செவ்வாய், 1 மார்ச், 2022

இந்திரஜித்தின் ரயில் நாவல்


 


நூல் விமர்சனம்

ரயில் (நாவல்): இந்திரஜித், சிங்கப்பூர்

வெளியீடு: தங்கமீன் பதிப்பகம், சிங்கப்பூர்

மனங்களுடன் சில உரையாடல்கள் – எம்.சேகர்

 

இரண்டாம் உலகப்போரின் மிகக்  கொடூரமான மனித வதை சயாம் மரண ரயில் பாதை.  ‘சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்’ என்று சிலர் இதைக் குறிப்பிடுவதுண்டு. 415 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் பாதை தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்கள் போட்ட திட்டம். இதில் ஏறக்குறைய 180,000 ஆசியத் தொழிலாளர்களும் 60,000 போர்க்கைதிகளும்  வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

 

ஜப்பானியர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்தும் சாலையில் நடந்து செல்வோரை வலுக்கட்டாயமாகப் பிடித்தும் லாரிகளில் ஏற்றினார்கள். பல தோட்டத்துக் கங்காணிகளும் கிராணிகளும் பணத்துக்காகத் தொழிலாளர்களிடம் ‘நிறைய பணம் சம்பாதிக்கலாம்’ என்று ஆசை வார்த்தைகள் கூறி வேலைக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள்.

 

லாரிகளில் ஏற்றப்பட்டவர்களில் பலர் கூரையில்லாத ரயில் வண்டிகளில் அடைக்கப்பட்டு நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.  ஒரு வேளை சாப்பாடு. அதுவும் புழுக்கள் நெளியும் உணவு. அதை நிராகரிக்க முடியாத சூழலில் சிக்கிக்கொண்டு அந்தத் தொழிலாளிகள் வாழ்ந்துள்ளனர். தத்தம் குடும்பத்தைக்காண உயிரைத் தக்க வைத்துக்கொள்ள போராடினர் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும். இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தின் புனைவுதான் இந்திரஜித்தின் ரயில் நாவல்.

 

ஆர்.சண்முகத்தின், ‘சயாம் மரண ரயில்’, அ.ரெங்கசாமியின், ‘நினைவுச் சின்னம்’, அண்மையில் வெளிவந்த கோ.புண்ணியவானின் ‘கையறு’ நாவல்களுக்குப் பிறகு நான் வாசிக்கும் நாவல் - ‘ரயில்’. மற்ற நாவல்கள் சயாம் வாழ்வின் துயரங்களையும் அவர்கள் இரண்டு மூன்றாண்டுகளுக்குப் பின் தத்தம் குடும்பத்தைக் காணவந்தபோது சிதைந்துபோன வாழ்க்கையே மிஞ்சியிருந்ததையும் நிறைய பேசியிருக்கின்றன.

 

ரயிலுக்கு முன்பு வந்த நாவல்கள், அந்த வாழ்வின் வலியை தமிழர்களின் இயலாமையை புலம்பலை ஜப்பானியர்களின் கொடுமையை அதிகமாகப்  பதிவுசெய்திருக்கின்றன. அந்த மூன்று நாவல்களிலும், சொல்லப்பட்ட செய்திகள், தரவுகள் பல திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளன.

 

சயாம் மரண ரயில் சரித்திரப் புன்புலத்தை ஒரு மெல்லியச் சரமாக வைத்துக்கொண்டு, ரயில் நாவலில் மனித மனங்களை அதிக அளவில் திரைபோட்டுக் காட்டியுள்ளார் இந்திரஜித்.

 

துரை, சாம்பா என்ற சாம்பசிவம், முத்து, பட்டுக்கண்ணன் ஆறுமுகம், கிருஷ்ணன், அம்பலவாணர் மண்டூர், புதுக்கவிஞன் ஜப்பானிய சிப்பாய் கிரோஷி, ரப்பேச்சா, ராமசாமி, சுப்ரமணியம், வத்சலா, அபின்யா, கணேசன், சீனப்பாட்டி அவர் மகன் அவாங், லாரி டிரைவர் அய்யாடோனி, ரவீந்தரா சார், விஜயா, வசந்தா, தமயந்தி, அண்ணாமலை, கொரியப் பெண் எனக் கதாபாத்திரங்கள் நாவலுக்குக் கணக்கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன. கதாபாத்திரங்களை மிகக் கவனமாகத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொண்டிருப்பது நாவலாசிரியரின் தனித்திறன். நாவலில் வருகின்ற சின்னக் கதாபாத்திரம்கூட மிக அழகாகக் கதையை நகர்த்திச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது.

 

இந்திரஜித் ஒரு ஜென் துறவிபோல, இயற்கையோடு மிக ஒன்றி, இயற்கையையும் மனிதனின் மன உணர்வையும் வெளிப்படுத்தக் கச்சிதமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

 

பசியின் நீண்ட கரம் அவர்களைச் சுற்றி வளைத்தது’

மனம் செத்துப்போன அந்த ஒரு தருணம்’

ஒருமுறை வந்தால் கடவுள், அவ்வப்போது வந்தால் மனிதன், தொடர்ந்து வந்தால் நாய்’

மூச்சுவிட முடியாமல் திணறியது காற்று’

இப்படி நாவல் முழுக்கக் கூர்மையான சொல்லாடல்கள் நிறைந்திருக்கின்றன.

 

கற்பனை நயம், ‘எல்லா இடங்களிலும் ராத்திரி பூசப்பட்டிருந்தாலும் வானம் எதற்கும் இருக்கட்டுமே என்று கொஞ்சம் வெளிச்சத்தைத் தூவி வைத்திருந்தது’ ‘ஆற்று நீரில் நனைத்த காற்றைக் கொண்டுவந்து மேலே கொட்டிவிட்டு விலகி நின்று சிரித்தது இரவு’ - இதுபோன்ற சொல்லாடல்கள் வாசகரை நிறுத்தி நிதானமாக நகர வைக்கின்றன.

 

நம் சமூகத்தின் பலவீனத்தை எழுத்துச் சாட்டைக் கொண்டு விலாசுகிறார் இப்படி,

எது நடந்தாலும் எதுவும் நடக்காத மாதிரி இருக்க நம்மால் முடியும்’.

 

தொழிலாளிகளின் சொற்கள் வழி வீரத்தமிழனாய் முழங்குகிறார்,

ஜப்பானியர்களை உதைத்திருக்கவேண்டும். பிடித்துக்கொடுத்த ஏஜெண்டுகளை உதைத்திருக்கவேண்டும். தமிழன் அடித்தால் எலும்பு உடையும் என்று ஜப்பான்காரன் அலறித்துடித்திருக்க வேண்டும்.’

 

காட்சிச் சித்தரிப்புகள் நம் முன்னே விரிந்து விரிவடைகின்றன. அந்தச் சிலந்தியின் காட்சி, அடிக்கடி வரும் கடற்கரை விவரிப்புகள் நம் மனத்தையும் சலவை செய்து ஆயிரம் நம்பிக்கைகளைக் கொடுக்கும் வலிமை கொண்டவை. 

 

இரண்டு ஆண்டு கொடூர வாழ்க்கையில் மனித மனம் அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை துரை, சாம்பா போன்றோரின் உணர்வுகளின்மூலம் அவர்களுக்கான உரையாடல்களில் நம்பிக்கை நம்பிக்கையின்மையின் தரிசனங்களை மிக இயல்பாகச் சொல்லிச் செல்கிறது ரயில்.

 

இந்திரஜித்திற்கே உரிய துள்ளல் நடையும் எள்ளல் நடையும் இந்த நாவலின் பலம். எளிய மொழிநடை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் நாவலோடு நம்மைப் பயணிக்கவைக்கிறது.

 

சுமார் மூன்று மணிநேர ரயில் வாசிப்புப்பயணம் என்னை மீண்டும் ஒருமுறை சயாம் மரண ரயிலில் பயணிக்க வைத்தது. கடந்த வாசிப்புகள்போல் இல்லாமல் இந்தத் தடவை வேறொரு வாசிப்பு அனுபவத்தையும் மனித மனம் சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாட்டையும்  கொடுத்திருக்கிறது ரயில். இத்தகைய நல்ல நாவலை எழுதிய நாவலாசிரியர் இந்திரஜித், பதிப்பித்துள்ள தங்கமீன் பதிப்பகத்திற்கும்  எனது வாழ்த்துகள்.

 

- எம்.சேகர்

17012022




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக