வியாழன், 29 செப்டம்பர், 2016

காத்திருப்பு - எம்.சேகர்

காத்திருப்பு


இரு நூறு வருடங்களாக
ஒரு காத்திருப்பு

காத்திருந்த அவர்களைச் சுற்றி
உஷ்ணத்தின் பெருக்கம்
யாரேனும் அவர்களை
நெருங்கியபொழுதே
முற்றிலுமாக சாம்பலாக்கிவிட்டிருக்கலாம்

அவர்களுக்குள்
அவர்களைச் சுற்றிச் சுழலும்
எண்ண அலைகள்
வெப்பக்கீற்றுகளாய்
அவர்களை ஆடாத அசையாத
சிலைகளாக்கிவிட்டிருக்கிறது

காத்திருப்பின் சுதந்திரம்
ஒற்றை வேலியாய்
அவர்களை வளைத்துப்போட்டிருக்கிறது

இங்கு இன்னமும்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
காற்றில் மிதக்கும் நம்பிக்கைகளாய்
மீண்டெழுவோம் என்று



இந்தக் காத்திருப்பில்
உறைந்துபோனது கட்டிப்பால் மட்டுமல்ல
இவர்களின் குருதியும்தான்

இந்தக் காத்திருப்பானது
இறுதிவரை
ஒரு காத்திருப்பாகவே
முடிந்தும் போகலாம்

காற்றின் அலைவரிசைகளில்
புதியதொரு வரலாற்றை
புனைந்துவிட்டும் போகலாம்


- எம்.சேகர்

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - வேலி - விமலா ரெட்டி

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்
வேலி – விமலா ரெட்டி
25 செப்டம்பர் 2016


கதை சொல்லல், கதை கேட்டல் அனுபவங்களின் எடுத்துரைப்பிலிருந்து ஆரம்பித்த அனுபவங்களின் இன்னொரு பரிமாணமாகிய கற்பனைகளுடன் இணைந்து வளர்ந்து செல்லும் படிமலர்ச்சி நிலையினைக் கதைகள் கொண்டுள்ளன எனவும் தொல்குடியினர் தமது சூழலை விளங்க, விளக்க முற்பட்ட வேளை கலை வடிவங்களுள் ஒன்றாக கதை தோற்றம் பெற்றது எனவும் இது சமூகத்துக்கு அறிவூட்டுவதற்கும் மனித நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உரிய மொழிச்சாதனமாகவும் கலை சாதனமாகவும் கதைகள் பயன்படுத்தப்பட்டன என்கிறார் பேராசிரியர் சபா. ஜெயராசா. இந்த ஆரம்பகால நிலையிலிருந்து இன்றைய நவீன படைப்புகள் வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டதை இன்னமும் நாம் உணராமல் காலம் கடத்திவருகிறோமோ என்ற கேள்வியே, விமலா ரெட்டியின், வேலி சிறுகதையைப் படித்தவுடன் எனக்குள் விருட்சமாய் விரிந்தது.


தாய் மஞ்சுளா, தன் மகள் மீனா தனது சொல்பேச்சைக் கேட்க மறுப்பதால், மீனாவின் தோழி ஆனந்தியிடம் தன் கடந்த காலத்தைச் சொல்லுவதாகக் கதை உரையாடல் ஆரம்பமாகிறது. அவர்கள் பேசுவதை அவர்களுக்குத் தெரியாமல் கேட்டுவிட்டு மீனா திருந்துவதாகக் கதை முடிகிறது. இதுதான் வேலியின் கதை. இதைத்தவிர கதையைப் பற்றி சொல்ல வேறெதுவுமில்லை. வேலி என்ற தலைப்பின்மூலம் பெண்களுக்குப் பெண்களே காவலாக இருக்கவேண்டும் என்பதைக் குறியீடாகப் பதித்துள்ளார் விமலா ரெட்டி. இதுதான் இக்கதையில் இருக்கும் ஆறுதலான ஒரு விஷயம்.


ஒரு படைப்பானது எவற்றையெல்லாம் தனக்குள் தாங்கி வருகிறது என்பதில்லாமல் அப்படைப்பிலிருந்து எவற்றையெல்லாம் தேவையற்றது என வெளியேற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது என்பது இலக்கிய ஆய்வாளர்களின் ஊற்றாகும். அவ்வகையில் இக்கதையில் தேவையற்றதையெல்லாம் நீக்கிப் பார்த்தால், தனக்கான வடிவத்திலும் கதை கூறுதல் முறைமைகளிலும் சரியாகக் காலூண்ற முடியாமல் தவித்து நிற்கிறது இக்கதை.
  


இக்கதையின் வாயிலாக இக்கால பள்ளி மாணவர்களுக்கு உபதேசம் செய்வதை மட்டுமே தலையாயப் பணியாகக் கொண்டிருக்கிறார் விமலா ரெட்டி. பல இடங்களில் கதையின் சாரம் கட்டுரைத் தன்மையுடனும் கலைப்படைப்புக்கு உரிய எந்தவொரு நுண்ணியப் பார்வையும் இல்லாமல் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமே தனி சிரத்தை எடுத்து, முழுமையாக அனைத்தையும் தானே சொல்லிவிட்டுச் செல்வதும் போன்ற இதுபோன்ற எழுத்துப்படைப்புகள் இன்றைய காலத்துப் படைப்பிலக்கியத்தில் ஒவ்வாத ஒன்றாகவே கவனிக்கப்படுகிறது. இன்றைய நவீனத்துவமும் அதற்கான கட்டமைப்புகளும் இதுபோன்ற கதைகளை எளிதில் நிராகரித்து விடுகின்றன என்பதை நாம் முதலில் உய்த்துணரவேண்டும்.


இக்கதையின் இறுதியிலும் படைப்பாளி அனைத்தையும் விலாவாரியாக விளக்கிச் சொல்லும் போக்கானது வாசகனுக்கு இடைவெளி விடாமலும் சிந்திக்க வாய்ப்பே கொடுக்காமலும் செய்து விடுகிறது. மேலும், கதை நெடுகிலும் வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்தும் கதையோட்டமும் கூறியதைக் கூறல் எனச் சொல்லியதையே திரும்பத் திரும்பச் சொல்லி நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களாகும்.  மேலும் இன்றைய நவீன படைப்பாக்கச் சிறுகதைக்குத் தேய்வழக்குகளும் உவமைகளும் வர்ணனைகளும் தேவையற்றவையாகக் கருதப்படுகிறது. ஆனால் இக்கதை நெடுகிலும் நிறைய  தேய்வழக்குகள் வர்ணனைகளும் வந்து போகின்றன.


உலகச் சிறுகதை இலக்கியத்தின் இன்றைய நிலையினையோ அல்லது தமிழ்நாட்டுச் சிறுகதைகளின் இன்றைய வளர்ச்சி நிலையினையோ புலம்பெயர்ந்த தமிழிலக்கியத்தின் இன்றைய போக்கினையோ நாம் கூர்ந்து கவனிக்காவிட்டாலும் வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நம் நாட்டின் இன்றைய சிறுகதைப் படைப்பிலக்கியம் பற்றிய நமது வாசிப்புகளும் புரிதல்களும் எவ்வாறு இருக்கிறது என்பதையாவது நாம் நமது மீள்பார்வைக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை இதுபோன்ற கதைகள் உணர்த்துகின்றன.


இக்கதை ஒரு செய்தியைச் சொல்லி வெறும் செய்தியாக மட்டுமே இருக்கிறது. கதை என்பது ஒரு செய்தி அனுபவத்தை மட்டும் கொடுக்காமல் வாழ்க்கையின் அனுபவத்தை உடன் சென்று வாழும் அனுபவத்தை வாசகனுக்குக் கொடுக்கவேண்டும். கதையில் வாழ்க்கையைச் சொல்லாமல் வாழ்க்கையைக் காட்டவேண்டும். இன்றைய கதைகளுக்கு தெரிதல் முக்கியமல்ல. உணர்தலும் அந்த உணர்தலின் அனுபவமே பிரதானம்.


நிறைவாக, வழித் தவறிச் செல்லும் பள்ளி மாணவிகளுக்கு நல்ல செய்தியை ஒரு முன் அனுபவ நிகழ்ச்சியின் வாயிலாகச் சொல்லியதற்கும் விமலாரெட்டி சமூகத்தின்மேல் கொண்ட அக்கறைக்கும் வாழ்த்துகள்.



அன்புடன் எம்.சேகர்  

புதன், 21 செப்டம்பர், 2016

மனத்தோடு மழைச்சாரல் மும்மொழிக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டில் எனது நூல் பார்வை


மனத்தோடு மழைச்சாரல் – எம்.சேகர்

மனத்தோடு மழைச்சாரல் – நம்    
மனத்தோடு உறவாடும்
கவிமனத்தோடு உறவாடும்

தெளிவாகச் சொல்லியதை – நம்
செவியோடு சேர்த்திடும்
மனச்செவியோடு சேர்த்திடும்

உறவாக நின்றவை – நம்
உயிர்மூச்சில் கலந்திடும்
உயிர்மூச்சில் நிறைந்திடும்

கவியென்று சொல்லிவந்ததை – நம்
கவிதைகளாக நூலாக்கித்
தொகுத்து வந்தோம்

மழைச்சாரலின் மனத்தோடு – நம்
கவிமனத்தோடு உறவாடுவோம்

அனைவருக்கும் வணக்கம்.
கவிமனத்துக்கு எப்போதும் துணையாக வருவது கவிதையைத்தவிர வேறெதுவுமில்லை. எவ்விதமான மனச்சலனத்துக்கும் மாற்றாக பலரின் வாழ்க்கையில் மருந்தாகக் கவிதைதான் இருக்கிறது. எழுதப்பட்டாலும் அல்லது எழுதப்படாதிருந்தாலும் மனித மனத்துக்குள் கவிதை உருவான வண்ணமே இருக்கிறது. ஆகவே நிகழ்வுகளை அர்த்தமுள்ளவைகளாகவும் அர்த்தமற்றவைகளாகவும் கவிதை அடையாளம் காட்டுகிறது.


இக்கவிதையானது மொழியின் எந்தப் பரிமாணத்திலும் ஒன்றிப்போவதாயும் இருக்கிறது. எப்போதும் நமக்கானதாய் , சகமனிதனுக்கானதாய் , சமூகத்தின் சகலவிதமான சங்கடங்களின் வலி நிறைந்ததாய் - காக்கைக்கும் குருவிக்கும், வாடிய பயிருக்கும் கவனம் தருவதாய் இருக்கிறது கவிதை.
பாரதிக்குப் பின், தமிழ்க்கவிதை ஒரு புதிய பாதையில் பயணித்தது.
சுவை புதிது
பொருள் பொதிது வளம் புதிது
சொற் புதிது சோதிமிக்க நவகவிதை
என்றார் பாரதி.


கற்றோராலும் சான்றோராலும் மட்டும் தாலாட்டும் மொழியாக இருந்த தமிழைச் சாதாரண மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தவரும் இவரே.
நம்மைச் சுற்றியுள்ள சூழலிருந்து நம்மை வேறுபடுத்திக் கொள்ள முடியாது. அச்சூழலிருந்து உருவாகுவதுதான் இலக்கியம். இலக்கியம் என்பது வெறும் கற்பனை மட்டும் அல்ல. இலக்கியத்தினுள் நாம் நம்மைக் காண்கிறோம். நம் வாழ்க்கையைப் பார்க்கிறோம். இலக்கியம் இல்லாமல் மனிதனும் இல்லை.


எத்தகைய அதிநவீன விரைவு ரயில் வசதி இருந்தாலும்கூட, மக்கள் அதில் பயணம் செய்யவில்லையென்றால் அத்தகைய நவீனம்கூட யாருக்கும் பயனற்றதாகிவிடும். கவிதையும் அப்படித்தான். எத்தளத்தில் இயங்கினாலும் அது வாசகனைச் சென்றடையவேண்டும். இல்லையென்றால் அவ்வித படைப்பினால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை.


கவிதை என்பது வெறும் எதுகை மோனை மட்டும் கொண்டதல்ல. மரபை அடிப்படையாகக்கொண்டு எழுதுபவை யாவும் கவிதையும் அல்ல. அதில் கவித்துவம் இருக்கவேண்டும். கவித்துவத்தின் ஒரு கூறுதான் கவிதை. கவித்திறன் என்பது படைப்புத் திறனைக் குறிக்கும்.


எந்த ஒரு கலைப்படைப்பும் உணர்வுகளின் கடத்துதல்தான். குளிர்காற்று வீசுகிறது என்றல் அந்தக் குளிரின் தாக்கத்தைப் படிப்பவன் உணரவேண்டும். நெருப்பு சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வும் வலியும் வாசிக்கிறவர்களும் உணரத்தக்கதாக இருத்தல் வேண்டும்.



கவிதை என்பது மனம் சார்ந்தது.
நடப்புச் சார்ந்த விஷயங்களில் மனம் லயித்துப்போய், அந்த உணர்வுகளின் தாக்கத்தால் மனத்திலே செதுக்கிய சொல்லோவியங்கள் எழுத்துகளாக உருப்பெறும்போது, பல வடிவங்களில் வந்து விழுகின்றன. மேலும் கவிதை என்பது வடிவம், வகைகள், வரையறை, கூறுகள், உத்திகள் போன்ற புறங்களைச் சாராமல் முழுக்க முழுக்க தன் அக அடக்கத்தில் இருப்பதாகும்.
புனைவில் ஈடுபாட்டையும் விளைவையும் தாக்கத்தையும் உண்டாக்கும் மொழிக்கட்டமைப்பாக எழுநடை (style) விளங்குகிறது. உரைநடையின் தனித்துவமும் கவிதையின் தனித்துவமும் எழுநடையால் உயிர்ப்பூட்டப் படுகின்றன. புனைவின் பொருளையும் அதனை மொழியாக உருக்கொடுத்தலையும் உள்ளடக்கிய முழுப் பொருளாக எழுநடை அமைகிறது. மேலும் சொல்வழியான புலக்காட்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது எழுநடை.


எ.கா. 1. தென்னை மரம் நிற்கிறது

              2. தென்னை மரம் தலைவிரிக்கோலமாக நிற்கிறது

இதில் முதல் வாக்கியம், மரத்துக்குரிய பொதுவான எண்ணக்கருவை மட்டும்தான் கொடுக்கிறது. இரண்டாவது வாக்கியம், முதல் வாக்கியத்தின் பொருளையும் தாண்டி விரிந்து செல்கிறது.


இதன் அடிப்படையில் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் பல கவிதைபுனைவு தளத்தில் புதிய உத்திகளையும் புதிய பரிமாணங்களையும் எதிர்காலத்தில் மலேசியக் கவிதையுலகிற்கு அறிமுகப்படுத்தும் என்ற நம்பிக்கையை நம் மனத்தில் விதைத்துவிட்டுச் செல்கின்றன. இவர்களில் பலர் புதியவர்கள். இளையர்கள். இனி தொடரும் இயக்கத்தில் பல பரிசோதனை முயற்சிகள் இவர்களால் சாத்தியமாகக்கூடும். நவீன படைப்பாளர்களாக நாளை இவர்களாலும் நம் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும்.


இத்தொகுப்பின் முதன்மை நோக்கமானது, மழைச்சாரல் புலனத்தில் பதிவிடும் படைப்புகளை ஆவணப்படுத்துதலே ஆகும். ஆயிரம் கவிதைகள் எழுதியும் ஒரு நூல்கூட வெளியிடமுடியாமல் இருக்கும் நம் நாட்டுச் சூழலில், இதுபோன்ற தொகுப்புகள் ஓரளவிற்காகவும் நம் படைப்புகளை ஆவணப்படுத்தும் என்ற நம்பிக்கையின் சிறுமுயற்சியே இந்த, மனத்தோடு மழைச்சாரல் என்ற கவிதை நூல்.


இத்தொகுப்பின் தனிச்சிறப்பானது, இந்நூல் மும்மொழியில் வந்திருப்பது. மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக இந்த நூல் நம் கவிதைகளை மலாய் மொழியிலும் ஆங்கில மொழியிலும் வாசிக்கும் வாய்ப்பைத் தந்திருப்பது பெருமைப்படக்கூடிய ஒரு விடயமாகும். இந்நூல் பரவலாக அனைத்துத் தரப்பினராலும் வாசிக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மேலும் இந்தக் கவிதைத் தொகுப்பின் படைப்பாளர்களே அனைத்து செலவுகளையுமே பகிர்ந்துகொண்டு இந்நூலை வெற்றியடையச் செய்திருப்பதானது மலேசியச் சூழலில் புதியதும் புதிமையானதும்கூட. இந்த ஒற்றுமையுணர்வும் இலக்கிய உணர்வும் என்றும் நீடித்து நிலைக்க என்றும் வாழ்த்துவோம். உறுதிணையாக நிற்போம்.


இத்தொகுப்பில், சில கவிதைகளாகவும் சில காட்சிப் படிமங்களாகவும் சில நிகழ்ச்சிப் பதிவுகளாகவும் சில சொற்றொடர்களாகவும் தத்தம் சுயபரிமாணத்தோடு நிற்கின்றன. ஆனாலும் அனைத்தும் மனத்தோடு உறவாடும் என்பதும் மறுப்பதற்கில்லை.


கவிதைகளைப் படித்து
கவிதைகளோடு உறவாடுங்கள்
கவிதைகள் உங்கள் வசப்படும்


அன்புடன் எம்.சேகர்

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - ஆமையும் முயலும்

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்

ஆமையும் வெல்லும் – வே. இராஜேஸ்வரி
18 செப்டம்பர், 2016


நம்மைச் சுற்றி ஒவ்வொரு கணமும் பல்வேறு சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு சம்பவத்திற்கு அல்லது ஒரு நிகழ்ச்சிக்குப் புனைவு மதிப்பு ஏற்படுவது என்பது, அவை மனிதப் பிரச்சினைகளோடு தொடர்புடையவை என்னும் கட்டத்தில்தான். புனைகதை எடுத்துரைப்பது என்பது நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்கள், அவைக்கான வார்த்தைக் குறியீடுகள், எடுத்துச் சொல்லும் அல்லது எழுதும் செயல்பாடு ஆகிய அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுவே, பின்னர் கதை, பனுவல், எடுத்துரைப்பு என்றும் அழைக்கப்படுகிறது என தனது புனைகதை இயல் என்ற நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா.


மலேசிய இலக்கிய உலகில் மறக்கமுடியாத ஓர் ஆளுமையாய இருக்கும் வே. இராஜேஸ்வரியின், ஆமையும் வெல்லும் கதை மேலே குறிப்பிட்டிருப்பதுபோல நமக்கு மிகவும் நெருக்கமான மலேசிய மக்களின் பொதுவாக உலக மக்களின் நடப்பியல் பிரச்சினையைக் கருவாக ஏந்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய அடிப்படைக் கல்வி முறை மதிப்பெண் சார்ந்த தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாறிவிட்டதையும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தையும் தேர்வு பயத்தையும் பெற்றோர், ஆசிரியர், சமூகம் ஆகியவற்றின் முரண்பட்ட பார்வைகளையும் தன்னகத்தே கொண்டு, தன் கூற்று உத்தி முறையின் மூலம் இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.


யூபிஎஸ்ஆர் தேர்வில் 7 ஏக்கள் பெறக்கூடிய மாணவி எதிர்பாராவிதமாக 4 ஏக்களை மட்டுமே பெறுகிறாள். இதுநாள் வரையில் செல்லமாய்ப் போற்றி வந்த அம்மாவின் ஏச்சும் பேச்சும் எந்தவித உணர்வையும் காட்டாத அப்பாவின் மௌனமும் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரின் பேச்சும் போக்கும் சம்பந்தப்பட்ட மாணவிக்கு எந்த அளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்திருந்தால் அவள் சாவதற்கு முடிவெடுத்திருப்பாள். இதற்காகவா பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிறோம்? படிக்க அனுப்புகிறோம்? சமூகமும் அதன் மதிப்பீட்டுத் தன்மைகளும் தேர்ச்சிமுறை கல்வித்திட்டமும் இப்படி எத்தனை இளம் பிஞ்சுகளைப் பலியாக்கிவிட்டிருக்கின்றன?


தேர்வுக்கு முன்பாகத் தேர்வு பயமும் தேர்வுக்குப்பின் தேர்ச்சி பயமும் தேர்வு முடிவுகளுக்குப்பின் பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள் பயமும் என அனைத்தையும் பன்னிரண்டு வயதிற்குள் மன அழுத்தமும் உளைச்சலும் கொண்டு தடுமாறித் தவிக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு, நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் காட்டும் வழிதான் என்ன? தற்கொலைதான் இதற்கான தீர்வா? என இப்படியாகப் பல கேள்விகள் நமக்குள் எழும்பி நிற்கின்றன.


கல்வி என்பது ஒன்றை அறிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது. மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொண்டு தேர்வில் ஒப்புவிப்பது அல்ல. வாழ்க்கையைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் திறன்களை வளர்க்கும் விதமாக வாழ்க்கைக் கல்வியாக இருக்கவேண்டும். வெறும் பாடத்திட்டங்களைச் சார்ந்தும் தேர்ச்சியை மட்டும் சார்ந்தும் இருப்பது எந்த வகையிலும் சிறந்த குடிமக்களை உருவாக்க நினைக்கும் ஒரு நாட்டின் கல்விக்கொள்கைக்கு உகந்ததாக இருக்காது.



தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இங்கு, பசி மயக்கம் மட்டுமல்ல, கழிவறைக்குக் கூட போகமுடியாத ஒரு சூழலையும் உருவாக்கி வைத்திருக்கும் குடும்பத்தின் இறுக்கம், குடும்பப் பிணைப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பப் பெற்றோர்கள் நாளுக்கு நாள் நம்மிடையே அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


கதையின் தலைப்பு ஒரு குறியீடாகச் சொல்லப்பட்டிருப்பது இங்கு மனங்கொள்ளல் வேண்டும். உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி நிச்சயம். இதற்கு நாம் அனைவரும் அறிந்திருக்கும் முயல் ஆமை (முயலாமை) கதையையொட்டி தலைப்பிட்டிருப்பது தனிச் சிறப்பு.



கதையின் முடிவு, வாசகனுக்காக இடைவெளிவிட்டு காத்திருக்கிறது. வாசகனின் மனப்பரப்பில் மாமாவின் வருகையானதை அவனுக்கான காரண காரியங்களுடனும் சமாதானங்களுடனும் அதை வாசிப்பவன் எப்படியும் அவதாணித்துக்கொள்ளலாம்.



சமகாலப் பதிவுகளைக் களமாகக் கொண்டு காலத்திற்கேற்ற கருவில் சொல்லப்பட்ட கதையில், கதாசிரியர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. கதையை  வாசிக்கும்போது, கதாசிரியரின் உழைப்பு என்பது அவ்வளவாக இல்லாததுபோலவும் அவசரத்தில் எழுதிக்கொடுத்தது போலவும் தோன்றுகிறது. ஆங்காங்கே வெறும் செய்தித் திரட்டாக மட்டுமே தெரிகிறது. அந்த மாணவியின் மன உணர்வுகளையும் இன்னும் ஆழத்துடன் விவரித்திருக்கலாம். தேர்வுக்கான உழைப்பைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல் இருந்திருக்கலாம். மாணவியின் எதிர்பார்ப்பைக் குறித்தும் கதை சொல்லாடியிருக்கலாம். கதை கூறும் முறைமையில் கதாபாத்திரமே கதையைக் கூறுவதால் இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அந்த மாணவியின் மன ஆதங்கத்தையும் அதனால் அடைந்த மன உளைச்சலையும் பேசியிருக்கமுடியும். அப்படி பேசியிருந்தால் இந்தக் கதைக்கான தேவைப்படும் உணர்வின் தாக்கங்கள் இன்னும் அதிகமாகியிருக்கும். கதையும் இன்னும் சிறந்திருக்கும். வாசகனின் மன உணர்வோடு இக்கதை நெருக்கமாக உறவாடியிருக்க முடியும்.


நிறைவாக, இன்று நம் நாட்டுக் கல்விக் கொள்கைகளை மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டிய  தேவைகளை இக்கதை பேசியிருக்கிறது. அதற்காக கதாசிரியருக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். வாழ்த்துகள் வே. இராஜேஸ்வரி.



அன்புடன் எம்.சேகர்

சனி, 17 செப்டம்பர், 2016

மக்கள் ஓசை கடிகாரக்கதை - வரங்களே சாபங்களானால் - சிமா.இளங்கோ

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள்

வரங்களே சாபங்களானால் – சிமா.இளங்கோ
11 செப்டம்பர் 2016


ஒரு படைப்பு என்பது எதையெல்லாம் சேர்க்கிறோம் என்பதை வைத்து இல்லாமல் எதையெல்லாம் நீக்குகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கவேண்டும் என்கிறார் ஈரானியப் படைப்பாளி கியாரெஸ்தமி. சிமா. இளங்கோவின் சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எனக்குள் வியாபித்து எழுந்து நின்றது இந்த வரிகள்தான். சுமார் இருநூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட மலேசியத் தமிழர்களின் வரலாற்றுப் பாதையில் நமது இலக்கியங்களுக்கான சுயப் படைப்பாக்கங்களின் இன்றைய நிலை என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு சிந்தித்துச் செயல்படும் ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதை இதுபோன்ற படைப்புகள் நமக்கு நினைவூட்டுகின்றன.


உலக இலக்கிய அரங்கில் நமது படைப்புகளின் நிலை என்ன? நாம் எங்கு நிற்கிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சரியான ஒரு தடத்தில்தான் நாம் பயணிக்கின்றோமா? அடுத்து நமது இலக்கு என்ன? என்பன போன்ற கேள்விகள் நம் முன்னே குத்திட்டு நிற்கின்றன. அதற்கான ஒரு வழிதேடலாக மக்கள் ஓசையில் கடிகாரக் கதைகள் திட்டத்தை அறிமுகம் செய்தும் கதைகள் தொடர்பான கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்து வருகிறார் அதன் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு. இராஜேந்திரன். அத்தொடரில் வந்த இக்கதையானது சமகால மலேசியப் பிரச்சினைகளைத் தன்னகத்தே அடக்கிக்கொண்டு அதற்கான ஓரு களத்தை அமைத்துக்கொண்டு பயணித்திருக்கிறது. நல்ல கதை இதில் இருக்கிறது. ஆனால் படைப்பாக்கத்திறன் குன்றியிருப்பதால் இக்கதையின் கதை நசுக்கப்பட்டுள்ளது என்றே எனக்குப்படுகிறது.



எடுத்துக்காட்டாக கதையின் இடைஇடையே கதாசிரியர் பல தடவை கேள்விகள் கேட்டு, அதற்கு அவரே பதில் சொல்லிச் செல்வதானது வாசகனை கதைக்குள்ளே நுழைய விடாதபடி தடுத்து நிற்கும் மதில்சுவர்களாக இருக்கின்றன. மேலும் வாசகனிடம் ஒருவித சலிப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்பதும் இங்கு கவனித்தில் கொள்ளல் வேண்டும்.


தினகரன் அவன் மனைவி அல்லிமலர், அல்லிமலர் அவள் அப்பா மற்றும் பங்களாதேசி இளையர்கள்,  டீ கடை முஸ்லீம் இளைஞன் அவன் மனைவி, மலேசியாவின் அரசியல் சூழல், அரசாங்க எதிர்ப்புப் பேரணி, டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருக்கும் அந்த இரு இளைஞர்கள், பலர் எந்தத் தப்பும் செய்யாமல் போலிஸிடம் சிக்கிக் கொண்டும் தண்டனைக்கு ஆளாகுவதும் என இத்தனை விஷயங்களை ஒரு சிறுகதைக்குள்ளே அரவணைத்துக்கொண்டு கதாசிரியர் பயணப்பட்டிருப்பது அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சமூக கடமை உணர்வுகளை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால் அதற்கு சிறுகதை ஒரு களம் அல்ல என்பதுதான் எனது பார்வையாகும். ஒரு நல்ல புதினத்துக்குத் தேவையான அனைத்தும் இக்கதைக்குள் சிறைப்பட்டுக்கிடக்கிறது. வாய்ப்பிருந்தால் கதாசிரியர் இக்கதையை மேலும் விரிவுபடுத்தி ஒரு நல்ல நாவலாகக் கொண்டு வரலாம். அது நமது மலேசிய நாவல் இலக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதமாகக்கூட அமையலாம்.


சிறுகதைகளின் வாயிலாகப் பிரசாரம் செய்வதும் கதாசிரியர் அடிக்கடி கதைக்குள்ளே வந்து தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதும் முழுமையாக அனைத்தையும் தானே சொல்லிவிட்டுச் செல்வதும் போன்ற எழுத்துப்படைப்புகள் இன்றைய காலத்துப் படைப்பிலக்கியத்தில் ஒவ்வாத ஒன்றாகவே கவனிக்கப்படுகிறது. இன்றைய நவீனத்துவமும் அதற்கான கட்டமைப்புகளும் இதைத்தான் ஒரு படைப்பாளியிடமிருந்தும் எதிர்பார்க்கிறது.


ஆனால், இக்கதையின் இறுதியிலும் கதாசிரியர் அனைத்தையும் விலாவாரியாக விளக்கிச் செல்லும் போக்கானது வாசகனை சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. மேலும், கதை நெடுகிலும் வாசகனைச் சிந்திக்கவிடாமல் கதையோட்டம் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களாகும்.


உலகச் சிறுகதை இலக்கியத்தில் மலேசியப் படைப்புகளின் ஆளுமை என்ன என்பதை வில்லிலிருந்து பாயும் அம்பாய் நம்மை நோக்கி மீண்டும் ஒரு முறை சிந்திக்க வைக்க வருகிறது இக்கதை.


நிறைவாக, கதாசிரியரின் மொழி ஆளுமை இக்கதை நெடுக வியாபித்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். நிறைய உவமைகளும் இணைச் சொற்களும் கதை முழுக்கப் பரவியிருக்கிறது. நம் மாணவர்களுக்கு இக்கதையில் வரும் உவமைச் சொற்களையும் இனிய சொல்லாடல்களையும் ஆசிரியர்கள் வகுப்பறையில் அறிமுகப்படுத்தலாம். நல்வாழ்த்து சிமா. இளங்கோ. கூடிய விரைவில் ஒரு நாவலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.



அன்புடன் எம்.சேகர்  

மக்கள் ஓசை கடிகாரக்கதைகள் - உளவுபேதா - மைதீ.சுல்தான்

மக்கள் ஓசை கடிகாரக் கதைகள்

உளவுபேதா – மைதீ.சுல்தான்
4 செப்டம்பர் 2016


பல்லின மக்கள் வாழும் மலேசியாவின் வாழ்க்கைச் சூழலில், நமக்கே உரித்தான தனித்துவமான கதையுரைப்பு இயலில் (narratology) கதை சொல்லல் எனப் பல படிமங்களில் பல பரிமாணங்களில் இன்றைய மலேசியக் கதைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் ஓசையின் கடிகாரக் கதைகள் என்னும் திட்டத்தில் இவ்வகையிலான பல்வேறு கதைகள், மூத்த எழுத்தாளர்களின் படைப்பாக்கங்களோடு இளைய எழுத்தாளர்களின் படைப்புகளும் இணைந்து இடம்பெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.


அந்த வரிசையில் 4 செப்டம்பர், 2016 இல் வெளியான, மைதீ. சுல்தான் அவர்களின், உளவுபேதா என்ற சிறுகதையைப் பற்றிய எனது எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்கிறேன்.


இலக்கியம் என்பது நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து நோக்கின், அந்த ஒவ்வொரு நொடியும் நமக்குப் பல கதைகளைப் பதிவு செய்யும். கதைக்காக நாம் எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு வாழ்க்கை. ஓர் அனுபவம். யாரோ ஒருவரின் வாழ்க்கை ஒவ்வொரு கதைக்குள்ளும் புதைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.


இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்த ஊருக்குத் திரும்பும் முருகப்பனின் கதையுரைப்பின் மூலமாக இக்கதை ஆரம்பமாகிறது. நிகழ்காலத்தில் தொடங்கி, பின்னோக்கிப் பார்க்கும் உத்தி மூலம் கதை இறந்த கால நினைவுகளையும் நிகழ்காலப் பதிவுகளையும் இணைத்துக்கொண்டு நடைபயில்கிறது.


இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட அவ்வளவாக மாறியிருக்காத இடமானது மலேசியாவின் வளர்ச்சியென்பது இன்றளவும் நகர்ப்புறப் பகுதிகளை ஒட்டியவைதான் என்பதை உணர்த்துகிறது. நகர் பகுதியிலிருந்து ஒரு ஐம்பது கிலோ மீட்டர் உள்ளே சென்றால் அங்குதான் மக்களின் உண்மை வாழ்க்கை நிலவரத்தைக் காணமுடிகிறது. இரட்டைக் கோபுரமும் கோலாலம்பூர் டவரும் நட்சத்திர ஓட்டல்களும் பல உயர்ந்த ரக ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும் ஏற்படுத்தியிருக்கும் மாயைக்குள் சாதாரண மக்களின் வாழ்க்கையானது மறைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.


ஒரு பெரிய குடும்பமாக வசதியற்ற சூழலிலும் ஒற்றுமையாக வாழ்ந்த அன்றைய குடும்ப முறை வாழ்வியல் பதிவானது இன்றைய தலைமுறைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். சொந்த பந்தங்களோடு நெருக்கடியாக வாழ்வதைவிட்டு வெளியேறிவிட்டாலும் உறவுகள் பாதிக்கப்படவில்லை என்ற வரிகள் அன்றைய உறவுகளின் நெருக்கத்தையும் பாசத்தையும் காட்சிப்படுத்திச் சொல்கின்றன.

இதற்கு முரணாக, சமூக அவலங்களாக இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே சீட்டாட்டப் பழக்கம் இன்றளவும் நம் சமூகத்திடையே ஊறித் திளைத்திருப்பதையும் இக்கதை பதிவு செய்துள்ளது. இன்றளவும் நமது திருமண வீடுகளிலோ அல்லது இறப்பு வீடுகளிலோ இதுபோன்ற சீட்டாட்டம் தவிர்க்க இயலாத ஒன்றாகவே நம்மினத்தோடு அடம்பிடித்து ஒட்டிக்கொண்டிருக்கிறது.  இன்றும் நம்மின இளைஞர்கள் சீட்டாட்டம், மது, குண்டர் கும்பல் என வாழ்வில் மாற்றமேதுமில்லாமல் இருப்பதைக் குறியீடாக இக்காட்சிப் படிமங்கள் உணர்த்துகின்றன.


நண்பர் நாச்சியப்பனோடு நடக்கும் உரையாடல்கள், உளவுபேதா சுப்பையாவைப் பற்றிய சாகச தகவல்களும் அவர் மகன் நாகலிங்கத்தின் தவறான நடவடிக்கைகளும் அதனால் அவனுக்கு நேர்ந்த பின்விளைவுகளும் சுப்பையாவின் பேரன் ஒரு உளவுபேதா என்ற தகவலுடன் கதை நிறைவு பெறுகிறது.  


கதையைப் படித்து முடித்ததும், இக்கதையின் வாயிலாக கதாசிரியர் எதைக்கூற வருகிறார், என்ன சொல்ல வருகிறார் என யோசிக்க வைக்கிறது.

நிறைய விஷயங்கள் கதைக்குள் செயற்கையாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் இருந்த அந்த இடத்தின் ஆளுமையை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு கதையை நகர்த்தியிருக்கலாம். அன்றைய உறவுகளின் நெருக்கத்தையும் இன்றைய உறவுகளின் விரிசல்களையும் காட்சிப் படுத்திக் கதையை நகர்த்தியிருக்கலாம். அல்லது உளவு பேதா பெரியவர் சுப்பையிவின் கதையை மட்டும் கொண்டு கதையை நகர்த்தியிருக்கலாம். அல்லது நாகலிங்கத்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதையை நகர்த்தி அப்பா சுப்பையாவையும் மகனையும் கதையின் மையத்தோடு தொடர்புப்படுத்தி இருக்கலாம். அல்லது நம் சமூகத்தில் அன்று தொட்டு இன்றுவரை மாறாமல் தொற்றிக்கொண்டிருக்கும் முரண்பாடுகளையும் தேவையற்ற செயல்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கொண்டு கதையை நகர்த்தியிருக்கலாம். இதில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு கதைச்சொல்லி பயணித்திருந்தால் இக்கதை இன்னும் அதிகமான தாக்கத்தை வாசகனிடம் ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.


இருப்பினும், பொதுவாக சமூக விழுமியங்களை முன்னெடுத்துக் கதையுரைத்திருப்பதால் கதாசிரியருக்கு நல்வாழ்த்து.



அன்புடன் எம்.சேகர்

மக்கள் ஓசை கடிகாரக்கதை - அக்கினிக்குஞ்சு - கோ.புண்ணியவான்

அக்கினிக் குஞ்சு – கோ. புண்ணியவான்
மக்கள் ஓசை கடிகாரக்கதை – 21 ஆகஸ்ட் 2016


மலேசியச் சூழலில் போலீஸ் விசாரணைகளில் நம்மின இளையர்களுக்கு ஏற்படும் நிலைமையையும் இடர்களையும் அதனால் ஏற்படும் தனிமனித வாழ்வின் முரண்களையும் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது இச்சிறுகதை.


அண்மையில் வெளிவந்து மலேசியத் தமிழ் மக்களுக்குப் புதியதோர் அடையாளத்தைக் (என்ன அடையாளம் என்று நான் சொல்லத் தேவையில்லை) கொடுத்துச் சென்ற கபாலியைப்போல் இல்லாமல் நமக்கான கதையை நமக்கானவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.


காவல் நிலையத்தின் சூழலும் அங்கு நடக்கும் விசாரணைகளின் எதிர்மறையான போக்குகளையும் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர் கோ. புண்ணியவான் அவர்கள். இது போன்ற கதைப் பதிவுகள், இத்தககைய சூழலில் நம் சமூகத்தின் செயல்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் நாம் கூர்ந்து கவனிக்க ஏதுவாக இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.


உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ


என்ற எம்.ஜி.யார் படப்பாடல் வரிகள்தான் இக்கதையை வாசிக்கும்போது எனக்குக் கேள்விக்குறியாய் வந்து நின்றது. 59 ஆவது சுதந்திர தினத்தை விரைவில் கொண்டாடவிருக்கும் மலேசியத் திருநாட்டின் வளப்பத்திற்கும் வளமைக்கும் தன் முதல் தலைமுறையையே காவு கொடுத்து உழைத்த ஓர் இனம் இன்று அனைத்து ரீதியாகவும் தனக்கான நியாயமாகக் கிடைக்குவேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துகொண்டிருப்பதை இக்கதை பதிவு செய்திருக்கிறது.


இலக்கியச் சூழலில் வேறொரு மனவெளியில் திரிந்து அலைந்துகொண்டிருக்கும் நாம், ஒரு படைப்பாளனாக நம் இனத்திற்கான நமக்கான கடமையை நேர்த்தியாகச் செய்திருக்கிறோமா என்ற கேள்வி எனக்குள் வந்து விழுகின்றது. எழுத்து என்பது ஒரு சமூகத்தையும் அதன் சார்ந்த அனைத்தையும் பாதுகாக்கக்கூடியதாகவும் தேவையேற்படும்போது தட்டிக்கேட்கக் கூடியதாகவும் எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியதாகவும் பண்படுத்தக்கூடியதாகவும் மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். வேறொரு நாட்டில் வேறொரு சூழலில் அவர்கள் எழுதுவதை வாசித்துவிட்டு அந்தப் பாணியை அப்படியே இங்கு வாந்தியெடுப்பதால் நமக்கான நாட்டில், நமக்கானச் சூழலில், நமக்காக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. மாற்றமும் ஏற்படப்போவதுமில்லை.


இக்கதையின் முன்னெடுப்பானது, கதாசிரியர் இச்சமூகத்தின்மேல் அவர் கொண்டுள்ள அக்கறையைக் விளித்துக் காட்டுகிறது. கதையில் வரும் சொல்லாடல்களும் மிகவும் அடர்த்தியாகவும் இறுக்கமாகவும் அமைந்து எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு ஏற்ப எடுத்தியம்பப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது. லோக்காப்பின் சூழலை வர்ணிக்கும் அந்த எழுத்து, அந்த இடத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது. வாசிக்கும்போதே மூத்திர வாடையும் மல வாடையும் நம் மூக்கின்மேல் வந்து உட்கார்ந்துகொள்கிறது. சமம் இழந்துபோன தரையானது நம் உடலையும் கீறிப் பார்க்கிறது.


இது நமக்கான கதை. நமக்கான எழுத்து. தொடரட்டும் உங்கள் சீரிய இலக்கியப் பணி. நல்வாழ்த்து கோ.புண்ணியவான் சார்.


அன்புடன் எம்.சேகர்