சனி, 17 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதை - வரங்களே சாபங்களானால் - சிமா.இளங்கோ

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்

வரங்களே சாபங்களானால் – சிமா.இளங்கோ
11 செப்டம்பர் 2016


ஒரு படைப்பு என்பது எதையெல்லாம் சேர்க்கிறோம் என்பதை வைத்து இல்லாமல் எதையெல்லாம் நீக்குகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கவேண்டும் என்கிறார் ஈரானியப் படைப்பாளி கியாரெஸ்தமி. சிமா. இளங்கோவின் சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எனக்குள் வியாபித்து எழுந்து நின்றது இந்த வரிகள்தான். சுமார் இருநூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட மலேசியத் தமிழர்களின் வரலாற்றுப் பாதையில் நமது இலக்கியங்களுக்கான சுயப் படைப்பாக்கங்களின் இன்றைய நிலை என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு சிந்தித்துச் செயல்படும் ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதை இதுபோன்ற படைப்புகள் நமக்கு நினைவூட்டுகின்றன.


உலக இலக்கிய அரங்கில் நமது படைப்புகளின் நிலை என்ன? நாம் எங்கு நிற்கிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சரியான ஒரு தடத்தில்தான் நாம் பயணிக்கின்றோமா? அடுத்து நமது இலக்கு என்ன? என்பன போன்ற கேள்விகள் நம் முன்னே குத்திட்டு நிற்கின்றன. அதற்கான ஒரு வழிதேடலாக மக்கள் ஓசையில் கடிகாரக் கதைகள் திட்டத்தை அறிமுகம் செய்தும் கதைகள் தொடர்பான கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்து வருகிறார் அதன் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு. இராஜேந்திரன். அத்தொடரில் வந்த இக்கதையானது சமகால மலேசியப் பிரச்சினைகளைத் தன்னகத்தே அடக்கிக்கொண்டு அதற்கான ஓரு களத்தை அமைத்துக்கொண்டு பயணித்திருக்கிறது. நல்ல கதை இதில் இருக்கிறது. ஆனால் படைப்பாக்கத்திறன் குன்றியிருப்பதால் இக்கதையின் கதை நசுக்கப்பட்டுள்ளது என்றே எனக்குப்படுகிறது.



எடுத்துக்காட்டாக கதையின் இடைஇடையே கதாசிரியர் பல தடவை கேள்விகள் கேட்டு, அதற்கு அவரே பதில் சொல்லிச் செல்வதானது வாசகனை கதைக்குள்ளே நுழைய விடாதபடி தடுத்து நிற்கும் மதில்சுவர்களாக இருக்கின்றன. மேலும் வாசகனிடம் ஒருவித சலிப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்பதும் இங்கு கவனித்தில் கொள்ளல் வேண்டும்.


தினகரன் அவன் மனைவி அல்லிமலர், அல்லிமலர் அவள் அப்பா மற்றும் பங்களாதேசி இளையர்கள்,  டீ கடை முஸ்லீம் இளைஞன் அவன் மனைவி, மலேசியாவின் அரசியல் சூழல், அரசாங்க எதிர்ப்புப் பேரணி, டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருக்கும் அந்த இரு இளைஞர்கள், பலர் எந்தத் தப்பும் செய்யாமல் போலிஸிடம் சிக்கிக் கொண்டும் தண்டனைக்கு ஆளாகுவதும் என இத்தனை விஷயங்களை ஒரு சிறுகதைக்குள்ளே அரவணைத்துக்கொண்டு கதாசிரியர் பயணப்பட்டிருப்பது அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சமூக கடமை உணர்வுகளை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால் அதற்கு சிறுகதை ஒரு களம் அல்ல என்பதுதான் எனது பார்வையாகும். ஒரு நல்ல புதினத்துக்குத் தேவையான அனைத்தும் இக்கதைக்குள் சிறைப்பட்டுக்கிடக்கிறது. வாய்ப்பிருந்தால் கதாசிரியர் இக்கதையை மேலும் விரிவுபடுத்தி ஒரு நல்ல நாவலாகக் கொண்டு வரலாம். அது நமது மலேசிய நாவல் இலக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதமாகக்கூட அமையலாம்.


சிறுகதைகளின் வாயிலாகப் பிரசாரம் செய்வதும் கதாசிரியர் அடிக்கடி கதைக்குள்ளே வந்து தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதும் முழுமையாக அனைத்தையும் தானே சொல்லிவிட்டுச் செல்வதும் போன்ற எழுத்துப்படைப்புகள் இன்றைய காலத்துப் படைப்பிலக்கியத்தில் ஒவ்வாத ஒன்றாகவே கவனிக்கப்படுகிறது. இன்றைய நவீனத்துவமும் அதற்கான கட்டமைப்புகளும் இதைத்தான் ஒரு படைப்பாளியிடமிருந்தும் எதிர்பார்க்கிறது.


ஆனால், இக்கதையின் இறுதியிலும் கதாசிரியர் அனைத்தையும் விலாவாரியாக விளக்கிச் செல்லும் போக்கானது வாசகனை சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. மேலும், கதை நெடுகிலும் வாசகனைச் சிந்திக்கவிடாமல் கதையோட்டம் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களாகும்.


உலகச் சிறுகதை இலக்கியத்தில் மலேசியப் படைப்புகளின் ஆளுமை என்ன என்பதை வில்லிலிருந்து பாயும் அம்பாய் நம்மை நோக்கி மீண்டும் ஒரு முறை சிந்திக்க வைக்க வருகிறது இக்கதை.


நிறைவாக, கதாசிரியரின் மொழி ஆளுமை இக்கதை நெடுக வியாபித்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். நிறைய உவமைகளும் இணைச் சொற்களும் கதை முழுக்கப் பரவியிருக்கிறது. நம் மாணவர்களுக்கு இக்கதையில் வரும் உவமைச் சொற்களையும் இனிய சொல்லாடல்களையும் ஆசிரியர்கள் வகுப்பறையில் அறிமுகப்படுத்தலாம். நல்வாழ்த்து சிமா. இளங்கோ. கூடிய விரைவில் ஒரு நாவலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.



அன்புடன் எம்.சேகர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக