புதன், 6 ஜூலை, 2011

பிற்காலச் சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலமா? - ஒரு பார்வை


முன்னுரை 
                  ண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’’ (தொல், பொருள், செய்.75)
என்ற தொல்காப்பிய வரிகள் தமிழகத்தின் வரலாறு மிக பழமையும் பெருமையும் வாய்ந்ததென்பதனை எடுத்தியியம்புகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றுச் சுவாசம் தொன்மை தொட்டு அதனை ஆண்டு வந்த சேர சோழ பாண்டிய மூவேந்தர்கள், இடைக்காலத்தில் ஆண்ட பல்லவர்கள் என்போரின் சரித்திரங்களில் பெரும்பாலும் அடங்கி விடுகிறது என்றும் வரலாற்று பார்வையின் விரிதல்களில் சோழர்களின் வரலாறு விரிவுடையதாக விளங்குகிறது எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிக்கின்றனர்.

சோழர்களின் தொன்மை
  பாரதக் காலத்திலேயே சேர சோழ பாண்டிய நாடுகள் மிக உயர்ந்த நிலையில் இருந்தன எனவும் பாரதப்போரில் மூவேந்தர்களும் பாண்டவர்களுக்குத் துணையாய் நின்று போர் புரிந்த செய்தியைப் பாரதத்திலிருந்தே அறியலாம்[1] என்கிறார் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
  சோழ மன்னன் பாண்டவச் சேனைக்கு முழு உதவியும் புரிந்தான் என்னும் செய்தியை,
தாங்கள் பாரத முடிப்பளவு நின்று தருமன்
 றன் கடற்படை, தனக்குதவி செய்தவனும்
என கலிங்கத்துப் பரணி வாரலாற்றின் மீள்பார்வைக்கு வழங்குகிறது.
  சங்க காலச் சோழர்களின் தலைநகரில் ஒன்றான புகார் நகரின் பழமை, கூலவாணிகன் சாத்தனாரால் இயற்றப்பட்ட மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்தில், முதல் முப்பத்திரண்டு அடிகளில் மிக அழகாக நயம்பட கூறப்பட்டுள்ளது.
  பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
    கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி [2] (மணிமேகலைப் பதிகம் 22-32)
  பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலையில், கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
  கங்கை வாரியும் காவிரிப் பயனும்
  ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்.. [3]
பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் பாடுகிறார். இவ்வரிகளில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை மலாயாவில் உள்ள காடாரத்தைக் குறிப்பதாகும். முற்காலச் சோழ அரசர்களில் ஒருவனான கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சியில் தென்கிழக்காசியாவரை சோழர்களின் வணிகப் பரப்பு விரிந்துள்ளதைக் காணலாம்.
  முற்காலச்சோழர்கள் போர், அரசியல், சமயம், பொருளியல், கடல் வாணிபம், இலக்கணம், இலக்கியம் என பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதைச் சோழர்களின் வரலாறுகளைப் பயில்கின்றபோது நமக்குத் தெரிய வருகிறது.
  வரலாற்று ஆய்வாளர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்தியக் காலப்பகுதிகளையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என முன்னுரைக்கின்றனர். இவர்களில் கரிகாற் சோழன் புகழ்பெற்று விளங்கினான்.
  சங்ககாலச் சோழர்களின் வழியினரே கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசு நிறுவிப் புகழோடு ஆட்சி புரியத் தொடங்கியவர்கள் என்றச் செய்தி ஒட்டக்கூத்தர்[4] பாடிய மூவருலாக்களினால் முன்வைக்கப்படுகிறது. இச்செய்தியை கவிச்சக்கரவர்த்தியான செயங்கொண்டாரது[5] கலிங்கத்துப் பரணி மேலும் உறுதிப்படுத்துகிறது. எனவே, கடைச் சங்க காலத்துச் சோழரின் வழித்தோன்றல்களே பிற்காலச் சோழர்கள் என சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகின்றார்[6].
 கி.பி. பத்தாம் பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் ஆட்சியின் பொற்காலமாகவும் தமிழக வரலாற்றின் பொற்காலமாகவும் விளங்கிற்று[7] என வரலாற்று ஆய்வாளர்கள் தங்க மகுடத்தில் வைரமணி பதித்ததுபோல் புகழ்மாலை சூட்டுகின்றனர்.
பிற்காலச் சோழர்களின் எழுச்சியும் வளர்ச்சியும்
 கி.பி. 9ம் நூற்றாண்டின் மத்தியில் சோழர்கள் மீண்டும் வலிமை பெற்றனர். விஜயாலயன், ஆதித்தன் ஆகிய மன்னர்கள் இந்த எழுச்சிக்குக் காரணமாவார்கள். ஆதித்தசோழன் (871-907) கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதனைப் போரில் வென்று பல்லவ நாட்டைக் கைப்பற்றினான். பிற்காலச் சோழர்கள் கி.பி.9ம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் முன்னுரைக்கின்றனர். தஞ்சாவூரையும் பின் கங்கை கொண்ட சோழபுரத்தையும் தங்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினர்
.
 பிற்காலச் சோழர்களில் புகழ்மிக்க மன்னர்களாக முதலாம் இராஜராஜன் (985-1016),  முதலாம் இராஜேந்திரன் (1012-1044),  முதலாம் குலோத்துங்கன் (1070-1120),  மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) ஆகியோர் விளங்குகின்றனர். முதலாம் இராஜராஜன் இலங்கையின் வட பாதியை வென்று தமிழ் மக்களின் பெருமையைக் கடல் கடந்து பரப்பினார். முதலாம் இராஜேந்திரன் இலங்கை முழுவதையும் வென்றார்[8]. இவர் கடாரம் வரை படையெடுத்து வென்றார். இவர் மதுரையில் சோழ பாண்டியர் ஆட்சியை ஏற்படுத்தினார். மூன்றாம் குலோத்துங்கன் கலிங்கத்தின் மீது படையெடுத்து அதை வென்றார்.

ஆட்சிமுறை

                பிற்காலச் சோழர்களின் ஆட்சியில்தான் முதன்முதலாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இயங்கியது. இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள் அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர்.  தலைநகரமும், பல்வேறு துணை தலைநகரங்களும் இருந்தன.

அரசுரிமை

 அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில்அரசர்களின் தம்பி மார்களும் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது.  அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கம் வழக்கமும் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரசக் குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவியேற்றது இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

உள்ளாட்சிப் பிரிவுகள்

     சோழப்பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. மாநிலங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு அரசர் காலத்திலும் வேறுபட்டிருந்தது. இராஜராஜ சோழன் காலத்தில் ஒன்பது இருந்ததாகக் கூறப்படுகிறது[9]. மாநிலங்கள் மண்டலங்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தன. இம்மண்டலங்களின் ஆட்சித் தலைவர்களாக இளவரசர்களும், மன்னனுக்கு நெருக்கமானவர்களும் நியமிக்கப்பட்டதுண்டு.

      ஒவ்வொரு மண்டலமும் பல கோட்டங்களாகவும், ஒவ்வொரு கோட்டங்களும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல கூற்றங்களாகவும், ஒவ்வொரு கூற்றமும் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன. தனியூர் என அழைக்கப்பட்ட கிராமம், இடைக்கால ஐரோப்பாவில் இருந்த பர்ரே என்னும் அமைப்போடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது[10].

      குடியிருப்புகள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களின் குடியிருப்புகள் கிராமங்கள் எனவும், வணிகர் குடியிருப்புகள் நகரங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புகள் ஊர்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புகள் இருந்தன. இவற்றின் உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கானத் தேர்தல் முறைகளும் இருந்தன. சோழர் காலத்தில் நாட்டாட்சி முறையில் கிராம நிர்வாகத்துக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும், கிராமத்தின் நிர்வாகம் நாட்டின் அரசாட்சிக்கு அடிப்படையாக அமைந்திருந்தது எனவும் டாக்டர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார்[11].

வரிகள்

நிலவரி அரசின் தலைமை வருவாயாகும்.
ஆறிலொரு பங்கு கூறு கொள்ளும் பெருமாள்
என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. விளைச்சலில் ஆறிலொரு பங்கு வரியாக வாங்கப்பட்டது. சோழர்களின் காலத்தில் குடிமக்களின் மீது விதிக்கப்பட்ட வரிகள் நானூற்றுக்கும் மேற்பட்டன எனக் கல்வெட்டுகள் கூறும் செய்திகளாய் அறிகிறோம்[12] என டாக்டர் கே.கே.பிள்ளை குறிக்கின்றார். வரி கணக்கிடவும், பிறவற்றிற்காகவும் நிலத்தைப் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அளப்பது அரசின் வழக்கமாக இருந்து வந்தது.

சமூகவியல்

     பெண்கள்

           சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. கற்பே பெண்களின் தலைசிறந்த அணிகலனாகப் போற்றப்பட்டது. பெண்கள் சொத்துரிமை பெற்றிருந்தனர்[13]. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரை மணந்தனர். ஆனால் குடிமக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் நெறியையே கடைப்பிடித்து வந்தனர்.

      உடன்கட்டை ஏறுதல்

            கணவரை இழந்தப் பெண் உடன்கட்டை ஏறுவதைப்பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. சோழர் காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை. ஆனால் பெண்கள் விருப்பப்பட்டு உடன்கட்டை ஏறியதைச் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தரசோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறியச் செய்தி திருவாலாங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது[14].

      ஆடல் மகளிர் தேவரடியார்கள்
           .
            சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் எனப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. தஞ்சை பெருவுடையார் கோயில் திருத்தொண்டுக்காக இராசராசனால் நானூறு தேவரடியார்கள் குடியேற்றம் பெற்றிருந்தனர்[15]. அவர்களுக்குத் தனித்தனி வீதிகள் அமைத்து, வரிசை வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன என தஞ்சாவூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. . திருக்கோயில்களில் இறை தொண்டிற்காகவே பலர் தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களின் வருவாயில் பெரும்பங்கு கோயில், வழிபாடு முதலியவற்றுக்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

சாதிப் பிரிவுகள் 

சோழர்கள் சாதிய அமைப்பை ஏற்று, அதற்குக் கட்டுப்பட்டு ஆட்சி புரிந்தனர். சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பார்ப்பனர்களின் செல்வாக்கு குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பார்ப்பனர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று.  ஆயிரக்கணக்கான வேலி நிலங்கள் பிரமதேயங்களாகத் தரப்பட்டன[16] . 
     
பிராமணர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்தனர். இரணிய கர்ப்பம், துலாபாரம் முதலிய கொடைகளை பிராமணர் பெற்றனர். எண்ணாயிரம், திருபுவனி, திருமுக்கூடல், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் வடமொழிக் கல்லூரிகள் நிறுவப்பட்டு, படிப்போர்க்கு உணவு, உடை இலவசமாக வழங்கப்பட்டது. குலோத்துங்கன் சில சாதியர்க்கு சில உரிமைகள் அளித்தான் என்பதை அவன் கல்வெட்டுகள் கூறும்[17].

        வலங்கை இடங்கைப் பிரிவினரில் சண்டைகளும், சாதிப் போராட்டங்களும் இருந்ததாகத் தெரியவில்லை என்பர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார். வலங்கை, இடங்கைப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக திரு.வானமாமலை வரைந்துள்ளார்[18].

இலக்கியம்

         முதலாம் இராசராசன் தேவாரத்தையும் பிற சைவத் திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு தொகுத்தான். இதனால்திருமுறை கண்ட சோழன்எனப்படுவான். சயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தரின் மூவருலா,  தக்கயாகப்பரணி, சேக்கிழாரின் பெரியபுராணம், கம்பரின் இராமாயணம்,  புகழேந்தியாரின் நளவெண்பா ஆகியவை இச்சோழர் காலத்தில்  மலர்ந்த  இலக்கியப் பூக்களாகும். நன்னூல், தண்டியலங்காரம், சூளாமணி, சிந்தாமணி, குலோத்துங்கன் கோவை, தஞ்சைவாணன் கோவை ஆகியனவும் இக்காலத்தில் தோன்றிச் சோழரின் ஆட்சியை அணி செய்தன. யாப்பருங்கலக்காரிகை, நேமிநாதம், வீரசோழியம் என்னும் நூல்களும், இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் இக்காலத்தவராவார்கள். திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் ஆகிய சைவ சித்தாந்த சாத்திரங்களும் சோழர் ஆட்சியிலே படைக்கப்பட்டவையாகும்[19]. வைணவச் சார்பு நூலான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் நாதமுனிகளால் சோழர் காலத்தில்தான் தொகுக்கப்பட்டன.

கட்டிடக் கலை

         சோழர் வரலாற்றில் போரும் கலையும் இரு கண்களாய் இருந்தன. கலைகள், சமயம் என்ற அடிப்படையில் கோயிற் பணிகளாகவே நிறைய வளர்ந்தன. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகக் கோயிற் கலை உயர்ந்த நிலையை அடைந்தது. தஞ்சைப் பெருங்கோயில், கங்கை கொண்ட சோழபுரக் கோயில், கும்பகோணம் தாராசுரக் கோயில், கம்பகரேஸ்வரர் கோயில் ஆகிய சைவ வழிபாட்டுத் தலங்கள் பிற்காலச் சோழ மன்னர்களின் புகழுக்கு அழியாச் சான்றுகள் ஆகும். இவர்கள் ஆட்சிக் காலத்தில் சில வைணவக் கோயில்களும் சிறப்புப் பெற்றன[20].

               கி.பி.1003ல் தொடங்கி 1010ல் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில்  கட்டடக் கலை வரலாற்றில் செம்மாந்து நிற்பது திராவிடக் கலைஞரின் ஒப்பற்ற படைப்பு மட்டுமன்று; இந்திய கட்டடக் கலையின்உயர்தரக் கற்பனைப் படைப்புஎன்று பெர்சி பிரௌன் என்ற கட்டடக் கலைஞர் கூறுவார்[21].
    
           ஆதித்திய சேனன் நாக இளவரசி ஆகியோர் மரபில் வந்த இரண்டாம் இராசேந்திர வர்மன் மகன் இரண்டாம் சூர்யவர்மன் (கி.பி.1112-1152) கட்டிய கோயில் கம்போடியாவில் அங்கோர்வாட் என்னுமிடத்தில் உள்ளது. கோயில் கட்டடக் கலைக் கூறும், இங்குள்ள இராமாயண பாரதக் கதை கூறும் வரிச்சிற்பங்களும் சோழர் மரபைச் சார்ந்தவை[22].

         சமயத்தோடு கலை, கல்வி, உழவு, மருத்துவம், பொருளியல், அரசியல், படைபலம் ஆகிய பலவற்றைத் தம்மகத்தே கொண்டுள்ளதால் நாகரிகத்தின் இருப்பிடமாகவும், நன்னெறியின் பிறப்பிடமாகவும் உள்ள சோழர்களின் காலத்திற்கு உலக வரலாற்றிலேயே வேறு ஒப்பாக எதனையும் கூற முடியாது என்கின்ற வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றும், பிற்காலச்சோழர்களின் ஆட்சி தமிழக வரலாற்றின் பொற்காலம் என்பதை நமக்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எதிர்வினை

      சோழர்களின் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் எனக் கலைஞர் மு.கருணாநிதி முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது. பொதுவாகப் பெரும்பான்மையான வரலாற்று ஆய்வாளர்களும் சோழர் ஆட்சியில் நாட்டு மக்கள் அமைதியாகவும் மகிழ்வாவும் வாழ்ந்ததாகவே குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்றையச் சமூக ஆய்வாளர்களும், சமூகப் பார்வையாளர்களும்,

சோழர்களின் ஆட்சி பொற்காலமா?

என வினாத்தொடுத்து முன்னிலைப்படுத்தும் சில கருத்துகளைக் காண்போம்.

1.       சோழர் காலத்துப் போர் வெற்றிகள், கட்டிடக்கலை, வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், அவர்களின் வீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் அவர்கள் காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்?

2.       தஞ்சைப் பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது உழைத்தவனின் குருதியால். ஆனால் உழைத்தவன் வழிபாடு நடத்துவதற்கும், வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா? இல்லவே இல்லை என்கின்றன சோழர் காலத்து கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.

3.       சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல, கல்வி நிலை என்ன? பெண்கள் நிலை என்ன? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? அடிமைகள் எப்படி உருவாயினர்?

4.       வேதம் ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஏன் கடுமையான வரிகள்?

5.       எண்ணற்றப் பெண்கள் பொட்டு கட்டுதல் என்கிறப் பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் சோழர்களின் ஆட்சியில்தான்.

6.       போரின் பெயரால் ஆக்ரமிப்பு, கொலை, கொள்ளை, பெண்களைக் கவர்தல் சோழர்களின் வாடிக்கை. அதைத் தமிழனின் வீரம் எனப் புலவர்கள் பாடுவது இன்று நாம் காணும் வேடிக்கை.

7.       ஈழம் வென்றதும், கடாரம் சென்று வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான். ஆனால் தனது குடிமக்களிடையே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும் மறுபக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்?

இப்படி எண்ணற்றக் கேள்விக்கணைகள் நம்மிடையேயும் எழுகின்றன. ஏன்? ஏன்? ஏன்?

வரலாற்றுப் பார்வை

      வரலாற்றைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியமல்ல. வரலாற்றுணர்வுடன் தெரிந்து கொள்வதுதான் முக்கியம் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மேலும் வரலாற்றுணர்வு என்றால், வரலாறு இயங்கும் முறையை உணர்ந்து வரலாற்றினை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பார்வைதான் வரலாற்றுணர்வு[23] எனவும் விளக்குகிறார்.

மேலே தொடுக்கப்பட்டக் கேள்விகள் விவாதிக்கப்படவேண்டியவையே. ஆனால் உணர்ச்சிவேகம் வரலாற்று விவாதத்துக்கு உரியதல்ல என்பதை நாம் உணரவேண்டும். வரலாற்று பிரக்ஞை என்ற ஒன்றைப்பற்றி அறியாமல் பொதுபுத்தி சார்ந்து முன்வைக்கப்படும் ஒரு நிலைப்பாடு இது எனக் கூறப்படுகிறது.

சோழர் காலம் பொற்காலம் என்று ஒருவர் சொன்னால் அப்படி இல்லை என்று வாதிட்டு எதிர்மறையான அம்சங்களை முன்னிலைப்படுத்தவும் முடியும். அதுபோன்று சோழர் காலம் ஓர் அடக்குமுறைக் காலம் என்றாலும் அதையும் எதிர்த்து வாதிட்டு நம் கருத்துகளை முன்வைக்கமுடியும். ஆனால் உண்மை என்பது இவ்விரு எதிரெதிர் நிலைபாடுகளுக்கு நடுவே உள்ளது என்ற உணர்தல் நமக்குத் தேவை.

மனித வரலாறு தொடர்ச்சியாகத் தன் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டபடி வீழ்ச்சியையும் எழுச்சியையும் சந்தித்து முன்னகர்ந்து கொண்டு இருக்கிறது. இனறு நாம் பேசும் சமத்துவம், ஜனநாயகம், தனி மனித உரிமை போன்றவை அந்த வளர்ச்சிப் போக்கில் மிக பிற்காலத்தில் உருவானவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நில உடைமைக் காலத்தைச் சேர்ந்த அரசர்களை அக்காலக் சூழலில் வைத்துப் பார்க்க வேண்டும்.

பெண்களை குடும்பத்தின் அடிமைகாளாக ஆக்கும் நில உரிமைச் சட்டங்கள் உருவாகி வந்தன. அந்தக் காலக்கட்டத்தில் நீதி குலம் நோக்கியே அளிக்கப்பட்டிருக்கும். வலியோரை எளியோர் பணிந்து நடந்திருப்பார்கள். மனித உரிமை இருந்திருக்காது. வன்முறை மூலம் வரிவசூல் செய்யப்பட்டிருக்கும். அடிமை முறை இருந்திருக்கும். இவையெல்லாம் நிலவுடைமைச் சமூக அமைப்பின் இயல்புகள். அந்தக் காலக்கட்டத்தை உடைத்து தாண்டித்தான் நாம் நவீன காலக் கட்டத்துக்கள் புக முடிந்தது. அன்றைய அற மதிப்பீடுகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் விட்டு நாம் வெகுதூரம் வந்து விட்டோம். சோழர்களின் காலம் நிலவுடைமை காலக்கட்டத்தின் ஒரு பகுதி. நாம் வாழ்வது அதிலிருந்து பல படிகள் தாண்டி வந்த நவீனக் காலக்கட்டம். நம் நவீனச் சிந்தனைககளுடன் சோழர் காலத்தை அணுக முற்பட்டால் எல்லாமே முரணாகவே நம் முன்னே வந்து நிற்கும்.

உலக வரலாற்றை நோக்கும் போது அரசாங்கங்கள் கலைந்து கலைந்து உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு சித்திரத்தையே நாம் நெடுங்காலம் காண்கிறோம். குட்டிக் குட்டி அதிகாரங்கள் சேர்ந்து பெரிய அதிகாரமாக அன்றைய வரலாற்றின் தேவையாக இருந்திருக்கிறது. அவ்வாறு பெரிய அதிகாரம் உருவாவதே முன்னேற்றமாகத் தெரிகிறது. அதை நிறைவேற்றுபவனே வரலாற்று நாயகன். அவனே வரலாற்றை வழிநடத்துகிறான். அவனே வரலாற்றிற்குப் பெரும் பங்களிப்பாற்றுகிறான். ஆகவே அவனே மக்களால் கொண்டாடப்படுகிறான். எனவே சோழர்களின் காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் என்பது வரலாற்றுப் பார்வையுடன் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

குட்டிக் குட்டி அரசுகளாக மக்கள் இருக்கையில் போர் ஓய்வதில்லை. மக்களின் ஆற்றலும் செல்வமும் பெரும்பகுதி போர்களில் அழிகிறது. குலங்களும் குடிகளும் ஒன்றாகி பெரிய அதிகாரம் உருவாகும் போது அந்த அதிகாரத்தின் எல்லைக்குள் போர்கள் தவிர்க்கப் படுகின்றன. பிறரை கொள்ளையடித்து வாழ்வது தடைசெய்யப்படுகிறது. ஒட்டு மொத்தச் சமூகமே உற்பத்தியில் ஈடுபடவேண்டியிருக்கிறது. அந்தக் கூட்டான முழு உழைப்பின் வழியாக உற்பத்தி பெருகி உபரி உருவாகிறது. அந்த உபரியே அரசாகவும் பண்பாடாகவும் மாறுகிறது. அதன் மூலம்தான் பழங்குடிச் சமூகம் நிலவுடைச் சமூகமாக ஆகிறது. இது மாபெரும் சமூகப் பாய்ச்சல். குல அரசுகளை அழித்து முற்றதிகார அரசுகளை உருவாக்கிய மன்னர்கள் வரலாற்றின் மிக முற்போக்கான பாத்திரத்தை ஆற்றுகிறார்கள் என மார்க்கஸியம்[24] சொல்கிறது. இந்த வகையில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி தமிழக வரலாற்றின் பொற்காலம் என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது. எந்த அரசு ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறதோ அந்த அரசே தன் நாட்டு மக்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றதாக இருக்கும்.

 பத்தாம் நூற்றாண்டில் சீனா, ஜப்பான், அரேபியாவின் வரலாறு என்பவை குருதியல் தோய்ந்த கதை. அதே காலக்கட்டதில் தமிழக வரலாற்றில் பொற்காலத்தை விதைக்கிறது சோழர்களின் ஆட்சி. குட்டி அரசுகளை அழித்தொழிக்காமல் சமரசம் மூலமே அவர்களை இணைத்து ஒரு மைய அதிகாரத்தை உருவாக்குவதாகவே இருந்திருக்கிறது சோழர்களின் மன்னராட்சி முறை. அதனுடன் முரண்படும்போது போர்கள் நிகழ்ந்துள்ளன. கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தாலே சோழர் ஆட்சி என்பது சம்புவரையர்கள், பழுவேட்டரையர்கள், மலையமான்கள் எனப் பலச் சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சி என்பதை அறியமுடிகிறது.

படையெடுப்புகள் மற்றும் அடக்குமுறை மூலம் உருவாக்க முடியாத அதிகாரத்தைக் கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என மன்னர்கள் அறிந்திருந்தனர். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்து வராத நிலங்களை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கு வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி[25]

கோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்குத் தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன.

1.       மதஞானம் – இதன் மூலம் பிராமணர்கள் வெவ்வேறு வழிபாடு கொண்ட மக்களை ஒன்றாகத் திரட்டினர்.
2.       சோதிட ஞானம் – இது விவசாயத்திற்குரிய வானிலை ஞானமாகவும் அன்றாட வாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது.
3.       தர்ம சாஸ்திரம் – இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்கப் பாலமாக இருந்தது.

      பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கு இருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள் கூட கொல்வதில்லை. அந்த மதிப்பைப் பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம்.

      ஊர்கள் விரிந்து கோயில்கள் பெருகியபடியே சென்றமையால் மேலும் மேலும் தேவரடியார்கள் தேவைபட்டார்கள். வடக்கே வெங்கி, கலிங்க நாடுகளிலிருந்து தேவரடியார்களைக் குடியேற்றினர். அதற்காகவே பொட்டு கட்டும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இன்று நாம் உருவகிக்கும் சமூகக் கொடுமையாக அல்லது சுரண்டலாக அது இருக்கவில்லை. அந்த மனச்சித்திரமே பிழையானது. அக்காலக் கட்டத்தில் பொட்டு கட்டுதல் ஒரு சாதிய உயர்நிலையாக்கமாகவே இருந்தது. நிதி, குலம் இரண்டிலேயும் அவர்கள் மன்னருக்கும், பிராமணர்களுக்கும் அடுத்த நிலையில் இருந்தனர்.

      சோழர் காலத்தில் வரிவசூல் அதிகரித்தது. அதற்குக் காரணம் நிலையான அரசும், வரிவசூலுக்கான அமைப்பு வசதியும் இருந்ததுதான். கொஞ்சம் கொஞ்சமாக வரிவசூல் தமிழ் வரலாற்றிலேயே அதிகமான அளவுக்குச் சென்றது. ஆனால் நாம் அதை அன்றையச் சூழலை வைத்தே புரிந்து கொள்ள வேண்டும். இருநூறாண்டுக் காலம் தமிழக நிலத்தில் உள் சண்டைகள் தீர்க்கப்பட்டிருந்தன. அதற்கான விலை அந்த வரிகள்.

      தமிழக வரலாற்றில் மிகப்பிரமாண்டமான மக்கள் நலத் திட்டங்கள் இரு காலக்கட்டத்தில்தான் செய்யப்பட்டன. ஒன்று சோழர் காலம். மற்றொன்று நாயக்கர் காலம். நாட்டின் பிரம்மாண்டமான ஏரிகள் இவ்விரு காலக்கட்டங்களில் வெட்டப்பட்டவை. தமிழகத்தின் பாசன நிலங்களில் பெரும்பகுதி விரிவான வாய்க்கால் அமைப்புகள் மூலம் சோழர் காலக் கட்டத்தில்தான் விவசாயத்துக்கு வந்தது. ஆயிரம் வருடங்களாகத் தமிழ் நாட்டின் சொத்தாக இருக்கும் தஞ்சை நெல்வயல்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. மைய அரசு உருவாகி அதன் மூலம் திரட்டப்பட்ட பெருமூலதனமே அதை சாத்தியமாக்கியது.

      இன்றையத் தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் தமிழகம் பாலைவனமாகியிருக்கும். ஆயிரம் வருடங்களாகத் தமிழக மக்கள் குடிப்பது சோழர் அளித்த குடிநீர்தான். உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோறுதான். இதனால்தான் ஔவையாரும்,

மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து...
எனச் சோழப்பேரரசை வானுயரப் புகழ்கின்றார்.

      உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது தமிழரின் பண்பு. உப்பிட்டவரையே உள்ளளவும் நினைக்கும் நாம், நமக்குக் குடிக்கத் தண்ணீரும், உண்ணச் சோறும் கொடுத்த சோழர்களின் காலத்தைத் தமிழக வரலாற்றின் பொற்காலம் என்று போற்றுவதில் தவறேதும் இல்லையே.

முடிவுரை

இறந்தக் காலத்தை இறந்தக் காலமாகவே எடுத்துக் கொண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும், நம் முன்னோர்களுக்காகவும் பெருமை கொள்வதே சிறப்பு. ஆனால் அதையும் வரலாற்றில் வைத்தே செய்யவேண்டும். சோழர்களின் பொற்காலம் சரித்திரமாகி நிலைபெற்றுவிட்டது. இனியும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதை விடுத்து நாம் நம் அடுத்த தலைமுறையின் பொற்காலங்களுக்கான விதைகளை நிகழ்காலத்தில் விதைத்தல் வேண்டும். இறந்தக் காலத்தில் அல்ல.

 ஆண்ட பரம்பரை
 நாடில்லாமல் தவிக்கிறது
 இன்று

துணை நூல்கள்
1.       சோழர் சரித்திரம், ந.மு. வேங்கடசாமி நாட்டார், முதற் பதிப்பு 2008, சாரதா பதிப்பகம், சென்னை.
2.       தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை, மறு பதிப்பு 2009, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
3.       தமிழ்நாட்டு வரலாறு,  அ. இராமசாமி, இரண்டாம் பதிப்பு 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
4.       சோழர் வரலாறு, மா. இராச மாணிக்கனார், மறுபதிப்பு 2005, பூரம் பதிப்பகம், சென்னை.
5.       பிற்காலச் சோழர் சரித்திரம், சதாசிவ பண்டாரத்தார், முதற் பதிப்பு 2008, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.
6.       தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், கந்தசாமி, இரண்டாம் பதிப்பு 2006, பழநியப்பா பிரதர்ஸ், சென்னை.
7.       தமிழ்நாட்டு வரலாறு, இறையரசன், இரண்டாம் பதிப்பு 2006, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
8.       தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி, மறுபதிப்பு 2008, யாழ் வெளியீடு, சென்னை.
9.       சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள், மலேசிய நண்பன் நாளிதழ் கட்டுரை - 12 . 09. 2011. கோலாலம்பூர். மலேசியா.
10.   சோழர், இணையக் கட்டுரை.
11.   தமிழர் வரலாறு, கலைமகால் இணையக் கட்டுரை
12.   ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ஜெயமோகன். இணையக் கட்டுரை.
கறுப்பு மை குறிப்


[1]  சோழர் சரித்திரம், பக். 2
[2]  சோழர் சரித்திரம், பக். 4
[3]  சுவர்ணபூமியின் சரித்திரப்பூக்கள், இணையக்கட்டுரை
[4]  பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 12
[5]  பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 12
[6]  பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 12
[7]  தமிழர் வரலாறு, கலைமகால் இணையக்கட்டுரை
[8] தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் (பக்.5)
[9]  தமிழ்நாட்டு வரலாறு, பக். 128
[10]  தமிழ்நாட்டு வரலாறு, பக். 128
[11]  தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், பக். 310
[12]  தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், பக். 333
[13]  தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், பக். 334
[14]  சோழர். இணையக்கட்டுரை
[15]  சோழர் வரலாறு, பக். 202
[16]  தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக். 520
[17] தமிழ் நாட்டு வரலாறு(பக்.244)
[18] தமிழ் நாட்டு வரலாறு(பக்.244)
[19] தமிழ் நாட்டு வரலாறு(பக்.247)
[20] தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் (பக்.6)
[21] தமிழ் நாட்டு வரலாறு(பக்.245)
[22] தமிழ் நாட்டு வரலாறு(பக்.246)
[23]  இணையக்கட்டுரை, ஜெயமோகன்
[24]  இணையக்கட்டுரை. ஜெயமோகன்.
[25]  கறுப்பு மை குறிப்புகள், மீனாமயில், இணையக்கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக