காதலைத்தேடி
வார்த்தைகளைத் தோண்டுகிறேன்
முகம் தெரியாத முகத்துக்காக
என் முகத்தைத் தொலைத்துவிட்டு
வெண்ணிலவைத் தொலைத்த
வானத்தின்
கீழே நின்று தேடுகின்றேன்
என் காதலை
அண்டார்டிகா பனிப்பாறைகளாய்
எங்கும்
வெள்ளை காதல் சமாதிகள்
ஆப்கானிஸ்தானின்
தலிபான் ஆட்சியாளர்களால்
இடிக்கப்பட்ட புத்தனின் சிலையாய்
உன் நினைவின் நெருப்பு
தெருவோரத்துக் கவிதைக் குப்பைகளாய்
உன் காதலும்
சாம்பலாகிக் கரைந்து கொண்டிருக்கிறதா?
யார் யாரோ
பரிதாபப் பார்வை வீச...
என் தவம்
உன்னொருவளின்
உயிர்ப்பார்வைக்கு மட்டும்தான்.
என் உயிரின் சாய்மானம்
உன் காதல்.
அதை யார் கீழே தள்ளியது?
கூழாங்கற்களை உரசிப்பார்.
தீ கருவுயிர்க்கும்.
என் மனசை உரசிப் பார்.
நயாகரா நீர்வீழ்ச்சியாய்
கவிதைத் துளிகள் கொட்டும்.
ஒவ்வொரு துளிகளிலும்
- தேடல் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக