இன்று கடைசி இரவு
ஜூன் முப்பது 2011
உன் பயணத்திற்கு
நிச்சயிக்கப்பட்ட
இறுதி நேரம் வந்துவிட்டது
இது பிரிவல்ல
ஒர் இடப்பெயர்வு மட்டும்தான்
மனம் ஏனோ கனக்கிறது
ஓ வென ஒப்பாரி வைத்து
அழ துடிக்கிறது
சிங்கப்பூரின்
என் முதல் பயணம்
உன்னோடு மட்டும்தான்
என் இனியவளின் முகம்
பதிந்த நினைவுகளோடு
உன்னோடு பயணித்த
அந்த முதல் இரவு
இன்றும் மறக்கமுடியவில்லை
உன்னைப்போலவே
உன் உறவுகளில்தான்
எத்தனை சந்திப்புகள்
எத்தனை பிரிவுகள்
சிறகடித்த நினைவுகளில்
மனதோடு சிறகடித்த
கற்பனைகள்தான் எத்தனை
தாயின் தாலாட்டைவிட
உனது தாலாட்டுதான் அதிகம்
உனது இரவுகளில்
எல்லாரும் தூங்கும்போது
நீ மட்டும்
விழிச்சன்னலில் தூக்கத்தை
விரட்டியடித்தாய்
தூரத்தில் வரும்போதே
வானத்து நிலவாய்
பொட்டு வைத்த இளமங்கையாய்
பிரகாசித்தாய்
என்னவளைப் பிரியும்
பொழுதெல்லாம்
அவள் விழிகளில்
பனிமுட்டைகள் பளிச்சிடும்
அந்த மஞ்சள் நிற இரவுகளை
தஞ்சோங் பாகாரில்
இனியும் எங்கே தேடுவது?
மாற்றம் ஒன்றுதான்
உலகில் மாறாமல் இருக்கிறது
இந்த இடமாற்றம்
உன் தோற்றத்தை மாற்றலாம்
ஆனால்
நினைவிருக்கும் வரை
நினைவில் நிற்பாய்
நீ
பனித்துளியாய்
என் பசுமையான
நினைவு துளிகளில்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக