சனி, 26 பிப்ரவரி, 2011

தமிழில் வேற்றுமை உருபுகள் - ஒரு பார்வை


முன்னுரை 
  மனிதன் எப்போது பேசத்தொடங்கினான் என்பது இன்றும் அறிந்து கொள்ள இயலாத மறையாக இருந்து வருகிறது. இலக்கியம் தண்டமிழ் மொழியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சி நிலையுற்று இருந்தது என்பது சான்றோர் வாக்கு. இலக்கியம் தோன்றியப் பின்னரே இலக்கணம் தோன்றுவது பண்டைக்கால இயல்பு.
  இவ்வகையில் உருவான அகத்தியரின் அகத்தியம் நமக்குக் கிடைக்வில்லை. தொல்காப்பியரின் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்த இலக்கண நூல்கள் பல. அதில் நன்னூலும் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் பவணந்திமுனிவர். அவர் தொல்காப்பியத்தை வழிநூலாகக் கொண்டு, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பது எழுத்து, சொல் இரண்டிற்கும் உள்ள இலக்கணம் மட்டுமே.
  சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியது. பெயரியலில் வரும் வேற்றுமை, வேற்றுமை உருபுகளையே அடுத்து நாம் காணப்போகிறோம்.





வேற்றுமை
  இவ்வேற்றுமை எட்டு வகைப்படும். எண்ணாலேயே வேற்றுமையின் பெயர்கள் வழங்கப்படுகின்றன. வடமொழியில் எட்டு வேற்றுமைகளும், இலத்தின மொழியில் ஆறு வேற்றுமைகளும், கிரேக்கமொழியில் ஐந்து வேற்றுமைகளும், ஆங்கிலத்தில் ஐந்து வேற்றுமைகளும் இருப்பதாக அ.கி. பரந்தாமனார் தன் நல்ல தமிழ் எழுத வேண்டுமா? எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
  பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதே வேற்றுமை எனப்படுகிறது. இதனையே தெய்வச்சிலையார்,
ஒரு பொருளை ஒருகால் வினை முதலாக்கியும், ஒரு கால் செயப்படு பொருளாக்கியும், ஒரு கால் கருவியாக்கியும், ஒரு கால் ஏற்பதாக்கியும், ஒரு கால் நீங்க நிற்பதாக்கியும், ஒரு கால் உடைய தாக்கியும், ஒரு கால் இடமாக்கியும் வேறுபடுத்தலான் வேற்றுமை [1] என விளக்குகிறார்.
இயல்பாய் நிற்கும் பெயர்கள் வாக்கியங்களில் வரும்போது அவற்றின் பொருள் திரிந்து வரும். இதுதான் வேற்றுமை.  இப்படித் திரிவதற்கு அறிகுறியாகப் பெயர்களின் இறுதியில் சில எழுத்துகளோ சொற்களோ சேர்க்கப்படும். இவ்வாறு சேர்க்கப்படும் எழுத்துகளையும் சொற்களையும் உருபுகள் என்பர். வேற்றுமையைக் காட்டும் உருவங்களே உருபுகள். பெயர்ச்சொற்களே உருபை ஏற்குமேயன்றி, வினைச்சொற்கள் வேற்றுமை உருபை ஏற்காது.
நான் கடை சென்றேன்
நான் கடைக்குச் சென்றேன்
மேலே உள்ள இரண்டு தொடர்களையும் படிக்கும் பொழுது முதல் தொடர் தெளிவான பொருளை உணர்த்தவில்லை. இரண்டாவது தொடரில் கடை என்பதுடன் கு சேர்ந்துள்ளதால் பொருள் தெளிவாக விளங்குகிறது.
ஆசிரியர் பாராட்டினார்
ஆசிரியரைப் பாராட்டினார்
முதல் தொடரில் பாராட்டியவர் ஆசிரியர். இரண்டாம் தொடரில் பாராட்டுப் பெற்றவர் ஆசிரியர். அவரை வேறு ஒருவர் பாராட்டினார். ஆசிரியர் என்னும் சொல்லின் இறுதியில் நின்றுள்ள என்பது இப்பொருள் வேறுபாட்டை உண்டாக்கியுள்ளது.
இவ்வாறு ஒரு தொடரில் வரும் பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாகும். இவ்வேற்றுமை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம்வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என எட்டு வகைப்படும். இதனையே நன்னூலார்,
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப், பொருள்
 வேற்றமை செய்வன, எட்டே வேற்றுமை  291
என்கிறார். எவ்வகைப்பட்ட பெயர்க்கும், ஏற்குமிடத்தில், இறுதியில் நின்று, அப்பெயரின் பொருளை வேறுபடுத்தி உணர்த்துவது வேற்றுமை எனப்படும். அது எட்டுவகைப்படும்.[2]
வேற்றுமையின் பெயர்களையும் அவற்றின் வரிசை முறையையும்,
பெயரே ஐ ஆல் கு இன் அது கண்
 விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை (292)
என்கிறார் நன்னூலார். இதனையே தமிழண்ணல்,
பெயர் (எழுவாய்),, ஆல், கு, இன், அது, கண், விளி என்பன அவற்றின் பெயர்களாகும். எழுவாய் வேற்றுமை, ஐ வேற்றுமை, ஆல் வேற்றுமை, விளி வேற்றுமை என்பனவே பழம் பெயர். பின் வரிசை கருதி இவற்றை முறையே முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என எண்ணிக்கை வரிசைப்படி அழைக்கலாயினர்´ [3] என்கிறார்.

முதல் வேற்றுமை
கனிமொழி பாடினாள்
இதில் கனிமொழி என்னும் பெயர்ச்சொல் எழுவாயாக உள்ளது. இது எவ்வகையான மாற்றமும் அடையாமல் இயல்பாய் நிற்கிறது.
இவ்வாறு ஒரு தொடரில் ஒரு பெயர்ச் சொல் எழுவாயாக இருப்பதை முதல் வேற்றுமை என்கிறோம். இதனை எழுவாய் வேற்றுமை என்றும் கூறுவர்.
முதல் வேற்றுமை பெரும்பாலும் வினை முற்றுகளையும், சிறுபான்மை பெயர்ச் சொற்களையும் வினாச் சொற்களையும் கொண்டு முடியும்.
பாரி வந்தான் (எழுவாய் வினைமுற்றுடன் முடிந்துள்ளது)
பாரி வள்ளல்களுள் ஒருவன் (எழுவாய் பெயர்ப் பயனிலையுடன் முடிந்துள்ளது)
பாரி என்பவன் யார்?’ (எழுவாய் வினாச் சொல்லுடன் முடிந்துள்ளது.
முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை. இதற்கு ஆனவன், ஆனவர், ஆனது, என்பவள், என்பவை போன்றவை சொல்லுருபுகளாக வரும். இதில் ஐம்பாற் சொல்லுருபுகளும்  உண்டு என்றும் கூறுவர்.[4]
எடுத்துக்காட்டு – முருகனானவன், ஆசிரியரானவர், யானையானது, சக்தி என்பவள், பசுக்கள் என்பவை. முதல் வேற்றுமை கருத்தாப் பொருளை உணர்த்தி வரும்.
முதல் வேற்றுமையை நன்னூலார்,



அவற்றுள்
 எழுவாய் உருபு திரிபு இல் பெயரே
 வினை, பெயர், வினாக் கொளல் அதன் பயனிலையே (295) எனக் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் வேற்றுமை
மாடு புல்லை மேய்ந்தது
மக்கள் சாலையை அமைத்தனர்
     இத்தொடர்களில் உள்ள புல்’, சாலை என்னும் பெயர்ச் சொற்கள் என்னும் உருபை ஏற்று செயப்படு பொருளாக வேறுபடுகின்றன. இது செயப்படு பொருள் வேற்றுமை என்றும், இரண்டாம் வேற்றுமை என்றும் பெயர் பெறும். இவ்விரண்டாம் வேற்றுமையானது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை முதலிய பொருள்களில் வரும்.
கந்தன் வீட்டைக் கட்டினான் – ஆக்கல்
கண்ணகி மதுரையை எரித்தாள் – அழித்தல்
கவிதா சென்னையை அடைந்தாள் – அடைதல்
மன்னன் கோட்டையை விட்டு சென்றான் – நீத்தல்
கரிகாலன் புலியைப் போன்றவன் – ஒத்தல்
முத்து பொருளை உடையான் – உடைமை
     இதனையே நன்னூலார்,
இரண்டா வதனுருபு ஐயே அதன்பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும் (296), என்கிறார்.
     இரண்டாம் வேற்றுமைக்கு இரண்டு செயப்படுபொருள்கள் அருகி வருவதுண்டு.
அவன் பசுவைப் பாலைக் கறந்தான் இவ்வாக்கியம் நன்றாக இருக்கிறதா? ஆதலால்,
அவன் பசுவினது பாலைக் கறந்தான் என மாற்றி அமைப்பதே சிறப்பு என்கிறார் அ.கி.பரந்தாமனார் தனது நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலில்.

மூன்றாம் வேற்றுமை

மூன்றா வதனுருபு ஆல் ஆன் ஒடு ஓடு
 கருவி கருத்தா உடனிகழ்வு அதன் பொருள் (297)

காந்தியடிகளால் நாடு விடுதலை பெற்றது.
நளன் கதை வெண்பாவால் இயற்றப்பட்டது.
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
சிற்பியால் சிலை செய்யப்பட்டது.
தந்தையொடு தாயும் வந்தாள்.
அறிவோடு செல்வமும் வேண்டும்.
     மேற்காணும் தொடர்களில் ஆல், ஆன், ஒடு, ஓடு என்னும் வேற்றுமை உருபுகள் உள்ளன. இவையே காந்தியடிகள், வெண்பா, கரிகாலன், தந்தை, அறிவு ஆகிய பெயர்ச் சொற்களின் பொருளை முறையே கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும், உடனிகழ்ச்சிப் பொருளாகவும் வேறுபடுத்துகின்றன.
     ஆல், ஆன், கொண்டு என்னும் உருபுகள் கருவிப் பொருளிலும் கருத்தாப் பொருளிலும், ஒடு, ஓடு என்னும் உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளிலும் வரும்.
வாளால் வெட்டினான். – கருவிப்பொருள் (அஃறிணையால் அமைவது கருவிப் பொருள்)
அரசனால் ஆகிய கோயில்- கருத்தாப் பொருள் (உயர்திணையால் அமைவது கருத்தாப் பொருள்)
தந்தையோடு மகன் வந்தான் – உடனிகழ்ச்சிப் பொருள் (உடன் நிகழ்வது)

     வாள் கொண்டு வெட்டினான்.
     கணவனுடன் மனைவி வந்தாள்.
முதல் தொடரில் உள்ள கொண்டு என்பது கருவிப் பொருளிலும், அடுத்த தொடரில் உள்ள உடன் என்பது உடனிகழ்ச்சிப் பொருளிலும் வந்துள்ளன. கொண்டு, உடன் – இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகாளாகும்.
     தொல்காப்பியர் ஒடு உருபை மட்டும் கூறியுள்ளார். பிற்காலத்தார் ஓடு என்னும் உருபையும் சேர்த்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வுருபுகளை உயர் பொருளின் இறுதியில் சேர்த்து  அரசனோடு வீரர் வந்தனர் என்றும் ஆசிரியரொடு மாணாக்கர் வந்தனர் என்றும் எழுதவேண்டுமேயன்றி, நாயொடு நம்பி வந்தான் என்றோ, தம்பியோடு அண்ணன் வந்தான் என்றோ எழுதுதல் கூடாது என்று கூறியுள்ளார். அதனால் அவர்,
ஒருவினை ஒடுச்சொல் உயர்பின்வழித்தே (தொல்.சொல், நூற்பா 91) என்கிறார். இவ்வழக்கு இக்காலத்தில் இல்லை.[5] என விளக்குகிறார் அ.கி. பரந்தாமனார்.

நான்காம் வேற்றுமை

                கலைச்செல்வன் கல்லூரிக்குச் சென்றான்.
     முதல்வர் கவிஞருக்குப் பரிசளித்தார்.
இத்தொடர்களில் வரும் கல்லூரி, கவிஞர் என்னும் பெயர்கள் கு என்னும் உருபை ஏற்றுப் பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன. இவ்வேறுபாடுகள் நான்காம் வேற்றுமை எனப்படும். கு என்பது நான்காம் வேற்றுமை எனப்படும்.
நான்காம் வேற்றுமை கொடை, பகை, நேர்ச்சி (நட்பு), தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என்னும் ஏழு பொருள்களில் வரும்.
மன்னன் புலவர்க்குப் பொன் வழங்கினான். (கொடை)
பாம்புக்குக் கீரி பகை. (பகை)
கபிலருக்கு நண்பர் பரணர். (நட்பு)
செல்வர்களுக்கு அழகு சுற்றம் தழுவுதல். (தகுதி)
வளையலுக்குப் பொன் வாங்கினான். (அதுவாதல்)
கூலிக்கு வேலை செய்தான். (பொருட்டு)
     செங்குட்டுவனுக்கத் தம்பி இளங்கோ. (முறை)
அடுத்து வரும் சொற்றொடரைக் காண்போம்.
    
      புகழுக்காகப் போர் புரிந்தான்.
     கணவன் பொருட்டு மனைவி பரிசு பெற்றாள்.
இவற்றில் உள்ள ஆக, பொருட்டு என்பன நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும். நான்காம் வேற்றுமைக்கான நன்னூலாரின் நூற்பா இப்படி வருகிறது.
     நான்கா வதற்கு உரு பாகும் குவ்வே
      கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல்,
      பொருட்டு, முறை ஆதியன் இதற்கு இது எனல் (298)

ஐந்தாம் வேற்றுமை

     வீரத்தில் சிறந்தது தமிழ்நாடு.
     தமிழ்நாட்டின் தெற்கெல்லை குமரிமுனை.
இத்தொடர்களில் உள்ள வீரம், தமிழ்நாடு என்னும் சொற்களுடன் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துகின்றன. இவை ஐந்தாம் வேற்றுமை ஆகும். இல், இன் என்பவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள். இதற்கான நூற்பா,
     ஐந்தா வதன் உருபு இல்லும் இன்னும்
      நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருளே (299) என வருகிறது.
     இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் நான்கு பொருள்களை உணர்த்துகின்றன.
     மலையின்வீழ் அருவி. (நீங்கல் - நீங்குதல்)
     பாலின் வெண்மையது இவ்வாடை. (ஒப்பு)
     மதுரையின் மேற்கு கோவை. (எல்லை)
     அறிவினில் சிறந்தவர் தமிழர். (ஏது -  காரணம்)
மேலும்,
     கண்ணன் வீட்டிலிருந்து வந்தான்.
     வேடன் குன்றினின்று விழுந்தான்.
     இராமன் மணியை விட மூத்தவன்.
      மணிமொழியைக் காட்டிலும் கனிமொழி நல்லவள்.
     இத்தொடர்களிலுள்ள இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பவை ஐந்தாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.
     சிங்கப்பூரின் வடக்கு என ஐந்தாம் வேற்றுமையால் சுட்டப்பட்ட எல்லைப்பொருள் இன்று சிங்கப்பூருக்கு வடக்கு என நான்காம் வேற்றுமையால் வழங்கப்படுகின்றது. நட்பில் உயர்ந்தவர் பிசிராந்தையார் என்று ஐந்தாம் வேற்றுமையால் வழங்கப்பட்ட ஏதுப்பொருள், இன்றைய வழக்கில் நட்பால் உயர்ந்தவர் பிசிராந்தையார் என மூன்றாம் வேற்றுமையால் சுட்டப்படுகிறது.
    
ஆறாம் வேற்றுமை

     எனது கை.
     எனாது கை.
      என கைகள்
இத்தொடர்களில் உள்ள யான் என்னும் பெயர்ச்சொல் என் எனத் திரிந்து நின்று அது, ஆது, அ என்னும் உருபுகளை ஏற்று, உரிமைப் (கிழமை) பொருள் உடையதாய் வேறுபட்டது. இவ்வேறுபாடு ஆறாம் வேற்றுமை எனப்படும். அது, ஆது, அ என்பவை ஆறாம் வேற்றமை உருபுகளாகும்.
     என்னுடைய கை.
     நண்பனுடைய புத்தகம்.
இத்தொடர்களிலுள்ள உடைய என்னும் உருபு ஆறாம் வேற்றமைச் சொல்லுருபாகும். இது ஆறாம் வேற்றுமைப் பொருளில் (உரிமை) வரும்.
     அது என்பது அஃறிணை ஒருமைப் பெயர்களின் கிழமையைக் குறிக்கவே பயன்படவேண்டும் என்பது இலக்கண வல்லார் கொள்கை. இக்காலத்தில் அது அஃறிணைப் பன்மையிலும் உயர்திணை ஒருமையிலும் நடைமுறையில் வழங்கப்படுகிறது.
     எனது கைகள்
     எனது மகன்
எனப் பன்மையும் உயர்திணை ஒருமையும் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம். மேலும் உடைய நிற்க வேண்டிய இடத்தில் இன் சாரியை நின்று இடப்பொருளை உணர்த்துகிறது.
     கண்ணனுடைய வீடு – கண்ணனின் வீடு
         
     ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
      பன்மைக்கு அவ்வும் உருபாத்; பண்பு உறுப்பு
      ஒன்றன் கூட்டம் பலவின் கூட்டம்
      திரிபின் ஆக்கமாம் தற் கிழமையும்
      பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே (300)
ஆறாம் வேற்றமைக்குப் பொருள் கிழமைப் பொருள். கிழமை என்பது உரிமை, உறவு, தொடர்பு எனப் பொருள்படும்.[6] இது தற்கிழமை, பிறிதின் கிழமை என இரண்டு வகையாகக் கூறப்படும்.
     வேலனது விரல். (தற்கிழமை – பிரிக்க முடியாதது)
     வேலனது வேல். (பிறிதின் கிழமை – தனித்தனியாகப் பிரிக்கக் கூடியது)
      
ஏழாம் வேற்றுமை

ஏழன் உருபுகண் ஆதி யாகும்
 பொருள் முதல் ஆறும் ஓர் இரு கிழமையின்
 இடனாய் நிற்றல் இதன் இதன் பொருள் என்ப (302)
     ஏழாம் வேற்றுமை உருபுகள் கண் முதலாகிய பலவாம். இதன் பொருளாவது, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்களும் தற்கிழமை, பிறிதின் கிழமை என்னும் இரண்டிற்கும் இடமாக நிற்கலாம். எனவே ஏழாம் வேற்றுமையின் பொருள் இடப்பொருள்,[7] என விளக்கம் தருகிறார் பேராசிரியர் சோம. இளவரசு.


தமிழில் இனிமை உண்டு.
பள்ளியின் கண் கல்வி பயில்.       
பிறரிடம் பகை கொள்ளாதே.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
மேசை மேல் புத்தகத்தை வை.
     மேலே கண்ட தொடர்களில் உள்ள தமிழ், பள்ளி, பிறர், பெட்டி, மேசை என்னும் பெயர்ச் சொற்களுடன் இல், கண், இடம், உள், மேல் என்னும் உருபுகள் வந்து பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன. இவ்வேறுபாடு ஏழாம் வேற்றுமையாகும். இல், கண், இடம், உள், மேல் என்பவை ஏழாம் வேற்றுமை உருபுகளாகும். இவ்வேற்றுமை இடப் பொருளை உணர்த்தும்.
     இடப்பொருளை உணர்த்தும் உருபுகள் பத்தொன்பது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. நன்னூலாரோ அவர் காலத்து வழங்கிய சொற்களையும் கருத்திற்கொண்டு 28 ஆக வகுத்தார். அவற்றுள் பல இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டன. இல், கண், இடம் ஆகியவையே இக்கால வழக்கில் உள்ளன. இடம் என்பது உயர்திணையைச் சார்ந்து இடப்பொருள் உணர்த்தும்.
     பாமாவிடம் விலையுயர்ந்த நகைகள் இருக்கின்றன.
பால், மாட்டு என்னும் சொல்லுருபுகள் பழங்காலத்துப் பெருவழக்காக இருந்தன.
      எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
      பண்புடைமை என்னும் வழக்கு (குறள் 991)
எட்டாம் வேற்றுமை
     எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்
     திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
     திரிபுமாம், பொருள் படர்க்கை யோரைத்
     தன்முக மாகத் தான் அழைப்பதுவே (303)
வேலா, வா!
     இத்தொடரில் வேலன் என்னும் பெயர்ச்சொல் விளித்தலின் போது வேலா என ஈற்றெழுத்துக் கெட்டு நீண்டு வந்துள்ளது. இதற்குத் தனி உருபு இல்லை. எட்டாம் வேற்றுமை விளித்தல் பொருளைத் தருவதால் இதனை விளி வேற்றுமை என்றும் வழங்குவர்.
     இவ்விளியானது அண்மை விளி என்றும், சேய்மை விளி என்றும் இருவகைப்படும். அண்மை விளி அருகில் இருப்போரை அழைப்பது. சேய்மை விளி என்பது தொலைவில் உள்ளவரை அழைப்பது.
தம்பி, அப்ப, ஐய – அண்மை விளி
தம்பீ, அப்பா, ஐயாவே – சேய்மை விளி
     அண்மை விளியில் இயல்பும் ஈறு கெடுதலும், சேய்மை விளியில் ஈறு திரிதல், ஈறு கெட்டு அயல் நீளுதல் முதலியவையும் வருவதைக் காணலாம்.
     படர்க்கைப் பொருள்களை முன்னிலைப் பொருள்களாக்கி அழைக்க இவ்வேற்றுமை உதவுகிறது.
     வேலன்- வேல – ஈறுகெட்டது
            வேலா – ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டது
     தந்தை – தந்தையோ! – ஈற்றில் ஏகாரம் மிக்கது
     தந்தை – தந்தாய் – ஈற்றில் ஐகாரம் ஆய் எனத் திரிந்தது
     மக்கள் – மக்காள் – ஈற்றயல் நீண்டது
 உருபு மயக்கம்
     ஒரு வேற்றுமை உருபு மற்றோரு வேற்றுமைப் பொருளை உணர்த்தினால் அது உருபு மயக்கம் எனப்படும்.
எடுத்துக் காட்டு-
அவ்வித் தழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

     இக்குறட்பாவில் தவ்வையை என்று ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வந்துள்ளது. தவ்வைக்கு என்று நான்காம் வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வந்து, நான்காம் வேற்றுமைப் பொருளைத் தருகிறது. இவ்வாறு வருவது உருபு மயக்கமாகும்.

சாரியை
     சார்ந்து வருவது சாரியை எனப்படும். சில பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும் போது இவற்றின் இடையே சாரியை வந்து வேற்றுமைச் சொல்லாக்கத்திற்குத் துணை புரிகின்றன. இவற்றுக்கென தனிப்பொருள் எதுவும் இல்லை என்கிறார் முனைவர் ச. அகத்தியலிங்கம். மேலும் இன்றைய தமிழில் அத்து, அற்று, இன், அன், அம் ஆகிய நான்கு சாரியைகள் காணப்படுகின்றன[8] என்கிறார்.

     எவ்வகைப்பட்ட பெயருக்கும் ஏற்குமிடமறிந்து இறுதியில் ஒட்டிநின்று, அப்பெயரின் பொருளை வேறுபடுத்துவன வேற்றுமை எனப்படும். தமிழில் வழங்கப்படும் எட்டு வேற்றுமைகளையே இது வரையில் நாம் பார்த்தோம். 

முடிவுரை
     பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்னும் பவணந்தி முனிவர் கொள்கைப்படி நாமும் காலத்துக்கு எற்ற மாற்றத்தை ஏற்றுக் கொள்வது பொருத்தமாகும். இலக்கணமும் காலத்துக்குக் காலம் மாறி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
     மாறி வருவதுதான் வளரும் இலக்கணத்திற்கு அறிகுறி.
     வாழும் இலக்கணத்திற்கும் அடையாளம்.


     திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
     விண்ணோடும் உடுக்களோடும்
     மங்குல் கடல் இவற்றோடும்
     பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
-          பாவேந்தர் பாரதிதாசன்                       

துணை நூல்கள்
1.       நன்னூல் சொல்லதிகாரம், தமிழண்ணல், இரண்டாம் பதிப்பு 2008, தமிழ்மொழிப் பயிலகம், மதுரை.
2.       நன்னூல் சொல்லதிகாரம், சோம. இளவரசு, மூன்றாம் பதிப்பு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3.       நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, அ.கி.பரந்தாமனார். மறுபதிப்பு 2007, பாரி நிலையம், சென்னை.
4.       தமிழ்மொழி அமைப்பியல், முதற்பதிப்பு 2002, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.


[1] அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, ப. 78
[2] தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், ப. 70
[3] தமிழண்ணல், நன்னூல் சொல்லதிகாரம், ப.71   
[4] அ.கி.பரந்தாமனார்,நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, ப.80
[5] அ.கி.பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?, ப. 82
[6] தமிழண்ணல்,நன்னூல் சொல்லதிகாரம்,ப.81
[7] இளவரசு, நன்னூல் சொல்லதிகாரம், ப. 46
[8] அகத்தியலிங்கம், தமிழ் மொழி அமைப்பியல், ப. 146

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக