நாவல்: பேய்ச்சி
எழுத்து: ம.நவீன்
வெளியீடு: வல்லினம்
பதிப்பகம்
முதல் பதிப்பு: நவம்பர் 2019
பேய்ச்சி நாவல் வந்தவுடன் பல கண்டனங்கள் முகநூலிலும்
புலனங்களிலும் நாளிதழ்களிலும் வந்த வண்ணம் இருந்தன. என்னதான் அப்படி
எழுதக்கூடாததும் சொல்லக்கூடாததும் இந்த நாவலில் இருக்கிறது என்பதற்காக வாசித்தேன்.
பேய்ச்சி நாவல் வாசித்து முடித்ததும் எனக்குள் பலவிதமான எண்ண உணர்வுகள் தோன்றின.
இந்த நாவலைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தவர்கள் இந்த நாவலை முழுமையாக வாசித்தனரா? அல்லது
புலனத்தில் வந்த செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துரைத்தனரா என்றுத்
தெரியவில்லை. ஒரு வாசிப்பாளனாக எனக்குள் எழுந்தவைகளை இங்கு எழுத
வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பெருமான்
முருகன் தனது மாதொருபாகன் நாவலின் முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்.
‘சில இடக்கர் சொற்கள் கதைக்குத் தேவைப்பட்டதால் அவற்றை எழுதவேண்டியதாயிற்று.
இப்படியெல்லாம் இருப்பதால் இதை வாசிப்போரில் சிலர் அசௌகரியமாக உணரலாம். ஒப்ப
இயலாத
மென்மனத்தோர், நல்லோர், ஒழுக்கம் உடையோர் இவற்றை வாசிப்பதைத்
தவிர்த்துவிடுவது
உத்தமம்’
நவீனும் தனது முன்னுரையில் இப்படி ஏதாவது ஓர்
அறிவிப்பையோ வேண்டுகோளையோ வைத்திருந்தால் நல்லோரும் உத்தமர்களும் இந்த நாவலைத்
தொட்டிருக்கவே மாட்டார்கள். லஷ்மி சரவணகுமார் எழுதிய ‘உப்பு
நாய்கள்’ நாவலில் அளவுக்கு அதிகமான இடக்கர் சொற்களும்
வல்லுறவுக் காட்சிகளும் காம உந்துதல்களை வாசகர்களுக்குக்
கொடுக்கும் வண்ணம் புனையப்பட்டிருக்கும். இந்நாவல் நவீன படைப்பாக பல தளங்களில்
மேற்கோள் காட்டப்படுகிறது. அது பெருநிலம். பல வட்டார வழக்கு, பல
வாழ்க்கைமுறை. பல வாழ்வியல் சூழல். இதுபோன்ற படைப்புகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில்
வாசகர்கள் தீவிர வாசகர்களாக பலர் அங்கு உருவாகிவருகின்றனர்.
இனி நாம் பேய்ச்சிக்கு வருவோம்.
சமூகம் முழுமை வடிவம் பெற்ற ஒற்றை அமைப்பு அல்ல. அது
சிறு சிறு துண்டுகளாகவும் சிதறல்களாகவும்
இணைந்த பன்மை அமைப்பு. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் புவிச்சூழல்,
பண்பாட்டு மயமாகும் காரணிகள், வாழ்வியல் வகுப்பு முறைகள், சமூக
வட்டார வழக்காறுகள், மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள்,
மக்களின் உளவியல் பாங்குகள், தொழில்சார்ந்த
தங்குமிட நிலங்கள், நிலங்களுக்கும்
அதைத் தரவமைத்தவர்களுக்குமான உறவுகளும் நெருக்கங்களும் என பலவகைப் பண்புகளை
ஒருங்கே தனக்குள் வடிவமைத்துகொண்டுள்ள இந்தப் பேய்ச்சி நாவல்,
சமூகத்தின் கசகசத்த மன இறுக்கத்தையும்
அதன் இயங்குப் பாதையில் பெருகிக்
கிடக்கும் சிக்கல்களையும் அவலங்களையும் வலுவாகச் சித்தரித்துள்ளது.
ஓர் கட்டுரை ஆய்வாளன் ஒதுக்கக்கூடிய மோதல்கள், கோபம்,
வெறுப்பு, வன்மம் போன்ற உணர்வுகளை ஒரு நாவலாசிரியர்
ஒதுக்கவேண்டியதில்லை. அதற்கு மாறாக, இவை நாவல்களில் முக்கிய அங்கங்களாக வெளிக்கொணரப்படலாம்.
இது இந்நாவலில் வெகு இயல்பாக கையாளப்பட்டுள்ளது. இந்த சுதந்திரம் நாவலை வெவ்வேறான பரிணாமங்களில்
விரித்துச் சொல்லவும் பயன்பட்டுள்ளது.
நாவலின் கட்டமைப்பில் தோட்டத்துச் சூழல்,
கம்பத்துச் சூழல், சுற்று வட்டாரச் சூழல், கூலிம், லூனாஸ்,
பட்டவெர்த், பினாங்கு தைப்பூசம் போன்ற சூழல்கள் மிகத் துல்லியமாக
விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அத்தியாயத்திலும் குறிக்கப்பட்டுள்ள ஆண்டு நாவலின்
நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. முதல் அத்தியாயம் 1999 எனத் தொடங்கி
இரண்டாம் அத்தியாயம் 1981 என பின் ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் மாறி மாறித்
தொடர்ந்து இறுதி அத்தியாயம் 2019 இல் நிறைவு பெறுகிறது. லூனாசில் கள்ளச்
சாராயத்தால் நம் சமூகத்தினர் கொத்துக் கொத்தாக மடிந்த சம்பவமும் இந்நாவலை
நகர்த்திச் செல்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
கோப்பேரன், ஓலம்மா, ராமசாமி, மணியம், சின்னி, அப்போய், அவனுடன் வரும் கருப்பன் (நாய்) என முக்கியக்
கதாபாத்திரங்களின்வழிய அவர்கள் சார்ந்த நிலங்களையும் வாழ்வாதாரப் பின்புலங்களையும் நாவல் விசாலமாகவும்
நுண்ணியமாகவும் விவரித்துள்ளது. எழுத்தாளன்
யாரைப்பற்றி எழுதுகிறானோ, அந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி விளக்கும் தெளிவான வார்த்தைகளோடும் அந்த
வாழ்வியலுக்கேற்ற மொழியோடும் பொருந்தி வருகிறபோது அந்த மக்களுக்கான எழுத்து வடிவம்
பெறுகிறது. அந்த வகையில் இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைக்கப்பட்டுள்ளது
என்பதைவிட இந்நாவல் தன்னைத்தானே வடிவமைத்துக்கொண்டுள்ளது என்பதே சிறப்பாக
இருக்கும்.
தமிழ்நாடு என்ற பெருநிலத்திலிருந்து மலாயாவிற்கு தன்
ஆறாவது மகனாகப் பிறந்த ராமசாமியை கூட்டிக்கொண்டு வரும் கோப்பேரன் ஆகட்டும் தன்
பெற்றோருடன் கப்பலேறி, கப்பலிலேயே இறந்துபோன அப்பாவைக் கடலில் தூக்கிப்போட்டு
வரும் ஓலம்மா ஆகட்டும் இருவருமே இந்த மலாயா மண்ணைத் தங்களின் மண்ணாக நினைத்து
மதித்து வாழத் தொடங்கிவிட்டது என்பது நமது முதல் தலைமுறையினர் இந்த மண்ணுக்குத்
தரும் மரியாதையையும் நேசத்தையும் ஆவணமாகப்
பதிவு செய்கிறது இந்நாவல். இது இன்றைய தலைமுறை தமது தாய்நாடாக மலேசியாவை
மட்டும் அடையாளம் காட்டும் உண்மை நிலையையும் சுட்டிச் சொல்கிறது.
ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழும் மக்களின்
வாழ்க்கையமைப்பில் ஏற்படும் மாற்றங்களே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.
வாழ்க்கை நிலை என்பது பொருளாதார அமைப்பினாலும் அவ்வமைப்பு தோற்றுவிக்கும் உற்பத்தி
உறவுகளாலும் அவ்வுற்பத்தி உறவுமுறைகளுக்கு இயைபான சமூக உறவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது
எனவும் வாழ்க்கை நிலை இவற்றின் தொகுதி என
உரைக்கப்படுகிறது. இந்நாவல் இக்கூற்றுக்கான இடைவெளிகளை பேய்ச்சியில் நிறையவே
வழங்கியுள்ளது. ஒரு வாழ்வாதார நிலையிலிருந்து இன்னொரு வாழ்வாதார நிலைக்குப்
போகும்போது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நாவலில் காட்டிற்கும்
காட்டிலிருந்து ரப்பர்த் தோட்டத்திற்கும் ரப்பரிலிருந்து தொழில்புலர்வு ஏற்பட்டு
செம்பனை மரங்களுக்கும் அங்கிருந்து கம்பங்களுக்கும் அடுக்குமாடி வீடுகளுக்கும் என
புலம்பெயர்ந்த தமிழினத்தின் வாழ்வியல் புலம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளது நமது வாழ்வாதாரத்தின்
அடிச்சுவடுகளைக் காட்டுகிறது.
நாவல் எனும் இலக்கிய வகை தனக்கேயுரிய இலக்கிய உருவ
அமைதியிலும் பொருளமைதியிலும் இச்சமூக மாற்றங்களை எவ்வாறு எடுத்துக் காட்டுகிறது
என்பதை அவதானித்துக் கொள்வது அவசியமாகும். கோப்பேரன், ஓலம்மா,
ராமசாமி, மணியம், சின்னி, அப்போய் போன்ற கதாபாத்திரங்கள் இச்சமூகத்தில் வாழ்ந்த, வாழும்
கதாபாத்திரங்கள்தான். கோப்பேரனின் வாழ்க்கையாகட்டும் ஓலம்மாவின் வாழ்வாதாரப்
போராட்டமாகட்டும் ராமசாமியின் பெண்ணிய நளினங்களாகட்டும் மணியத்தின் இச்சைக்குணங்களாகட்டும்
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன்னையே கொடுக்கும் சின்னியின் சூட்சுமக் குணமாகட்டும்
அனைத்துமே இந்தச் சமூகத்தில் ஏற்படும் வாழ்வியல் போராட்டங்கள்தான். அத்தோட்டதில்
மளிகைக்கடை வைத்திருக்கும் ஆசோவிற்கும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும்
சின்னிக்கும் நடக்கும் வியாபாரப் போட்டியில் சம்சு குடித்து மாய்ந்து விழுந்தது
தமிழினம்தான் என்ற உண்மையையும் சீனர்களின் ஆதிக்கத்தில் கள் விளைந்த தென்னம் மரங்கள்
வெட்டப்பட்டுக் கள்ளச்சாராயம் தோட்டத்திற்குள் நுழைந்தது வரை பேய்ச்சி
பேசுகிறது. இதையும் தாண்டி பேசாமலும் சில
விஷயங்களைப் பேய்ச்சி பேசியிருக்கிறது. அவை அவரவர் புரிதல்களுக்கும்
அனுபவத்திற்கும் ஏற்ப விரிவடையக்கூடியவை. நாவலில் வரும் மாந்தர்கள்
பெரும்பான்மையினர் சூழல்கள் உருவாக்கிக் கொடுக்கும் வாழ்க்கையை வாழ்பவர்கள்.
இவர்கள் யாவரும் மாபெரும் இலட்சியங்களை இலக்காகக் கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள்
அல்ல.
நாவலின் காட்சிப்படுத்துதல் மிகவும் துல்லியமாக
நிகழ்த்தப்பட்டுள்ளது. காடு அதன் சூழல், அதன் இருட்டு, அதன் வெளிச்சம் என அந்தப் பெருவெளி மரம், செடி, கொடி,
விலங்குகள், பறவைகள், அருவி என விரிந்தபடியே செல்கிறது. நம்மையும் கூடவே
அழைத்தும் செல்கிறது. பல இடங்களிலும் நாமும் பயத்தோடும் நடக்கவேண்டியுள்ளது.
மேலும், மூலிகைச் செடிகள் தொடர்பான பல துல்லிமான விஷயங்கள்
தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தோட்டம் அதன் அன்றைய சூழல், அதில்
வாழ்ந்த நம்மில் பலருக்கு அந்தப் பழைய நினைவுகளையும் மீட்டெடுக்க உதவும் என்பதில்
சந்தேகமில்லை.
நாவலின் மொழிநடையில் அவ்வட்டாரத் தோட்டச் சூழலில் பயனில்
இருந்து இடக்கர் சொற்கள் சில சமயங்களில் வந்து போவது இயல்பான தோட்ட வாழ்க்கையை
நமக்கு உணர்த்தியிருந்தாலும் அச்சொற்களைத் தவிர்த்தும் இந்நாவலை எழுதியிருக்க
முடியும் என்றும் தோன்றுகிறது. அடுத்து, வல்லுறவுக் காட்சிகளையும் குறிப்பாகவோ அல்லது
குறியீடாகவோ உணர்த்தியிருக்கலாம். இது பல வாசகர்களுக்கு அசௌகரியத்தைக்
கொடுப்பதாகவும் இருக்கக்கூடும். ஒரு நல்ல படைப்பு, இன்றைய
மலேசிய தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கவேண்டிய நாவல் இதுபோன்ற ஒரு சில
காரணங்களினால் பலரிடமும் சேராமல் போவது வருத்தம் அளிக்கக்கூடியதே.
மலேசிய நாவலின் புனைகதை மொழி எம்.ஏ.இளஞ்செல்வன்,
சீ.முத்துசாமி, சை.பீர்.முகமதுக்கு எனத் தனது அடுத்த நகர்வை நோக்கி
தீவிரமாகத் தொடங்கியிருப்பதைப் பேய்ச்சி நாவல்வழி அறியமுடிகிறது.
நவீனுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
அடுத்த பதிப்பு ஒன்றை வெளியிட்டு, அதில்
இருக்கிற இடக்கர் சொற்களையும் வல்லுறவுக் காட்சி விவரணைகளையும் நீக்கி இந்நாவல்
அனைத்துத் தரப்பினரும் வாசிக்கும் வகையில் வெளிவந்தால், இந்த
நாவலுக்கு நீங்கள் போட்ட உழைப்புக்குப் பலன் இருக்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய
நம் கதை இது. வெறும் கதை மட்டுமல்ல. நம் அடையாளமும்கூட. எக் காரணங்களுக்காகவும்
இது விரயமாகிவிடக்கூடாது.
-
எம்.சேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக