வெள்ளி, 1 ஜூலை, 2011

படிதத்ததில் பிடித்தது - காமம் ஒரு பார்வை



கற்பு
ஒவ்வொரு மனங்களிலும்
வெவ்வேறு புனைவுகள்

போலிப் பார்வைகளினால்
திரையிடப்பட்டு
மணம் திரிந்து நிற்கிறது

கற்பு..கற்பு..கற்பு
அப்படி என்றால் என்ன?
ஏன் அது பெண்களுக்கு மட்டும்
முன்னிலைப் படுத்தப்படுகிறது?

அண்மையில் 'யாவரும் கேளீர்'என்ற இணையப் பக்கத்தில் பார்வையில் பட்ட ஒரு கட்டுரையை படியெடுத்து போட்டிருக்கிறேன்.

காமம் ஒரு பார்வை

கற்பு என்றால் என்ன என நண்பன் கேட்ட பொழுது நான் சொன்ன ஒற்றை வரி பதில் நினைவிற்கு வருகிறது. ‘பெண்ணின் பிறப்புறுப்பு சம்பந்தப்பட்டது அல்ல’ .
நான் இதைச் சொன்னதைத் தொடர்ந்து, ஒரு மிக நீண்ட விவாதம் நடந்தது. கல்வியில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களானாலும் சரி, கல்வியறிவே இல்லாதவர்களானாலும் சரி, இந்த விசயத்தில் அல்லது ‘மேட்டரில்’ தங்கள் கருத்தாக இத்தனை காலங்கள் தங்கள் மேல் திணிக்கப்பட்டதையேத்தான் வெகு இயல்பாக தங்கள் கருத்தாக எடுத்துக்கொண்டு விட்டார்களோ/டோமோ என பேசிப் பார்க்கும்பொழுது தோன்றுகிறது.


கற்பு என்ற உடன், அது பெண் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதான கருத்தில் இருந்து வெளியே வர இன்னும் காத்திருக்கிறோம். அரை நூற்றாண்டாவது ஆகும் என்றும் தோன்றுகிறது..

கற்பு துவங்கும் புள்ளி காமம். அதுகுறித்து வெளிப்படையாக ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்றால் கட்சியில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கற்புக்கான விவாதங்களே இப்படி எனில், அதன் ஆதார உணர்வான ‘காமம்’ குறித்துப் பேசுவதற்கான ஆரோக்கியமான சூழல் உள்ளதா போன்ற கேள்விக்கே இடமில்லாதவாறு இருக்கிறது. கத்திமேல் நடக்கும் சமாச்சாரம். ‘கலாச்சார சீரழிவு’ என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு மிக செளகரியமாக வருடங்களைப் பின்னிழுத்துக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேண்டுமா வேண்டாமா என்று பேசிக்கொண்டே இருக்கிறோம்.

ஒன்று சுதந்திரத்தின் வானம்
இல்லை மரணத்தின் பள்ளம்

என்று வைரமுத்து, காட்டு விலங்குகள் வாழ்க்கை குறித்து சொல்லி இருப்பது இங்கே இந்த காமம் குறித்தும் பொருந்துகிறதோ என்று தோன்றுகிறது. ஒன்று, நிறைய உறவுகள் திகட்டத் திகட்டப் பேச்சு என்று காமத்தின் அதீத சுவை. அல்லது பிறன்மனை நோக்கல் பெரும்பாவம் என்ற ஸ்டாண்ட். இரண்டுக்கும் இடையில் சொற்ப சுக சுய சல்லாபம் என வானம்-பள்ளம் கதைதான்.

ஆண் பெண் உடல்மொழி குறித்துப் பேசும் சூழ்நிலை பற்றி இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சங்கப்பாடல்களில் போகிற போக்கில் காமம் குறித்து வெகு இயல்பாகவும் வெளிப்படையாகவும் பேசப்பட்டு வந்திருக்கிறது.

காமம் என்றால் விருப்பம் என்ற ஒரு அர்த்தத்தில்,

“காமம் செப்பாது கண்டது மொழிமோ...” என்பதில் துவங்கி, காமம் என்பது விருப்பம் தானே என்ற வியப்பையும் தருகிறது.(வண்டே உன் விருப்பம் என்பதை தவிர்த்து, நீ கண்டதை மட்டும் சொல்-காமம் செப்பாது கண்டது மொழிமோ.).

கபிலர் ஒரு பாட்டை இப்படி முடிக்கிறார்.

சிறுகோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறுது, காமமோ பெரிதே.

மிகச் சிறிய காம்பு தாங்கி நிற்கும் பெரிய பலாப்பழம் போல,இவளின் உயிர் வலிமையற்றுச் சிறியது. ஆனால் இவள் காமம் மிகப்பெரிது.

என்ற உவமையால் தலைவனை விரைந்து, தலைவியை வரைந்து கொள்க என அழைக்கும் பாடல் ஒரு வகை அது.

காமம் என்ற வார்த்தையை காதல் என்றும் ஒப்பிட்டு நோக்குகிறது பெரும்பான்மை விளக்கப் புத்தகங்கள். அது நாகரீகம் கருதும் வேலை என்றேப்படுகிறது. இதோ,

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

என்ற அற்புதப் பாடலின் அர்த்தம் அதி அற்புதம். காதல் தாண்டிய ஒன்று. அல்குல் வரை பாய்ந்த பாடல். கன்றுக்குட்டிக்கும் கிடைக்காமல், கறந்தவனும் பாத்திரத்தில் வைத்துக்கொள்ளாமல் தரையில் கொட்டிவிடப்பட்ட பாலைப்போல, மாந்தளிர் போன்ற என் மேனியானது கெடுகிறது. அவருக்கும் பயன்படவில்லை. என்று போகிறது அப்பாடல். அதில், திதலை அல்குல்- அதீதம்.

அதற்கடுத்த இப்பாடலைப் பாருங்கள். விளக்கம் ஏதும் தேவையற்று, வார்த்தைகளிலேயே முற்றும் விளங்குகிறது.

முட்டு வேன்கொல்?தாக்கு வேன் கொல்?
ஒரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

ஒளவையார் எழுதிய பாடல். காம நோயால் வருந்தும் தலைவி வெளிப்படுத்தும் மெய்ப்பாடு, படும்பாடு பெரும்பாடு என்பதை உணர்த்தும் பாடல்.

இவை இப்படி என்றால், தலைவன் தன் நிலை கூறுதல் இன்னும் ஆழ அழகு.

இடிக்கும் கேளிர் என்ற பாடலில்,

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்றுகொளற்கு அரிதே

என்கிறான் வெள்ளி வீதியார் வாயிலாக. அற்புத உவமைகளுள் முதன்மை இதுவே எனப்படுகிறது.

கைகள் இரண்டும் இல்லாத, வாய்பேச முடியாத ஒருவனின் கண்முன், வெயில்பாறைமீது வெண்ணெய் உருகினால், அவனால் அதை எடுத்துக் காக்கவும் முடியாது, பிறரிடம் சொல்லவும் முடியாது. (வாயால் சாப்பிட்டுவிடலாமே என்று சமயோஜிதம் தோன்றுபவர்களுக்கு: கவனிக்க, ஞாயிறு காயும் வெவ்அறை..சூடான பாறை), என மனதில் மருகும் நிலையை கூறிச்செல்லும் அற்புதப்பாடல்.

காமம் களித்துக் கழித்ததை தலைவன் உவகையோடு வெளிப்படுத்தும் ஓர் அற்புதப் பாடல் ..

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறுஇதழ்க் குவளையோடு இடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.

தழுவிக்கொள்ள இனிமைதரும் தலைவியாம். காந்தள் கண்கள், பசுமை முதிர்ந்த முல்லையின் செவ்விப்பூக்கள், குவளைமலர்களுடன் இடையிடையே இணைத்துக்கட்டிய அழகிய மாலைபோல நறுமணம் உடையவளாம். ஹும்ம்ம்.

இயற்கைப்புணர்சிற்கடுத்து, இடந்தலைப்பாடு பொருட்டு தலைவன் கூற்றாக ஆந்தையாரின் பாடல்.

இதோ இன்னுமோர் அற்புதம்.

என்னவளின் மெல்லிய மார்பை ஒரே ஒரு நாள் ஐம்புலனும் சேர்த்துக் கூடப்பெற்றால் போதும். அதன் பின் அரை நாள் வாழ்க்கையைக் கூட விரும்பமாட்டேன். அதுவே போதும்..எனும் பொருளில்,

கேளிர் வாழியோ கேளிர்! நாளும் என்
நெஞ்சுபிணிக் கொண்ட அம்சில் ஓதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே..

நக்கீரர் பாடல் இது. ஆம்.

தளிர்மேனித் தலைவி தன் மேனியின் ஏற்படும் மாற்றங்களாக காமத்தை காரணம் கூறும் இப்பாடலும்

கைவளை நெகிழ்தலும் மெய்பசப்பு ஊர்தலும்
மைபடும் சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி, அது காமமோ பெரிதே..

வாம்.

கடைசிக் காலத்துக் காமம் என்பதையும் பதிந்தே போயிருக்கிறது குறுந்தொகை. சமீபத்தில் ஆந்திர கவர்னர் திவாரியின் லீலைகள் காட்சிகளாக அரங்கேறியதும் எல்லோரும் அனிச்சையாக சொன்ன வார்த்தைகள்- “இந்த வயசுல என்ன பண்ணமுடியும்? அநியாயம்ய்யா”..அந்தக் காட்சிகளை குறுந்தொகை இப்படி முன்பே படிமபப்படுத்திவிட்டது.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

எவ்வளவு உண்மை. முதிய பசு புல்லை முழுவதும் தின்ன இயலாது. வாயால் தடவி அதிலே இன்பம் காணும். காம இன்பமும் முற்றாக அனுபவித்துத் தீராது. தினமும் புதியதான விருந்தாகும் எனும் பொருளில் மிளைக்கந்தன் என்ற புலவர் பாடிய குறிஞ்சிப்பாடல். ஆச்சர்யம் என்னவெனில் இதே புலவர் பாடிய மற்றுமொரு பாடல்,

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணுங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகுமென்று ஆள்மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

காமம் ஒன்றும் நோயோ வருந்தத்தக்கதோ அல்ல. குளகு எனும் தழையுணவை தின்ற உடன் யானைக்கு மதம் பிடிப்பது போல சுற்றும். அதுபோலத் தனக்கு பிடித்தமான துணையை, தான் காணவேண்டியவரைக் கண்டவுடன் ,வெளிப்படும் உணர்வு காமம்..அவ்வளவே..

என்று சொல்லிப்போய்விட்டார். அவ்வளவேதான்.

எங்கோ ஆரம்பித்த கட்டுரை முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது..காமம் போலவே...

நன்றி நர்ஸிம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக