ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

அவளும் நிமியும் கடவுளும் – பொன்.சசிதரன்

அவளும் நிமியும் கடவுளும் – பொன்.சசிதரன்

 (மக்கள் ஓசை 22 ஜனவரி 2017)

ஒரு விமர்சனப் பார்வை


இலக்கியம் ஒரு படைப்பாளியின் எழுத்துத் திறனால் மட்டுமல்லாமல், அவனின் மன எழுச்சியினாலும் அமைவதாகக் கூறப்படுகிறது. ஒரு மனத்தின் வழியாக இன்னொரு மனத்துடன் அது உரையாடலை நடத்துகிறது. இந்த மனித வாழ்வின் அனுபவங்களையும் மனிதனின் பழக்கவழக்கங்களையும் நடத்தைகளையும் இச்சமூகத்துடனான அவனுக்கான உறவுகளையும் விருப்பு வெறுப்புகளையும் ஆழமாகவும் அழகாகவும் இயல்பான உணர்வுடனோ அல்லது மிகை உணர்வுடனோ சித்தரிக்க முயலுகிறது.


ஒரு குறிப்பிட்ட படைப்பில் காணப்பெறும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் செயல்களையும் உன்னிப்பாகக் கவனித்து, அவற்றின் செயல்பாடுகளின் மூலம் அக்குறிப்பிட்ட படைப்பு எந்த வகைமையைச் சார்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அவ்வகையில் பொன். சசிதரனின், அவளும் நிமியும் கடவுளும் என்ற இக்கதை, உளவியல் அணுகுமுறையிலான ஒரு படைப்பாகப் பார்க்க முடிகிறது.


முதன்மை கதாபாத்திரமான சந்தியாவுக்கும் அவள் வயிற்றில் வளரும் சிசுவான நிமிக்கும் நடக்கும் உரையாடல்களும் கடவுளுக்கும் நிமிக்கும் நடக்கும் உரையாடல்களும் சந்தியாவுக்கும் அவள் கணவனுக்குமான உரையாடல்களும் இக்கதையினை  உரையாடல் உத்தியின் மூலம் முன்னெடுத்துச் செல்கிறது.


உணர்வுகளின் உற்சாகத்தில் அனுபவத்தை உள்வாங்கிப் புலப்படுத்தும் இத்தகைய மனஎழுச்சியைக் கொண்ட கதைகள் இங்கு அடிக்கடி எழுதப்படுவதில்லை. உணர்வு வயப்படுதலை நனவிலி மனத்தின் (Unconscious mind) ஒரு வெளிப்பாட்டு முறையாக இக்கதையை நாம் அணுகலாம். தான் பார்த்த, கேட்ட அல்லது தனக்கான சுய அனுபவத்தையோ நேரிடையாகச் சொல்லாமல், அவற்றை சாதாரண இயல்பாகப் பார்க்காமல் ஓர் அற்புதமான, மாயமான, ஆற்றலாகவும் பொருளாகவும் ஒரு கனவுத் தோற்றத்தின் தன்மையோடு பார்க்கும் விநோதமான (fantasy) மனப்போக்கை இத்தகைய எழுத்து நமக்கு அறிமுகப்படுத்துகிறது.


இக்கதையின் முதன்மை கதைமாந்தரான சந்தியாவைச் சுற்றியே இக்கதையின் மையக்கரு சுழன்றாலும் நிமியின் பாத்திரப்படைப்பு நமது படைப்பிலக்கியத்திற்குப் புதியதாகத் தோன்றினாலும் ஏற்கனவே வந்த கவிஞர் அறிவுமதியின் உயிர் விடும் மூச்சு கவிதையில் இதுபோன்ற முயற்சியைக் காணலாம். இக்கதையை வாசித்தபோது அக்கவிதை என் நினைவைத் தொட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலவில்லை. அக்கவிதை, தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை தன் தாயிடம் உரையாடுவதைப்போன்று முழுமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கதை தாய், மகள், கடவுள், கணவன் என முப்பரிமாணங்களில் பயணிக்கிறது.


சந்தியா நிமியின் உரையாடல்கள் கதையின் மையக்கருவிற்குத் துணையாக அதற்கான காரணகாரியங்களை ஆராய்கிறது. சந்தியா மற்றும் அவள் கணவனுக்கு நடக்கும் உரையாடல்,  இன்றைய கணவன் மனைவி உறவுகளுக்கு இடையில் தோன்றும் முரண்களை முன்னெடுக்கிறது. ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் விருப்பு வெறுப்புகளையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது. கடவுளுக்கும் நிமிக்கும் இடையில் நடக்கும் உரையாடலானது மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதிகளைப் பற்றி ஆராய்கிறது. ஊழ்வினையைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட படியே நடக்கும் எனவும் அப்படி ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாலும் அதுவும் அவர்களுக்கான விதிப்படியே நடப்பதுதான் என்பதை உணரவைக்கிறது.


யதார்த்தத்தின் திரிபுகள், பிறழ்வுகள் வெவ்வேறு குறியீட்டு வடிவங்களாக நமக்குள் விழுகின்றன. நடப்பில் சந்திக்கின்ற அல்லது விரும்புகின்ற ஆசைகள் அல்லது கற்பனைகள் இயலாமை காரணமாகவோ, சமூக உறவுகளின் மறைமுகமான அல்லது மரபார்ந்த தடைகள் காரணமாகவோ நிகழமுடியாமல் போகின்றபோது, அவை அடிமனத்தில் குழம்பியும் கலந்தும் இருக்கின்றன. வெளிமனம் அல்லது நனவுடை மனம் தூங்குகிறபோது, இந்த நனவிலிமனம் விகாரங்களோடும் விநோதங்களுடனும் கனவுகளாக வெளிப்படுகின்றன என ஆய்வாளர் ஃபிராய்டு விளக்கம் தருகிறார். இதற்கு ஏற்றார்போல, இக்கதையினூடே செல்லும்போது, சந்தியாவும் இத்தகையான ஒரு சூழல் கைதியாக உலாவருவதைக் காண முடிகிறது. இல்லற வாழ்க்கையின் ஏமாற்றம், குழந்தை மனவளர்ச்சியின்றி பிறக்குமோ என்ற அச்சம், அப்படி நலமாகப் பிறந்தாலும் அக்குழந்தை தன்னுடன் இருக்காது என்ற எண்ணமும் குழந்தை பிறந்த பிறகும் விவாகரத்து முன் நிற்பதும் அவளுக்குள் இத்தகைய ஒரு பிறழ்வை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அவளுக்கான மன ஆறுதல்தான் நிமியுடனான அவளது உரையாடல் என்ற கனவு. தனித்துப் பேசிப் பழகிப்போனவள், தனக்குத் துணையாக நிமியை உருவாக்கிக்கொண்டு பேசுகிறாள்.


கடவுளுக்கும் நிமிக்குமான உரையாடலும் அத்தகையதே. தனிமையின் வெப்பத்தனல்களில் தவித்துக் துடித்துக் கருகிக்கொண்டிருக்கும் ஓர் ஆத்மாவின் மன அழுத்தங்கள் அவை. இத்தகையச் செயல்களைத் தனக்கான காரண காரியங்களைச் சுயமாகவே தேடிக்கொண்டு மன ஆறுதல் காணும் ஒரு சூழல் கைதியின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.


இக்கதையில் வரும் நிமியும் கடவுளும் சந்தியாவின் மறுபதிப்புகள்தான். அவளுக்காக அவளே உருவாக்கிக்கொண்ட கதாபாத்திரங்கள் அவை. அதிக அளவுக்கான தனிமையும் கணவனின் கைவிடலும் அவளின் செயல்பாடுகளில் இத்தகையதொரு மன திரிபுகளை எற்படுத்தி வைத்திருக்கிறது.


கதையின் முடிவு எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தாலும், இயல்பான உரையாடல்களும்  காட்சிப்படுத்துதலும் கதையின் நடையைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. மன உணர்வுகளின் சிக்கல்களைப் பற்றி பேசியிருக்கும் இக்கதையில் ஆண் பெண் உறவுகளுக்கிடையேயான சமூகச் சிக்கல்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


நல்லதொரு கதையை ஒரே நேர்கோட்டில் வித்தியாசமாகப் புனைந்திருக்கும் நண்பர் பொன். சசிதரன் அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.அன்புடன் எம்.சேகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக