வியாழன், 17 பிப்ரவரி, 2011

நாட்டுப்புறவியலில் நம்பிக்கை


முன்னுரை 
                  மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இந்நம்பிக்கைகளைப் பின்பற்றுவதால் தங்கள் வாழ்வு வளமும், நலமும் பெறும் என்று மக்கள் நம்புகின்றனர். இந்நம்பிக்கைகள் மனிதனால் உருவாக்கப்பட்டு, அம்மனித சமூகத்தால் பின்பற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நம்பிக்கைகள் பொதுவாக அனைத்து மக்களிடையும் எல்லா வாழ்க்கை நிலைகளிலும் இருந்து வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நம்பிக்கைகள் நாட்டுப் புற மக்களின் வாழ்வியலில் ஊறிப்போய் இருந்ததையும், அவற்றில் பல இன்னமும் நம்மிடையே வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் இனி இக்கட்டுரையில் காணலாம்.
நம்பிக்கை – சொற்பொருள் விளக்கம்
  தொல்காப்பியத்தில்,
நம்பும் மேவும் நசையாகுமே
என தொல்காப்பியர் நம்பு என்ற சொல்லினை நசை  என்ற பொருளில் கையாண்டுள்ளார். நம்பு என்பதனை விருப்பம் என்ற பொருளில் கையாண்டுள்ளார். நம்பு என்பதற்கு விருப்பம், ஆவல், ஆசை என்று அகராதிகள் பொருள் தருகின்றன.
நற்றிணையில் நம்பு என்ற வினைச்சொல் நம்பிக்கை என்ற பொருளில் சுட்டப்படுகிறது.
சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்
 சுடுவான் போல நோக்கும்
எனவும், மற்றொரு பாடலில் நம்புதல் என்ற சொல்லாட்சியும் இடம்பெற்றுள்ளது.
நாடல் சான்றார் நம்புதல் பழியெனிற்..... [1]
மேற்கண்ட சான்றுகளிலிருந்து நம்பு என்ற சொல் தொடக்கத்தில் விருப்பம் என்ற பொருளிலும், பின்னர் நம்பிக்கை என்ற பொருளிலும் கையாளப்பட்டு வருவதை அறியலாம். காலப்போக்கில் இச்சொல் நம்பிக்கையை மட்டும் குறிப்பதற்குப்  பயன்பட்டு வந்துள்ளதனை இன்றைய நடைமுறை வழக்கில் நாம் உணரலாம்.   
நம்பிக்கைகளின் தோற்றம்
      நம்பிக்கைகள் என்று தோன்றின என்பதை யாராலும் கண்டறிந்து கூற இயலாத அளவிற்கு மிகவும் தொன்மையானதும் மரபு வழிப்பட்டதுமாகும். இன்றைய நாகரிக மனிதனிடம் காணப்படும் பல நம்பிக்கைகள் நாகரிகமற்ற பழங்குடி மக்களிடமும் காணப்படுகின்றன. எனவே ஒரு நம்பிக்கை என்று தோன்றியது என வரையறுப்பது இயலாத ஒன்றாகும்.
  அச்சத்தின் காரணமாக மனிதன் இயற்கையின் தோற்றத்தினையும், செயற்பாடுகளையும் தனது வாழ்வியல் நடப்புகளோடு இணைத்து நோக்கிய நிலையில் நம்பிக்கைகள் தோற்றம் கொண்டன என தனது நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்க்வழக்கங்கள் என்ற நூலில் குறிப்பிடுகிறார் அ.இராசேந்திரன்.
  ‘…….பழங்கால மனிதன்  தன்னைச்சுற்றி நடப்பவற்றிற்கு விளக்கம் சொல்ல இயலாதிருந்தான். ஏன் மழை பொழிகிறது? ஏன் இடி இடிக்கிறது? என்றெல்லாம் அறிய அவனுக்குச் சரியான காரணம் தெரியவில்லை. தன் அறிவுக்கு எட்டிய காரணங்களை அவன் சொல்ல ஆரம்பித்தான். இந்த முடிவுகளைச் சமூகம் அங்கீகரித்தது என நம்பிக்கைகளின் தோற்றத்திற்கு விளக்கம் தருகிறார் திரு. தமிழவன்.
  இறையின் புதிரான செயல்களை உணர இயலாத போதும், மனித வாழ்வில் நிகழும் ஊறுகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத நிலையிலும் மனித மனம் சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக உருப்பெற்றன என்கிறார் திரு. காந்தி.
  இயற்கையோடு இயைந்த மனிதன் இயற்கையையும் தன் உறவாகக் கொள்கிறான். உரிமையாகக் கொள்கிறான். காற்று, மழை, தீ, தண்ணீர், மரம், செடி, விலங்கு முதலிய அசையும் பொருள் அசையாப் பொருள் ஆகிய அனைத்தையும் உயாருள்ளவையாகக் கருதினான். அவற்றிற்குச் சினம், மகிழ்ச்சி, துன்பம் ஆகியன இருப்பதாக எண்ணினான். அவற்றிற்குத்  தன்னால் ஊறு விளைந்தால் அவையும் தனக்கு ஊறு விளைவிக்கும் என்றும், அவற்றிற்குத் தன்னால் நிறைவு கிட்டினால் அவை தனக்கும் நன்மை தரும் என நம்பினான். அந்த நம்புதலின் முடிவாக  அச்ச நம்பிக்கையும், மகிழ்வு நம்பிக்கையும் இயற்கை ஆற்றல் மீது அவனுக்கு ஏற்பட்டன என்கிறார் திருமதி. தாயம்மாள் அறவாணன்.
  மேற்கண்ட கூற்றுகளைக் கவனிக்கையில் மனிதனின் அச்சம், அவா, தன்னலக் காப்புணர்வு என்பவைகளே நம்பிக்கைகளின் தோற்றத்திற்குக் காரணங்களாக உள்ளன என அறியலாம். இந்த நம்பிக்கைகளின் அடிப்படைக் காரணங்களான சிலவற்றைக் கீழே காணலாம்.
1.       மனித மனத்தில் உருவாகும் அச்சம்
2.       மனிதனின் அவா
3.       மனிதனின் அறியாமை
4.       மனிதன் எதையும் அறிவு கொண்டு ஆராய்ந்து பாராமல் அப்படியே பின்பற்றும் போக்கு
5.       மனிதனின் தன்னலப் பாதுகாப்புணர்வு என்று கருதுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது.
இந்நம்பிக்கைகள் தனிமனித நம்பிக்கை, சமுதாய நம்பிக்கை என இருவகையாகக் கூறலாம். ஆனாலும் தனி மனித நம்பிக்கைகளே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சமுதாய நம்பிக்கைகளாக மலருகின்றன.
நம்பிக்கைகள் குறித்து அறிஞர்களின் கருத்துகள்
நாட்டுப்புற நம்பிக்கை நாட்டுப்புறவியலின் அடிப்படை பொதுக்கூறு (Common Denominator) எனப்படும். மக்களின் அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கம், சட்டம், வழக்கம் முதலியவைதாம் பண்பாடாக மலர்கின்றன என்கிறார் மானிடவியல் பேரறிஞர் டெய்லர் (Taylor) அவர்கள். வாழ்க்கை முறைகளின் கூட்டுச் சேர்க்கை பண்பாடு என்கிறார் மாலினோவஸ்கி (Malionowski).  பண்பாட்டினை வாழ்க்கையின் முறையாகக் கருதினால் மனிதனின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் போன்றவை இதற்குள் அடங்கி விடுகின்றன. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் மக்களின் தேவைகளின் அடிப்படையிலேயே தோன்றியவையாகும். நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் எனவும் மேலும் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் [2] என்பர் என தனது நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலில் தெளிவு படுத்துகிறார் டாக்டர் சு. சக்திவேல் அவர்கள்.
கண்ணால் பார்க்காமலும், அறிவாராய்ச்சி செய்யாமலும் சில செய்திகள் காரண காரியம் கருதாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயலாற்றுகின்றன. முன்னோர் வழங்கியதை அப்படியே ஏற்றுக் கொள்வர். ஏன்? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பப்படுவதில்லை. அவை உண்மையா? கட்டுக்கதையா? எனக் கருதிப் பார்க்கப்படுவதில்லை. இயற்கையில் ஏற்படும் எதிர்பாரா நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கருத்துகள் கற்பித்து அப்படியே நம்பப்படும் இவற்றை நம்பிக்கைகள் என்பர் என்று, தமிழ்நாட்டு வரலாறு என்ற நூல் விளக்கமளிக்கிறது. [3]
நம்பிக்கை என்பது ஒன்றின் உண்மையை ஏற்றுக் கொள்வதாகும். நம்பிக்கைகளின் அடிப்படை மனிதனின் அகமனம் (Sub Conscious) என்பர். மூளைக்கு அகமனமானது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை உணர்த்துகிறது. மூளையில் பதியும் அவ்வெண்ணங்கள் உண்மையாகி உறுதிப்படும் போது நம்பிக்கையாகிறது. மனித வாழ்வின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவு தரும் இந்நம்பிக்கைகள் மனித வாழ்வில் மிக இன்றியமையாதது என்று ஜேம்ஸ்வின்செஸ்டர் கூறுவதாக சண்முகசுந்தரம் குறிப்பிடுகின்றார்.
தொடக்கக் கால மக்களின் நம்பிக்கைகள் இன்றைய மக்களின் நடைமுறை வாழ்வில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவது கண்டு இதனைச் சமுதாயப் பண்பாட்டின் உணர்ச்சிக் கூறுகளின் தொகுதி என்ற காந்தி அவர்களின் கூற்றும்  ஒப்புநோக்கத்தக்கதாகும்.
எதையும் காரண காரிய அடிப்படையில் எண்ணிப் பார்க்காமல் பரம்பரையாகச் சொல்லப்பட்டு வந்த கருத்துகளை அவ்வாறே ஏற்றுக் கொள்வது நம்பிக்கையாகும் என்கிறார் யோகீசுவரன் அவர்கள். மேலும் தன்னுடைய சொந்த குணத்தை ஒரு சமூகம் மாற்றும் போது அல்லது இழக்கும் போது அவற்றிற்கு ஏற்ப முன்பே அமைந்திருந்த நடைமுறைகள் நம்பிக்கைகளாய் எஞ்சுகின்றன என்றும் நம்பிக்கைக்கு விளக்கமளிக்கப்படுகிறது.
நம்பிக்கைகள் . மூடநம்பிக்கைகள்
காரண காரியத் தொடர்புக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், சான்றுகளின் அடிப்படையிலோ காரண காரிய தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை (Superstition)  என்றும் கூறுவார் டாக்டர் சு. சக்திவேல் [4] என தனது நாட்டுப்புற இயல் நூலில் சுட்டுகிறார் சு. சண்முகசுந்தரம்.
நம்பிக்கைகளை நியாயமானவை, மூடத்தனமானவை என இரு வகைகளாகப் பார்க்கலாம் என்கின்றனர் அறிஞர்கள்.
எடுத்துக்காட்டு –
பத்தாவது பெண் நல்லதல்ல என்ற நம்பிக்கை திட்டமிடாத குடும்பம் அழிந்துவிடும் என்ற அடிப்படை எண்ணத்தால் நியாயமானது.
காக்கை கத்தினால் விருந்தாளி வருவர் என்ற நம்பிக்கை அறிவியல் பூர்வமாக உண்மையாக அமையாததால் மூடநம்பிக்கையாகும்.  
நம்பிக்கைகளின் வகைப்பாடு
     ஆலன் டெண்டிஸ் (Alan dundes)  நம்பிக்கைகளை மூன்றாகப் பகுத்து ஆராய்ந்துள்ளார். அதாவது A இருந்தால் B வரும், C இல்லாவிட்டால் இல்லை என்ற வாய்ப்பாட்டினை அமைத்துள்ளார்.  அதாவது இது செய்தால் இது நடக்கும், இதைச் செய்தால் இதை நீக்கலாம் என்கிறார்.
     எடுத்துக் காட்டு –
     கண்ணேறு பட்டால் நோய் வரும். நோய் நீங்க சீனிக்காரத்தைத் தடவி நெருப்பில் போட வேண்டும்.
     டாக்டர் சு. சண்முகசுந்தரம் அவர்கள் தனது நாட்டுப்புற இயல் என்ற நூலில் நம்பிக்கைகளைப் பத்து வகையாகப் பகுத்துள்ளார். அவை உணவு, உடை, குழந்தை, திருமணம், குணங்கள், கனவுகள், வழிபாடு, பெண்கள், இறப்பு, நாள் எனப்படும்.

நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள்
1.       உணவு தொடர்பானவை
1.1.  சாப்பிடும் போது உணவு சிந்தக்கூடாது
1.2.  சாப்பிடுகையில் கால்களைக் கையால்     பிடிக்கக்கூடாது
1.3.  சாப்பிடும் போது பேசக் கூடாது
1.4.  இலையைத் தாண்டக்கூடாது
2.       உடைத் தொடர்பானவை
2.1.  தாண்டக்கூடாது
2.2.  கிழிந்த உடை அணியக்கூடாது
2.3.  கோவிலில் சட்டை போடக்கூடாது
2.4.  ஆடையைக் கடிக்கக் கடாது
3.       குழந்தை தொடர்பானவை
3.1.  குழந்தைக்குக் கண்ணேறு கழித்தல்
3.2.  குழந்தைகளைத் தலையில் அடிப்பது தவறு
3.3.  கொடி சுற்றிப் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது
3.4.  மூலம் அரசாளும்
3.5.  குழந்தைகளைத் தாண்டக் கூடாது
3.6.  குழந்தைகளுக்குக் கண்ணாடி காட்டினால் ஊமையாகும்
4.       திருமணம் தொடர்பானவை
4.1.  இரு திருமணங்கள் ஒரு வீட்டில் நடந்தால் ஒன்று சிறக்கும், ஒன்று தாழும்
4.2.  திருமணச் சடங்குகளில் சுமங்கலிகள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும்
4.3.  திருமணம் முடிந்து வருகையல் பிறந்த வீட்டிலிருந்து சிகைக்காய்ப்பொடி, மிளகாய்ப்பொடி ஆகியவற்றைக் கொண்டு வருவது தவறு.
4.4.  பிறந்த தினத்தன்னு திருமணம் செய்து கொள்ளக் கூடாது
5.       குணங்கள் தொடர்பானவை
5.1.  காக்கை கத்தினால் விருந்து
5.2.  பூனை குறுக்கே வந்தால் தீச் சகுணம்
5.3.  நரி வந்தால் நல் சகுணம்
5.4.  எங்கே போகிறாய்?’ என்று கேட்டால் தீச் சகுணம்
5.5.  கழுதை கத்தினால் நல் சகுணம்
5.6.  மொட்டச்சி வந்தால் தீச் சகுணம்
6.       கனவுகள் தொடர்பானவை
6.1.  பகல் கனவு பலிக்காது
6.2.  அதிகாலையின் காணும் கனவு பலிக்கும்
6.3.  கனவில் மரணம் என்றால் சுபம். திருமணம் என்றால் இழவு
6.4.  கனவில் மலத்தைத் தொட்டால் பணம் வரும்
7.       வழிபாட்டுத் தொடர்பானவை
7.1.  சாமியைக் கைசுட்டிக் காட்டினால் கண்ணை அவித்து விடும்
7.2.  சாமி இருக்கும் திசையில் கால் நீட்டக்கூடாது
7.3.  சாமிக்குப் போட்ட பூவை அடுப்பில் அல்லது ஆற்றில் போட வேண்டும்
7.4.  சாமி முன்னால் செருப்புப் போடக்கூடாது
7.5.  கோவில் நேர்ச்சைகள் தவறக்கூடாது
8.       பெண்கள் தொடர்பானவை
8.1.  மாத விலக்கான பெண் பூ வைக்கக் கூடாது
8.2.  கோவிலுக்குச் செல்லக் கூடாது
8.3.  வீட்டின் சாமியறை, சமையலறை செல்லக்கூடாது
8.4.  பெண்கள் இரவில் மல்லாந்து படுக்கக் கூடாது
8.5.  பெண்கள் இரவில் அழக்கூடாது
9.       இறப்புத் தொடர்பானவை
9.1.  சவ ஊர்வலத்திற்கு எதிராகச் செல்லக்கூடாது
9.2.  சனி பிணம் துணை தேடும்
9.3.  புதன்கிழமை சாவு நல்லது
9.4.  மரண நாளில் மழை பெய்வது நல்லது
9.5.  மரண வீட்டிற்குச் சென்று வந்த பின்னர் குளிக்காமல் இருக்க்கூடாது
10.   நாள் தொடர்பானவை
10.1.                      செவ்வாய் அமங்கல நாள்
10.2.                      செவ்வாயில் முடிவெட்டுதல் வறுமை தரும்
10.3.                      செவ்வாயும் வெள்ளியும் தையல் கூடாது
10.4.                      சனியில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் நல்லது
10.5.                      ஞாயிறு வெளியூருக்குச் செல்லலாகாது
10.6.                      புதன் பணம் கிடைப்பது நல்லது
10.7.                      வெள்ளியன்று கடன் கொடுக்க மாட்டார்கள்


இலக்கியச் சான்றுகள்
     மக்களால் உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் வழக்கில் மிகுதியாகவும், இலக்கியங்களில் இடம் பெறும் நம்பிக்கைகள் பெரும்பாலும் அன்றைய மக்களிடையே சமுதாயச் செல்வாக்குப் பெற்ற குறிப்பிடத்தக்க நம்பிக்கைகளாகவும் அமையும்.
     கற்பு மணம் புரிந்து கொண்டவர்கள் கெட்ட ராசியிலும், கெட்ட நாளிலும் கூடிக் களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தொல்காப்பியர் காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதை,
     நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் என்ற நூற்பா வரியினால் உணரலாம்.
     சகுணம் பார்த்தல் என்ற பொருள் தரும் சொல்வழக்கு தொல்காப்பியர் காலத்தில் நிமித்தம் என்ற சொல்லால் வழங்கப்பட்டிருக்கிறது. நல்ல நாள் பார்ப்பதும், சகுணம் பார்ப்பதும் பழந்தமிழரின் உறுதியான நம்பிக்கை என்பதனை,
     புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
      உள்ளிச் சென்றோர் பழியலர் அதனால்
      புலவேன் வாழியர் ஒரி என்ற வரிகளில் அறியலாம்.
     கூகை அலறினால் சாவு வரும் என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடையேயும், இன்றும் தமிழகத்திலும் நிலவி வருகிறது. இதனைப் புறநானூறு,
     அஞ்சுவரு குராற் குரலும் தூற்றும் என்று சான்றுரைக்கிறது.
     பல்லி சொல்லுக்கும் பலனுண்டு என்ற நம்பிக்கை சங்க காலம் தொட்டே வழக்கில் இருந்து வருகிறது என்பதை,
     இனிய கூறும் பல்லி
     நல்லதைக் கூறும் பல்லி
     நிகழ்வதைக் கூறும் பல்லி
     சொல்லை நன்னிமித்தமாகக் கொண்ட நிலையினை,
     பல்லியும் பாங்கொத் திசைந்தன
      நல்லெழில் உண்கணும் ஆடுமா லிடனே என்றும்,
     பகுவாய் பல்லி படுதொறும் பரவி
      நல்ல கூறென நடுங்கி என்று பல்லி சொல் நம்பிக்கை அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களிடையே இருந்து வருவதை நாம் அறியலாம்.
     மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்டு சில நம்பிக்கைகள் அக்கால மக்களிடையே இருந்து வந்துள்ளன. அதில் குறிப்பாக பெண்களின் இடது கண் துடிப்பதனை,
     நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே
     நுண்ணோர் புருவத்த கண்ணும் ஆடும் என்றும் சுட்டிக் காட்டி அவை நன்னிமித்தமாகக் கருதப்பட்டதனை உணர்த்துகிறது. பெண்களின்  வலது கண் துடிப்பதால் தீமை விளையும் என்பதனை இளங்கோவடிகள் சிலம்பில் இந்திரவிழாவின் போது மாதவியின் வலக்கண் துடித்தது. அதனால் கோவலன் அவளைப் பிரிந்தான் என்பதாகச் சுட்டுகிறார்.
     கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
      உண்ணிறை கரந்தகத் தொளித்து நீருகுத்தன
      எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
     மேலும் சிலம்பில் கண்ணகி கண்ட கனவு, கோவலன் கண்ட கனவு, கோப்பெருந்தேவி கண்ட கனவு பற்றி விவரிப்பதுடன் கனவுகள் பற்றிய நம்பிக்கைகளும் பேசப்படுகின்றன. தமிழில் கனா நூல் என்ற தனி நூலில் கனவு பற்றிய நம்பிக்கைகள் முழுமையாக இடம் பெற்றுள்ளன.
     தலைவி பிரிந்து சென்ற தலைவனின் வருகையை நினைத்து கண்ணை மூடிக் கொண்டு மணலில் ஒரு வட்டம் இடுவாள் (கூடலிழைத்தல்). வட்டத்தின் இரு முனைகளும் நேராகச் சந்தித்தால் நினைத்தது நிறைவேறும் எனவும், இணையாவிட்டால் நிறைவேறாது எனவும் சங்க கால மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதனை (அகம் 351, கலித்தொகை 142) வாயிலாக அறியலாம்.
     பழந்தமிழர்களிடையே பல்வேறு நம்பிக்கைகள் இருந்துள்ளது என்பதனை அக்கால இலக்கிய இலக்கண நூல்களில் அதிகமாகக் காணலாம். க. காந்தி என்பவர் தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சங்க இலக்கியங்களாகிய பத்துப் பாட்டு, எட்டுத் தொகை மற்றும் பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் முதலானவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளார். [5]

பிற நம்பிக்கைகள்
     சகுணம் பார்த்தல் – நன்மை, தீமை என இருவகையான நம்பிக்கைகள். சோதிடம், பஞ்சாங்கம், இராசிப்பொருத்தம், திருமணப் பொருத்தம், விழாக்கள் என இன்றளவும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன.
     விதி – நமக்கு விதித்ததுதான் நடக்கும் என்ற நம்பிக்கை. விதியை மதியால் வெல்லலாம் என்பவற்கு கவியரசு கண்ணதாசன் தனது அர்தமுள்ளது இந்து மதம் என்ற நூற்தொகுதியில்,
     உனக்கு நிர்ணயிக்கப்பட்ட விதியை மதியால் வெல்வதே உன் விதியாக இருக்கும் என்கிறார்.
     மரம் – இறைவன் வாழும் இடம் என நம்பி வழிபடுதல். மரத்தாண்டவர் எனும் ஆலயம் மலேசியாவில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இக்கோயில் பகாங் மாநிலத்தில் மாரான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்கு வரவார்கள்.
     பேய், பிசாசு – தொல்காப்பியர் காலத்திலேயே இந்நம்பிக்கை இருந்திருக்கிறது.
     ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்’.
     சின்னப்பயலே சின்னப்பயலே செய்தி கேளடா...
எனத் தொடங்கும் பாடலில்,
வேப்பமர உச்சியிலே பேயொன்னு ஆடுதுன்னு..
என வரும் வரிகளும் பேய் தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றன என்பதைச் சுட்டுகின்றன.

காலந்தோறும் நம்பிக்கைகள்
     தொல்காப்பியர் காலம் தொட்டு, சங்க இலக்கியங்கள், பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இன்றைய இலக்கியமான நாவல், சிறுகதை, கவிதை என அனைத்து இலக்கிய வடிவங்களிலும் நம்பிக்கைகள் வேரூன்றி நிற்கின்றன எனலாம்.
     தீராநதி செப்டம்பர் 2010 இதழில் வந்துள்ள மு. சிவலிங்கத்தின் ஒப்பாரி கோச்சி என்ற சிறுகதையில், செல்லம்மாவின் வழக்கப்படியே இறைச்சிக் கறி கொண்டு போகும் போது கையில் ஆணியும் அடுப்புக் கரித்துண்டும் கூடவே கொண்டு போவார்கள். மாமிசக் குழம்பில் ஆசைப்படும் பேய் பிசாசுகள் பக்கத்தில் வராது என்று தோட்டத்தில் நம்பிக்கை உண்டு [6] எனும் வரிகள் வருகின்றன.
     இது இவர்களின் கதை என்ற திரைப்படத்தில்,
இடது கண் அடிக்கடி துடிக்குது
எனும் பாடல் தலைவனின் வருகையைத் தலைவி தன் இடது கண் துடிப்பால் முன் உணர்வதாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. மேலும் குமரிக்கோட்டம் என்ற திரைப்படத்தில், தனது நம்பிக்கை நன்மை பயத்ததைத் தலைவி தலைவனிடம் சொல்லி மகிழ்வதாய் அமைக்கப்பட்டிருக்கும் பாடல் வரிகள் இப்படி வரிகின்றன.
     என் இடது கண்ணும் துடித்தது
      உனைக் கண்டேன்
      இந்நாள் பொன்னாள்
தொல்காப்பியர் காலம் முதல் இன்றைய சினிமா காலம் வரை நம்பிக்கைகள் நிலவுவதைக் காணலாம். நாகரீகச் சுழற்சி, அறிவியல் வீச்சு, கணினி யுகம் என மனிதன் அதிநவீனமாகத் தன்னை முன் நிறுத்திக் கொண்டாலும், காலம் காலமாய் அவனிடம் இருந்து வந்த நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் இன்னும் அவனால் நிலை நிறுத்தப்பட்டே வருகின்றன.
1.       கருவுற்றிருக்கும் பெண்கள் பற்றிய நம்பிக்கைகள்  (சூரிய, சந்திர கிரண பாதிப்பு – காய்கறி நறுக்குதல், வெற்றிலை போடுதல், பிற உயிர்களைத் துன்புறுத்துதல் கடாது)
2.       குழந்தை பற்றிய நம்பிக்கைகள் (தொப்புள் கொடி சுற்றிப் பிறத்தல், காது குத்துதல், கண்ணேறு கழித்தல்)
3.       பூப்படைந்த பெண் பற்றிய நம்பிக்கைகள் (தீட்டு, பூப்பெய்த நாள், நேரம் போன்றவற்றின் நம்பிக்கைகள்)
4.       திருமணம் தொடர்பான நம்பிக்கைகள் (திருமண நாள், நேரம் பார்த்தல், திருமணச் சடங்குகள், பெண் புகுந்த வீடு புகுதல்)
5.       கனவு தொடர்பான நம்பிக்கைகள் ( கனவு மக்களுக்கு வாழ்வில் நிகழப்போவதை முன உணர்த்துகின்றது என்ற நம்பிக்கை)
6.       இறப்பு தொடர்பான நம்பிக்கை (மறுபிறப்பு, ஆவி, இறப்பு தொடர்பான சடங்குகள்)
7.       குடும்ப பழக்க வழக்கம் மற்றும் வழிபாடுகள் தொடர்பான நம்பிக்கைகள் (குலதெய்வ வழிபாடு)
8.       நோய்கள் பற்றிய நம்பிக்கைகள் (அம்மை நோய்)
9.       சகுணம் தொடர்பான நம்பிக்கைகள் (விலங்கு, பயணம்)

மேலே கூறப்பட்டுள்ள நம்பிக்கைகள் இன்றளவும் நம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வருகினறன. இவை மனித வாழ்வில் வேரூன்றிக் காணப்படுகின்றன என்பதும் நாம் அறிந்ததே. நாகரிகம், பண்பாடு ஆகியவை மனிதனை மாற்றியிருந்தாலும் நம்பிக்கையால் பின்னப்பட்ட அவனது மனதை மாற்ற முடியாது என்பதையும் நாம் அறியலாம்.
     விண்வெளிக்கு அனுப்புகின்ற விண்கலன்களைக் கூட இராகுகாலம், எமகண்டம் இல்லாத நல்ல நேரம் பார்த்து அனுப்புகின்ற நிலையில்தான் இன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றக் கட்சிகள் கூட ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போதும் நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கும் நிலைதான் இன்றும் இருக்கின்றது. புதிய வாகனம் வாங்கி அதைப் பயன்படுத்துவதற்கு முன்னால் வாகனத்துக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூர ஆராதனைக் காட்டி, எழுமிச்சக் கனியை காரின் டயருக்கு கீழே வைத்து ஓட்டத் தொடங்குகின்ற போதும் நாம் இன்னும் பழமையான நம்பிக்கைகளிலிருந்து விடுபடவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

முடிவுரை
          நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துள்ள நம்பிக்கைகள் அவர்களைப் பாதுகாக்கின்றன. அவர்களின் வாழ்வை வழி நடத்துகின்றன. அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் போதெல்லாம் தக்க மருந்தாய்ச் செயல்படுகின்றன.
                        இன்றைய நவீனநாகரிகம் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறையை பல வகையில் மாற்றியமைத்தாலும் மரபு ரீதியான சடங்கு முறைகளையும் நம்பிக்கைகளையும் இன்றளவும் மக்கள் பின்பற்றி வருகின்றனர். இது மக்களுக்காக மக்கள் ஏற்றுக்கொண்ட நம்பிக்கைகள்.

     மனிதனுக்கு இறப்புண்டு
     நம்பிக்கைகளுக்கு
     இறப்பில்லை               

  
துணை நூல்கள்
1.       நாட்டுப்புற இயல் ஆய்வு, டாக்டர் சு. சக்திவேல், ஒன்பதாம் பதிப்பு 2010, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2.       நாட்டுப்புறவியல், சு. சண்முகசுந்தரம், இரண்டாம் பதிப்பு 2007, காவ்யா, சென்னை.
3.       நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், முனைவர் அ. இராசேந்திரன், முதற்பதிப்பு 2006, வனிதா பதிப்பகம், சென்னை.
4.       இணையத்தள கட்டுரைகள்.
5.       தீராநதி, செப்டம்பர் 2010,


    
               

           


[1] அ.இராசேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், பக். 2
[2]  சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, பக். 188
[3]  அ.இராசேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், பக். 6
[4]  சு. சண்முகசுந்தரம், நாட்டுப்புற இயல், பக். 150
[5]  அ. இராசேந்திரன், நாட்டுப்புறப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், பக். 9
[6]  தீராநதி, செப்டம்பர் 2010, பக். 58

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக