மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்
எல். வளர்மதி –
வாணிஜெயம்
16 அக்டோபர் 2016
புனைகதைகள், மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் யாவையும் சித்தரிக்கும் தன்மை
வாய்ந்தவை என்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி. குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை நிலையில், குறிப்பிட்ட சில விஷயங்களைச் செய்யும்போது,
அவற்றின் சமூகச் சம்பந்தமான பார்வைகள் விழும்போது நமக்குள் நம்மையறியாமலேயே ஓர்
உணர்ச்சிப்பிழம்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. இதற்கு அதிகம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடுகாள் எல்லாம் கிடையாது. சமூக நோக்கு விழுமியங்களில்
இது சரி, இது சரியல்ல என்று வகுக்கப்பட்டுள்ள எல்லைகள்
சிலவற்றை நாம் மீறும்போது இப்படி நம் மனம் சஞ்சலப்படுவது தவிர்க்க இயலாத
ஒன்றுதான். இப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில்தான் இயல்பான ஒரு மொழிநடையில்
பயணிக்கிறது வாணிஜெயத்தின், ‘எல்.
வளர்மதி’ என்ற சிறுகதை.
நட்பு என்பதற்கு அன்பு, ஒத்த கருத்து, நலன், அக்கறை
முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லாதவருடன் நமக்குள் ஏற்படும் உறவு என
கிரியா அகராதி பொருளுணர்த்துகிறது. விக்கிப்பீடியா நட்பு என்பது இருவருக்கு
இடையிலோ பலரிடமோ ஏற்படும் ஓர் உறவாகும் எனவும் ஆண், பெண், வயது, மொழி, இனம், நாடு என்ற எந்த எல்லைகளும் இன்றி புரிந்துகொள்ளுதலையும் விருப்பு
வெறுப்புகளை விட்டுக்கொடுத்தலையும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருத்தலையும் அடிப்படையாகக்
கொண்டது எனவும் குறிப்பிடுகிறது. ‘நெஞ்சத்து அகநக நட்பது நட்பு’ எனவும் ‘அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு’ என்றும் ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றும் குறிப்பிடுகிறார்
வள்ளுவர். சங்க இலக்கியத்தில் கபிலருக்கும் பாரிக்கும் உள்ள நட்பும் ஔவையாருக்கும்
அதியமானுக்கும் உள்ள நட்பும் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிரந்தையாருக்கும் உள்ள நட்பும், நட்புக்கு இலக்கணமாகப் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளதைக் காணலாம்.
வாணியின் கதைக்களத்தில், வரதன் தன் பள்ளித்தோழி என எல்.வளர்மதியை ஓர் இரவு தன் வீட்டில்
தங்கவைக்கிறான். அன்றுபார்த்து, அவன் மனைவி செல்விக்கு இரவு
வேலை என்பதால் அவளும் வேலைக்குப் போய்விடுகிறாள். இரவில்,
எல்.வளர்மதி அவன் வீட்டிலும் இவன் அவனது காரிலும் தூங்கியும் தூங்காமலும் பொழுது
விடிகிறது. வீட்டிற்குச் சென்று அவளை அழைத்துச் செல்கையில்,
இட்டிலி தோசை விற்கும் முதியவளும், பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் ஒரு பங்களாதேஷி பாதுகாவலனும் பேசும் பேச்சுகள், எல்.வளர்மதிக்கு பெருந்துன்பமாய் மனத்தைக் கீறிப்பார்க்கிறது. அவளும் ஒரு
பெண்ணாக இருப்பதால், இரவு வேலைக்குச் சென்றிருக்கும் செல்வி, எப்படியெல்லாம் நிம்மதியிழந்து துடித்திருப்பாள் என்பதையும் நினைத்துப்
பார்த்து, தான் இப்படியொரு இக்கட்டான சூழலில் வீழ்ந்திருப்பதற்கு வரதனே முழுக் காரணம் என
முடிவெடுத்து, சமூகம் வெகுசன அபிப்பிராயங்களுடன்
முன்வைத்துள்ள அறநெறிகளை நிராகரிக்கு முடியாமல் அவன் நட்பு வட்டத்திலிருந்து
விலகிக் கொள்வதாகக் கதை முடிகிறது. ஆண் பெண் எனும் நட்பு வட்டத்திற்கு நம்
சமூகமும் அதைச் சுற்றி அது போட்டுவைத்திருக்கும் அழுக்குப் பார்வையும் இன்னும்
விலக்கப்படவில்லை என்பதே இங்கு நிதர்சனமாகும். ஆனால் அந்த அழுக்குமூட்டையைச்
சுமந்துகொண்டே இக்கதை முடிவுற்றிருப்பது நவீனப் படைப்பை நோக்கிய இக்கதையை
நகர்த்துவதில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான கதைக்களத்திலிருந்து சற்று மாறுபட்ட படைப்பாக
இக்கதைத் திகழ்கிறது. கடிகாரக்கதைகளின் வரிசையில் வந்த பொன்.சசிதரனின், ‘கூழாங்கற்கள்’ கதையைப்போன்ற காட்சிப்படுத்துதலும் இலகுவான எழுத்துநடையும் இக்கதையின்
வாசிப்பை ஆர்வமிக்கதாக்கிவிட்டிருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல் வரதன், செல்வி கதாபாத்திரப்படைப்பில் மிக இயல்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது
யதார்த்தத்தின் உச்சமாகக் கொள்ளலாம். வாசகனை மிகவும் நெருங்கியிருக்கும்
கதைப்பின்னல் கதையின் முடிவில் சற்றுத்தோய்ந்திருப்பதாகத் தோற்றம் அளிக்கிறது.
நவீனம் என்பது புனைகதையுலகில் எந்த வித இணக்கப்போக்குகளுடனும் சமாதானம்
செய்துகொள்ளாமல் உண்மை நிலையை மட்டும் எடுத்துரைத்து வெகுசன அபிப்பிராயங்களை உடைத்தெழுவதாக
இருக்கவேண்டும். ஆனால் இக்கதையின் இறுதி முடிவும் வரதனின் ஆசிரியர் மற்றும் அம்மா
கதாபாத்திரங்கள் காலம் காலமாய்க் கட்டிக்காத்த மரபுவழிச் சிந்தனையுடன் எவ்வித
மாற்றுச் சிந்தனையும் இல்லாமல் படைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றினாலும் இயல்பான நமது
சமூக நடப்புகளாக இன்னும் ஆண் பெண் நட்புக்குள் பெரும்பான்மை மனிதர்களால்
ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று இருப்பதையும் நமக்குச் சொல்லாமல் சொல்லும் ஒரு
செய்தியாகும்.
லூசூனின் படைப்புகள் வாழ்க்கையைப் பற்றிய விமர்சனப்
பூர்வமான சித்திரத்தைத் தருகின்றனவே தவிர, தீர்வு கூறல், வழிகாட்டல் என்ற பேச்சுக்கு
இடமிருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். மேலும், கார்க்கி, லூசூன் போன்றவர்களின் படைப்புகளில்
வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் தீர்க்கமான, தெளிவான பார்வையை
மட்டுமே பார்க்கிறோமே தவிர, நமது சில விமர்சகர்களும் படைப்பாளிகளும்
விளங்கிக் கொண்டிருக்கும், நடைமுறையில் வெளிப்படுத்தும்
அர்த்தத்தில் தீர்வு கூறல், வழிகாட்டல் என்ற தன்மையைக்
காணமுடியவில்லை என்கிறார். இக்கதையின் இறுதியில் வரும் வரிகள்,
‘இனி வளர்மதி தனது தொடர்பில் வரவே மாட்டாள்
என்பது அவனுக்குப் புரிந்தே இருந்தது’
என முடியாமல்,
‘அம்மாவும் ஆசிரியரும் அவன் மனத்திரையில்
தோன்றினர் அல்லது தோன்றி மறைந்தனர்’
என முடிந்திருக்குமானால் இக்கதை வாசகர்களுக்கான இடைவெளியை
அதிகப்படுத்தி, அவர்களையும் கதைக்கள்
இழுத்துக்கொண்டு சென்றிருக்கும் ஏனெனில் இதுபோன்ற முற்போக்குச் சிந்தனைகளை
முன்வைக்கும்போது வாசகனின் புரிதலும் அவனின் ஈடுபாடும் மிகவும் அவசியம் என
நம்புகிறேன். அப்போதுதான் மாற்றம் என்பது இங்கு நிகழ்வதற்கான வாய்ப்புகளும்
அதிகரிக்கும்.
நிறைவாக, கதையில்
இடம்பெற்றிருக்கும் ஒரு சில தேய்வழக்குகளை நீக்கியிருந்தால்,
கதையோட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். நல்லதொரு கதையைப் படித்த ஒரு
திருப்தி மனத்தில் ஏற்பட்டது. வாழ்த்துகள் வாணிஜெயம்.
அன்புடன் எம்.சேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக