வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எங்கே எனது காதல்?

1. காதலைத்தேடி
    வார்த்தைகளைத் தோண்டுகிறேன்
    முகம் தெரியாத முகத்துக்காக
    என் முகத்தைத் தொலைத்துவிட்டு.

2. சிதறிய கண்ணாடிகளாய்
    ஒவ்வொரு துகள்களிலும்
    என் ஆசைகள் கண்சிமிட்டுகின்றன.

3. உருகும் மெழுகுவர்த்தியாய்
   என் உணர்வுகள் கரைய...
   அந்தச் சுடருக்குக் கீழே
   தேங்கியக் குளமாய்
   ஈரவிழிகளுடன் என் காதல்

4. பாண்டியன் சபையில்
    கண்ணகியின் வீச்சில்
    சிதறிய காற்சிலம்பாய்
     என் காதல்

5. சூரியத் தூரிகைகளால்
   இதயவானவீதியில்
   காதல் வண்ணக்கலவையை
   வானவில்லாய் தெளித்த
   பெண் சிற்பி நீ

6. ஒவ்வொரு இரவிலும்
    காதல் கனவுகரையான்களால்
    தின்னப்படுகின்றன
    என் நம்பிக்கைகள்

7. என் விழிக் கடிதத்தின்
    வார்த்தைக் கோப்புகள்
    உன் விழிக்கிணற்றுக்குள்
    மூழ்கிக் கிடக்கின்றன

8. உன் இதயச் சிற்பிக்குள்
    இன்னமும் மூடிய முத்தாய்
    என் காதல்

9. எதிர்கால வரலாற்றில்
    உன் இதயமே
    என் கல்லறை தாஜ்மஹால்

10. வெண்ணிலவைத் தொலைத்த
       வானத்தின் கீழ் நின்று
      தேடுகிறேன்
       என் காதலை...............

3 கருத்துகள்:

  1. ‘உன் இதயச் சிப்பிக்குள்
    இன்னமும் மூடிய முத்தாய்
    என் காதல்’

    அழகான கற்பனை! காதல் அதிசய வலை.
    யார் தலைநுழைத்தாலும் உள்ளிழுத்துக் கொள்கிறது.
    அதற்குச் சாட்சியங்கள் காதல் தேடலில்
    விளைந்த உங்களின் கவிதைப் பயிர்கள்.

    பதிலளிநீக்கு
  2. சிதறிய கண்ணகி கால் சிலம்பாய் என் காதல், என் இதயச் சிப்பிக்குள் மூடிய முத்தாய் நீ, நல்ல உவமைகள் சேகர். வெந்நிலவு வானத்தைதொலைக்கலாம், உங்கள் காதல் கவிதையைத் தொலைக்கவில்லை.நன்று.
    கோ.புண்ணியவான். http://kopunniavan.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இந்த இணையத்தளத்தின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பது மனதுக்கு மகிச்சியாக இருக்கிறது. தொலைந்து போன ஒன்று மீண்டும் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு மனதுக்குள் எழுகின்றது...

    பதிலளிநீக்கு