார்.



நாவல் அமைப்பின் ஓரிரு கூறுகளை இந்த, ‘இன்னொரு முகம் நமக்குக் காட்டினாலும்கூட, நாவல் என்ற ஒரு பிரமாண்டத்தின் தரிசனத்தை இந்நாவல் படைப்பில் காண இயலவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மேலோட்டமான கதையுரைப்புகளும் மொழியாடலும் அழுத்தமாகச் சொல்லப்பட்ட சிக்கல்கள் இல்லாமையும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், நமக்கான படைப்பு இது. நமக்கான அடையாளம் இது. நம் சார்ந்த வாழ்வனுபவத்தின் பிரதி இது. இந்த வகையில், இந்த இன்னொரு முகத்தை போற்றுதலுக்குரியதான மலேசிய மண்ணின் இன்னொரு இலக்கியப் படைப்பாக வரவேற்று மகிழ்வடைவோம். வாய்ப்புக் கிடைப்பவர்கள் இந்த நாவலை வாசித்துப் பாருங்கள். நான் இங்குப் பகிர்ந்துகொண்டதைவிட நீங்கள் இந்நாவலை விரும்பி வாசிப்பீர்கள். ஏனென்றால் இந்தக் கதாபாத்திரங்களில் எல்லாம் நாமே யாதுமாகி நிற்கிறோம்.


- தொடரும்


1 கருத்து: