செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பால் மரக்காட்டில் நான் - எம்.சேகர்

பால் மரக்காட்டில் நான்

பெட்டாலிங் உயர்நிலைப்பள்ளியில் படிவம் இரண்டில் படித்துக்கொண்டிருந்தபோது எனது பக்கத்து வீட்டு நண்பர் குணா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். பால் மரக்காட்டினிலே எனத் தலைப்பிட்டு அட்டைப்படம்கூட   இரண்டொரு பச்சை வண்ண இரப்பர் மரங்களாகச் சித்திரம் வரையப்பட்டிருந்தது என நினைக்கிறேன். இப்படித்தான் அகிலன் எனக்கு அறிமுகமானார்.

நான் சார்ந்த தோட்டப்பாட்டாளிச் சமூகத்தின் வலியையும் ஏக்கத்தையும் என்னுள் உறையவிட்ட கதைக்கருவோடு கதாமாந்தர்கள் யாவரும் நாம் வாழும் வாழ்க்கையில் உயிருள்ளவர்களாகவும் அகம் மற்றும் புறவய உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாகவும் படைக்கப் பட்டிருந்தது என்னை வெகுவாகப் பாதித்தது.

கதையின் முழுநிலை மாந்தரான பாலனின் தீவிரமும் புரட்சி எண்ணங்களும் சமூக நோக்கோடு வரும் அவனின் போராட்ட செயல்பாடுகளும் என் சமூகத்துக்கு நானும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை என் மனத்தில் வேரூன்றவைத்தது.

நான் வாழ்ந்த, அறிந்த தோட்டப்புற வாழ்வியல் அவலங்களைவிட இன்னும் அதிகமான இழப்புகளும் அவமானங்களும் பாமரத்தனமான மெத்தனப் போக்கும் மற்றத் தோட்டப்புற மக்களின் வாழ்க்கையில் மலிந்துகிடப்பதை உணரவைத்த நாவல் இந்த பால் மரக்காட்டினிலே என்றால் அது மிகையாகாது.

தோட்டத் துண்டாடலால் வீடிழந்து, சொந்தங்களை இழந்து, ஒதுங்க ஓர் இடம்கூட இல்லாமல் வீதியோரங்களில் அகதிகளாகப் பிள்ளைக்குட்டிகளுடன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கும் என் இனத்திற்கு வாழ்வே சவாலாகிப்போனச் சூழலில் இந்த் வாழ்வின் அர்த்தம் தேடும் மனித உணர்வுகளை இந்த நாவலில் மிகவும் இயல்பாகப் பதிவு செய்திருப்பார் திரு.அகிலன் அவர்கள்.

மலேசியாவில் தங்கியிருந்த ஒரு மாதக் காலத்தில் அவர் கண்ட காட்சிகள், கேள்விப்பட்ட விடயங்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இந்த மலையகத் தமிழனின் கதையை அவரால் சொல்லமுடிகிறதென்றால், இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நம்மால் இதைவிட இன்னும் சிறப்பான ஆழுமையுடன் ஆழமாகவும் உணர்வார்த்தமாகவும் எழுதமுடியும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இதன் அடிப்படையிலேயே என் ஆரம்பகால எழுத்துகள் புது வாழ்வு, கந்தசாமி வேலை தேடுகிறார், ஒரு பாதை சில பள்ளங்கள், ஸ்கூல் பஸ் போன்ற கதைகள் முற்போக்குச் சிந்தனையுடன் என்னுள் உருவெடுத்தன.

இதைத்தவிர, பால் மரக் காட்டினிலே நாவலில் வரும் பாலன் மற்றும் அவன் மாமன் மகள் கண்ணம்மா இருவருக்கும் உள்ள அந்தக் காதல் நாவலை வாசிக்கும் போதே நம் அகஉணர்வுகளைச் சுகமாகத் தாலாட்டும் தன்மை வாய்ந்தவையாகும். (பின்னாளில் நானும் என் அத்தை மகளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்)

ஒரு குறிப்பிட காலத்திற்குள் அகிலனின் அனைத்துச் சிறுகதைகளையும் நாவல்களகயும் வாசித்துவிட்ட  நிலையில் எனது எழுத்திலும் அந்தக் காதலின் மேன்மையை அனுபவிக்க ஆரம்பித்தேன். சமூக உணர்வோடு கூடிய பத்துக்கும் மேற்பட்ட காதல் கதைகளைத் தொடர்களாக எழுதியுள்ளேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது மனத்துக்கு நினைவாக இருக்கிறது.

எனது ஓவிய நண்பரான சந்திரனுடன் அந்நாட்களில் கோலாலம்பூர் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும்போது பல தடவை, நம் நாட்டிலும் ஓர் அகிலன், ஒரு மு.வ.,ஒரு ஜெயகாந்தன் உருவாகவேண்டும் என்பார். எழுதுறதை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுறாதீங்க என்பார். நான் அப்படி உருவாகியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இடை இடையே சில தோய்வுகள் இருந்தாலும் இன்றும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த வகையில் என் எழுத்துலகப் பிரவேசத்தில் அகிலனும் பால் மரக்காட்டினிலே நாவலும் ஒரு முக்கியப் பங்காற்றியிருப்பதோடு, அந்த நாவலின் பாலனும் கண்ணம்மாவும் இன்றும் என் கதைகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

(காலம் மாறினும் தேகம் அழியினும் கதையின் கவிதையில் கலந்தே வாழ்வோம்) -


நாவலைப் படித்து சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று என் உணர்வுகளப் பகிர்ந்துள்ளேன். யாரோ என்னுடமிருந்து இரவல் வாங்கிச்சென்ற இந்த நாவல் இன்றுவரை என்னிடம் வந்து சேரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக