செவ்வாய், 11 அக்டோபர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்
மரத்தை வெச்சவன் – கோவி.மணிமாறன்
9 அக்டோபர் 2016


அனுபவம் விரிந்து ஆழமாகும்போது தான் அனுபவித்த வாழ்க்கையின் வலிகளையும் துன்பங்களையும் அழுத்தங்களையும் மகிழ்ச்சிகளையும் மற்றும் தான் கண்ட மனிதர்களையும் வாழ்க்கையின் பல்வேறு கோலங்களையும் சமூகத்திற்குக் கடத்தும் ஒரு வலிமைசான ஊடகமாக படைப்பிலக்கியம் இருக்கிறது.


இலக்கியத்தை ஓர் அறிதல் முறையாக வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளவும் இலக்கியத்தின் சிக்கல் தன்மைக்கும் வாழ்க்கையின் சிக்கல் தன்மைக்கும் எவ்வாறு அடிப்படையாக அமைகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவமுடியும் எனும் எம்.ஏ.நுஃமான், மார்க்சிய கோட்பாடு இலக்கியத்தின் சமூக அடித்தளத்தையும் அதன் சமூக வேர்களையும் புரிந்துகொள்ளவும் இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காண நமக்கு உதவுகிறது என்கிறார்.


வாசிப்பவனுக்கு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும் இணைத்துப் பல்வேறு நிலைகளில் பயணிக்கும் இயல்பைத் தூண்டக்கூடியதாக ஒரு படைப்பு இருக்கவேண்டும். இதுபோன்ற வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் வாழ்வனுபவத்தைக் கொடுக்கும் படைப்புகள், சீ.முத்துசாமி போன்ற ஒரு சில படைப்பாளர்களைத் தவிர, நம் மலேசியப் படைப்பிலக்கியச் சூழலில் இன்னும் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை எனத் தோன்றுகிறது. நம் சமூகத்தின்   பன்முகத் தன்மையின் உட்கிடக்கையின் ஆழத்தை நாம் எந்தப் புரிதலுமின்றி இன்னும் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகமே கோவி.மணிமாறனின், மரத்தை வெச்சவன் கதையை மூன்றாவது வாசிப்புக்குப் பிறகும் எனக்குள் தேங்கி நிற்கிறது.


இக்கதை, ஓர் ஆசிரியரின் தொழிற்நோக்குச் சார்ந்த ஒரு நிகழ்ச்சியின் கதையோட்டமாக அச்சூழலில் உள்ள அனைத்தையும் சொல்லிவிட்டுச் செல்கிறது. அடுத்து, எளிமையான ஒரு எதிர்மறை கருத்துடன் கதை முடிந்துபோவது வாசகனின் உணர்வு நிலையை கீழிறக்கி விடுவதாய் அமைந்துவிடுகிறது. மேலும் ஏற்கனவே இதுபோல பல நூறு கதைகள் இங்கு வாசிப்புக்குள்ளாகியுள்ளதால், வாசகனுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும் தன்மையும் இக்கதைக்கு இருக்கிறது.


கதைக்களமும் கதையின் மையக்கருத்தும் இடைநிலைப்பள்ளித் தமிழ் மாணவர்களின் இன்றைய நிலையையும் பெற்றோரின் போக்கையும் நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. சமகால நடப்பியலைக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதுதான். ஆனாலும் ஒரு புனைவின் நோக்கமானது சமகால நடப்பியலை ஒரு செய்தியாகச் சொல்லிச் செல்வதுமட்டுமல்ல என்பதை நாம் உய்த்துணர்தல் வேண்டும். ஒரு சிறுகதையில், நடந்த ஒன்றை செய்திப் பகிர்வாகக் கூறுவதென்பது நடப்பியலின் ஆவண மதிப்பாக மட்டுமே அடையாளம் காட்டப்படுவதாகக் கருதுகிறேன்.


கதாசிரியர் ஒரு கதைச்சொல்லியாக இருந்து இக்கதையை நகர்த்திச் செல்கிறார். அவர் சமூகத்துக்குக் கூற விரும்பும் கருத்துகளை, சிரம்பான் சிறைச்சாலையின் தலைமை அதிகாரி ஏ.எஸ்.பி. அண்ணாமலை கதாபாத்திரம் மூலமாக விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் அல்லது பள்ளியில் நடந்த நிகழ்ச்சியின் உண்மையான ஓர் உரையாகவும்கூட அது இருந்திருக்கலாம். ஆனால் கதையின் பாதி அளவை சிறப்புச் சொற்பொழிவாளரின் உரை பகிர்தலாகப் படைக்கப்பட்டிருப்பது கதைக்கான சுவாரஸ்யத் தன்மையை வெகுவாகக் குறைத்துவிட்டிருக்கிறது.


இன்றைய நமது மாணவர்களால் ஏற்படும் சிக்கல்களும் இடர்களும் பிரச்சினைகளும் நம்மினத்தில் மலிந்துகிடக்கிறது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான காரண காரியங்களை இக்கதை முழுமையாக ஆராயாமலும் நுண்அலசிப்பார்க்காமலும் வெறும் புறவய நடையில் எழுதப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.


பன்முகத்தன்மையின் ஒரு குறியீடாக இக்கதைத் தலைப்பைக் காண முடியவில்லை. பெற்றோர்களை நோக்கியே அனைத்தும் இங்கு வீசப்பட்டுள்ளது என்பதைத் தலைப்பே உறுதிப்படுத்திவிடுகிறது. ஆனால், கதையின் தொடக்கத்தில் வரும் முதல்வர் ஆசிரியர் உரையாடலில், முதல்வர் ஆசிரியரிடம்,

சார் உங்க இந்திய மாணவர்களுக்கு நீங்கள் ஏதாவது செஞ்சிதான் ஆகணும். மலாய்க்கார மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனால் அவர்களுடைய பிரச்சினைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியுது


எனக்கூறுவது எத்தகையச் சூழலை இங்கு காட்சிப்படுத்துகிறது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் சமூகக் கடப்பாடோடும் தமிழின மொழி உணர்வோடு உழைப்பவர்களும் அல்ல, அதுபோல அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகள் மேல் அக்கறையில்லாதவர்களும் அல்ல என்ற புரிதல் இங்கு நமக்கு வேண்டும்.


இக்கதையாடலில் சில இடங்களில் கூறியது கூறல் இடம்பெற்றிருக்கிறது.

இடை இடையே பள்ளி முதல்வர் என்னை அழைத்து நிகழ்ச்சியின் ஏற்பாடுகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார்

என்ற வரிகள் இரண்டு தடவை இடம்பெற்றுள்ளதையும் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.


நிறைவாக, இக்கதை ஓர் உபதேச உரையாகவும் பிரசாரத் தன்மையுடனும் மட்டுமே தன்னை நிலைநிறுத்தி, சொல்ல வந்த செய்தியை ஒரு வழிப்பார்வையாக மட்டுமே முன்வைத்துள்ளது. எனினும், சமூக உணர்வோடு சமகால பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இக்கதை, அகவயப் புரிதலோடு முன்வைக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறந்திருக்கும். இன்றைய நம் சமூகத்தின் முக்கியப் பிரச்சினையை இக்கதையின் வாயிலாக முன்னெடுத்த எழுத்தாளர் கோவி.மணிமாறனுக்கு நல்வாழ்த்துகள்.   



அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக