நாவல் : ஒரு கடலோர கிராமத்தின் கதை
எழுத்து : தோப்பில் முஹம்மது மீரான்
வெளியீடு : காலச்சுவடு
பதிப்பகம்
பதிப்பு
: ஆறாம் பதிப்பு, மே 2019
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய
நாவல்களில் பெரும்பாலும் பேசப்பட்ட
நாவல்கள் இனக்குழுக்கள் அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவையேயாகும். மீனவர்களைப்
பற்றிய ஜோ.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு, மறவர்கள் குறித்து வேல. ராமமூர்த்தியின் குற்றப்பறம்பரை, தேவேந்திர குல வேளாளர்கள் பற்றிய சோ.தர்மனின் கூகை,
பூமணியின் அஞ்ஞாடி, அறிவுமணியின் பாழ்நிலம், இமையத்தின் செடல், ஜெயமோகனின் வெள்ளையானை, மழைப்பாறை
பிரமலைக்கள்ளர்கள் பற்றிய வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் எனப் பலதரப்பட்ட நாவல்களின் போக்குகள்
தமிழ்ச் சமூகத்தின் கலவையியல் பண்பை விளிம்பி விவரிக்கின்றன.
குறிப்பிட்ட ஒரு குழுவில் அல்லது வட்டாரத்தில்
காணப்படும் முன்னோர்களின் அதிகாரமைய
வாழ்க்கை, குடும்பத் தலைவர்களின் அதிகாரம், மதத்தின் இறையான்மை, பேச்சு வழக்குகள், குடும்ப உறவின் சிக்கல்கள், பெண்களின் நிலை, அதிகார மையத்துக்குப் பயந்து வேலைசெய்யும் ஊழியர்கள், அடித்தட்டு மக்கள்கள் என அனைத்தையும் பதிவு செய்யும் ஒரு போக்கு இன்றைய
படைப்பிலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட இனத்தின் அல்லது இனக்குழு வாழ்ந்த பகுதியில் நாம்
அறிந்திடாத அன்றைய வாழ்க்கையைக் குறித்த ஒரு பார்வை நமக்குக் கிடைக்கிறது.
சோ.தர்மனின் சூல் நாவலில் உருளைக்குடி மக்களின்
வாழ்க்கை வாசிப்பு அனுபவமாக எனக்குக் கிடைத்திருந்தது. நாம் அறியாத ஒரு வாழ்க்கையை, மொழியை ஒரு நாவலில் வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் ஓர் அலாதியான
அனுபவத்தை எழுத்தில் சொல்லிட முடியாது. அதுபோலவே, தோப்பில்
முஹம்மது மீரான் எழுதியிருக்கும் ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவலிலும் முதல்
உலகப்போர் முடிந்த காலத்தில் தேங்காய்ப்பட்டினம் வாழ் தமிழ் முஸ்லீம் மக்களின்
சமூகப் பொருளாதாரக் கலாசாரப் போக்குகளையும் அவ்விடத்து மக்களின் சிந்தனைப்
போக்கினையும் அறிந்துகொள்ளவும் அவ்வாழ்க்கையைப்பற்றிய ஒரு சித்திரமும்
கிடைத்துள்ளது. இந்நாவலின் நனிசிறப்பு யாதெனில், அவர்களின் வாழ்க்கையை
அவர்களின் மொழியிலேயே நாவலாசிரியர் கொடுத்திருப்பதுதான். ஆரம்பத்தில் அவர்களின் சொல்லாடல்கள்
, வழக்குகள் வாசிப்பதில் சற்றுத் தடுமாற்றத்தைக் கொடுத்தாலும்
பிறகு அந்த வாழ்க்கைக்குள் நாமும் பழக்கப்பட்டுப் போய்விடுகிறோம். அந்த மக்களின் வாழ்வியல்
சூழல் தொடர்பான ஒரு தரிசனத்தை இந்த நாவல் வழங்குகிறது.
இனவரைவியல் இலக்கியத்தின் கொள்கைகளை இந்நாவலில் காணமுடிகிறது.
சமூகம் முழுமை பெற்ற ஒற்றை அமைப்பு அல்ல. சிறு சிறு துண்டுகளாலும் சிதறல்களாலும் ஒன்றிணைக்கப்பட்ட
ஒரு பன்மை அமைப்பு என்ற கூற்றுக்கு ஏற்ப தேங்காய்ப்பட்டின தமிழ் முஸ்லீம்களின் சிறப்புக்
கூறுகளையும் பொதுக்கூறுகளையும் வாழ்வின் முரண்களையும் அடையாளம் காட்டும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இந்நாவல் அப்பகுதி மக்களின்
அன்றைய வாழ்க்கை அடையாளத்தின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது. மலேசியச்
சிங்கப்பூர்ச் சூழலில் பிறந்து தமிழ்நாட்டுத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்துவரும்
என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற படைப்புகள் தமிழ்நாட்டு இனக்குழுக்களின் வட்டார
வாழ்க்கையோடு எங்களை நெருக்கமாக்குகின்றன.
மதம், நில
உடமையாளர்களின் இரும்புப்பிடியில் மிகக் கோரமாகச் சிக்கியிருக்கும் ஒரு
கிராமத்தின் கதை இது. மதத்தைக்கொண்டு அரங்கேறும் மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள், பாலியல் அத்துமீறல்கள், வலியோரின் அதிகாரம், தொழுகைவரை நீளும்
நிலவுடமைக்காரர்களின் அதிகாரக் கைகள், எந்தச் சுதந்திரமும்
இல்லாத பெண்களின் நிலை என மனித வாழ்வின் சித்தரிப்புகள் நீளுகின்றன.
முதலாளி வடக்கு வீட்டின் அகமதுக்கண்ணு, அவர் மனைவி, மகள் ஆயிஷா,
சகோதரி நுஹூ பாத்திமா, அவளின் மகன் பரீது வடக்கு வீட்டில்
வசிக்கின்றனர். ஊரே அவரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கிறது. அவரின்
உத்தரவுகளை செயலாற்றும் மோதினார் அசனார் லெப்பை, அவுக்காரு, கருப்பன் போன்ற கதாபாத்திரங்களுடன் ஓஸன்பிள்ளை நியாயவிலை கடை, அகமது ஆசானின் சுக்கு வெண்ணீர்க்கடை, அந்திக்கடை
போன்றவை அப்பட்டினத்தின் அடையாளங்களாக வருகின்றன. மேலும்,
செய்யிதினா முகம்மது முஸ்தபா இம்பிச்சிக்கோயாத் தங்கள் ஒரு பெரிய மகானாகக் கிராம
மக்களிடம் செல்வாக்குப் பெற்று இருக்கிறார். மதத்தின் பெயரால் இவர்களைப்
போன்றவர்கள் எப்படிக் கிராம மக்களைத் தங்களின் கைக்குள் வைத்திருந்தனர் என்பதை
நாவலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
கதையில் நமக்கு நம்பிக்கைத் தரும் மனிதர்களாக
வருபவர்கள் சுறாப்பீலி விற்கும் மஹ்மது, ஆங்கிலப் பள்ளி
ஆசிரியராக வரும் மெஹ்பூப்கான் இருவரும்தான். இருவரும் சுரண்டுப்படும் அச்சமூகம் மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய அச்சமூகத்தின் ஒட்டுமொத்த
மனவோட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களுக்குக் கபிராகிறார்கள்.
இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம். அது
வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக்
கொண்டது எனும் மாயையைத் தமிழில்
முதலில் உடைத்தெரிந்த நாவல் என இந்நாவலைப்பற்றி சிறப்பாகக் கூறும் எம்.ஏ.நுஃமான், இந்நாவல் தமிழ் நாவலுக்கு ஒரு புதிய களத்தையும் ஒரு புதிய வாழ்க்கை
முறையையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது என்றும்
குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். ஜெயமோகன் இந்நாவலைச் சிறந்த தமிழ்
நாவல்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். எஸ். ராவும் இந்நாவலை நூறு சிறந்த தமிழ்
நாவல் பட்டியலில் வைத்துள்ளார்.
இந்நாவலை வாசித்துவிட்டு சுந்தர ராமசாமி, ‘இவரு ஒரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே
இயல்பா மனசு போய் படிஞ்சிடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்கு மேலே இவருக்கு
அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம்’ என
தோப்பில் முஹம்மது மீரான் பற்றிய ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பதிவு செய்துள்ளார். மேலும், இந்நாவல் ‘The
story of a seaside village’ என்ற
பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
- - எம்.சேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக