புதன், 21 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - ஆமையும் முயலும்

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்

ஆமையும் வெல்லும் – வே. இராஜேஸ்வரி
18 செப்டம்பர், 2016


நம்மைச் சுற்றி ஒவ்வொரு கணமும் பல்வேறு சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு சம்பவத்திற்கு அல்லது ஒரு நிகழ்ச்சிக்குப் புனைவு மதிப்பு ஏற்படுவது என்பது, அவை மனிதப் பிரச்சினைகளோடு தொடர்புடையவை என்னும் கட்டத்தில்தான். புனைகதை எடுத்துரைப்பது என்பது நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்கள், அவைக்கான வார்த்தைக் குறியீடுகள், எடுத்துச் சொல்லும் அல்லது எழுதும் செயல்பாடு ஆகிய அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுவே, பின்னர் கதை, பனுவல், எடுத்துரைப்பு என்றும் அழைக்கப்படுகிறது என தனது புனைகதை இயல் என்ற நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா.


மலேசிய இலக்கிய உலகில் மறக்கமுடியாத ஓர் ஆளுமையாய இருக்கும் வே. இராஜேஸ்வரியின், ஆமையும் வெல்லும் கதை மேலே குறிப்பிட்டிருப்பதுபோல நமக்கு மிகவும் நெருக்கமான மலேசிய மக்களின் பொதுவாக உலக மக்களின் நடப்பியல் பிரச்சினையைக் கருவாக ஏந்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய அடிப்படைக் கல்வி முறை மதிப்பெண் சார்ந்த தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாறிவிட்டதையும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தையும் தேர்வு பயத்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றின் முரண்பட்ட பார்வைகளையும் தன்னகத்தே கொண்டு, தன் கூற்று உத்தி முறையின் மூலம் இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.


யூபிஎஸ்ஆர் தேர்வில் 7 ஏக்கள் பெறக்கூடிய மாணவி எதிர்பாராவிதமாக 4 ஏக்களை மட்டுமே பெறுகிறாள். இதுநாள் வரையில் செல்லமாய்ப் போற்றி வந்த அம்மாவின் ஏச்சும் பேச்சும் எந்தவித உணர்வையும் காட்டாத அப்பாவின் மௌனமும் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரின் பேச்சும் போக்கும் சம்பந்தப்பட்ட மாணவிக்கு எந்த அளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்திருந்தால் அவள் சாவதற்கு முடிவெடுத்திருப்பாள். இதற்காகவா பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிறோம்? படிக்க அனுப்புகிறோம்? சமூகமும் அதன் மதிப்பீட்டுத் தன்மைகளும் தேர்ச்சிமுறை கல்வித்திட்டமும் இப்படி எத்தனை இளம் பிஞ்சுகளைப் பலியாக்கிவிட்டிருக்கின்றன?


தேர்வுக்கு முன்பாகத் தேர்வு பயமும் தேர்வுக்குப்பின் தேர்ச்சி பயமும் தேர்வு முடிவுகளுக்குப்பின் பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள் பயமும் என அனைத்தையும் பன்னிரண்டு வயதிற்குள் மன அழுத்தமும் உளைச்சலும் கொண்டு தடுமாறித் தவிக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு, நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் காட்டும் வழிதான் என்ன? தற்கொலைதான் இதற்கான தீர்வா? என இப்படியாகப் பல கேள்விகள் நமக்குள் எழும்பி நிற்கின்றன.


கல்வி என்பது ஒன்றை அறிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது. மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொண்டு தேர்வில் ஒப்புவிப்பது அல்ல. வாழ்க்கையைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் திறன்களை வளர்க்கும் விதமாக வாழ்க்கைக் கல்வியாக இருக்கவேண்டும். வெறும் பாடத்திட்டங்களைச் சார்ந்தும் தேர்ச்சியை மட்டும் சார்ந்தும் இருப்பது எந்த வகையிலும் சிறந்த குடிமக்களை உருவாக்க நினைக்கும் ஒரு நாட்டின் கல்விக்கொள்கைக்கு உகந்ததாக இருக்காது.



தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இங்கு, பசி மயக்கம் மட்டுமல்ல, கழிவறைக்குக் கூட போகமுடியாத ஒரு சூழலையும் உருவாக்கி வைத்திருக்கும் குடும்பத்தின் இறுக்கம், குடும்பப் பிணைப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பப் பெற்றோர்கள் நாளுக்கு நாள் நம்மிடையே அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


கதையின் தலைப்பு ஒரு குறியீடாகச் சொல்லப்பட்டிருப்பது இங்கு மனங்கொள்ளல் வேண்டும். உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி நிச்சயம். இதற்கு நாம் அனைவரும் அறிந்திருக்கும் முயல் ஆமை (முயலாமை) கதையையொட்டி தலைப்பிட்டிருப்பது தனிச் சிறப்பு.



கதையின் முடிவு, வாசகனுக்காக இடைவெளிவிட்டு காத்திருக்கிறது. வாசகனின் மனப்பரப்பில் மாமாவின் வருகையானதை அவனுக்கான காரண காரியங்களுடனும் சமாதானங்களுடனும் அதை வாசிப்பவன் எப்படியும் அவதாணித்துக்கொள்ளலாம்.



சமகாலப் பதிவுகளைக் களமாகக் கொண்டு காலத்திற்கேற்ற கருவில் சொல்லப்பட்ட கதையில், கதாசிரியர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. கதையை  வாசிக்கும்போது, கதாசிரியரின் உழைப்பு என்பது அவ்வளவாக இல்லாததுபோலவும் அவசரத்தில் எழுதிக்கொடுத்தது போலவும் தோன்றுகிறது. ஆங்காங்கே வெறும் செய்தித் திரட்டாக மட்டுமே தெரிகிறது. அந்த மாணவியின் மன உணர்வுகளையும் இன்னும் ஆழத்துடன் விவரித்திருக்கலாம். தேர்வுக்கான உழைப்பைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல் இருந்திருக்கலாம். மாணவியின் எதிர்பார்ப்பைக் குறித்தும் கதை சொல்லாடியிருக்கலாம். கதை கூறும் முறைமையில் கதாபாத்திரமே கதையைக் கூறுவதால் இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அந்த மாணவியின் மன ஆதங்கத்தையும் அதனால் அடைந்த மன உளைச்சலையும் பேசியிருக்கமுடியும். அப்படி பேசியிருந்தால் இந்தக் கதைக்கான தேவைப்படும் உணர்வின் தாக்கங்கள் இன்னும் அதிகமாகியிருக்கும். கதையும் இன்னும் சிறந்திருக்கும். வாசகனின் மன உணர்வோடு இக்கதை நெருக்கமாக உறவாடியிருக்க முடியும்.


நிறைவாக, இன்று நம் நாட்டுக் கல்விக் கொள்கைகளை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டிய  தேவைகளை இக்கதை பேசியிருக்கிறது. அதற்காக கதாசிரியருக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். வாழ்த்துகள் வே. இராஜேஸ்வரி.



அன்புடன் எம்.சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக