புதன், 5 அக்டோபர், 2016

தமிழ்ச்சாமியும் சீனச்சாமியும் - சி.வடிவேலு

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்
தமிழ்ச்சாமியும் சீனச்சாமியும் – சி. வடிவேலு, ஸ்கூடாய்
2 அக்டோபர் 2016


சமுதாயச் சித்தரிப்பு என்பது புனைகதைகளின் தளமாக இருத்தல் என்பது உலகலாவிய ஒரு பொதுப் பண்பாகும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் சமுதாயக் களம், சககாலம் தழுவியதாகவும் கடந்த காலத்தைப் பின்னொற்றியதாகவும் அல்லது எதிர்காலத்தைப் பற்றியதாகவும் இருக்கலாம். கற்பனா நிலையை அடியொற்றிய சமூகச் சித்தரிப்புகள் ஒவ்வொரு நிலையிலும் தனக்கான நியாயங்களுடனும் தர்மங்களுடனும் தன்னை முன்னிருத்துக்கொள்கின்றன. தனது பார்வையில் உலகை ஆய்ந்து, தனக்கானதை மட்டும் சுவகரித்துக்கொண்டு, தனக்கான இயல்புடன் சமகால இலக்கியவெளியில் இடம்பெற்றுள்ள இலக்கியப்போக்குகளின் வளர்ச்சியில் நமது நிலை என்ன என்பதைப்பற்றி அறிந்துகொள்ள வெளிஉலகிற்குக் கொடுக்கப்படும் மலேசியப் படைப்புகளின் பட்டியலில் மூத்த எழுத்தாளர் சி.வடிவேலுவின் தமிழ்ச்சாமியும் சீனச்சாமியும் சிறுகதையையும் இணைத்துக்கொள்ளலாம்.


சிறுகதை என்னும் இலக்கிய உருவம், கதைப்பின்னலுக்கு முக்கியம் கொடுக்காது. அதற்கு ஒரு சம்பவம்  அல்லது ஒரு மனநிலையே முக்கியமானது என்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி. மன அவசத்தின் உருவகமாகக் கதைகள் எழுதும் முறையை முதன்முதலாகத் பரிட்சார்த்த முறையில் கையாண்டு தமிழில் சிறுகதையின் அமைப்பினை முற்றிலும் மாற்றியமைத்த பெருமை புதுமைப்பித்தனுக்கு உண்டு. அதுபோல மௌனியின் நனவோடைக் கதைகளும் தமிழ்ச் சிறுகதைகளின் தரத்தை உயர்த்திப் பிடித்தன. அதன்பிறகு மணிக்கொடிக் குழுவினர் ஆரம்பம், உச்சம், முடிவு என்ற நிகழ்ச்சியமைப்பைக்கொண்ட கதைகளை எழுதினர். இன்னும் சிலர் ஓ ஹென்றி எழுத்தினைப்போல எதிர்பாரா முடிவுகளைக்கொண்ட கதைகளை எழுதத் தொடங்கினர். இப்படிப் படிப்படியான பரிமாண வளர்ச்சியின் தொடர்ச்சிதான் இன்றைய நவீனத்துவச் சிறுகதைகள்.


ஒரு பார்வையாளராக இருந்துகொண்டு கதாசிரியர் இக்கதையை வெறும் புறப்பார்வையின் வழியே நகர்த்திச் சென்று, நுண்ணியப் பார்வைகளைப் புறந்தள்ளி, மனவெளிகளைத் தொலைத்திருக்கிறார். கதையின் இடை இடையே பேசுகிறார். நிறைய உபதேசம் செய்கிறார். முதன்மை கதாபாத்திரம் சிவச்செல்வன் மீதேறி அவ்வப்போது சவாரியும் செய்கிறார். பழமையான கதை சொல்லும் பாணியில் சமகால பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கும் கதாசிரியர், அண்டை வீட்டார் உறவு, சில சமகால தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரப் போராட்டம், வாழ்வியல் சூழல், இன்றைய இளையர்களின் பழக்க வழக்கம், இறை வழிபாட்டில் தமிழ்ச் சமூகத்தின் இப்போதைய போக்கு, தமிழன்தான் தமிழனுக்கு உதவுவான் எனப் பலவற்றையும் இக்கதையில் இழையோடவிட்டிருக்கிறார். ஒரு சிறுகதைக்குள் இத்தனை விஷயங்களா என மலைப்பாக இருக்கிறது. அதுவே வாசகனை களைப்படையச் செய்துவிடுகிறது. அவன் தொடர் வாசிப்பை முன்னெடுக்கு முடியாமல் தடுத்தும் விடுகிறது. மேலும் கதையினூடே கதாசிரியர் சிறு சிறு கேள்வி கேட்டு, அவரே பதிலைச் சொல்வதுமான கதைபாணி, கதையோட்டத்தின் சுவாரஸ்யத்தையும் குறைத்து விடுகிறது.


சிவச்செல்வன், அவர் மனைவி மாலா, பக்கத்து வீட்டுப் பெண்மணி சொர்ணலட்சுமி அவரின் மூன்று பிள்ளைகள், அவர்கள் வீட்டுக்கு வரும் இரு இளைஞர்கள், கடைக்காரர் முருகேசு போன்ற கதாபாத்திரங்களுடன் ஐயனாரும் சீன டத்தோ சாமியும் இக்கதையில் வந்து போகின்றன. பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ்க்குடும்பம் சிவச்செல்வனின் குடும்பத்தினருக்கு முற்றிலும் முரணான செய்யும் செயல்களைச் சிவச்செல்வனின் தோள்மீது அமர்ந்துகொண்டு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார் கதாசிரியர். சிவச்செல்வன் தன் மனைவியோடு பேசும் உரையாடல்களும் பக்கத்து வீட்டாரைப் பற்றிய நீதிபதி போன்ற அவரின் பார்வையும் நடுத்தர வர்க்கம் தனக்குக் கீழே இருக்கும் அடித்தட்டு மக்களைப் பார்க்கும் ஒரு பார்வையாகவே படுகிறது. சாதாரண மக்களின்மேல் இருக்கும் அவர்களின் ஒட்டுமொத்தப் பதிவாகவே இக்கதை வியாபித்து நிற்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையின் வட்டத்திற்குள் நுழையாமலேயே அவர்களை விமர்சித்தும் ஏசியும் பேசியும் கிண்டலடித்து வரும் ஒரு மேல்தட்டு வாழ்க்கைமுறை பார்வையாளனின் ஒட்டுமொத்த உருவகமாக இக்கதையில் வருகிறார் சிவச்செல்வன்.


அடுத்த வீட்டுச் சீனன் இந்தத் தொல்லைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள இரண்டு வீட்டிற்கும் மத்தியில் தடுப்புச் சுவரையே கட்டிவிட்டு நிம்மதியாக இருக்கிறான். அதுபோன்ற சுவரை எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தைச் சிவச்செல்வன் மனத்துக்குள் மட்டுமே கட்டிக்கொண்டு சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்

என்ற வரிகளின்மூலம் தேசிய அளவில் நம் சமூகத்தின் பொருளாதார பலவீனத்தைக் குறியீடாகக் காட்டிய கதாசிரியரை இங்குப் பாராட்டியே ஆகவேண்டும். கதையில் நிறைய இடங்களில் சொல்வளமும் மொழிவளமும் சிறப்பாகவே எடுத்தாளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. எடுத்துக்காட்டாக,

குடும்ப நிம்மதியைக் கிள்ளிப் போட்டிருந்தன

போன்ற வாக்கியங்களின் நிர்மாணிப்புகளைக் கூறலாம்.


சமகால சமூகப் பிரச்சினைகளை ஒரு கதையில் பதிவாகச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். ஆனால் அவை வெறும் பதிவாக மட்டுமே இருப்பது வருத்தமளிக்கிறது. சிறுகதை என்பது ஒரு தகவல் சாதனம் அல்ல. அது ஓர் அனுபவப் பகிர்வாக வாசகனுக்கு புதுஉணர்வைக் கொடுப்பதாக இருக்கவேண்டும். வாசகனை அக்கதைக்குள்ளே ஊடுருறுவச் செய்யவேண்டும். அதன்மூலம் அவனுக்கான வாசிப்புத் தளமும் சிந்தனை வளமும் விரிவுபடுத்தப்படவேண்டும். இக்கதையில் சொல்லப்பட்டவைகளையும்  சொல்லப்படாதவைகளையும் நோக்கி அவனின் சிந்தனை பயணிக்கவேண்டும்.

நிறைவாக, விமர்சனம் என்பது அக்கதைத் தொடர்பான ஓர் உரையாடலைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குவது. அது அக்கதைத் தொடர்பான தீர்ப்போ அல்லது மதிப்பீடோ அல்ல என்பதை நாம் உணர்தல் வேண்டும். கதைகள் தொடர்பான உரையாடல்களாக நாம் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுபோன்ற விமர்சனங்கள் வழியேதான் இலக்கியத்தோடும் அதற்குரிய ஆழத்தோடும் நம்மால் உறவாடமுடியும்.  நல்ல சமூகச் சிந்தனையை முன்னெடுத்துள்ள மூத்த எழுத்தாளர் சி. வடிவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்.அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக