செவ்வாய், 11 அக்டோபர், 2016

கதையும் திறனாய்வும்

முதல் சிறுகதை

நன்றி ஒருவருக்கு




   எனக்குள் ஆயிரம் கேள்விகள்.பெரும் குழப்பத்தினூடே மகிழுந்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மனைவியோடு நடந்தேன்.இளம் முனைவர் மகேந்திரனின் வாழ்வியல் சொற்பொழிவுஎன்ற பதாகையைப் பார்த்துக்கொண்டே அந்த மண்டபத்தினுள் நுழைந்தேன்.

  நிகழ்வின் பொறுப்பாளர் ஒருவர் என் விபரம் கேட்டறிந்து என்னை முன் இருக்கையில் அமரவைத்தார்.என் மனைவி என்னைப் பெருமிதத்துடன் பார்த்தாள்.எனக்கோ ஒன்றும் புரியவில்லை.

 இரு தினங்களுக்கு முன்புதான் இந்நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் நான் பணிபுரியும் பள்ளிக்கு வந்திருந்தது.
 “இந்நிகழ்வில் சிறப்புப் பிரமுகராக நீங்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டும்,” என்ற சிறு குறிப்பு மட்டுமே அந்த அழைப்பிதழோடு இணைக்கப்பட்டிருந்தது.யார் அனுப்பினார்கள் என்ற விபரமேதும் அதில் இல்லை.

 யாரோ விளையாடுகிறார்களா என்ற ஐயம் இருந்தாலும்,நேரில் போய் பார்த்துவிடலாம் என்றுதான் வந்தேன்.சில மணித்துளிகள் கடந்தன.

 “சார்,என்னைத் தெரியுதா?” என்றபடி என்னை நெருங்கினான் அந்த இளைஞன்.

 “உங்க மாணவன் மகேந்திரன்,அழைப்பிதழ் அனுப்பியது நான்தான்,’ சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.

மகேந்திரனா?என் மாணவனா? இவ்வளவு கம்பீரமாய்?இவன் தான் அந்த்த் தொழில்முனைவரா??” என்னால நம்பவே முடியவில்லை.சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்து வந்த செர்டாங் இடைநிலைப் பள்ளியில் பயின்ற மாணவன் அவன்.

 நான் என் ஆசிரியர் பயிற்சியை முடித்துக்கொண்டு முதன்முதலாக காலடி எடுத்துவைத்த பள்ளி அது.நான் முதலாம் படிவ வகுப்புக்கு  கணித ஆசிரியராக அமர்த்தப்பட்டேன்.ஒரு புதிய அனுபவமாக இருந்தது. படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் நிறைந்திருந்த அவ்வகுப்பில் பயின்ற மாணவர்களில் பெரும்பாலோர் வசதியற்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

 அந்த மாணவர்களுடன் ஒவ்வொரு நாளும் நேரம் போவதே தெரியாது.சிலர் செய்யும் அளவுக்கதிகமான சேட்டைகளுக்கு எல்லையே இருப்பதில்லை.என் வகுப்பில் என் நினைவில் இன்றுவரை நினைவில் நிற்பவன் இந்த மகேந்திரன்.மேலும் பைசால் எனும் மலாய் மாணவன்.இந்த இருவரும் வகுப்பில் எலியும்,பூனையுமாகவே இருப்பர்.பைசால் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.பையப்பயிலும் மாணவனான அவனால் மற்ற மாணவர்களைப் போல் பேசவோ,செயலாற்றவோ இயலாது.இருப்பினும் அவனது பெற்றோர் அவனை சிறப்புப்பள்ளிக்கு அனுப்பாமல்,மற்ற மாணவர்களோடு சகஜமாக வாழ வகுத்து இந்தப் பள்ளியில் சேர்த்திருந்தனர்.சற்று வசதி படைத்த மாணவனான பைசால் தன் பெற்றோருக்கு  ஒரே பிள்ளையுமாவான்.

  எப்போதும் சுட்டித்தனம் செய்யும் மகேந்திரனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனை  வந்து கொண்டே இருந்தது.மற்ற ஆசிரியர்கள் அவனைப்பற்றி குறை கூறாத நாளே இல்லை எனலாம்.ஒருநாள் அவனது பாதுகாவலரை வரச்சொல்லி இருந்தேன்.

 “மன்னிக்கவும் ஐயா,மகேந்திரனைப் பற்றி தினமும் நிறைய புகார்.அவனைக் கட்டொழுங்கு ஆசிரியர் தினமும் கண்டித்தும்,.தண்டனை கொடுத்தும் வராரு,கவுன்செலிங் கூட கொடுக்கறோம்.இருந்தும் அவன்கிட்ட எந்த மாற்றமுமில்லை”.

 “சார்,எங்க ஹோம்ல அம்பது பேர் இருக்காங்க,அவங்களுக்கு தினமும் சாப்பாடு கொடுக்கறதே கஷ்டமாக இருக்கு,அவுங்களுக்கு படிப்பறிவு வேனும்னுதான் ஸ்கூலுக்கு அனுப்பறோம்.இவன் இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தா பள்ளிக்கு அனுப்பமாட்டேன்,நானும் எவ்வளவோ கண்டிச்சு வார்த்துட்டேன் சார்,அவன் திருந்தற மாதிரி இல்லை,” என புலம்பினார் அவர்.

மகேந்திரன் பெற்றோரை இழந்து ஆதரவற்ற இல்லத்தில் வளர்பவன் என்ற உண்மை எனக்கு அப்போதுதான் தெரிந்தது.உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறான் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன்.

பரவாயில்லை ஐயா,நீங்க ஹோம் வெச்சு நடத்தறதே பெரிய விசயம்,அவனபத்தி நானும் இனிமே குறை சொல்லப்போவதில்லை,இதுவும் கடந்து போவும்,அவன் நிச்சயம் மாறுவான்,அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு,நீங்க கவலைப்படாம கிளம்புங்கய்யா,”

 அதன்பிறகு மகேந்திரனை எப்படி நல்வழிப்படுத்துவது என தினமும் யோசிக்க ஆரம்பித்தேன்.அவனது நிலை அறிந்தது முதல் ஒரு பரிவு ஏற்பட்டது.

 நான் இருக்கும் சூழலில் அவனுடைய படிப்புக்கு வேண்டுமானால் உதவி செய்யலாம்.மற்றபடி வேறென்ன செய்ய இயலும்?என்னால் இயன்றவரை மகேந்திரனுக்குப் புத்திமதி சொன்னேன்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன.பொய் சொல்ல ஆரம்பித்த மகேந்திரனின் தீயப்பழக்கம் திருடுவதில் வந்துமுடிந்தது.பைசாலின் புதிய பொருட்களை எடுத்துவைத்துக்கொள்வதும்,பிறகு அதனை உடைத்தெறிவதுமாக இருந்தான்..

  அன்று பைசால் ஒரு புதிய எழுதுகோல் பெட்டி எடுத்துவந்திருந்தான்.வகுப்பு முடியும் தருவாயில் அது உடைக்கப்பட்டு குப்பைத்தொட்டியில் இருந்தது.மகேந்திரனின் கைவரிசைதான் அது என தெரியவந்ததும் அவனைக் கண்டித்தேன்.

 இருவாரம் கழித்து அதே சம்பவம் மீண்டும் நிகழ்ந்தது.இம்முறையும் கண்டித்து தண்டனை கொடுத்தேன்.

 ஒரு மாதம் கழித்து பைசாலின் பெற்றோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.ஏனெனில் மீண்டும் மூன்றாவது முறையாக பைசாலின் எழுதுகோல்கள் மகேந்திரனால் உடைக்கப்பட்டிருந்தன.நான் மகேந்திரனின் குடும்ப பிரச்சனையை அவர்களிடம் கூறியதும்,ஒன்றும் பேசாது சென்றுவிட்டனர்.அதற்குள் எனக்கு பள்ளி மாற்றம் கடிதம் வரவே,நான் கிள்ளான் நகருக்கு வந்துவிட்டேன்.

 பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த என் சிந்தையை ஒலிப்பெருக்கியின் சத்தம் கலைத்தது.நிகழ்வு தொடங்கிவிட்டிருந்தது.

 “என் நலனுக்காக பாடுபட்ட என் ஆசிரியர் ராஜன்,”

 நிகழ்வின் தொடக்கத்திலேயே மகேந்திரன் என்னை மேடையேற்றி எனக்கு சிறப்பு செய்தான்.என்னைப் பற்றி புகழ்மாலை சூட்ட,எனக்கொன்றும் புரியவில்லை.தன் வாழ்வின் தொடக்கம் பற்றி உரையை ஆரம்பித்தான்.அவனது பேச்சை கேட்க கேட்க லயித்துப்போனேன்.அப்படியோர் ஈர்ப்பு.

 அன்றைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தான்.நான் பள்ளி மாற்றலாகிப் போனபிறகு மீண்டும் பைசாலின் பெற்றோர் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள்;கைநிறைய எழுதுகோல்களோடும்,இதர பொருட்களோடும் அவனைப் பார்த்து பேசியுள்ளனர்.மகேந்திரன் தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நொடியை மேலும் விவரிக்க ஆரம்பித்தான்.

 “பைசாலின் பெற்றோர் என்னைத் தனியாக சந்தித்தனர்.எனக்குள் ஒரே பயம்.தினமும்  அவனைக் கிண்டலடிப்பதும்,அவனது பொருள்களைத் திருடி நாசம் செய்வதும் என நான் செய்த அடாவடி தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்துவிட்டதோ என உள்ளூர நடுங்கினேன்.

 நான் அவர்களின் முன் மௌனித்து நின்றேன்.வேறு யாரும் அவ்விடத்தில் இல்லை.என் தலையை அன்பாய் கோதி நிமிர்த்தினார் பைசாலின் தாயார்.என்னை வாஞ்சையுடன் பார்த்தவர் என் கையில் அந்தப் பொருட்களைத் திணித்தார்.நான் யோசனையுடன் என் புருவங்களை உயர்த்த,அவர் மலாய்மொழியில் பேச ஆரம்பித்தார்.

மகேன்,இனி செமுவா உந்தோக் அவா,அம்பேல் லா,லாயின் காலி ஜாங்கான் அம்பேல் பாராங் ஓராங் லாயின்,” நான் அப்படியே ஸ்தம்பித்து நின்றேன்.இதே வேறொரு பெற்றோராய் இருந்திருந்தால்,,,” என் நிலையை ஒருகணம் யோசித்தேன்.பைசாலின் அம்மா மேலும் தொடர்ந்தார்.

 “மகேன்,லெப்பாஸ் இனி காமு டான் பைசால் ஜாடி காவான் பாயேக்,” என்னால்  அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை.அழுதுவிட்டேன்.அவர் என்னைக் கட்டித்தழுவினார்.அன்றோடு என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என எனக்குள் தோன்றிய ஒரு வெறி இதோ இவ்விடத்தில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளது.

  சபை முழுவதும் பலத்த கைத்தட்டல்.பைசால் இப்போது எங்கே என நான் மனதிற்குள் கேட்டது மகேந்திரனுக்குப் புரிந்திருக்கும் போல.
  அவனும் பைசாலைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

  “என் நலனுக்காக பாடுபட்டவர்களில் என் ஆசிரியர் ராஜனுக்கு அடுத்து என் வாழ்வின் வசந்தத்திற்கு உரிய என் தோழன் பைசால் இன்று உயிருடன் இல்லை.நோயின் காரணமான மூன்றாம் படிவ முடிவிலேயே அவன் இயற்கை எய்திவிட்டான்.மகேந்திரன் குரல் தழுதழுக்க,கண்களில் நீர்த்துளிகள்.அதே நீர்த்துளிகள் என் விழிகளிலும்.

 மகேந்திரன் தொடர்ந்தான்.

 “எனக்குப் பண உதவி செய்து, இன்றுவரையில் எனக்கு இன்னொரு தாய்,தந்தையாக இருப்பவர்கள் பைசாலின் பெற்றோர்.நான் நல்ல நிலையை அடைந்து,அன்பான மனைவி,அழகான குழந்தை என என் வாழ்வு நிறைந்துள்ளது.இவ்வளவும் செய்த பைசாலின் பெற்றோர் எந்தச் சபையிலும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பிரியப்பட்டதில்லைஎன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதுமில்லை

 “இப்படிப்பட்ட நல்லுள்ளங்களும் இருப்பார்களா?” என என் மனம் அசை போட்டது.

 நிகழ்வு முடிந்து நான் விடைபெறும் தருணத்தில், தன் மனைவி, தத்துக் குழந்தை சகிதம் வந்து வழியனுப்பிய மகேந்திரன் என் நெஞ்சில் நிறைந்து நின்றான்.


ஆக்கம் : சுதாகர் சுப்ரமணியம்,கிள்ளான்



சுதாகரின் நன்றி ஒருவருக்கு சிறுகதை
ஒரு திறனாய்வுப் பார்வை

    
திரு சுதாகர் எழுதிய முதல் சிறுகதை. மலேசியப் புனைகதை இலக்கியத்திற்குப் புது வரவு. ஏற்கனவே பல கதைகளுக்கு அவர்  தனது வாசகப் பார்வையைப் பகிர்ந்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. பல தொடர் வாசிப்புகளும் முன்வைத்த பார்வைகளும் இன்று அவரை ஒரு படைப்பாளியாக நம் முன்னே அமரவைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்தக் கதையை ஒரு திறனாய்வுப் பார்வையில் முன்னெடுத்துப் பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்தக் கட்டுரை.

பெரும்பாலும் சிறுகதைகளை நிகழ்ச்சியைச் சார்ந்தோ, சூழலைச் சார்ந்தோ, கதைமாந்தரின் பண்பு நலனைச் சார்ந்தோ, கருப்பொருளைச் சார்ந்தோ நான்காக வகைப்படுத்துவர் இலக்கிய ஆய்வாளர்கள். சுதாகரின், ‘நன்றி ஒருவருக்கு கதை, கதைமாந்தர்களின் பண்பு நலன்களால் சிறப்புறும் வகையைச் சார்ந்ததாகும்.

கதைச் சுருக்கம்

ஆசிரியருக்கு முக்கியப் பிரமுகராக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது. யார் தன்னை அழைத்திருப்பார்கள் என்ற கேள்வியுடன் அவர் செல்ல, முன் இருக்கையில் இட ஒதுக்கீடோடு, இடைநிலைப்பள்ளியில் அவரிடம் படித்ததாக மகேந்திரன் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான். ஆசிரியர் அவனை தன்  நினைவுக்குள் கொண்டு வருகிறார். பலவற்றையும் நினைத்துப் பார்க்கையில், ‘என் நலனுக்காகப் பாடுபட்ட என் ஆசிரியர் என மேடைக்கு அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்படுகிறார். வாழ்வில் வெற்றியடைந்த ஒரு மனிதனாக ஆசிரியர் முன் மகேந்திரன் உயர்ந்து நிற்கிறான்.

கதைத் தொடக்கம்

யார் தன்னை முக்கியப் பிரமுகராக அழைத்திருப்பார்கள் என்ற ஆசிரியரின் எதிர்பார்ப்புடனும் யாராவது விளையாட்டாக இப்படி செய்கிறார்களா என்ற ஆசிரியரின் சந்தேகத்துடனும் கதை துவங்குகிறது. வாசகனும் கதாசிரியரோடு சேர்ந்து பயணிக்கும் வண்ணம் கதை ஆரம்பம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் தொடர்பாகவே நிகழ்காலப் போக்கிலேயே கதை சொல்லும் பாணியில் கதை வளருகிறது.


கருப்பொருள்

பெரும்பாலும் சிறுகதைகளில் ஒரு மையக்கருத்தை நோக்கியே கதையின் நகர்தல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இவ்வகையில் இந்தக் கதையின் கருப்பொருளும் வாழ்க்கையில் வெற்றியடைந்த ஒருவன் தன் வாழ்க்கையின் வெற்றிக்கு வித்தாக இருந்தவர்களை நன்றியோடு நினைவுகூர்தல் என்ற ஒரே மையக்கருத்தோடு பயணிக்கிறது.

கதையின் போக்கு

ஆசிரியர் என்ற கதாபாத்திரம் மூலமாக ஆரம்பிக்கும் கதையாடலின் போக்கு தெளிந்த நீரோடை போன்ற நடையால், எழுத்தாளரே கதை சொல்லும் பாணியில் கதை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிகழ்காலச் சம்பவங்களோடு பின்னோக்கிப் பார்க்கும் உத்தியின் மூலமாகவும் அயற்கூற்றின் மூலமாகவும் கதை நகர்த்தப்பட்டுள்ளது.

கதையின் பின்புலம்

பல்லின மக்கள் வாழும் மலேசியச் சூழலில் இன்றும் இனி என்றும் பொருந்தும் தன்மையுடனே விளங்குகிறது. மலேசிய அரசாங்கக் கொள்கைக்கேற்ப இன நல்லிணக்க அடிப்படையில் அனைத்து மனிதர்களையும் நல்ல மனித நேயமிக்க மலேசியக் குடிமக்களாகவும் உருவாக்குவதற்கு ஏற்ப இக்கதையின் பின்புலம் பொருந்தியே அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஓர் அம்சமாகும்.

பாத்திரப்படைப்பு

இக்கதையைப் பொருத்தவரை காலத்திற்கு ஏற்ற ஒரு கருப்பொருளும் அக்கருப்பொருளுக்கு ஏற்பக் கதையைச் சுமந்து செல்ல பல முக்கிய கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஆசிரியர், இளம் முனைவர் மகேந்திரன், அவன் நண்பன் ஃபைசால் மற்றும் ஃபாசலின் பெற்றோர் என கதாபாத்திரங்களை உயிரூட்டி விட்டிருக்கிறார் கதாசிரியர்.

கதாசிரியர், ஆசிரியர் தொழிலில் இருப்பதால், அத்தொழிலின் உன்னதம் ஆசிரியர் என்ற கதாபாத்திரம் மூலமாக மொழியப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பணிபுரியும் நம்மின ஆசிரியர்களுக்குக் கடமையுணர்வோடு சமூக உணர்வும் அக்கறையும் இருக்கவேண்டும் என்பதற்கு இக்கதையின் ஆசிரியர் கதாபாத்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நம்மின மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் தடம் மாறிப் போவது அண்மையில் அதிகரித்துள்ளது வருந்தத்தக்க ஒன்று. இடையிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து சில செயல்களை முன்னெடுத்தால் அடுத்த தலைமுறையை நாம் நல்வழியில் நேர்படுத்த ஏதுவாக இருக்கும். சொல்வதும் எழுதுவதும் சுலபம்தான். ஆனால், நம் இனம் நம் மாணவர்கள். நம் மொழியையும் நம் இனத்தையும் அடுத்த நகர்வை நோக்கி நகர்த்திச் செல்லும் கடப்பாடு வரும் காலங்களில் அவர்களுக்குத்தான் உண்டு. அதற்கேற்ப அவர்களைத் தயார்படுத்துவது இன்றைய தலைமுறையினரின் தலையாய கடப்பாடாகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அடுத்த தலைமுறை இந்த நாட்டில் சிறப்பாக வாழவேண்டுமென்றால் இன்றைய தலைமுறை பல தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும். இதுவே காலத்தின் காட்டாயமாகவும் இருக்கலாம்.

மகேந்திரனின் கதாபாத்திரம் பள்ளி வாழ்க்கையில் படுமோசமான பழக்கவழக்கங்களைக் கொண்டவனாக அறிமுகமாகி இன்று வெற்றிபெற்ற ஒரு மனிதனாகவும் தனக்கு உதவியவர்களை மறக்கா மனமுடையவனாகவும் வந்து நல்லதொரு முன்னுதாரண கதாபாத்திரமாக இக்கதையில் புனையப்பட்டுள்ளது. இதுவெல்லாம் இங்கு சாத்தியாமா? முடியுமா? எனக் கேள்வி கேட்டால், இங்கு அனைத்தும் சாத்தியமே நம்மை நாமே உணர்ந்துகொண்டால் என்பதற்கு இக்கதையே நல்ல சாட்சி.

அடுத்து, ஃபைசால் மற்றும் அவன் பெற்றோர் கதாபாத்திரங்களே கதையின் திருப்புமுனை கதாபாத்திரங்களாவர். பையப் பயிலும் தன் மகனுக்கு ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்துவரும் மகேந்திரனின் வாழ்க்கைப் பின்னணியை அறிந்து, அவனை அரவணைத்து, அவர்கள் முன்னெடுத்த செயல்கள்தான் மகேந்திரனின் மனமாற்றத்திற்கு முக்கியக் காரணியாகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

என்ற வள்ளுவரின் கூற்றுக்குப் பண்புக்குப் பொருத்தமாகப் பொருந்திப் போகின்றனர் ஃபைசாலின் பெற்றோர். மலேசியச் சூழலில் அனைவரும் ஒன்றே எனவும் இங்கு இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் நிறத்தாலும் வேறுபட்டிருந்தாலும் மனிதம் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறது என்பதையும் இக்கதாபாத்திரங்கள் நமக்கு உணர்த்திச் செல்கின்றன.


கதையின் முரண்

கதையின் தொடக்கத்திலிருந்தே தீய வழிகளில் தீயப் பழக்கங்களுக்கு ஆட்படும்  மாணவனாகக் காட்டப்பட்ட மகேந்திரன் இன்று வாழ்வில் உயர்ந்து நல்லதொரு நிலையில் வாழ்வதும், மேடைகளில் வாழ்வியல் சொற்பொழிவுகள் ஆற்றுவதும் ஃபைசால் என்ற கதாபாத்திரம் வாழ்வதாகக் காட்டி பின் மகேந்திரன் மூலமாக அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியும் இக்கதையின் முரணாக அமைந்திருக்கிறது.



கையாளப்படும் உத்தி

எதிர்பார்ப்பு நிலை (Suspense) சிறுகதைகளின் மிகச் சிறப்பான கூறுகளில் (Element) ஒன்றாகும். இக்கதையின் போக்குப் படிப்பவர் மனத்தில் ஒரு வித ஆர்வத்தை தூண்டும்படியாக இருக்கிறது. மேலும், இக்கதையின் போக்கு முரண் (Conflict) எனும் உத்தியை நோக்கி மிகவும் நுணுக்கமாகவும் நகர்த்தப்பட்டுள்ளது.
படைப்பாக்கத்தில் ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தைக் கலைநயமிக்கதாகப் படைப்பதற்கும் மையக்கருத்தை வளர்த்துச் செல்வதற்கும் உத்திமுறைகள் துணை செய்கின்றன. இக்கதையின் தொடக்கத்தில் நிகழ்காலச் சம்பவம், பின்னோக்கிப் பார்த்தல், அயற்கூற்று, மீண்டும் நிகழ்காலம் என உத்திகள் செயல்பட்டுக் கதையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

சமூகப் பார்வை

மனிதச் சமுதாயத்தைப் பண்போடும் அன்போடும் பரிவோடும் பாசத்தோடும் அபிமானத்தோடும் ஆதரவோடும் நல்வழிப்படுத்தவல்ல அந்தரங்கப் புனித மனம் படைத்த ஒரு படைப்பாளன்தான் ஒரு சமூதாயத்தின் உண்மையான ஆன்மாவாகத் திகழ முடியும் என சுதந்திரம் எனும் வார ஏட்டின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பூவை. எஸ். ஆறுமுகம். சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற பிரச்சினைகளுக்கு மனிதாபிமானத்துடன் தீர்வு காணமுயலும் தார்மீகப் பொறுப்புணர்ச்சிமிக்க ஓர் எழுத்தாளராகவே இக்கதையின் படைப்பாளியைக் காணமுடிகிறது.

ஃபைசால் என்ற மாணவனின் தாக்கம் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டச் சூழலுக்கு இட்டுச்சென்று முடிவில் மலேசியப் பல்லினச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கும் மனித நேயத்திற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என வரும் பாடல் வரிகளுக்கு மனிதர்கள் ஆதாரப் புருஷர்களாக விளங்கும் இக்காலக் கட்டத்தில், ஃபைசாலின் பெற்றோர் போன்றவர்களும் தன்னலம் கருதா உழைக்கும் ஆசிரியர் சமூகமும் வாழத்தான் செய்கிறார்கள் என்பதை இக்கதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மொழி நடை

ஒரு படைப்பு என்பது மக்களை எளிதில் சென்றடைய வேண்டுமென்றால் அங்குப் புரிதல் என்பது நிகழ்த்தப் பட்டிருக்கவேண்டும். அதற்கு இயல்பான மொழிநடை அவசியமாகும். அந்த வகையில் இக்கதையில் எடுத்தாளப்பட்ட மொழி நடை என்பது இயல்பான மொழி நடையில் எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் கதையை எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.

தலைப்புப் பொருத்தம்

இக்கதையின் தலைப்பு மிகவும் இயல்பாகவும் நேரடியாகவும் இருக்கிறது. கதையை ஓரளவு ஊகித்துக்கொள்ளவைக்கும் தலைப்பு இது. ஆனாலும், இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.


நிறைவு

மலேசியப் புனைகதை உலகிற்கு இவர் புதியவர் என்றாலும் ஒரு கதைச்சொல்லியாக சுதாகர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே கூறவேண்டும். ஆனாலும் இது ஆரம்பம்தான். ஆரம்பகால படைப்புக்கு அதுவும் முதல் கதைக்கு இது போதுமானதே. ஆனால் இதுவே அவரின் உச்சமாக இருந்துவிடக்கூடாது. இன்றைய நவீனத்துவ கட்டமைப்புகளில் கதைக்கான செல்நெறிகளும் உழைப்பும் அதிகமானதாகும். ஒவ்வொன்றையும் நுண்ணியப் பார்வையில் இழைக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும், படைப்பாளயை ஊக்கப்படுத்தும் விதமாகவே எனது இந்தத் திறனாய்வுப் பார்வை அமைந்துள்ளது.


இங்கு ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன், கரு ஒன்றாக இருந்தாலும் கதை கூறும் முறைமைகள் பல இருக்கின்றன. எனது பார்வையில் இக்கதையை நான் எழுதியிருந்தால், மகேந்திரனின் கதாபாத்திரமே இக்கதையைக் கூறுவதுபோல அமைத்து,  ‘ஃபைசால் இறந்துவிட்டான் என்ற வாக்கியத்தைக் கதையின் முதலில் வைத்து, அதன் தொடர்பாக கதையை நகர்த்தி, இறுதியில் அக்கதாபாத்திரம் தனது ஆசிரியர் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ஆவலோடு காத்திருப்பதுபோல முடித்திருப்பேன். மகேந்திரனின் கதாபாத்திரம் மூலமாக கதை முன்னெடுக்கப்பட்டிருந்தால் உணர்வுகளில் கடத்தலானது இன்னும் ஆழமான நெகிழ்வுத்தன்மையோடு வாசக மனங்களை நெருங்கியிருக்கும் என நம்புகிறேன்.

சுதாகர் தனக்கான ஒரு மொழிநடையை உருவாக்கி அதைப் பின்பற்றும்போது அவருக்குரிய தனிநடை அழகாக விரியும். இந்தப் பயணத்தையொட்டிய சுதாகரின் எழுத்தாற்றல் மேன்மேலும் சிறப்புற்று மலேசிய இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவுசெய்கிறேன்.


அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக