செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

மழைத்தூறல்களில் சில நனையல்கள்


மழைத்தூறல்கள் - சிறுகதை
எழுத்து - சுபன் சுங்கைவே (கருணாகரன் - சிரம்பான் )
 - ஓர் இலக்கிய அறிமுகம்


மழைத்தூறல்களில் சில நனையல்கள்

சமுதாய நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, விட்டு விலகாதத் தொடர்புண்டு என்பார் எஸ். வையாபுரிப்பிள்ளை. அதன்படியே சிறுகதைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலத் தேவைக்கேற்ப தோன்றுகின்றன. மலேசிய நாட்டின் உச்சகட்ட முன்னேற்றங்களினால் தமிழர்கள் வாழும் இடங்கள் காவு வாங்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு தோட்டத்து மக்களின் எழுச்சியையும், தலைமைத்துவ வர்க்கத்தால் மிதிபட்டுப்போகும் அவர்களின் நம்பிக்கைகளையும் தனக்கே உரிய நடையில் மிக யதார்த்தமாகப் படைத்துள்ளார் சுபன் சுங்கைவே என்ற சிரம்பான் கருணாகரன்.

சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம், உள்ளப் போராட்டமாக இருக்கலாம் என்கிறார் க.நா.சுப்ரமணியன். இக்கூற்றையொட்டியே இக்கதையும் ஒரு நிகழ்வைத் தளமாகக் கொண்டு பயணிக்கிறது.

இலக்கியத்தின் மூலம் வரலாறு அறியப்படலாம் என்பதற்கு நமது சங்கச் செவ்வியல் இலக்கியங்கள் நல்லச் சான்று. எழுதப்படாத தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை மழைத்தூறல்கள் நிறைவாகவே மலேசிய இலக்கிய மண்ணில் பதித்திருக்கின்றன. இக்கதையை வாசிக்கின்ற பொழுதே கதை நடைபெறும் காலக்கட்டமும், இடமும், சூழலும், நூற்றாண்டுக் கால உழைப்பிற்குப்பின் உழைத்த மண்ணில் குடியிருக்க ஒரு வீடு மட்டும் கேட்கும் ஒட்டு மொத்த சமூகத்தின் இயலாமையும் நம் முன்னே விரிகின்றன.

ஆமாம்...
ஆயிரம் பேசுவாங்க. எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது.

எனக் கதையின் ஆரம்பத்தில் வரும் வரிகள் முகத்தில் அறைகின்றன. கதை இறுதியில் வரும் அதே வரிகள் மனதைப் பிசைகின்றன. இது போலவே கதையில் வருகின்ற வரிகள் ஒவ்வொரு வித உணர்வை மனதில் நிழலாட விடுகின்றன.

ஒரு மாபெரும் நம்பிக்கையை தனது காலில் போட்டு மிதித்துவிட்டுப் போகும் பதவிப்பித்தர்களின் போக்கினால் வீதியில் உறங்கிய தமிழ்க்குடும்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரங்கள். அகிலனின் பால் மரக்காட்டினிலே நாவலில் நாம் சந்தித்த அவலங்களிலிருந்து இன்றளவும் நாம் மீளவில்லை என்பதையே மழைத்தூறல்கள் நமக்குள்ளேயும் விதைக்கின்றன.

சமூகச் சிக்கலை முன்னிலைப்படுத்தும் எழுத்தாளரின் ஆளுமை, யதார்த்த உரையாடல்கள் நம் கைகளைப்பிடித்து கதைக்குள்ளே (சமூகத்துக்குள்ளே) இழுத்துச் செல்கின்றன. ஒரு தார்மீகமான மன எழுச்சி, நடனம் மூலம் கையாளப்பட்டு பின் பிரபஞ்ச ரீதியான ஓர் உண்மை அந்த கதாபாத்திரத்தின் மூலமாகவே இறுதியில் உணர்த்தப்படுவது கதையின் சிறப்பாகும்.

மழைத்தூறல்களில் நான் நனைந்தால் மட்டும் போதுமா?
நீங்களும் நனையுங்கள்.
சில நடுக்கங்களை நீங்களும் உணரலாம்.

அன்புடன்,
பூச்சோங் எம். சேகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக