வியாழன், 29 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - வேலி - விமலா ரெட்டி

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்
வேலி – விமலா ரெட்டி
25 செப்டம்பர் 2016


கதை சொல்லல், கதை கேட்டல் அனுபவங்களின் எடுத்துரைப்பிலிருந்து ஆரம்பித்த அனுபவங்களின் இன்னொரு பரிமாணமாகிய கற்பனைகளுடன் இணைந்து வளர்ந்து செல்லும் படிமலர்ச்சி நிலையினைக் கதைகள் கொண்டுள்ளன எனவும் தொல்குடியினர் தமது சூழலை விளங்க, விளக்க முற்பட்ட வேளை கலை வடிவங்களுள் ஒன்றாக கதை தோற்றம் பெற்றது எனவும் இது சமூகத்துக்கு அறிவூட்டுவதற்கும் மனித நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உரிய மொழிச்சாதனமாகவும் கலை சாதனமாகவும் கதைகள் பயன்படுத்தப்பட்டன என்கிறார் பேராசிரியர் சபா. ஜெயராசா. இந்த ஆரம்பகால நிலையிலிருந்து இன்றைய நவீன படைப்புகள் வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டதை இன்னமும் நாம் உணராமல் காலம் கடத்திவருகிறோமோ என்ற கேள்வியே, விமலா ரெட்டியின், வேலி சிறுகதையைப் படித்தவுடன் எனக்குள் விருட்சமாய் விரிந்தது.


தாய் மஞ்சுளா, தன் மகள் மீனா தனது சொல்பேச்சைக் கேட்க மறுப்பதால், மீனாவின் தோழி ஆனந்தியிடம் தன் கடந்த காலத்தைச் சொல்லுவதாகக் கதை உரையாடல் ஆரம்பமாகிறது. அவர்கள் பேசுவதை அவர்களுக்குத் தெரியாமல் கேட்டுவிட்டு மீனா திருந்துவதாகக் கதை முடிகிறது. இதுதான் வேலியின் கதை. இதைத்தவிர கதையைப் பற்றி சொல்ல வேறெதுவுமில்லை. வேலி என்ற தலைப்பின்மூலம் பெண்களுக்குப் பெண்களே காவலாக இருக்கவேண்டும் என்பதைக் குறியீடாகப் பதித்துள்ளார் விமலா ரெட்டி. இதுதான் இக்கதையில் இருக்கும் ஆறுதலான ஒரு விஷயம்.


ஒரு படைப்பானது எவற்றையெல்லாம் தனக்குள் தாங்கி வருகிறது என்பதில்லாமல் அப்படைப்பிலிருந்து எவற்றையெல்லாம் தேவையற்றது என வெளியேற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது என்பது இலக்கிய ஆய்வாளர்களின் ஊற்றாகும். அவ்வகையில் இக்கதையில் தேவையற்றதையெல்லாம் நீக்கிப் பார்த்தால், தனக்கான வடிவத்திலும் கதை கூறுதல் முறைமைகளிலும் சரியாகக் காலூண்ற முடியாமல் தவித்து நிற்கிறது இக்கதை.
  


இக்கதையின் வாயிலாக இக்கால பள்ளி மாணவர்களுக்கு உபதேசம் செய்வதை மட்டுமே தலையாயப் பணியாகக் கொண்டிருக்கிறார் விமலா ரெட்டி. பல இடங்களில் கதையின் சாரம் கட்டுரைத் தன்மையுடனும் கலைப்படைப்புக்கு உரிய எந்தவொரு நுண்ணியப் பார்வையும் இல்லாமல் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமே தனி சிரத்தை எடுத்து, முழுமையாக அனைத்தையும் தானே சொல்லிவிட்டுச் செல்வதும் போன்ற இதுபோன்ற எழுத்துப்படைப்புகள் இன்றைய காலத்துப் படைப்பிலக்கியத்தில் ஒவ்வாத ஒன்றாகவே கவனிக்கப்படுகிறது. இன்றைய நவீனத்துவமும் அதற்கான கட்டமைப்புகளும் இதுபோன்ற கதைகளை எளிதில் நிராகரித்து விடுகின்றன என்பதை நாம் முதலில் உய்த்துணரவேண்டும்.


இக்கதையின் இறுதியிலும் படைப்பாளி அனைத்தையும் விலாவாரியாக விளக்கிச் சொல்லும் போக்கானது வாசகனுக்கு இடைவெளி விடாமலும் சிந்திக்க வாய்ப்பே கொடுக்காமலும் செய்து விடுகிறது. மேலும், கதை நெடுகிலும் வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்தும் கதையோட்டமும் கூறியதைக் கூறல் எனச் சொல்லியதையே திரும்பத் திரும்பச் சொல்லி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களாகும்.  மேலும் இன்றைய நவீன படைப்பாக்கச் சிறுகதைக்குத் தேய்வழக்குகளும் உவமைகளும் வர்ணனைகளும் தேவையற்றவையாகக் கருதப்படுகிறது. ஆனால் இக்கதை நெடுகிலும் நிறைய  தேய்வழக்குகள் வர்ணனைகளும் வந்து போகின்றன.


உலகச் சிறுகதை இலக்கியத்தின் இன்றைய நிலையினையோ அல்லது தமிழ்நாட்டுச் சிறுகதைகளின் இன்றைய வளர்ச்சி நிலையினையோ புலம்பெயர்ந்த தமிழிலக்கியத்தின் இன்றைய போக்கினையோ நாம் கூர்ந்து கவனிக்காவிட்டாலும் வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நம் நாட்டின் இன்றைய சிறுகதைப் படைப்பிலக்கியம் பற்றிய நமது வாசிப்புகளும் புரிதல்களும் எவ்வாறு இருக்கிறது என்பதையாவது நாம் நமது மீள்பார்வைக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை இதுபோன்ற கதைகள் உணர்த்துகின்றன.


இக்கதை ஒரு செய்தியைச் சொல்லி வெறும் செய்தியாக மட்டுமே இருக்கிறது. கதை என்பது ஒரு செய்தி அனுபவத்தை மட்டும் கொடுக்காமல் வாழ்க்கையின் அனுபவத்தை உடன் சென்று வாழும் அனுபவத்தை வாசகனுக்குக் கொடுக்கவேண்டும். கதையில் வாழ்க்கையைச் சொல்லாமல் வாழ்க்கையைக் காட்டவேண்டும். இன்றைய கதைகளுக்கு தெரிதல் முக்கியமல்ல. உணர்தலும் அந்த உணர்தலின் அனுபவமே பிரதானம்.


நிறைவாக, வழித் தவறிச் செல்லும் பள்ளி மாணவிகளுக்கு நல்ல செய்தியை ஒரு முன் அனுபவ நிகழ்ச்சியின் வாயிலாகச் சொல்லியதற்கும் விமலாரெட்டி சமூகத்தின்மேல் கொண்ட அக்கறைக்கும் வாழ்த்துகள்.



அன்புடன் எம்.சேகர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக