புதன், 10 ஜூன், 2020

சூல் (நாவல்) - சோ.தர்மன்






நாவல்    : சூல்
எழுத்து   : சோ. தர்மன்
பதிப்பு    : மூன்றாவது மீளச்சு 2019
வெளியீடு : அடையாளம்

இன்றைய சமூக வளர்ச்சியில் மக்களிடையே எழும்புகின்ற எந்தப் பிரச்சினையையும் நாவல் என்ற கலை வடிவத்தின் வாயிலாக நம்மால் விவாதிக்க முடிகிறது. நாவலே சமுதாயத்தில் இணைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வைக்கும் கருவியாகவும் அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் சிந்தனைக் களமாகவும் பண்பாட்டு மரபுகளைப் பரிமாறிக்கொள்ளும் பரிவர்த்தனைக் களமாகவும் சமுதாயக் கோட்பாடுகளை அலசி ஆராயும் அரங்கமாகவும் விளங்குகிறது. அவ்வகையில் சூல் நாவல் இந்தத் தலைமுறையிலிருந்து பல தலைமுறை பின்னோக்கிச் சென்று ஓர் அழகிய நீர்நிலை சார்ந்த ஒரு வாழ்க்கை அனுபவத்தை அந்தக் கிராமத்து மக்களின் மனநிலைக்கேற்பவும் சூழல்களுக்கு ஏற்பவும் படைப்புருவாக்கமாகத் தந்துள்ளது.

முதலெனப்படுவது நிலம்பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே– தொல். 14

என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப வாழ்ந்த நம் மூதாதையர்களின் வழியில் வாழ்ந்த ஒரு வாழ்க்கையை இந்நாவலின்மூலம் நம் முன் காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர் சோ. தர்மன். காட்சிப்படுத்தியதோடு நில்லாமல் நம்மையும் அவ்வாழ்க்கையோடு இயைந்து பயணிக்கவும் வைக்கிறார். இது தனிமனித வாழ்க்கை அல்ல. ஒட்டு மொத்த கிராமத்தின் வாழ்க்கை. இந்நாவலில் முக்கிய கதாபாத்திரம் என எதுவும் கிடையாது. எல்லா கதாபாத்திரங்களும் அதனதன் தன்மைக்கேற்பக் கதையை வேர்களாக ஊன்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

வரதம்பட்டி, பீக்கிலிபட்டி, வள்ளிநாயகிபுரம், ராவுத்தன்பட்டி, நல்லமுத்தன்பட்டி, வீரப்பட்டி, கட்டுராமன்பட்டி, சென்னையம்பட்டி போன்ற ஊர்களுக்கெல்லாம் கரம்பைமண் வளமுள்ள பெரிய கண்மாயான உருளைக்குடி கண்மாயில் தூர்வாரி பராமரத்துப் பணியைக் கிராமத்து மக்கள் தொடங்குவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. பரம்பரை நீர்ப்பாய்ச்சி அய்யனாரிடம் ஆசிபெற்று எட்டயபுரம் அரண்மனை கொடுத்த மண்வெட்டியால் கண்மாயின் கரையின்மேல் மூன்றுமுறை வெட்ட, அதனைத்தொடர்ந்து ஊர்மக்களும் கரையை வெட்ட ஆரம்பிக்கின்றனர். இப்படியாகத் தொடங்கும் நாவல், பல கிளைக்கதைகளுடனும் சம்பவங்களுடனும் வரலாற்று நிகழ்வுகளுடனும் உருளைக்குடி மக்களின் மனநிலைகளை மிகவும் இயல்பாக விவரித்துச் செல்கிறது. இத்தகைய கிராமிய வாழ்க்கையைப் புனைகதையில் வடிப்பதில் வல்லவர்களான ஆர். சண்முகசுந்தரம், கி. ராஜநாராயணன் வரிசையில் சோ. தர்மனும் முக்கியமான ஒருவராகிறார்.

நீர்நிலைகளை நம்பி வாழும் மக்கள் அவர்களின் விவசாயத்திற்காகவும் ஊர்மக்களின் நல்வாழ்விற்காகவும் அவற்றை எப்படியெல்லாம் பராமரித்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளனர் என்பதை விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் உணர்த்தும் கதை. அன்றைய வழக்கில் உள்ள சொலவடைகளுடனும் கிராமத்துக்கே உரிய கிண்டல் பேச்சுகளுடனும் சொல்விளையாட்டுகளுடனும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் நம்மை வியக்க வைக்கிறது. அன்றைய தமிழர்களின் மொழி ஆளுமையை உணர்த்துவதாகவும் உள்ளது. படிப்பறிவு இல்லாத மனிதர்களிடம் இத்தனை மொழியாற்றல் எங்கிருந்து வந்தது என சிந்திக்கவும் வைக்கிறது. இதுதான் தமிழ் மண்ணின் மணம்.

உருளைக்குடியில் உள்ள ஒவ்வொரு காவல் தெய்வங்களுக்கும் ஒரு கதை என காவல் தெய்வங்கள் தோன்றிய பல கதைகள் இந்நாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கட்டக் கருப்பன், கள்ளன் சாமி என பல வழிபாடுகள் உருவான கதை நாவலில் அந்த மக்களின் வாழ்வியலோடு மிக இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. தூள் மாவு சாமி, போதுமான அளவுக்கு நீர் தேவை இருக்கின்றபோது மழையை மற்றப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் சடங்கு என பல கிராமத்து சம்பிரதாயங்களும் நம்மை வியக்கவைக்கின்றன.

குழந்தைகள் இல்லாவிட்டாலும், ஊரெல்லாம் தாயாக மதிக்கும் கொப்பளாயி,  அன்று பிரபலமாயிருந்த தேனி, பெரிய குளம், சோழவந்தான், ஆத்துர் வெற்றிலையைப்போல உருளைக்குடி வெற்றிலையைப் பயிரிட மெனக்கெட்ட மகாலிங்கம் பிள்ளை, தெய்வச் சிலைகளைப் படைக்கும் கலையைப் பூர்வீகமாகக் கொண்ட செண்பக வேளாளர் என ஒவ்வொரு மனிதர்களையும் அவர்களின் இயல்பிற்கு ஏற்ப கதாபாத்திரங்களாக்கி நாவலில் நம்மோடு உறவாட வைத்து வெற்றியும் பெற்றுள்ளார் நாவலாசிரியர். மேலும், கிராமத்தில் உள்ள சில பரிகாரப் படலங்களையும் குறிப்பாக, அய்யர் பண்டாரத்திற்குச் சொன்ன பரிகாரப் படலம், அய்யர் பண்டாரத்துக் சொல்லி பண்டாரம் கொப்புளாயிக்குச் சொன்ன பாம்புக்குளம் உருவான பரிகாரப்  படலக்கதை போன்றவற்றையும் நாவலில் பதிவு செய்துள்ளார்.

அத்தியாயம் 15இல் பாஞ்சாலக் குறிஞ்சியிலிருந்து தப்பித்துப் போகும்போது உருளைக்குடியைக் கடந்துபோகும் வீரபாண்டிய கட்டபொம்பனின் வருகை நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது.  கேரள மந்திரவாதி குஞ்ஞான், அனுமன் முனி, எட்டயபுர அரண்மனையில் நடக்கும் விபரீத சம்பவங்கள், இருளப்ப சாமி, மூன்று தலைமுறையாகக் காத்து வந்த பூமிக்கடியில் புதைத்து வைத்த புதையல் எனத் தொடரும் கதை சுதந்திரத்திற்குப் பின் என நகர்ந்து இன்றைய உருளைக்குடியில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் பெரிய அலங்கார வளைவில் ஓர் அதிர்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

இந்நாவல் தமிழர்களின் தொன்மையான பண்பாட்டின் தொடர்ச்சி, நீர்நிலைகள் சார்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வியல், சடங்குகள், நம்பிக்கைகள், தொழில் சார்ந்து குடிகள், மொழி வழக்காறுகள், புழங்கும் பொருட்கள், உணவுப்  பண்பாடும் மரபார்ந்த மருத்துவம், அன்றைய தமிழர்களின் தத்துவார்த்தமான பார்வை போன்றவற்றை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மேலும், நீர்நிலைகளிம் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றிய விரிவான பல தகவல்களும் இந்நாவலில் கிடைக்கிறது.

சுதந்திரம் கிடைத்தபோது, ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை, கிட்டத்தட்ட முப்பத்து ஆறாயிரம் கண்மாய்கள், ஊரணிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளையும் கொடுத்துவிட்டுத்தான் போனார்கள். ஆனால், இன்றைய நீர்நிலைகளின் நிலை என்ன? அரண்மனையின் ஆட்சியின்கீழ் கிராமத்து மக்களே கவனித்துக்கொண்ட குடிமராமத்து ஒழிக்கப்பட்டு இன்று அதுசார்ந்து ஏகப்பட்ட துறைகள் வந்த விட்டபோதிலும், இன்றைய நீர்நிலைகள் அடைந்த மாற்றங்கள் என்ன? என்ற நாவலாசிரியரின் கேள்வி நாவலை வாசித்து முடித்தவுடன் நமக்கும் எழுவதில் ஐயமில்லை.

நாவலை வாசிக்கும் நாமும் உருளைக்குடியின் மண்மணத்தோடும் அந்த வாழ்க்கையோடும் ஒன்றிப்போய் விடுகிறோம். ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் எப்படி அந்த வாழ்க்கையை இழந்து போனார்கள்? நாவலின் இறுதியில் நாவலாசிரியர் இப்படித்தான் முடிக்கிறார்.

சில வருடங்களாக எல்லா கிராமங்களும் நிதானத்தை இழந்து விட்டதோடு, நிதானத்தை இழந்து வாழவும் பழகிக்கொண்டு விட்டன

-       -   எம். சேகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக