வெள்ளி, 19 ஜூன், 2020

கதம்பம் 2.0 - ஒரு பார்வை




சிறுகதைத் தொகுப்பு : கதம்பம் 2.0
தொகுப்பு   :         திரு. மில்லத் அஹ்மது
வெளியீடு   :         உயிர்மெய் பதிப்பகம், சிங்கப்பூர்
பதிப்பு      :         முதற்பதிப்பு 2019


திரு. மில்லத் அஹ்மது தொகுப்பில் வந்த கதம்பம் 2.0 சிறுகதைத் தொகுப்பு (2019) சிங்கப்பூரின் சிறுகதைத் தொகுப்பு நூல்களில்  அண்மைய வரவாக இருக்கிறது. 2017 இல் சிங்கப்பூர்க் கதம்பம்  என்ற சிறுகதைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இது வெளிவந்திருக்கிறது. சிங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கான தொடர்முன்னெடுப்புக்களில் இத்தொகுப்பும் தனக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதில் மகிழ்ச்சி.

ஒரு சமுதாயத்தின் விருப்பு வெறுப்பு நம்பிக்கை முதலியவற்றை வரையறுத்துப் பண்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே எனக் கூறுகிறார் டாக்டர் மு.வரதராசனார். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளுமே முழுக்க முழுக்க சிங்கப்பூர்ச் சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது என்றாலும், பல கதைகள் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைக்குள் நுழையாமல் அண்மைய குடியேறிகளின் கதைகளாக, அவர்களின் சிங்கப்பூர் அனுபவங்களாக அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களாகவே இருக்கின்றன. சில கதைகளில் சிங்கப்பூர்க் கதைகளாக அடையாளம் காட்டவேண்டும் என்பதற்காகவே சீன, மலாய் கதாபாத்திரங்களையும் சிங்கப்பூரில் உள்ள இடங்களின் பெயர்களையும் இணைத்துக்கொள்ளும் செயற்கைத்தனமும் சேர்ந்துகொள்கிறது. சிங்கப்பூர் மக்களுக்கென்று ஒரு வாழ்க்கை மொழி இருக்கிறது. அந்த மொழியும் அந்தச்  சூழலும் கதைகளில் வருகின்றனபோதுதான் நிஜமான சிங்கப்பூர்க் கதைகளைக் காண இயலும். அட்டைப் பெட்டிகளையும் டின்களையும் காலையிலேயே எழுந்து சேகரித்துவரும் சீனத் தாத்தாக்களையும் பாட்டிகளையும் மட்டும் பார்க்காமல் அதே தொழிலைச் செய்யும் நமது தாத்தா பாட்டிகளின் மீதும் நமது பேனாக்கள் கவனம் செலுத்தட்டும். இனி கதைகளுக்குச் செல்வோம்.

தனிமை -  மணிமாலா மதியழகன்

சிங்கப்பூர்ச் சூழலுக்கான கதையாடலுடன் எழுதப்பட்ட கதை. சிங்கப்பூர் அடுக்குமாடி வீடுகளின் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் சமகால சிக்கலொன்றை எடுத்துக்கொண்டு அதை இயல்பாகப்  பதிவு செய்ய முனைந்துள்ளார் கதாசிரியர். சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில், பிள்ளைகள் பயிலும் பள்ளிகளின் அருகிலேயே வீடு வாங்க நினைக்கும் சிங்கப்பூர் வாசிகளின் மனநிலையையும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் சின்ன சின்ன மாற்றங்களும் அதனால் ஏற்படும் எதிர்பாராத சில பாதிப்புகளும் கதையின் மையமாக எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

புறவயமான கதை சொல்லலில் ஆங்காங்கே கட்டுரைக்கான மொழி வந்து விழுந்து விடுகிறது. அந்தப் பக்கத்து வீட்டுப் பெரியவரின் அகத்துக்குள் கதையை நுழைந்திருந்தால், கதை இன்னும் அழுத்தமாகப் பதிவாகியிருக்கும் என்பதை எனது பார்வையாக இங்கே முன் வைக்கிறேன். ஆள் கிட்டேயே நெருங்க முடியல. இதுல எப்படி அவரின் அகத்துக்குள் நுழையுறதுன்னு நீங்க மைண்ட் வோய்ஸா பேசுறதும் எனக்குக் கேட்கிறது. அந்தப் பெரியவரின் மனத்தோடு ஓர் உரையாடலை இக்கதை நிகழ்த்தியிருந்தால் இக்கதை இன்னும் பரவலாகப்  பேசப்படும் ஒரு சிறந்த கதையாக உருப்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆப்பிள் – மில்லத் அஹ்மது

சிங்கப்பூர்ச் சூழலில் புதியதொரு கதைகளத்தோடு எழுதப்பட்டுள்ள கதை. நவீன தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் கதையாகவும் இதைப் பார்க்கலாம். ஜூமான்ஜி போன்ற திரைப்படச் சாயலில் தமிழுக்கு வந்துள்ள ஒரு படைப்பாகவும் இக்கதையை நாம் அணுகலாம். அங்கதத் தன்மையுடன் நம் அகத்துக்குள்ளும் பதியம் போட்டு அமர்ந்திட முயற்சிக்கும் கதை. நவீன புனைகதையுலகில் மாய எதார்த்ததோடு கதை புனையும் தன்மை அதிகரித்துவரும் இன்றைய படைப்புப்போக்கு இக்கதையிலும் காணப்படுகிறது. இருப்பினும், கதைசொல்லல், கதையை வெளிப்படுத்துதல் போன்றவற்றில் இன்னமும் கவனத்தோடு கையாண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒற்றுப்பிழைகள் – பிரேமா மகாலிங்கம்

அம்மா, மகள் உறவைப்பற்றி பேசும் கதை. மகளுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் நிர்மலா. அம்மாவுக்காகத் தன் வாழ்க்கைகையே சீரழித்துக்கொண்ட சிநேகா. இப்படி இரு வரி கதைதான் இது. சிங்கப்பூர் வாழ் சூழலில் ஒற்றைப் பெற்றோர் அதிகரித்துக்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களைப் பற்றி வெளியிலிருந்து புறவயமான ஒரு பார்வை நமக்கு இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சிக்கல்களையும்  அகவெளிப்பாடுகளையும் எளிதில் நாம் அறிந்துகொள்ள இயலாது. அப்படி ஒரு சிக்கல்தான் இச்சிறுகதையில் மையச்சரடாக இருக்கிறது.

அன்பு அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அதே அன்பு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் புரிந்துணர்வோடு வாழ்வதாகவும் இருக்கவேண்டும். இந்தப் புரிதல் இல்லாமல் அவரவர் சூழ்நிலைக்கேற்ப ஒரு புரிதலையும் அதற்கான நியாயங்களையும் அவர்களாகவே கற்பித்துக் கொண்டால் பின்னால் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். உறவின் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளையும் இச்சிறுகதை யதார்த்தமான கதைச் சம்பவங்களோடு வெளிப்படுத்தியுள்ளது. கதையின் இடை இடையே கதாசிரியர் வந்து பேசிவிட்டுப் போவதைத் தவிர்த்து வாசக இடைவெளிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் கதை அதன் இயல்பில் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

தலைமுறை – மலையரசி

முந்தைய தலைமுறையின் கதையை இன்றைய தலைமுறை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திச் செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கதை. இன்றைய தலைமுறைக்குத் தெரியாத நம் வரலாற்றுத் தடங்களுக்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்ற உண்மையை வலியுறுத்தும் கதையின் மையம் அதற்கான சம்பவக்கோர்வைகள் என கதை நகர்ந்தாலும் நிறைய வரலாற்றுச் செய்திகளை ஒரு சிறுகதையில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பதிவு செய்திருப்பது கதையின் நகர்ச்சியில் ஓர் அயர்வைக் கொடுக்கிறது. ஒரு கட்டுரைக்கான சில விஷயங்களையும் இக்கதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  மேலும், தாயும் மகளுக்குமான உரையாடல்கள் இயல்பாக அவர்களுக்கான ஒரு மொழியில் இருந்திருந்தால் கதை இன்னும் உயிரோட்டமாக இருந்திருக்கும். இதில் வரும் உரையாடல்கள் கதையிலிருந்து அந்நியப்பட்டு இருக்கின்றன.

கதையைப் பொருத்தவரையில் நாவலுக்கான பரப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிறுகதைக்கு இது பொருத்தமாக இருக்காது. கதாசிரியர் நன்கு திட்டமிட்டு இந்தக் கதையைக் கட்டமைத்தால் சிங்கப்பூர்ச் சூழலை மையப்படுத்திய ஒரு நல்ல நாவலை உருவாக்கமுடியும்.

ரஜூலா முதல் டைகர் வரை – அழகு சுந்தரம்

நட்பின் உன்னதத்தை எடுத்துரைக்கும் கதை. ரஜூலா என்ற சொல் அன்றைய மலேசியா சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது என்றால் அது மிகையாகாது. சாகாவரம் பெற்ற அந்தச் சொல்லுக்கு உயிர்ப்புத் தன்மை இருக்கவே செய்யும் எனப் பதிவிடுகிறார் மலாக்கா முத்துக்கிருஷ்ணன். அந்த வகையில் இக்கதையின்மூலம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்துள்ளது அந்த எஸ் எஸ் ரஜூலா கப்பல்.
கதையின் வடிவமைப்புக் காட்சிப்படுத்துதல் என்ற உத்தியின்மூலம் மிக இயல்பாக நகர்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. முழுமையான ஒரு கதை என்றாலும்கூட, இன்றைய நவீன கதையின் சொல்லாக்கமும் படைப்பாக்கமும் இத்தகைய படைப்புகளைத் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டன என்பதையும் நம் புரிதலுக்குக் கொண்டு வருவது முக்கியமாகும். அந்தப்  புரிதல்களோடு நாம் தம்முடைய படைப்புகளை அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

மனிதன் என்பவன் – தமிழ்ச்செல்வி

மனத்தாலும் சொல்லாலும் அறத்தின் இயல்பு அடித்தளமாக இருந்தாலும், செயல் திறனில் தோன்றும் அறமே முதன்மையான அறமென கொள்ளப்படுகிறது. ஒருவரின் செயலுக்கு உதவாது வெறும் மனத்தாலும வாய்மையாலும் இருக்கும் அறத்திறனால்  யாருக்கும் அவ்வளவாக எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை. வள்ளுவரும் அறத்தின் செயல்மீதே அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் குறள்களைப் பாடியுள்ளார். அவ்வகையில் இக்கதை அறத்தையே முன்நிறுத்தி எழுதப்பட்டுள்ளது. மானுட வாழ்க்கையின் உண்மை அனுபவத்தையும் உளவியலைச் சரியாகப்  புரிந்துகொண்ட தனித்திறனையும் கொண்ட இரு கதாபாத்திரப் படைப்பும் அந்த அறத்தை மறுதலிக்கும் இன்றைய தலைமுறையின் கதாபாத்திரமும் இருதலைமுறையினருக்கும் இருக்கும் சில இடைவெளிகளையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை விழுமியங்களை அவர்கள் செய்யும் தொழிலும் பெற்றோர்களின்மீது அவர்கள் கொண்ட பக்தியையும் மரியாதையையும் இன்றைய தலைமுறை தொலைத்துக்கொண்டு வருவதையும் கதை எடுத்துரைக்கிறது. சிங்கப்பூர்ச் சூழலில் எளிய நடையில் மிகைப்படுத்தி எதையும் கூறாமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவிற்கு ஏற்ப புனையப்பட்ட கதையாக இருக்கிறது. கதையின் முடிவிலும் வாசக இடைவெளியோடு நிறைவுபெற்றும் வாசக மனத்தில் நிறைவுபெறாமல் இருப்பதும் கதை முடித்தலின் உத்தி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

தீராநதியின் சிற்றலை – வித்யா சுப்ரமணியன்

வித்யாவின் ‘தீராநதியின் சிற்றலை’ யின் இறுதி வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் நான் மீளவில்லை என்பதுதான் உண்மை. நல்ல ஒரு கதை வாசிக்கும்போது இன்னொரு நல்ல கதையை நம் நினைவுக்குக் கொண்டு வரும் என்பார்கள். அவ்வகையில் இந்தக் கதையின் இறுதி வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளை சு.வேணுகோபாலின், ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்ற சிறுகதையும் மலேசியப் பெண்ணிய எழுத்தாளரான வே.இராஜேஸ்வரியின் ‘குழந்தை இன்பம்’ என்ற சிறுகதையும் ஏற்படுத்தியிருந்தன.  இக்கதைகளின் இறுதி வரிகள் வாசிப்பவர்களை ஓர் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி அவர்களை உறைய வைத்துவிடும் தன்மை கொண்டவை. இப்படியெல்லாம் நாம் வாழும் நடப்பியல் வாழ்க்கை முறையில் நடந்துகொண்டு இருக்கிறதா? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு வெளியே சொல்லமுடியாத எண்ணற்ற ஜீவன்களைத்தான் நாம் இங்குத் தினமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறோமா?

இப்படிப்பட்ட அதிர்வு அலைகளையும் மனித ஜீவனுக்குள் இருக்கும் மௌனங்களை வெளிப்படுத்தும் குரலாகவும்  உடைபடும் மௌனங்களாகவும் இன்றைய நவீன தமிழிலக்கியம் நேற்று இல்லாத ஒன்றை எழுத முயன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் வித்யாவின் தீராநதியின் சிற்றலையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். கதைசொல்லலிலும் கதையாடலிலும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மேகதூதம் – விஜி

விஜியின் ‘மேகதூதம்’ இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஓர் அறிவியல் கதை. இந்த ‘மேகதூதம்’ அளிக்கும் சாத்தியங்கள் எதிர்காலத்தில் நடப்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் சிங்கையில் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமாக உண்மையும்கூட. எதிர்கால நவீனமாக்கல் யதார்த்தவாதக் கதையாக இக்கதையை அணுகலாம். ஒரு புதிய அனுபவத்தையும் கதை சொல்லலில் உண்டாகும் நம்பகத் தன்மையும் மகிழ்ச்சியும் வேகமாக நகரும் கதைப் போக்கும் நனவிடையில் முனைந்து மெல்ல நிகழ்த்திப்போகும் கதையாடலின்  நெகிழ வைக்கும் காட்சிச் சித்திரமும் இந்தக் கதையை அதற்கு ஏற்ற களம், மொழி, நடை என்ற எல்லை மீறல் இல்லாமல் மிகவும் கவனமாக எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

அறிவியல் புனைகதையாக இருப்பதால் நிறைய இடங்களில் வருகின்ற அறிவியல் தொழில்நுட்பம் பல்லூடகங்கள் தொடர்பான ஆங்கிலச் சொல்லாக்கங்களுக்குப்  பின்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் வாசகர்களின் புரிதல்கள் இன்னும் விரைவாக நடந்தேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லையெனில் இக்கதையை வாசகர்கள் விரைவில் கடந்துபோய் விடும் அபாயமும் இங்கிருக்கிறது. இதுபோன்ற அறிவியல் சார்ந்த படைப்புகளைப் புனைவோர் இங்கு அதிகமில்லை. இதுபோன்ற கதைகளைப் படைப்பவர்களுக்குச் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத்தில் நல்ல எதிர்காலமும் உண்டு.
 
முரணியல் – பானு சுரேஷ்

சிங்கப்பூர்ச் சூழலில் இன, மத, மொழி வேறுபாடின்றி மக்கள் வாழும் சூழல் அமைந்திருந்தாலும் அனைவரும் அப்படி வாழ்வதில்லை, சிலர் இன்னமும் அண்டை வீட்டார்களுடன் ஒட்டாமல் தனித்து வாழ்ந்துகொண்டிருக்கிறனர் என்றக் கூற்றினை உணர்த்தும் கதை. சிங்கப்பூரர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வழக்கமான கதை. கதையாடலில் ஆங்காங்கே செயற்கைத்தனம் வந்து விழுந்து கதையின் நகர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது.

கதை, அதன் மையத்தை நோக்கி நகர்த்தப்படும்போது வழக்கமான ஒரு தீர்வை நோக்கி நகர்ந்தாலும் கதையின் கடைசி ஒரு பக்கம் மட்டும் மையத்திலிந்து தனித்து நிற்கிறது. ஒன்று மற்றொன்றோடு முரண்பட்டு நிற்பதைக் காட்டுவதற்கு இரண்டுக்கும் சம வாய்ப்பும் நிகரான சம்பவக்கோர்வைகளும் கொடுக்கப்பட்டிருந்தால் கதை சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி இயலவில்லை என்றால், கதைக்கருவிற்கு ஏற்ப இரண்டு வெவ்வேறு சிறுகதைகளை உருவாக்கியிருக்கலாம். தராசில் இரண்டு தட்டுகளிலும் சரிசமமாக இருந்தால்தான் தட்டுகள் ஒரே நேர்கோட்டில் நிற்கும். ஒன்றில் கூடுதலாகவும் மற்றொன்றில் குறைவாகவும் இருந்தால் அது நியாயமாகாது. இக்கதையும் அப்படித்தான். படைப்பாக்கத்தில் ஒரே பக்கமாக இறங்கி இருக்கிறது.

உற்றுழி – பிரதீபா

மாணவர்களுக்கும் தனித்து வாழும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை தரும் முன்மாதிரிக்கதை. எந்தத் தடங்கலும் இல்லாமல் பயணிக்க வைக்கிற கதையின் எளிய நடை.  சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கும் கதை சொல்முறை என பலவற்றிலும் கவனம் செலுத்தியதுபோல் கதையில் வரும் சம்பவங்களுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம். கதை சொல்லல் மிகவும் மேலோட்டமாக அமைக்கப்பட்டு கதைக்குள் நாம் நுழைவதற்குள் அடுத்தடுத்த செய்திகளைத் தந்து கதை நம்மைவிட்டு நகர்ந்துவிடுகிறது. இதுபோன்ற சாயலில் நிறைய கதைகள் எழுதப்பட்டிருப்பதால் இத்தகைய கதைகளைப் படைப்பாக்கம் செய்யும்போது இதுவரை எழுதப்பட்ட கதைகளிலிருந்து இந்தக் கதையை எப்படி வேறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக வெளிப்படுத்துவது எனச் சிந்தித்து எழுதினால் கதை அடுத்தகட்ட நகர்வை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியிருக்கும்.

ஒற்றை நட்சத்திரம் – வினுதா கந்தகுமாரி

தனித்து வாழும் ஒரு பெண்ணின் கதையோட்டத்தில் சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை மிக இயல்பாகப் படம்பிடித்துக் காட்டும் கதை. நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்கள் கதையினூடே வந்து கதைக்கான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

சமூகத்தில் எழுதாத சட்டமிடப்பட்டுள்ள வரையறைகளின் ஆக்கிரமிப்பால் பெண்கள் பெரும்பான்மையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். கற்பு முதலான ஒழுக்க விதிகள் அனைத்தும் பெண்ணுக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளதால், அவற்றிலிருந்து சிறிதேனும் அசைந்து கொடுக்கக்கூட பெண்களுக்கு இச்சமூகம் இடமளிக்கவில்லை. அதே வேளையில் இப்பெண்களை ஒழுக்க நெறிகளிலிருந்து தவற வைக்க தன்னாலான அனைத்தையும் ஆண்சமூகம் செய்யவும் தவறுவதில்லை. பகுத்தறிவு கதாபாத்திரத்தின் பெண் என்பவள் தனது சக்தியையும் திறனையும் தானே அறிந்துகொண்டு அவள் எதிர்கொள்கின்ற சிக்கல்களிலிருந்து தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வைக் கொடுக்கிறது. ஒரு சில கதாபாத்திர வருகை இவ்வுலகில் நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தத் தவறவில்லை.

பிரபஞ்சனின் அப்பாவின் வேஷ்டி போல் பகுத்தறிவுக்கு அம்மாவின் சேலை. அம்மாவின் சேலையை எடுத்து அவளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டபோது ஏதோ ஓர் இதம் அவளை அடைகாப்பதுபோல் உணர்ந்தாள் வாசிக்கும் நம்மை நெகிழவைக்கிறது.

மனித சமுதாயத்தில் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இது எல்லா காலங்களிலும் எல்லா சமூகங்களிலும் நிலவி வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். மனிதனின் வாழ்க்கை பல நிறுவனங்களோடு அவனை இணைத்திருந்தாலும், குடும்பமே அவனின் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. குடும்பமே சமூகம் உருவாக அடிப்படையாகவும் அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். அவ்வகையில் இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை இருக்கிறது. அந்தந்த வாழ்க்கைக்கான காரணகாரியங்களையும் அதற்கான விளக்கங்களையும் கதைகள் நம்மோடு பேசுகின்றன. சில கதைகள் நம்மைக் கதைகளுக்கு மிக அருகாமையில் அழைத்துச் செல்கின்றன. சில கதைகள் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கைக்  காட்டுகின்றன. சில கதைகள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. எது எப்படியினும் அனைத்தும் சிங்கப்பூர்க் கதைகள் என்பதில் மகிழ்ச்சி.

-     எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக