புதன், 6 ஏப்ரல், 2016

காத்திருந்த விடியல் - நாவல் அறிமுகம்

திருமதி விமலா ரெட்டியின், 'காத்திருந்த விடியல்'  – 

நாவல் அறிமுகம் எம்.சேகர்

13 – 02 - 2016

புனைகதை, மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் யாவற்றையும் சித்தரிப்பதாகும். சமூதாய சம்பிரதாயங்களிலிருந்தும் வாழ்க்கையின் விழுமியங்களிலிருந்தும் தனி மனிதன் பிறழ்கின்றபொழுது புனைகதை தோன்றுகிறது. பிறழ்ச்சிக்கான காரணகாரியங்களை ஆராய்கின்றது. மனித உறவு என்ற அச்சு மூலம் உலகம் பற்றிய படைப்பாளனின் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. கதாபாத்திரங்கள், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் ஆகிய இரண்டும் கதைக்குள்ளே பின்னப்படும்பொழுது புனைகதை எனும் கலைப்படைப்புத் தோன்றுகிறது. இது புனைகதையாக இருப்பினும் சமூதாய மாற்றத்தையும் மாறும் சமுதாயத்தின் நிலையைக் காட்டும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகிறது.

நாவல் எனும் இலக்கியவகை தனக்கேயுரிய இலக்கிய உருவ அமைதியிலும் பொருளமைதியிலும் இச்சமூக மாற்றங்களை எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது என்பதையும் அவதானித்துக் கொள்ளல் இங்கு அவசியமாகிறது என்கிறார் கார்த்திகேசு சிவத்தம்பி தனது நாவலும் வாழ்க்கையும் என்ற நூலில்.
முதலாவதாகத் தனி மனிதன் முக்கியத்துவம் அடைகிறான். தனியொரு மனிதனின் வாழ்க்கை மாற்ற நெறியே நாவலின் அடிப்படைப் பொருளாக அமைகிறது. நாவலின் ஆரம்ப நிலையில் குறிப்பிட்ட தனி மனிதன் (அதாவது பிரதான கதாபாத்திரம்) இருக்கும் நிலையும் இயங்கும் சூழலும் முறைமைகளும் நாவலின் இறுதி நிலையில் அந்தக் கதாபாத்திரம் இருக்கும் நிலையும் இயங்கும் சூழலும் முறைமைகளும் முற்றிலும் மாறுபட்டனவாகக் காணப்படும்.

அடுத்து, இம்மாற்றமானது வரையறுக்கப்பட்ட ஒரு கால எல்லைக்குள் நடைபெற்றதாகவே அமையும். அதாவது சமூக மாற்றங்கள் தனி ஒரு மனிதனின் வாழ்க்கைக் காலத்திற்குள்ளோ அல்லது ஒரு பரம்பரையின் வாழ்க்கைக் காலத்திற்குள்ளோதான் ஏற்படும்.

தனி மனிதன் சமுதாய மாற்றங்களிலே பாதிப்படைவதும் தனி மனித முனைப்புச் சமுதாய மாற்றங்களை ஏற்படுத்துவதும் அத்தனி மனிதனின் சமூக உறவுகள் மூலமாகவே தெரிந்துகொள்ளப்படலாம். சமூக உறவுகள் என்பது குடும்பம், சமூகம், நாடு என்று பல்வேறுப்பட்ட நிலைகளிலும் புலனாகும். இவற்றுள் குடும்பமே முக்கியமானது. எனவே, தனி மனித மாற்றம் என்பது முதலில் குடும்ப நிலைப்பட்ட மரபுவழி உறவுகளின் சிதைவிலேயே தெரியவரும். பின்னர் சமூக மாற்றத்தின் தேவையின் தன்மைக்கேற்ப உறவு முறைகளில் நெறிகள் மாறும்.
உறவு முறைகளில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கையின் கோட்பாடுகளில் அதாவது அறப்பெறுமானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில் உள்ள மனிதர்களது வாழ்க்கையும் நாவலின் பொருளாக அமைந்துவிடுகிறது. இந்நாவலின் பிரதான பாத்திரமான ஹேமநாதனை அவன் குடும்பம் எனும் உறவு கைவிட்ட நிலையில் அவன் சார்ந்த கதையாடல் அவனை அவளாக்கி தனக்கான ஒரு கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

நாவலுக்குரிய இயல்புகள் பலவிருப்பினும் கதையம்சம், பாத்திரங்கள், உரையாடல், பின்னணி என முக்கியம் பெறுகின்ற பல இருப்பினும், இவற்றுள் கதை அம்சத்தின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்துள்ள விமலாரெட்டி இந்நாவலில் அத்தன்மையைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். கதாபாத்திரங்களின் இயக்கமும் உரையாடல்களும் நாவலில் விரிவாக அமைந்து நாவலின் உயிராக வெளிப்பட்டிருக்கிறது. மேலும் குறிப்பிட்ட சில கருத்துகளைச் சொல்லவேண்டுமென்பதாற்காகக் கதையை உருவாக்கும் தன்மையில் கதையின் இயல்பு முறையில் யதார்த்தத்தை மீறாமல் கதையின் கட்டுக்கோப்பிற்காக இடையிடையே ஒரு நிலை மாந்தர்களாக சாவித்திரி, சாந்தா, தாய்லாந்தின் வைஷ்ணவி போன்ற கதாபாத்திரங்களையும் கதைப்படுத்தியுள்ளார்.

எடுத்துக்கொண்ட கதைக் கருவை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்து, வேறு எங்கும் திசைமாறிப் போகாமல் சொல்ல வந்ததைத் தனக்கான தண்டவாளத்தில் நிதானமாகப் பயணம் போகும் இரயிலைப்போல நயமாகச் சொல்லி, தான் ஒரு சிறந்த கதைச்சொல்லி என்பதை நிருபித்திருக்கிறார் நாவலாசிரியர். இதை இவர் சாதித்திருக்கும் பட்சத்தில் இங்கு இலக்கியம் படைப்பது என்பது ஒரு சாதாரண விஷயமும் அல்ல என்பதையும் நாம் உணரவேண்டும். அது ஒரு தவம். இங்குத் திடமாக நிற்பது ஆத்ம திருப்தி மட்டுமே.

நாவலின் மையக் கருவுக்கு மேலும் வலு சேர்க்கும் உவமைகளும் சொல்லாடல்களும் சொல் வண்ணங்களும் படைப்பாளினியின் மொழி வளத்தின் முகவரிகளாகி நம்மைக் கவருகின்றன. திருநங்கைகளின் வழக்காறுகளும் பேச்சுகளும் அவர்கள் நிலையிலிருந்தே கையாளப்பட்டுள்ளது நாவலின் இன்னுமொரு சிறப்பு அம்சமாகும். 
  
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதநூல் ஆகும்

என்பதனைக் கருத்தில் கொண்டு, படைப்பாளன் எந்த நோக்கத்திற்காக ஒரு படைப்பைப் படைத்திருக்கிறானோ, அந்த நோக்கில் நின்று, நூலாசிரியரின் உள்ளக்கிடங்கை ஆழ உணர்ந்து இந்த நாவலை அணுக என்னால் இயன்ற சிறு முயற்சியே இந்த நாவலுக்கான எனது அறிமுகம்.

அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவித்து, மூழ்கி, நீந்தி, கரைசேர முயற்சி செய்துகொண்டிருக்கும் நாம், அவசரத்தில் காணாது விட்ட அல்லது கண்டும் காணாது ஒதுக்கிய சில நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நம் கண்முன் நிழலாடவிட்டு புதைந்து போயிருக்கும் சில உணர்வுகளை வெளிக்கொணர்வது படைப்பாளியின் பணியாக இருக்கிறது. இப்பணியை இந்நாவலின் மூலம் சிறப்பாகச் செய்திருக்கிறார் விமலா ரெட்டி.  

குடும்பத்தையும் தொழிலையும் பார்த்துக்கொண்டு, இளங்கலை தமிழியல் பயின்றுகொண்டு, இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு, எழுத்துக்கான நேரத்தையும் தேடிப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் விமலா ரெட்டியை  எப்படிப் பாராட்டினும் தகும்.அவர் மேன்மேலும் நிறைய நாவல் இலக்கியங்களைப் படைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

அடுத்து உங்களோடு சில பகிர்வுகள்.

இலக்கியம் என்பது அரசியல், சமூகவியல் பகுப்பாய்வுபோல் சமூகப் பிரச்சனைகளை விளக்கி அதற்குத் தீர்வு கூறும் ஒன்றல்ல என்பதை நாம் நம் புரிதலுக்குக் கொண்டுவர வேண்டும். இன்றைய சமகால படைப்பாக்கங்களும் இந்தச் சூழலில்தான் இயக்கமும் கொண்டுள்ளன. இலக்கியம் வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது தனக்குரிய மொழியில் பேசுகிறது. நமது உணர்வோடு, அனுபவத்தோடு பேசுகிறது. நமக்குள் கலைத்துவப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு படைப்பும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய அனுபவத்தையும் உணர்வையும் நமக்குத் தருகிறது. நாம் கண்ட, கேட்ட அனுபவித்த வாழ்க்கையை நமக்கு ஒரு புதிய பரிமாணத்தில் காட்டுகின்றது. வாழ்க்கையின் உண்மைகளை நம்மை உணர்வுப் பூர்வமாக காணச் செய்கிறது. வாழ்க்கையை முழுமையாக விளங்கிக் கொள்ள நமக்கு உதவுகிறது. இந்த வகையில் நமது அனுபவத்தையும் உணர்வையும் அறிவையும் அது கூர்மைப்படுத்துகிறது.  நமது ஆளுமையில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. வாழ்க்கை பற்றிய ஒரு விழிப்புணர்வை, தெளிவை ஏற்படுத்துகிறது.  

எடுத்துக்காட்டாக, ஒரு படைப்பாளி இந்த வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியாது, இதை மாற்றவேண்டும், மக்களைப் போராடத் தூண்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கான கதையாடலை அவன் வானத்தில் இருந்து பெறுவதில்லை. தனது அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் சமூகச் செயற்பாட்டில் இருந்தே பெறுகிறான். தேர்ச்சி மிக்க படைப்பாளி என்பவன் தான் எந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து இந்தக் கருத்தை, உணர்வைப் பெற்றானோ, அந்த வாழ்க்கை அனுபவத்தை தனது வாசகனும் பெறக்கூடிய வகையில் தன் படைப்பை ஒரு நாவலாக உருவாக்குகின்றான். அவ்வாறு உருவாக்கப்படும் நாவல் அதன் வாசகனிடம் அதாவது ஒரு உணர்திறன் உடைய வாசகனாக இருந்தால் படைப்பாளியின் கருத்தையும் உணர்வையும் தோற்றுவிக்கிறது. உலகின் மிகச் சிறந்த நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் இவ்வாறுதான் செயல்படுகின்றன என எம்.ஏ. நுஃமான் தனது, ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற நூலில் பதிவு செய்துள்ளதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

மாபெரும் புரட்சி எழுத்தாளர்களான கார்க்கி, லூசூன் ஆகியோரின் படைப்புகளை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை நமக்குப் புலப்படும். கார்க்கியின் தாய் நாவலைப் படிக்கும்போதே ஒரு புரட்சி நடைமுறை பற்றிய அனுபவத்தைத்தான் நாம் பெறுகிறோம். சூழ்நிலைகள் மனிதர்களை எவ்வாறு வார்த்தெடுக்கின்றன என்பதைத்தான் பார்க்கிறோம். அதில் வரும் பாத்திரங்கள் நமது ஆளுமையை மீள்வார்ப்புச் செய்வதை உணர்கிறோம். ஒரு புரட்சிகரமான சூழலில் எழுதப்பட்ட அந்த நாவல் அந்தப் புரட்சிகர நடைமுறை அனுபவத்தை உண்மை பூர்வமாகச் சித்தரிக்கின்றதே தவிர வாய்ப்பாட்டு ரீதியான தீர்வு எதனையும் தருவதில்லை.

லூசூனின் படைப்புகள் வாழ்க்கையைப் பற்றிய விமர்சனப் பூர்வமான சித்திரத்தைத் தருகின்றதே தவிர, தீர்வு கூறல், வழிகாட்டல் என்ற பேச்சுக்கே இடமிருப்பதாகத் தெரியவில்லை. கார்க்கி, லூசூன் போன்றவர்களின் படைப்புகளில் வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் தீர்க்கமான, தெளிவான பார்வையைப் பார்க்கிறோமே தவிர, நமது சில ஆய்வாளர்களும் படைப்பாளிகளும் விளங்கிக் கொண்டிருக்கும், நடைமுறையில் வெளிப்படுத்தும் அர்த்தத்தில் தீர்வு கூறல், வழிகாட்டல் என்ற தன்மையைக் காண முடிவதில்லை.

இன்றைய நவீன படைப்பாக்கம் இத்தகைய செயல்முறைகளிலேயே வாழ்க்கையை உள்ளபடியே சித்தரித்துக் காட்டுகின்றன. ப. சிங்காரத்தின், ‘புயலிலே ஒரு தோணி நாவலை இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் நாம் முன் நிறுத்தலாம். இந்தோனிசியாவின் ஜப்பானிய ஆட்சியையும் தமிழர்களின் ஆளுமையையும் மிகவும் இயல்பாக எடுத்தியம்பும் தன்மையிலான நாவல் அது. தென்கிழக்காசியாவில் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட தமிழர்களின் ஆளுமையைக் கதைப்பின்னலாகக் கொண்ட படைப்பாக்கம் அது. ஆனால் நம்மில் எத்தனைபேர் இந்நாவலைப் படித்திருக்கிறோம் என்பது வேறு.

நாவல் என்பது உலகத்தின் பொதுவான ஓர் இலக்கிய வடிவம். எனவே, அதன் உலகப் பொதுவான வளர்ச்சியை அறிந்து கொள்வது ஒவ்வொரு படைப்பாளிக்குமுள்ள பொறுப்பாகும்.

அடுத்து நம் எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம்.

இதுபோன்ற நூல் வெளியீடுகளில், நூலாய்வு, ஆய்வுரை போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லதென்று நினைக்கிறேன். இதுபோன்ற வெளியீடுகளில் நூலறிமுகம் செய்வதே உகந்ததாக எனக்குப்படுகிறது. நூலாய்வு, ஆய்வுரை போன்றவை வேறொரு களத்தில் பேசி விவாதிக்கக்கூடியதாகும். அதற்கான களங்களை எழுத்தாளர் சங்கமோ வாசகர் இயக்கங்களோ இல்லை தமிழ்ச் சார்ந்த பிற அமைப்புகளோ மேற்கொள்ளலாம்.

அடுத்து, தமிழ் நம் மொழி. அதை நாம்தான் போற்றிப் பாராட்டவேண்டும். எழுத்தார்வத்தால் எழுத வருபவர்களும் எழுதிக் கொண்டிருப்பவர்களும் கூடுமானவரை தமிழில் நமது தாய்மொழியில் பிழையில்லாமல் எழுத முன்வரவேண்டும். தமிழில் நம் மொழி வளத்தை பெருக்கிக்கொள்ளவேண்டும்.  எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆளக்கூடியவன். நாம்தான் பிழைநீக்கி எழுத முன்வரவேண்டும். இந்த உணர்வு ஒவ்வோர் எழுத்தாளனுக்கும் இயல்பாகவே இருக்கவேண்டிய உணர்வாகும். அதுபோல படைப்பாளர்கள் தம் நூல்களில் கூடுமானவரை எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முனைதல் வேண்டும்.

நன்றி.

வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக